மகாபாரதம்-அறத்தின் குரல்/5. கண்ணன் திரும்பி வரல்

விக்கிமூலம் இலிருந்து
5. கண்ணன் திரும்பி வரல்

விதுரன் துரியோதனனைப் பழித்து வில்லை முறித்துப் போட்டுவிட்டுப் போன பின் அவையில் சிறிது நேரம் அசாதாரணமான ஒருவகை அமைதி நிலவியது. விதுரனைப் பகைத்துக் கொண்ட துரியோதனனின் அறியாமையை எண்ணி யாவரும் கலங்கினர். துரோணர், வீட்டுமன், முதலியவர்கள் துரியோதனன் மேல் அருவருப்புக் கொண்டனர். “உனக்கிருந்த ஒரே ஒரு நல்ல வலிமை வாய்ந்த துணையையும் நீ இழந்து விட்டாய். விற்போர் செய்வதிலும் ஏனைய கலைஞானங்களிலும் வல்லவனான விதுரனைப் பகைத்துக் கொண்ட போதே உன் தோல்வி உன்னை நெருங்கிவிட்டதென்பதை மறந்து விடாதே. பாண்டவர்கள் உன்னைச் சுலபமாக வெல்லும்படி நீயே செய்து கொண்டு விட்டான்” வீட்டுமன் மனக் கொதிப்போடு கூறினான்.

வீட்டுமன் இடித்துக் காட்டிப் பேசிய பேச்சு துரியோதனனுடைய ஆத்திரத்தைக் கிளறி விட்டுவிட்டது. “விதுரன் என்னை விட்டுவிலகியதனால் எனக்கு ஒரு குறைவும் வந்து விடவில்லை. விதுரனைக் காட்டிலும் சிறந்த முறையில் விற்போர் செய்ய வல்லவனான கர்ணன் என்னோடுதான் இருக்கிறான். துரோணரும் அசுவத்தாமனும் இருக்கிறார்கள். வயதிலும் அனுபவ அறிவிலும் மூத்தவராகிய நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் நம்மைச் சேர்ந்த கோடிக்கணக்கான சிற்றரசர்கள் இருக்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்! விதுரன் செய்தது தவறா இல்லையா? என் பகைவர்களிடமிருந்து தூதனாக வந்திருப்பவனை இவன் வரவேற்று உபசரித்து விருந்தளித்தது நியாயமா? எனக்கு நன்றி செய்ய மறந்து அந்த இடையனை உபசரித்து மகிழ்ந்த இவனை நான் தூற்றியது மட்டும் குற்றமாகிவிடுமா?” துரியோதனனின் இந்தப் பேச்சுக்கு வீட்டுமன் மறுமொழியே கூறவில்லை.

துரோணர் முதலிய மற்றப் பெரியவர்களும் பேசாமல் இருந்து விட்டனர். கர்ணன் தான் அவன் பேச்சை ஆதரித்துப் பேசினான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் துரியோதனனை ஆதரித்துப் பேசுவதே அவன் வழக்கம். “விதுரனுடைய கைவில் முறிந்து விட்டதே என்று இங்கு யாரும் கவலைப்பட வேண்டாம். பாண்டவர்களை முறியடித்துத் துரத்த என் கைவில் ஒன்றே போதுமானது. விதுரனை இழந்ததனால் பெரிய நஷ்டம் என்று வீட்டுமர் கதைக்கிறார். அர்ச்சுனனை எதிர்க்க நம் பக்கம் ஆளே இல்லை என்கிறார். அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே என்னிடத்தில் நாகாஸ்திரம் வளர்ந்து வருகிறது. அர்ச்சுனனை அழித்துப் பாண்டவர்களை ஓட ஓட விரட்டித் தோல்வியுறச் செய்ய நான் ஒருவனே போதும்.” கர்ணனின் அகம்பாவம் மிகுந்த இந்தப் பேச்சு வீட்டுமன் மனத்தைச் சற்றே பாதிக்கத்தான் செய்தது.

