உள்ளடக்கத்துக்குச் செல்

போதி மாதவன்/இருபது வருட யாத்திரைகள்

விக்கிமூலம் இலிருந்து

பதினேழாம் இயல்

இருபது வருட யாத்திரைகள்


‘அருள் நெறியால் பாரமிதை
ஆறைந்தும் உடனடக்கிப்
பொருள் முழுதும் போதியின்கீழ்
முழுதுணர்ந்த முனிவரன்தன்
அருள்மொழியால் நல்வாய்மை
அறிந்தவரே பிறப்பறுப்பார்
மரு(ள்) நெறியாம் பிறநூலும்
மயக்கறுக்கு மாறுளதோ !’

–சித்தாந்தத் தொகை

போதிமா தவர் ஞானமடைந்த காலம் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாது தருமப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இதைப் பற்றிய விவரமான சரித்திரம் இல்லாது போயினும், அவருடைய யாத்திரைகளைப் பற்றிய பல குறிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. மழைக்காலமாகிய, மூன்று மாதங்கள் மட்டும் ஒரே விகாரையில் சீடர்களோடு, தங்கியிருந்து விட்டுப் பின்னர் ஆண்டு முழுவதும் அவர் பிரயாணம் செய்து கொண்டே யிருந்தார். காசி, உருவேலா, இராஜகிருகம், கபிலை, சிராவஸ்தி முதலிய இடங்களிலும், நடுவழிகளிலிருந்த நகரங்கள், கிராமங்களிலும் பிரசாரம் செய்வதிலே முதல் நான்கு ஆண்டுகள் கழிந்தன. ஐந்தாவது ஆண்டிலே அவர் வைசாலி[1] நகரை அடைந்தார்.

வைசாலி விரிஜி நாட்டின் தலை நகர். வட இந்தியாவில் அக்காலத்தில் மகதம், அங்கம், விதேகம், காசி, கோசலம், பாஞ்சாலம், குரு, அவந்தி, காந்தாரம் முதலிய பல இராஜ்யங்கள் தனித்தனி அரசர்களின் ஆட்சியில் இருந்து வந்தபோதிலும், விரிஜி நாடு மட்டும் ஒருவகை ஜனநாயகத்தைப் பெற்றிருந்தது. அந்நாட்டில் விரிஹியர், லிச்சவிகள், மல்லர்கள் ஆகிய வகுப்பினர்கள் தத்தம் குடும்பங்களுக்குக் ‘கணராஜர்கள்’ என்ற தலைவர்களை நியமித்துக்கொண்டு, அத்தலைவர்களின் மூலம் எல்லோர்க்கும் பொதுவான ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். அந்தத் தலைவரே குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு விரிஜி நாட்டின் அரசராயிருப்பார். லிச்சவிகள் பெருஞ் செல்வமும் செல்வாக்கும் பெற்று விளங்கியதால், அவர்களிலேயே ஒருவர் அரசராக வருவதும் இயல்பாயிருந்தது. அரசர் ‘லிச்சவிகளின் சிங்கம்’ என்று அழைக்கப் பெற்று வந்ததாக வரலாறுகளிலிருந்து தெரிகின்றது. பல குறு நில மன்னர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் மேலே ஆட்சி அதிகாரம் அவர் வசமே இருந்து வந்தது.

அக்காலத்திய இராஜ்யங்களில் காசியும் கோசலமும் ஒரே ஆட்சியில் சேர்ந்திருந்தன. மகத நாடு நாளுக்குநாள் வல்லமை பெற்றுப் பெருகி வந்ததோடு, நாட்டின் பரப்பும் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆயினும் விரிஜி நாட்டு அரசரும் குறு நில மன்னர்களும், தங்கள் நாடு மகதத்துடன் சேர்ந்துவிடாமல் தனித்திருப்பதற்காக எப்போதுமே விழிப்புடன் இருந்து வந்தனர். மகத மன்னரும், அவர்களுடைய படையெழுச்சி ஏற்பட்டால் தடுப்பதற்காகக் கோட்டை கொத்தளங்கள் அமைத்துக்கொண்டு, படைகளையும் தயாராக வைத்திருந்தார்.

வைசாலியைப் பற்றிய வரலாறுகள் யாவும் அந் நகரைப் ‘பூவுலகின் சொர்க்கம்’ என்று வருணிக்கின்றன . உயரமான அழகிய வீடுகளும், மாளிகைகளும், பூஞ்சோலைகளும், உபவனங்களும் அங்கே நிறைந்திருந்தன. இசைபாடும் பறவைகள் ஏராளமாக இருந்தன, லிச்சவி வகுப்பினர்கள் செல்வம் கொழித்துச் செழிப்புடன் இருந்ததால், அவர்களிடையே விருந்துகளுக்கும், விழாக்களுக்கும் குறைவேயில்லை. அங்கு சென்ற பிக்குக்கள், ‘தேவர் உலகிலேகூட இத்தகைய எழிலுள்ள நகரை நம் புத்தர் பெருமான் பார்த்திருக்கமாட்டார்!’ என்று புகழ்வார்களாம்.

அந்நகரம் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அமைக்கப் பெற்றிருந்ததாகவும். முதல் பிரிவில் செல்வர்களுடைய 7,000 வீடுகளும், இரண்டாம் பிரிவில் நடுத்தர வகுப்பாருடைய 14,000 வீடுகளும், மூன்றாரும் பிரிவில் ஏழைகளுடைய 21,000 வீடுகளும் இருந்ததாகவும் திபேத்திய ‘துல்வா’ என்ற நூலில் காணப்படுகின்றது. வைசாலி நகரத்துப் பெண்கள் அந்நகரத்திலுள்ள ஆடவரைத்தவிர வெளியிடங்களிலே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

செல்வமும் செழிப்பும் பெற்றிருந்த வைசாலி நகரம் கூட ஒருகால் கொடிய பஞ்சம், நோய் முதலியவைகளால் துன்புறக்கூடும் என்று புத்தர் பெருமான் முன்னால் கூறியிருந்தார். ஒரு சமயம் அவ்வாறே அங்குப் பஞ்சமும், கொள்ளை நோயும் தோன்றிப் பல உயிர்களைப் பலி வாங்கிவிட்டன. அவ்வேளையில், மகரிஷிகள் சிலரை நகருக்கு அழைத்து வந்தால் அவர்களுடைய மகிமையால் துயரங்கள் நீங்கும் என்று பல மக்கள் கூறினர். முடிவில் அச்சமயத்தில் இராஜகிருகத்திலே வேணுவன விகாரையில் தங்கியிருந்த புத்தர் பெருமானையே அழைத்து வர வேண்டும் என்று தீர்மானமாயிற்று. லிச்சவிகளின் தலைவனான மன்னனும் அதற்கு இசைந்தான். ஜனப்பிரதி நிதிகள் சிலர் பிம்பிசார மன்னரிடம் சென்று பெருமானைத் தங்கள் நகருக்கு எழுந்தருளும்படி கேட்டுக்கொள்ள வேண்டினர். அவர் பெருமான் எல்லோரிடத்திலும் கரையற்ற கருணையுடையவர் என்றும், அவர்களே நேரில் அவரிடம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அவர்கள் ஐயனிடம் நேரில் தெரிவித்ததும், அவரும் வைசாலிக்குப் புறப்படலானார். உடனே பிம்பிசாரர் கங்கை வரை சாலையைச் செப்பனிட்டார். பெருமான் புறப்பட்டதுமே வைசாலியிலும் சுற்றுப்புறங்களிலும் மழை பொழிய ஆரம்பித்தது. கங்கையின் மறுகரையிலிருந்த பாதையை லிச்சவிப் பிரபுக்கள் செம்மையாக்கி வைத்தனர்.

வைசாலி விஜயம்

வைசாலியை அடைந்ததும், பெருமான் ஆனந்தரிடம் தமது திருவோட்டை அளித்து, அதில் நீரெடுத்துக் கொண்டு, நகரின் வீதிகளிலே அந்நீரைத் தெளித்து வரும் படியும், சுற்றி வரும்போது தாம் உபதேசித்திருந்த சூத்திரங்கள் சிலவற்றை ஓதும்படியும் சொல்லி வைத்தார். ஆனந்தர் அவ்வாறு செய்துவிட்டுத் திரும்பியதும், நகரில் நோயும் பஞ்சமும் நில்லாது நீங்கின என்று சொல்லப் பட்டிருக்கின்றது.

அந்நகரிலுள்ள மகாவனத்தில் அமைத்திருந்த கூடாகார விகாரையிலே பெருமான் தங்கியிருந்து மக்களுக்கு அறவுரைகள் புகன்று வந்தார். ஏராளமான ஜனங்கள் அவருடைய தருமத்தை ஏற்றுக்கொண்டனர். பின்னும் ஐயன், அரண்மனைக்குச் சென்று, அரசனுக்கும் தரும உபதேசம் செய்தார், அவ்வுபதேசம் ‘இரத்தின சூத்திரம்’ எனப்படும்.

சாக்கியர் - கோலியர் பகைமை

போதி வேந்தர் மகாவனத்தில் தங்கியிருக்கையில், கபிலவாஸ்துவிலிருந்த சாக்கியர்களுக்கும் பக்கத்து நாட்டாராகிய கோலியருக்கும் கடுமையான பகை முற்றிச் சண்டை விளைந்து விட்டது. இரு நாடுகளுக்குமிடையில் ஓடிக் கொண்டிருந்த உரோகிணி ஆற்றில் நீர் வற்றி யிருந்ததால், சாக்கியர்கள் அந்த நீரில் தங்களுக்கே உரிமையுண்டு என்று கூறி, ஆற்று நீர் முழுவதையும் அணையிட்டுத் தடுத்துத் தங்கள் நிலங்களுக்கே பாய்ச்ச ஆரம்பித்தனர். கோலியர்கள் அதை எதிர்த்து, நீர் அனைத்தையும் தாங்களே கொண்டு செல்ல முயன்றனர். இதனால் இரு திறத்தாருக்கும் விரோதம் வளர்ந்தது. ஒருநாள் இருகட்சிகளையும் சேர்ந்த வீரர்களும் விவசாயிகளும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பெருங் கூட்டங்களாக ஆற்றின் கரையிலே கூடிப் போராடத் தயாராக நின்றனர். அவர்கள் வெறி கொண்டு செல்வதை அறிந்த இருபக்கத்து அரசர்களும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் போரைத் தவிர்ப்பதற்குத் தங்களால் இயன்றவரை சொல்லிப் பார்த்தும் பயன் படவில்லை. எனவே சிறிது நேரத்தில் உரோகிணி ஆற்றில் உதிர வெள்ளம் பாயும் நிலைமை ஏற்பட்டிருந்தது.

அந்நிலையில் புத்தர் பெருமான் திடீரென்று அங்குத் தோன்றி, இருதிறத்தாரையும் சமாதானப்படுத்தினார். சில அரிய உபதேசக் கதைகளைக் கூறி, ஐயன் ‘மன்னர்களைப் பார்க்கினும் மண் மேம்பட்டதா?’ என்று கேட்டார்; ‘தண்ணீரைப் பார்க்கினும் மனித இரத்தம் மலிவான பொருளா?’ என்று வினவினார். ஜனங்கள் ‘இல்லை’ என்றனர். அவர்கள் தங்கள் மன்னர்களை அவமரியாதை செய்துவிட்டுப் போராட வந்ததையும், கேவலம் நீருக்காக மானிட உதிரத்தை வெள்ளமாகப் பெருக்க நினைத்ததையும் அவர் கண்டித்து அவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டினார். அவருடைய தலையீட்டால் இருகட்சியார்களுக்கும் மனமாற்றம் ஏற்பட்டது. சாக்கியர்கள் தங்கள் குலதீபமான கருணாகரரின் சொற்படியே நடந்து, கையிலிருந்த ஆயுதங்களைத் தூர எறிந்தனர். உடனே கோலியர்களும் அவ்வாறே செய்தனர். அன்று பெருமானால் சமாதானம் ஏற்பட்டிராவிடின், ஆற்று மணலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் சண்டையில் மடிந்திருப்பர்; நடந்த விவரத்தைச் சொல்வதற்கு ஒருவன்கூட மிஞ்சியிருக்க மாட்டான்!

