மகாபாரதம்-அறத்தின் குரல்/3. ஐவர் அவதாரம்
பாண்டுவின் திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டுமென்பதற்காக வீட்டுமன் அனுப்பிய தூதுவர்கள் குந்தி போச நாட்டை அடைந்து சூர மன்னனைச் சந்தித்தனர். குந்தியைப் பாண்டுவுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்குச் சூரன் உவகையோடு சம்மதித்தான். ஒருப்பட்டு இசைந்த கருத்தைத் துருவாசர் சென்று வீட்டுமனுக்குக் கூறினர். வீட்டுமன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஒரு குறிப்பிட்ட மங்கல நாளில் குந்திக்கும் பாண்டுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணமான புதிதில் மண இன்பத்தை இயற்கைச் சூழலில் நுகருவதற்காக இமயமலைச் சாரலிலுள்ள அழகிய பூம்பொழில்களில் பொழில் விளையாடக் கருதி மனைவியோடு பாண்டு புறப்பட்டான். இதற்குள் மந்திர ராசன் என்ற வேறொர் அரசனும் ‘மாத்திரி’ என்ற பெயரையுடைய தன் மகளையும் பாண்டுவுக்குத் தானாகவே விரும்பி மணமுடித்துக் கொடுத்திருந்தான். இரு மனைவியருடனும் இமயமலைச் சாரலுக்குச் சென்ற பாண்டு பொழுது போக்குக்காக வேட்டையாடவும் விரும்பினான். தங்கியிருந்த பொழிலில் குந்தியையும் மாத்திரியையும் விட்டுவிட்டு வில்லும் கணைப்புட்டிலும் சுமந்து வேட்டைக்குப் புறப்பட்டான் பாண்டு, வேட்டையாடுவதற்கு அருமையான பலவகை விலங்குகளை எளிமையாக வேட்டையாடி வீழ்த்தியபடியே மேலும் மேலும் பெருகுகின்ற வேட்டை விருப்பத்தோடு மலைச் சாரல் வழியே வில்லேந்திய கையனாய்ச் சென்று கொண்டிருந்தான் அவன். இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, தொலைவில் ஓர் ஆண்மானும், பெண்மானும் தம்முட்டி ஒன்று பட்டு இன்ப நிலையில் ஆழ்ந்திருக்கும் காட்சி அவன் கண்களுக்குத் தென்பட்டது. பாண்டுவின் போதாத வேளைதானோ என்னவோ, அந்த நிலையிலிருந்த அவ்விரண்டு மான் களையும் அவன் கண்டது? அறிவற்ற ஓர் ஆசை அவன் மனத்தில் எழுந்தது. அந்த மான்களை வேட்டையாடினால் என்ன என்ற ஆசை தான் அது! அவைகள் இருக்கின்ற ‘மயங்கிய நிலை’ குறி தப்பாமல் அம்பு செலுத்துவதற்கு ஏற்றபடி அமைந்திருந்தது. பாண்டுவின் மனத்தில் கருணை சிறிதளவும் எழவில்லை ! ஆசையே விஞ்சி நின்றது. கை வில்லை வளைத்தது! ‘அம்பு’ ஒன்று விர்ர்ர்ரென்று குறி வைத்த திசை நோக்கிப் பறந்த அடுத்த விநாடியில் அந்த ஆண் மான் அலறிக் கொண்டே கீழே சாய்ந்தது. சாய்ந்த மறுகணம் அங்கே மான் இல்லை. மார்பிலே குருதி ஒழுக ஒரு முனிவர் எழுந்து நின்றார். பாண்டு ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டே திகைத்துப் போய் நின்றான். ‘தான் அம்பு எய்த மான் எங்கே? இந்த முனிவர் எப்படி வந்தார்? தம் அம்பு இவர் மார்பில் எப்படித் தைத்தது?’ என்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன.
அவனுடைய திகைப்பையும் வியப்பையும் போக்கு பவர் போல் ‘இந்தமன்’ என்னும் பெயரையுடைய அந்த முனிவர் ஆத்திரத்துடனே மொழியலானார்; ‘நானும் என் மனைவியும் ஆண்மானும் பெண்மானுமாக உருமாறி இன்பத்தில் ஈடுபட்டிருக்கும் போது என் மேல் அம்பு எய்து கொன்றாய் நீ! இந்தத் தகாத காரியத்தைச் செய்ததற்காக, ‘நீயும் உன் மனைவியை இன்பம் நாடி எப்போது தீண்டுகிறாயோ, அப்போதே இறந்து போவாய் இது என் சாபம்’ என்று இதைக் கூறியவுடன் கீழே விழுந்து இறந்து போனார் இந்தமன் முனிவர். பெண்மானாக உருமாறியிருந்த அவர் மனைவியும் சிறிது நேரத்திற்கெல்லாம் கணவன் பிரிவைப் பொறுக்காமல் காட்டுத் தீயிலே பாய்ந்து உயிர் துறந்தாள். சாபம் பெற்ற பின்பு தான் பாண்டுவுக்குத் தன் குற்றமும் அதில் நிறைந்திருந்த தீமையும் புலப்பட்டன. அவன் தன்னை உணர்ந்தான். ‘செய்த பாவம் எவ்வளவு பெரியது?’ என்பதையும் உணர்ந்தான். இந்தப் பாவத்திற்கு எப்படியாவது பரிகாரம் தேடியாகவேண்டும் என்று அவனுடைய மனச்சான்று அவனை வதைத்தது. தனக்கு மெய்யுணர்வைத் தோற்றுவித்தது அந்தச் சாபமேயாகையால் அது ஏற்பட்டதும் ஒரு வகையிலே நல்லதாகவே தோன்றியது அவனுக்கு. தன் பாவத்துக்குப் பரிகாரமாக, அரசாட்சி, அந்தஸ்து, படைத்தலைமைப் பதவி முதலிய எல்லாவற்றையும் துறந்து மனைவியரோடு வனத்திலேயே தங்கித் தவத்துறையில் ஈடுபடக் கருதினான். அதன்படியே செய்தான்!
