மணி பல்லவம் 1/003-039

விக்கிமூலம் இலிருந்து

3. கதக்கண்ணன் வஞ்சினம்

உயிர்க்குணங்களுள் ஏதேனும் ஒன்று மிகுந்து தோன்றும்போது மற்றவை அடங்கி நின்றுவிடும் என்று முனிவர் தனக்கு அடிக்கடிக் கூறும் தத்துவ வாக்கியத்தை அந்தப் பயங்கரமான சூழ்நிலையில் பகைவர் கரங்களின் கீழே அமுங்கிக் கொண்டே மீண்டும் நினைத்தான் இளங்குமரன். தாயைக் காணப் போகிறோம் என்ற அடக்க முடியாத அன்புணர்வின் மிகுதியால், முன் எச்சரிக்கை, தீரச் சிந்தித்தல் போன்ற பிற உணர்வுகளை இழந்து, தான் பகைமையின் வம்பில் வகையாக சிக்கிக் கொண்டதை அவன் உணர்ந்தான். மேலே எழ முடியாமல் தோள் பட்டைகளையும் கால்களையும் அழுத்தும் பேய்க் கரங்களின் கீழ்த் திணறிக் கொண்டே சில விநாடிகள் தயங்கினான் அவன். சிந்தனையைக் கூராக்கி எதையோ உறுதியாக முடிவு செய்தான். மனத்தில் எல்லையற்று நிறைந்து பெருகும் வலிமையை உடலுக்கும் பரவச் செய்வது போலிருந்ததே தவிர அவனது சிறிது நேரத் தயக்கமும் அச்சத்தின் விளைவாக இல்லை!

முதலில் வணங்குவதற்காகக் கீழே கவிழ்ந்திருந்த உள்ளங்கைகளில் குறுமணல் கலந்த ஈரமண்ணை மெல்லத் திரட்டி அள்ளிக் கொண்டான். ‘பிறந்த மண் காப்பாற்றும்’ என்பார்கள். சிறுவயதிலிருந்து தவழ்ந்தும், புழுதியாடியும் தான் வளர்ந்த சம்பாபதிவனத்து மண் இன்னும் சில கணங்களில் தனக்கு உதவி செய்து தன்னைக் காப்பாற்றப் போவதை எண்ணியபோது இளங்குமரனுக்குச் சிரிப்பு வந்தது. தன் வன்மையை எல்லாம் திரட்டிக் கொண்டு திமிறித் தலையை நிமிர்த்தித் தோளை அமுக்கிக் கொண் டிருந்தவனுடைய வயிற்றில் ஒரு முட்டு முட்டினான். அந்த முட்டுத் தாங்காமல் முட்டப்பட்டவன் நாவல் மரத்தடியில் இடறி விழுந்தான். அதே சமயம் பின்புறம், காலடியில் கால்களைப் பிணைத்துக் கட்ட முயன்று கொண்டிருந்தவனையும் பலமாக உதைத்துத் தள்ளிவிட்டு, உடனே விரைவாகத் துள்ளி எழுந்து நின்று கொண்டான் இளங்குமரன். முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டு விழுந்த எதிரிகள் இருவரில் யார் முதலில் எழுந்து வந்து எந்தப் பக்கம் பாய்ந்து தன்னைத் தாக்குவார்களென்று அது மானம் செய்து அதற்கேற்ற எச்சரிக்கையுணர்வோடு நின்றான். அடர்ந்த இருண்ட அந்தச் சூழலில் கண்களின் காணும் ஆற்றலையும், செவிகளின் கேட்கும் ஆற்றலையும் கூர்மையாக்கிக் கொண்டு நின்றான். அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. கால் பக்கம் உதைப்பட்டு விழுந்தவன் எழுந்து இளங்குமரனைத் தாக்கப் பாய்ந்து வந்தான். இருளில் கனல் துண்டங்களைப்போல் தன்னைக் குறிவைத்து முன் நகரும் அவன் விழிகளைக் கவனித்தான் இளங்குமரன், மடக்கிக் கொண்டிருந்த தன் கைகளை உயர்த்தி, “இந்தா இதைப் பெற்றுக் கொள்; சம்பாபதி வனத்து மண் வளமானது, பழமையும் பெருமையும் வாய்ந்தது என்று கூறிச் சிரித்துக் கொண்டே விரல்களைத் திறந்து எதிர் வரும் கனற் கண்களைக் குறிவைத்து வீசினான். கண்களில் மண் விழுந்து திணறியவன் இளங்குமரன் நிற்குமிடம் அறியாது இருளில் கைகளை முன்நீட்டித் தடவிக் கொண்டு மயங்கினான். அப்போது மற்றொரு எதிரி எழுந்து வரவே, இளங்குமரன் அவனை வரவேற்கச் சித்தமானான். அவன் கைகளிலும், நெஞ்சிலும் வலிமை பெருக்கெடுத்து ஊறியது. தாயையும் முனிவரையும் சந்திக்க முடியாமையினால் சிதறியிருந்த இளங்குமரனின் நம்பிக்கைகள் பகைவனை எதிர்க்கும் நோக்கில் மீண்டும் ஒன்றுபட்டன. நாவல் மரத்தடியிலிருந்து எழுந்து வந்தவனும் இளங்குமரனும் கைகலந்து போரிட்டனர். எதிரி தான் நினைத்ததுபோல எளிதாக மடக்கி வென்று விட முடிந்த ஆள் இல்லை என்பது சிறிது நேரத்துப் போரிலேயே இளங்குமரனுக்கு விளங்கியது. வகையான முரடனாக இருந்தான் எதிரி. இரண்டு காரணங்களுக்காகப் போரிட்டவாறே போக்குக் காட்டி எதிரியைச் சம்பாபதி கோவில் முன்புறமுள்ள மங்கிய தீபத்தின் அருகே இழுத்துக் கொண்டுபோய்ச் சேர்க்க விரும்பினான் இளங்குமரன். முதற்காரணம்: ‘யார் என்ன தொடர்பினால் தன்னை அங்கே அந்த இரவில் கொல்லுவதற்குத் திட்டமிட்டுச் செய்வது போல தாக்குகிறார்கள்’ என்பதை அவன் நன்றாக இனங் கண்டு அறிந்து கொள்ள விரும்பினான். அப்படி அறிந்து கொள்ளாமல், அவர்கள் தன்னிடமிருந்தோ, தான் அவர்களிடம் இருந்தோ, தப்பிச் செல்லலாகாதென்று உறுதி செய்து கொண்டிருந்தான் அவன். இரண்டாவது காரணம், முதலில் தன்னால் கண்களில் மண் தூவப் பெற்ற எதிரியையும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்வை தெரிந்து மற்றவனோடு வந்து சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்குவதற்குள் ஒருவனை மட்டும் பிரித்துச் சிறிது தொலைவு விலக்கிக் கொண்டு போகலாமே என்பதும் அவன் திட்டமாயிருந்தது.