பெருமானின் பெருமையை உணர்ந்து சாக்கியப் பிரபுக்களில் பலரும், கோலியரில் பலரும் பௌத்த தருமத்தை மேற்கொண்டனர்.

மேலே கூறிய சண்டையைத் தவிர்ப்பதற்காகப் புத்தர் வைசாலியிலிருந்து ஆகாய மார்க்கமாக உரோகிணிக் கரைக்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. சமாதானத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் வைசாலிக்குத் திரும்பி, மகாவனத்திலே தங்கியிருந்தார்.

சுத்தோதனரின் மரணம்

ததாகதர் கூடாகார விகாரையிலிருந்த சமயத்திலே, கபிலவாஸ்துவில் மன்னர் சுத்தோதனர் நோயால் மிகவும் வேதனைப்படுவதாகவும், அவருடைய அந்திம காலம் நெருங்கிவிட்டதாகவும் கேள்வியுற்று, அவர் முக்கியமான சில சீடர்களுடன் அங்கே விரைந்து சென்றார்.

அரண்மனை மாடியிலே கட்டிலில் படுத்திருந்த அரசரின் தலைமாட்டில் போதிநாதர் அமர்ந்து கொண்டு, அவருடைய தலையில் கையை வைத்து, ‘எண்ணற்ற பிறவிகளில் யான் செய்துள்ள தவங்களின் மகிமையாலும், போதிமரத்தின் அருகே நாற்பத்தொன்பது நாட்கள் நான் நோற்ற நோன்பின் பயனாலும், இந்தத் தலையில் ஏற்பட்டுள்ள வேதனை அனைத்தும் உடனே நீங்குவதாக!’ என்று கூறினார். அவ்வாறே கண் இமைப்பதற்குள் தலை வேதனை நீங்கிவிட்டது. நந்தன் மனனரின் வலது கரத்தையும், ஆனந்தர் இடது கரத்தையும், மௌத்கல்யாயனர் பாதங்களையும் தொட்டு, ‘நாங்கள் போதிமாதவரின் பாத அரவிந்தங்களைப் பின்பற்றி அடைந்துள்ள புண்ணியப் பேற்றினால் இவைகளின் வலி நீங்குவதாக!’ என்றனர். உடனே அந்த அங்கங்களிலிருந்த வேதனையும் நீங்கிவிட்டது. எனினும் மன்னர் இளைத்துக் களைப்பாகவே இருத்தார்.[2]

பின்னர் புத்தர்பிரான் தந்தையர்க்கு அற உபதேசம் செய்தார், அதைக் கேட்டுச் சுத்தோதனர் அருகத்து நிலையை அடைந்து, மெய்ஞ்ஞானம் பெற்றார். ஏழு நாட்களுக்குப் பின் அவர் ஆவி பிரியும் என்று ஐயன் கூறினார். அந்நாட்களில் அரசர் உலகப் பற்றுக்கள் எவையுமின்றிச் சாந்தி நிறைந்த சிந்தையோடு நிர்வாண முக்தியின் மகிமையை மனக் கண்ணால் கண்டு இன்புற்றிருந்தார். புத்தரின் சத்திய வார்த்தைகள் கடைசி வரை அவருக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தன.

கடைசி நாளன்று சூரியன் உதிக்கும் நேரத்தில், கடைசி முறையாக மன்னர் மைந்தரை வணங்கி விட்டு, பூத உடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார்.[3] அப்போது அவருக்கு வயது தொண்ணூற்றேழு.

புத்தரும், சாரீபுத்திரரும் சேர்ந்து மன்னரின் உடலை நீராட்டி, மக்களும் சாக்கியத் தலைவர்களும் தரிசனம் செய்வதற்காக அதை ஓர் உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தனர். பின்னர் பிரேத ஊர்வலத்திற்கும் ஏராளமாக மக்கள் திரண்டு வந்திருந்தனர். மேள வாத்தியங்களுடன் ஊர்வவம் மயானத்தை அடைந்ததும், ததாகதர் தமது கரங்களாலேயே பிரேதத்திற்கு நெருப்பு வைத்தார்.

பெண்களும் சங்கத்தில் சேர்தல்

தந்தையரின் தகனக் கிரியைகள் முடிந்த பின்பு புத்த தேவர் சிறிது காலம் நியக்குரோத வனத்திலே தங்கி யிருந்தார். அவ்வமயம் ஒருநாள் அவருடைய சிற்றன்னை கௌதமி அங்கே சென்று, மைந்தராகிய மாமுனியைக் கண்டு வணங்கி, ஒரு புறத்தே ஒதுங்கி நின்றாள். அவ்வாறு நின்று கொண்டு, அவள் ஐயனைப் பார்த்து, பகவ! ததாகதர் அருளியுள்ள தரும-விநய முறைப்படி வீட்டைத் துறந்து வீடற்ற வாழ்க்கையை மேற்கொள்வதற்குப் பெண்களும் அனுமதிக்கப்பெற்றால் நலமாகும்’ என்று சொன்னாள்.

‘போதும், கௌதமி! ததாகதர் அருளிய தரும-விநய முறைப்படி வீட்டைத் துறந்து வீடற்ற வாழ்க்கையை மேற்கொள்ளப் பெண்கள் அனுமதிக்கப் பெறுவதைப் பற்றி ஆசை வைக்க வேண்டாம்!’ என்று பகவர் பதிலுரைத்தார்.[4]

இரண்டாவது, மூன்றாவது முறையாகவும் கௌதமி முயன்று பார்த்தும், பயனில்லாது போயிற்று. பின்னர் அவள் அண்ணலை வலப்புறமாக நின்று வணங்கி விட்டுச் சோகத்துடன் கண்ணீர் பெருக்கி அழுது கொண்டே திரும்பிச் சென்று விட்டாள்.

புத்தர் ஆடவரின் இரட்சகரேயன்றிப் பெண்களின் இரட்சகரல்லர் என்று மகாநாமனுடைய[5] மனைவி அவரைப்பற்றிக் கூறினாளாம். அவன், தன் தமையனாராகிய ததாகதரின் கருணை சகல ஜீவராசிகளுக்கும் உரியது என்றும் அவர் பெண்களுக்கும் அறவுரை கூறுகிறார் என்றும் சொல்லி, அவளையும் ஐந்நூறு சாக்கியப் பெண்களையும் உபதேசம் கேட்டு வரும்படி அனுப்பி வைத்தான். மகா நாமனின் மனைவி மிக்க அழகுடையவள் ஏராளமான நகைகளையும், கண்ணைப் பறிக்கும் உயர்ந்த உடைகளையும் அணிந்து கொண்டு, அவள் நியக்குரோத வனத்துள் சென்றதும், அங்கே ஒரு பிக்கு அவ்வாறு அளவுக்கு அதிகமான ஆடம்பர நகைகளை அணிந்து கொண்டு ஐயனைத் தரிசித்தல் முறையன்று என்று கூறினார். உடனே அவள் நகைகளைக் கழற்றித் தன் பணிப்பெண்ணிடம் கொடுத்து மாளிகைக்குக் கொண்டு செல்லும்படி கூறிவிட்டு, உபதேசம் கேட்கச் சென்றாள். அந்தப் பணிப்பெண், ஐயனின் அமுதம் போன்ற இன் மொழியைத் தானும் கேட்கலாம் என்று அதுவரை களித்திருந்தாள். ஆனால் அவளுக்கு அந்தப் பேறு கிடைக் காமற் போகவே, வழியிலே அவள் மனத்துயரால் மடிந்து போனாளாம்! புத்தர் அன்று வந்த பெண்களுக்குத் தருமத்தைப் பற்றி விளக்கிக் கூறினார்.

ஆயினும், பெண்கள் பிக்குணிகளாவதை அவர் அனுமதிக்க இசையவில்லை அவருடைய சிற்றன்னை கௌதமியோ, சிறிதும் மனம் கலங்காது, எப்படியும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டு, காலம் கருதிக் காத்திருந்தாள். பெருமான் நியக்குரோத வனத்திலே சில நாட்கள் இருந்து விட்டு மீண்டும் வைசாலியை நோக்கிப் புறப்பட்டார். வழியிலே பல இடங்களில் தங்கித் தருமப் பிரசாரம் செய்து கொண்டே சென்று, மகாவனத்தை அடைந்தார்.

அன்னை கௌதமி, புத்தர் வைசாலியிருப்பதை அறிந்து தானும் அங்கே புறப்பட்டாள்

அவள் தன் கூந்தலைச் சிரைத்து விட்டுக் காவியுடை அணிந்து கொண்டு, தன்னைப் போலவே துறவுக்கோலம் பூண்ட வேறு பல சாக்கியப் பெண்களுடன் வழிநடை கொண்டாள். வாழ்நாள் முழுவதும் அரண்மனைகளிலே கண்ணாடி போன்ற பளபளப்புள்ள மென்மையான தரையில் மிதிப்பதிலே கூடக் கால் வருந்தக் கூடிய கௌதமி கல்லும் மண்ணும் நிறைந்த சாலை வழியாக நடந்தே செல்ல வேண்டும் என்று தீர்மானித்தாள். கோலிய மன்னரின் கோமளக் குமாரி, மா நிலம் போற்றும் சுத்தோதன மன்னரின் மகாராணி புத்தரைப் போற்றி வளர்த்த உத்தமி காட்டு வழிகளிலும் கிராமப்புறங்களிலும் நடந்து சென்று கொண்டிருந்தாள். தாமரை மலர் போன்ற அவள் பாதங்கள் வாடி வதங்கி வீங்கி விட்டன. அவைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களிலிருந்து உதிரம் கசிந்து கொண்டிருந்தது. அவளைப் போலவே மற்றைப் பெண்களும், எல்லையற்ற இடர்களை அனுபவித்துக் கொண்டிருந்தும், உறுதி குலையாமல் அவளுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வைசாலியில் மகாவனத்தை அடைந்ததும்’ நேராக விகாரைக்குள் செல்லாமல், வெளியே முன் வாயிலில் அமர்ந்து கொண்டு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஆனந்தர் அவர்களைக் கண்டார். நெடுவழி நடந்த களைப்பால் சோர்ந்தும், கால்கள் வீங்கியும், சாலைகளின் புழுதி படிந்த உடைகளுடனும், மாசுற்ற மணிகளைப் போல், விளங்கிய அந்த ஸ்திரீகளைக் கண் டதும், அவர் திடுக்கிட்டுக் கௌதமியை நோக்கி, ‘அம்மா, சாக்கியர் நாட்டில் எவரேனும் படையெடுத்து வந்துள்ளனரா? நீங்கள் ஏன் இப்படி அலங்கோலமாக வந்து விட்டீர்கள்?’ என்று வினவினார். கௌதமி தாங்கள் வந்த காரியத்தை தெரிவித்தாள் : ‘ததாகதர் பெண்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்காததால், நாங்கள் வெளியே நிற்கிறோம்!’ என்றாள். அவளுடைய நீர் நிறைந்த கண்களையும் அழுகுரலையும், துயரத்தையும் கண்டு, ஆனந்தர் ஐயனை நாடி விகாரையுள் சென்றார்.

