மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாபலிபுரத்து
ஜைன சிற்பம்.

முன்னுரை.

மகாபலிபுரம் என்பது சென்னப் பட்டினத்துக்குத் தெற்கே 30 மைலில், கடற்கரை ஓரத்தில் இருக்கிற சிறு கிராமம். இது செங்கற்பட்டு ரயில் நிலயத்திலிருந்து கிழக்கே பதினெட்டுமைல் தூரத்தில் இருக்கிறது. இக்கிராமத்திற்குச் சென்னையிலிருந்தும், செங்கற்பட்டிலிருந்தும் பஸ் வண்டிகள் போகின்றன. மாவலிவரம் என்றும் மகாபலிபுரம் என்றும் இதற்கு இப்போது பெயர் வழங்கப்படுகிறது. இப்பெயரைக் கேட்டவுடனே மகாபலிச் சக்கரவர்த்தி கதை நினவுக்கு வருகிறது. ஆனால், மகாபலிச்சக்கரவர்த்திக்கும் மகாபலிபுரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. பல்லவ அரசர்களுக்கு இந்தப்பட்டினம் முற்காலத்திலே துறைமுகப் பட்டினமாக இருந்தது. பல்லவ அரசர்களில் ஒருவனான நரசிம்மவர்மன் என்னும் அரசன், தன்னுடைய சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை இந்த ஊருக்குச் சூட்டினான். ஆகவே இது மாமல்லபுரம் என்று வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தப் பெயர் சிதைந்து மகாபலிபுரம் என்றும் மாவலிவரம் என்றும் வழங்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, பல்லவ அரசர் காலத்தில் பெரிய துறைமுகப்பட்டினமாகச் சிறப்புடன் இருந்த இப்பட்டினம் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. சிறிய கிராமமாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் பேர் பெற்றிருக்கிறது. அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களிலிருந்தும், சீனா, பர்மா, ஜப்பான், இலங்கை, ஜாவா, சுமாத்ரா முதலிய நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வருகிற யாத்திரிகர்கள் மகாபலிபுரத்திற்கு வந்து இங்குள்ள குகைக் கோயில்களையும், கற்றேர்களையும், பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் கண்ணாறக்கண்டு மனமாற மகிழ்ந்து செல்கிறார்கள். இந்தியா தேசத்தில், சிற்பக்கலைப் பெருமையினால் சிறப்படைக்துள்ள பல இடங்களில் மகாபலிபுரமும் ஒன்று. சென்னை அரசாங்கத்தார் ஞாயிற்றுக்கிழமைதோறும் மகாபலிபுரத்திற்கென்று தனிபஸ் வண்டி விடுகிறார்கள் என்றால், இங்குள்ள சிற்பக்கலைகளின் சிறப்பையும் அழகையும் விளக்கிக் கூற வேண்டுமோ?

இந்தச் சிறு நூலிலே, நாம் ஆராயப்புகுவது, மகாபலிபுரத்திலே இருக்கிற அர்ச்சுனன் தபசு என்று பெயர் வழங்கப்படுகிற ஒரு சிற்பத்தைப் பற்றித்தான். இந்தச் சிற்பம் ஒரு கற்பாறைக் குன்றில் வெகு அழகாகச் செதுக்கப் பட்டிருக்கிறது. இக்கற்பாறைக் குன்றின் கிழக்குப்பக்கம், நெடுஞ்சுவர்போன்று செங்குத்தாக அமைந்திருக்கிறது. சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள இந்தச் செங்குத்தான பாறையிலே, கைதேர்ந்த சிற்பிகள் பல அழகான உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பம், பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவர்ந்து மிகக் கம்பீரமாகவும் அழகாகவும் காணப்படுகிறது. கி. பி. 7- ஆம் நூற்றண்டிலே, அதாவது இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னே அமைக்கப்பட்ட இந்தச் சிற்பம், கடம் காற்றினாலும் மழை வெயிலினாலும் தாக்குண்டு சிறிது மழுங்கிவிட்ட போதிலும், இன்னும் அதன் அழகும் கம்பீரமும் குறையாமல் மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. (படம் 1 காண்க.)

