உள்ளடக்கத்துக்குச் செல்

பொன் விலங்கு/காந்திஜிக்கு அல்லாடி கோஷ்டி துரோகம்

விக்கிமூலம் இலிருந்து

காந்திஜிக்கு அல்லாடி கோஷ்டி துரோகம்

தோழர் எஸ். எஸ். மாரிசாமிஅவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ள தமிழ் வார இதழான் 'காண்டிபம்', கம்யூனல் ஜி. ஓ. இந்திய அரசியல் சட்ட விதிக்கு முரணானது என்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பைக்கண்டு, 4-8-50-ல் நீண்டதோர் கட்டுரை தீட்டியுள்ளது. அது ஒரு தேசீய ஏடு. அக்கட்டுரையில் காணப்படும் சில முக்கிய பகுதிகளை அப்படியே தருகிறோம்.

மொத்த ஸ்தானங்களை 14 என்று வைத்துக்கொண்டால்:

கம்யூனல் ஜி. ஓ.

ஸ்தானங்கள்
பெறுகிறார்கள்
பிராமணரல்லாதார் 6
பின்னணி பிராமணரல்லாதார் 2
பிராமணர் 2
ஹரிஜனங்கள் 2
முஸ்லிம்கள் 1
இ. கிருஸ்துவரும் ஆங்கிலோ இந்தியரும் 1
இதுதான் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தின்படி பள்ளிக்கூட ஸ்தானங்களை ஒதுக்கும் விதி.

70 சதவிகிதத்துக்கு 6+2 ஸ்தானங்கள் தான் என்னும்போது இரண்டே முக்காலுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 2 ஸ்தானங்கள் தருவது குறைவு என்றால் இதை முட்டாள் கூட ஏற்க மாட்டான்.

அதேபோல 16.3 சத விகிதம் இருக்கும் ஹரிஜனங்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒரே விகிதத்தில் 2 ஸ்தானங்கள் ஒதுக்கப்படுகின்றன என்றால் இது அநியாயமென்பதை சாதாரண ஆட்கள் கூட ஒப்புக் கொள்ளுவார்கள். 2.7 சத விகிதத்துக்கு 2 ஸ்தானங்கள் என்றால் 16.3 சத விகிதத்தினருக்கு 16 ஸ்தானங்கள் அல்லவா தர வேண்டும்?

திடுக்கிடக் காரணம்

வழக்கு விசாரணையையும், குறுக்குக் கேள்விகளையும் பார்த்தபொழுது தீர்ப்பு இப்படித் தானிருக்குமென பொதுவாக எதிர்பார்க்கப் பட்டது. எனவே தீர்ப்பு நம்மை ஆச்சரியத்தில் வைக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் நம்மை திடுக்கிட வைக்கிறது. மகாத்மா உயிரோடு இருக்கும்வரை ஹரிஜனங்கள், தாழ்த்தப் பட்டவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் என்றெல்லாம். கூறி வந்தவர்கள் இப்போது அந்த ஒடுக்கப்பட்டவரை இன்னும் ஒடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றுவிட்டார்களே என்பதுதான் நாம் திடுக்கிடக் காரணம்.

தகுதிப் பேச்சு

தகுதி என்ற முறையில் பரீட்சை நடந்தால் ஹரி ஜனப் பிள்ளைகளும் பின்னணி பிராமணரல்லாதவர்களும் நிச்சயமாக வெற்றிபெற மாட்டார்கள். அப்படியானால் பிராமணரல்லாதவர்களும், ஹரிஜனங்களும் தகுதியற்றவர்களென்று அர்த்தமில்லை. சூழ்நிலையும், சந்தர்ப்ப வசதிகளும்தான் இப்போது தகுதிகளாக இருக்கின்றன.

தகுதியை மட்டும் யோக்கியதையாக வைத்து பரீட்சை நடந்தால் வசதி பெற்றவர்கள் தான் முன்னேற முடியும். டிப்டி கலெக்டர் பிள்ளைதான் சாதாரண கிளர்க்காகவாவது வரமுடியுமென்ற நிலை இத்தேசத்தில் இருக்கிறது.