உள்ளே சென்றவர் பகவரை வணங்கி, அவர் அருகே ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அன்னை கௌதமி முன் வாயிலில் வந்து காத்திருப்பதைத் தெரிவித்தார். ‘பெரும! ஸ்திரீகளும் தரும ஒழுக்கத்தை மேற்கொண்டு சங்கத்திலே சேர அனுமதித்தல் நலம்!’ என்றும் கூறினார்.

‘போதும், ஆனந்தா! ஸ்திரீகளை அவ்வாறு அனுமதிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டாம்!’ என்று பெருமான் மறுத்து விட்டார். மீண்டும் இருமுறை ஆனந்தர் கேட்டதற்கும், அதே மறுமொழிதான் கிடைத்தது. ஆயினும் ஆனந்தர் விடுவதாயில்லை.

பெண்கள் துறவு பூண முடியுமா, முடியாதா என்றும், அவர்கள் தருமத்தை ஏற்றுக் கொண்டு உபாசிகைகளாகி, மூன்று படிகளைத் தாண்டி, நான்காவதான அருகத்து நிலையை அடைய முடியுமா, முடியாதா என்றும், அவர் பெருமானிடம் சில கேள்விகள் கேட்டார். பெருமான் அவர்கள் அவ்வாறெல்லாம் அடைய முடியும் என்று கூறினார். பிறகு ஆனந்தர் அன்னை கௌதமியின் ஏற்றத்தையும், அவள் பெருமானைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்த பெருமையையும் எடுத்துக் கூறி, அவளைத் ததாகதரின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளல் நலம் என்று மீண்டும் வேண்டினார்.

முடிவில் ததாகதரும் மனமிரங்கிப் பிக்குணிகளுக்குரிய எட்டு முக்கியமான விதிகளைக் கௌதமி ஏற்று நடக்க இசைந்தால், அவளைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தார், அந்த எட்டு முக்கிய விதிகளாவன :

ஒரு பிக்குணி நூறு வயதானவளாயிருந்தாலும், ஒரு பிக்கு எவ்வளவு இளைஞனாயிருந்தாலும், அவனைக் கண்டதும் அவள் எழுந்து வணங்க வேண்டும்.

ஒரு பிக்குக்கூட இல்லாத பிராந்தியத்தில் (ஜில்லாவில்) பிக்குணி மாரிக்காலத்தில் தங்கி யிருக்கக் கூடாது.

ஒவ்வொரு பட்சத்திலும் (மாதம் இரு முறை) பிக்குணி பிக்குக்களிடம் தரும உபதேசம் பெற வேண்டும்.

வருஷா காலம் முடிவடையும்பொழுது, பிக்குக்களும் பிக்குணிகளும் கூடிய சங்கத்தின் முன்பு, மற்றவர்கள் கண்டும், கேட்டும், சந்தேகித்தும் உள்ள விஷயங்களைப் பற்றிப் பிக்குணி விசாரணைக்கு உட்பட்டிருக்க வேண்டும்

பெருந்தவறு புரிந்துள்ள பிக்குணி, ஒரு பட்ச காலத்திற்குள் அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டு, இருபாலாரும் கூடியுள்ள சங்கத்தின் நன்மதிப்பைப் பெற வேண்டும்.

இரண்டு வருஷா காலங்கள் முடிய இந்த விதிகளில் ஆறு விதிகளை முறையாகக் கடைப் பிடித்து வந்த பிக்குணி, பயிற்சி முடிந்து, இரு பாலாரும் சேர்ந்துள்ள சங்கத்திடம், பிக்குணிக் குரிய முழு அந்தஸ்தையும் பெறலாம்.

எக்காரணத்தையிட்டும் பிக்குணி ஒரு பிக்குவை ஏசவோ, கண்டிக்கவேர் கூடாது.

பிக்குணி பிக்குக்களிடம் பேசுதல் கூடாது; ஆனால், அவர்கள் அவளிடம் பேசலாம்.

ஆனந்தர் இந்த எட்டு விதிகளையும் கெளதமியிடம் போய்த் தெரிவித்தபோது, அவள் தன் உயிருள்ளவரையிலும் அவைகளைக் கடைப்பிடித்து வருவதாக உறுதி சொன்னாள்.

அவ்விஷயத்தை ஆனந்தர் ஐயனிடம் கூறித் ததாகதரின் தாயார் பிக்குணியாகி விட்டாள் என்றார். அப்போது பெருமான், பெண்களைச் சேர்க்காமலிருந்தால், தருமமும் சங்கமும் ஆயிரம் ஆண்டுக் காலம் நிலைத்திருக்கும்; சேர்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டதால், அவை ஐந்நூறு ஆண்டுகளே நிலைத்திருக்கலாம்!” என்று கூறினார்.

அன்னை கௌதமி சங்கத்தில் சேர்ந்த சமயத்திலேயே தேவி யசோதரையம் பிக்கணியானாள்; அவர்களுடன் மகாவனத்திற்குச் சென்றிருந்த மற்ற ஸ்திரீகளும் துறவறத்தை மேற்கொண்டனர்.

பௌத்தமும் பெண்களும்

புத்தர் பெருமான் பெண்களைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தையும், பௌத்த தருமத்தில் அவர்களுக்கு உரிய நிலையையும் இங்கே குறிப்பிடுதல் அவசியம் பெண்களைப் பாவிகள் என்றோ , மாயப் பிசாசுகள் என்றோ புத்தர் கருதவில்லை ஆடவர்கள் உயர்ந்தவர்கள். முக்திக்கு உரியவர்கள் என்றும் அவர் கருதவில்லை. ‘நரகத்திற்குச் செல்லும் பாதையில் வழிகாட்டி நிற்கும் ஒளி விளக்குகள் பெண்கள் என்பது அவர் கொள்கையன்று. அவருடைய உபதேசங்களை ஆயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் ஒரே கூட்டமாக இருந்தே கேட்டு வந்தனர்.

ஆயினும் பெண்களைச் சங்கத்தில் சேர்ப்பது பற்றி அவர் தயக்கமடைந்ததன் காரணங்கள் பொதுவான மனித இயல்பைப் பற்றி அவர் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தமையும், அக்காலத்திலே புறச்சமயவாதிகள் வீண் பழி சுமத்த முன்வரக்கூடும் என்பதுமேயாம். ஆணாயினும், பெண்ணாயினும். அப்பழுக்கில்லாமல், மாசுமறுவில்லாமல், மிகத் தூய்மையுடன் வாழ வேண்டும் என்பதும், அத்தகைய வாழ்க்கைக்கு இடைவிடாத பயிற்சி அவசியம் என்பதும் அவர் கொள்கை. கண்களால் பார்ப்பவைகளும், காதுகளால் கேட்பவைகளும், மற்றைப் புலன்களால் உணர்பவைகளும் மனத்தைப் பாதிக்கின்றன. இதனால் உணர்ச்சிகள் ஏற்படுகின்றன; விருப்பும் வெறுப்பும் ஏற்படுகின்றன. விருப்பு-வெறுப்புக்களால் பற்று உண்டாகிறது. எனவே புலன்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாயிருந்து காத்து வர வேண்டும் என்பதற்குப் பெருமான் பல விதிகளையும், பயிற்சி முறைகளையும் அமைத்தார்.

சங்கத்தில் துறவிகளாகச் சேர்ந்த ஆடவர்களுக்கு மனவிகாரம் ஏற்படக்கூடிய காரணங்களில் முதன்மை யாசுக் குறிப்பிடத்தக்கது பெண் உருவம். மற்றைப் பொருள்கள் சம்பந்தமாகப் புலன்களை அடக்கியும், விருப்பு வெறுப்புக்களைக் களைந்தும் பயிற்சி பெறலாம் எனினும், பெண்ணைச் சந்தித்து அதனால் ஏற்படும் உணர்ச்சியை வெல்வதைப் பார்க்கினும், அவளைச் சந்திக்காமலே ஒதுங்கிச் சென்று விடுதல் மேலென்று புத்தர் கருதினார்[6] மனத்திற்கு எவ்வளவு பயிற்சியிருப்பினும், சில சமயங்களில் அது வழுவி விழுந்து விடக்கூடும். புத்தர் சம்பந்தப்பட்ட மட்டில், அவர் உணர்ச்சிகளை அடக்கி வென்றவர் என்பது மட்டுமன்று, அவைகளின் காரணங்களையே வேரோடு பறித்தெறிந்து விட்டவர் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களும் அவரைப் போலவே இருக்க முடியும் என்று கருத இயலாது. ஆதலால் தான் ஆடவருக்கும் பெண்டிருக்கும் சந்திப்பே இல்லாதிருத்தல் நலம் என்று அவர் கருதினார்.

பெண்களுடன் வீண் பேச்சுப் பேசுதலை அவர் தடை செய்தார். கூடியவரை பெண்களைப் பாராமலே ஒதுங்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார், அவர்களிடம் சமயம், ஒழுக்கம் முதலிய விஷயங்களைப் பற்றிப் பேச நேர்ந்தாலும், பிக்குக்கள் தூர விலகியிருந்தே பேச வேண்டும் என்றும், அவ்வாறு ஒரு பிக்கு பேசும்போது , வேறு பிக்குக்கள் சிலர் உடனிருக்க வேண்டும் என்றும் அவர் விதிகள் செய்தார். இவைகள் எல்லாம் பெண்கள் தாழ்ந்தவர், தீயோர் என்ற கருத்தால் ஏற்பட்டவை அல்ல. பண்படாத மானிட உள்ளத்தின் பலவீனங்களை அறிந்து, உணர்ச்சி வெள்ளத்தைத் தடை செய்வதற்காகப் போடப் பெற்ற அணைகளே இவை.

பௌத்த தருமத்தில் பெண்களுக்கு உயர்ந்த நிலையே அமைந்திருக்கின்றது. அவர்கள் இழிந்த பிறவிகளாகக் கருதப்படவில்லை. பிக்குக்கள் பாடிய பாடல்கள் பல ‘தேர காதை’ என்ற நூலாகவும் பிக்குணிகள் பாடிய பாடல்கள் ‘தேரி காதை’ என்ற நூலாகவும் தொகுக்கப் பெற்று, அவை பௌத்தத் திருமுறைகளோடு சேர்க்கப் பெற்றுள்ளன. பிக்குக்களிற் பால் சிறந்து விளங்கியது போலவே, பிக்குணிகளிலும் பலர் புகழ் பெற்று விளங்கி வந்தனர்.

பௌத்த சமயிகளிடையே ஆண்-பெண் உறவும், திருமணமும், தனிப்பட்டவர்களுடைய விஷயங்களாகக் கருதப்பட்டன. விவாகத்தில் ஆணும் பெண்ணும் சமமாகவே கருதப்பட்டனர். பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டு. அவளுடைய சொத்தில் கணவன் தலையிட முடியாது. பௌத்த சமயம் பரவியுள்ள நாடுகளில் காதலே விவாகத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றது; காதலற்றுப் போனால் விவாகரத்து அனுமதிக்கப் பெறுகின்றது. பர்மாவிலுள்ள பௌத்தப் பெண்கள் விவாகமான பின் தாலி, ஐம்படை, திருமண மோதிரம் முதலிய அடையாளங்கள் எதுவும் அணிவதில்லை.