ஆனால் இளங்குமரன் எவ்வளவுக்குத் தன்னோடு போரிட்டவனைச் சம்பாபதி கோவில் முன்புறமுள்ள தீப ஒளியில் கொண்டு போய் நிறுத்த முயன்றானோ அவ்வளவுக்கு முன்வரத் தயங்கி இருட்டிலேயே பின்னுக்கு இழுத்து அவனைத் தாக்கினான் அவனுடைய எதிரி. இதனால் இளங்குமரனின் சந்தேகமும் எதிரியை இனங்கண்டு கொள்ள விரும்பும் ஆவலும் விநாடிக்கு விநாடி வேகமாகப் பெருகியது. தீபஒளி இருக்கும் பக்கமாக இளங்குமரன் அவனை இழுப்பதும் இருள் மண்டியிருக்கும் பக்கமாகவே அவன் இளங்குமரனைப் பதிலுக்கு இழுப்பதுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.

“தைரியசாலிகள் வெளிச்சத்துக்கு வந்து தங்கள் முகத்தைக் காட்ட இவ்வளவு கூசுவது வழக்கமில்லையே!” என்று ஏளனமாக நகைத்துக் கொண்டே இளங்குமரன் கூறியதன் நோக்கம் எதிராளி கூறும் பதிலின் மூலமாக அவன் குரலையாவது கேட்டு நிதானம் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஆனால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எதிரி வாயால் பேசவில்லை. தன் ஆத்திரத்தையெல்லாம் சேர்த்துக் கைகளால் மட்டுமே பேசினான். மீண்டும் இளங்குமரன் அவன் தன்மானத்தைத் தூண்டி விடும் விநயமான குரலில் “இவ்வளவு தீரமாக எதிர்த்துப் போரிடும் என்னுடைய எதிரி கேவலம் ஓர் ஊமையாக இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று வாயைக் கிளற முயன்றான். அதற்கும் எதிரியிடமிருந்து பதில் இல்லை. எதிரி தன்னைக் காட்டிலும் முதியவன் என்பதும் வன்மை முதிர்ந்தவன் என்பதும் அவனுடைய வைரம் பாய்ந்த இரும்புக் கரங்களை எதிர்த்துத் தாக்கும். போதெல்லாம் இளங்குமரனுக்கு விளங்கியது. ஏற்கெனவே மாலையில் கடற்கரையில் மற்போரிட்டுக் களைத்திருந்த அவன் உடல் இப்போது சோர்ந்து தளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு அவன் கை தளர்ந்து கொண்டு வந்த நேரத்தில் கண்ணில் விழுந்த மண்ணைத் துடைத்து விழிகளைக் கசக்கிக் கொண்டு தெளிவு பெற்றவனாக இரண்டாவது எதிரியும் வந்து சேர்ந்து விட்டான். இளங்குமரனின் மனவுறுதி மெல்லத் துவண்டது. ‘இவர்களென்ன மனிதர்களா, அரக்கர்களா? எனக்குத் தளர்ச்சி பெருகப் பெருக இவர்கள் சிறிதும் தளராமல் தாக்குகிறார்களே!’ என்று மனத்துக்குள் வியந்து திகைத்தான் இளங்குமரன், அவன் நெஞ்சமும் உடலும் பொறுமை இழந்தன, எதிர்த்துத் தாக்குவதை நிறுத்திவிட்டு உரத்த குரலில் அவர்களிடம் கேட்கலானான்:

