மகாபாரதம்-அறத்தின் குரல்/1. போரில் மனப்போர்
வீட்டும பருவம்
அலைக்கரங்களைக் கொட்டிக் குமுறும் இரண்டு பெருங்கடல்கள் எதிரெதிரே தடைப்பட்டு, நிற்பனபோல இருபுறத்துப் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றன. படைத்தலைவர்களின் ஆணை ஒன்றே கிடைக்க வேண்டியதாக இருந்தது. அது கிடைத்து விட்டால் படைகள் கைகலந்து மோதிவிடும். இந்த நிலையில் இது தேர்மேல் நின்று கொண்டு தன் எதிரே கண்ணுக்கெட்டிய தொலைவுவரை உற்றுப் பார்த்தான் அர்ச்சுனன். எதிர்ப்புறம் கெளரவர் சேனையின் முன்னே நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டதும் அவனையறியாமலே அவன் கைகள் தளர்ந்தன. கண்கள் நனைந்தன. மனம் நெகிழ்ந்தது. களத்தில் போர் தொடங்குவதற்குமுன்னால் அவன் மனத்தில் தொடங்கிவிடும் போலிருந்தது. கண்ணுக்குக் கண்ணாகப் பழகிப் பாசம் காட்டிய பாட்டனார் வீட்டுமன். பால் நினைந்து ஊட்டுகின்ற தாயினும் சாலப் பரிந்து கலைகளையும் வில் வித்தையையும் கற்பித்த ஆசிரியர் துரோணர், கிருபாச்சாரியார், எவ்வளவோ துரோகம் செய்திருந்தாலும் சகோதரர் முறையினராகிய துரியோதனனும் அவன் தம்பிமார்களும், எல்லோரும் எதிர்புறம் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவன் கண்களை நீர்த்துளிகள் திரையிட்டு மறைத்தன. உடல் வாடித் துவண்டு அப்போதே தேர்த்தட்டின் மேல் மயங்கி விழுந்துவிடும் போல் தோன்றியது. அவன் மனக்களத்தில் பாசத்துக்கும் கடமைக்கும் இடையே பெரும் போர் மூண்டது. தனக்கு முன்னே சிரித்த வாயும் மலர்ந்த முகமுமாகத் தேரைச் செலுத்தும் சாரதியின் பீடத்தில் வீற்றிருந்த கண்ணனை உற்றுப் பார்த்தான் அர்ச்சுனன். கண்ணன் அவனுடைய மனநிலையை உய்த்துணர்ந்து கொண்டவனாக மேலும் சிரித்தான்.
“கண்ணா! இந்தப் போர் வேண்டாம். என்னை விட்டு விடு! நான் போய் விடுகிறேன். வில் இந்தா, வாள் இந்தா, அம்பறாத் தூணி இந்தா, எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள். என்னைவிட்டு விடு”
கண்ணன் முன்னிலும் இரைந்த குரலில் கலகலவென்று கிண்கிணி நாதம் போலச் சிரித்தான். அர்ச்சுனனை இமைக்காமல் ஏறிட்டுப் பார்த்தான். பார்வை என்றால் சாதாரணமான பார்வையா அது? சர்வத்தையும் ஊடுருவி நோக்கும் ஆழ்ந்த கூரிய பார்வை!
“அர்ச்சுனா நீ என்னிடம் விளையாடுகிறாயா? அல்லது உண்மையாகவே தான் இப்படிக் கேட்கின்றாயா?”
“உண்மையாகவேதான் சொல்கிறேன் கண்ணா! அண்ணனையும் தம்பியையும் ஆசிரியனையும் பாட்டனையும் கொன்று பெறுகின்ற வெற்றி எனக்கு வேண்டவே வேண்டாம். உறவினர்களைக் கொன்று அரசாட்சியை அடைய முயலும் தீவினையிலிருந்து என்னை விடுதலை செய்து விடு.”
