போர் முயற்சியில் நமது பங்கு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



போர் முயற்சியில்

நமது பங்கு




புதுவை மாநிலத் தமிழாசிரியர் சங்கத்தின்

போர்நிதி வெளியீடாகிய இச் சிறுநூல்,

புதுவையில் 26-9-1965 ஆம் நாள் நடைபெற்ற

சங்கச் சிறப்பு விழாவில்,

புதுவை மாநிலக் கல்வி யமைச்சர்

உயர்திரு. A.S. காங்கேயன் B.A. அவர்கள் தலைமையில்

புதுவை மாநிலக்கல்வித் துறைத் துணைத்தலைவர்

நயனுடைச் செல்வர் சு.மார்க்கண்டன் அவர்களால்

வெளியிடப் பெற்றது.



நூலாசிரியர்:

புலவர் சுந்தர சண்முகனார்

 முதற் பதிப்பு - மூவாயிரம் படிகள் - செப்டம்பர் 1965

எல்லா உரிமையும் ஆசிரியர்க்கே.






வெளியீடு :

புதுவை மாநிலத் தமிழாசிரியர் சங்கம்,

61.C, வைசியர் தெரு, புதுச்சேரி.1.





விலை 30 காசுகள்



போர் முயற்சியில்

நமது பங்கு


முதற் கடமை

நமது தாய்த்திருநாடாம் இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பகைஸ்தானாக மாறிவிட்ட இந்நேரத்தில், எல்லையில் சீனம் மிரட்டிக்கொண்டிருக்கிற இந்நேரத்தில், இந்தியப் போர் மறவர்கள் பகைவருடன் கடும்போர் புரிந்து இந்தியாவின் பேராற்றலையும் பெரும் புகழையும் நிலைநாட்டிக்கொண்டிருக்கிற இந்நேரத்தில் நமது முதற் கடமை யாது? இந்தியப் பெருமக்கள் நாற்பத்தைந்து கோடியினரும் போர் மறவர்களாக மாறிவிடுவதே முதற் கடமையாகும். நாம் நாற்பத்தைந்து கோடியினரும் போர் மறவர்களாக மாறிவிட்டால், பாகிஸ்தானுக்கு எத்தனை சில்லரை நாடுகள் உதவி செய்யினும், எல்லாம் சேர்ந்தும் நம் ஒரு நாட்டிற்கு ஈடாகமுடியாது.

நாம் அனைவரும் போர் மறவர்களாக மாறுவதா என்று வியக்கவோ மிரளவோ ஒதுங்கவோ வேண்டா. இந்த முதற் கடமை, இந்தக்காலத்தில் நமக்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில் நம்நாட்டு முன்னோர்கட்கு இந்தக் கடமை பிறக்கும் போதே குருதியில் (இரத்தத்தில்) ஊறிவிட்டிருந்தது. இந்தக் கருத்தை நானாகப் படைத்துக்கொண்டு கற்பனையாகச் சொல்கிறேனா? இல்லை. இல்லவேயில்லை. இதற்கு எண்ணற்ற சான்றுகள் நம்நாட்டு இலக்கியங்களிலும் மக்களின் வாழ்க்கை நடைமுறையிலும் உண்டு.

புகழ்ச் சாவு

நம்நாட்டு முன்னோர்கள் தாய்நாட்டிற்காகப் போர்க் களத்தில் உயிர்விடுவதைப் பெரும்பேறாகக் கருதினர். போர்க்களத்தில் புண்ணேற்று முடியும் சாவே நல்ல சாவாக அன்று கருதப்பட்டது. மாறாக, வீட்டிலோ போர் அரங்கம் அல்லாத பிறவிடங்களிலோ நேரும் சாவு இழிவாகக் கருதப்பட்டது. ஒருவர் போரில் விழுப்புண் பட்டு இறவாமல் வேறிடத்தில் இறந்துபோவாராயின், கத்தியால் அவரது மார்பகத்தைக் கீறிப் பின்னரே அடக்கம் செய்வது பண்டை மரபாம். போரில் மார்பில் விழுப் புண் பட்டு அவர் இறந்ததாக இதற்குப் பொருளாம். போர்ச்சாவின் உயரிய புகழ்நிலை இதனால் புலனாகுமே!