“தயவு செய்து நிறுத்துங்கள்! நீங்கள் யார்? எதற்காக இப்படி என்னை வழிமறித்துத் தாக்குகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? முனிவர் அருட்செல்வர் இன்று இந்நேரத்தில் இங்கு என் அன்னையை அழைத்து வந்து காட்டுவதாகக் கூறியிருந்தார். அன்னையையும், முனிவரையும் எதிர்பார்த்துத்தான் இங்கே வந்தேன், அன்னை அமர்ந்திருப்பதாக எண்ணியே வணங்கினேன்...”

வேகமாகக் கூறிக் கொண்டே வந்த இளங்குமரனின் தாவிலிருந்து மேற்கொண்டு சொற்கள் பிறக்கவில்லை, அப்படியே திகைத்து விழிகள் விரிந்தகல இருபுறமும் மாறி மாறிப் பார்த்து மருண்டு நின்றான்.

ஆ! இதென்ன பயங்கரக் காட்சி! இவர்கள் கைகளில் படமெடுத்து நெளியும். இந்த நாகப் பாம்புகளை எப்படிப் பிடித்தார்கள்? இளங்குமரனுக்கு இயக்கர் நடமாட்டம், பேய்பூத நிகழ்ச்சி இவற்றில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை. சம்பாபதி வனத்திலோ, சக்கரவாளத் தோட்டத்துச் சுற்றுப் புறங்களிலோ பேய் பூதங்கள் பழகுவதாகச் சிறு வயதில் அவன் இளம் நண்பர்கள் கதை அளந்தால் அதைப் பொறுத்துக் கொண்டு அவனால் சும்மா இருக்க முடியாது.

“பேய்களாவது பூதங்களாவது? நள்ளிரவுக்கு மேலானாலும் தாங்களும் உறங்காமல் பிறரையும் உறங்க விடாமல் வன்னி மரத்தடியில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கபாலிகர்களும், புறநகர்ப் பகுதிகளில் காவலுக்காகத் திரியும் ஊர்க்காப்பாளர்களும்தான் பேய்கள் போல் இரவில் நடமாடுகிறார்கள். வேறு எந்தப் பேயும், பூதமும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை” என்று அத்தகைய நேரங்களில் நண்பர்களை எள்ளி நகையாடியிருக்கிறான் அவன்.