உண்மையாகவே அர்ச்சுனன் மனம் பேதலிந்து விட்டான் என்பதைக் கண்ணன் உணர்ந்துகொண்டான். பொறுப்புணர்ச்சிமிக்க கண்ணனின் உள்ளம் சிந்தித்தது. ‘சரியானபடி அறிவுரை கூறித்தான் அர்ச்சுனனுடைய மனம் திருந்தச் செய்ய வேண்டும். இப்படியே விட்டுவிட்டால் அவன் போர்க்களத்தை விட்டே ஓடினாலும் ஓடிவிடுவான். அர்ச்சுனன் மனத்தில் “போர் செய்வது தவறில்லை; போர் செய்யலாம்” என்ற விருப்பத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும்’ தேரின் முன்புறத்திலிருந்து எழுந்து அர்ச்சுனனுக்கு அருகில் சென்றான் கண்ணன்.
“அர்ச்சுனா! இப்போது நான் கூறப்போவதைக் கவனமாகக்கேள். வீண் ஆசாபாசங்களில் சிக்கிக் கடமையைக் கைவிட்டு ஓடிவிடாதே. ஜன்மா எப்படி நேருகிறது? எதற்காக நேருகிறது? ஏன் நேருகிறது? உனக்குத் தெரியுமா? மாயா கர்ப்பத்தின் பிறவிதான் மனம். ஜன்மாவே மாயையின் வசத்தாலோ அவசத்தாலோ நிகழ்கிறது. ஜன்மாவின் சிந்தையோ முற்றிலும் மாயையிலேயே மூழ்கித் தோய்ந்து பிறந்தது. மாயையில் மூழ்கிய மனம் மெய்யறிவை மறப்பதும் பயனற்ற ஆசைகளிலும் பாசங்களிலும் மயங்குவதும் இயல்பு. ஆசையையும் பாசத்தையும் மறந்து கடமையைச் செய்வதுதான் ஆத்மாவின் இலட்சியம், ஜன்மாவின் இந்த இலட்சியத்துக்குப் பகைவேறு எங்கும் இல்லை, அதன் சரீரத்துக்குள்ளேயே இருக்கிறது. ஐம்பொறிகளும், அவைகளுக்குப் புலனாகும் விஷயானுபவங்களும், அவற்றை அடக்கியாள்கின்ற மனமும் தான் அந்தப் பகைகள், புலன்களின் விழிப்பும் கொட்டமும் ஒடுங்காத வரை ஆன்மா உறங்கிக் கொண்டுதான் இருக்கும். ஆன்மா விழிப்படைந்து மெய்ப்பொருளை உணர வேண்டுமானால், புலன்கள் செயலோய்ந்து உறங்க வேண்டும். புலன்களின் அஜாக்ரதையால் பாசபந்தங்களைப் போக்கிக் கடமையை நிறைவேறும்படி செய்து கொள்ள வேண்டும்; அது தான் பிறப்பின் மாபெரும் குறிக்கோள்! கடமையை நிறைவேற்றுவதற்குரிய ஞானமாக ஒவ்வொரு ஆன்மாவிலும் பரம்பொருள் நிறைந்திருக்கின்றது பாலிலே நெய்போல மறைந்து நிற்கும் பரமஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்பற்ற, பாசபந்தமில்லாத நிலையை அடைவதற்கு இந்த ஞானம் அவசியம். இன்னும் கேள்! உயர்பிரிவினர்களாகிய தேவர்களும், ஞானச்செல்வர்களாகிய முனிவர்களும் கூட உணர்வதற்குத் திண்டாடும் ஓர் மாபெருந் தத்துவத்தை இப்போது இங்கே உன் பொருட்டு நான் உபதேசிக்கிறேன். உன் பிரமையைப் போக்கி அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை உண்டாக்குவதற்காகவே இந்த உபதேசம். சரீரம் பஞ்ச பூதங்களிலிருந்து உண்டானது. அழிந்து பின் பஞ்ச பூதங்களோடு கலக்கப்போவது. ஞானத்தையே சரீரமாகக் கொண்டுள்ள பரம்பொருளின் சக்தியால் வெறும் பூதசரீரமாகிய உடல் இயங்குகிறதே ஒழியத் தானாக இயங்கவில்லை. இதோ உனக்கு முன் நீ இரண்டு கண்களாலும் காண்கின்ற வெறும் கண்ணனாகவா நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்? இல்லை! பரம்பொருளின் ஓர் அவதார அம்சம் உன் முன் கண்ணன் என்ற பெயர் தாங்கித் தன் இலட்சணத்தைத்தானே கூறிக் கொண்டிருக்கிறது. எனக்கு