மகாபாரதம்-அறத்தின் குரல்/4. சங்கநாதம்

விக்கிமூலம் இலிருந்து

4. சங்கநாதம்

துச்சாதனனுக்கு இந்தக் கதி நேரிட்டதும் இதைக் கண்டு நடுங்கிப் போன அவனுடைய படைகள் போர்க் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தன. கெளரவர்களின் சேனாபதியாகிய கர்ணனால் கூட அந்தப் படைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வீமனுக்கு முன்னால் நிற்பதற்கே அஞ்சித் தறிகெட்டு ஓடியது படை துச்சாதனன் மார்பைப் பிளந்து வீமன் கொன்ற காட்சி யாவர் மனத்திலும் பயங்கரமும் கோரமும் நிறைந்த ஒரு குரூர நினைவாகப் பதிந்து போயிருந்தது.

துச்சாதனன் வீமனால் கொல்லப்பட்ட செய்திகண்ணன் தருமன் முதலியவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் வீமன் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். வீமன் வெறியினால் துச்சாதனனுடைய உடலை இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருந்தான்.

“திரெளபதியின் தலையை இழுத்த கைகள் இவையல்லவா? அவள் புடவையை இழுத்து அவமானப்படுத்த முயன்ற கைகளும் இவையல்லவா?” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கைகளை மிதித்துச் சிதைக்கத் தொடங்கினான். அளவு கடந்த வெறியால் துச்சாதனனுடைய இரத்தத்தை அள்ளிப் பருகுகிற அளவுக்குக்கூட வீமன் துணிந்து விட்டான். இரு கைகளாலும் பருகுவதற்காக அவன் இரத்தத்தை வாரி அள்ளியபோது நல்லவேளையாகக் கண்ணன் அந்த இடத்திற்கு வந்து அவனைத் தடுத்தான்.

“அந்தப் பாவியின் விஷ ரத்தத்தைப் பருகாதே, உடனே நிறுத்து” என்று கண்ணன் சப்தமிட்ட பின்பு தான் வீமனை அந்தச் செயலிலிருந்து நீக்குவதற்கு முடிந்தது. ‘சபதத்தை முடித்து விட்டேன். இனிமேல் கவலை இல்லை’ - என்று கூறிக் கொண்டே தருமனை வீமன் வணங்கினான். கண்ணனையும் வணங்கினான். இருவரும் அவனை வாழ்த்தினர். துச்சாதனனுட்படத் துரியோதனனுடைய தம்பியர்களில் மொத்தம் பத்துப்பேரை வீமன் கொன்று விட்டதை அறிந்த போது தருமனுக்கும் கண்ணனுக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால் துரியோதனாதியர்களின் தளபதியான ‘கர்ணன்’ என்ன செய்வதென்றே புரியாமல் திக்பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்து விட்டான். சொல்லி மாளாத கவலை அவனுக்கு ஏற்பட்டிருந்தது. வெந்த புண்ணில் வேல் நுழைப்பதைப்போல் இந்தச் சமயம் பார்த்துச் சல்லியன் வேறு அவனைக் குத்திக்காட்டினான், “என்ன கர்ணா! பாண்டவர்கள் வெற்றி முழக்கம் செய்கிறார்கள்! நீ பேயடித்தவன் போல் பேசாமல் திகைத்து உட்கார்ந்து விட்டாய். உனக்கு ஏதாவது அச்சம் வந்து விட்டதோ?” என்று சல்லியன் கூறிய சொற்கள் கர்ணனின் மனத்தில் சுருக்கென்று தைத்தன.

