உள்ளடக்கத்துக்குச் செல்

மகான் குரு நானக்/சீக்கிய மதத்தை நிறுவிய சத்குரு

விக்கிமூலம் இலிருந்து
436987மகான் குரு நானக் — சீக்கிய மதத்தை நிறுவிய சத்குருஎன். வி. கலைமணி

11. சீக்கிய மதத்தை நிறுவிய சத்குரு

ந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டின் முக்கடலோரச் சங்கமக் காட்சியைக் கண்டு வியந்துபோன சத்குரு நானக், பிறகு திருவாங்கூர் அரசியாருடைய ஆன்மீகச் சந்தேகங்களைத் தீர்த்த பின்பு, பிருந்தாவனம், தில்லி போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, தன்னுடைய சீக்கிய மதநெறிகளை மக்களுக்கு விளக்கி யுரைத்து இறுதியாக தான் நிறுவிய புனிதத் தலமான கர்தர்பூர் நகர் வந்து சேர்ந்தார்.

நீண்ட நெடும் நாட்களுக்குப் பிறகு, குருத்துவாரம் திருக்கோவிலில் மறுபடியும் கூட்டு வழிபாடு ஆரம்பமானது. மதம், சாதி பேதங்கள் பாராமல் வழிபாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். சகோதரத்தத்துவத்துடனும், எல்லாரும் ஒரே உறவினரே என்ற பண்பாட்டுக்கேற்பவும், அவர்களது சந்தேகங் களுக்குரிய கேள்விகளுக்கு தக்க பதில்களைக் கூறி, எல்லா இனமக்களையும் ஒன்றுபடுத்தி, இணைத்து உபதேச உரைகளை ஆற்றினார்.

வழிபாடு முடிந்தது. மக்கள் அவரவர் வினாக்களுக்குரிய விடைகளைப் பெற்று சத்குருவுடன் மகிழ்ச்சியைப் பங்கீடு செய்து கொண்டு உற்சாகமடைந்தார்கள்.

அப்போது கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் கூட்டத்திலே இருந்து எழுந்து, சத்குருவை நோக்கி, குருதேவா, என் நண்பன் ஒருவன் நோயாளி. அவனை வீட்டில் விட்டு விட்டு நான் வந்திருக்கிறேன். நான் சென்றுதான் அவனுக்குரிய எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

அவர் கூறியதைக் கேட்டதும், எந்த நேரத்திலும், எதற்கும், கோபப்படாத சத்குருவுக்கு அப்போது கோபம் கொந்தளித்து வந்தது. அந்த பக்தரைப் பார்த்து சத்குரு "என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, நோயினால் துன்பப்படும் ஒருவரை மேலும் துன்பப்படுத்திவிட்டு வரலாமா? அவரை விடவா என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உமக்குப் பெரிதாகப் போய்விட்டது. கடவுள் உமக்கு கொடுத்த கடமையிலே இருந்து நீர் தவறி விட்டீரே நியாயமா? அது மட்டுமன்று நான் கூறும் ஆபத்துக்குதவும் பண்பையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டிரே! போம்! உடனே சென்று அந்த நோயாளியைக் காப்பாற்றும் அன்பரே" என்று கூறி சத்குரு அவரை அனுப்பி வைத்தார்.

ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ திறமைகளைப் பெற்றிருக்கலாம். மற்றவர்களை விட அபூர்வ அறிவுகளையும் அடைந்திருக்கலாம். அவற்றால் எந்தவித அமைதியும் அவனுக்கு ஏற்பட்டு விடாது. கடவுளை எண்ணி உருகியுருகி வழிபட்டால் தான் அந்த மனிதனுக்கு அமைதி கிடைக்கும் என்று சத்குரு தனது உபதேசம் ஒவ்வொன்றிலும் வலியுறுத்தி வந்தார்.

சத்குரு நானக் உபதேசங்கள் மக்கள் இடையே புதியதோர் எழுச்சியை உருவாக்கிக் கொண்டு வந்தமையால், பல்லாயிரக் கணக்கான மக்கள் அவருடைய சீக்கிய மதம் என்ற புதுமையான மதத்திலே சேர்ந்து இறைஞான வழிபாடுகளிலும் கலந்து கொண்டு வந்தார்கள்.

தன்னுடைய உபதேச உரையாடல்களைக் கேட்க வந்திருந்த மக்களிடையே சீக்கியர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு மனித குலத்தில் ஒழுக வேண்டும் என்பதற்கான இலக்கணங்களை அவர் அப்போது அறிவுரையாக, அறவுரையாக விளக்கம் தந்தார்.