அவனே இப்போது மருண்டான்; தயங்கினான்; ஒன்றும் புரியாமல் மயங்கினான். ஆனால் அந்த மயக்கமும் தயக்கமும் தீர்ந்து உற்றுப் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது. இருபுறமும் தன் தோளில் சொருகி விடுகிறாற்போல் அவர்கள் நெருக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவை நாகப் பாம்புகள் அல்ல; பாம்பு படமெடுப்பது போல் கைப்பிடிக்கு மேற்பகுதி அமைந்ததும் அதனுடல் நெளிவதுபோல் கீழ்ப்பகுதி அமைந்ததுமான கூரிய வாள்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்தில் சோழ நாட்டில் இத்தகைய அமைப்புள்ள சிறுபடைக் கலங்களைப் பயன்படுத்துகிறவர்கள் காவிரிப்பூம் பட்டினத்திலும் சுற்றுப் புறத்துக் காடுகளிலும் வாழ்ந்த எயினர் எனப்படும் ஒருவகை முரட்டு நாகமரபினர் என்பதும் அவனுக்குத் தெரியும். எயினர் பிரிவைச் சேர்ந்த நாகர்கள் அரக்கரைப்போல் வலிமை உடையவர்களென்றும் உயிர்க் கொலைக்கு அஞ்சாதவர்களென்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான். சூறையாடுதலும், கொள்ளையடித்தலும், வழிப்பறி செய்தலும் ஆறலை கள்வர்கள்[1] செய்யும் பிற கொடுமைகளும் எயினர் கூட்டத்தினருக்குப் பொழுது போக்கு விளையாட்டுக்கள் போன்றவை என்றும் அவன் அறிந்திருந்தான். ஒளிப்பாம்புகள் நெளிந்து கொத்துவதற்குப் படமெடுத்து நிற்பது போல் தன்னை நோக்கி ஓங்கப்பட்டிருக்கும் அந்த வாள்களின் நுனிகளில் அவனுடைய உயிரும் உணர்வுகளும் அந்தக் கணத்தில் தேங்கி நின்றன. இத்தகைய குத்து வாள்களைக் ‘குறும்பிடி’ அல்லது ‘வஞ்சம்’ என்று குறிப்பிடுவார்கள். ‘வஞ்சம் என்பது இப்போது என் நிலையை வைத்துப் பார்க்கும் போது இவற்றுக்கு எவ்வளவு பொருத்தமான பெயராய்ப்படுகிறது. வஞ்சங்களின் நுனியில் அல்லவா என் உயிர் இப்போது இருக்கிறது!’ என்று ஏலாமையோடு நினைக்கும் போது இளங்குமரனுக்குப் பெருமூச்சு வந்தது. காவிரி அரவணைத்தோடும் அப்பெரிய நகரத்தில் எத்தனையோ ஆண்டுகள் வீரனாகவும், அறிஞனாகவும், அழகனாகவும், வாழ்ந்து வளரத் தன் மனத்தில் கனவுகளாகவும், கற்பனைகளாகவும், இடைவிடாத் தவமாகவும், பதிந்திருந்த ஆசைகள் யாவும் அந்த வாள்களின் நுனியில் அழிந்து அவநம்பிக்கைகள் தோன்றுவதை அவன் உணர்ந்தான்; ஏங்கினான்; உருகினான்; என்ன செய்வதெனத் தோன்றாது தவித்துக் கொண்டே நின்றான். ஓர் அணுவளவு விலகி அசைந்தாலும் அருட்செல்வ முனிவர் பரிந்து பாதுகாத்து வளர்த்துவிட்ட தன் உடலின் குருதி அந்த வாள்களின் நுனியில் நனையும் என்பதில் - ஐயமே இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவன் மனத்தில் நினைவுகள் வேகமாக ஓடலாயின.

“அன்னையே! கண்களால் இதுவரை காணாத உன்னை நினைத்து நினைத்து அந்த நினைப்புக்களாலேயே நெஞ்சில் நீ இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உள்ளத்திரையிலே எண்ணக் கோலமாய் இழைத்து வைத்திருக்கிறேன். எண்ணக் கோலத்திலே கண்டதையன்றி உன்னை உனது உண்மைக் கோலத்திலே காணும் பாக்கியமின்றி இன்று இந்த வனத்திலே நான் அனாதையாய்க் கொலையுண்டு விழப் போகிறேனா? உன்னைக் காண முயலும் போதெல்லாம் எனக்கு இப்படி ஏதேனும் தடைகள் நேர்ந்து கொண்டேயிருக்கின்றனவே; அப்படி நேர்வதற்குக் காரணமாக உன்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை? அல்லது என்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை?

“சுவாமி! அருட்செல்வ முனிவரே, தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட தங்களுக்கு நன்றி செலுத்துமுகமாக என் வாழ்நாள் நெடுகிலும் என்னென்னவோ பணிவிடைகள் எல்லாம் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேனே. அவ்வாறு பணிவிடை செய்ய வேண்டிய உடல் இங்கே கொலையுண்டு வீழ்த்தப்படும் போலிருக்கிறதே.”