நடுகல்

இதுமட்டுமா போரில் இறந்துபோன மறவனை அடக்கம் செய்த இடத்திற்குமேல் கல் நடுவார்களாம். அக்கல்லில், அம்மறவனது பெயர், அவன் ஆற்றிய அருஞ் செயல் முதலியன பொறிக்கப்பட்டிருக்குமாம். அக் கல்லினை மயிற் பீலி, மலர் மாலை முதலியவற்றால் ஒப்பனை செய்து மறக் கடவுளாக மதித்து மக்கள் வழிபாடாற்றுவார்களாம். இந்தக்கல் 'நடுகல்' என அழைக்கப்படுகிறது. இச்செய்திகளை,

"நடுகல் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ"
"நிரையிவண் தந்து நடுகல் ஆகிய
வென்வேல் விடலை யின்மையிற் புலம்பி"
"அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
இனி நட்டனரே கல்லும்"
"ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும்"
"புடை நடுகல்லின் நாட்பலி யூட்டி
"நன்வீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்"
"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

முதலிய புறநானூற்றுப் பாடல் பகுதிகளால் அறியலாம். இவற்றுள் இறுதிப் பாடலில், பகைவருடைய யானைப் படையை அழித்தொழித்து இறந்துபோன மறவனது 'நடுகல்' தவிர, வணங்குதற்குரிய கடவுள்கள் வேறு இல்லை என்று கூறப்பட்டிருக்கும் கருத்து ஈண்டு எண்ணத்தக்கது. போரில் மறச்செயல் ஆற்றி மடிந்துபோன மறவனுக்குக் கல் எடுத்து அவனைக் கடவுளாக மதித்து நம் முன்னோர் வழிபட்டன ரென்றால், நாட்டுக்காகப் போர் முனையில் உயிர் கொடுப்பது எவ்வளவு பெரிய புகழ்ச் செயலாகக் கருதப்பட்டிருக்கவேண்டும்?

புகழ் மரபு

அந்தப் புகழ் மரபு இன்றும் நம்மைவிட்டுப் போக வில்லை. தெரிந்தோ தெரியாமலோ வாழையடி வாழையாக அம்மரபு நம் நாட்டவரால் பின்பற்றப்பட்டே வருகிறது. போரில் உயிர் ஈந்த மறவனுக்குக் கல் எடுப்பது அதாவது கல் நடுவது மரபு. எப்போதுமே போர் நடந்து கொண்டிருக்குமா? எல்லாருமே போரில் இறக்க முடியுமா? எனவே, ஒருவன் போரில்லா நேரத்தில்-போர்க்களம் அல்லாத வேறிடத்தில் இறந்துபோயினும், அவனைப் போர்க்களத்தில் இறந்தவனாகவே கருதி, உண்மையாகவே போர்க்களத்தில் இறந்துபோன மறவனது தகுதியை அவனுக்கும் அளித்துக் கல்லெடுத்து வழிபடுவது அன்றே வழக்கமாகிவிட்டது. அது இன்றும் போகவில்லை; இனியும் என்றும் போகாது போலும்! அதாவது, இந்தக் காலத்திலும்கூட இறந்துபோனவர்கட்கு நடத்தும் இறுதி நிகழ்ச்சியைக் 'கருமாதி-கல்லெடுப்பு' என்னும் பெயரால் மக்கள் குறிப்பிடுவது இயல்பு. பெயருக்கு ஏற்பவே இறுதி நிகழ்ச்சி நடக்கும். இடத்தில் ஒப்புக்குக் கல் வைத்துக் கடமையாற்றுவது வழக்கம்.

எனவே, இந்தக் காலத்திலும், இறந்து போன ஒருவர்க்குச் செய்யும் இறுதி நிகழ்ச்சியில் கல்லெடுத்து வழிபாடாற்றுவதிலுள்ள உட்கருத்து யாது? இவரும், போர்க்களத்தில் புகழ்ச் செயல்கள் பல புரிந்து புண்பட்டு இறந்து போனார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்பொருள்.

உண்மையிதுவாயின், நாற்பத்தைந்து கோடி இந்திய மக்களும் போர் மறவர்களாக ஏன் மாறக் கூடாது? விரையொன்று போட்டால் சுரையொன்று முளைப்பதா? புலிக்குப் பிறந்தது பூனையாவதா? நம் முன்னோர்களின் போரூக்கம் நமக்கு எங்கே போயிற்று?

மகளிர் மறம்

உருண்டு திரண்ட முழவுத் தோட்களும் பரந்தகன்ற திண்ணிய மார்பும் உடைய ஆடவர்களேயன்றி, மெல்லியற் பெண்டிருங்கூட, பச்சிளஞ்சிறார்களுங்கூட அன்று போர் முயற்சியில் பெரும் பங்கு கொண்டதாக நம் இலக்கிய வரலாற்றேடுகள் இயம்புகின்றனவே! அவர் வழிவந்த நாம் மட்டும் கோழையர்களா? அல்லது பேதையர்களா? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் நாட்டு மகளிர் எத்துணை மறவுணர்வு கொண்டிருந்தனர் என்பதை ஈண்டெடுத்து முழங்க வேண்டுமா? இதோ:-