நீடித்த வரலாறு

ஏற்கெனவே சமூக ஏணியில் மேல்படியில் உள்ளவர்கள் தான் உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் உள்ளவர்கள் என்னதான் முயன்றாலும் போக முடியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தை நெடுகப் புரட்டிப் பார்த்தால் இந்த அவக்கேடு அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரியும். முகலாயர் ஆட்சியில் முகலாயர்தான் முன்னேறினார்கள். பீஷ்வாக்கள் காலத்தில் பீஷ்வாக்கள்தான் முன்னேறினார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.

மறுக்க முடியாத உண்மை

இதே மாதிரி தான் இந்த 20-ம் நூற்றாண்டிலும் நடந்து வருகிறது. உதாரணமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அமுலுக்கு வரும் முன்னால் ஒரு தாலுகா ஆபீஸில் ஒரு அய்யரோ, அய்யங்காரோ, பிள்ளையோ, முதலியாரோ, நாயுடுவோ, அல்லது வேறு யாருமோ பதவியில் இருந்தால் அவர்கள் தத்தம் வகுப்பாருக்குத் தான் பதவிகளை வழங்கி வந்தார்கள். இதில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற வித்தியாசமே இல்லை. வேண்டுமானால் ஒரு வகுப்பார் இதில் அதிக தீவிரமாக இருக்கலாம். இன்னொரு ஜாதிக்காரர் சற்று தீவிரம் மட்டுப்பட்டு இருக்கலாம். இந்த ஜாதீயப் பற்று இல்லாமலிருந்தவர்கள் ரொம்ப அரிது. அப்படி அரிதாக இருந்தவர்கள் அநேகமாக மேல் பதவிகளுக்கு வராமலிருந்தார்கள். அப்படியே வந்தாலும் குடத்துக்குள் வைத்த விளக்குபோல இருந்தனர்.

அப்பி இருந்தார்கள்

ஹிந்துக்களை மட்டும் தனியாகப் பிரித்து அதோடு பிராமணரை சத விகிதம் போட்டுப் பார்த்தால் 3.8 சதவிகிதம் ஆகிறது. அதாவது 100 பேரில் 4 பேர் கூட பிராமணர் இல்லை. இந்தக் குறுகிய தொகையினர்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னால் உயர்நீதி மன்றத்திலிருந்து சகல சர்க்கார் கட்டிடங்களிலும் அப்பியிருந்தார்கள். இதைக்கண்டு மற்ற வகுப்பார் கொதிப்படைந்திருந்தார்கள்.

படிப்பினை

மெஜாரிட்டி வகுப்பின் கொதிப்புக்கு உள்ளான எந்த மைனாரிட்டி வகுப்பும் சுகமாக வாழமுடியாது. ஜெர்மனியில் யூதர்மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே மாதிரி இங்கும் பிராமணர்மீது வெறுப்பு வளர்ந்து வந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த வெறுப்பு ஜெர்மனியில் பலாத்காரத்தில் இறங்கியது போல இங்கு இறங்கவில்லை. இப்படி இறங்காதபடி காத்தது வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ உத்தரவு தான்.

மூண்ட தீ

ஆரம்பத்தில் இந்த உத்தரவு வருவதற்கு முன்னால் தேசத்தில் எந்த மாதிரி நிலைமை இருந்தது என்பதை நண்பர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். சைமன் கமிஷன் வந்த சமயம் சென்னையில் பிராமண சகோதரர்கள் தாக்குண்டதற்கு புறக்காரணங்கள் என்னவாக இருந்தாலும் அடிப்படைக் காரணம் ஜாதி வித்யாசம் தான் பிராமணர்—பிராமணரல்லாதார் என்ற துவேஷம் இந்தக் காலித்தனத்துக்கு வித்திட்டது. இந்த துவேஷம் வளராதபடி தென்னாட்டுத் தலைவர்கள் காத்தார்கள். வகுப்பு வெறியைத் தூண்டி விட்டு அரசியல் ஆதிக்கம் பெற அலைந்தவர்களை அடக்கியதும், தேர்தலில் புறமுதுகிடச் செய்ததும் தமிழ் நாட்டு பிராமணரல்லாத தலைவர்கள் தான்.

