மகாபாரதம்-அறத்தின் குரல்/5. வீமன் யாத்திரை
தீர்த்த யாத்திரைக்காக முன்பு ஒருமுறை அர்ச்சுனன் ‘பாண்டவர் ஐவர்’ என்ற தன்மை மாறித் தனியாக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றிருந்தான். இப்போதும் அதே போலத்தான் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகத் தவம் செய்யும் பொருட்டு அவர்களைப் பிரிந்து சென்றிருக்கிறான். ஆனால் தருமன் முதலியவர்கள் இன்றிருக்கும் நிலை வேறு. அன்றிருந்த நிலை வேறு. அன்று அரசும் அரசாட்சியுமாக இருந்ததனால் அர்ச்சுனனுடைய பிரிவு அவர்களை அதிகம் வருத்தவில்லை. இன்றோ காட்டில் தனிமை அவர்களுக்கு அவன் பிரிவை உணர்ந்து வருந்தும்படியான நிலையை அளித்திருந்தது. தங்களில் அறிவும் வலிமையும் அழகும் ஒருங்கமைந்த சகோதரன் ஒருவன் எங்கோ கண்காணாத இடத்திற்குப் போய்விட்டானே தவம் செய்வதற்காக! -என்றெண்ணிக் கலங்கினர். அவர்களுடைய கலக்கத்தைத் தணிப்பதற்கென்றே வந்தவர் போல இந்திரனால் அனுப்பப்பட்ட உரோமேசர் என்ற தூதர் அப்போது அங்கே வந்து சேர்ந்தார்.
அவரைப் பார்த்ததுமே அவர் ஏதோ நல்ல செய்தியைக் கூறுவதற்காகவே வந்திருக்க வேண்டுமென்று பாண்டவர்களும் திரெளபதியும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வயது மூத்தவராகவும் சான்றோராகவும் இருந்த அவரை அவர்கள் மரியாதையாக வணங்கி வரவேற்றனர். உரோமேசர் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களுக்கு ஆசி கூறி அன்பு பாராட்டினார். பின்பு தாம் இந்திரனால் அனுப்பப்பட்ட செய்தியையும் அர்ச்சுனனைப் பற்றிய விவரங்களையும் கூறத் தொடங்கினார், தருமன் முதலிய சகோதரர்களும் திரெளபதியும் ஆவலோடு கேட்டனர். அர்ச்சுனன், நிவாதக்கவசர்களையும் காலகேயர்களையும் தன் ஆற்றலால் அழித்து வெற்றிக் கொண்டான் என்பதைக் கேள்விப்பட்ட போது அவர்களுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. தேவர்களுக்கும் உதவி செய்யக் கூடிய அளவிற்குத் தன் தம்பியினுடைய வீரம் சிறந்தது என்று தருமன் இறும்பூது கொண்டான். உரோமேசர் பாண்டவர்களைப் பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடலாம் என்று கூறி யாத்திரையாக அழைத்துக் கொண்டு சென்றார். அப்படியே பாசுபதம் பெற அர்ச்சுனன் அமர்ந்து தவம் செய்த இடத்துக்கும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். கைலாயமலையின் அடிவாரத்தில் அர்ச்சுனனை முகாசுரன் கொல்ல வந்தது, சிவபெருமானும் உமாதேவியும் வேடனும் வேட்டுவச்சியுமாக வந்து காத்தது, சிவபெருமான் சோதனைக்காக அர்ச்சுனனோடு போர் செய்தது, ஆகிய நிகழ்ச்சிகளை உரோமேசரிடம் கேட்டு அறிந்து கொண்டார்கள் தருமன் முதலியோர்.