எத்தனையோ அவதாரங்கள்! எத்தனையோ பிறவிகள். அத்தனைக்கும் தனித்தனி இலட்சியங்கள் உண்டு. நாராயணன் நான்தான். இராமன், இலக்குவன், கண்ணன், அர்ச்சுனன் என்று நாம , உருவ பேதங்கள் பல! ஆனால் இந்த நாமரூப் பேதங்களுக்கு உள்ளே நாமமும், ரூபமும், பேதமும் இல்லாமல் மறைந்து நிற்பவன் யார் தெரியுமா? நான்! நான்தான்! என்ற ஒரு பெருஞ் சக்தி மறைந்து நிற்கிறது. இந்தச் சக்தியின் கட்டளை உனக்கு என்ன கூறுகிறது தெரியுமா? உறவு, பாசம், ஆசையெல்லாம் போலி வெளி வேஷங்கள், அவற்றால் ஏற்படும் மனதளர்ச்சியை உதறி எறி. கடமை எதுவோ அதை செய்! நீயாக எதையும் செய்யவில்லை. அது உன்னால் முடியவும் முடியாது. நான் உன்னுள் நின்று செய்விக்கிறேன், இதை நீ மறந்து விடாதே. கடமையைச் செய்! உனக்காக அல்ல! உன்னுள் நின்று இயங்கும் எனக்காகச் செய்...” பெருமழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது கண்ணனின் உபதேசம். அர்ச்சுனன் மலர்ந்த முகத்தோடு தன் முன்னிருந்த கண்ணனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தான். அங்கே சாதாரணக் கண்ணன் நிற்கவில்லை. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஓர் விசுவரூபன் நிற்பதாகத் தோன்றியது அவன் விழிகளுக்கு.
“கண்ணா! என்னை மன்னித்துவிடு. நான் மெய்யை உணர்ந்து கொண்டேன். மனத்தைப் புழுப்போல அரித்து வந்த ஆசாபாசங்கள் அகன்றுவிட்டன. நான் கடமையைச் செய்கிறேன்” -அப்படியே தேர்மேல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கண்ணனின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான் அர்ச்சுனன்.
“எழுந்திரு! கால்களைப் பற்றுவது பிறகு இருக்கட்டும். முதலில் உன் கடமையை மனத்தில் இறுகப்பற்றிக்கொள். கீழே போட்டுவிட்ட வில்லை எடுத்து இறுகப்பற்றிக்கொள். ‘போர் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணங்களை இறுக உறுதியாக உள்ளத்தில் பற்றிக் கொள்” கண்ணன் அர்ச்சுனனின் தோள்களைப் பற்றி எழுப்பித் தூக்கி நிறுத்தினான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் கெளரவர்கள் சேனை தங்கியிருந்த எதிர்ப்பக்கம் சென்று தங்களுக்கு வேண்டியவர்கள் சிலரைச் சந்தித்து விட்டு வரக்கருதினர் பாண்டவர். கண்ணனும் பாண்டவர்கள் ஐவருமாக ஒரு தேரின் மேலே ஏறிக் கொண்டு கெளரவர்கள் படை நின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். ஒவ்வொருவராகச் சந்தித்துப் பாண்டவர்கள் நிலைபற்றி அவர்களிடம் கூறி விளக்குவதே கண்ணனின் நோக்கம். அந்த நோக்கத்தின்படி அவர்கள் முதலில் வீட்டுமனைச் சந்தித்தனர்.
“ஐயா! இந்தப் போரில் நியாயம் பாண்டவர்கள் பக்கம்தான் இருக்கிறது! உங்களைப் போன்ற மூதறிஞருக்கு நன்கு தெரியும். இப்படித் தெரிந்திருந்தும் பாண்டவர்களை எதிர்த்து இடுகின்ற போரில் நீங்கள் முன்னணியில் நிற்கலாமா? நீங்களே இந்தப் போரில் தலைமை தாங்கி நின்றால் பாண்டவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று கண்ணன் வீட்டுமனை நோக்கிப் பாண்டவர்கள் சார்பிலே கேட்டான்.
