மகான் குரு நானக்/தமிழ்நாட்டில் சத்குரு
10. தமிழ்நாட்டில் சத்குரு
சத்குரு நானக் தாம் கண்ட புதிய வாழ்வியல் நெறிகளை சீக்கிய மதம் என்ற பெயரால் மக்களுக்கு வழங்கிட, கால் நடையாகவே மத்திய கிழக்கு நாடுகளான மெக்கா, மதினா, அரேபியா, பாக்தாத் போன்ற நகரங்களுக்கு எல்லாம் சென்று வந்தார்.
இமயமலைச் சாரல் பகுதிகளிலே உள்ள நாடுகளான காஷ்மீரம், திபெத் போன்ற நாடுகளுக்கும் சென்றார். அங்கும் தனது புதிய நெறிகளது தத்துவ விளக்கங்களை மக்களிடையே பரப்பினார்.
வட இந்தியப் பகுதிகளான பஞ்சாப், டெல்லி, அசாம் காமரூபம், கங்கை, யமுனை, சிந்து நதிகள் பாயும் வளமான சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்கள் இடையேயெல்லாம் சென்று தமது நெறிகளைப் போதித்தார்.
குருநானக் மத்திய கிழக்கு நாடுகளிலே வாழ்ந்த முஸ்லீம் பெருமக்களிடையேயும், திபெத் பகுதிகளிலே வாழும் பெளத்த மதத் தலைவர்களான லாமாக்களையும், அங்கு வாழ்ந்து வரும் புத்தமத மக்களையும், மானசரோவர், காஷ்மீரம், கைலாசம் மலைப் பகுதிகளிலே கடும் யோகங்களை இயற்றி வரும் இந்து மத மா முனிவர்களையும், யோகிகளையும் கண்டு தனது புதிய நெறித் தத்துவங்களை, நுட்பங்களைக் கலந்துரையாடியும், சென்ற இடங்களிலே எல்லாம் மதம், இனம், சாதி பேதங்களைப் பாராமல் மக்கள் மனத்திலே சமத்துவ நெறியையும் உருவாக்கி வட இந்தியா முழுவதும், அதற்கப்பாலுமாக வலம் வந்த ஒரு ஞானியாகத் திகழ்ந்தார்.
குருநானக் மேற்கண்டவாறு வட இந்தியப் பயணங்கள் சென்றபின்பு, இந்தியாவின் தென்பகுதிக்கும் சென்று வர வேண்டும் என்ற அவா உந்தலால் அவர் தமிழ்நாட்டிலே உள்ள முக்கடல் சங்கமமான கன்னியாகுமரி முனைக்கும், இராமேஸ்வரம் திருக்கோவில் உள்ள யாத்திரிகத் தலத்திற்கும் வருகை தந்தார். தமிழ் மக்களுக்கு உபதேச உரைகளை ஆங்காங்கே போதித்தார் அந்த ஞான மகான்!
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற புனிதத் தலங்களுள் ஒன்றான இராமேஸ்வரம் கடற்கரையில், சத்குரு நானக் ஒருநாள் நின்று கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று தனது சீடர் மர்தானாவைப் பார்த்து, "என் நண்பர் எனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவரை உடனே சென்று பார்க்க வேண்டும்" என்று சத்குரு கூறிப் புறப்பட்டார். மாணவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
தமிழ்நாட்டில் அவருக்கு அவ்வளவு முக்கியமான நண்பர் யாராக இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? இதோ அவரது நண்பர் விவரம் :
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகில் சங்கல் தீபம் என்ற ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவின் மன்னன் ராஜா சிவநாத். அவர் ஓர் இறையன்ப பக்தர். அந்த சிற்றரசருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர். அவர் பெயர் பகீரத், சிறந்த புகழ் பெற்ற கடல் வாணிகர் அவர். தனது வணிகம் சம்பந்தமாக அந்த வியாபாரி பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்று வரும் கப்பல் வாணிகர். அந்தந்த நாடுகளிலே அவரைப் போன்ற புகழ் பெற்ற, செல்வச் சீமான்களான வியாபாரிகள் பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுடன் பகீரத் அடிக்கடி தொடர்பு கொள்வார்.
எந்தெந்த நாட்களில், எவ்வப்போது, என்னென்ன முக்கியமான, சிறப்பான, அதிசயமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற விவரத்தை பகீரத் தெரிந்து கொள்வார். அத்தகைய சிறப்புச் சம்பவங்கள் இருந்தால் கப்பல் வணிகர், சங்கல் தீவை ஆட்சி செய்து வரும் தனது அருமை நண்பருக்குத் தெரிவிப்பார்.சில நேரங்களில் ராஜாவும், வாணிகருமே அந்தந்த சிறப்புச் சம்பவங்களில் கலந்து கொண்டு திரும்புவதுமுண்டு. ராஜா அத்தகைய ஓர் ஆன்மீகவாதி மட்டுமன்று, சிறந்த இறைஞான சீலரும் கூட.
