மகாபாரதம்-அறத்தின் குரல்/4. அறத்தின் வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

4. அறத்தின் வாழ்வு

தலைகளை வெட்டிக்கொண்டு வந்ததற்காகத் துரியோதனன் தன்னைப் பாராட்டி நன்றி கூறுவான் என்று எதிர்பார்த்த அசுவத்தாமனுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. துரியோதனன் தன் செயலையும் தன்னையும் இவ்வாறு பழித்துக் கூறி வெறுப்பான் என்று அசுவத்தாமன் எதிர்பார்க்கவே இல்லை. தான் வெட்டியது பாண்டவர் தலைகளைத்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன். இப்போது இளம் பாண்டவர் தலைகளை வெட்டி விட்டோம் என்று உணர்ந்தபோது அவனுக்கே சதை ஆடி நடுங்கியது, துரியோதனனுக்கு முன்னால் குற்றவாளியைப்போல் வெட்கித் தலைகுனிந்து நின்றான் அவன்.

‘சீ! துரோகி! இன்னும் ஏன் என் முன் நிற்கிறாய்? ஓடு! ஓடிப்போய் உன் பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடு. தொலை, தொலைந்து போ. எங்காவது போய்த் தவம் செய்’ என்று கத்தினான் துரியோதனன்.

அசுவத்தாமன் அங்கிருந்து புறப்பட்டான். பாசறைக்கு வந்து கிருபாச்சாரியனையும், கிருதவன்மனையும், அழைத்துக் கொண்டு வியாசர் வசித்து வந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். அப்படிச் செல்லும்போது அவன் மனம் ஒரேயடியாகக் குழம்பியிருந்தது.

அசுவத்தாமன் சென்றபின் மரணப்படுக்கையிலிருந்த துரியோதனன் சஞ்சயனைக் கூப்பிட்டு அனுப்பினான். சஞ்சயன் சமந்த பஞ்சகத்துப் பூஞ்சோலைக்கு வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனன் உணர்வு ஒடுங்கிப் போன மெல்லிய குரலில் சஞ்சயனிடம் கூறினான்:- “சஞ்சயா! இதோ இன்னும் சில விநாடிகளில் நான் இறந்து விடுவேன். இறப்பதைப்பற்றி எனக்குப் பயமில்லை. என்னுடைய சாவுக்காக மற்றவர்களும் கவலைப்படக் கூடாது. என்னைப்போல் வாழ்நாளெல்லாம் தீமையே வடிவாக வாழ்ந்த எவருக்கும் இப்படிப்பட்ட கேவலமான சாவுதான் கிடைக்கும். உயிர் மெல்லப் பிரிந்து கொண்டிருக்கும் இந்த அந்திம நேரத்தில்தான் நான் செய்த தீமைகளை எண்ணிக் கண்ணீர் விடுகிறேன். நான் எப்படி வாழ்ந்தேன்?’ என்பதும், ‘எப்படி வாழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்?’ என்பதைப் பற்றியும் இப்போது தான் சிந்திக்கிறேன். இனிமேல் சிந்தித்து என்ன பயன்? வாழப் போகிறவன் அல்லவா சிந்திக்க வேண்டும்? செத்துக் கொண்டிருப்பவன் சிந்தித்துக் கொண்டே செத்தால் என்ன? சும்மா செத்தால் என்ன? நீ எனக்கு ஓர் உதவி செய். அத்தினாபுரத்துக்குச் சென்று என் பெற்றோரிடம் என்னுடைய மரணச் செய்தியைச் சொல். நான் இறந்துவிட்டேனென்பதற்காக அவர்கள் அதிகமாகத் துயரப்படவேண்டாம்! நீ அவர்களுக்கு ஆறுதல் கூறு. “உங்கள் மகன் துரியோதனன் நிமிர்ந்த தலையுடன் வணங்காமுடி மன்னனாக அரசாண்டான். ஆனால் இப்போது குனிந்த தலையுடன் குற்றங்களை எண்ணி வினைகளின் சூட்டில் வெதும்பிச் சமந்தபஞ்சகத்துப் பூஞ்சோலையில் ஒரு குற்றவாளியாகச் செத்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்களிடம் சொல்” - இதற்குமேல் துரியோதனனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண் விழிகள் பிதுங்கின. அவன் இரு கைகளையும் தூக்கிச் சஞ்சயனுக்கு நமஸ்காரம் செய்தான். சஞ்சயனுக்குக் கண்களில் நீர் துளித்தது. துரியோதனனுடைய மரணத்தைக் கண்களால் காண விருப்பமில்லாதவனாய் அங்கிருந்து புறப்பட்டு அத்தினாபுரிக்குச் சென்றான் அவன். துரியோதனனுடைய பெற்றோரான திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் மரணச் செய்தியைத் தெரிவித்து ஆறுதல் கூறினான். துரியோதனன் அந்திம காலத்தில் நெஞ்சுருகிக் கூறிய செய்திகளையும் அவர்களிடம் எடுத்துரைத்தான்.