“கண்ணா! அருமைப் பாண்டவர்களே! போரில் வெற்றி நிச்சயமாக உங்களுக்குத்தான்! எதிர்கால உலகம் தருமனது இன்பம் நிறைந்த செங்கோலாட்சிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் இந்தப் போரில் உங்களுக்கு எதிராக நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். அதோடு என்னைச் சாகச் செய்வதற்குரிய வழியையும் உங்களுக்குக் கூறிவிடுகிறேன். நான் விரைவில் இறந்து விட்டால் பின் உங்களுக்குச் சீக்கிரமே வெற்றி கிடைத்துவிடும். முன்பொரு காலத்தில் என்னைக் கொல்ல வேண்டுமென் பதற்காகவே அம்பை என்ற பெண் ஒருத்தி தவம் செய்தாள். அந்தத் தவத்தின் பயனாக இப்பிறவியில் துருபதராசனின் மகனாகச் ‘சிகண்டி’ என்ற பெயருடனே அவள் பிறந்திருக்கிறாள். அவளால்தான் எனக்குச் சாவு ஏற்படப்போகிறது. அவளை ‘சிகண்டி எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினால் பெண்ணாக இருந்து ஆணாகப் பிறந்தவன்’ என்ற இழிவினால் நான் வில்லையோ, வாளையோ, கையால் எடுக்காமலே வெறுங்கையோடு நின்று விடுவேன். அப்படி நான் வெறுங்கையோடு நிற்கும்போது, அர்ச்சுனன் எய்யும் அம்புகளால் சாகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமாயின் அதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்ளுவேன். கண்ணா! எல்லா மாயங்களிலும் வல்லவனாகிய நீ துணையிருக்கும் பொழுது பாண்டவர்களுக்குத் தோல்வி ஏது? எல்லாம் மங்கலமாக வெற்றி நிறைவுடனே முடிவுபெறும். கவலையே வேண்டாம்” என்று வாழ்த்துக் கூறி அனுப்பினான் வீட்டுமன். அந்த மூதறிஞரின் நல்ல மனத்தை வியந்து பாராட்டிய வண்ணம் கைகூப்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டு துரோணரைச் சந்திப்பதற்காகச் சென்றனர் பாண்டவர்களும் கண்ணனும்.
துரோணர் புன்முறுவலோடு அவர்களை வரவேற்றார். தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து நல்லாசிரியர் பெருமானாகிய அவரை வணங்கிப் பணிந்து நின்றனர் பாண்டவர்கள். “கண்ணா! பாண்டவர்கள் மட்டும் தனியாக வரவில்லை. அவர்களை அழைத்துக் கொண்டு நீயும் வந்திருக்கிறாய்! நீ கூட வந்திருந்தால் ஏதாவதொரு மாயமும் தந்திரமும் கூட வந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!” துரோணர் சிரித்துக் கொண்டே இப்படிக் கேட்டார். கண்ணனும் சிரித்துக் கொண்டே பதில் கூறினான்:
“மாயமாவது, தந்திரமாவது! அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் பாண்டவர்களின் குரு. இப்போது இந்தப் போரில் நீங்களே அவர்களுக்கு எதிராக வில்லை எடுத்துப் போரிடும்படி நேர்ந்து விட்டதே என்றெண்ணித்தான் வருந்துகிறேன்."
“இது கடமை! நான் என்ன செய்யலாம்? ஆனால் வெற்றி என்னவோ தருமனுக்குத்தான் கிடைக்கப் போகின்றது. இந்தப் போரில் என்னுடைய எதிர்ப்பால் நீங்கள் அதிகம் தொல்லை அடையாமல் இருக்க ஓர் உபாயம் சொல்கிறேன். நான் போர்க்களத்தில் பல அரசர்களுக்கு நடுவே போர் செய்து கொண்டிருக்கும்போது, “உன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான்” என்று யாராவது நம்பத்தகுந்தவர் ஒருவர் வந்து கூறுவதற்கு ஏற்பாடு செய்துவிடுங்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நான் உடனே வில்லைக் கீழே போட்டுவிடுவேன். அதன்பின் அதைக் கையிலெடுக்கவே மாட்டேன். என்னுடைய இறுதி துட்டத்துய்ம்மன் கை வில்லில் இருக்கின்றது. அதனால்தான் எனக்குச் சாவு நேரிடப் போகிறது. வீட்டுமனும், நானும் இறந்தபின் கெளரவர்களை வெல்ல உங்களுக்கு அதிக நேரம் ஆகவே ஆகாது! நான் என் உயிரைக் கொடுத்த பின்பாவது பாண்டவர்களின் வெற்றியை விண்ணுலகிலிருந்து மானசீகமாகக் கண்டு மனமகிழ்வேன்” -துரோணர் நாத்தழுதழுக்கக் கூறினார். அவருடைய தூயதியாகம் நிறைந்த நெஞ்சம் கண்ணனையும் பாண்டவர்களையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களை வாழ்த்தினார் துரோணர். எதிர்ப்புறத்துச் சேனையில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து முடித்துக் கொண்டதால் கண்ணனும் பாண்டவர்களும் தேரைத்திருப்பிக் கொண்டு தங்கள் படைகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.