“துச்சாதனன் இறந்து விட்டானே என்று வருந்தியிருந்தேன். வேறு ஒன்றும் இல்லை” - என்று கர்ணன் சல்லியனுக்கு மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் போருக்குத் தயாரானான். சிதறி ஓடிய கெளரவப் படைகள் சிறிது சிறிதாக மீண்டும் ஒன்று சேர்ந்தன. வில் ஒலியும், வாள் ஒலியும் தேர்கள் ஓடும் ஒலியும் போர்களமெங்கும் மீண்டும் ஆரவாரம் கிளம்பியது. அமைதி, அனுதாபம், மரண பயம் திகைப்பு எல்லாம் சில விநாடிகள்தான். போர்க்களத்தில் எந்த உணர்ச்சிகளுமே சில விநாடிகளுக்கு மேல் நிலைக்க முடிவதில்லை. கர்ணனின் புதல்வனான, விட சேனனுக்கும் நகுலனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விடசேனன் நல்ல பலசாலி. நகுலனைத் தாக்கினான் நகுலன் மூர்ச்சை அடைந்ததைக் கண்ட அர்ச்சுனன்: “இந்த விடசேனன் முரடன்: இவனை அழித்தாலொழிய நம் பக்கத்துப் படைகளுக்கு அதிகம் அழிவு நேரிடும்” என்று எண்ணிக் கொண்டு விட சேனன் மேல் அம்புகளைச் செலுத்தி எதிர்த்தான். அர்ச்சுனன் விட்ட அம்பு ஒன்று விடசேன னுடைய தலையை அறுத்துக் கீழே தள்ளிவிட்டது. நட்ட நடுவில் களத்தின் இடையே திடீரென்று தலையறுந்து வந்து விழுந்ததைக் கண்ட படைகள் திடுக்கிட்டு மயங்கின. அவர்கள் ஓடிப் போய்க் கர்ணனிடம் முறையிட்டார்கள். கர்ணன், தலை கிடந்த இடத்தில் வந்து பார்த்தபோது அது தன்னுடைய மகன் தலையாக இருந்ததைக் கண்டு அலறிக் கண்ணீர் சிந்தினான்.

அந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் தேர்ப் பாகனாகிய சல்லியன் தன்னுடைய சொந்தப் பகையையும் மறந்து கர்ணனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினான். போர் மீண்டும் தொடங்கியது. தொலைவிலிருந்து போரில் கலந்து கொள்ளாமல் போர்க்களத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த அசுவத்தாமனுடைய மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. துச்சாதனன், விடசேனன் ஆகியோர் வரிசை வரிசையாக இறந்து வருவது மனத்தைக் கலக்கியது. ‘அளவற்ற உயிர்களைக் கொன்று குருதியை ஓடவிடும் இந்தப் பயங்கரமான போர் இன்னுமா நிகழ வேண்டும்? போரை நிறுத்திவிட்டுப் பாண்டவர்களும், கௌரவர்களும் சமாதானமாகப் போனால் என்ன?’ - என்று அசுவத்தாமன் தனக்குள் எண்ணினான். உடனே அவன் உள்ளத்தில் இன்னும் என்னென்ன எண்ணங்கள் உண்டாயினவோ, தெரியவில்லை. திடீரென்று துரியோதனனைச் சந்திப்பதற்காக அசுவத்தாமன் அவன் இருப்பிடம் சென்றான். அவன் துரியோதனனைக் கண்டதும் சாந்தம் தவழும் குரலில் கூறலானான்:- “துரியோதனா! இந்தப் போரினால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்த்தாயா? எத்தனை, எத்தனை உயிர்கள் மடிந்தன்! உறவினரும் நண்பரும் துன்பமுறும்படி இனியும் இந்தப் போரை எதற்காகச் செய்யவேண்டும்? உன் பக்கமும் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பாண்டவர் பக்கமும் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை நடந்ததை மறந்து விடுங்கள். இனி நடக்கப் போவதை நினையுங்கள். போரை நிறுத்திவிட்டுச் சமாதானமடையுங்கள், பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களையும் அரசாட்சியையும் நியாயமாக அவர்களுக்கு அளித்து விடலாம். குடிகெடுக்கும் யுத்தமும் கோபமும் வேண்டாம். பார்க்கப்போனால் பாண்டவர்களும் வேற்றவர்கள் இல்லையே? உன் சகோதரர்கள் அல்லவா?” - என்று அசுவத்தாமன் உருக்கமாகக் கூறிய அறிவுரையை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. “அசுவத்தாமா! அரசாட்சியிலும் நாடு நகரங்களை வென்று ஆள்வதிலும் கூட எனக்கு இன்பமில்லை. ஆனால் நாம் வீரர்கள். மரணத்துக்கும் போர் அழிவிற்கும் பயந்து கொண்டு யுத்தத்தை நிறுத்துவது நம்முடைய ஆண்மைக்கு அழகு இல்லை. ஆகையினால் என்ன நேரிடினும் போரை நிறுத்தவே மாட்டேன்” என்று கர்ணன் மகன் இறந்த செய்தி தெரிந்ததும் துரியோதனன் தானே போர்க்களத்திற்கு நேரில் சென்று கர்ணனைக் கண்டு தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டான். அசுவத்தாமனுடைய முயற்சி தோற்றுவிட்டது.