இஃது இவ்வாறிருக்கத் துரியோதனனால் வெறுக்கப்பட்டு வியாசர் ஆசிரமத்தை அடைந்த அசுவத்தாமன் முதலிய மூவரும் வியாச முனிவரை வணங்கி நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவரிடம் கூறினர். எல்லாவற்றையும் கேட்ட அவர் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார். “அசுவத்தாமா! நீ செய்த பாசறைப் படுகொலைகள் மகா பாதகம் நிறைந்த செயல்தான். ஆனாலும் நீ என்ன செய்வாய்? உன்னுடைய விதி உன்னைப் பழிகாரனாக்கிவிட்டது. அந்தப் பழியைப் போக்கிக் கொள்வதற்குத் தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீயும் கிருபாச்சாரியனும் இந்த ஆசிரமத்தில் தங்கி உங்கள் பழி, பாவம் நீங்க வேண்டுமென்று இறைவனை நோக்கி நீண்ட நாள் பெருந்தவம் செய்யுங்கள். கிருதவன்மா அவனுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்” என்று யோசனை கூறினார். அந்த யோசனைப்படியே அசுவத்தாமனும், கிருபாச்சாரியனும், தவம் செய்யத் தொடங்கினர். கிருதவன்மன் வியாசரை வணங்கிவிட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான். தவத்தில் மன அமைதியையும் திருப்தியையும் கண்டு சாந்தம் பெற்றான் அசுவத்தாமன். பதினெட்டாம் நாள் போர் முடிந்து பத்தொன்பதாம் நாள் காலை பொழுது புலர்ந்தபோது காட்டில் தங்கியிருந்த பாண்டவர்களும் கண்ணனும் பாசறைக்குப் புறப்பட்டனர். இரவில் பாசறைக்குள் திருட்டுத்தனமாய்ப் புகுந்து அசுவத்தாமன் செய்த அட்டூழியங்களைப் பற்றி அப்போது அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

பாசறை வாயிலை அடைந்தபோது திரெளபதி அங்கே இறந்து கிடந்த முண்டங்களைக் கட்டி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் பாண்டவர்கள் திடுக்கிட்டனர். அருகில் நெருங்கிப் பார்த்தபோதுதான் அந்த முண்டங்கள் தங்கள் ஐந்து பேருடைய புதல்வர்களின் இறந்த உடல்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனே பாண்டவர்கள் திரெளபதியோடு சேர்ந்து தாங்களும் கதறியழுதனர். பாசறைக்குள் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகள் எப்போது நடந்தன? கொலை செய்தது யார்? என்பதை அறியாமல் மயங்கினர்.

