மகாபாரதம்-அறத்தின் குரல்/2. அந்திம காலத்துப் போர்
கர்ணனின் வேண்டுகோள்படியே சல்லியனை அழைத்துத் துரியோதனன் அவனுக்குத் தேரோட்டியாக அமர்த்திக் கொடுத்தான், சல்லியனும் கர்ணனுக்குத் தேரோட்டியாக அமருவதற்கு இணங்கினான். “சல்லியா, பாண்டவர்களில் அர்ச்சுனன் வெற்றி மேல் வெற்றி அடைந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? எல்லா வகைகளிலும் திறமை வாய்ந்தவனாகிய கண்ணன் அவனுக்குத் தேரோட்டியாக அமைந்திருப்பதுதான் காரணம். நீயும் அதுபோல் கர்ணனுடைய தேரோட்டியாக அமைந்து சிறப்பிக்க வேண்டும்” - என்று துரியோதனன் வேண்டினான்.
முதலில் துரியோதனனின் வேண்டுகோளுக்கு இணங்கி விட்ட சல்லியன் பின்பு ஆற அமரச் சிந்தித்தான். திடீரென்று என்ன நினைத்துக் கொண்டானோ! எப்படி மனம் மாறினானோ! கர்ணனுக்குத் தேரோட்டியாக இருப்பது தன் சுயமரியாதைக்கே அகெளரவம் போலத் தோன்றியது அவனுக்கு, சல்லியன் ஆத்திரங் கொண்டு கண்கள் சிவக்க வாய் துடிதுடிக்கச் சினத்தோடு துரியோதனனை எதிர்த்துப்பேச ஆரம்பித்தான்:-
“துரியோதனா! நீ என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறாய் யாருக்கு யார் தேரோட்டுவது? எதற்காக ஓட்டுவது? மத்திரதேசத்து மன்னனாகிய என்னைப் போன்ற பேரரசன் ஒருவன் கேவலம் ஊர் பேர் தெரியாமல் உன்னை வந்து அண்டிய கர்ணனுக்குக் கீழ்ப் படிந்து தேரோட்ட வேண்டுமா? என்னுனடய வீரத்திற்குக் கர்ணனுடைய வீரத்தை இணை சொல்ல முடியுமா? வேண்டுமானால் ஒன்று செய்! பகைவர்களுடைய படையை இரு பிரிவாகப் பிரித்து என்னிடமும் கர்ணனிடமும் அவற்றை அழிக்கச் சொல்லிக் கட்டளையிடு! யார் முதலில் வெற்றிவாகை சூடுகிறார்கள் என்று பார்! நான் முதலில் மிக விரைவாக என் பங்குப் படைகளை அழித்து விட்டுப் பின் கர்ணன் பங்குப் படைகளையும் என் கையாலேயே அழித்துவிடுவேன். அத்தகைய பேராற்றலும் பெரும் வீரமும் உள்ள என்னைத் தேரோட்டி மகனாகிய கர்ணனுக்கு சாரதியாக அமரச் சொல்கிறாயே! நாக்குக் கூசாமல் இச்சொற்களைக் கூறி நீ எவ்வாறு எனக்கு இந்தக் கட்டளையை இட்டாய்?”
சல்லியனின் திடீர் மனமாற்றத்தைக் கண்டு துரியோதனன் திடுக்கிட்டான் மனத்திற்கு இதமான சொற்களைக் கூறி அவனைச் சமாதானப்படுத்த எண்ணினான். துரியோதனன் உடனே மீண்டும் சல்லியனை அருகில் அழைத்துக் கூறலானான். “சல்லியா! நான் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு ஆத்திரப்படாதே. உன்னை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காக உனக்கு நான் இந்தக் கட்டளையை இடவில்லை. உன்னுடைய திறமையையும், தகுதியையும், உணர்ந்து கொண்டுதான் உனக்குப் பெருமை அளிக்கத் தக்க விதத்தில் இந்தக் கட்டளையை இடுகின்றேன், சர்வேசுவரனாகிய ஸ்ரீ கண்ணபிரான் தனக்கு அடங்கிய ஒரு சிறு வீரனான அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருக்க வில்லையா? வீரமும் ஆண்மையுமில்லாத உத்தரகுமாரனுக்கு மகாவீரனான அர்ச்சுனன் தேரோட்டியாக இருக்கவில்லையா? அதனாலெல்லாம் அவர்களுக்கு அவமானமா ஏற்பட்டு விட்டது? இந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் உன்னைத் தவிர வேறு யார் தேரோட்டியாக இருந்தாலும் கெளரவர்களுக்கு வெற்றி கிட்டாது என்ற பெரிய நம்பிக்கையோடு உன்னை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், மறுக்காமல் ஏற்றுக்கொள்.”