“என் மகனைக் கொன்ற அர்ச்சுனனைப் பழிக்குப் பழி வாங்கினாலொழிய என் மனம் ஆறாது” என்று சபதம் செய்து விட்டு அர்ச்சுனனோடு போரில் ஈடுபட்டான் கர்ணன். அசுவத்தாமன் போர் செய்யும் ஆசையின்றி ஒரு புறமாக ஒதுங்கியிருந்தான். கர்ணன் பக்கம் போய் நின்று கொண்டு அவனுக்கு உதவியாகப் போர் செய்யுமாறு துரியோதனன் வற்புறுத்தினான். அசுவத்தாமனும் அதை மறுக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக எழுந்திருந்து சென்றான். அசுவத்தாமன், கர்ணன் இருவருமாகச் சேர்ந்து கொண்டு அர்ச்சுனனைத் தாக்கினர். வில்யுத்தம் என்று சொல்லப் படுகின்ற கலையின் சாமர்த்தியங்களை எல்லாம் வெளிக் காட்டினார்கள் கர்ணனும் அர்ச்சுனனும். வில்லைக் கொண்டு குறி தவறாமல் அம்புகளைச் செலுத்துவதற்கு வசதியாகச் சல்லியன், கண்ணன், இருவரும் முறையே அவரவர் தேர்களைச் செலுத்தினர். போர் வெகுநேரம் நிகழ்ந்தது. கர்ணனும் அர்ச்சுனனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போரிட்டனர்.

சர்வக்ஞனான சிவபெருமான் இருவேறு மனிதர்களாக அவதாரம் எடுத்து இரண்டு மேருமலைகளை இரண்டு விற்களாக வளைத்து யுத்தம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது கர்ணனும் அர்ச்சுனனும் போர் செய்த காட்சி.

போரில் திசைக்கோணங்கள் நடுநடுங்கும்படி இடையிடையே இருவரும் சங்கநாதம் செய்து கொண்டனர். அர்ச்சுனனிடம் இருந்த சங்கு ‘தேவதத்தம்’ - என்னும் பெயரை உடையது. அதை அதன் முழக்கியவுடன் அதற்குப் போட்டியாகக் கர்ணனும் ‘பராபரம்’ என்னும் பெயரை உடைய தன் சங்கை எடுத்து முழக்கினான். சக்தியும் தெய்வீகமும் வாய்ந்த அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். சூரிய புத்திரனாகிய கர்ணனிடம் தகப்பன் கொடுத்த சிறப்பான கணைகள் சில இருந்தன. அர்ச்சுனன் எய்த அம்புகளை எல்லாம் தன்னிடமிருந்த விசேஷக் கணைகளால் அறுத்து முறித்தான் கர்ணன். இருவரில் எவர் கை ஓங்கும்? எவர் கை தாழும் என்று சொல்ல முடியாதபடி போர் நடந்து கொண்டிருந்தது. அர்ச்சுனனுடைய தேர் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல் செய்வதற்கு எண்ணிய கர்ணன் அம்புகளாலேயே அர்ச்சுனனுடைய தேரைச் சுற்றி ஒருவலை போலப் பின்னி அசைய முடியாமலும் நகர முடியாமலும் செய்துவிட்டான். கண்ணபிரான் இதைக் கண்டார். உடனே கர்ணனுடைய தேரைச் சுற்றிலும் அதே போல் அம்புகளால் வலை போல் அமையுமாறு செய்தார். கர்ணன் தன் வினை தன்னைச் சுட்டதைக் கண்டு திகைத்தான். ஒன்றும் செய்ய முடியாமல் மயங்கி நின்ற கர்ணன் போரை நிறுத்திவிட்டான். அர்ச்சுனனும் போரை நிறுத்தினான், அர்ச்சுனன் தேரைச் சுற்றியிருந்த அம்புகள் கண்ணன் அருளால் நீங்கியிருந்தன. போர் செய்ய முடிகின்ற நிலையிலும் அர்ச்சுனன் சும்மா இருப்பதைக் கண்டு காரணம் விளங்காமல் திகைத்தான் கண்ணன்.

அப்போது அர்ச்சுனனுடைய கண்களுக்கு மாயையினால் ஒரு பொய்த்தோற்றம் உண்டாயிற்று. எதிரே அம்பு வலைக்கு உட்பட்ட தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனுடைய உருவம் தருமனுடைய உருவமாக மாறித் தோன்றியது. தருமனே அந்தத் தேரில் நின்று கொண்டு திகைத்துத் திணறி வருந்துவது போல் அவன் கண்களுக்குத் தோன்றவே அவன் தயக்கமடைந்து வில்லைக் கீழே வைத்துவிட்டான். இதைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த கண்ணன், ‘ஏன் போர் செய்யாமல் சும்மா நிற்கின்றாய்? கர்ணனை ஒழிக்க இது தானே தக்க சமயம்?” என்று அவனை நோக்கி வினாவினான்.