“இந்திரனால் வெல்லமுடியாத அரக்கர்களை எல்லாம் வென்று வாகைசூடி வானுலகத்தின் ஏகோபித்த புகழை முற்றிலும் பெற்று வந்திருக்கிறான் அர்ச்சுனன். அவன் உனக்குத் தோற்பான் என்று நீ கனவு காண்பது. ‘சந்திரன் விடிவெள்ளியை விடச் சிறிது’ என்று எண்ணுவது போலப் பேதைமை நிறைந்தது. அர்ச்சுனனும் நீயும் நேருக்கு நேர் நின்று போர் செய்தால் ‘நீ வில்லை இதற்கு முன் தொட்டிருக்கிறாய்’ என்று கூடக் காண்பவர்கள் நம்பமாட்டார்கள்” என்றான் வீட்டுமன்.

“நீங்கள் எல்லாம் நன்றியுள்ள மனிதர்கள் தாமா? துரியோதனன் இட்ட சோற்றை உண்டு வளர்ந்து விட்டு துரியோதனனுக்கே துரோகம் பேசுகிறீர்களே? விதுரனைப் போலவே நீயும் பாண்டவர்களை ஆதரிக்கிறாய்! ‘எனக்கு விற்போரே தெரியாது; நான் கற்றுக் குட்டி’ என்று இகழ்கிறாய்! அர்ச்சுனன் மட்டும் என்ன? அவனினும் சிறந்த வில்லாளர்களை வேண்டுமானால் என்னோடு போருக்கு அனுப்பிப்பார். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளையே என் வில்லுக்குப் பயப்பட வைத்தவன் நான். கேவலம்; இந்தப் பாண்டவர்கள் எம்மாத்திரம்?” என்று கர்ணன் மீண்டும் நெருப்பைக் கக்கினான். ஆனால் இம்முறை வீட்டுமன் பதிலே கூறவில்லை. கர்ணனின் பேச்சு துரியோதனனை மகிழ்வித்தது. நீண்ட நேர அமைதிக்குப் பின்னர் அவை அன்றைக்கு இவ்வளவில் கலைந்தது.

அவையில் துரியோதனனைப் பகைத்துக் கொண்டு வில்லை முறித்துவிட்டு வந்த விதுரனும், கண்ணபிரானும் தனிமையில் சந்தித்தனர். கண்ணன் ‘அவையில் கோபம் கொண்டதற்கு என்ன காரணம்’ என்று விதுரனை விசாரித்தான். ‘ஆராய்ச்சி அறிவு இல்லாதவர்கள், அமைச்சர்கள் சொற்களைக் கேட்காதவர்கள், நாவடக்கமில்லாதவர்கள் ஆகியவர்களோடு பழகவே கூடாது. தனக்குத் தோல்வியே வராது என்றும் பாண்டவர்கள் தாம் நிச்சயமாகத் தோற்பார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான் துரியோதனன், உன்னையும் உன்னை வரவேற்று விருந்தினனாகப் பேணிய குற்றத்திற்காக என்னையும் அளவு கடந்து அவன் இழிவாகப் பேசினான். என்னால் பொறுக்க முடியவில்லை. இனி இப்படிப் பட்டவன் பழக்கமே வேண்டாம் என்று கருதி வில்லை முறித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன்.”

“இதுவும் ஒருவிதத்தில் நன்மைக்குத்தான். துரியோதனாதியர்கள் பக்கம் நீ இல்லையென்றால் பாண்டவர்கள் சுலபமாக அவர்களைத் தோற்கச் செய்து விடுவார்கள். தீ பற்றி எரிய நெருப்பு, விறகு, நெய், எல்லாம் இருந்தாலும் காற்றில்லாவிட்டால் பயனில்லை. சுலபமாக அவித்து விடலாம். நீ இல்லாத கெளரவர்சேனை காற்றில்லாத நெருப்புப் போல ஆகும். பாண்டவர்கள் அதைச் சீக்கிரமே அணைத்துச் சின்னாபின்னமாக்கி விடப் போகிறார்கள்.” விதுரனைப் பார்த்து மகிழ்ச்சி நிரம்பிய மனத்தோடு கண்ணன் இப்படிக் கூறினான். வந்த இடத்தில் தூது வேலை முடிந்து விட்டது. ஆனால் கண்ணன் தூது வேலையைத் தவிர வேறு சில வேலைகளையும் அங்கே செய்ய வேண்டியிருந்தது. அத்தினாபுரத்திலேயே தங்கியிருக்கும் குந்திதேவியைச் சந்தித்து, அவள் மூலம் அந்தரங்கமான சூழ்ச்சி ஒன்றை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

