உள்ளடக்கத்துக்குச் செல்

மணமக்களுக்கு/சிக்கனம்

விக்கிமூலம் இலிருந்து

சிக்கனம்

9.  இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்பது நல்லது. சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. சிக்கனம் வரவேற்கத் தகுந்தது; கருமித்தனம் வெறுக்கத் தகுந்தது. எது சிக்கனம்? எது கருமித்தனம்? என்பதை மணமக்கள் உணர்ந்து கொள்வது நல்லது.

எட்டு மைல் உள்ள ஒரு ஊருக்கு, வாடகைக் காரைக் கூப்பிட்டு இருபது ரூபாய் கொடுத்துப் போய் வருவது டம்பச் செலவு. தேவையில்லாதது.

அவ்வூருக்கு 50 காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏறிப் போய் வருவது சிக்கனச் செலவு: விரும்பக் கூடியது.

50 காசும் கொடுக்க விரும்பாமல், 5 காசுக்குப் பட்டாணிக் கடலையை வாங்கி மடியில் கட்டிக் கொண்டு நடந்து செல்வது கருமித்தனம். இது வெறுக்கத் தகுந்தது.

இப்படியே சென்னைக்குச் செல்ல எண்ணி, முதல் வகுப்பில் பயணம் செய்து, அங்குள்ள மிகப் பெரிய தங்கும் விடுதிகளில் தங்கி, வாடகைக் கார்களில் ஊரைச் சுற்றி வந்து, ரூ. 500 செலவிட்டு வருவது டம்பச் செலவு. இது தேவையில்லாதது.

20 ரூபாய் செலவில் இரண்டாம் வகுப்பில் படுத்துறங்கிச் சென்று, 10 ரூபாய் செலவில் ஒரு அறையில் தங்கி, பேருந்துகளில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று, ரூ. 50,60 செலவில் சென்னைக்குப் போய் வேலையை முடித்து வருவது சிக்கனம். இது வரவேற்கத் தகுந்தது.

சாலைகளில் காத்திருந்து, குறைந்த செலவில் லாரிகளில் பயணம் செய்து, சென்னை சென்று, ரயில்வே பிளாட்பாரத்திலேயே தங்கியிருந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து சென்று, சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை வாங்கித் தின்று, தண்ணீரைக் குடித்து விட்டுத் திரும்புவது கருமித்தனம், இது வெறுக்கத் தகுந்தது.

ஓர் ஆண்மகன், விலை உயர்ந்த பட்டு சரிகை உடைகளை அணிந்து திரிவது டம்பம்; தேவையில்லாதது. தூய்மையான வெள்ளை ஆடைகளை அணிந்து வாழ்வது சிக்கனம்; விரும்பத் தகுந்தது. அழுக்கு நிறைந்த—கிழிந்த உடைகளை உடுத்திச் செல்வது கருமித்தனம்; வெறுக்கத் தகுந்தது.

இம்மூன்றையும் பெரும் பணக்காரர்களையோ,கடும் ஏழை மக்களையோ நினையாமல் நம்மைப் போன்ற நடுத்தர மக்களை எண்ணியே கூறுகிறேன்.

இவற்றிற்கு ஒரு இலக்கணமும் உண்டு. அது, ‘தேவைக்கு மேல் செலவு செய்வது டம்பம்; தேவையின் அளவு செலவு செய்வது சிக்கனம்; தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம்’ என்பதே. இதை மணமக்கள் தம் வாழ்நாளெல்லாம் கையாள்வது நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணமக்களுக்கு/சிக்கனம்&oldid=1646408" இலிருந்து மீள்விக்கப்பட்டது