இந்தச் சிற்ப உருவம், அர்ச்சுனன் தபசு என்னும் கதையைக் குறிக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதாவது மகாபாரதத்திலே வன பர்வத்தில் கூறப்படுகிற, அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையைக் காட்டுகிறது இந்தச்சிற்பக் காட்சி என்று சொல்லுகிறார்கள். 1914-ஆம் ஆண்டில், பிரான்ஸ் தேசத்து அறிஞரான M. Victor Goloubonw என்பவர், இந்தச் சிற்பக்காட்சி யை நேரில்வந்து பார்த்தபோது, இது அர்ச்சுனன் தபசு அல்ல என்றும், இராமாயணம் பால காண்டத்தில் கூறப்படுகிற பகீரதன் தபசு என்னும் கதையை இது காட்டுகிறது என்றும் தமது கருத்தை வெளியிட்டார். அதன் பிறகு, இவர் கூறிய கருத்து தான் உண்மை என்று பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆனால், இந்தச் சிற்பக் காட்சியை நேரில் போய் ஊன்றிப் பார்த்துக் கூர்ந்து பவனித்தால், இது அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையும் அல்ல, பகீரதன் தபசு செய்து கங்கையைப் பூலோகத்துக்குக் கொண்டுவந்த கதையும் அல்ல என்று தெரியவருகிறது. ஏனென்றல் இதில் காணப்படும் சிற்ப உருவங்களுக்கும் இக்கதைகளுக்கும் பொருத்தம் காணப்படவில்லை இந்தச் சிற்பத்தில், ஒற்றைக் காலில் நின்று
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf
கைகளைத் தலைக்குமேல் உயர்த்தித் தவம் செய்கிற உருவம் அர்ச்சுனன் என்றும், அதற்கு எதிரில் நான்கு கைகளுடன் நிற்கும் தெய்வம் சிவபெருமான் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் சொல்வதை ஒப்புக் கொண்டால், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற மற்ற உருவங்கள் எதைக் குறிக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற நாககுமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள், கங்கை ஆறு, கோயில், தலையற்ற மூன்று உருவங்கள், மற்றும் பல மனித உருவங்கள் இவை எல்லாம் ஏன் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன? மேலும், தபசுசெய்கிற அர்ச்சுனனிடத்திற்குச் சிவபெருமான், வேடன் உருவங்கொண்டு போனார் என்றும் உமையம்மையார் வேடுவச்சி உருவம் எடுத்து உடன் சென்றார் என்றும் புராணம் கூறுகிறது. வேடன் வேடுவச்சி உருவங்கள் இதில் காணப்படவல்லை. ஆனால், கதைக்குத் தொடர்பு இல்லாத அநாவசியமான உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அன்றியும் இந்தியச் சிற்ப முறைப்படி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைத் தலைவர்களான அர்ச்சுனனையும் சிவபெருமானையும் பெரிய உருவமாக அமைத்து, கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மற்ற உருவங்களைச் சிறிய உருவமாக அமைத்திருக்க வேண்டும். இந்தச் சிற்பத்தில் அப்படி அமைக்கப்படவில்லை. நாகர்கள், தெய்வ கணங்கள், யானை கோயில் தலையற்ற உருவங்கள் முதலியன முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கும்போது, இந்தச்சிற்பக்காட்சி, அர்ச்சுனன் தபசைக் குறிப்பதல்ல என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறது என்றும் கருத வேண்டியிருக்கிறது.