இதற்காகக் கண்ணன் விதுரனிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தியைச் சந்திக்கச் சென்றான். குந்தி அவனை அன்புடன் வரவேற்று, “வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தாள். “உன் புதல்வர்கள் சூதாடி இழந்த நாட்டை மீண்டும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தூது வந்தேன். தூது முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. கடைசியில் பாண்டவர்களோடு போர் செய்ய வேண்டிய நிலைக்குத் துரியோதனாதியர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். அது போகட்டும், தூது முயற்சிதான் தோற்றுவிட்டது. உன்னிடம் வந்த காரியமாவது வெற்றியாக முடிகிறதா பார்க்கிறேன்”.

“அப்படி நான் வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக் கூடிய காரியம் என்ன இருக்கிறது?”

“குந்தீ! அந்தக் காரியத்தைக் கூறுவதற்கு முன்னால் அதற்கு அவசியமான சில பழைய நிகழ்ச்சிகளை உனக்கு நினைவூட்ட வேண்டியவனாக இருக்கிறேன். அவை உன் மனத்தைப் புண்படுத்தக் கூடியனவாய் இருந்தால் என்னை மன்னித்து விடு. துருவாச முனிவர் அருளால் விரும்பிய தேவர்களைக் கூடி மகிழும் வரம் கன்னிப்பருவத்திலே உனக்குக் கிடைத்ததல்லவா? அப்போது நீ முதன் முதலாகக் கதிரவனை அழைத்து அவனோடு கூடி மகிழ்ந்தாய். அதன் பயனாகப் பிறந்த குழந்தையை ஊர்வம்புக்கு அஞ்சி ஒரு பெட்டியில் இட்டு ஆற்றில் மிதக்க விட்டுவிட்டாய். ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை அத்தினாபுரத்தில் தேர்ப்பாகன் சூதனும் அவன் மனைவியும் கண்டெடுத்து வளர்த்தனர். அதே சமயத்திலே திருதராட்டிரனுக்கத் துரியோதனாதியர் மக்களாய்ப் பிறந்து வளர்ந்தனர். தேர்ப்பாகன் வளர்த்த மகன் அரண்மனைக்கு அடிக்கடி சென்று வந்ததினால் துரியோதனனுக்கும் அவனுக்கும் உயிர்த்தோழமை ஏற்பட்டது. துரியோதனன் பெரியவனாகி முடிசூட்டிக் கொண்டபோது தன் நண்பனான தேர்ப்பாகன் மகனையும் அங்க நாட்டிற்கு அரசனாக முடிசூட்டிச் சிறப்புச் செய்தான். அன்றும் இன்றும் துரியோதனாதியர்க்கு வலது கை போல விளங்கி வரும் அந்தத் தேர்ப்பாகனின் வளர்ப்பு மகனான ‘கர்ணன்’ யார் தெரியுமா? உனக்கும் கதிரவனுக்கும் பிறந்து நீ பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்கவிட்ட அந்தப் பழைய குழந்தைதான்! உனக்கும் உன் மகனான கர்ணனுக்கும் உலகம் முழுவதற்கும் இதுவரை தெரியாத இந்த உறவின் இரகசியத்தை இப்போது நானே உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியத்தைச் சந்தர்ப்பம் உண்டாக்கி விட்டது.”