படையை அடக்கி நடத்திய பாண்டு இப்போது தவத்திற்காகப் புலன்களை அடக்கி நடத்தப் பழகினான். அரசாட்சியின் ஒரு பிரிவில் தலைமை பூண்டிருந்தவன் இப்போது ஞானத்திற்குத் தலைமை பூண்டவனாயினன். அவனுடைய தவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெருகிச் சிறந்து வந்தது. இடையே, ‘மக்கட்பேறில்லாமையினாலே தன் வாழ்வு பயனற்றதாகி விடுமோ?’ - என்ற கவலையும் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்டது! திருதராட்டிரனுடைய மனைவியாகிய காந்தாரி வியாசருடைய அருளால் நூறு புதல்வர்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு கருக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அப்போது கேள்விப்பட்டிருந்ததும் இந்த ஏக்கத்தை மேலும் வளர்ப்பதற்குக் காரணமாயிற்று. குந்தியை அழைத்துக் காந்தாரி கருவுற்றிருக்கும் செய்தியையும் தன் ஏக்கத்தையும் கூறுத் தொடங்கினான் பாண்டு.
“ஆருயிர்க் காதலி! இந்த உலகில் அறிவறிந்த மக்களைப் பெறுவதும், அங்ஙனம் பெற்ற மக்களின் மழலை மொழிகளைக் கேட்பதும் போலச் சிறந்த இன்பம் வேறு எவற்றிலுமே இல்லை. ஆனால் என் தீவினையால் நானடைந்திருக்கின்ற சாபத்தை நினைத்துப் பார்த்தால் இந்தப் பிறவியில் மக்களைப் பெற்று மழலை கேட்கும் இன்பத்தை நான் அடையாமலே இறந்து விடுவேனோ? - என்று எனக்குத் தோன்றுகிறது. மக்கள் இன்பத்தை நான் அடைவதற்கு உன்னால் ஏதேனும் உதவி செய்ய இயலுமா குந்தி?” உள்ளம் உருகும் சொற்களால் குந்தியிடம் வேண்டிக் கொண்டான் பாண்டு. கணவனின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட போது தனக்குத் துர்வாசர் கற்பித்துச் சென்ற மந்திரத்தின் நினைவு ஏற்பட்டது குந்திக்கு. தான் சூரியனைச் சேர்ந்தது, கர்ணனைப் பெற்று ஆற்றிலே விட்டது, ஆகிய இரண்டு செய்திகளை மட்டும் கூறாமல், துருவாசருக்குப் பணிவிடை செய்தது தொடங்கி அவரிடம் வரம் பெற்றது வரை எல்லாச் செய்திகளையும் பாண்டுவிடம் விவரமாகக் கூறிவிட்டாள் அவள். குந்தி கூறியதைக் கேட்ட பாண்டு இழந்த பொருளை இரு மடங்காகத் திரும்பப் பெற்றார் போல மனமுவந்து, “இதற்கு நான் மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்றேன் குந்தி, நீ விரும்புகின்ற தேவர்களை அழைத்து அவர்களுடன் கூடி எனக்கு மக்கட் செல்வத்தைக் கொடு! அது ஒன்றே எனக்கு வேண்டியது!” என்றான்.
குந்தி கணவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கித் தர்மராசனை மந்திரம் ஒலித்து அழைத்தாள். முன்பு முதன் முறை கதிரவன் தோன்றியது போல் இப்போது தருமன் அவள் முன்பு தோன்றினான். அவளுக்கு அருள் செய்த பின் தருமன் விடை பெற்றுச் சென்றான். உரிய காலத்தில் குந்தி கருக்கொண்டாள். கருமுற்றிப் பிறந்த புதல்வனே தருமபுத்திரன். ‘உலகையெல்லாம் தன் நேரிய ஆட்சி வன்மையினால் செங்கோல் நெறியிலே செலுத்தி ஆளவல்ல மன்னர் மன்னன் இவன்!’ - என்று கண்டவுடன் சொல்லும்படி விளங்கினான் இளந் தருமபுத்திரன். அவனிடம் அவ்வளவு தேஜஸ் நிறைந்து விளங்கியது! ‘குந்திக்கு இத்தகைய புதல்வன் பிறந்திருக்கிறான்’ என்ற செய்தியைக் கருக்கொண்டிருந்த காந்தாரி கேட்டாள். அளவுக்கதிகமான பொறாமை பயங்கரமானது. காரணமின்றிப் பிறரைப் பற்றி மனங் கொதித்தால் தனக்கே துன்பத்தை அடைய வேண்டியதுதான்.