'மகனைப் பெற்றுவளர்த்தல் எனது கடமை; அவனைச் சான்றோனாக்குதல் அவன் தந்தையின் கடமை; அவனுக்குப் படைக்கலங்கள் படைத்துத் தருதல் கொல்லனது கடமை, நன்னடை நல்குதல் அரசின் கடமை; பகைவரது போர்க்களத்துட் புக்குச் சுழன்று திரிந்து அவர்தம் யானைப் படைகளை வாளால் வெட்டிச் சாய்த்து வெற்றி கொண்டு வருதல் என் காளை மகனுக்குக் கடமையாகும்' என்று பொன் முடியார் என்னும் பெண் புலவர் புறப்பாட்டொன்றில் கொக்கரித்துள்ளார். இதோ பாடல் :-

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"

காவற்பெண்டு என்னும் ஓர் அம்மையாரின் வீட்டிற்கு வேறொரு வீட்டுக்காரி சென்று தூணைப் பற்றி நின்றுகொண்டு, 'ஏ அம்மே! போர் முழக்கம் கேட்கும் இவ்வேளையில் உன் மகன் எங்கே போய்விட்டான்?' என்று வினவினாள். அதற்குக் காவற்பெண்டு, என்மகன் எங்கே போயிருக்கிறானோ, எனக்குத் தெரியாது. புலி புறப்பட்டுப்போன கற்குகையைப்போல, அவனைப் பெற்றளித்த வயிறு இதோ இருக்கிறது; இதற்கு அவன் கெட்ட பெயர் தேடித் தரமாட்டான். அவன் எந்த வேலையாய் எங்குச் சென்றிருப்பினும், போர்ச்செய்தி கேட்டதுமே, அங்கிருந்தபடியே நேராகப் போர்க்களம் புகுந்துவிடுவான்' என்று உறுதி கூறினார். இக்காலத்தும் இந்த உணர்வு இருக்கவேண்டும். இந்தச் செய்தியை காவற்பெண்டு பாடியுள்ள

"சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினும் அறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே"

என்னும் புறநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது.

மற்றொரு மறக்குல மடந்தையின் தமையன் முந்தா நாட் போரில் மடிந்தான்; அவள் கணவனோ நேற்றைய போரில் வீழ்ந்தான். இன்றும் போர் முழக்கம் கேட்கிறது. அந்தோ என் செய்வாள் அவள்! இன்றைக்கும் யாரையாவது போர்க்கு அனுப்ப வேண்டுமே! யாரை அனுப்புவது! தனக்கு இருப்பவனோ ஒரே மகன். அவனும் இளஞ் சிறான், விட்டாளா அவனை? வேல் ஒன்றை எடுத்து அவன் கையில் தந்தாள்; வெள்ளாடை உடுத்தினாள்; எண்ணெய் தடவி அவனது தலையை வாரிவிட்டாள். என் செல்வமே! போர்க்களம் நோக்கிச் செல்க என்று ஆணையிட்டு மகிழ்வுடன் அனுப்பினாள். இன்றைய தாய்மார்கள் அனுப்புவார்களா? அனுப்பக்கூடிய நெஞ்சுரம் இனி வேண்டும். இந்த மற நிகழ்ச்சியினை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டுள்ள

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை யெறிந்து களத்தொழில் தனனே
நெருநல் உற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே."

என்னும் புறப்பாட்டால் அறியலாம். நாம் பிள்ளையை அனுப்புவதாயிருந்தால், தலைவாரிவிட்டு உடை உடுத்திய பின்னரே வேலை எடுத்துக் கையில் கொடுப்போம். ஆனால் அந்த மறமங்கையோ, முதலில் வேலை எடுத்துக் கையில் தந்துவிட்டாளாம்; பின்னரே உடை உடுத்தல், தலை வாருதல் ஆகியன செய்தாளாம். அவளது பேரூக்கமாகிய போரூக்கம் என்னே!

வயது முதிர்ந்த ஒரு மற மூதாட்டியிடம் பலர் வந்து, 'உன் மகன் போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்' என்று கூறினராம். கேட்ட கிழவி. இருக்காது. நீங்கள் சொல்வது நடந்திருக்கமுடியாது. ஒரு காலும் என் செல்வன் புறமுதுகிட்டு ஓடவேமாட்டான். அவனை நீண்டநேரம் காணாததால் நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள் போலும்! என் மகன் செருக்களத்தில் மார்பில் விழுப்புண் பட்டு இறந்து கிடப்பான். ஒருவேளை நீங்கள் உரைப்பது உண்மையாயின், அவன் பாலுண்ட என் கொங்கைகளை அறுத்தெறிவேன்' என்று சூள் உரைத்தாள்: கையில் வாள் ஒன்றை எடுத்துக்கொண்டாள்; செருக்களம் சென்று பிணங்களைப் புரட்டினாள்; தன்மகன் விழுப்புண் பட்டுச் சிதைந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டாள். ஐயோ மகனே போய்விட்டாயா என்று ஒப்பாரி வைத்தாளா? இல்லவேயில்லை. தாய்நாட்டிற்காக உயிர் நீத்த அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் இப்போது பெருமகிழ்ச்சி கொண்டாளாம்! மயிர் சிலிர்க்கச் செய்யும் இந்த மறவரலாற்றின. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய

நரம் பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின் உண்டவென்
முலையறுத் திடுவன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவங் தனளே."