“கண்ணா! உன்னால் மோசம் போனோம். பாசறையைத் தனியே விட்டுவிட்டுக் காட்டில் வசிக்க வேண்டுமென்று நீ சொல்லியபடி கேட்டதனால்தானே இவ்வளவு வினைகளும் வந்தன.” என்று தருமன் கண்ணனை நோக்கிக் கதறினான்; அழுதான். கண்ணன் சாந்தம் நிறைந்த முகபாவத்தோடு மெல்லிய குரலில் பதில் கூறினான்: “தருமா நாம் காட்டில் தங்காவிட்டால் நம்மையும் இப்படிக் கொலை செய்திருப்பார்கள். நேற்று நள்ளிரவில் அசுவத்தாமன் இங்கு புகுந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறான்! இவர்கள் தூங்கும் போதே இவர்களைக் கொலை செய்திருக்கிறான் அந்தப் பாவி,”

“ஓகோ! அந்த அசுவத்தாமன் இப்போது எங்கே இருக்கிறான்? முதல் வேலையாக அவன் தலையை அறுத்துக் கீழே தள்ளிப் பழிக்குப் பழி வாங்குகிறேன்” என்று வாளை உருவிக் கொண்டு ஆவேசமாகக் கிளம்பிவிட்டான் வீமன். அர்ச்சுனன் முதலியவர்களும் வாளை உருவிக்கொண்டு அசுவத்தாமனைத் தேடிச் செல்லத் தயாராகிவிட்டனர்.

“பொறுங்கள்! இனி நீங்கள் அசுவத்தாமனைத் தேடிக் கொலை செய்வதால் ஒரு பயனுமில்லை. இப்போது நீங்கள் கொலை செய்வதற்கேற்ற நிலையிலும் அவன் இல்லை. அவன் வியாசருடைய ஆசிரமத்தில் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடித் தவம் செய்து கொண்டிருக்கிறான்’ என்று கூறி அவர்களைத் தடுத்தான் கண்ணன்.

முதல் நாள் மாலை சமந்தபஞ்சகத்தில் துரியோதனனைச் சந்தித்து அசுவத்தாமன் வாக்குறுதி அளித்தது முதல் பாசறையில் பூதத்திடம் அடிபட்டது, பின்பு இறைவனை எண்ணித் தவம் செய்தது, தவத்தால் அஸ்திரம் பெற்றுப் படுகொலை செய்தது, இளம் பாண்டவர்களைப் பாண்டவர்களாக எண்ணிக் கொண்டு தலைகளை அறுத்துப் போய்த் துரியோதனனிடம் எறிந்தது. துரியோதனன் அசுவத்தாமனை வெறுத்து விரட்டியதுவரை, எல்லா நிகழ்ச்சிகளையும் கண்ணன் பாண்டவர்களுக்குக் கூறினான்.

“நாம் மட்டும் நேற்றிரவு இந்தப் பாசறையில் இருந்திருந்தால் கொலை செய்ய வந்த அசுவத்தாமனைச் சும்மா விட்டிருப்போமா?” என்று கண்ணனை எதிர்த்துக் கேட்டான் வீமன்.

“முடியாது வீமா! நேற்றிரவு இங்கு யார் இருந்திருந் தாலும் அசுவத்தாமனை எதிர்த்திருக்கமுடியாது. அவன் தவம் செய்து பெற்ற அஸ்திரத்தின் பெயர் ‘பாண்டியம்’ என்பது! அதைக் கொண்டு அவன் எவ்வளவு பெரிய பலசாலியையும் கொன்றுவிடமுடியும். அவ்வளவு ஏன்? பாண்டவர்களாகிய நீங்கள் ஐந்து பேரும் பாசறையில் இருந்திருந்தால் கூட உங்கள் தலைகளை அசுவத்தாமன் அறுத்துக் கொண்டு போயிருப்பான். ஆகவே இனிமேல் பேசிப் பயனில்லை. அசுவத்தாமனைப் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். துரியோதனனோ இறந்துவிட்டான். மகத்தான இந்தப் பதினெட்டு நாள் யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அரசாளும் உரிமை உங்களைச் சேர்ந்துவிட்டது. நடந்ததை மறந்து விடுங்கள். இறந்தவர்களைப் பற்றிய கவலைகளை இந்த விநாடியோடு நினைவிலிருந்து அகற்றி விடுங்கள். மேலே நடக்கவேண்டிய நல்ல காரியங்களைப் பற்றிக் கவனியுங்கள்...” என்று நீண்ட அறிவுரை கூறினான் கண்ணன்.