தீர்த்தங்களையும் தலங்களையும் கண்டு பல இடங்களுக்குப் பிரயாணம் செய்த பின்னர் கைலாயமலைச் சிகரத்திற்கு மிகவும் அருகிலுள்ள காந்தருப்பம் என்ற மலைப்பகுதிக்கு வந்து தங்கினார்கள். இயற்கை வளமும் நல்வினைப்பயனும் மிகுந்த அந்த இடத்தில் அவர்களும் உரோமச முனிவரும் ஒரு வருஷ காலம் வசித்து வந்தனர். அவ்வாறிருக்கும்போது வீமன் தன்னுடைய வீரத்தை வெளிபடுத்தும்படியான வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. ஒரு நாள் திரெளபதி காந்தருப்ப மலைப்பகுதியிலிருந்த அழகிய பூம் பொழில் ஒன்றின் இடையே உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வானிலிருந்து பொன் போலும் நிறத்தை உடைய தாமரைப்பூ ஒன்று அவள் முன் விழுந்தது. கண்ணைக் கவரும் அழகும் நாசியை நிறைக்கும் இனிய மணமும் பொருந்திய அந்த மலரை அவள் கையில் எடுத்தாள். ஆர்வம் தீர நுகர்ந்து பார்த்தாள். அம் மாதிரி மலர்கள் பலவற்றைத் தன் கரங்களில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அந்த மலரை வீமனிடம் கொண்டு போய்க் காட்டினாள்.
“இது போல் அருமையான மலர்கள் சிலவற்றை நீங்கள் எனக்குக் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?” -என்று வீமனைக் கேட்டாள். வீமன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான். ஆனால் அத்தகைய மலர்களை எங்கிருந்து பெறலாம் என்பது தான் அவனுக்கு விளங்கவில்லை. ‘உரோமேசருக்குத் தெரிந்திருக்கலாம்’ என்றெண்ணி அவரிடம் கொண்டு போய்க் காட்டினான்.
“அப்பா! இது தேவர்கோன் தன் முடியிலே அணியத்தகுதி வாய்ந்த பொற்றாமரைப்பூ. நிதியின் கிழவனாகிய குபேரனுடைய அளகாபுரியிலன்றி இம்மலர்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை. சாதாரண மனிதர்கள் முயன்று இம் மலரைக் கொண்டுவருவது இயலாது. ஒருக்கால் உன் போன்ற வீரனுக்கு எளிமையாக முடிந்தாலும் முடியலாம். முயன்று பார்” என்று அவர் அவனுக்கு மறுமொழி கூறினார். வீமன் துணிவோடு புறப்பட்டுவிட்டான். ஆயுதபாணியாகப் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறவனைப் போல அவன் சென்றான். திரெளபதிக்கு விரைவில் அந்த மலர்களைக் கொண்டு வந்து கொடுத்து அவளை மகிழச் செய்ய வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டு அவசரமாகப் புறப்பட்ட அவன் போகும் போது தருமனிடம் கூறி விடை பெற மறந்துவிட்டான்.
செல்லும் வழியில் கதலி வனம் என்ற ஓர் பெரிய வாழைக்காடு குறுக்கிட்டது. அந்த வனத்தின் ஒரு கோடியில் இராமபக்தனாகிய அனுமன் புலன்களை அடக்கி மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தவம் செய்து கொண்டிருந்தான். வீமனுக்கு இது தெரியாது. அந்த வனத்தின் வழியே போகும்போது சில அரக்கர்கள் வழி நடுவே அவனை எதிர்த்துப் போருக்கு வந்தனர். வீமன் சிறிதும் தயங்காமல் அவர்களோடு போர் செய்தான். சில நாழிகைப் போரிலேயே அந்த அரக்கர்கள் அழிவடைந்து தோற்றுப் போய்விட்டனர். அவர்களை வென்று தொலைத்த பெருமிதத்தால் மகிழ்ச்சியோடு வீமன் தன்னிடமிருந்த சங்கை எடுத்து வெற்றி முழக்கம் செய்தான். அவன் செய்த சங்கநாதத்தின் ஒலியால் அங்கே தவம் செய்து கொண்டிருந்த அனுமனின் தவம் கலைந்து விட்டது. தவம் கலைந்து சிறிது சினம் கொண்ட அனுமன் ஆத்திரத்தோடு எழுந்து வீமனுக்கு முன் வந்தான்.
வந்தவன் ‘வீமன் அஞ்சி நடுநடுங்க வேண்டும்’ -என்ற எண்ணம் கொண்டு தன்னுடைய விசுவரூபத் தோற்றத்தைக் காண்பித்தான். வானத்துக்கும் பூமிக்குமாக நிமிர்ந்து விளங்கிய அந்தப் பேருருவத்தைக் கண்டு வீமன் வியந்தான். தனக்கு முன் நிற்பவன் இராம பக்தனாகிய அனுமன் என்பது அப்போதுங்கூட அவனுக்குத் தெரியவில்லை. தைரியம் குறையாமல் தொடர்ந்து சங்கநாதமும் ஆரவாரமும் செய்தான் அவன். அனுமனுக்கு அளவற்ற சினம் உண்டாகிவிட்டது.
