உள்ளடக்கத்துக்குச் செல்

மணமக்களுக்கு/தியாக வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

தியாக வாழ்வு

8.  திருமணம் என்பது மணமக்கள் தாங்கள் மட்டும் வாழ்வதற்காக அல்ல; பிறரை வாழ வைத்து, வாழ வேண்டும் என்பதை மணமக்கள் முதலில் உணர வேண்டும். பிறகு வாழத் துவங்க வேண்டும். வாழ்வில் தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று உண்டு. அதுவே தலை சிறந்த வாழ்வாகும். இதைத் தியாக வாழ்வு என வடமொழியாளர் கூறுவர்.

(அ) மழையானது மக்களுக்கு உணவுப் பொருள்களையெல்லாம் உண்டு பண்ணித் தருகிறது. அதோடு அது நின்று விடுவதில்லை. தானும் ஒரு உண்ணும் நீராக மாறி, உண்பவர்களின் வயிற்றில் போய், அவர்களை வாழ வைத்துத் தான் மடிந்து விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக, அது எந்தப் பலனையும் எவரிடமும் எதிர்பார்ப்பதில்லை.

(ஆ) மஞ்சட்காமாலை நோய் வந்தால், கீழா நெல்லிச் செடி எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடித்து, அதை வேரோடு பிடுங்கி அம்மியில் வைத்து ஒரே அரைப்பாக அரைத்து, நோயாளிக்குக் கொடுத்து விடுகிறார்கள். நோயாளி பிழைத்துக் கொள்கிறான் மருந்துச் செடி பூண்டோடு அழிந்து விடுகிறது. இவனைப் பிழைக்க வைப்பதற்காகவே, அது பிறந்து வளர்ந்தது போன்று காணப்படுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்!

(இ) கோழிகளை ஒருவன் விலை கொடுத்து வாங்கித் தன் வீட்டில் விட்டு வளர்ப்பான். அதற்கு இவன் தீனி போடுவதில்லை. பக்கத்து வீட்டில் போய் அரிசியைத் தின்று விட்டு, இவன் வீட்டில் வந்து முட்டையை இடுகிறது. இவனையும், இவன் பிள்ளை குட்டிகளையும் தன் முட்டையைக் கொடுத்து வளர்க்கிறது. இறுதியில், தானும் அவர்களுக்கு உணவாகி, அடியோடு அழிந்து போய் விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது அடைந்த பலன்?

(ஈ) ஆடு இன்னும் ஒரு படி அதிகம். மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்து, தானே உணவைத் தேடித் தின்று விட்டு, இவன் வயலைத் தேடி வந்து எருவிடுகிறது. தன்னை விலை கொடுத்து வாங்கியவனின் உணவு உற்பத்திக்குப் பெருந்துணை செய்து, இறுதியில் அவனுக்குத் தன்னையே உணவாகவும் தந்து மடிந்து விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது அடைந்த பலன்?

(உ) மாடு காலமெல்லாம் உழைக்கிறது. அதன் உழைப்பு மிகப் பெரியது. உழைப்பை மனிதன் மாட்டினிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். மாட்டின் உழைப்பிற்குக் கூலி மனிதன் போடும் தீனியல்ல. எவ்வளவு தீனி போடுகிறானோ, அவ்வளவிற்கும் சாணி கொடுத்து விடுகிறது. எவ்வளவு கழுநீர் கொடுத்து விடுகிறானோ, அவ்வளவுக்கும் சிறுநீர் கொடுத்து விடுகிறது. தீனிக்குத் தகுந்த சாணி, கழுநீருக்குத் தகுந்த சிறுநீர். அது அன்றன்றே தன் கணக்கை நேர் செய்து விடுகிறது. அது எப்போதும் தன் கணக்கில் அதிகப் பற்று வைக்க விடுவதில்லை. அதன் உழைப்பு தனி. அதற்கு உழவன் கூலியே தருவதில்லை. அது எதையும் எதிர் பார்ப்பதுமில்லை. உழைத்து, உழைத்து ஓடாகி விடுகிறது. எஞ்சியுள்ள இறைச்சியையும், உழவனுக்கு உணவாகக் கொடுத்து விட்டு அழிந்து போய் விடுகிறது. அதன் தியாகம் ஆடு, கோழியைப் போல அல்லாமல், இன்னும் ஒரு படி தாண்டுவதை நினைக்க, நம் உள்ளம் சிலிர்க்கிறது.

மாட்டுக்கு உரியவன், அது உழைத்து மடிந்ததும், அதன் இறைச்சியைத் தின்று விட்டு, அதன் தோலை மரக் கிளைகளிலே காய வைத்தான். அந்தத் தோல் தன் உழவன் கல்லிலும், முள்ளிலும் நடப்பதைக் கண்டு வருந்தி, ‘ஐயா நான் எதற்காக இருக்கிறேன்? என் தோலில் ஒரு செருப்பைத் தைத்துக் காலில் போட்டுக் கொண்டு நடங்கள்’ என்றும் கூறுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதனால் அது அடைந்த பயன்?

(ஊ) இஸ்லாமியர்கள் இறைவனை வழிபடும் போது, ஊதுவத்தியைக் கொளுத்தி வைக்கிறார்கள். பாத்தியா முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. இந்த நல்ல காரியத்திற்கு துணை செய்த ஊதுபத்தி எங்கே? அது அடியோடு தன்னை அழித்துக் கொண்டு சாம்பலாகி விடுகிறது. இது, அது செய்யும் தியாகம்!

(எ) கிறுஸ்தவ சமயத்தவர், மாதா கோயில்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். ஜபம் முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. இறுதியில் மெழுகுவர்த்தியைக் காணோம். இறை வழிபாட்டிற்குத் துணை செய்த அந்த மெழுகுவர்த்தி, தன்னை அடியோடு அழித்துக் கொண்டு விடுகிறது. இது அது செய்யும் தியாகம்.

(ஏ) இந்துக்கள் தங்கள் கோயில்களில் சூடக் கட்டிகளை எலுமிச்சம்பழ அளவு கொண்டு வந்து கொளுத்தி, சுவாமியையும் அம்மனையும் பக்தியோடு வணங்குகிறார்கள். வழிபாடு முடிகிறது. மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இறுதியில் சூடம் இருந்த இடமே தெரிவதில்லை. இறை வழிபாட்டிற்குத் துணை செய்த அது, இறுதியில் தன்னையே அடியோடு அழித்துக் கொள்ளுகிறது. இது அது செய்யும் தியாகம்!

புதிதாக இல்லற வாழ்வில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள் இந்த 8 நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மழை நீரைப் போன்ற, மருந்துச் செடியைப் போன்ற, ஆடு, மாடு, கோழிகளைப் போன்ற, ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, சூடம் ஆகியவைகளைப் போன்ற தியாக வாழ்வை, பகுத்தறிவு பெற்றுள்ள மக்களாகிய நாமும் பின்பற்ற வேண்டாமா என்ற ஒரு கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டும். பிறருக்காக வாழ்ந்து மடிகின்ற அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்ய முடியா விட்டாலும், மிகச் சிறிய அளவிலாவது தியாக வாழ்வு வாழ்ந்தாக வேண்டும் என்ற உணர்வாவது உண்டாக வேண்டும். அது பிறரை வாழ வைத்து, நாம் வாழ வேண்டும் என்பதே. இதையே ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என நல்லறிஞர்கள் கருதுகிறார்கள்.