துரியோதனன் சோகம் ததும்பி நிற்கும் சொற்களால் உருக்கமாக வேண்டிக் கொண்ட வேண்டுகோள் சல்லியனுடைய சினத்தையும் மனத்தையும் ஒருங்கு நெகிழச் செய்தது. கர்ணனுக்குத் தேர் ஓட்டுவதற்குத் தான் முழு மனத்தோடு இணங்குவதாக அறிவித்தான் சல்லியன். துரியோதனருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. சல்லியனுடைய சம்மதம் கெளரவ சேனையில் யாவருக்குமே மகிழ்ச்சி அளித்தது.
தனக்குத் தேர் ஓட்டியாக இருப்பதற்குச் சல்லியன் இணங்கிய செய்தி தெரிந்ததும் கர்ணன் முன்பு இந்திரனுக்கு அளித்து இழந்த கவச குண்டலங்களைத் திரும்பப் பெற்றது போலக் களிப்புக் கொண்டான். கர்ணனுடைய தேரில் அழகிய உயர்ந்த சாதிக் குதிரைகளைப் பூட்டித் தயார் செய்து கொண்டபின் தேரோட்டியின் ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான் சல்லியன். படைகள் போருக்கு ஏற்ற முறையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. போரில் தனக்கு வெற்றிகளும், நலங்களும், விளையவேண்டுமென்று போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் பலதான தருமங்களைச் செய்தான். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எல்லோரும் கர்ணனிடமிருந்து தானம் பெற்றுத் திருப்தி கொண்டனர். போர் தொடங்குவதற்கு முன்னால் கர்ணன் சல்லியனுக்குச் சில வீர உரைகளைக் கூறினான். “சல்லியா! நீ தேரோட்டியாக அமைந்தது என்னுடைய பெரும் பாக்கியம். எனக்கு வெற்றி கிடைப்பதற்கு ஒரு சிறந்த நன்னிமித்தம். பகைமையை நாசம் செய்யக் கூடிய சக்தி வாய்ந்தவில் என்னிடம் இருக்கிறது. அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே சக்தி மிக்க நாகாஸ்திரத்தை என் வசம் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய யுத்தத்தில் எல்லா வெற்றிகளும் நம் பக்கமே நிகழ்வதற்குரிய வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கண்ணபிரானை விடச் சிறந்தவனாகிய நீயே எனக்குத் தேரோட்டியாக அமைந்திருக்கிறாய்!”
கர்ணன் சல்லியனிடம் பேசிய பேச்சில் தற்பெருமை நிறைந்திருந்தது. ஏற்கெனவே கர்ணனைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவனாகிய சல்லியனுக்கு இந்தத் தற்புகழ்ச்சி கொஞ்சமும் ஏற்றதாகப் படவில்லை “ஏன் இந்த வீண் பெருமை? வாய்ப் பேச்சில் இதைப் பேசி என்ன பயன்? அல்லது உன் பெருமைகளை நான் ஒருவன் தெரிந்து கொள்வதனால் என்ன ஆகப்போகிறது? நீ உண்மையிலேயே வீரனானால் வாய்ப் பேச்சை விட்டு விட்டு அர்ச்சுனனோடு போர் செய்யும்போது உன் ஆண்மையைக் காண்பிக்க வேண்டும். வெறும் வாய் பேச்சுப் பேசிப் பயன் இல்லை. உன் வீரம் எத்தகையது? அர்ச்சுனனுடைய வீரம் எத்தகையது? இருவருடைய வீரத்தின் தராதரத்தையும் நான் நன்கு அறிவேன். நீங்கள் இருவரும் செய்யப் போகிற போரின் முடிவு தெரிந்த பிறகு உங்களில் யார் வீரர் என்பது தானாகவே தெரிந்து போகும்!’ - சல்லியனுடைய பேச்சு கர்ணனை மறைமுகமாகக் குத்திக் காட்டி அவமானப்படுத்தியது.