  • உண்மையும், மனநிறைவும், உள்ளத்தில் இரக்கமும் உடையவரே - சீக்கியர்!
  • எவர் மீதும், எதன் மீதும் விருப்பு வெறுப்புக் காட்டாமல் அவை பற்றாமல் இருப்பவரே - சீக்கியர்!
  • எந்த உயிருக்கும், எந்த வித துன்பமும் கொடுக்காமல் வாழ்பவரே - சீக்கியர்!

  • யார் ஒருவர் மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற பொறிகளின் ஆசைகளுக்கும், ஆதிக்கத்துக்கும் அடிமை ஆகாமல் இருக்கின்றாரோ - அவர்தான் உண்மையான சீக்கியர்!
  • ஆண்டவன்ன எப்போதும் நெஞ்சிலே நிறுத்தி, அதற்கேற்ற வாறு பணிந்து, அடங்கி, அமைதியோடு வாழ்பவரே சிக்கியர்!
  • இன்னா செய்தார்க்கும் இனியவை செய்பவரே, அவர்களை மன்னித்து நேசிப்பவரே - சீக்கியர்!
  • தன்னலத்தை வெறுத்து பொது நலத்தைப் பேணி பாதுகாத்து, மக்களுக்காகத் தொண்டு செய்பவரே - சீக்கியர்!

தனது பாடல்களைக் கேட்டும், ஞானப் பொழிவுகளது கருத்துக்களை ஏற்றும், ஆங்காங்கே உள்ள மக்கள் சீக்கிய மத நெறிகளைப் பின்பற்றி வாழ்வதை அவர் நேரில் கண்டார். அளவிலா மகிழ்ச்சியும் பெற்றார். அதனால் அவரது மதம் வட இந்தியாவிலே புனித மதமாக வளர்ந்தது.

அருள்மிகு ஞானியான சத்குரு நானக், 1469 ஆம் ஆண்டு பிறந்து, 1538 ஆம் ஆண்டு வரை தூய்மையான மனித நெறிகளை ஒரு மதமாக்கி, அதற்கு சீக்கிய மதம் என்று புனிதப் பெயர்சூட்டி, மக்களிடம் ஒரு மறுமலர்ச்சி வாழ்வியலைத் துவக்கிடும் மகானாக ஏறக்குறைய 69 ஆண்டுகள் இந்திய மண்ணிலே நடமாடினார்.

மக்களைச் சூழ்ந்து கொண்டிருந்த அறியாமை, அகம்பாவம், ஆசை, மாய மந்திரம், ஏவல் சூனியம், பொறாமை, கொலை, கொள்ளை, மூடநம்பிக்கை வழிபாடுகள், அதிகார ஆணவங்கள், தன்னல பந்த பாசங்கள் போன்ற இருள்களை மக்கள் மனங்களிலே இருந்து அகற்றிடும் சத்குரு என்ற ஞான நிலவாக நடமாடி மக்களுக்கு அருள் ஒளி வழங்கினார் குருநானக் என்ற மனித குல பெருமான்.

இந்து - முஸ்லிம் என்ற மத வேறுபாடுகளைக் களையவும், இனங்கள் என்ற களைகளை வேரோடு பிடுங்கி எறியவும், மனித சமத்துவம் என்ற பயிர்களை உருவாக்கும் அருளாளன் என்ற விவசாயியாக பாடுபட்டார். சீக்கியர் என்ற அறுவடையை மக்களுக்கு வழங்கினார்.

இறைஞான தொண்டுகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அந்தப் புனிதன் குருநானக் என்ற மனித குல மேம்பாட்டின் அருளாளன், 1538 ஆம் ஆண்டில் எந்த விதமான நோய்களுக்கும் ஆளாகாமல் காலத்தோடு காலமானார்.

இந்து முஸ்லீம் என்ற வடநாட்டின் இருமத சகோதரத்துவ பாசத்துக்கு இணைப்புப்பாலமாக வாழ்ந்து காட்டிய மனித மாமேதை குருநானக் மறைந்து விட்டதைக் கண்ட அந்த இரு மதத்தினர்களும், அவரவர் மதங்களுக்குரிய மரியாதைகளோடு, அந்த ஞானச் சித்தனுக்கு சமாதியையும், கல்லறையையும் எழுப்பி வழிபாடு செய்து வருகின்றார்கள் என்பது இந்திய ஆன்மீக வரலாறு சந்தித்திராத ஓர் அற்புதமாகும்.

இன்றைக்கும் ரவி நதிக்கரை ஓரத்திலே காட்சி தரும் தேரா பாபா நானக் என்ற இடத்துக்குச் சென்று வரும் வாய்ப்புடைய லட்சக்கணக்கான மக்கள் அங்கே உள்ள குருநானக் சமாதியிலே வழிபாடுகள் செய்வதைக் கண்டுகளிக்கலாம் வளர்க குருநானக் நெறிகள்

★ ★ ★