“கண்ணா! நீ மனித நிலையைக் கடந்தவன். பாச பந்தங்களில் சிக்கிக் கொண்டிருப்பது போல் காட்டிக் கொண்டே அவைகளில் சிக்காமல் ஒதுங்கி வாழ்பவன். உன்னால் துன்பங்களைச் சீக்கிரமே மறந்துவிடமுடியும். உற்றார், உறவினர், அண்ணன், தம்பி, பெற்ற மக்கள், யார் இறந்தாலும் அதை மறந்துவிடத் தக்க உறுதியான நெஞ்சு உனக்கு இருக்கின்றது. நாங்கள் சாதாரண மனிதர்கள் தானே? எங்களால் துன்பத்தை அவ்வளவு விரையில் மறந்துவிட முடியுமா? அதுவும் சொந்தப் புதல்வர்களின் உயிரற்ற சரீரங்களைக் கண் முன் கண்ட பின்பும் அழாமலோ, வருந்தாமலோ இருக்க முடியுமா?” என்று மனமுருகிக் கேட்டான் தருமன்.

அதைக் கேட்டதும் கண்ணன் கலகல வென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே தருமனை நோக்கிக் கூறினான்:- “தருமா! உலகின் நிலையாமையைப் பற்றிய மெய்யுணர்வு இல்லாமையினால் நீ இப்படிப் பேசுகிறாய், இந்த மாபெரும் போரில் இன்றுவரை எத்தனை கோடி உயிர்கள் இறந்திருக்கின்றன? எத்தனை அரசர்கள்? எத்தனை அரச குமாரர்கள்? எத்தனை வீர தீரர்கள் மாண்டிருக்கின்றனர்? - அவர்களுக்கெல்லாம் வருத்தப்படாத நீ இந்த ஐந்து புதல்வர்களுக்காக மட்டும் நெஞ்சு குலைந்து அழுவது ஏன்? உன் மக்கள் என்ற பாசம் காரணமாகத்தானே? அப்படியானால் அந்தப் பாசம் எவ்வளவு குறுகிய உருவத்தை உடையதாக இருக்கிறதென்று நீ சிந்தித்தாயா? அகிலாண்ட கோடி ஜீவராசிகளுக்கும் நாயகனான கடவுள் இந்தப் போரில் இறந்த கோடிக் கணக்கான உயிர்களுக்காக எவ்வளவு வருத்தமடைவான்? இவ்வளவிற்கும் காரண பூதனான என்னைப் பார்! வெறும் தேரோட்டியான கண்ணனாக எண்ணிக் கொண்டு பாராதே. உலகமாகிய தேரை ஓட்டும் சர்வேசுவரன் உனக்கு முன் நின்று கொண்டிருக்கிறான் என்று எண்ணிப்பார். இத்தனை கோடி உயிர்களும் மாண்ட இந்தப் போர்க்களத்தை உயிர்களின் நாயகனான நான் எப்படிப் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்? உலகத்தில் ஜனங்கள் பெருகி விட்டார்கள். ஜனங்கள் பெருகியதோடு தீமைகளும் பெருகிவிட்டன. பூமியின் சுமை அளவுக்கு மீறிக் கனத்துவிட்டது. அந்தச் சுமையை மேலும் மேலும் பெருகவிட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும் தெரியுமா? பிரளயம் ஏற்பட்டுவிடும்! இந்த மாபெரும் குருக்ஷேத்திரப் போர் ஏற்பட்டதற்குக் காரணம் உனக்கும் துரியோதனனுக்கும் நடுவில் இருந்த பகை மட்டுமல்ல. உங்கள் இருவருக்கும் நடுவிலிருந்த பகையைக் கருவியாகக் கொண்டு ஒரு போரை உண்டாக்கி அந்தப் போரின் மூலம் பூமியின் பாரத்தைக் குறைக்க வேண்டுமென்ற என் ஆசையை நான் நிறைவேற்றிக் கொண்டேன். நடந்தது அவ்வளவுதான். இதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளைச் செய்துவிட்டு அத்தினாபுரத்திற்குப் புறப்படுங்கள். அரசாட்சியைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை இனிமேல் நீங்கள் கவனிக்கவேண்டும்” - என்று கூறித் தன் நீண்ட உரையை முடித்தான் கண்ணன். இந்த நீண்ட சொல் மழையினால் தருமன் முதலியவர்களுடைய உள்ளத்திலிருந்த களங்கம் நீங்கிவிட்டது. மனத்தில் தெளிவும் அமைதியும் தோன்றின. இறந்தவர்களுக்காகச் செய்ய வேண்டிய கருமங்களை அமைதியாகச் செய்து முடித்தனர். மக்களை எண்ணி அழுது கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த திரெளபதியைக் கண்ணன் தேற்றினான். “அம்மா! திரெளபதி! சபதப்படி துரியோதனன் தொடையிலிருந்து ஒழுகி குருதியைப் பூசி உன் கூந்தலை முடித்துவிட்டாய். இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அழுவதனால் இறந்தவர்கள் திரும்பி விடமாட்டார்கள். மனத்தைத் தேற்றிக் கொண்டு அமைதி அடைய வேண்டும்” - என்றான் கண்ணன். இதன் பின் எல்லோரும் அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