இது குறைவாம்

கடந்த ஆண்டில் இஞ்சினியரிங், வைத்தியக்கல்லூரிகளில் கீழ்க் கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கின்றன:

சதவிகிதம்
பிராமணர் 20
பிராமணரல்லாதார் 58
கிறிஸ்துவர், ஆ. இந்தியர் 8
முஸ்லிம் 7
ஹரிஜனங்கள் 7

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைப்படி ஹரி ஜனங்களுக்கு இன்னும் அதிகமான சதவிகிதம் கிடைத்திருக்க வேண்டும். அதற்கு தோதாக ஹரிஜன மாணவர்கள் இல்லை யாதலால், காலி ஸ்தானங்களைப் பெரும்பாலும் பிராமணப் பிள்ளைகளுக்கே தந்திருக்கிறார்கள். இப்படி செய்ததால் தான் 20 சதவிகிதம் பிராமணர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைத்தான் குறைவு என்று சர் அல்லாடி சொல்லுகிறார்—ஸ்ரீனிவாச அய்யங்கார் கர்ஜிக்கிறார். 'ஹிந்து, மித்திரன்' போன்ற பிராமணப் பத்திரிகைகள் இதற்கு பக்கமேளம் கொட்டுகின்றன.

கல்லூரிகளில்

புராட்டஸ்டன்ட் கிறிஸ்துவர் நடத்தும் 'கிறிஸ்டியன் காலேஜில்' 1849—50 ல் இண்டர்மிடியட் வகுப்புக்கு 88 பிராமணர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஜனத்தொகையில் 70 சதவிதம் பேர் இருக்கும் பிராமணரல்லாதாரோ 87 இடங்களைத்தான் பிடித்திருக்கிறார்கள். இரண்டு வகுப்புக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான் !

ஜேஸுட் மிஷன்கார்கள் நடத்தும் "லயோலா காலேஜில்" அதே வகுப்புக்கு பிராமணர் 201 பேரும் பிராமணரல்லாதார் 474 பேரும் அனுமதி பெற்றிருக்கிறார்கள் இந்த வித்தியாசத்தையும் சர் அல்லாடிகளுக்கு சமர்ப்பிக்கிறோம்.

பிரஸிடென்ஸி காலேஜில் பி. ஏ. வகுப்புக்கு பிராமணர் 16-ஸ்தானங்களையும் பிராமணரல்லாதார் 38ம் பெற்றிருக்கிறார்கள். இது சர்க்காரே நிர்வகிக்கும் காலேஜ் என்பது கவனிக்கத்தக்கது.}}

சாதாரண படிப்பு படிக்கும் இந்த காலேஜ்களில் தான் நிலைமை இப்படி என்றில்லை. மெடிகல் காலேஜிலும் இஞ்சினியரிங் காலேஜ்களிலும் இது தான் நிலைமை.

1947-ல் மொத்த மெடிகல் காலேஜ்களில் பிராமணர் 24.4 சதவிகிதமும் பிராமணரல்லாதார் 45.8 சதவிகிதமும் பெற்றிருக்கிறார்கள்.

இதே வருஷம் இஞ்ஜினியரிங் காலேஜ்களில் பிராமணர் 25 சதவிகிதமும் பிராமணரல்லாதார் 49.4 சதவிகிதமும் பெற்றிருக்கிறார்கள்.

1949—50 லும் இஞ்ஜினீயரிங் காலேஜ்களில் பிராமணர் இடம் பெற்ற சதவிகிதம் 20.5 பிராமணரல்லாதார் 35.4 சதவிகிதம்தான்.

