உள்ளடக்கத்துக்குச் செல்

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/வித்வான் மகன் வித்வானா

விக்கிமூலம் இலிருந்து

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை

1. வித்வான் மகன் வித்வானா?

குழந்தையின் பிறப்பே ஒரு விந்தை. ஆண் பெண் சேர்க்கையில் ஏற்படும் அந்தப் புதிய உயிரைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியமான பல உண்மைகள் தெரியவருகின்றன.

தாய் தந்தையரைப் போல உருவத் தோற்றம் அமைந்த குழந்தைகளைக் காண்கிறோம். இந்த உருவ ஒற்றுமை எப்படி ஏற்படுகிறது? இதைப் போலவே தன்மைகளிலும் திறமைகளிலும் ஒற்றுமை இருக்குமா? ஒருவர் சிறந்த சங்கீத வித்வானாக இருந்தால் அவர் மகனும் சிறந்த சங்கீத வித்வானாக இருப்பானா?

இந்தக் கேள்விக்கு விடையறிய வேண்டுமானால் பாரம்பரியத்தைப்பற்றிய உண்மைகளை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பாரம்பரியம் (Heredity) என்பது பெற்றோர்களின் மூலம் பிறவியிலேயே அமையும் உடல், மனத் தன்மைகளைக் குறிக்கும். பிறப்பால் அமைந்தவை தவிர மற்ற எல்லாவற்றையும் சூழ்நிலை (Environment) என்ற பொதுப் பெயராலே குறிப்பிடுகிறோம். உணவு, வளர்க்கும் முறை, கல்வி, உலக அநுபவம் முதலியன எல்லாம் இதில் அடங்கும். உடம்பிலுள்ள சுரப்பிகளால் (Glands) ஏற்படும் மாறுதல்களைக்கூடச் சிலர் சூழ்நிலையிலேயே சேர்த்துப் பேசுவார்கள்.

பாரம்பரியமா, சூழ்நிலையா - எது திறமைகளுக்கும் தன்மைகளுக்கும் முக்கிய காரணமாயிருக்கிறது என்ற கேள்வியும் அதற்குச் சரியான விடையும் மக்களின் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. பாரம்பரியமே பிரதானம் என்ற கொள்கையைப் பின்பற்றி ஒரு புதிய உயர்ந்த மனித வர்க்கத்தை உண்டாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டார்கள். குறைந்த மதி நுட்பமும், உடற்கட்டும், தீராத தொத்து நோய்களும் உடையவர்களுக்குச் சந்ததியே ஏற்படாதவாறு சாஸ்திர முறையில் தடுத்து விடுவதால் அடுத்து வரும் மக்கள் மேலும் மேலும் உயர்ந்து விளங்குவார்களென்று அவர்கள் நம்பினார்கள். அதே சமயத்தில் அமெரிக்க நாட்டு மனத்தத்துவ நிபுணரான வாட்ஸன் போன்றவர்கள் சூழ்நிலையாலேயே எல்லாம் அமைகின்றனவென்றும், யாருக்கும் எந்த விதமான திறமையையும் உண்டாக்கிவிடலாம் என்றும் முழங்கினர்கள்.

வாட்ஸனுடைய கொள்கையைப் பூர்ணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு சிலருடைய அபிப்பிராயம். சூழ்நிலையாலும், விடா முயற்சியோடு கூடிய பயிற்சியினாலும் ஒருவன் விருப்பமான துறையிலே ஓரளவிற்குத் திறமையை அடையலாமாயினும், பாரம்பரியமே பெருமையின் எல்லையை வகுக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் சூழ்நிலையும் பயிற்சியும் உதவி புரியாவிடில் பாரம்பரியத்தால் அமைந்த எந்தத் திறமையும் அதன் முழு அளவுக்கு மலராது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பாரம்பரியம், சூழ்நிலை ஆகியவற்றின் இயல்புகளை விரிவாகச் சோதனை செய்து காண்பதற்காக ராக்பெல்லர் ஸ்தாபனம் நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜாக்ஸன் ஞாபகார்த்த ஆராய்ச்சிச் சாலையிலே ஏராளமான பொருட்செலவில் இதுபற்றிய சோதனை நடந்து வருகிறது. மனித வர்க்கம் விரைவிலே பெருகுவதில்லை ஆதலாலும், மக்களைச் சோதனைக்குட்படுத்துவது எளிதல்ல ஆதலாலும் நாய் முதலிய பிராணிகளைக் கொண்டே ஆராய்ச்சி நடைபெறுகிறது. அந்த ஆராய்ச்சிச் சாலையின் அதிபரான டாக்டர் லிட்டில் என்பவர், “பாரம்பரியமோ, சூழ்நிலையோ மற்றதன் உதவியின்றித் தனித்து நின்று சிறந்த பயனை அளிக்காது. ஒவ்வொன்றும் மற்றதைச் சார்ந்தே நிற்கிறது. அவை இரண்டின் கலப்பில் விளைந்ததே நாம் காணும் மனித வாழ்க்கையாகும்” என்று கூறுகிறார்.

பொதுவாகக் கூறினால் பாரம்பரியமாக உடல் உறுப்புக்களும் நிறமும் தலைமுடியின் தன்மையும் அமைகின்றன எனலாம். இதழ்களின் அமைப்பு, கண்களின் வடிவம், பற்களின் வரிசை, தாடை எலும்புகள் எல்லாம் பெற்றோர் தந்தவை, காதுகளின் வடிவங்கூடப் பாரம்பரியமாகக் கிடைக்கிறது என்று பேராசிரியர் விட்னீ கூறுகிறார். கண்களின் நிறமும் அவ்வாறுதான்.

என் நண்பர்களில் ஒருவர் சிறந்த வைத்தியர்; மற்றொருவர் புகழ் பெற்ற எழுத்தாளர். ஆனால் இவர்கள் இருவருடைய பெற்றோர்களும் சாதாரண விவசாயிகளே. அவர்களுடைய குடும்பத்திலே யாருக்காவது அதிகமான கல்வியோ, வேறு கலைத் திறமையோ இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் இவர்களிருவரும் இரு கலைகளில் உயர்ந்து விளங்குகிறார்கள். இவர்களுடைய கலைத் திறமைக்கும் பாரம்பரியத்துக்கும் உள்ள சம்பந்தத்தை ஆராய்வது லேசல்ல.

உடல் அமைப்பிலுங்கூட மேலே கூறியவாறு எளிதாகக் குழந்தைகள் அனைவரிடத்திலும் பாரம்பரியச் சாயலைக் காண்பது கடினம். தந்தை கறுப்பாகவும், தாய் தங்க நிறமாகவும் இருந்தால் குழந்தை எந்த நிறத்தோடு இருக்கும் என நிச்சயமாகக் கூற முடியாது. தந்தையைப் போலக் கறுப்பாக இருக்கலாம்; அல்லது தாயைப் போலத் தங்க நிறமாக இருக்கலாம். அந்த இரண்டு நிறங்களுக்கு மிடையே பலவகையான கலவைகளாகவும் இருக்கலாம்.