என்னும் புறநானூற்றுப் பாடல் புகழ்கிறது. மகன் எப்படியோ தப்பிப்பிழைத்துக்கொண்டானே என்று மகிழக் கூடியவர்களே பெரும்பாலராக உள்ள இவ்வுலகில், மகன் போர்முனையிலிருந்து உயிர்பிழைத்து ஓடி விட்டான் என்பதைக் கேட்ட அந்தக் கிழவியானவள், மகிழ்வதற்கு மாறாக, அவ்விழிமகனுக்குப் பாலூட்டிய என் மார்பகத்தை அறுத்தெறிவேன் என்று சினங்கொண்டாளாம். பாடலிலுள்ள 'சினைஇ' என்னும் சொல் ஈண்டு எண்ணத் தக்கது. உடனே வாள் எடுத்துக்கொண்டு. கூழ் துழவுவது போல் குருதியோடும் போர்க்களத்தையே ஒரு துழவு துழவினாளாம். ஈண்டு, 'செங்களம் துழவுவோள்' என்னும் பாடல்தொடர் நெஞ்சையள்ளுகிறது. உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த மகனைக் கண்டதும், ஒப்பாரி வைப்பதற்கு மாறாக உவகை யெய்தினாளாம். இவண் பாடலிலே 'உவந்தனள்' என்று எழுதியதோடு ஆசிரியர் நிறைவு கொள்ளவில்லை. உவகை சிறிதளவு இல்லையாம்; பெரிய அளவிலாம்; எனவே பெரிதுவந்தனள்' என்று எழுதினார். ஆசிரியர் அம்மட்டோடும் அமைய வில்லை. பெரிய உவகை என்றால் எதைவிடப் பெரிய உவகை? நெடுநாள் பிள்ளையொன்றும் இல்லாதிருந்து இறுதி நாளில் கருவுற்றுப் பத்துத் திங்கள் வருந்திச் சுமந்து அந்த ஆண் மகனைப் பெற்றபோது அடைந்த பெருமகிழ்ச்சியினும் மாபெரும் மகிழ்ச்சியாம் இது! எனவேதான், 'ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே!' என்று பாடினார் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண் புலவர். ஒரு தாய் பிள்ளையைப் பெற்ற நேரத்தில் கொள்ளும் உணர்வையும் மற்ற நேரத்தில் கொள்ளும் உணர்வையும் பெண்பாற் புலவரே நன்கு புரிந்து உரைக்க முடியுமன்றோ?

வெட்கம்

ஈண்டு இத்தனை பாடற் கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட்டதேன்? பண்டு நம் நாட்டில் சிறார்களும் முதியோர்களும் பெண்டிர்களுங்கூடப் போர் முயற்சியில் பெரும் பங்கு கொண்டனர் என்பதைப் புலப்படுத்தவே இவ்வளவு எழுதவேண்டியதாயிற்று, பெண்களின் போரூக்கம் குறித்துப் பெண் புலவர்கள் கூறியுள்ள உள்ளம் உருக்கும் கருத்துக்களைப் படிக்கும் இக்காலத்தவர் தம் பின்தங்கிய நிலை குறித்து உண்மையில் வெட்கப்படாமல் இருக்க முடியாது.

விலைப்பொருள்

இந்தக் கருத்துக்களையெல்லாம் படித்தால் அல்லவா வீரம் பீரிட்டெழும்? நாம் நம்முடைய இந்தச் சொந்தச் சரக்குகளையெல்லாம் மறந்து இறக்குமதிச் சரக்குகளோடு அமைந்துவிட்டதனால்தான் இன்று வீரத்தை வெளியிலிருந்து விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. நாம் நமது பழைய வீர மரபை விட்டதனால்தான் இன்று நம் மக்கட்கு வீரத்தை வலிந்து 'நரம்பு ஊசி' வாயிலாக ஏற்ற வேண்டியதாயிற்று. இன்று விலைப் பொருளாகப் போய்விட்ட வீரம், அன்று நம் முன்னோர்கட்குப் பிறக்கும்போதே குருதியோடு கலந்திருந்தது. இதற்குச் சான்றாக, திருவள்ளுவனாரின் கனல் கக்கும் கருத்துக்கள் சில ஈண்டு வருமாறு:-