இருவர் தேகீயம்

மூன்றாவதாக காட்டப் போகும் உதாரணம் தான் வகுப்புவாரி பிரதி நிதித்துவ உத்தரவின் அவசியத்தைத் தெளிவாக விளக்கி வைப்பதாகும் உள்ள "விவேகானந்தா காலேஜ்" அனைவருக்கும் தெரியும். இதை கடத்துகிறவர்கள் பிராமணர்கள். இதில் 1949—50 ம் வருஷத்துக்கு இண்டர்மிடியட் வகுப்புக்கு 268 பிராமணப் பிள்ளைகளும் 30 பிராமணரல்லாத "சூத்திரப்பிள்ளைகளும்" அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


விவேகானந்தா கல்லூரிக்குப் போட்டியாக நடத்தப்படுவதாகக் கூறப்படும் (ஆனால் நாம் நம்பவில்லை) பச்சையப்பன் காலேஜில் 172 பிராமணர்களுக்கும் 828 பிராமணல்லாதாருக்கும் ஸ்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மகத்தான துரோகம்

இன்றைய ஹைக்கோர்ட் தீர்ப்பால் மகாத்மா கண்ணெனக் காத்திருந்த ஹரிஜனப் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது என்று ஏற்படுகிறது. மகாத்மாவை தேசத்தின் பிதாவென்றும் தந்தையென்றும் வாய்க் கூசாமல் அழைக்கும் பக்தர்களே இந்த துரோகத்தைச் செய்கிறார்களென்றால் வேறென்ன வேண்டும் ?

100க்கு 97 பேர் இருக்கும் தேச மக்கள் கல்வி அறிவின்றி வாழ3 சதவிகிதப் பேர் ஆதிக்க வெறியோடு அலைந்தால் எந்தக் குடியரசு தான் குடியரசாக இருக்க முடியும்?

ஜார் காலத்தில் படித்தவர் பாமரரைக் கசக்கிப்பிழிந்த நிலை, இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

நீர் மேல் எழுத்து

ஜாதி, சமயமற்ற சர்க்கார் ஏற்பட்டிருக்கும் இந்நாளில் ஒரு ஜாதியார் மட்டும் உயர வரவும்; மற்றவர் அவர்களது காலடிப் புழுவெனக் கிடக்கவும் இருந்தால் நாட்டின் முன்னேற்றத்தை ஓடும் தண்ணீரில்தான் எழுதவேண்டும்.

பரிகாரம்

வகுப்புகளின் ஜனத்தொகையினபடி அவரவர்களுக்குப் பள்ளிக்கூட இடங்களைப் பிடித்துத் தருவதாக இருக்கவேண்டும். இதற்காக அரசியலமைப்பைத் திருத்த வேண்டுமென்றால் திருத்தித்தான் ஆகவேண்டும். இதற்கான நடவடிக்கைகளுக்கு சென்னை சர்க்காரும் பொதுமக்களும் தயாராகவே இருக்க வேண்டும். இப்படிச் செய்யாதிருக்கும் வரை தென்னிந்தியா, ஜார் காலத்து ரஷ்யா மாதிரியும், ஒளரங்கசீப் காலத்து தர்பார் மண்டபம் மாதிரியாகவும் தானிருக்கும். இப்படி ஏற்படுவது மகாத்மாவின் நெறிக்கும், இந்தியக் குடியரசு லட்சியத்துக்கும் நேர்விரோதமானவை என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

அத்திப் பூ

வழக்கு விசாரனையின் போது தாழ்த்தப்பட்டவர்களே ஏன் முன்னேறிக்கொண்டு வரக்கூடாது என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டது. இன்டர்மிடியட்டோ, பி. எஸ்ஸியோ படிக்கும் பின்னணி சமூகத்தினர் இன்னும் சற்று முன்னேறி 'தகுதி' யோடு போட்டியிடலாமல்லவா என்று நீதிபதி விசுவநாத சாஸ்திரிகள் பின்னிப் பின்னிக் கேட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்காரை உதாரணத்துக்குக் கூட காட்டினார்.

எட்டுகோடிப் பேர் இருக்கும் தாழ்த்தப்பட்டவர் வகுப்பில் மாதிரிக்காக ஒரு அம்பேத்காரைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் 1,308,000 இருக்கும் பிராமணர்களிலோ எத்தனை விசுவநாத சாஸ்திரிகளையும், அல்லாடிகளையும், ஸ்ரீனிவாச அய்யங்கார்களையும், பார்க்க முடிகிறது? இதற்கு கனம் நீதிபதி தீர்ப்பில் பதிலில்லை.

தாழ்த்தப்பட்டவர்களைக் கைதூக்கி விடாமலே அம்பேத்கார்கள் உற்பத்தியாவார்களென நினைப்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போலத்தான்.