திருதராட்டிரன் சஞ்சயன் கூறிய ஆறுதல் உரைகளால் மனந்தேறியிருந்தானாயினும் தன் மகனைக் கொன்ற வீமனை எப்படியும் பழிக்குப்பழி வாங்கிவிட வேண்டும் என்ற ஆத்திரம் அவன் உள்ளத்தில் நிறைந்திருந்தது. துரியோதனன் ஒருவனை மட்டுமின்றித் தன் புதல்வர்கள் நூறு பேரையும் வீமன் ஒருவனே கொன்றிருந்தான் என்று அறிந்து வீமன் மேல் கொதிப்படைந்திருந்தது திருதராட்டிரன் உள்ளம்.

கண்ணனும் பாண்டவர்களும் அத்தினாபுரத்து அரண்மனை வாயிலை அடைந்து தாங்கள் வந்திருக்கும் செய்தியைத் துரியோதனனுடைய தந்தைக்குச் சொல்லியனுப்பினர்.

திருதராட்டிரன் அவர்களை மிகுந்த அன்போடும், பாசத்தோடும் வரவேற்பவன் போல் நடித்தான். ‘ஆகா பாண்டவர்களே நீங்கள் புண்ணிய சீலர்கள் போரில் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள். முன்னோர்கள் வீற்றிருந்து ஆண்ட இந்தச் சிம்மாசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மகனை இழந்த துயரம் தாங்காமல் வருந்திக் கொண்டிருக்கும் நான் நீங்கள் வந்ததும் இராஜ்யத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டுத் தவம் செய்வதற்காகக் காட்டிற்குப் போகலாமென்றிருக்கிறேன். உங்களைச் சந்தித்து வெகு நாட்களாயிற்றல்லவா? புதல்வர்களே! என் அருகில் வாருங்கள். உங்களை மார்புரத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது!” - என்று குழைந்த குரலில் வேண்டினான் அவன்.