“அடே அற்பமனிதனே! தேவர்களும் அசுரர்களும் கூட இங்கே வரப் பயப்படுகிறார்கள்! திசைகள் எட்டையும் வெற்றி கொண்டு தனிப்பட்ட பெருமிதத்துடன் விளங்குகிறது இந்த வனம். துணிந்து இங்கே வந்தவன் நீ யாரடா?”
“நீ யார் என்பதை முதலிற் சொல் பின்பு அவசியமானால் நானும் சொல்கின்றேன்” -வீமன் திருப்பிக் கேட்டான். “அடே! இதோ உன் முன் விசுவரூபத்தைக் காட்டி நிற்கும் என்னைப் பார்த்தா நீ இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? உனக்கு எவ்வளவு திமிர்? தோள் வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? அல்லது வில்வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? ஏ, பேதையே? உன் துணிவிற்குச் சரியான பாடம் கற்பிக்கின்றேன். உன் துணிவு மெய்யானால் என் வாலைக் கடந்து சென்றுவிடு பார்க்கலாம்!”
“ஏ! அறிவற்ற குரங்கே! என்ன உளறுகிறாய், இந்த உலகத்திலேயே என்னால் கடக்க முடியாத வால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இராம பக்தியிற் சிறந்தவனும் எனக்கு அண்ணன் முறை உடையவனுமாகிய அனுமனின் வால்தான். அந்த வாலைத்தான் நான் பணிந்து வணங்குவதற்குக் கடமைப்பட்டவன். உன் போன்றவர்களின் வாலைக் கடப்பதற்கு மட்டும் என்ன? அழித்தொழிப்பதற்குக் கூட என்னால் முடியும்.” அனுமன் வீமனுடைய அறியாமையை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆயினும் இறுதிவரை தான் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலே வீமனுக்குத் தன் மேலிருக்கும் பக்தியைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று.
அவன் முன்பிருந்த சினத்தை மறைத்துக் கொண்டு வீமனை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானான்: “அது சரி அப்பா! கேவலம் ஒரு மானிடனைத் தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு சுமந்து இழித்தொழிலைச் செய்தவன் அந்த அனுமன் தவம் செய்து உயர்நிலை பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கும் எனக்கு ஒப்பாக அந்தக் குரங்கை நீ கூறுகிறாயே! இது சிறிதாவது பொருந்துமா?”
வீமன் கலகலவென்று சிரித்தான். “மனிதனைச் சுமந்த அந்தக் குரங்கின் பெருமையைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன் கேள். இலங்கையை அழித்தது அந்தக்குரங்கு தான். தீயோரை ஒறுத்து நல்லோரைக் காக்கும் பரம் பொருள்வதாரமாகிய இராமபிரானுக்கே பக்கபலமாக இருந்து வெற்றி நல்கியது அந்தக் குரங்குதான். அதையும் அதன் தலைவனையும் நீ சாதாரணமாக எண்ணி இகழ்வது உன்னுடைய பெரும் பேதைமையைத்தான் காட்டுகிறது” -வீமனின் பதிலைக் கேட்ட அனுமன் அப்படியே மார்புறத் தழுவிக் கொண்டான்.
எல்லாம் தெரிந்திருந்தாலும் வெளிக்குக் கேட்பது போல “நீ யார் அப்பா? என்ன காரியமாக இந்தப் பக்கம் வந்தாய்?” -என வீமனை நோக்கிக் கேட்டான். வீமன் தன்னைப் பற்றிய விவரங்களையும் தான் வந்த காரியத்தையும் கூறினான். ‘'நான் தான் அப்பா உன் அண்ணன் அனுமன். இதோ என் சுய உருவத்தைப் பார். இதுவரை உன் துணிவையும் எண்ணங்களையும் சோதித்துப் பார்ப்பதற்காக ஏதேதோ கூறினேன் அதை மனதிற்கொண்டு வருந்தாதே!” -என்று கூறினான். வீமன் உடனே நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து அனுமனை வணங்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். மீண்டும் அனுமனுடைய விசுவரூபத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்ளவே அனுமன் விசுவரூபமெடுத்துக் காட்டினான்.
“அண்ணா ! எங்களுக்கும் துரியோதனாதியருக்கும் ஒரு பெரும்போர் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அந்தப் போரில் உன்னுடைய உதவி எங்கள் பக்கத்துக்குக் கிடைக்க வேண்டும்.'’ வீமன் வேண்டிக் கொண்டான். அனுமன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கினான். குபேரனின் நகரமாகிய அளகாபுரிக்குச் செல்லுகின்ற வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் வீமன் அனுமனை வணங்கி விடை பெற்றுச் சென்றான். அளகை நகருக்குச் செல்லும் வழியில் வலிமை வாய்ந்த அரக்கன் ஒருவன் வீமனைத் தடை செய்தான். ‘புண்டரீகன்’ என்பது அவன் பெயர். நீண்ட நேரத்துப் போருக்குப் பின் வீமன் அவனைக் கொன்று வெற்றிக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான். அளகாபுரியை அடைந்ததும் தான் எந்தப் பொற்றாமரை மலரைத்தேடி வந்தானோ அந்த மலர் கிடைக்கக்கூடிய சோலை இருக்கும் இடத்திற்குச் சென்றான். குபேரனுடைய ஏற்பாட்டின்படி அந்தச் சோலையை நூறாயிரம் அசுரர்கள் காவல் காத்து வந்தார்கள். சோலையை நெருங்குவதற்குள்ளேயே வீமன் வரவை அந்த அசுரர்கள் உணர்ந்துவிட்டார்கள். உடனே அவர்கள் பரபரப்படைந்து ஒன்றுகூடி அவனுக்கு முன் வந்து உள்ளே நுழைய விடாமல் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.
“தேவாதி தேவர்களைக் கூட இந்தச் சோலையைக் காணவோ இங்குள்ள மலர்களைப் பறிக்கவோ நாங்கள் அனுமதிப்பதில்லை. நீ யார்? அற்ப மானிடன் இங்கு எதற்காக வந்தாய்?” -அசுரர்கள் அவனை மருட்டினர். வீமனோ அவர்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் நின்றான். “நீ மரியாதையாகப் போகிறாயா? அல்லது உன் உயிரைக் கொள்ளை கொள்ளும் முயற்சியில் நாங்கள் ஈடுபடட்டுமா?”
“அசுரர்களே! ஏன் இந்த வாய் முழக்கம்? இவற்றை எல்லாம் கேட்டுப் பயந்து ஓடுகிறவன் நான் இல்லை, இடி முழக்கம் போன்ற குரலில் அரட்டிவிட்டால் எதிரி பயந்து ஓடிவிடுவான் என்று நீங்கள் எண்ணுவீர்களாயின் அது அறியாமை. எப்படியும் இந்தச் சோலையிலுள்ள மலர்களில் எனக்குத் தேவையான ஒன்றைப் பறித்துக் கொண்டுதான் இங்கிருந்து போக வேண்டும் என்ற உறுதியோடு நான் வந்திருக்கிறேன். ஒருவன் மனிதனாக இருக்கிறான் என்பதனால் அரக்கர்களுக்குத் தோற்றழிந்து போக வேண்டும் என்பது என்ன உறுதி? இராவணன் முதலிய அசுரகுல மன்னர்களை வென்றவர்கள் சாதாரண மனிதர்கள் தாம் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். நான் இதோ இப்போதே இங்கு உங்களோடு போர் செய்யத் தயார்” -அசுரர்களின் இடி முழக்கப் பேச்சுக்கு வீமன் மறு முழக்கம் செய்தான்.
அசுரர்கள் கோபத்தோடு கூட்டமாக வீமன் மேற் பாய்ந்தார்கள். வீமன் வில்லையும் கதாயுதத்தையும் மாறி மாறிப் பயன்படுத்தி அவர்களைத் திணறச் செய்தான். அவனுடைய முரட்டுப் போருக்கு முன்னால் ஆயிரக் கணக்கான அசுரர்களும் நிற்கமுடியாமல் திணறினர். அவனிடம் வீரத்தையும் போரிடுகின்ற வலிமையையும் இவ்வளவு எதிர்பார்க்காததனால் அவர்களிற் பெரும்பாலோர் இப்போது புறமுதுகிட்டு ஓடினர். எஞ்சிய சிலர் அழிந்து கொண்டிருந்தனர். தகவல் குபேரனுக்கு எட்டியது. அவன் திகைத்தான். திடுக்கிட்டான். தன் அவையிலிருந்த மகா வீரனாகிய ‘சங்கோடணன்’ என்பவனைக் கூப்பிட்டு, “அந்தச் சின்னஞ்சிறு மனிதனை அழித்துக் கொன்றுவிட்டு வெற்றியோடு வா!” என்று ஏவினான்.