இனி, மற்றொரு சாரார் கருதுகிறபடி இந்தச் சிற்பக்காட்சி பகிரதன் தபசைக்குறிக்கிறதா என்று பார்ப்போம். M. Victor Goloubeaw அவர்கள் கருதுகிறபடி, இச்சிற்பத்தின் நடுவில் காணப்படுகிற, கங்கை ஆறு இழிந்து ஓடுவது போன்ற காட்சி, முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஆனால் கங்கையில் நாக அரசனும் அவன் மனைவியும் ஏன் கணப்படுகிறார்கள்? மேலும் அவர் கூறுவதுபோல, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்கிறஉருவம் பகீரதனைக்குறிக்கிறது என்று ஒப்புக்கொள்வோமானால். அவனுக்கு எதிரில் நான்கு கைகளுடன் காணப்படுகிற உருவத்தைச் சிவன் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், இந்த உருவத்துக்குத் தலையில் கிரீடமகுடம் காணப்படுகிறது. சிவன் ஜடாமகுடம் உடையவர். அல்லாமலும் இவ்வுருவத்தின் கையில் கதாயுதம் போன்ற ஆயுதம் காணப்படுகிறது. சிவனுக்குச் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் உண்டேயன்றிக் கதாயுதம் கிடையாது. எனவே இந்த உருவம் சிவனைக் குறிப்பது அன்று. முக்கியமான இன்னொரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டும். அதாவது பகீரதன் தபசு என்னும் கதையில், கங்கை ஆகாயத்திலிருந்து பூமியல்மிகவேகமாக இறங்கிய போது சிவபெருமான் அக்கங்கையைத் தமது ஜடையில் தாங்கிக் கொண்டார் என்பது. அந்தக்காட்சி, இந்தச்சிற்பத்தில் காணப்படவில்லை. இந்தச் சிற்பம் பகீரதன் தபசு என்னும் காட்சியைக்குறிப்பதாக இருந்தால், கங்காதரமூர்த்தியின் உருவம் இதில் இடம்பெற வேண்டும் அல்லவா? கங்காதரமூர்த்தியின் அழகான சிற்ப உருவங்கள் பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்டவை, இன்றும் பல இடங்களில் காணப்படுகின்றனவே. கங்காதரமூர்த்தியின் உருவம் இந்தச் சிற்பத்தில் ஏன் இடம்பெறவில்லை? கதைக்குப் புறம்பான யானை, நாகர்கள், தேவர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி உட்கார்ந்திருக்கும் முனிவரின் உருவம், கோயில் இவைகள் ஏன் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன? இவைகளை எல்லாம் யோசிக்கும்போது, இந்தச் சிற்பக்காட்சி, சிலர் கருதுவது போல பகீரதன் தபசைக் குறிக்கவில்லை என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறதென்றும் தெரிகிறது.

அப்படியானால் இந்தச் சிற்பக்காட்சி எந்தக் கதையைக் குறிக்கிறது?

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என் மனத்தில் குடி கொண்டிருந்தது. நெடுநாட்களாகச் சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக, ஜைன நூல்களைப் படித்தபோது இக்கேள்விக்கு விடை கிடைத்தது! இந்தச் சிற்பம் ஒரு ஜைனக் கதையைக் குறிக்கிறது என்பதை அறிந்தேன். அந்த ஜைனக் கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் பலவகையில் நல்லபொருத்தங்கள் இருப்பதைக்கண்டேன். மேலும் ஊன்றி நன்றாக ஆராய்ந்துபார்த்தபோது நிச்சயமாக இந்தச் சிற்பம் ஜைனக் கதையத்தான் குறிக்கிறது என்னும் உண்மையைக் கண்டேன். என் கருத்தை, தென் இந்திய புதைபொருள் ஆராய்ச்சி சங்கத்தில் (Archaeological Socety) (1947-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி) பேராசிரியர், ராவ்சாகிப் A. சக்கரவர்த்தி நயினார் M. A. அவர்கள் தலைமையில் சுருக்கமாகப் படித்தேன். . அஜிதநாதசுவாமி என்னும் இரண்டாவது ஜைன தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகரசக்கரவர்த்தியின் கதை இந்தச் சிற்பக் காட்சியில் அமைந்திருக்கிறது என்று விளக்கினேன். இந்தச் சகரசக்கரவர்த்திக் கதை இராமாயணத்தில் கூறப்படுகிற சகரசக்கரவர்த்தியின் கதையல்ல. ஜைன புராணங்களில் கூறப்படுகிற ஒரு ஜைனக்கதையாகும் இந்தக் கதைக்கும் மகாபலிபுரத்துச் சிற்பத்துக்கும் பொருத்தங்காட்டுவதற்கு முன்பு, இந்தக்கதையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழில் ஸ்ரீ புராணத்திலும், ஜீவசம்போதனை என்னும் நூலிலும் சுருக்கமாகக்காணப்படுகிறது. இந்தியில் உள்ள திரிஸஷ்டி ஸலாகா புருஷ சரித்திரம் என்றும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த இந்தி நூலை Helen M. Johnson அம்மையார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Gaekwad's Oriental Series ஆக இது அச்சிடப்பட்டிருக்கிறது. அக்கதையைச் சுருக்கமாகக் கூறுகிறேன்
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf