மகாபாரதம்-அறத்தின் குரல்/3. போர் நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. போர் நிகழ்ச்சிகள்

உத்தரன், சிவேதன் என்று முறையே தன் மக்கள் இருவரையும் முதல் நாள் போரிலேயே இழந்த விராட மன்னனை கண்ணன், தருமன் முதலியவர்கள் ஆறுதல் கூறி மனச் சமாதானம் அடையச் செய்தனர். மறுநாள் அதிகாலையிலேயே அதாவது புலரிப் போதிலேயே இரண்டாம் நாள் போருக்கான அறிகுறிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி விட்டன. கண்ணன் செய்த ஏற்பாட்டின் படி துட்டத் துய்ம்மன் பாண்டவர்கள் சார்பில் படைத் தலைவனாக்கப்பட்டான். இருபுறத்துப் படைகளும் கலந்து ஒன்றொடொன்று மோதிப் போரைத் தொடங்கின. ஒரு காலத்தில் தன் தந்தைக்கு நண்பராக இருந்து பின் பகை கொண்ட துரோணரை நேருக்குநேர் நின்று எதிர்த்தான் துட்டத் துய்ம்மன். துரோணர் விற்கலைக்கென்றே பிறந்த வீரபுருஷராகையால் அவரைத் துட்டத்துய்ம்மனால் முறியடிக்க முடியவில்லை. துரோணருடைய சரமாரியான அம்பு மழையினால் துட்டத்துய்ம்மன் தான் அலுத்துப் போனான். துட்டத்துய்ம்மனுக்கு உதவியாக வீமனும் வந்து சேர்ந்து கொண்டான். இருவருமாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்தார்கள். வீமன் துட்டத்துய்ம்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்டு எதிர்ப்பக்கத்தில் கலிங்க வேந்தன் வீமனை எதிர்ப்பதற்காக வில்லை வளைத்துக் கொண்டு வந்து விட்டான். கலிங்க வேந்தனின் படையில் யானைகளின் தொகை சற்றே அதிகம். மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் தான் வீமனுக்கு அதிக மகிழ்ச்சி. கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான் வீமன். பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை கலிங்கனுக்கு. தன்னுடைய யானைகளுடன் மட்டும் அன்றிப் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்த பின் ‘தோல்வியடைந்தேன், தோல்வியடைந்தேன்’ என்று கூறிக் கொண்டோடுபவன் போல் புறமுதுகிட்டோடினான் கலிங்க வேந்தன்.

கலிங்கன் ஓடியபின் வீட்டுமன் வீமனை எதிர்த்தான். பாட்டனாராகிய வீட்டுமனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. முன்பு சிவேதன் செய்தது போலவே வீட்டுமனின் வில்லை ஒடித்தும் தேரைச் சிதைத்தும் அவனுக்குத் தொல்லை கொடுத்தான் வீமன். ஒடிந்து விழுந்த வீட்டுமனின் தேர்ச் சட்டம் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதனாலேயே அவனுடைய தேரோட்டியை அடித்து வீழ்த்தி விட்டான். முன்பு வீமனுக்குத் தோற்று ஓடிப்போன கலிங்க வேந்தனும் அவனைச் சேர்ந்தவர்களும் வீட்டுமனுக்கு உதவ ஓடி வந்தார்கள். ஓடிப்போன கலிங்கன் திரும்பி வருதலைக் கண்டு வீட்டுமனோடு போரிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான் வீமன். கலிங்கர் படையை நிர்மூலமாக்கிய பின்பே மீண்டும் அவன் வீட்டுமனிடம் வந்தான். இப்போது அபிமன்னனும் அங்கு வந்து சேர்ந்து கொள்ளவே இருவருமாகச் சேர்ந்து வீட்டுமனை எதிர்த்தார்கள். வீட்டுமனுக்குப் பக்கபலமாக நிற்கும் பொருட்டுப் பல அரசர்களை ஒன்று திரட்டி அனுப்பினான் துரியோதனன். அவனால் அனுப்பப்பட்ட அரசர்கள் வந்து சேர்ந்தவுடன் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு வீமனையும் அபிமன்னனையும் வளைத்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்த்த அர்ச்சுனன் வீமனுக்கும், அபிமன்னனுக்கும் உதவுவதற்காக வில்லோடு வந்தான். அர்ச்சுனனின் திடீர் வரவு போரின் போக்கை எதிர்பாராத விதமாக மாற்றி அமைத்துவிட்டது. வீட்டுமனும் அவன் படைகளும் நிலை தடுமாறிச் சிதறிப் போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். வீட்டுமனும் பிற கெளரவர்களும் தோற்று ஓடிய அளவில் இரண்டாம் நாள் போர் முடிந்து விட்டது. ‘இரண்டாம் நாள் போரில் அதிகமான ஆள் நஷ்டமும் தோல்வியும் தன் பக்கம்தான்’ என்று உணர்ந்தபோது துரியோதனனுக்கு வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தை மறுநாள் வெற்றியால் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணித் திருப்தியுற்றான் அவன். மூன்றாவது நாள் காலையில் போர் தொடங்கும்போது இருசாராருமே தத்தம் படைகளைப் புதுமாதிரி வியூகங்களில் அணிவகுத்து நிறுத்தினார்கள். கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் கெளரவ சேனைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. துட்டத்துய்ம்மன் கண்ணன் கூறிய ஆலோசனைப்படி பாண்டவ சேனையைப் பிறைச் சந்திரன் வடிவில் அணிவகுப்பு முடிந்ததும் முதல் நாள் விடுபட்ட இடத்திலிருந்து போர் தொடங்கியது. அர்ச்சுனனையும் அபிமன்னனையும் எதிர்த்து வீட்டுமன், துரோணர் முதலியவர்கள் வளைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். வீமனைத் துரியோதனனும் அவன் தம்பிமார்கள் தொண்ணூற்றொன்பதின்மரும் எதிர்த்துப் போரிட்டனர். மாமனான சகுனியும் துரியோதனன் பக்கம் நின்று கொண்டிருந்தான்.

இரு திறத்தாருக்கும் போர் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது. வீமன் மகனான கடோற்கசன் அவனுக்குத் துணை செய்து உதவ வந்திருந்தான். அர்த்த சந்திரவடிவமான நுனியை உடைய அம்புகளைத் தொடுத்துப் போர் செய்தான் கடோற்கசன். அடுத்தடுத்து துரியோதனனுடைய மார்புக் கவசத்தைத் துளைத்த இந்த அம்புகள் இறுதியில் கவசத்தையே பிளந்து மார்பை ஊடுருவிவிட்டன. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் அங்கேயே களத்தில் மயக்கமுற்று விழுந்து விட்டான். துரியோதனனின் தேரோட்டியை அபிமன்னன் ஏவிய அம்பு கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தன. உடனே துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி வீட்டுமனுக்குத் தெரிவிக்கப் பட்டது. துரியோதனன் உடலைத் தனியே ஒரு தேரின் மேல் எடுத்துக் கொண்டு ஒதுக்குபுறமான ஓர் இடத்திற்குப் போய்த் தக்க சிகிச்சைகளைச் செய்து பிரக்ஞை உண்டாக்கினான். தெளிவான நிலையை அடைந்ததும் அவனைப் பத்திரமான இடத்தில் போய் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மீண்டும் வீமனோடு போரைத் தொடர்ந்தான். உண்மையான ஆத்திரத்தோடு வீட்டுமன் மனங்குமுறிச் செய்த இந்த விற்போரை அர்ச்சுனன், வீமன் முதலியவர்கள் எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். வீட்டுமனோடு எதிர்த்துப் போர் செய்ய வேண்டும் என்பதையே மறந்து அர்ச்சுனன் அவன் போர் செய்யும் அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கண்டு கொண்டான்.

“உன் பாட்டனார் பெருஞ்சினத்தோடு வில்லை வளைத்துப் போர் செய்கிறார். நீ அவரை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்! இதன் விளைவாக யாருக்கு அழிவு வரும் என்பதை நீ யோசித்தாயா?” என்று சினம் பொங்கும் குரலில் கூறிக் கொண்டே அர்ச்சுனனின் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் கண்ணன். எப்படியும் தானே வீட்டுமனை எதிர்த்து அழிக்காமல் விடுவதில்லை என்பது கண்ணனின் நோக்கம், கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு வீட்டுமனின் தேரில் தாவிப் பாய்ந்து ஏறிவிட்டான் அவன். கண்ணனின் எண்ணமும் சுலபமாக நிறைவேறிவிடும் போலிருந்தது. வீட்டுமனைத் தேர்த்தட்டின் மேல் கீழே தள்ளிக் கழுத்தில் சக்கராயுதத்தால் அறுத்துத் துளைக்கத் தொடங்கி விட்டான் கண்ணன். அப்போது அர்ச்சுனன் ஓடிவந்து கண்ணன் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.

“எல்லாம் தெரிந்த மாயவன் நீ! உனக்கே இத்தகைய கோபம் வரலாமா? இந்த அகில உலகத்திலும் உனக்கு நிகரான எதிரி இல்லையே! வீட்டுமனையா உன் எதிரியாகக் கருதி இப்படித் துன்புறுத்துவது? இது உனக்குத்தகுமா? வேண்டாம். இம்முதியவனை விட்டுவிடு” -என்று அர்ச்சுனன் கெஞ்சினான். வீட்டுமனும் கண்ணன் திருவடிகளை நோக்கித் தன்கைகளை குவித்தான். பலவாறு கண்ணனைப் புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினான். நீண்ட நேர வேண்டுகோளுக்குப் பிறகு கண்ணனுக்கு வீட்டுமன் மேல் இரக்கம் உண்டாயிற்று! சக்கராயுதத்தை அவன் கழுத்திலிருந்து எடுத்தான். வீட்டுமன் விடுதலை பெற்றான். உயிர் பிழைத்தான்.

“கண்ணா! இனி நீ தேரில் ஏறிக்கொண்டு செலுத்து! என் கடமையை நான் செய்கிறேன். என்னை எதிர்ப்பவர்களை இன்று நடுப்பகலுக்குள் நமனுலகுக்கு அனுப்புகிறேன்” -என்று அர்ச்சுனன் கண்ணனை அழைத்தான். கண்ணன் தேரில் ஏறிச் சாரத்தியத்தை மேற்கொண்டு செலுத்தினான். அர்ச்சுனன் தேர்த்தட்டில் ஏறி நின்று கடுமையான போரை மேற்கொண்டான். அன்று செய்த அந்தப் போரைப் போல் அவ்வளவு ஆத்திரத்துடனே அர்ச்சுனன் அதற்கு முன்பு போரே செய்ததில்லை எதிர் தரப்புப் படையினரில் வீட்டுமன் தவிர அர்ச்சுனனை எதிர்த்த வேறெவரும் உயிருடன் பிழைக்க முடியவில்லை. வருணன், வாயு, அக்கினி, இந்திரன் முதலிய திசைப் பாலகர்களை வழிபடு தெய்வங்களாகக் கொண்ட படை அணிகள் பல அழிந்து விட்டன. துரியோதனாதியர் படையைச் சேர்ந்த யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் அநேகம் அழிந்து விட்டன. துரியோதனன் மாடி வீட்டுக்கு இடையில் காவலின் நடுவே இருந்தான். அவன் தரப்பைச் சேர்ந்த மற்ற அரசர்கள் அர்ச்சுனனை எதிர்த்து நிற்க முடியாமல் மூலைக்கு மூலை சிதறி ஓடிவிட்டார்கள். சுளத்தில் அர்ச்சுனனுக்கு எதிரே வீட்டுமன் ஒருவனைத் தவிர வேறு ஆள் இல்லை. இரண்டு பொழுது சாய்ந்தபின் வேறு வழியில்லாமையால் அர்ச்சுனன் போரை நிறுத்தினான். மூன்றாம் நாட் போர் இவ்வளவில் முடிந்தது. பழையபடி கருட வியூகத்திலும் அர்த்த சந்திர வியூகத்திலுமாகப் படைகள் நிறுத்தப்பட்டபின் இரு சாராரும் நான்காம் நாள் போரைத் தொடங்கினர்.