குந்தியின் கண்கள் வியப்பால் அகன்று மலர்ந்தன. புருவங்கள் மேற்புறமாக வளைந்து நிமிர்ந்து நெற்றி விளிம்பைத் தொட்டன. “ஆ! அப்படியா? கர்ணன் என் மூத்தமகனா?” -மெல்ல மெல்ல அவள் வாயிதழ்களிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன. அவள் மனவெளியில் பிள்ளைப் பாசம் என்ற இனிய தென்றல் சுகமாக வீசுவது போலிருந்தது. கண்ணன் தன் பேச்சை மேலும் தொடர்ந்தான்.

“குந்தீ! உனக்கு ஏற்படுகிற ஆச்சரியத்தில் தொடர்ந்து நான் கூறப்போகிற காரியத்தை மறந்து விடாதே. நான் இதுவரை கூறியன எல்லாம் இனிமேல் கூறப்போகின்றவற்றுக்கு முன்னுரையே தவிர வேறில்லை. இனிமேல் கூறப்போவதுதான் முக்கியமானது.”

“கூறுங்கள்! கேட்கிறேன்.”

“என் வேண்டுகோளின்படி இப்போது நீ கர்ணனிடம் போய் வர வேண்டும். அவனிடம் சென்று நீதான் அவனுக்குத் தாய் என்ற ரகசியத்தைச் சொல், ‘பாண்டவர்கள் உன் தம்பியர்கள், நீ இனிமேல் துரியோதனாதியர்களோடு இருப்பது முறையல்ல; பாண்டவர்களோடு சேர்ந்துவிடு!’ -என்று அழைத்துப் பார். அநேகமாகக் கர்ணன் அதற்கு இணங்க மாட்டான். காண்டவ தகனத்தின் போது  அர்ச்சுனனைப் பகைத்துக் கொண்டு சென்ற பாம்பு ஒன்று கர்ணனிடம் வளர்ந்து வருகிறது. அந்தப் பாம்பை அஸ்திரமாக்கிக் கர்ணன், அர்ச்சுனனைக் கொல்ல எண்ணியிருக்கிறான். நீ கர்ணனிடம், ‘நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் அர்ச்சுனனை நோக்கி எய்யக் கூடாது’ என்று ஒருவரம் வாங்கிக் கொண்டு திரும்பிவிடு!”

“கண்ணா! முன்பே பல நாட்களுக்கு முன்னால் நீ இந்த உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாதா? அப்போதே அவனைப் பாண்டவர்கள் பக்கம் சேர்த்திருப்பேனே நான்? இப்போது போர் ஏற்பட இருக்கின்ற இந்த நிலையில் திடீரென்று அவனைத் துரியோதனாதியர்களை விட்டு நன்றி மறந்து வரச் சொன்னால் அவன் இணங்குவானா? நீ வரம் கேட்டுக் கொண்டு வரச்சொல்வதைப் பார்த்தால் போரில் கர்ணன் அர்ச்சுனன் கையால் இறக்க வேண்டும் என்றல்லவா தெரிகிறது. இவ்வளவு நாட்களுக்குப் பின் மகனைக் காணச் சென்று அவன் இறப்பதற்குக் காரணமான ஒரு வரத்தை நானே அவனிடம் கேட்க வேண்டும் என்றா சொல்கிறாய்?”

“ஆமாம்! குந்தீ! வேறு வழியே இல்லை. கேட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு கர்ணனுடைய உயிர் போகாவிட்டால் உன் மக்கள் ஐந்து பேருடைய உயிரையும் அவன் போக்கி விடுவான். உன் மக்கள் ஐந்துபேர் வாழ வேண்டுமானால் வெற்றிப் பெற வேண்டுமானால், நீ கர்ணனிடம் போய் இந்த வரத்தைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். நான் சொல்வதைச் சொல்லியாயிற்று. இனி உன் கடமையை நீ செய்ய வேண்டியது தான்” -இவ்வாறு கூறிவிட்டுக் கண்ணன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு விதுரன் மாளிகைக்குச் சென்றான். கண்ணன் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றி விடுவதென்ற முடிவுக்கே குந்தியும் வந்து சேர்ந்தாள்.

இங்கு நிகழ்ச்சிகள் இவ்வாறிருக்க அங்கே அரண்மனையில் துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் தூதுவனாக வந்திருக்கும் கண்ணனைத் திரும்பிப் போகவிடாமல் அத்தினாபுரத்திலேயே கொலை செய்து விடுவதற்கான சூழ்ச்சிகளில் இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்ச்சிக்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காகத் தனது மந்திராலோசனைச் சபையைக் கூட்டியிருந்தான் துரியோதனன். திருதராட்டிரன், கர்ணன் மற்ற அமைச்சர்கள், துரியோதனனுடைய சகோதரர்கள் ஆகியோர் இந்த ஆலோசனையில் அங்கம் வகித்தனர். “பாண்டவர்கள் இவ்வளவு காலம் கானகத்தில் வசித்து விட்டு வந்த பிறகு இப்போது திடீரென்று நாடு கேட்கத் தூண்டிவிட்டவன் யார் தெரியுமா? எல்லாம் இந்த இடைப்பயலான கண்ணனின் வேலைதான். அவன் இன்னும் இங்கேதான் நம் தலைநகரில் திரிந்து கொண்டிருக்கிறான். அவனைச் சரியானபடி தண்டித்து விட வேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று சபையோரை நோக்கிக் கேட்டான் துரியோதனன், மகன் கூறியவற்றைக் கேட்ட குருடனாகிய திருதராட்டிரன் அதை ஆதரித்தே தானும் பேசினான்.

“வேறென்ன செய்வது? அந்தக் கண்ணன் இந்த ஊரை விட்டு வெளியேறுவதற்குள் வளைத்துக் கொண்டு ஆளைக் கொன்று தீர்த்து விட வேண்டியதுதான்.” திருதராட்டிரன் இவ்வாறு கூறவும் துரியோதனாதியர்களுக்குள்ளேயே நற் பண்பு உடையவனும் இளைஞனுமாகிய விகருணன் என்பவன் “பெரியோர்களாகிய நீங்கள் ‘தூதுவனை கொல்லக் கூடாது’ -என்ற அறவுரையையும் மறந்து இப்படி வஞ்சகத்திட்டத்தில் இறங்கலாமா? நம்முடைய தலைநகரைத் தேடி வந்தவர்களை நாம் கொல்வது தர்மமாகுமா? கண்ணன் மாமாயன். நீங்கள் கோடிக் கணக்கில் ஒன்று கூடி வளைத்துக் கொண்டாலும் அவனை நெருங்க முடியாது. கண்ணன் என்ற அந்த இடையனுக்குள் உள்ள சக்தியை அறிந்து கொள்ளாமல் துன்புறாதீர்கள்” -என்றான். இதைக் கேட்டதும் விகருணனுக்கு நேர்மாறான பண்புள்ளவனான துச்சாதனன் சினம் கொண்டு விட்டான். 

“அண்ணா ! இந்த விகருணனைப் போன்ற சிறு பிள்ளைகளை எல்லாம் நீ இங்கே ஆலோசனை சபைக்குள்ளே எதற்காக அனுமதித்தாய்? இவனை உள்ளே விட்டதனால்தானே இப்படிச் சிறு பிள்ளைத்தனமாகப் பேசுகிறான்? இனிமேல் யாரது யோசனையும் தேவையில்லை. வாருங்கள்! இப்படியே ஆயுதங்களுடன் போய் விதுரன் மாளிகையை வளைத்துக் கொள்வோம். அங்கே தான் கண்ணன் தங்கியிருக்கிறான். மாளிகையைச் சுற்றித் தீ வைத்துவிட்டால் கண்ணன் சாவது உறுதி” என்று துச்சாதனன் கூறி முடித்தான்.

உடனே கர்ணன் “அவ்வளவு முயற்சி எதற்கு? வீட்டை வளைத்துக் கொண்டு நெருப்பு வைக்காமலே ஓரே ஓர் அம்பினாலேயே நான் அவனைக் கொன்று விடுவேனே? இன்றிரவே இச்செயலை நிறைவேற்றி விடுவோம். புறப்படுங்கள்” என்றான். யாவருக்கும் இறுதியாகப் பேசிய சகுனி சாத்தியமானதொரு யோசனையைக் கூறினான்.