இருத்தி ஆற்றல்கள்

புத்தர் போதியடைந்த பின் ஆறாவது ஆண்டில் இராஜகிருகத்து வேணுவனத்தில் தங்கியிருந்தார். அப்போது பிம்பிசாரருடைய மகாராணியான க்ஷேமை என்பவளுக்கு அவர் தரும உபதேசம் செய்தார். அந்தச் சீமாட்டியின் பக்தி விசுவாசத்தைக் கண்டு அவர் அவளை மிகவும் உயர்ந்த முறையில் பாராட்டி வந்தார்

அக்காலத்தில் இராஜகிருகத்திலே ஒரு செல்வன் இருந்தான். அவன் ஒரு நாள், நதியில் குளித்துக் கொண்டிருக்கையில் சந்தனக் கட்டையிலே செய்த ஒரு திருவோடு நீரில் மிதந்து வந்தது அதை அவன் எடுத்துக் கொண்டு சென்று, தன் வீட்டு முன்வாயிலில் ஒரு மூங்கில் கழியிலே கட்டிவைத்து, உலகில் யாராவது அருகத்து இருந்தால், அவர் ஆகாய வழியாக வந்து அதை எடுத்துக் கொண்டு. போகலாம் என்று நகரெங்கும் விளம்பரம் செய்தான்.

அந்நகரில் அக்காலத்தில் பல சமயவாதிகள் தத்தம் மதமே சிறந்தது என்று வாதாடித் தீவிரமாகப் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிலே எவரும் அந்தத் திருவோட்டை எடுக்கச் செல்லவில்லை. ஆனால் ஏழாவது நாளன்று, உபாதானம் எடுப்பதற்காக நகருட் சென்ற புத்தரின் சீடர்களான மௌத்கல்யாயனரும் பிண்டோல பாரத்துவாஜரும் அதைப் பற்றிய செய்தியைக் கேள்விப் பட்டுத் தமக்குள் ஆலோசனை செய்தனர். மௌத்கல் யாயனர், ஏற்கெனவே தாம் பிக்குக்களின் தலைவராயிருந்து புகழ் பெற்றிருப்பதால், தமது நண்பரே வான வழியாகப் பறந்து சென்று தமது ஆற்றலைக் காட்டிப் பரிசைப் பெற்று வரும்படி கூறினார். பாரத்துவாஜர் அவ்வாறே சென்று, பல ஜனங்கள் பார்த்து மெச்சும்படியாகத் தமது இருத்தி ஆற்றலைக் காட்டித் திருவோட்டைப் பெற்று வந்தார்.

இச்செய்தியைப் புத்தர் பெருமான் அறிந்ததும் மிக வும் வருந்தினார். எந்தப் பொருளைப் பெறுவதற்காகவும் பிக்குக்கள் இருத்தியை உபயோகித்தல் தகாது என்று சொல்லி, அவர் சந்தன மரத்திற் செய்த அத்திரு வோட்டை வாங்கி, உடைத்தெறிந்து விட்டார். அது முதல் பிக்குக்கள் தமக்குள்ள சித்துக்களை வெளிக் காட்டாமல் அடக்கமாயிருந்தனர்.

இதை அறிந்த புறச்சமயத் தலைவர்கள் பௌத்தர்களிடம் விசேடமான எந்த ஆற்றலும் கிடையாது என்று எங்கும் பிரசாரம் செய்து வந்தனர். இதனால் ஒரு சமயம் மன்னர் பிந்துசாரர் பெருமானை நேரில் கண்டு, பிக்குக்கள் இருத்தி ஆற்றலைக் காட்டக் கூடாது என்று அவர் விதித்திருப்பதால் எதிரிகளின் கும்மாளம் தாங்க முடியாதபடி அதிகரித்து விட்டது என்று முறையிட்டார். அப்போது பெருமான், அரசரின் கட்டளை ஜனங்களுக்கே யன்றி அவனைப் பாதிக்காதது போல், தமது கட்டளை பிக்குக்களுக்கேயன்றித் தமக்கு இல்லையென்றும், இருத்தி ஆற்றல் சமய வாழ்க்கையில் மிக அற்பமான விஷயம் என்றும், அவசியம் அதைக் காண்பிக்க வேண்டுமென்றால் தாமே விரைவில் செய்து காட்டுவதாயும், வெளியே தூரத்திலுள்ள ஒரு நகரில் அதற்குத் தாமே ஏற்பாடு செய்வதாயும் கூறினார்.

சிறிது காலத்திற்குப் பின்பு சிராவஸ்தி நகருக்குப் ‘போதி வேந்தர் சென்றிருந்த சமயம், கோசல நாட்டின் பல பகுதிகளிலும் முரசறைவித்து, ஆயிரக்கணக்கான மக்களின் முன்பு அவர் தமது இருத்தி ஆற்றலைக் காட்டினார். ஒரு மாங்கொட்டையிலிருந்து திடீரென்று மாபெரும் மாமரம் ஒன்று முளைத்தெழுந்து, பூவும், காயும், பழமுமாக விளங்கும்படி அவர் செய்தார். அப்பொழுது அவர் திருமுகத்திலிருந்தும், திருவடிகளிலிருந்தும், பேரொளி தோன்றி மேலும் கீழும் பரந்து திகழ்ந்ததாம். இவைகளைக் கண்டு மக்கள் பெரு வியப்படைந்ததோடு, பௌத்த சமயத்தின் பகைவர்களும் கூடப் பிரமித்துப் போயினர்.

தேவலோகத்தில் அன்னைக்கு உபதேசம்

பின்னர் மழைக் காலத்தில் மூன்று மாதங்கள் பெருமான் இந்திரன் வசிக்கும் திரய ஸ்திரிம்ச லோகத்திற்குச் சென்று, அங்கே தேவ உருக்கொண்டிருந்த[7] தமது அன்னை மாயாதேவிக்கும், தேவர்களுக்கும் தரும உபதேசம் செய்து கொண்டிருந்ததாகப் பழைய வரலாறுகளில் கூறப்பட்டிருக்கின்றது.

மூன்றே அடிகளில் புத்தர் வானுலகை அடைந்ததாகவும், இந்திரன் மிக்க மரியாதையுடன் வரவேற்றுத் தனது அரியாசனத்தில் அவரை அமரச் செய்து அறம் கேட்டதாகவும் கதைகள் கூறுகின்றன. பெருமான் அப்போது, ‘குஸல தர்மா, அகுஸல தர்மா, அவ்யக்த தர்மா’ என்று ஆரம்பித்து அபிதர்மத்தை ஆதியோடு அந்தமாக எண்பத்து மூன்று நாட்கள் உபதேசம் செய்தாராம். மாயாதேவி ஐயனிடம் அறம் கேட்டு அருகத்தாயினள். எத்தனையோ பிறவிகளில் என் உதரத்தில் நீ கோயில் கொண்டிருந்தாய்; பிறவி தோறும் நானே உனக்குத் தாயாக வாய்க்க வேண்டும் என்று நீ விரும்பி யிருந்தாய்; நாலும் உன்னையே மதலையாய்ப் பெற வேண்டும் என்று விரும்பி வந்தேன். உன்னைச் சுமந்து சுமந்து பெற்ற பயனை இன்று தான் பெற்றேன்!’ என்று கூறி அவள் பெருமகிழ்ச்சியடைந்தாள்.

புத்தர் வானுலகத்திற்குச் சென்றதை அறியாத மக்கள் ஆயிரக்கணக்கில் சிராவஸ்தியில் கூடியிருந்து மௌத்கல்யாயனரை விசாரித்தார்கள். அவர் அநுருத்தரைக் கேட்கச் சொன்னார். அநுருத்தர் விஷயத்தை விளக்கிச் சொன்னார். மக்கள் புத்தர் வரவை எதிர்பார்த்துக் கூட்டங் கூட்டமாகக் காத்திருந்தனர். அப்போது மௌத் கல்யாயனர் வானுலகம் சென்று, ஐயனைத் தரித்து, அவர் பூவுலகுக்கு எப்பொழுது திரும்பக்கூடும் என்பதைக் கேட்டார். ஏழு நாட்களில் திருடுபுவதாக விடை கிடைத்தது. மேலும், வானுலகிலிருந்து தாம் இறங்க உத்தேசித்துள்ள தலம் சிராஸ்வதியிலிருந்து முப்பது யோசனை தூரத்திலிருந்த சங்கர்ஷபுரம்[8] என்றும் ஐயன் கூறினார்.

மௌத்கல்யாயனர் ஜேதவனம் திரும்பியதும், மக்களையும் பிக்குக்களையும் அழைத்துக் கொண்டு சங்கர்ஷ புரத்திற்குச் சென்றார். அங்கே குறித்த தினத்தில் போதி வேந்தர் தேவருலகை நீத்துத் திரும்பிவந்து காட்சியளித்தார். அவர் அங்கு எழுந்தருளியதும் முதலாவதாகத் தரும சேனாபதியான சாரீபுத்திரர் எதிர்கொண்டு வணங்கினார். பின்னர் மற்றவர் சென்று முறைப்படி வணங்கினர். அன்று பெருமான் உபதேசம் செய்கையில், சாரீ புத்திரருடைய மேதையையும், மேன்மையையும் யாவரும் அறியும்படி விளக்கவேண்டும் என்று திருவுளம் கொண்டு, அவரிடம் சில வினாக்களைக் கேட்டார். அவைகளுக்குத் தரும சேனாபதி அளித்த விடைகளை வேறும் எவரும் கூறியிருக்க முடியாது என்பதை யாவரும் உணர்ந்து மகிழ்ச்சியுற்றனர்.

இரண்டு அவதூறுகள்

சிராவஸ்தியிலே பகவருக்கும் பிக்குக்களுக்கும் நாள் தோறும் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், ஆயிரக் கணக்கான மக்கள் காலையிலும் மாலையிலும் ஜேதவன விகாரையில் திரளாகக் கூடி அறவுரை கேட்டு வருவதையும் கண்டு புறச்சமயிகளில் முக்கியமான ஜைனக் துறவிகள் சிலர் அழுக்காறு அடைந்தனர். அவர்கள் எவ்வளவு எதிர்ப்பிரசாரம் செய்யினும், போதி மாதவரின் அருளுருவமும், அருட்செய்தியும் மக்கள் மனங்களை வசீகரித்துக்கொண்டிருந்தன. எனவே அத்துறவிகள் முறை யற்ற சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் ஈடுபடலாயினர்.

அவர்களோடு இருந்துவந்த சந்நியாசினியான சிஞ்சை என்பவள் அவர்களுடைய கைக்கருவியாக அமைந்து, புக்க பகவரைக் கேவலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். ஒருநாள் மாலை பகவர் ஜேதவன விகாரையில் பெருங்கூட்டமான மக்களுக்கும் சீடர்களுக்கும் சமய சம்பந்தமான விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், அவள் திடீரென்று அங்கே சென்று உரக்கப் பேசினாள். ‘நீர் ஒரு துறவி; உபதேசம் செய்துகொண்டிருக்கிறீர்; உமக்க இனிமையான நல்ல குரல் இருக்கிறது; உருவத்திலும் அழகாயிருக்கிறீர்! உம்மால் எனக்குக் கர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது; எனது பிரசவத்திற்கு வேண்டிய இடவசதி கூட நீர் இன்னும் செய்யவில்லை! பேறுகாலத்திற்கு வேண்டிய சுக்கு, மிளகு ஒன்றுமில்லை! நீரோ புத்தர். அநாத பிண்டிகர், விசாகை போன்ற பணக்காரர்களும் பணக்காரிகளும் உமக்குச் சிநேகமானவர்கள். அவர்களிடம் சொல்லியாவது எனக்கு உதவி புரிய ஏற்பாடு செய்யக்கூடாதா?’ என்று அவள் சரமாரியாகப் பேசினாள்.