யானைப் படையினர் வீமனைத் தனியே வளைத்துக் கொண்டு தாக்கலாயினர். வீமனும் விடவில்லை. யானைகளையும் அவற்றின் மேல் வீற்றிருந்தவர்களையும் அடித்துப் புடைத்து அழித்தான். ஒருமுறை வீமனின் தாக்குதலைத் தாங்க முடியாமல் பின்வாங்கி ஓடிய யானைப் படையைத் துரியோதனன் தலைமை தாங்கி முன்னுக்கு இழுத்து வந்தான். இதனால் துரியோதனனுக்கும் வீமனுக்கும் தனித்தனியே நேருக்குநேர் போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அம்புமாரி பெய்து கொண்டனர். ஈசல் புற்று நுனியில் மொய்த்துக் கொண்டிருப்பது போல் துரியோதனன் மார்பில் நூற்றுக்கணக்கான அம்புகள் மொய்த்துப் பாய்ந்திருந்தன, துரியோதனன் வீமன் மேற் செலுத்திய அம்புகளில் பெரும் பாலானவற்றை அவன் முறித்து வீழ்த்திவிட்டாலும் சில அம்புகள் அவன் உடலிலும் தைக்கத்தான் தைத்திருந்தன. நேரம் ஆக ஆகப் போரில் வீமனுக்கு வெறிபிடித்து விட்டது. வீமன் துணையின்றி நலிகின்றானோ என்றெண்ணிப் பல வீரர்கள் அவன் பக்கம் துணையாக உதவ வந்தார்கள். ஆனால் வீமனோ தனியாகவே துரியோதனனின் வில்லை முறித்தான். தேர்க்குதிரைகளைக் கொன்றான். அம்புகளால் அவன் உடலைச் சல்லடைக் கால்களாகுமாறு துளைத்தான். துரியோதனன் திக்கு முக்காடிப் போனான். அவன் நிலைக்கு இரங்கிச் சகுனி, சல்லியன் முதலியவர்கள் உதவிக்கு ஓடிவந்தார்கள். துரியோதனனுடைய தம்பிமார்கள் சிலரும் உதவிக்கு வந்தார்கள். வீமன் போரை நிறுத்தவில்லை. தன்னுடைய வீரமிக்க போரினால் துரியோதனனின் தம்பியர்களில் ஐந்துபேர்களை விண்ணுலகுக்கு விருந்தாளியாக்கினான். துரியோதனன் உண்மையிலேயே தளர்ந்து விட்டான். வீமனும், அபிமன்னனும் அர்ச்சுனனும் நாலா திசைகளிலிருந்தும் தாக்கிக் கெளரவப் படைகளை சின்னாபின்னமாக்கினர். சூறாவளிக்கு நடுவே பஞ்சுபோல் திணறியது அவன் படை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் துரியோதனாதியர் படைகளைப் ‘பகதத்தன்’ என்பவன் சிதறாமல் ஒன்று சேர்த்துக் கொண்டு மீண்டும் பாண்டவசேனையோடு போருக்கு வந்து விட்டான். இவன் உறுதியும் துணிவும் மிக்கவன். எப்படியும் பாண்டவர் படைகளை ஒரு ‘கலக்குக் கலக்குவது’ என்று வந்திருந்தான். யானைப் படையிலிருந்த யானைகளைத் திரட்டிக் கொண்டு, தானும் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு, திமுதிமுவென்று பாண்டவ சைனியத்தின் அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டான். இதனால் பாண்டவர்படை அழிந்து ஓடத் தலைப்பட்டுவிட்டது. இதைக் கண்ட கடோற்கசன் தன் வசமிருந்த சில யானைகளையே பல்லாயிரக்கணக்கான யானைகளாகத் தோன்றும்படி மாயம் செய்து கொண்டு பகதத்தனை மோதி எரித்தான். கடோற்கசனைப் போலவே பகதத்தனும் அசுரனே. ஆனால் கடோற்கசனிடமிருந்த அந்தச் சாமர்த்தியம் பகதத்தனிடம் இல்லை. சீக்கிரமே பகதத்தனுக்குத் தோல்வியும் கடோற்கசனுக்கு வெற்றியுமாக அன்றையப்போர் முடிந்தது. நான்காம் நாள் போரில் தன் புதல்வர்களில் ஓர் ஐந்து பேர்கள் வீமன் கையால் இறந்து போனார்கள் என்பதை அறிந்து அரண்மனையிலிருந்த காந்தாரி சோகம் தாங்காது அழுது புலம்பினாள்.