வீரம் விளை நாடு

அன்று நம் நாட்டு மறவர்கள், எதிரியின் படைக் கலம் தம்மை நோக்கி வந்தபோது, திறந்திருக்கும் கண்களை ஒருமுறை இமைத்துவிட்டாலும் அந்நிலையை எதிரிக்குப் புறமுதுகு காட்டி ஓடிவிட்டதாகவே கருதினார்களாம். எத்துணை மற:உணர்வு! இதனை,

"விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு"

என்னும் குறளால் அறியலாம். மற்றும், போரில் விழுப் புண்படாத நாட்களையெல்லாம் தாங்கள் உயிர் வாழாத நாட்களாகக் கருதுவார்களாம்: அதாவது, புண்படாத நாட்களையெல்லாம் கழித்துவிட்டு, புண்பட்ட நாட்களை மட்டும் எண்ணிக் கணக்கிட்டு ஆண்டாக்கி, அத்தனை ஆண்டுகள் மட்டுமே அவர்கள் உயிர் வாழ்ந்ததாகக் கருதவேண்டுமாம். இவ் வியத்தகு கருத்தினை,

"விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை யெடுத்து."

என்னும் திருக்குறளால் தெளியலாம். இவ்வளவு வீரம் விளைந்திருந்த இந்நாட்டில் அவ்வீரம் எங்கே போயிற்றோ?

எனவேதான். இந்திய நாட்டு மக்கள் தம் பழைய வீர வரலாற்றினை மீண்டும் புரட்டிப் பார்க்கவேண்டும். தம் பழம் பெரு வீர மரபினை இப்போது மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டுப் புலவர் பெருமக்கள் முழங்கிச் சென்றுள்ள மறவுரைகளும் படை முறைகளும் இன்றைய படைப் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்றப்பட வேண்டும்; பள்ளிக்கூடங்களில் பாடமாக்கப் படவேண்டும்.

போர் விளையாட்டு

இனிமேல் நம் நாட்டுப் பிள்ளைகள், அப்பா-அம்மா விளையாட்டு, கடை- பள்ளிக்கூடம் நடத்தும் விளையாட்டு, இரயில்-பஸ் வண்டிகள் விடும் விளையாட்டு, திருவிழா நடத்தும் விளையாட்டு முதலிய விளையாட்டுக்களுடன் போர் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். துப்பாக்கியால்-பீரங்கியால் சுடுவது போலவும், போர்க் கப்பல்களையும் வானவூர்திகளையும் செலுத்தி எதிரியின் ஊர்திகளையும் டாங்கிப் படைகளையும் கவச மோட்டார் அணிகளையும் நொறுக்கித் தள்ளுவது போலவும், பகைவர்களைத் திரும்பிப்பாராமல் ஓடோட விரட்டுவது போலவும் நம் நாட்டுப் பிள்ளைகள் இனி விளையாடவேண்டும்.

வீட்டுக் கொரு பிள்ளை

எந்த நாட்டில் இளையோர் முதல் முதியோர் வரை எல்லாரும் போரில் பங்கு கொண்டார்களோ அந்த நாட்டில் பிறந்தவர்கள் நாம். எந்த நாட்டில் ஆண் பெண் அனைவரும் போர் முயற்சியில் பங்கு கொண்டார்களோ அந்த நாட்டில் தோன்றியவர்கள் நாம். எனவே, அந்த இந்தியப் பெரு நாட்டில் பிறந்த மக்களாகிய நாம் நாற்பத்தைந்து கோடியினரும், அன்று போர்க் காலத்தில் நம் முன்னோர்கள் நடந்து கொண்டது போலவே இன்று நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு நமது பழைய வீர மரபினைப் புதுப்பித்துக் கொண்டோமாயின், எந்தப் பகைவனும் நம்மைப் பற்றி நினைக்கவும் அஞ்சுவான்.

நெருக்கடி நேரும்போது நாம் நாற்பத்தைந்து கோடி மக்களும் போர் மறவர்களாக மாறுவதற்கு ஒரு முன்னோடிச் செயலாக ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒன்று செய்யலாமே! அதாவது, குடும்பத்திற்கு ஒரு பிள்ளை வீதமாவது கட்டாயமாகப் பட்டாளத்திற்கு அனுப்பி வைக்கலாமே! சிற்சில குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்குள் ஒரு பிள்ளையைப் பொறியியல் வல்லுநராக (Engineer) ஆக்குகின்றனர்; மற்றொரு பிள்ளையை மருத்துவராகச் (Doctor) செய்கின்றனர்; இன்னொரு பிள்ளையைப் பேராசிரியர் (Professor) தொழிலுக்குத் திருப்புகின்றனர். வேறொரு பிள்ளையை வழக்கறிஞர் (Advocate) வேலைக்கு அனுப்புகின்றனர். மேலும் ஒரு பிள்ளையை வாணிகஞ் செய்யவிடுகின்றனர். ஆனால் இன்னோர் எவரும் ஒரு பிள்ளையையாயினும் உளமாரப் பட்டாளத்திற்கு அனுப்பி வைப்பதில்லை. சிலரோ, முதல் பிள்ளையையும் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தாய்விட்டது; இரண்டாவது மகனையும் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தாய்விட்டது; அவ்வளவோடு அமையாமல் மூன்றாம் மைந்தனையும் அங்கேயே சேர்க்க முயலுகின்றனர். பொறியியற் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலுமே தம் மைந்தர்களைச் சேர்க்க அடித்துப் பிடித்துப் போட்டி போடுபவர்கள் ஒரு பிள்ளையையாவது படைப் பயிற்சிக் கல்லூரியில் ஏன் சேர்க்கக்கூடாது? காணம் என்றால் வாயைத் திறப்பது - கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதா? ஊதியங் கொழிக்கும் வேலையென்றால் உறுதியாகப் பற்றிக் கொள்வது-உயிர் கொடுக்கும் பணியென்றால் ஒடியொளிவதா ?