இருபுறத்துப் படைத்தலைவர்களும் கடைசி முறையாக அணிவகுப்பைச் சரிபார்த்தனர். படைகளைத் தாக்குதலுக்குத் தயாராக்கி வைத்தனர். போருக்குக் குறித்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது, இருதிறத்தாரும் தத்தமக்கு வெற்றியை நல்குமாறு தத்தம் இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டனர். கண்ணன், பாண்டவர்களின் படையின் மலைபோல் குவிந்து நிற்கும் அணிவகுப்புத் தோற்றத்தில் கண்டு வெற்றித்திருவைத் தியானித்து அந்தரங்க சுத்தியோடு வழிபட்டுக் கொண்டான். இருபுறத்திலும் பாம்புக் கொடிகளும் முரசுக்கொடிகளுமாக வானளாவிய மலைகளில் வீழும் அருவிகளைப் போல உயர்ந்து அசைந்தாடின. விண்ணையும் மண்ணையும், திசைகள் எட்டையும் கிடுகிடுக்கச் செய்வது போலப் போர் முரசங்கள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. திருச்சின்னங்களும், எக்காளங்களும் அதிர்ந்தன. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்தன. தேர்ச்சக்கரங்கள் பேரொலியுடன் இடி இடிப்பது போல உருண்டன. வீரர்கள் உறையிலிருந்து வாளை உருவும் ஒலி களம் முழுவதும் எதிரொலித்தது. இருபுறமும் எட்ட நின்று கொண்டிருந்த முன்னணித் தேர்ப்படைகள் ஒன்றையொன்று நெருங்கின. கண்ணன் வலதுகையை அசைத்து சமிக்ஞை செய்தான். வீட்டுமனும், சிவேதனும் ஆகிய இருபுறத்துப் படைத்தலைவர்களும் ஒருவருக் கொருவர் ‘போர் தொடங்கலாம்’ என்ற குறிப்பைக் கண்களாலேயே தெரிவித்துக் கொண்டனர்.
வாள்களும் வேல்களும் மின்னின. வில்நாண்கள் வளைந்தன. நாணொலி இடிமுழக்கத்தைத் தோற்கச் செய்துவிடும் போல இருந்தது. வியூகங்களின் படியே அணிவகுப்பு முறை மாறாமல் தேர்ப்படையோடு தேர்ப்படையும், காலாட்படையோடு காலாட்படையும், யானைப்படையோடு யானைப்படையும், குதிரைப்படையோடு குதிரைப்படையும் கலந்தன. கடல் கடலோடு மோதினாற் போல இருபுறத்துப் படைகளும் சங்கமமாயின. ‘போர்’ ‘போர்’. பயங்கரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் போர் இதோ உண்மையாகவே நடக்கத் தொடங்கிவிட்டது. பதினெட்டு அக்குரோணிப் படை வீரர்களின் ஆண்மை , அந்தக் குருகுலத்து மண்ணில் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் இரத்த விளையாட்டு விளையாட ஆரம்பித்துவிட்டது. மண் இரத்தத்தால் நனைந்தது. விண் ஓசையால் நிறைந்தது. திசைகள் அவலக் குரல்களால் நிறைந்தன, தர்மத்தையும் அதர்மத்தையும் நிறுவையிடும் போரின் முதல்நாள் மலர்ந்து விரிந்து விட்டது!