மாதவர் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, அவளைப் பார்த்து ‘சிஞ்சி! உன் வார்த்தைகள் உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால் நீ கூறுவது உனக்கு, மட்டும் தெரிந்த உண்மையாக இருக்கிறதே! அது உனக்கும், எனக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டாமா?’ என்று கேட்டார். ‘நியாயமானவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே சத்தியமானவை. இப்போது எனது பிரசவத்திற்கும், மருத்துவத்திற்கும் ஏற்பாடு செய்வதே உமது முதல் வேலை! இங்கே உபதேசம் செய்து, மக்களின் மனங்களைக் கலக்கிக்கொண்டிருப்பதில் பயனில்லை!’ என்று பரிகாசத்துடன் கூறினாள் சிஞ்சை.

இதைக் கேட்டு மக்கள் மனம் கலங்கினர். சிஞ்சையின் வயிற்றைப் பார்த்தால், அவள் நிறைந்த சூல்கொண்டவள் என்று தோன்றிற்று. ஒரு சந்நியாசினி, கருவுற்று, மகா சபையின் நடுவே வந்து பகவர் மீது குற்றஞ் சாட்டியது யாவர்க்கும் வியப்பும் திகைப்புமாகவே இருந்தது.

அந்த நேரத்தில் தேவர்களுடைய சூழ்ச்சியால் அவளுடைய முதுகில் சேலைக்குள் சில சுண்டெலிகள் சென்று அங்கிருந்த துணி முடிச்சுக்களைக் கருவிக் கத்தரித்துவிட்டன. அவள் வயிற்றோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்த மரக்கட்டைகள் திடீரென்று கீழே விழுந்துவிட்டன. சிஞ்சை மருத்துவ உதவி இல்லாமலே இவ்வாறு பிரசவித்து விட்டாள்!

மக்கள் பெருங் கோபமடைந்து அவளை விரட்டிக் கொண்டு சென்று அடித்தனர். முடிவில் அவள் நிரயத்தை அடைந்ததாக ‘சத்தர்ம ரத்னாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. சிஞ்சையின் செயலால் பகவரின் புகழ் அதிகரிக்க லாயிற்று.

அடுத்தாற்போல் சுந்தரி என்பவள் தோன்றினாள். பகவரின் எதிரிகள் அவளைத் தூண்டி விட்டனர். அவள் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஜேதவன விகாரைக்குச் செல்வதுபோல அந்தப் பக்கமாக நடந்து போவதும், காலையில் அந்தப் பக்கமிருந்து நகரை நோக்கி வருவதும் வழக்கமாயிருந்தது. ஜனங்கள் விகாரைக்குச் செல்லும் போதும், அங்கிருந்து திரும்பும்போதும் அவர்கள் தன்னைக் கவனிக்கும்படியாகவே அவள் நடப்பது வழக்கம். தன்னைக் கேட்டவர்களிடம், அவள் தான் பகவர் புத்தருடன் இரவில் தங்கிவிட்டுக் காலையில் திரும்புவதாகக் கூறி வந்தாள். புஷ்பம் முதலிய அவளுடைய அலங்காரங்களைக் கண்டு பல ஜனங்கள் அவளுடைய கூற்று உண்மையாயிருக்கலாம் என்று எண்ணினார்கள்.

பல மாதங்களாகச் சுந்தரி செய்துவந்த சூழ்ச்சியால், நகரெங்கணும் அவளைப்பற்றியும் ஐயனைப்பற்றியுமே பேசப்பட்டு வந்தது. அந்நிலையில் ஒரு நாள் காலை சுந்தரி கொலை செய்யப் பெற்று, அவள் பிரேதம் ஜேதவன விகாரைக்கு வெளியே குப்பை மேட்டில் கிடந்தது. பகவருக்கும் சுந்தரிக்குமுள்ள தீய நட்பைப் பற்றி மக்கள் அனைவரும் பேசி வந்ததால், அதை மறைப்பதற்காகப் பௌத்த பிக்குக்களே அவளைக் கொலை செய்துவிட்டதாக பகவரின் எதிரிகள் எங்கும் செய்தியைப் பரப்பி, மன்னரிடமும் முறையிட்டுக் கொண்டார்கள்.

சில நாட்களுக்குப்பின் உண்மைக் கொலைஞர் இருவர் அரசாங்க அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டனர். ஒரு கள்ளுக்கடையில் அந்த இருவரும் தாங்கள் சுந்தரியைக் கொலை செய்ததைப் பற்றி மது வெறியில் பேசிக் கொண்டிருந்ததால் உண்மை வெளிப்பட்டுவிட்டது. அரசரின் விசாரணையின் போது, பகவரின் மீது அவதூறு உண்டாக்கும் வண்ணம் சுந்தரியைத் தூண்டி, அவளையும் கொலை செய்ய ஏற்பாடு செய்த புறச் சமயத் துறவிகளின் விவரம் அனைத்தும் வெளியாயிற்று. அவர்களுக்கும், கொலைஞர்களுக்கும் உரிய தண்டனை விதிக்கப் பெற்றது.

பழைய பிதாவும் மாதாவும்

ஞானமடைந்த பின் எட்டாம் ஆண்டில் புத்தர் யாத்திரை செய்து வருகையில் சும்சுமாரகிரி என்ற நகருக்குச் சென்றிருந்தார். அங்கே இல்லறமாகிய நல்லறம் நடத்திக் கொண்டிருந்த நகுல பிதா, நகுல மாதா என்ற தம்பதிகள் அவரைத் தரிசித்து, ‘இவனே நமது மகன்!’ என்று கூறி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர். முன்னம் பல பிறவிகளில் அவர்கள் இருவரும் ஐயனுக்குப் பிதாவாகவும், மாதாவாகவும் விளங்கியதை அவரும் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஞான உபதேசம் செய்தார்.

கௌசாம்பி

ஒன்பதாம் ஆண்டில் ஐயன் கௌசாம்பி நகரை அடைந்தார். இராமாயணம், மற்றும் புராணங்களி லெல்லாம் சிறப்பாக வருணிக்கப் பெற்றது இந்நகரம். நகரமக்கள் ஐயனை உவகையுடன் வரவேற்று, அவர் அறவுரைகளைக் கேட்டு வந்தனர். பலர் பௌத்த தருமத்தை மேற்கொண்டனர், அரசன் உதயணனும், அச் சமயத்தை தழுவிக்கொண்டு, தன் குமாரன் இராஷ்டிரபாலன் பிக்கு ஆவதற்கும் அனுமதியளித்தான். இவ்வாறு கௌ சாம்பி சென்ற முதல் வருடத்தில் புத்தர் பெருமான் பெரு மகிழ்சிச்யுடன் அங்குப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்த ஆண்டில் மௌத்கலி என்ற பிக்குவால் பௌத்த சங்கத்துள் பிளவு தோன்றி, அதனால் பெருமானுக்கு மிக்க வருத்தம் ஏற்பட்டது.

மௌத்கலி ஏதோ தவறு செய்ததைச் சங்கத்தார் எடுத்துக் காட்டியபோது, அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் அவர்கள் அவரைச் சங்கத்திலிருந்து வெளியேற்றத் தீர்மானம் செய்தனர்.

மௌத்கலி படித்த அறிவாளி; தருமத்தையும், விநய ஒழுக்கங்களையும் நன்கு தெரிந்தவர். அவ்வாறிருந்தும், அவர் சங்கத்தின் தீர்ப்புத் தவறானது என்றும், தாம் தவறே செய்யவில்லை என்றும், சங்கத்தின் தீர்மானம் தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும் மற்றப் பிக்குக்களிடையே பிரசாரம் செய்தார். அவர் கட்சியில் சிலர் சேர்ந்து கொண்டனர். எதிர்க் கட்சியிலிருந்த பிக்குக்களும் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. எனவே இரண்டு சங்கங்களாகப் பிரிந்து அவர்கள் செயலாற்றி வந்தனர்.

இச் செய்திகளெல்லாம் பகவருக்கு அறிவிக்கபபட்டன.

தீர்ப்புக் கூறிய பிக்குக்கள் இருந்த இடத்திற்குப் பகவர் முதலில் சென்று, ‘ஓ பிக்குக்களே! ஒரு விஷயத்தின் உண்மைகள் எப்படியிருப்பினும், “எங்களுக்கு இப்படித் தோன்றுகிறது; நாங்கள் எங்கள் சகோதரர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்போம்!” என்ற முறையில் நீங்கள் நினைக்கவேண்டாம். தருமத்தையும் விநயத்தையும் நன்கு அறிந்து கொண்டு, கல்விமானாயும், ஞானியாயும், அடக்கமுள்ளவராயும், மனச்சான்றை மதிப்பவராயுமுள்ள ஒரு சகோதரருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லாமல், பொறுப்பற்ற முறையில் தீர்ப்பளிக்கும் பிக்குக்கள் சங்கத்தில் பிளவுகள் ஏற்படுவதைக் கண்டு பயமும் நடுக்கமுமே கொள்ளவேண்டும். ஒரு சகோதரர் தாம் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ள மறுப்பதற்காக அவரைச் சங்கத்திலிருந்தே வெளியேற்றத் தீர்மானிப்பது உசிதமில்லை’ என்று கூறினார்.

இதேபோல, மௌத்கலியை ஆதரிக்கும் பிக்குக்களிடத்தும் சென்று பெருமான் பின் கண்ட முறையில் நீதியை எடுத்துரைத்தார்: ‘ஓ பிக்குக்களே! நீங்கள் ஏதும் தவறு செய்திருந்தால், “நாம் குற்றமற்றவர்கள்” என்று கருதிக்கொண்டு, அதற்குக் கழுவாய் தேட வேண்டியதில்லை என்று எண்ணியிருக்க வேண்டாம். ஒரு பிக்கு தவறு செய்திருந்து, அவர் அதைத் தவறு என்று கருத வில்லையானாலும், சங்கம் அவரைக் குற்றவாளி என்று கருதுகிறது. அப்போது அவர், “இந்தச் சகோதரர்கள் தரும் விநய ஒழுக்கங்களை நன்கு தெரிந்தவர்கள், கல்வி மான்களாயும், ஞானிகளாயும், அடக்கமுடையவர்களாயும், மனச்சான்றை மதிப்பவர்களாயும் இருக்கிறார்கள்; இவர்கள் என் பொருட்டாகச் சுயநலத்தாலோ, துவேஷத்தாலோ, மயக்கத்தாலோ, பயத்தாலோ முறை தவறி நடக்கமாட்டார்கள்” என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சங்கத்தில் பிளவுகள் ஏற்படுவது பற்றி அவர் பயமும் நடுக்கமுமே கொள்ளவேண்டும்’

இரு கட்சிகளும் பெருமானின் போதனையை மேற்கொள்ளாமல் தனித் தனியாகவே உபவாசதம் முதலிய காரியங்களை நடத்தி வந்தன. அவைகள் இரு சங்கங்களாகக் செயல்புரிந்து வருதல் நியாயம்தான் என்று அண்ணலும் கூறினார்.

ஆயினும், தலைக்கனம் ஏறிய பிக்குக்களுக்கு உபதேசம் செய்தல் எளிய காரியமன்று என்று கருதி, புத்தர் பிரான் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் பாரிலேயகம் என்ற வனத்திற்குச் சென்று அங்கே ஏகாந்தமாக மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து பல இடங்களுக்குச் சென்று, கடைசியாகச் சிராவஸ்தி நகரை அடைந்தார்.