அவன் தன்னைப்போலவே வலிமை மிகுந்தவர்களாகிய வேறு சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு வீமனைத் தாக்கினான். ஆனால் வீமனோ தன்னுடைய சாமர்த்தியமான போரினால் அவர்களை மூலைக்கு ஒருவராகக் சிதறி யோடும்படி செய்தான். கால் நாழிகைப் போருக்குள் சங்கோடணன் களைப்பும் மலைப்பும் அடைந்து மனத்தளர்ச்சி கொண்டு விட்டான். இறுதியில் அவனும் வீமனுக்குத் தோற்று, குபேரனை நோக்கி ஓடும்படியாக நேர்ந்தது.
“அரசே! அவன் சாதாரண மனிதன் இல்லை அளவிடற்கரிய வலிமை உடைய பெரு வீரன். அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அவனோடு பகைத்துக் கொள்ளாமல் நமக்கு நண்பனாக்கிக் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது” என்று தோற்றோடி வந்த சங்கோடணன் குபேரனை நோக்கி முறையிட்டுக் கொண்டான். குபேரன் உடனே தன் புதல்வன் உத்திரசேனனை அழைத்துப் பின்வருமாறு கட்டளையிட்டான்.
“மகாவீரனான அந்த அற்புத மனிதன் யார்? அவனைப் பார்த்து அவன் யாரென்று தெரிந்து கொண்டு வா ! இயலுமானால் அவன் கேட்கும் பொருளைக் கொடுத்து விட்டு வா!” தந்தையின் கட்டளைப்படி உத்திரசேனன் பூம்பொழில் சென்று அங்கு வந்திருக்கும் மனிதனைக் காணப் புறப்பட்டான். வீமன் வெற்றி வீரனாகப் பூம்பொழிலில் தனியே நின்று கொண்டிருந்தான்.
“அப்பா! நீ எவ்வுலகைச் சேர்ந்தவன்? எதற்காக இங்கே பலரைக் கொன்று அரும்பாடுபட்டுப் போர் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” உத்திரசேனன் அன்பும் கோபமும் கலந்த குரலில் வீமனை நோக்கிக் கேட்டான்.
உடனே வீமன், “என் பெயர் வீமன். நான் வாயுவின் புதல்வன். கண்ணபிரானுடைய மைத்துனன். இங்குள்ள தெய்வீகமலர் ஒன்று எனக்கு வேண்டும். அதைக் கொடுத்தால் நான் போய்விடுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறினான். உத்திரசேனன் அப்போதே வீமன் கேட்ட மலரைப் பறித்து அவனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றான். மலர் பெற்ற வீமன் அங்குள்ள குளிர் பூந்தடாகம் ஒன்றில் அலுப்புத் தீர நீராடிவிட்டுக் களைப்புத் தீர அச்சோலையில் தங்கியிருந்தான். இஃது இவ்வாறிருக்க அங்கே வீமன் எங்கே போனான் என்று தெரியாத தருமன் கலக்கமுற்றுப் பல இடங்களிலும் தேடினான். பின்பு திரெளபதியை விசாரித்து அறிந்து கொண்டு அளகாபுரியில் வீமனுக்கு எவையேனும் தீமை நிகழ்ந்துவிடக் கூடாதே என்று அஞ்சி வீமன் மகன் கடோற்கசனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்.
வெற்றிப் பெருமிதத்தோடும் மலர் கிடைத்த மகிழ்ச்சியோடும் ஓய்வு கொண்டிருந்த வீமன் தன்னைத் தேடி வந்த தமையனையும் மகனையும் அன்போடு வரவேற்றான். தருமன் தன்னிடம் கூறாமல் வந்ததற்காக வீமனைக் கடிந்து கொண்டான். கடோற்கசன் அன்போடு தந்தையைப் பணிந்து ஆசி பெற்றான். பின்பு மூன்று பேருமாகச் சேர்ந்து காடு திரும்பினார்கள். வீமன் மலரை அன்புடன் திரெளபதிக்குக் கொடுத்தான். நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உரோமேசர் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.