இந்த வஞ்சக வேண்டுகோளின் அந்தரங்கத்தைக் கண்ணன் உடனே புரிந்து கொண்டான். “சரி! வீமனைத் தழுவிக் கொள்ளும்போது அப்படியே அவனை நொறுக்கிக் கொன்று விடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறான் இந்தக் குருட்டு மன்னன். வீமனை இவனிடம் அனுப்பக் கூடாது” - என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் அவன். தருமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராகத் திருதராட்டிரனிடம் அருகிற் சென்று அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு திரும்பி வந்தனர். “எங்கே வீமன்? அவன் மட்டும் ஏன் வரவில்லை ?” என்று கத்தினான் திருதராட்டிரன். கண்ணன் ஒரு தந்திரம் செய்தான். ஏறக்குறைய வீமனின் உயரம், பருமன், ஆகிருதி எல்லாப் பொருத்தமும் உடையதாக அங்கிருந்த இரும்புத் தகட்டினாலான சிலை ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்த் திருதராட்டிரனுக்கு அருகில் நிறுத்தினான். “இதோ வீமன் வந்து நிற்கிறான். தழுவிக் கொள்ளுங்கள்” - என்று கூறினான். உடனே திருதராட்டிரமன்னன் குபீரென்று பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு அந்தச் சிலையின் மேல் பாய்ந்து அதைத் தழுவிக் கொண்டு அழுத்தி நெரித்தான். இரும்புச் சிலை தூள் தூளாக உடைந்து விழுந்தது. வீமன் மேல் அவனுக்கிருந்த கோபம் இந்த நிகழ்ச்சியால் புலனாயிற்று. கண்ணனுடைய தந்திரமான ஏற்பாட்டால் வீமன் பிழைத்தான் ‘இரும்புச் சிலையை நிறுத்தித் தன்னை ஏமாற்றி விட்டார்கள்’ - என்று உணர்ந்தபோது திருதராட்டிரன் சபையில் அத்தனை பேருக்கும் நடுவில் வெட்கித் தலை குனிந்தான். சபையிலிருந்தவர்களெல்லோரும் அவன் வஞ்சத்தைக் கண்முன் கண்டு அருவருத்து வெறுப்புக் கொண்டனர். திருதராட்டிரன் அவமானம் தாங்க முடியாமல் தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். பின் அங்கு திரும்பி வரவேயில்லை.

சில நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல நாள். உலகெலாம் அன்பும் அறமும் இன்பமும் பொங்கி வழியும் நாள் அது. அத்தினாபுரத்தின் சிம்மாசனத்தில் தர்மம் ஏறி ஆட்சி செலுத்தியது. பாண்டவர்களின் தமையனும் அறத்தின் நாயகனுமான தருமன் அந்தச் சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து முடிசூட்டிக் கொண்டான். திரெளபதி பட்ட மகிஷியாக அருகில் அமர்ந்திருந்தாள். வீரமும், அழகும், தூய்மையும் வாய்மையும் ஆகிய நாற்குணங்களும் நான்கு சகோதரர்களாக மாறி அவன் அருகே ஏவலுக்குக் காத்து நிற்பது போல் வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நான்கு தம்பிமார்களும் அரியணையருகே வணக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

அந்த நல்ல நாளில் வானத்து முகில்கள் தண்ணீரை வாரிச் சொரிந்தன. கற்பகத் தருவின் கிளைகள் புஷ்பங்களை உதிர்த்தனர். தேவர்களின் கைகள் மலர்மாரி பொழிந்தன. தர்மதேவதையின் வதனத்தில் மந்தகாசப் புன்னகை நெளிந்தது. திசைப்பாலகர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். எங்கெங்கு கண்டாலும் இன்பம் பொங்கிப் பாய்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அன்பும் அருளும் அந்தப் பிரவாகத்தில் சங்கமமாயின. இதற்கெல்லாம் காரணமென்ன?

பதினான்கு வருஷங்களாகக் காட்டில் மறைந்திருந்த தர்மம் மீண்டும் அரியணை ஏறியதே; அதுதான் காரணம்! ஆம், அதுவேதான் காரணம்.

முற்றிற்று