இடைவிடாத பொறாமையினால் காந்தாரியின் கருச்சி சிதைந்து வெளிப்பட்டது. இதைக் கண்டு என்ன செய்வதென்றறியாமல் பலரும் அஞ்சியிருக்கும்போது வியாசர் வந்தார். சிதைந்த கருவை நூறு தாழிகளில் தனித்தனியே பிரித்து அடைத்துவிட்டு, ‘இவைகள் தாமாகவே முற்றிக் குழந்தைகளாக வெளிப்பட்டால் ஒழிய இடையே எவரும் தீண்டலாகாது! - என்று கூறிச் சென்றார் அவர். அதன்படியே தாழிகளைத் தீண்டாமல் தொலைவிலிருந்து குழந்தைகள் வெளிப்படும் நாளை அடைக்காக்கும் பாம்பைப் போல் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள் காந்தாரி. இங்கே அத்தின புரியில் இவ்வாறிருக்கும்போது தபோ வனத்தில் பாண்டு மீண்டும் குந்தியை அழைத்து மக்கட் பேற்றுக்கு வற்புறுத்தினான். குந்தி துர்வாசர் கற்பித்த மந்திரத்தைக் கூறி வாயு தேவனை அழைத்தாள். வாயுதேவனின் நல்வருளால் வலிமையிலும் ஆற்றலிலும் நிகரற்றவனாகிய வீமன் தோன்றினான். குந்தியும் பாண்டுவும் மனமுவந்தனர்.
வீமன் பிறந்த சில நாட்களில் அத்தினபுரியில் வியாசர் வைத்துவிட்டுச் சென்ற கருப்பத் தாழிகளுள் முதல் தாழியிலிருந்து குழந்தை வெளிப்பட்டது. இந்தக் குழந்தையே துரியோதனன். இதன் பிறந்த நாட் போதில் நல்லவர்கள் கண்டு மனம் வருந்தும்படியான பல தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பின்பு சில நாட்களில் தொடர்ந்து வரிசையாகத் தொண்ணூற்றொன்பது தாழிகளிலிருந்தும் துச்சாதனன் முதலியவர்கள் பிறந்தார்கள். இறுதியாகத் ‘துச்சனை’ என்னும் பெண்ணொருத்தியும் பிறந்தாள். புதல்வர்கள் நூற்றுவராலும் பெண் ஒருத்தியாலும் திருதராட்டிரனும் காந்தாரியும் இறும்பூதடைந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மூன்றாவதாக மீண்டும் பாண்டு விரும்பியபடியே குந்தி இந்திரனை அழைத்து அவனருளால் அருச்சுனனைப் பெற்றாள். பிறந்த காலத்தில் பங்குனன் என்னும் பெயர் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. தன் மனைவியரில் குந்திக்கு மக்கள் மூவர் பிறந்திருந்தும் மாத்திரி மக்களின்றி வருந்துவதைக் கண்டு பாண்டு, “குந்தி! உனக்கு துர்வாசர் கற்பித்த மந்திரத்தை நீ மாத்திரிக்கும் கற்பித்து அவளும் மக்கட்பேறு அடையுமாறு செய்!” என்று அன்புடன் குந்தியை வேண்டிக் கொண்டான்.
கணவனுடைய வேண்டுகோள்படி துர்வாசர் தனக்களித்த மந்திரத்தை மாத்திரிக்குக் கூறினாள் குந்தி. அந்த மந்திரத்தைக் கொண்டு கதிரவன் புதல்வராகிய அசுவினி தேவர்கள் இருவரையும் தனித்தனியே இருமுறை அழைத்து அவர்களருளால் நகுல, சகாதேவர்களைப் பெற்றாள் மாத்திரி. புதல்வர்கள் ஐவரை அடைந்த பாண்டு தான் செய்து வந்து தவத்திற்கே பயனைப் பெற்றவன் போல உள்ளம் உவந்தான். பாண்டு, குந்தி, மாத்திரி ஆகியவர்கள் மனத்தில் மகிழ்ச்சி வளர்ந்ததைப் போலவே பாண்டவர்கள் ஐவரும் வளருங் குருத்து எனக் கொழித்து வளர்ந்து வந்தனர். தக்க பருவத்தில் முனிவர்களைக் கொண்டு குடுமி களைமங்கலமும் முந்நூல் மங்கலமும் செய்வித்துப் புதல்வர்களைக் கலைப் பயிற்சி மேற்கொள்வதற்கேற்றவர்களாக்கினான். தபோவனத்து வாழ்க்கையின் இனிய சூழ்நிலையில் முனிவர்களாகிய ஆசிரியர்கள் கற்பித்த பலவகைக் கலைகளிலும் தேர்ந்து திகழ்ந்தனர் பாண்டவர்.