தங்களை மிக மிக மேலானவர்களாகக் கருதிக்கொண்டிருக்கும் பெருஞ் செல்வர்கள், பெரிய படிப்பாளிகள், பெரும் பெரும் பட்டம் பதவிகள் உடையவர்கள் ஆகியோர் தத்தம் பிள்ளைகளுள் ஒருவரையாவது பட்டாளத்தில் பணிபுரிய ஏன் அனுப்பக்கூடாது? உயிர் என்ன வெல்லக் கட்டியா? அமெரிக்க நாட்டின் தலைவராய்த் திகழ்ந்த கென்னடி ஒரு பெருஞ் செல்வரின் மகனாவார்; அவர் படையில் சேர்ந்து பணி புரியவில்லையா? இங்கிலாந்து நாட்டின் தலைமையமைச்சராய் விளங்கிய சர்ச்சிலின் மகன் பட்டாளத்தில் சேர்ந்து தொண்டாற்ற வில்லையா? ருசிய நாட்டின் மாபெருந் தலைவராய் விளங்கிய ஸ்டாலின் மகன் போர்க்களத்தில் உயிர் துறக்கவில்லையா?

உயர்குலம்

'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்'. என்றார் ஒளவைப் பிராட்டியார். அதாவது கொடுப்பவர் உயர் குலத்தவராம்; கொடாதவர் இழிகுலத்தவராம். உண்மைதான்! கொடுப்பவருள்ளும் எதைக் கொடுப்பவர் மிக மிக உயர்ந்தவராவர்? ஒருவர் தம் உடைமைகளுள் எதையிழந்தாலும் வாழ முடியும்; ஆனால் உயிர் போய்விடின் ஒன்றுஞ் செய்யவியலாது. எனவே, ஒருவரின் உடைமைகளுள் உயிரே சிறந்ததாம். அதனால் தான். ஒழுக்கத்தின் உயர்வை உரைக்க வந்த வள்ளுவனார் உயர் பொருளாம் உயிரை எல்லையாக வைத்து 'ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்' என்றார். எனவே, கொடுப்பவர் கட்குள்ளும், நாட்டின் நலனுக்காகப் போர்க்களத்தில் உயிரைக் கொடுக்கும் குடும்பத்தாரே மிக மிக உயர்ந்த குலத்தவராக மதிக்கப் பெறுவர். இதனை இந்திய மக்கள் இன்று உணர்ந்து அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

வெள்ளம் வருமுன்

அங்ஙனமெனில், ஈவு இரக்கமற்ற போர்த் தொழிலாகிய கொலைச் செயலில் எல்லாரும் இறங்கிவிட வேண்டியதுதானா? என்ற கேள்வி யெழலாம். நாமாக வம்புச் சண்டைக்கு வலியப் போய் யாரையும் கொல்லவேண்டா! தானாக வலிய வரும் வலுச் சண்டையையும் தடுத்து நிறுத்திப் பார்ப்போம். மேலும் மீறி வருமாயின் போர் அரங்கத்தில் குதித்துவிட வேண்டியதுதானே! அதற்கு வேண்டிய ஆயத்தங்களை அனைவரும் முன்கூட்டியே முடித்து வைத்திருக்கவேண்டுமல்லவா? வெள்ளம் வந்த பின் அணைகோல வியலுமா?

அன்பு நெறியினை உலகிற்கு அருளிய புத்தர் பெருமான் தோன்றிய நாட்டில் பிறந்த நாம், அமைதி முறையினை உலகிற்கு அறிவுறுத்திய காந்தியடிகள் தோன்றிய நாட்டில் பிறந்த நாம், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த அருளே உருவான இராமலிங்க அடிகளார் தோன்றிய நாட்டில் பிறந்த நாம், இன்றைய உலக அமைதிக்காக எவ்வளவோ முயன்ற பாடுபட்டுள்ளோம்-பாடுபட்டும் வருகிறோம். அத்தகைய நம்மையே, இன்று பாகிஸ்தான் உருவத்திலும் சீன வடிவத்திலும் போர் வலிய அழைக்கிறது. எனவே, எப்போதும் போர் முரசங்கொட்ட நாம் ஆயத்தமாகவே இருக்கவேண்டும்.