கர்ணன் வெகுண்டெழுந்தான். சல்லியனை அந்த விநாடியில் அங்கேயே கழுத்தை நெரித்துக் கொன்று விடத் துடித்தன அவன் கரங்கள். “சல்லியா! இந்த நட்ட நடுப் போர்க்களத்தில் இத்தனை வீரர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் இடையே வேண்டுமென்றே என்னை நீ அவமானப்படுத்தி விட்டாய். உன் தகுதியை மீறி நீ பேசலாமா? சம்மதமானால் தேரை ஓட்டு! இல்லாவிட்டால் தேர்த்தட்டிலிருந்து கீழே இறங்கி உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ! என்னுடைய தகுதியைப் பற்றிப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?”
சல்லியனின் விழிகள் சிவந்தன. புருவங்கள் வளைந்து ஆத்திரம் கோடிட்டது. தேர்த்தட்டிலிருந்து கீழே குதித்து அவன் தன் இடையிலிருந்த வாளை உருவினான். கர்ணனுக்கு முன்னால் அவனை எதிர்த்துச் சல்லியனின் வாள் வேகமாச் சுழன்றது. “அடே! ஊர் பேர் தெரியாத கர்ணா! உனக்கு நான் எதற்காகத் தேரோட்ட வேண்டும்? நீ எலியை ஒத்தவன், இழிந்தவன். பூனை எங்கேயாவது எலிக்குப் பணிந்து நடக்குமா? உன்னால் முடியுமானால் என் வாளுக்குப் பதில் கூறு.” சல்லியனுடைய சொற்களால் சினங்கொண்ட கர்ணனும் தேரிலிருந்து கீழே குதித்து வாளை உருவி விட்டான், சல்லியனுக்கும், கர்ணனுக்கும் பயங்கரமான வாட்போர் நடக்கத் தொடங்கிற்று. தாங்கள் இருவரும் ஒரு தரப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற ஒற்றுமையுணர்வையும் மறந்து பகைவர்களெல்லோரும் கைகொட்டிச் சிரித்து இகழும் படியாக இவர்கள் வாட்போர் வளர்ந்தது. தூரத்திலிருந்த துரியோதனன் இந்த விபரீத நிகழ்ச்சியைப் பார்த்து விட்டான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் ஓடோடி வந்து கர்ணனுக்கும் சல்லியனுக்கும் நடுவே நுழைந்து வாள்களின் சுழற்சியை நிறுத்தினான்.
“கர்ணா! சல்லியா! ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளைப் போல நீங்கள் இப்படிக் கேவலமாக நடந்து கொள்ளலாமா? உங்களுடைய இந்த உட்பகையைப் பகைவர்களுக்கு முன்னால் எல்லோரும் காணும் படியாக வெளிப்படுத்தலாமா? முதலில் சொந்தப் பகைகளை மறந்து விட்டுக் கடமைகளைச் செய்யுங்கள்.” என்று பலவாறு சமாதான வார்த்தைகளைக் கூறி இருவரையும் போர் நீங்கி மீண்டும் ஒன்றுபடச் செய்தான்.
கர்ணனும் சல்லியனும் அப்போதைக்குத் தங்கள் பகைமையை மறைத்துக் கொண்டு கடமையில் முனைந்தனர். அவர்கள் மனத்திலுள்ள பகையுணர்ச்சியை அறவே மாற்றி விட வேண்டுமென்று கருதிய துரியோதனன் மேலும் சில அறிவுரைகளை அவர்களுக்குக் கூறினான்.
