மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/முகவுரை
முகவுரை.
நமது நாட்டிலே முற்காலத்திலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்று இருந்தது. ஜைன மதம் சிறப்புற்றிருந்த அந்தக் காலத்திலே, ஜைனர் கலைகளையும் காவியங்களையும் வளர்த்தார்கள் காவிய இலக்கியங்களை எழுதியதோடு அமையாமல் சிற்பம், ஓவியம் இசை, நாட்டியம் முதலிய கலைகளை வளம்பட வளர்த்தார்கள் பிற்காலத்திலே சமயப்பூசல்கள் கிளம்பி. குழப்பங்கள், உண்டான போது, ஜைன மதம், தான் இருந்த உயர் நிலையிலிருந்து பின்னடைந்து, காலஞ் செல்லச் செல்ல குன்றி குறைந்துவிட்டது ஜைனர்கள் வளர்த்த கலைகள் மறைக்கப்பட்டன, அல்லது மாற்றம்பட்டன. ஆனாலும், தமிழ்நாட்டிலே ஆங்காங்கே காணப்படுகிற சிற்பங்களும் ஓவியங்களும் குகைக் கோயில்களும் கற்கோயில்களும், பண்டைக்காலத்திலே ஜைனர் வளர்த்த கலைப்பண்புகளை இப்போதும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், அக்கலைப் பொருள்களின் காட்சியைக்கண்டு அக் கலையின்பங்களைத் துய்க்கிறவர் இக்காலத்தில் எத்தனை பேர் உளர்? அந்தோ ! நமது நாடு- கலைகளை வளர்த்துக் கலையின்பத்தைத் துய்த்து வளர்ந்த நமது நாடு, இப்போது கலைப் பெருமையை உணராமல் கலையின்பத்தை துய்க்காமல் காலங்கழிக்கிறது! இப்போது சிலகாலமாகக் கலை கலை என்னும் கூக்குரல் நாட்டிலும் ஏட்டிலும் கேட்கப்படுகிறது. எனினும் நமது பழங்கலையில், இன்னும் நமது மக்களுக்கு ஆர்வம் பிறக்கவில்லை.
ஜைனர் அமைத்துக் கொடுத்த பல கலைச் செல்வங்களிலே ஒன்று, மகாபலிபுரத்திலே கற்பாறையில் அழகுறச் செதுக்கிய மைக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பம் (Bas italief Sculpture). இச்சிறந்த சிற்பம் இப்போது, அர்ச்சுனன் தபசு என்று பாமர மக்களாலும், பகீரதன் தபசு என்று வேறு சிலராலும் பெயர் கூறப்படுகிறது. அனால், இக்கதைகளுக்கும் இச்சிற்பத்திற்கும் யாதொரு பொருத்தமும் காணப்படவில்லை. ஜைனரின் அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை இச்சிற்பத்சல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஜைனக்கதை இப்போது மறக்கப்பட்டு, இச்சிற்பத்திற்குப் பொருத்தமற்ற வேறு கதைகள் கற்ப்பிக்கப் படுகின்றன. ஆகவே, இச்சிற்பத்தின் உண்மைக் கருத்தை விளக்கி இச்சிறு தூலை எழுதினேன். இதை எழுதிச் சில ஆண்டுகளாயினும், இதனை அச்சிட்டு வெளிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படவில்லை. சில நாட்களுக்கு, முன்பு வேதாரணியம், திரு. A. J. அனந்தராஜய்யன் முதலியார் அவர்களைத் தோழர் திரு. T. S. ஸ்ரீபால் அவர்களுடன் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. அச்சமயம், இந்தச் சிற்பத்தைப் பற்றிய செய்தியை ,முதலியார் அவர்கள் அறிந்தார்கள். உடனே, தமது சொந்தச் செலவில் இந்நூலை அச்சிட்டு, வெளியிடுவதாகக் கூறி அவ்வாறே இதனை வெளியீட்டுதவினார்கள். முதலியார் அவர்கள் இதனை வெளியிட்டிராவிட்டால், இந்நூல் வெளிவராமலே மறைந்திருக்கும். இதன் பொருட்டு, கலையார்வம் உள்ள இப்பெரியாரைப் பராட்டுவதோடு, எனது வணக்கத்தையும் நன்றியையும் செலுத்துகிறேன். தமிழுலகம் இப்பெரியாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
மகாபலிபுரத்துச் சிற்பக்கலை போன்று, வேறுபல சிற்பங்களும் ஓவியங்களும் நமது நாட்டில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் கலைச் செல்வத்திற்கு அளவில்லை. அவற்றின் அருமை பெருமை வெளிப்படும்நாள் என்னாளோ? அக்கலைக் காட்சிகளைக்கண்டு நமது நாட்டு மக்கள் இன்புறும் நாள் எந்நாளோ? பழைய கலைச் செல்வங்களை அழியவீட்டுப் புதிய புதிய கலைச் செல்வங்களை உண்டாக்குவது அறிவுடைமையாகாது. பழைய கலைச் செல்வங்களைச் காப்பாற்ற வேண்டும், போற்ற வேண்டும். அதோடு புதிய புதிய நவீன கலைச் செல்வங்களையும் உண்டாக்கவேண்டும். பழைய கலைப் பொக்கிஷங்களை நாம் போற்றிப் பாதுகாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இனியேனும் போற்றிப் பாதுகாப்போமாக.
மலரகம், மயிலாப்பூர். சென்னை |
சீனி. வேங்கடசாமி. |