“எதிரே தேரில் என் அண்ணனாகிய தருமன் நின்று வருந்திக் கொண்டிருக்கிறானே? அவனோடு நான் எப்படிப் போர் புரிவது?”

“அடே முட்டாள்! மாயை உன் கண்களை மறைக்கிறது. தேரில் இருப்பவன் தருமனில்லை, கர்ணன்தான். வேண்டுமானால் என்னோடு வா. உன் தமையனாகிய தருமன் வேறோரிடத்தில் இருப்பதைக் காட்டுகிறேன்” என்று கண்ணன் அர்ச்சுனனை அங்கிருந்து அழைத்துச் சென்றான். தருமன் உண்மையாகவே நின்று கொண்டிருந்த இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய், “அதோ பார் உன் தமையன் தருமன் “ என்று சுட்டிக் காட்டினான். அப்போது அர்ச்சுனா கர்ணனைக் கொன்றுவிட்டாயா? இல்லையா? அதற்குள் ஏன் திரும்பினாய்?” என்று அவனை நோக்கிக் கேட்டான் தருமன். அர்ச்சுனன் உண்மைத் தருமனுக்கும் மாயத்தருமனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான். “இல்லை அண்ணா! நான் இன்னும் கர்ணனைக் கொல்லவில்லை. இனி மேல் தான் கொல்ல வேண்டும்.” என்று தருமனுக்கு மறுமொழி கூறினான் அர்ச்சுனன். அந்த மறு மொழியைக் கேட்டவுடன் அர்ச்சுனனைக் கோபம் பொங்கப் பார்த்தான் தருமன். “உன்னுடைய கையில் ஆயுதமும் மெய்யில் வீரமும் இருந்து என்ன பயன்? இன்னும் கர்ணனைக் கொல்லாமல் வீரனைப் போல் என் முன் வந்து நிற்கிறாயே?” என்றான் தருமன். தருமன் தன்னுடைய வில்லையும் ஆண்மையையும், கேவலமாகப் பேசியதைப் பொறுக்க முடியாமல் அர்ச்சுனனுக்கு அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது.

“என் வில்லும் ஆண்மையும் எவரால் பழிக்கப் பட்டாலும் அவர் யாரென்றும் பாராமல் உடனே கொல்வது தான் என்னுடைய வழக்கம்” என்று கூறிக் கொண்டே வில்லை ஓங்கி அடிப்பதற்காகத் தருமன் மேல் பாய்ந்து விட்டான் அர்ச்சுனன். தம்பியின் எதிர்பாராத ஆத்திரத்தால் மருண்ட தருமன் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நின்றான். அப்போது கண்ணன் அர்ச்சுனனைத் தடுத்து நிறுத்தினான். “உனக்கு ஏன் இன்று இவ்வளவு ஆத்திரம் வருகிறது அர்ச்சுனா? மூத்தவர்களை எதிர்த்துப் பேசுவதே பாவம் நீயோ தருமனைக் கொல்வதற்கே கிளம்பிவிட்டாய், உன் மனமார நீ செய்த சபதம் நிறைவேற வேண்டுமானால் தருமனைக் கொல்ல வேண்டாம். சில இழிந்த சொற்களைச் சொல்லித் திட்டினாலே போதும்” என்று கண்ணன் கூறினான். அவனுடைய சொற்படியே சில கேவலமான வார்த்தைகளைச் சொல்லி அர்ச்சுனன் தருமனைத் திட்டினான். ‘சபதத்துக்காக ஏதோ திட்ட வேண்டும்!’ என்று திட்டிய அந்த வார்த்தைகளைத் தருமன் உண்மையென்று நினைத்துக் கொண்டான். “அர்ச்சுனனே என்னை இப்படியெல்லாம் திட்டுகிறான். இனி நான் எதற்காக இங்கே இருக்க வேண்டும்? சந்நியாசியாக மாறிக் காட்டுக்குப் புறப்படவேண்டியதுதான்” என்று கூறிக் கொண்டே போர்க்கோலத்தைக் களைந்து விட்டுக் காட்டுக்குக் கிளம்பத் தொடங்கிவிட்டான் தருமன்.

“இதேதடா வம்பு? சபதம் வீண் போகக் கூடாதே என்பதற்காக இவனைச் சில சொற்களால் வைவது போலக் கூறினால் இவன் உண்மையென்று நினைத்துவிட்டானே?” என்று பயந்து கண்ணனும் அர்ச்சுனனும் தருமனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனைச் சமாதானப் படுத்தினர்.