“மகா மாயவனாகிய கண்ணனுடைய கருத்துக்கு இணங்கி விதுரன் என் கண்முன்பே வில்லை ஒடித்தெறிந்துவிட்டுத் தீர்த்த யாத்திரை போய் விட்டான். முதலில் எனக்குப் படையுதவி செய்வதாக வாக்களித்த பலராமனும் கடைசியில் மனம் மாறி விதுரனோடு சேர்ந்து கொண்டு தீர்த்த யாத்திரைக்குச் சென்றுவிட்டான். பாட்டனாராகிய வீட்டுமர் அதியற்புதமான முறையில் போர் செய்துவிட்டு மரணப்படுக்கையை அடைந்துள்ளார். விற்கலையில் வல்லவராகிய துரோணர் போரிலே வீர சொர்க்கம் அடைந்து விட்டார். முருகப்பெருமான் அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்தருளினான். அதுபோல் நீங்களும் என்னைக் காக்க வேண்டும். கர்ணா! சல்லியன் மேல் இருக்கும் விரோதத்தை இந்தக் கணத்தோடு உன் மனத்திலிருந்து அகற்றிவிடும். அவன் பாண்டவர்களுக்கு உறவினனாயினும் இப்போரில் நமக்கு உதவி செய்கிறவன். என் மேல் பேரன்பு கொண்டவன். விற்போரில் வல்லாளன். தன்னிகரில்லாத போர்வன்மை கொண்டவன். என்னுடைய வேண்டுகோளுக்காகவே உனக்குக் கீழ்ப்படிந்து உன்னுடைய தேரோட்டியாக அமைந்துள்ளான். நல்ல சுபாவமுள்ள இவனோடு பகைத்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடாதே. இருவரும் ஒற்றுமையாகப் போரில் ஈடுபடுங்கள். பகைவர்களை வெற்றி கொள்வதில் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுங்கள்.”
துரியோதனனுடைய சொற்கள் கர்ணன் சல்லியன் இருவர் மனத்திலுமிருந்த குரோதத்தைப் போக்கின. இருவரும் வாட்போரை நிறுத்தினர். பகைமை தற்காலிகமாக மறைந்துவிட்டது. இருவரும் பழையபடி தேரில் ஏறிக் கொண்டனர். அந்தச் சமயத்தில் பாண்டவர் பக்கமிருந்து துட்டத்துய்ம்மன் படைகளோடு போருக்குப் புறப்பட்டு வந்தான். சோமக வம்சத்தைச் சேர்ந்த தலைமை சான்ற பெருவீரர்கள் பலரும் துட்டத்துய்ம்மனோடு சேர்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பெரிய படை கர்ணனுடைய தேர் நின்று கொண்டிருந்த இடத்தை யடைந்ததும் சோனாமாரியாக மழை பெய்வதுபோல் அம்புகளை எய்தது. சல்லியன் சாமர்த்தியமாகத் தேரை முன் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். கர்ணனும் தன்னுடைய படைகளுடன் துட்டத்துய்ம்மன் கோஷ்டியரை எதிர்த்துப் போர் புரிந்தான். விரைவில் போர் உச்சநிலையை அடைந்தது. வீரர் பலர் இரு தரப்பிலும் அம்புகள் பட்டு ஆற்ற முடியாமல் இறந்தனர். திடீரென்று கர்ணனும் அவனுடைய படைகளும் விரைவாக முன்னேறினர். துட்டத்துய்ம்மனை மிகக் கடுமையாகத் தாக்கினான் கர்ணன். அந்தத் தாக்குதலைப் பொறுத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் தன்னுடைய தேரை வந்த வழியே திருப்பிச் செலுத்திக் கொண்டு தோற்று ஓடினான் துட்டத்துய்ம்மன்.