அத்தகைய ஆன்மீக பக்தருக்கு, பகீரத் வாணிகர், தாம் கேட்டறிந்த குருநானக்கின் அற்புதங்களையும், அவருடைய ஒருவனே இறைவன் என்ற தெய்வீகத் தத்துவங்களையும் ஒரு சமயம் தெரிவித்திருந்தார். அது முதல் சத்குரு நானக்கையும், அவரது இறைவழிபாடு ஞான நெறிகளையும் நேரில் கண்டறிந்து, அருளாசி பெற்றிட வேண்டும் என்ற தணியாத பக்தி தாகம் கொண்டிருந்தார் அந்தத் தீவுமன்னன்.
அதற்கு ஏற்றவாறு சத்குரு நானக் இராமேஸ்வரம் வருகை தந்துள்ள செய்தியை ராஜா அறிந்து மகிழ்ந்தார். அவர் வருகைக்காக ராஜாவும் எதிர்பார்த்திருந்தார். இந்த எண்ணச் சூழல் சத்குருவின் ஞானக் கண்ணுக்குப் புலப்பட்டதால் தான், ராமேஸ்வரம் கடற்கரையிலே நின்று கொண்டிருந்த குருநானக்குக்கு திடீரெனத் தனது நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கூறும் சிந்தனை உதயமானது.
சத்குரு நானக் சங்கல் தீபம் என்ற தீவுக்குத் தனது மாணவர்களுடன் போய்ச் சேர்ந்தார். குருநானக் வந்துள்ள செய்தியை முன்கூட்டியே அறிந்து கொண்ட ராஜா, அவரைச் சகல மரியாதைகளுடனும், தனது பரிவாரங்களுடனும் எதிர்கொண்டு சென்று வரவேற்றுக் கோலாகலமாக இறைவனது திருவிழாவைப் போலக் கொண்டாடி, ஞானமகானைத் தனது அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
சத்குரு அங்கே தங்கியிருந்த நாட்களில் தினந்தோறும் அந்த அரண்மனைத் திடலில் மக்களைத் திரட்டி தனது சீக்கிய மத நெறிகளை விளக்கினார். குருநானக் மீது ராஜா சிவநாத்துக்கு மிகுந்த மரியாதை, மதிப்பு, ஆன்மீக நேச பாசம் எல்லாம் உண்டு. என்றாலும் வந்திருப்பவர் உண்மையான குரு நானக்தானா? அல்லது அவர் பெயரால் யாராவது ஒரு போலிச் சாமியாரா? என்பதை ராஜா கண்டறிய விரும்பினார்.அந்தச் சோதனைகளிலே சத்குரு வெற்றி பெற்றார். ஆனாலும் ராஜாவுக்கு ஒரு மன நெருடல் குரு தேவரைப் போய் அவநம்பிக்கைப் பட்டோமே என்பதுதான் அது.
குருநானக்கை வழியனுப்பும் விழாவில் பாராட்டிப் பேசிய ராஜா சிவநாத், மகான், யோகி குருநானக் ஓர் அவதார புருஷர் ஆவார் என்று பேசி, தான் அவர்மீது அவநம்பிக்கை வைத்தது தவறு. ஏனென்றால் போலிச் சாமியார்கள் அதிகமாகப் பெருகி ராமேஸ்வரம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி ஏமாற்றுவதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான் சத்குரு போலிச் சாமியாரோ என்ற ஓர் ஐயம் எனக்கு ஏற்பட்டு விட்டது.
சத்குரு அவர்கள் இந்த பாபியை மன்னிக்க வேண்டும் என்று அந்த விழாவின் மக்கள் மத்தியிலே ராஜா கேட்டுக் கொண்டார். அதற்கு சத்குரு, 'அன்பின் வடிவான மெய்யன்பரே, உமது நினைப்பில் தவற்றில்லை. உண்மைதான். நீங்கள் இறைஞான வழிபாடுகளிலே ஒரு புதுமையைப் புகுத்தி மறுமலர்ச்சி கண்டு நீண்ட நாள் வாழ வேண்டும்’ என்று குருநானக் ராஜாவை வாழ்த்தி அருளாசி வழங்கினார்.
சங்கல் தீபம் என்ற அந்தத் தீவிலே இருந்து சத்குரு கன்னியாகுமரி சென்றார். முக்கடல் சங்கமத்தின் இயற்கை அமைப்பின் எழிலை நீண்ட நேரமாக ரசித்தபடியே குமரிக் கடலோரக் கரையிலே மெய்மறந்து நின்றார்.
முக்கடல் குமரியின் சங்கமத்திலே இருந்து சத்குரு நேராக திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்றார். அப்போது ராணி அதை ஆட்சி செய்து கொண்டிருந்தார். குருநானக் ராணியைச் சந்தித்து உபதேச உரை நிகழ்த்திய பின்பு, ஆன்மீக நெறிகளில் அரசியாருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் சிலவற்றை நீக்கினார்.
சத்குரு அங்கே இருந்து கண்ணன் பிறந்த இடமான பிருந்தாவனம் சென்றார். பிறகு, தமது சீடர்களுடன் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார். யமுனை நதிக்கரையிலே அப்போது புதுதாகக் கட்டப்பட்டிருந்த குருத்துவாரம் திருக்கோவிலைப் பார்த்து பரவசப்பட்டார். சில நாட்கள் அவர் தில்லி மாநகரிலே தங்கிவிட்டுப் பிறகு, தனது இருப்பிடமான கர்தர்பூர் சென்றார்.