இருவர் இருக்கும்வரை

போர் எப்போது வரும்-எப்போது வராது போர் எங்கே வரும்-எங்கே வராது என்று எவராயினும் அறுதியிட்டு உறுதி கூற முடியுமா? இன்னும் கேட்டால் போரின்றி உலகமில்லை-போரின்றி மக்கட்குலமில்லை என்று துணிந்து கூறமுடியும். உலகில் இன்னும் எத்தனை, 'அவதார புருடர்கள்' தோன்றினாலும், எத்தனை வேத ஆகம உபநிடத இதிகாச புராண சாத்திர காவிய இலக்கியங்கள் தோன்றினாலும் உலகில் போர் தோன்றாமல் இருக்கச் செய்ய முடியவே முடியாது; ஆனால் தோன்றிய போரை அடக்க முடியும் - சிறிது காலம் தடுத்து நிறுத்தி வைக்க முடியும் அவ்வளவுதான்! பசி தாகம் வராமல் இருக்கச் செய்ய முடியாது; ஆனால், வந்தால் உணவும் நீரும் கொடுத்துச் சில மணி நேரம் அடக்கி நிறுத்தி வைக்க முடியும். அவ்வளவுதான்! மீண்டும் பசி தாகம் வரத்தான் செய்யும். இது போன்றதே போரூக்கமும் ! கை, கால், கண், காது. மூக்கு முதலிய எல்லா உறுப்புக்களும் சேர்ந்ததே ஒர் உடல் என்பதுபோல, பசியுணர்வு, காம உணர்வு, போர் உணர்வு முதலிய பல்வகை உணர்வுகளும் (lnstincts) உடையதே ஓர் உயிர் எனப்படுவது. இதனை உளவியல் (Psychology) கற்றார் நன்குணர்வர். எனவே, போர் உணர்வு இன்றி மக்கள் இல்லை. உலகில் என்றைக்கு இரண்டாவது மாந்தன் (மனிதன் தோன்றினானோ அன்றைக்கே போரும் தோன்றிவிட்டது. உலகில் கடைசி இரண்டு மாந்தர்கள் இருக்கும்வரை போரும் கட்டாயம் இருக்கும். எனவே தான், நாம் எல்லாருமே எப்போதுமே போருக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.

தேள் கடி மருந்து

போர் ஆயத்தம் செய்து வைத்துக்கொண்டு விட்டால் உடனே போர் புரிந்தாக வேண்டும் என்று பொருளில்லை. முன்கூட்டித் தேள் கடி மருந்து வாங்கி வைத்துக் கொண்டுவிட்டால், தேள் கொட்டாதா - தேள் கொட்டாதா என்று விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை; அல்லது நாமாக வலியச் சென்று தேள் கொடுக்கின்மேல் கையை வைக்கவும் வேண்டியதில்லை. தேள் கொட்டாதபடி விழிப்பாகத்தான் இருக்க வேண்டும். தப்பித் தவறித் தற்செயலாகத் தேள் கொட்டி விட்டால் உடனே அந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும். போர் ஆயத்தமும் தேள் கடி மருந்து போன்றதே!

சரி நிகர் பங்கு

போர் ஆயத்தம் என்றால்-போர் முயற்சி என்றால் பொருள் என்ன ? அரசினர் போர்த் தளவாடங்களை நிரம்பத் திரட்டிக் குவித்து வைத்திருப்பது மட்டும் போர் ஆயத்தம் ஆகாது. படை மறவர்கள் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு சிலரே போர்முனை புக்குப் போவது மட்டும் போர் முயற்சி ஆகாது, நாட்டு மக்கள் அனைவருக்கும் போர் முயற்சியில் சரி நிகர் பங்கு இருக்க வேண்டும்.

போர் ஆயத்தம் என்ற பெயரில் நாட்டு மக்களின் நற்பணி யாது? அரசினர் போர்க் கருவிகளைச் செய்வதற்கும் வாங்குவதற்கும் பொருள் வளம் வேண்டுமே! அது மக்கள் கையிலேயே உள்ளது. போர்க்காலத்தில் மட்டுமன்று - எப்போதுமே, நாட்டு மக்கள் அனைவரும் அயராது நன்கு உழைத்தால்தான் நாட்டில் பொருள்வளம் கொழிக்க முடியும் எவரும் சோம்பியிருத்தலாகாது; எந்த வேலையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். சப்பானியரைப் பாருங்கள்: அவர்கள் சிறு சிறு தகரத் துண்டுகளைக் கூட சிதறவிடாமல் எவையேனும் செய்து கொண்டேயிருப்பார்களாம். நாமும் அப்படி அயராது உழைத்தால்தான் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி பெருகி நாட்டில் பொருள்வளம் நன்கு செழிக்கும். அப்போதுதான், இன்னொரு நாட்டின் உதவியை எதிர்பாராத இறுமாந்த நிலை நம் நாட்டிற்கு ஏற்படும்.