தங்களுடைய படைத் தளபதியாகிய துட்டத்துய்ம்மனைக் கர்ணன் தோற்று ஓடச் செய்வதைப் பார்த்தான் தருமன். உடனே அவன் வீமனை அழைத்து “நீ போய்க் கர்ணனை எதிர்த்துப் போர் செய்து அவன் கொட்டத்தை ஒடுக்கு” என்று ஏவினான். அதை நிறைவேற்றக் கருதி ஆத்திரத்தோடு கர்ணனிருந்த திசையில் பாய்ந்து சென்றான் வீமன். அவனுக்கும் கர்ணனுக்கும் பயங்கரமான வில்யுத்தம் ஆரம்பமாயிற்று. இருவர் உடம்புகளும் அம்புக் குவியலின் இடையே மறைந்து விடுமோ என்று அஞ்சும்படியாக விற்களிலிருந்து அம்புகள் பாய்ந்து கிளம்பின. வீமனுக்கு அப்போது கர்ணன் மேலே இருந்த கோபத்தில் அவனைக் கொன்று தீர்த்துவிடலாம் போலத் தோன்றியது. ஆனால் அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டான். காரணம் என்ன? தன் கையால் கர்ணனைக் கொல்லப் போவதாய்ச் சபதம் செய்திருந்தான் அர்ச்சுனன். ‘அவனுடைய அந்தச் சபதம் வீண் போய்விடக்கூடாதே, - என்று தான் கர்ணனைக் கொல்லுவதற்குத் தன் மனத்தில் எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டதோடு மட்டுமின்றிக் கர்ணனுடன் போரிடுவதையே நிறுத்திவிட்டு வேறோர் பக்கமாக விரைந்து சென்று விட்டான். போர்க்களத்தின் வேறு பல பகுதிகளில் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சாத்தகிக்கும் - விடசேனனுக்கும், சோழனுக்கும் - மகதனுக்கும், அர்ச்சுனனுக்கும் - அசுவத்தாமனுக்கும் போர்கள் நடந்தன. சாத்தகியோடு போர் புரிந்த விடசேனன் தேரையும் ஆயுதங்களையும் பறிகொடுக்க நேர்ந்தது. சோழனோடு போர் புரிந்த மகதமன்னன் மாண்டு வீழ்ந்தான். அவனுடைய மரணத்தால் பயமடைந்த கெளரவசேனை அரண்டு பின்வாங்கி ஓடியது. அர்ச்சுனனுக்குச் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய இயலாத அசுவத்தாமன் முதுகு காட்டி ஓடிவிட்டான். இப்படி துரியோதனனைச் சேர்ந்தவர்கள் ளெல்லோரும் பயந்தும் ஆற்றாமலும் தோற்று ஓடிக் கொண்டிருந்தபோது அவன் தம்பிமார்களில் ஒருவனாகிய கதக்கண்ணன் முன் பக்கத்தில் பாய்ந்து ஓடி வந்தான். தன்னந்தனியாய் ஓடி வந்த அந்த இளைஞனை நகுலன், தன் வில்லிலிருந்து அனுப்பிய அம்புகளால் மிரண்டு போய்த் திரும்பி ஓடச் செய்து விட்டான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தோற்று ஓடி வந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு கர்ணன் தருமனை எதிர்க்க முன் வந்தான். கர்ணன் கோஷ்டியாரும், தருமன் கோஷ்டியாரும் எதிரெதிரே சந்தித்துப் போர் தொடங்கினார்கள். கூற்றுவனுக்கு நல்விருந்தாக இருபுறத்திலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். கர்ணன் எய்த சில கணைகள் தருமனுடைய உடலில் தைத்தன. கர்ணனுடைய இரண்டு தோள் பட்டைகளிலும் அம்புகள் நிறையப் பாய்ந்து குருதி வடிந்து கொண்டிருந்தது. எங்கே இரண்டு தோள்களும் அறுந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சத்தக்க அபாயகரமான நிலையில் இருந்தான் கர்ணன். போதாத குறைக்கு அவனுடைய வில்லை வேறு முறித்துக் கீழே தள்ளிவிட்டான் தருமன். இந்தத் தீய அறிகுறிகளெல்லாம் கர்ணனுடைய அந்திம காலம் நெருங்குவதைக் குறித்தன.