“பாண்டவர்கள் ஐவரும் இறப்பதற்குப் பதிலாக நீங்கள் நூற்றுவரில் ஐவர் இறந்து போனீர்களே! உங்கள் நல்வாழ்வு கண்டு பொறாமல் அந்தப் பாண்டவர்கள் எண்ணிய பொறாமை எண்ணங்கள் இன்று பலித்து விட்டனவே? இதுவோ உங்கள் விதி?” இவ்வாறு காந்தாரி வெகு நேரம் தன் கதறலை நிறுத்தவே இல்லை. இராம இராவண யுத்தத்தில் இருதரப்படைகளும் நின்றாற்போல் நின்று அணிவகுத்துப் பேரொலிகளுடனும் பேராவாரங்களுடனும், ஐந்தாம் நாள் காலை போர் தொடங்கியது. தேர்ப்பாகனான கண்ணன் அவசர அவசரமாகக் களத்தில் புகுந்து தேரைச் செலுத்த அர்ச்சுனன் வில்லும் கையுமாகப் போருக்குத் தேரில் ஏறினான். அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்ய வேண்டுமென்பது கண்ணனின் ஆசை. அதற்காக வீட்டுமனுடைய தேருக்கு முன்னால் அர்ச்சனுடைய தேரைப் போருக்கேற்ற முறையில் கொண்டு போய் நிறுத்தினான். இதற்குள் கலிங்கவேந்தனைச் சேர்ந்த படை மக்கள் அர்ச்சுனனை நடுவில் மடக்கிக் கொண்டார்கள். வீட்டுமனை அவன் தாக்குவதற்கு முன்பே அவனை மடக்கிக் கொள்ள வேண்டும் என்பதே கலிங்கர்களின் நோக்கம். அர்ச்சுனன் அவர்களைத் தன் அம்புகளால் துளைத்தான். கலிங்கர்கள் பலர் மடிந்தனர். இதைக் கண்டு வீட்டுமன் தானாகவே அர்ச்சுனனோடு போருக்கு வந்தான். வீட்டுமனுக்கும் அர்ச்சுனனுக்கும் நேரடியாகவே போர் தொடங்கி விட்டது. சரியாக இதே நேரத்தில் போர்க்களத்தில் மற்றோர் பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த வீமனை எதிரி அரசர்கள் பலர்  சேர்ந்து வளைத்துக் கொண்டனர். துச்சாதனன் முதலிய துரியோதனன் தம்பிமார்கள் சேர்ந்து வீமனை மடக்க முயன்றனர். வீமன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளும், கதையினால் அடித்த அடிகளும், தம்பிமார்களை இரத்தம் சிந்த வைத்தன. வீமனுக்குப் பயந்து இரத்தம் சிந்திக் கொண்டே ஓடினார்கள் அவர்கள். அதைக் கண்டு துரியோதனனே வில்லை வளைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான்.

“என் தம்பியர்களை ஓட ஓட விரட்டிய இந்த வீமனை இன்றைக்குக் கொல்லாமல் விடுவதில்லை” என்று கூவிக் கொண்டே களத்தில் ஆரவாரம் செய்தான் அவன். ஆரவாரத்தோடு ஆரவாரமாகப் பத்து அம்புகளை வீமன் மார்பில் தொடர்ந்து செலுத்தி விட்டான். வீமனின் மார்புக் கவசம் அறுந்து துளைபட்டு விட்டது. தன்மார்புக் கவசம் அறுந்தவுடன் வீமனுக்கும் துரியோதனன் மேல் ஆத்திர வெறிமூண்டு விட்டது. வேகமாக ஒரு கணையை எடுத்துத் துரியோதனன் மார்பைக் குறிவைத்துத் தொடுத்து விட்டான். அந்தக் கணை துரியோதனன் மார்பில் ஆழப்புதைந்து தைத்துவிட்டது. துரியோதனனுக்கு வலி வேதனை பொறுக்க முடியவில்லை. அப்படியே கிறங்கிப் போய் ஒன்றும் தோன்றாமல் நின்று விட்டான் அவன். அப்போது கெளரவர் படையைச் சேர்ந்த வேறோர் அரசனாகிய பூரிசிரவா என்பவன் துரியோதனனுக்குப் பதிலாக வீமனோடு போர் செய்ய முன் வந்தான். வந்த வேகத்தில் குறி தவறாமல் வீமன் மேல் இரண்டு அம்புகளையும் எய்து விட்டான். பூரிசிரவாவும், வீமனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீமனுக்கு உதவியாகச் சாத்தகி வந்தான். வாளைக் கொண்டும் வில்லைக் கொண்டும் மாறி மாறிப் போர் செய்தார்கள். பெரிய அளவில் களம் முழுவதும் வியாபகமாக நடந்து கொண்டிருந்தது போர். போரின் இந்த வியாபகத்தினால் அன்றைய தினத்தில் மிகுந்த அழிவும் மிகுந்த சேதமும் ஏற்பட்டிருந்தன.