நாம் அனைவரும் கட்டுப்பாடாக நம் நாட்டுப் பொருள்களையே வாங்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருள் நம் நாட்டினதாகக் கிடைக்கவில்லை யென்றால், தேவையைக் குறைத்துக் கொள்ள வேண்டும்-அல்லது நிறுத்திக் கொள்ளவேண்டும். அதனை நம் நாட்டிலேயே உண்டாக்க வேண்டும். அதற்கு அரசும் ஆவன செய்யவேண்டும. செய்யும், போர்க்காலத்தில் மட்டுமன்று. எப்போதுமே மேற்கூறிய,முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து, போர்க்காலத்தில் போர் முயற்சி என்னும் பெயரில் நாட்டு மக்களாகிய நமது பங்கு யாது?

நமது பங்கு

பொதுவாக நாட்டு மக்கள் அனைவரும் போர் வீரர்களாக மாறி விடுவதன்றி, சிறப்பாகவும் ஒவ்வொருவர்க்கும் சில பங்குகள் உண்டு. உடல் வன்மை மிக்கோர் ஊர்க்காவல் படையிலும் போர்ப் படையிலும் சேர்ந்து நாடு காக்கவேண்டும். தடைபடாக் குருதி யோட்டமுடைய தளரா இளைஞர்கள்-மாணவர்கள் போர் அரங்கில் புண்படும் மறவர்கட்காகக் குருதிக்கொடை நல்கவேண்டும். செல்வரும் மகளிரும் பொன்னும் பொருளும் அணிகலன்களும் வரையாது வாரி வழங்க வேண்டும். குறைந்த வருவாயுடையோரும் தங்களால் இயன்றதை அரசுக்கு அளிக்கவேண்டும். வணிகர்கள் பேராதாயங் கருதிப் பொருள்களைப் பதுக்காமலும், கலப்படம் செய்யாமலும், விலையேற்றாமலும், அளவு குறைக்காமலும் அற விலைக்கு விற்கவேண்டும். உழவர்களும் தொழிலாளிகளும் உணவுப் பொருட்களையும் மற்ற பிற பொருட்களையும் ஒயாது உண்டாக்கி உதவ வேண்டும். தொழிலாளர் எவரும் கதவடைப்போ, வேலை நிறுத்தமோ, உண்ணா நோன்போ ஒத்துழையாமையோ செய்யவே கூடாது. அரசு அலுவலர்கள் மணியைப் பார்க்காமலும் ஊதியத்தைப் பொருட்படுத்தாமலும் அல்லும் பகலும் அயராது ஆக்கப் பணிபல ஆற்ற வேண்டும். ஒன்றும் இயலாதவர்கள் தங்கள் உணர்ச்சிமிக்க உரைகளின் வாயிலாக மற்றவர்க்கு ஊக்கமும் வலிமையும் ஊட்ட வேண்டும். பொய்யுரைகளையோ திரிபுச் செய்திகளையோ யாரும் பேசவோ பரப்பவோ நம்பவோ கூடாது.

மேற்கூறியுள்ளாங்கு நடந்து கொள்ளாதவர் எவரோ அவரே நாட்டின் பகைவராவார். மாற்றானுக்கு இடங்கொடுக்கும் ஒற்றராகவே அவர் கருதப்படவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு மக்களுக்கு இன்னொரு கடமை உண்டு. அதாவது அவர்கள் பொருள்களைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். தன்னலமின்றி எதையும் நாட்டிற்காக விட்டுக்கொடுக்க வேண்டும். இரண்டாவது உலகப் பெரும்போரில் ஆங்கிலேயரும் அமெரிக்கரும் உணவையும் குறைத்துக் கொண்டார்களாம்'. ஆங்கிலேயர்கள் தங்களிடம் அன்றாடத் தேவைக்குமேல் இருந்த பொருட்களை ஒருவர்பின் ஒருவர் (கியூ) வரிசையில் நின்று அரசுக்கு அளித்தார்களாம். நாமும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

போர் தொடர்பாக எந்தவிதமான இழப்பும் இன்னலும் ஏற்படினும் கலங்காது வருந்தாது நிமிர்ந்து நிற்க வேண்டும். நாட்டின் நலனுக்காக எதை இழக்க நேரிடினும் அதைப் பெரும் பேறாகக் கருதவேண்டும்.

அயராதே ! அஞ்சாதே !

முயலு ! முன்னேறு !

வெற்றி நமதே !