உள்ளடக்கத்துக்குச் செல்

பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/பலூன் ஆட்டம்

விக்கிமூலம் இலிருந்து


6. பலூன் ஆட்டம்




விளையாட விரும்புகின்றவர்கள் அனைவரையும் இந்த பலூன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். பத்து அல்லது பதினைந்து பேர்கள் இருந்தாலும், பர பரப்புடன் இந்த ஆட்டத்தை ஆடலாம்.

இந்த ஆட்டத்திற்கு முதலில் தேவை பலூன்கள் தான். வண்ண வண்ண பலூன்களைக் காற்றடைத்து ஒரே அளவுள்ளதாக வைத்துக் கொள்ளவும். அதாவது, எத்தனை ஆட்டக்காரர்கள் ஆட்டத்தில் பங்கு கொள்கின்றார்களோ, அத்தனை எண்ணிக்கையில் பலூன்கள் வேண்டும்.

அடுத்ததாக, பலூன்களைப் போட்டு வைக்க பெரிய வாளி அல்லது வாயகன்ற ஒரு பாத்திரம் வேண்டும். எது கிடைக்கிறதோ, அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம். 

காற்றடைக்கப்பட்ட வண்ணபலூனை ஒவ்வொருவருக்கும் ஒன்று என்று முதலில் கொடுக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு ஆளுக்கொரு ஸ்கேல் அல்லது ஒரடி நீளமுள்ள குச்சி ஒன்றையும் தர வேண்டும்.

யாருக்கு எந்த வண்ணத்தில் பலூன் தரப்பட்டிருக்கிறது என்பதையும் ஒரு தாளில் குறித்துக் கொண்டு, அவர்களே வாளி அல்லது பாத்திரம் வைக் கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 30 அடிக்கு அப்பால் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டின்மீது போய் நின்று கொள்ளுமாறு செய்திட வேண்டும்.

இப்பொழுது எல்லோருடைய பலூன்களும் வாளிக்குள்ளே போடப்பட்டிருக்கிறது. வாளிக்கு அருகில் ஸ்கேல் அல்லது குச்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சைகைக்கு பிறகு ஆட்டம் ஆரம்பிக்கிறது.

வரிசையாக நின்று கொண்டிருந்த அனைவரும் சைகைக்குப் பிறகு வாளியை நோக்கி ஓடி, அங்கிருக்கும் ஸ்கேல் அல்லது குச்சியை எடுத்து, வாளியில் இருக்கும் தனது பலூனேக் குச்சியால், வெளியே தள்ளி எடுத்த பிறகு, யார் திரும்பவும்: ஒடத்தொடங்கிய கோட்டை வந்து அடைகிறாரோ அவரே போட்டியில் வென்றவராவார். - 

குறிப்பு : 1. குச்சியைப் பயன்படுத்தித்தான் பலூனை வெளியே எடுக்க வேண்டும்.

3. கையைப்பயன்படுத்தி பலூனை எடுப்பவர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார்.

3. தனக்குரிய பலூனை மட்டுமே எடுக்க முயல வேண்டும்

4. பிறரது பலுானை குச்சியில் குத்தி வெடிக்கச் செய்வது அநாகரிகமான செயலாகும். அது விளையாட்டின் ஆனந்த சூழ்நிலையையே பாழ்படுத்திவிடும். ஆகவே, பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்து ஆடுவது நல்ல பண்பாகும்.

5. வாளி அல்லது பாத்திரம் சற்று பெரியதாகவும், உட்புறம் ஆழமுள்ளதாகவும் இருந்தால், ஆட்டம் அதிக உற்சாகமாக அமையும்.