அவர் இல்லாத காலத்தில் கௌசாம்பியில் பிக்குக்களிடையே மனவேற்றுமைகள் வளர்ந்து சண்டைகள் முற்றி விட்டன. அப்பொழுது பௌத்த சமயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பிக்குக்கள் சீரழிவதைக் கண்டு, அவர்களுக்கு உதவி புரிவதை அறவே நிறுத்திக்கொண்டனர். அவர்கள் பிக்குக்களைக் கண்டால் வணங்குவதைக்கூட நிறுத்தி விட்டனர். இவர்கள் சீவர உடைக்கே உரியவரல்லர்; ஒன்று இவர்கள் பெருமானைத் திருப்தி செய்ய வேண்டும்; அல்லது இல்வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்!’ என்று அவர்கள் கூறினார்கள்.

இதன் பிறகுதான் பிக்குக்களுக்கு நல்லறிவு உண்டாயிற்று. பகவரை அடைந்து தங்களுக்குள் சமாதானம் செய்து வைக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று இரு கட்சியார்களும் சிராவஸ்திக்குச் சென்றனர். அவர்கள் வரவை அறிந்த சாரீபுத்திரர் அண்ணலிடம் சென்று, அவர்களிடம் தாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டார்.

அப்போது பகவர், ‘சாரீபுத்திர! இருதிறத்தாரையும் கண்டிக்க வேண்டாம்;. கடுஞ் சொற்கள் எவர்க்கும் இனிமை பயப்பதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனியாக இருக்க இடமளித்து, இருபக்கத்தாரையும் சமமாக நடத்தவும். இரு கட்சியார்கள் சொல்வதையும் பொறுமை யோடு கேட்கவேண்டும். பிறகு சங்கம் முடிவு செய்து ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.

அதேபோலத் தம்மிடம் ஆலோசனை கேட்டு வந்த கௌதமிக்கும், உபாலிக்கும் ஐயன் பதிலுரைத்தார். இரு கட்சியினருக்கும் வேற்றுமை இன்றி உணவு, உடைகள் எல்லாம் அளித்து வரும்படி கௌதமிக்குக் கூறப்பட்டது. உபாலி, சண்டையின் விவரத்தை மீண்டும் விசாரிக்காமலே சமாதானம் செய்யலாமா என்று கேட்டதற்கு, அது உண்மையான சமாதானமாகாது என்று ஐயன் கூறினார்.

பிக்குக்கள் யாவரும் பெருமானிடம் நேரில் வந்த போது, அவர் முற்காலத்தில் கோசல மன்னனுடைய மைந்தன் தீர்க்காயு என்பவன் தன் பெற்றோரைக் கொன்ற காசி அரசனைப் பழிக்குப் பழி வாங்காமல் மன்னித்துப் பொறுமையை மேற்கொண்ட வரலாற்றை விளக்கிச் சொன்னார். பிறகு, ‘சகோதரர்களே! தரும சம்பந்தமாக நீங்கள் என் பிள்ளைகள். தந்தை கூறிய போதனையை மைந்தர்கள் காலால் மிதித்துத் தள்ளுதல் தகாது; இது முதல் என் போதனைப்படி நடவுங்கள்!’ என்று கூறினார்.

இதற்கு அப்பால் பிக்குக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து, தங்கள் பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர். சங்கத்தில் மீண்டும் ஒற்றுமை நிலைநிறுத்தப்பெற்றது.

காசி பாரத்துவாஜர்

புத்தர் போதியடைந்த பதினோராம் ஆண்டில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி அவர் காசி பாரத்துவாஜரைச் சந்தித்துத் தரும உபதேசம் செய்ததாகும்.

இராஜகிருகத்தின் அருகே எகனாலா என்ற கிராமத்திலுள்ள தட்சிணகிரி விகாரையில் புத்தர் பெருமான் தங்கியிருக்கையில், அங்கே காசி பாரத்துவாஜர் என்ற செல்வம் மிகுந்த பிராமணர் ஒரு நன்னாளில் நடுகை விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அன்று 500 ஏர்களும், 1000 எருதுகளும் தயாராகப் பூட்டி நிறுத்தப் பெற்றிருந்தன. 500 உழவர்களும் ஆடை ஆபரணங்களுடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு நின்றனர்; காளைகளின் கழுத்துக்களிலும் மலர் மாலைகள் விளங்கின. ஆயிரக்கணக்கான ஜனங்களும் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் உணவளிப்பதற்காகப் பாரத்துவாஜரின் மனைவி வண்டி வண்டியாக உணவு வகைகள் தயாரித்து வயல்களுக்குக் கொண்டு வந்திருந்தாள். பாரத்துவாஜர் யார் யாருக்கு என்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொருவராகக் குறித்துக் காட்டவும், அவர் மனைவி அவ்வாறே அன்னத்தையும் பண்டங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அன்று காலையில் புத்தர் பெருமான், ‘இன்று யாருக்குத் தரும உபதேசம் செய்யலாம்?’ என்று எண்ணிப் பார்க்கையில், தவமகிமையுள்ள பாரத்துவாஜரை நடுகை விழாவிலே சந்திக்க வேண்டும் என்று திருவுளம் கொண்டு, அவ்வாறே விழா நடந்த இடத்திற்குச் சென்றிருந்தார். அன்ன தானம் நடந்து கொண்டிருந்தது. ஐயன் கையிலே திருவோட்டுடன் சிறிது தூரத்திற்கு அப்பால் மௌனமாக நின்று கொண்டிருந்தார். பாரத்துவாஜரும் அவர் நிற்பதைக் கண்டு கொண்டார். உணவு அருந்திய ஜனங்கள் அருள் வள்ளலின் திருமுகவிலாசத்தைக் கண்டு அவர் பக்கமாகச் சென்று கூடியிருந்தனர்.

பாரத்துவாஜர் ஐயனைப் பார்த்து வெறுப்புற்று, ‘சிரமணரே! நீர் ஏன் பிச்சை கேட்க வருகிறீர்? நான் நிலத்தை உழுது, விதை விதைத்து, அறுவடை செய்வதால் தானியம் கிடைக்கின்றது; அதை நான் அனுபவிக்கிறேன். துறவியாகிய நீரும் இதுபோல உழுது பயிரிட்டால், உமக்கும் உண்ண உணவு கிடைக்கும்!’ என்று கூறினார்.

அமலர், ‘ஓ அந்தண! நானும் உழுகிறேன், விதைக்கிறேன், பிறகுதான் உண்கிறேன்!’ என்று பதிலுரைத்தார். அந்தணரின் அஞ்ஞானம் நீங்கும் தருணம் வந்து விட்டதை அவர் அகத்திலே உணர்ந்து கொண்டார்.

‘ஏருமில்லை, எருதுகளுமில்லை! இந்தத் துறவி உழுது பயிர் செய்வதாகச் சொல்கிறாரே! ஆனால், இவருடைய உடலின் ஒளியைப் பார்த்தால், இவர் பொய்யும் புகல மாட்டார் என்று தெரிகின்றது!’ என்று எண்ணிய பிராமணர், ‘கோதமரே! நீர் உழுவதாகச் சொல்லிக் கொண்டால், எவரும் நீர் உழுவதைக் கண்டதில்லையே! உமது கலப்பை எங்கே? கருவிகள் எங்கே?’ என்று கேட்டார்.

‘ஓ பிராமணரே, கேளும்!’ என்று பெருமான் பேச ஆரம்பித்தார்.

‘தருமமே எனது நிலம். வாழ்க்கையைப் பற்றி யிருக்கும் ஆசை என்னும் களைகள் அதில் உண்டாவதை நான் களைந்தெறிகிறேன். ஞானம் என்பது என் கலப்பை; கருத்துடைமை எனது தார்க்கோல். விடா முயற்சி என்ற எருதுகள் ஏரை இழுத்துச் செல்கின்றன. (மெய்ப்பொருளை உணரும்) தெளிவான காட்சிகளே நான் விதைக்கும் விதைகள். நல்லொழுக்கமே நான் பாய்ச்சும் நீர். எனது அறுவடை எது தெரியுமா? என்றும் அழிவில்லாத நிர்வாண அமிழ்தம். இந்த விளைவைப் பெறுகிறவர்களுக்கு என்றென்றும் குறைவேயில்லை’[9]

பாரத்துவாஜர் உடனே மாமுனியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ‘அருமை, அருமை, அருமையான உபதேசம், என் குருவே!’ என்று பாராட்டினார்.

பின்னர் அவர், ‘தவறி எறியப்பட்டதை மீட்டும் எடுத்துக் கொடுப்பது போலவும், மறைத்து வைக்கப்பட்டதைத் தெரியும்படி காட்டி வைப்பது போலவும், வழி தவறிச் செல்வோனுக்குச் சரியான மார்க்கத்தைக் காட்டுவது போலவும், இருளில் ஒளிவிளக்கைப் பிடித்துக் கொண்டு கண்ணுள்ளவர்களுக்குப் பார்வை அளிப்பது போலவும் விளங்குகின்றன தங்கள் வார்த்தைகள்... நான் இப்போதே புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்று அடைக்கலங்களையும் மேற்கொள்கிறேன்!’ என்று மன உருக்கத்தோடு கூறினார்.

உடனே மிக உயர்ந்த உணவுகளை எடுத்து வரச் செய்து, அவர் உள்ளக் களிப்போடு அண்ணலை அருந்தும் படி வேண்டினார். ஆனால் பெருமான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை; தரும உபதேசம் செய்த பின்பு எதையும் காணிக்கையாகப் பெறுவது உசிதமன்று என்று மறுத்து விட்டார். இல்லாவிடில், பாணர்களும், நடிகைகளும் தங்கள் இசையும் நடனமும் முடிந்தவுடன் பணம் வசூலிப்பது போன்ற முறையில் அறவுரையையும் கருத நேரிடும் என்பது அவர் உள்ளக் கருத்து.

பின்னர் காசி பாரத்துவாஜர் புத்தர் பெருமானுடைய விகாரைக்குச் சென்று பிக்குவாகி, மேனிலை அடைந்து விளங்கினார்.

இயக்கன் ஆலவிகன்

பின்னர் பெருமான் நான்கு ஆண்டுகள் கோசல நாட்டிலும், காசி, வைசாலி, சிராவஸ்தி முதலிய இடங்களிலும், சாலிகை என்ற மலையிலும் யாத்திரை செய்து அற உரைகள் நிகழ்த்தி வந்தார். இக்காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளின் விவரங்கள் தெரியவில்லை. சிராவஸ்தியில் இராகுலனுக்குக் காஷாய உடையளித்து அவனைப் பிக்குவாகச் சேர்த்துக் கொண்டதும்[10] யசோதரையின் தந்தையாகிய சுப்பிரபுத்திரர் போதிநாதரைச் சந்தித்ததும் இங்கே குறிக்கத்தக்க நிகழ்ச்சிகளாம். சுப்பிரபுத்திரர் கோபத்தோடு சிராவஸ்திக்கு வந்து, தம் அருமைக் குமாரி யசோதரையைப் பெருமான் துறந்ததற்காக அவரை வாய்க்கு வந்தபடி ஏசியதாகவும், உடனே அவர் நின்ற இடத்தில் பூமி வெடித்து அவர் பாதாளத்திற்குச் செல்ல நேர்ந்தது என்றும் புத்த சரித்திரங்கள் கூறுகின்றன.