“கண்ணனைத் தீர்த்துக் கட்ட வேண்டியது அவசியம் தான். இவனை இப்படியே தப்பவிட்டுவிட்டால் இவன் போய்ப் பாண்டவர்களை இன்னும் தூண்டி விடுவான். பாண்டவர்களோடு நாம் போர் செய்ய நேரிட்டால் நிச்சயமாக நமக்குத்தான் தோல்வி ஏற்படும். சந்தேகமே இல்லை. ஆகையால் கண்ணன் இங்கிருந்து திரும்பி உயிருடன் போகவிடாமல் தடுக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்காகத் தூது வந்திருக்கின்ற அவனை வெளிப்படையாகக் கொன்று மக்கள் கூறுகிற பழிக்கும் பாவத்துக்கும் நாம் ஆளாகிவிடக் கூடாது. செய்வதை யாருமறியாமல், யார் செய்ததென்றே தெரியாமல் வஞ்சகமாகச் செய்துவிட்டால் ஒரு வம்புமில்லை இதோ, நான் கூறுகிறேன் இப்படிச் செய்து விட்டால் என்ன? கண்ணனை நம் வீட்டிற்கு விருந்தினனாகக் கூப்பிடுங்கள். அவன் உட்கார்வதற்கென்றே சிறப்பாக ஓர் ஆசனம் அமையுங்கள். அந்த ஆசனத்தின் அடியில் மேலே தெரியாது மறைவாக ஒரு பெரும் பள்ளத்தை வெட்டுங்கள். அவ்வாறு வெட்டிய பள்ளத்தில் ஆயுதந்தாங்கிய வீரர்களையும் மல்லர்களையும் மறைந்திருக்கச் செய்ய வேண்டும். கண்ணன் வந்து ஆசனத்தில் உட்கார்ந்ததும் ஆசனம் முறிந்து விழும்படி மெல்லிதாக இருக்க வேண்டும். ஆசனம் முறிந்து கண்ணன் பள்ளத்திற்குள் விழுந்ததும் அங்கிருப்பவர்களைக் கொண்டு அவனை இரும்புச் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் பிணித்து யாருக்கும் தெரியாமல் ஒரு சிறைச்சாலைக்குள் அடைத்து விட வேண்டும்.” -சகுனியின் இந்தத் திட்டத்தை எல்லோருமே ஒப்புக் கொண்டார்கள். மறுநாளே கீழே பள்ளமான நிலவறை அமைக்கப்பட்டு அதன் மேல் மெல்லிய மூங்கில் பிளாச்சுக்களால் ஒரு ஆசனம் போல் கட்டப்பட்டிருந்தது. நிலவறைக்குள் தயாராக வீரர்களும் மல்லர்களும் ஆயுதங்களுடன் மறைந்து இருந்தனர்.

6. சூழ்ச்சியின் தோல்வி

கண்ணன் விருந்துக்கு அழைக்கப்பட்டான். எல்லா நன்மை தீமைகளையும் முக்காலங்களோடும் தொடர்புபடுத்தி உணரவல்ல அந்த மாயன் ஒன்றுமே தெரியாதவனைப் போல அந்த விருந்துக்கு வரச் சம்மதித்தான். கண்ணனை விருந்தினனாக ஏற்று உபசரிப்பதற்கென்று துரியோதனனுடைய அவை கூடியிருந்தது.

கண்ணன் தன் பரிவாரங்களுடனும் தன்னைச் சேர்ந்த சிற்றரசர்களுடனும் வந்தான். கண்ணன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் அவனோடு உள்ளே விடக் கூடாதென்பது வாயிற் காவலர்களுக்குத் துரியோதனன் இட்டிருந்த கட்டளை. அதன்படி உடன் வந்த எல்லோரையும் வெளியே தடுத்து நிறுத்திவிட்டுக் கண்ணனை மட்டுமே உள்ளே விட்டான் காவற்காரன். கண்ணன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான். கண்ணனிடம் பேரன்பு கொண்டவன் போல நடித்த துரியோதனன், போலி