ஞானமடைந்த பதினாறாம் ஆண்டில் பெருமான் ஆலவி என்னும் நகருக்குச் சென்றிருந்தார். அந்நகருக்கு அருகேயிருந்த அடவியில் ஓர் ஆலமரத்திலே ஆலவிகன் என்ற இயக்கன் தன் உருவை மறைத்துக் கொண்டு வசித்து வந்தான். அவன் அசுரகுணம் படைத்தவன். முன்பு ஒருநாள் அடவியிலே வேட்டையாட வந்த ஆலவி மன்னன் இயக்கனுடைய ஆலமரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில், அவன் மன்னனைப் பற்றிக்கொண்டு கொலை செய்ய முயன்றான். அப்போது மன்னன், தன்னை விட்டு விடும்படியும், தான் நகருக்குத் திரும்பியதும் நாள்தோறும் ஓர் இளைஞனை அவனுக்கு உணவாக அனுப்புவதாகவும் கூறினான். அதற்கு அவன் இசைந்து மன்னனை விட்டு விட்டான். அதுமுதல் மன்னன் தினந்தோறும் ஓர் இளைஞனை இயக்கனுக்குப் பலியாவதற்காக அனுப்பி வந்தான் இவ்வாறு பல்லாண்டுகள் நடந்து வந்ததால், நகரின் மக்கள் பலர் இராஜ்யத்தை விட்டே ஓடி விட்டனர். கடைசியாக ஒரு நாள் மன்னன் தன் மைந்தனையே ஆலவிகரிடம் அனுப்ப நேர்ந்தது.

அந்தச் சமயத்தில் ஆலவியிலிருந்த புத்தர் பெருமான் மன்னனின் மைந்தனைக் காப்பாற்றி ஆட்கொண்டு, ஆலவிகனுக்கும் அருளுரை புகலவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார். வனத்திலே பெரியதோர் ஆலமரத்தின் அருகே பூமிக்குள் அமைந்திருந்த இயக்கனுடைய மாளிகையை அடைந்து, அவர் அதனுள் சென்று அவனுடைய ஆசனத்திலே அமர்ந்துகொண்டார். இயக்கன் அப்பொழுது வெளியே போயிருந்தான். பின்னால் அவன் மாலையில் திரும்பி வந்ததும், உள்ளே வல்லமை மிக்க துறவி ஒருவர் அமர்ந்திருப்பதை அறிந்து, அவரை எதிர்க்கத் துணிந்தான். புயல், மழை, அனல் முதலியவற்றால் புத்தரை வெல்ல முயன்றான். அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தெரிந்த வித்தைகளை யெல்லாம் செய்து பார்த்தான். கருணை வள்ளல் அவன் தன் செயல்களால் தானாகவே களைத்து வரட்டும் என்று, காத்திருந்தார். கடைசியில் அவன் இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற கொடுமையான ஆயுதம் ஒன்றை ஐயன்மீது எறிந்தான். அதுவும் பயனற்றுப் போகவே, அவன் வெகுளியை விட்டுச் சாந்தமடைந்து, போதி நாதரின் பெருமையை உணர்ந்துகொண்டான். அமலர் அன்பு காரணமாகவே அங்கு வந்திருந்ததை அறிந்து, அன்பை அன்பினாலேயே வெல்ல முடியும் என்று கருதித் தன் இடத்தைக் காலி செய்து தரும்படி ஐயனை வேண்டினான். உடனே பெருமானும் எழுந்திருந்து அங்கிருந்து அகன்றார்.

இயக்கன் மீண்டும் அவரை அழைத்துத் தான் கேட்கும் வினாக்களுக்கு அவர் பதிலுரைக்க வேண்டும் என்று கூறினான். அவ்வாறே அவன் வினாக்களுக்கு. ஐயன் தக்க விடைகூறி அவனுக்கு ஞானச்சுடர் உண்டாகும்படி அருளினார் ஆலவிகன் அவரிடம் தரும். உபதேசமும் பெற்றான். அந்தக் கணத்திலிருந்து அவன் வாழ்க்கை திருந்திவிட்டது. அவன் புத்த தேவரை வணங்கிக்கொண்டிருக்கும்போது, ஆலவி மன்னரின் மைந்தனை அரசாங்க அதிகாரிகள் முறைப்படி அங்கே. கொண்டுவந்து சேர்த்தனர் அங்கு இயக்கன் பகவரை வணங்கிக்கொண்டிருந்த நிலைமையைக் கண்டு அவர்கள் யாவரும் பெரு வியப்படைத்தனர். ஆலவிகன் இளவரசனைப் புத்தரிடம் ஒப்படைத்து விட்டான்.

பின்னர் பெருமான் இளவரசனை அரண்மனைக்கு அனுப்பிவிட்டு, நகரில் ஐயம் எடுத்து உணவருந்தியபின், ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அவ்வமயம் மன்னனும், பெருந்திரளான மக்களும் அங்கே சென்று அவரைத் தரிசித்து உபதேசம் பெற்றனர். பெருமான் அப்போது ‘ஆலவிக சூத்திர’த்தை அவர்களுக்கு உபதேசித்தார்.

பிற்காலத்தில் இளவரசனுக்குத் தக்க பிராயம் வந்ததும், அவனுக்குப் போதி வேந்தரே முன்பு உயிர்ப் பிச்சை அளித்ததால், அவன் அவரிடம் போய்ச் சீடனாயிருக்க வேண்டும் என்று மன்னன் அவனை அனுப்பி வைத்தான். இளவரசனும் ஐந்நூறு துணைவர்களுடன் சென்று, பெருமானைக் கண்டு, பௌத்த தருமத்தை மேற்கொண்டு சிறப்படைந்தான்.

அணுக்கத் தொண்டர்

புத்தர் ஞானமடைந்த இருபதாம் ஆண்டில் அவர் சிராவஸ்தியில் ஜேதவன விகாரையில் தங்கியிருந்தார். வழக்கம்போல் கூட்டங் கூட்டமான மக்களுக்கு அவர் அறிவுரைகள் கூறிவந்தார். அந்தக் காலத்தில் தான் ஆனந்தர் பகவருக்கு அணுக்கத் தொண்டராக நியமிக்கப் பெற்றார். அதுவரை ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு பிக்குவாக அவருக்குத் தொண்டு செய்து வந்தனர். நிரந்தரமாக ஒருவரைத் தொண்டராக நியமிக்கா விட்டால், அவருடைய திருவோட்டைக்கூடப் பாதுகாக்க முடியாமலிருந்தது.

புத்தர் தமக்கு ஓர் அணுக்கத் தொண்டர் வேண்டு மென்று கேட்டவுடன் சாரீபுத்திரர் முதல் ஒவ்வொரு பிக்குவும் தாமே தொண்டராக இருக்க விரும்புவதைத் தெரிவித்துக்கொண்டனர். ஆனால், ஐயன் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்போது ஆனந்தர் மட்டும் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். மற்றைப் பிக்குக்கள் அவரைத் தூண்டி, அவர் மனத்திலுள்ளதை வெளியிட்டுக் கூறும்படி வேண்டினார்கள். ஆனந்தர் சில நிபந்தனைகளின் பேரிலேயே தாம் தொண்டராக இருக்க முடியும் என்றார். பகவருக்கு அளிக்கப்பெறும் உணவு, உடை, ஆசனம், மரியாதைகள் முதலியவைகளைப் பகவர் தமக்கு அளிக்கக்கூடாது என்றும், தாம் அழைத்துவரும் அன்பர்களுக்கு ஐயன் தரிசனமளிக்க வேண்டும் என்றும், தம்மைத் திருத்தி நல்வாழ்வில் நிலைத்திருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டியது பெருமானின் பொறுப்பு என்றும். தாம் இல்லாத வேளைகளில் பகவர் மற்றவர்களுக்குக் கூறும் உபதேசங்களைத் தமக்கும் பின்னால் போதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார். பகவர் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, ஆனந்தரையே அணுக்கத் தொண்டராக நியமித்தார்.

அப்போது ஆனந்தர் துறவியாகி இருபது ஆண்டுகள் சென்றிருந்தன. அதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் அவர் அருள் வள்ளலுடன் இடைவிடாது தங்கியிருந்து அருந்தொண்டாற்றி வந்தார். பெருமானுக்கும் அவரிடம் அளவற்ற அன்பு இருந்து வந்தது.

அங்குலிமாலன்

புத்தர் சிராவஸ்தியில் தங்கியிருந்த சமயத்தில், ஒரு நாள் காலையில், அன்று யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று ஆலோசனை செய்யும்போது. அங்குலிமாலன் என்ற கொள்ளைக்காரனின் நினைவு வந்தது. அன்று அவனை நிச்சயமாக ஆட்கொள்ளவேண்டும் . என்று அவருக்கு அருள் பிறந்தது.

அங்குலிமாலன் கொள்ளைக்காரனாயிருந்ததுடன், பெரிய கொலைகாரனாயும் விளங்கினான். இரக்கம் என்பதை அவன் அறியான் அவன் கொடுமையைத் தாங்காமல் அநேகம் கிராமங்களும் நகரங்களுமே பாழாகிக் கிடந்தன. சிராவஸ்திக்கு அருகே ஒரு வனத்தில் தங்கியிருந்து கொண்டு அவன் அந்த வழியாக வருகிறவர்களைக் கொள்ளையிட்டும், கொலை செய்தும் வந்தான். அவனால் கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு மனிதருடைய விரல்களிலும் ஒன்றை வெட்டி, அப்படிச் சேர்ந்த விரல்களை யெல்லாம் மாலையாகத் தொடுத்து அவன் அணிந்திருந்தான். அதனால்தான் அவனுக்கு, ‘விரல்மாலை அணிந்தவன்’ என்று பொருள்படும் ‘அங்குலி மாலன்’[11] என்ற பெயர் வந்ததாம்.

புத்தர் அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கருதிய தினத்தில், காலையில் ஐயம் ஏற்றுவந்து, உண வருந்திய பின், அவர் உடையணிந்து, திருவோட்டை எடுத்துக் கொண்டு தனியாக வெளியே புறப்பட்டார். வழக்கமாக அந்த நேரத்தில் அவர் சிறிது ஓய்வெடுத்துக் கொள்வதையும் அன்று நீக்கிவிட்டார்.

அவர் வனத்தில் நுழையும்போது, ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஆயர்களும், விறகு வெட்டிக் கொண்டிருந்தவர்களும் அவர் அவ்வழியாய்ச் செல்ல வேண்டாம் என்று கூவினார்கள். யாரோ துறவி அங்குலி மாலனிடம் உயிரைப் பலி கொடுப்பதற்காகச் செல்வதாக அவர்கள் எண்ணி, அவனைப்பற்றிப் பெருமானுக்கு எச்சரிக்கை செய்தார்கள். பெருமான் மௌனமாகச் சென்று கொண்டேயிருந்தார். அவர்கள் மீண்டும் இருமுறை எச்சரிக்கை செய்தும் பயனில்லை. இருபது, முப்பது, நாற்பது பேர்கள் சேர்ந்து சென்றாலும், அங்குலிமாலனிடம் தப்பி வர முடியாது என்று அவர்கள் உரக்கக் கூவினார்கள். ஆனால் ஐயன் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. தமது நடையையும் நிறுத்தவில்லை. அவர் வனத்துள் சிறிது தூரம் சென்றவுடன் அங்குலிமாலன் அவர் வரவைத் தொலைவிலிருந்தே கவனித்துவிட்டான். ஒரே துறவி தனிமையாக நடந்து செல்வதைக் கண்டதும், அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். உடனே உடைவாளையும், அம்புகளையும், வில்லையும் எடுத்துக்கொண்டு, அவன் போதிவேந்தரைத் தொடர்ந்து பின்செல்லலானான்.

பத்தர் வழக்கம்போல் நிதானமாகவே நடந்துகொண்டிருந்தார். ஆயினும் திருடன் அவரை எட்டிப் பிடிக்க முடியவில்லை அவன் எவ்வளவு வேகமாக நடப்பினும், அவருக்குப் பின்னால் தூரத்திலேயே தான் இருப்பதை உணர்ந்துகொண்டான். பெருமான் தமது ஆற்றலால் அவன் மனத்தை வசியப்படுத்தி, அவனது நடையைத் தளர்த்திவிட்டார். ‘இதுவரை யானை, குதிரை, மான், வண்டி முதலியவை முழுவேகத்தில் செல்லும்போதும், நான் அவைகளை எட்டிப் பிடித்து விடுவேன்; ஆனால் இப்போது இந்தத் துறவியைப் பிடிக்க முடியவில்லையே! இவர் சாதாரணமாகவே நடந்து கொண்டிருக்கிறார்; அப்படியிருந்தும் நான் பின் தங்கியே நிற்கிறேன்!’ என்று அவன் கருதினான்.

உடனே அவன் நடையை நிறுத்திக் கொண்டு ஐயனைக் கூவி அழைத்து, அவரும் நடையை நிறுத்தும்படி உரக்கக் கூறினான்.

புத்தர்: நான் நடையை நிறுத்தியாயிற்று; நீயும் நிறுத்திவிடு!

அங்குலிமாலன் : நடையை நிறுத்திவிட்டதாகச் சொல் லிக்கொண்டே நடக்கிறீர்களே! நான் நிற்கத்தான் செய்கிறேன்; எனினும் “நில்லு” என்று சொல்கிறீர்களே! நீங்கள் நிற்பதாகச் சொல்வதும், நான் நிற்காததாகச் சொல்வதும் ஒன்றும் விளங்கவில்லையே!

புத்தர் : நான் நடையை நிறுத்திவிட்டேன். ஒரு போதும் நான் எவரிடத்தும் பலாத்காரம் செய்வதில்லை. தீயவினை அனைத்தையும் நான் நிறுத்திவிட்டேன். நீயோ இன்னும் உயிர்க் கொலை புரிகிறாய்! நான் நிறுத்திவிட்டேன். நீதான் நிறுத்தவில்லை! அங்குலிமாலன் திகைத்து விட்டான். ‘இந்த முனி எப்படியோ என்னையும், என் செயலையும் தொடர்ந்து கண்டு பிடித்துவிட்டார்!’ என்று ஆச்சரியமடைந்து, ‘தேவா! உமது புனித உதவியால் அடியேன் தீவினைகளையெல்லாம் கைவிடத் துணிந்து விட்டேன்!’ என்று கூறினான். உடனே தன்னிடமிருந்த ஆயுதங்களையெல்லாம் மிகவும் ஆழமாயிருந்த ஒரு பள்ளத்தாக்கில் எறிந்துவிட்டான். பின்னர் பெருயும் மானிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கித் தன்னை ஆட்கொண்டு அருளவேண்டும் என்று கெஞ்சினான்.

புத்த தேவர் கல்லும் கனிந்துருகும்படி நின்ற அக் கள்வனைக் கருணையுடன் பார்த்து, ‘பிக்கு! என்னைத் தொடர்ந்து கூடவா!’ என்று சொல்லித் திரும்பி நடந்தார். அந்தக் கணத்திலேயே அங்குலிமாலன், மஞ்சள் உடையும், முண்டிதமான தலையும் பெற்றுப் பிக்குவாகி ஐயனைப் பின்தொடர்ந்து ஜேதவனம் சென்றான்.

மறு நாள் காலையில் மன்னர் பிரசேனஜித்து ஜேதவன விகாரைக்குச் சென்று பகவரைச் சந்தித்தார்.

புத்தர், திடீரென்று காலையில் அரசர் வந்திருந்ததைக் கண்டு, என்ன விஷயம் என்று விசாரித்தார். ‘மகத மன்னர் பிம்பிசாரர் படையெடுத்து வந்துள்ளாரா? வைசாலியிலுள்ள லிச்சவிகளின் பகை ஏற்பட்டுள்ளதா? வேறு பகைவர் எவரேனும் வந்துள்ளாரா? என்றெல்லாம் அவர் கேட்டார்.

மன்னர் அத்தகைய துயரம் எதுவும் நேரவில்லை என்றார். பிறகு அவர் அங்குலிமாலனைப் பற்றிப் பேசலானார். அவன் செய்துள்ள அட்டூழியங்களைக் கண்டு மக்கள் அல்லலுற்றுத் தம்மிடம் பன்முறை வந்து வேண்டிக் கொண்டும், தம்மால் அவனை ஒன்றும் செய்ய முடியாதிருந்தது என்றும், அப்போது ஐந்நூறு குதிரை வீரர்களுடன் வனத்துள் சென்று அவனைப் பிடித்து வருவதற்காகவே தாம் புறப்பட்டு வந்திருப்பதாயும், அது சம்பந்தமாக ஐயன் ஆலோசனை கூற வேண்டும் என்றும் மன்னர் கூறினார்.

புத்தர் : அந்த அங்குலிமாலன், தலையையும் தாடியையும் சிரைத்துவிட்டு, மஞ்சள் உடையணிந்து, கொல்லாமை, திருடாமை, பொய்யாமை முதலிய விரதங்களை மேற்கொண்டு, ஒருநாளைக்கு ஒரே பொழுது மட்டும் உணவருந்தி, உயரிய ஒழுக்கங்களையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால், தாங்கள் அவனைப் பார்த்ததும் என்ன செய்ய விரும்புவீர்கள்?

பிரசேனஜித்து : அவனை வணங்குவேன்!

புத்தர்: (அருகே அமர்ந்திருந்த பிக்குவைக் காட்டி) இதோ, இவன் தான் அங்குலிமாலன்!

மன்னர் நடுக்க மடைந்தார். ‘இங்கே பயப்பட வேண்டியது எதுவுமில்லை; அஞ்சவேண்டாம்!’ என்று புத்தர் அவருக்குத் தேறுதல் மொழி கூறினார்.

அரசர் அங்குலிமாலனிடம் சென்று வணங்கி ‘புனிதரே! ‘தாங்கள் தாம் உண்மையில் அங்குலிமாலரா? என்று வினவினார்.

‘ஆம்!’ என்று பதில் வந்தது.

அரசர், ‘தாங்கள் சந்தோஷமாயிருக்கலாம்; தங்களுக்குத் தேவையுள்ள பொருள்களையெல்லாம் நானே அனுப்பி வருவேன்!’ என்றார்.

அப்போது அங்குலிமாலன். ‘ஏற்கெனவே என்னிடம் மூன்று காஷாயத் துணிகள் இருக்கின்றன.[12] எனக்கு வேறு எதுவும் தேவையில்லை!’ என்று கூறினான்.

அதைக் கேட்டு மன்னர் அதிசயப்பட்டுப் பெருமானிடம் சென்று, ‘ஆச்சரியம்! ஆச்சரியம்! வாளாலும் வேலாலும் நான் அடக்க முடியாத ஒருவன் இதோ இங்கே வந்திருக்கிறான். ஆனால் எவ்வித ஆயுதமும் இல்லாமல் மகாபிரபு அவனை ஆட்கொண்டு அருள் புரிந்திருக்கிறார்!’ என்று அவரை வாயார வாழ்த்தினார்.

அப்போது அங்குலிமாலன், ‘கத்தியும் - கம்பும் இல்லாமலே கருணை வள்ளல் என்னைத் திருத்திவிட்டார். இரத்த வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த என்னைப் பெருமான் வந்து காப்பாற்றிவிட்டார்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.[13] இந்த அங்குலிமாலன் யார், அவன் ஏன் கொலை பாதகனாக விளங்கினான் என்ற விவரங்களைப் பௌத்தக் கதைகள் கூறுகின்றன. அவன் பிறப்பில் பிராமணனாம். கோசல மன்னரின் புரோகிதராயிருந்த பார்க்கவர் அவன் தந்தை. அவன் அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய தட்சசீலத்துச் கலாசாலைக்குச் சென்று கல்வி பயின்று வந்தான் அங்கே அவனுடன் புயின்ற மாணவர் சிலர் அவனிடம் பொறாமை கொண்டு ஆசிரியரிடம் அவனைப் பற்றி அவதூறுகள் சொல்லி, அவர் மனத்தை விஷமாக்கி விட்டனர். அவர் அங்குலி மாலனைத் தொலைத்துவிட வேண்டும் என்று கருதி, அவனுக்கு மேற்கொண்டு தாம் கல்வி புகட்டவேண்டும் என்றால், அவன் ஆயிரம் பேர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் அப்படிக் கொன்றதற்கு அடையாளமாக ஆயிரம் விரல்களைத் தம்மிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்றும் சொல்லி, அவனை அனுப்பி விட்டார். அவனும், அவர் கூற்றை மெய்யென்று நம்பி, வெளியே சென்று, கொலைத் தொழிலை மேற்கொண்டானாம். ஆயிரம் கொலைகளுக்கு ஒன்று குறைய அவன் முடித்து விட்டான். கடைசியாக வந்த துறவியை அவன் பிடிக்கவே முடியவில்லை, அவரே அவனை ஆட்கொண்டு விட்டார்!

  1. வைசாலி இக்காலத்திய பிரயாகை என்ற அலகாபாத் நகர் தான் என்று பௌத்தர்கள் கருதுகின்றனர். ஆனால் இராமாயணத்திலிருந்து அந்நகர் பிரயாகைக்குக் கீழே கங்கையின் வடகரையில் இருந்ததாகத் கெரிகிறது.
  2. ‘The Burmese Buddha'-by Rt. Rev Brigandet
  3. அன்று கி.மு. 534 (ஈசான சகம் 107 ஆம் ஆண்டு ) ஆடி மீ, 18-ஆம் ௳, சனிக்கிழமை, பூர்ணிமை.
  4. கௌதமி சங்கத்தில் பிக்குணியாகச் சேர்வதற்கு முயன்ற இவ்வரலாறு ‘விநய பிடக'த்திலுள்ளது. வெள்ளைத் துகிலணிந்து, மன நிறைவும், பரிசுத்த ஒழுக்கமும் கொண்டு வாழ்ந்து வரும்படியும், அதனா லேயே நிலையான பயன் பெறலாம் என்றும் புத்தர் கௌதமிக்குக் கூறியனுப்பியதாகத் திபேத்திய ‘துல்வா'வில் குறிக்கப்பெற்றுள்ளது.
  5. சுத்தோதனரின் சகோதரருடைய குமாரன்.
  6. ’........he raised the strongest barrier against the wildest passion of the heart.’

    -Rt. Rev. P. Brigandet.

  7. இந்திரன் மகளாக வளர்ந்து கொண்டிருந்ததாகவும் கூறுவர்.
  8. பாலி மொழியில் இந்நகரை ‘ஸங்கஸ்ஸா’ என்று கூறுவர். இது கன்னோசி (Kanowj) நகரிலிருந்து ஐம்பதாவது மைலில் உள்ளது. இங்கே பௌத்த சமய சம்பந்தமான ஏராளமான புதை பொருள்களும், பாழடைந்த பல கட்டடங்களும் இருப்பதாக லெப். கன்னிங்ஹாம் குறித்துள்ளார்.
  9. இந்த விவரம் ‘சுத்த நிபாதம், காசி பாரத்வாஜ சூத்திர’த்திலுள்ளது.
  10. அப்போது இராகுலனுக்கு வயது இருபது.
  11. அங்குலி-விரல்; மாலன் - மாலையுடையவன்.
  12. மூன்று உடைகளுக்கு மேல் ஒரு பிக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது விதி.
  13. அங்குலிமாலனின் இந்த வரலாறு ‘மஜ்ஜிம நிகாயம்–அங்குலி மால சூத்திரம்’ என்ற பகுதியிலுள்ளது.