அப்போது பூம்புகாரின் அன்பிற்கினிய நண்பர்கள் வெற்றிப் பெருமையோடு முல்லைமாலை சூடி நின்ற போது தன்னுடைய சிரிப்பினால் அவனுடைய நெஞ்சில் மற்றோர் முல்லை மாலையைச் சூடிய அந்தப் பெண், தோற்று வீழ்ந்த யவன மல்லன்– என்று இவ்வாறு தொடர்பும் காரணமுமில்லாமல் ஒவ்வொருவராக இளங்குமரனின் நினைவில் தோன்றினர். அவன் ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்ட அந்தச் சமயத்தில் சம்பாபதி கோவிலின் கிழக்குப் புறத்தில் இருந்து குதிரைகள் வரும் குளம்பொலி கேட்டது. புறநகர்ப் பகுதிகளிலுள்ள இடங்களைக் காக்கும் யாமக் காவலர்கள் சில சமயங்களில் அப்படி வருவதுண்டு. இளங்குமரன் மனத்தில் நம்பிக்கை சற்றே அரும்பியது. ஆனால், எதிரிகளின் பிடி அவனை நெருக்கிற்று. குளம்பொலி அருகில் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது. இராக்காவலர்கள் எழுப்பும் எச்சரிக்கைக் குரலும் இப்போது குளம்பொலியோடு சேர்ந்து ஒலித்தது. அதில் ஒரு குரல் தனக்குப் பழக்கமான சக்கரவாளக் கோட்டத்துக் காவலர் தலைவன் கதக்கண்ணனுடையதாயிருப்பது கேட்டு இளங்குமரனுக்கு ஆறுதலாயிருந்தது.

வருகிற காவலர்களுடைய தீப்பந்தத்தின் ஒளியும் குதிரைகளும் மிக அருகில் நெருங்கியபோது “இளங்குமரனே! தெரிந்துகொள். நீயோ உன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த அப்பாவி முனிவரோ உன் தாயைப் பற்றி அறிந்து கொள்ளவோ, அவளை நேரில் காணவோ முயன்றால் மறுநாள் உன்னையும், அந்த முனிவரையும் இந்த இடத்தில் பிணங்களாகக் காண்பார்கள் பூம்புகார் நகர மக்கள். இது நினைவிருக்கட்டும். மறந்து விடாதே. மறந்தாயோ மறுபடியும் இதேபோல நினைவூட்ட வருவோம்” என்ற புலைநாற்றம் வீசும் வாயொன்று அவன் காதருகே கடுமையாகக் கூறியது, கற்பாறை உடையும் ஒலிபோல் விகாரமான முரட்டுத் தன்மை வாய்ந்து தோன்றியது அந்தக் குரல். இயல்பாகவே பேசாமல் வேண்டுமென்றே மாற்றிக் கொண்டு தமிழ் ஒலி முறைகள் அக்குரலில் நாகர்கள் பேசுவதுபோல் வன்மை மிகுந்து தொனித்தன.

மறுகணம் வேண்டா வெறுப்பாக அவனை விட்டுச் செல்வது போல் கீழே அலட்சியமாகத் தள்ளிவிட்டுப் புதரில் பாய்ந்து மறைந்தனர் அந்த முரட்டு மனிதர்கள். தோள்களில் அவர்கள் பிடித்திருந்த இடம் இரத்தம் கட்டி உறைந்து போனாற்போல் வலித்தது. திகைப்படங்காமல் நின்றான் அவன்.

“என்னப்பா, இளங்குமரனா? இந்த அர்த்தராத்தரியில் நகரத்தின் இந்திர விழாக் கோலாகலங்களையெல்லாம் விட்டுவிட்டு இங்கே யாரோடு இரகசியம் பேசிக் கொண்டு நிற்கிறாய்” என்று கையில் தீப்பந்தத்துடனும் இளங்குமரனை நோக்கி மலர்ந்த முகத்துடனும் குதிரையிலிருந்து கீழே இறங்கிய கதக்கண்ணனையும் அவன் தோழனான மற்றொரு காவலனையும் பார்த்துக் கெட்ட கனவு கண்டு விழிப்பவன் போல் பரக்கப் பரக்க விழித்தான் இளங் குமரன்.

அவன் திகைப்பு நீங்கித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவர்களோடு கலகலப்பாகப் பேசத் தொடங்குவதற்கே சிறிது நேரமாயிற்று. அருட்செல்வ முனிவர் தாயை அன்றிரவு தனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருந்தது, எதிரிகள் போகுமுன் இறுதியாகத் தன் செவியில் பயங்கரமாக எச்சரிக்கை செய்துவிட்டுப் போனது ஆகியவற்றைக் கதக்கண்ணனிடம் கூறாமல் ‘யாரோ இரண்டு முரட்டு நாகர்கள் தன்னை வழிமறித்துக் கொல்ல முயன்றார்கள்’ என்று மட்டும் பொதுவாகச் சொன்னான் இளங்குமரன்.

“நண்பனே! கவலைப்படாதே, உன்னுடைய எதிரிகள் எனக்கும் எதிரிகளே. அவர்கள் எங்கு சென்றாலும் தேடிப்பிடிக்கிறேன். இந்தச் சம்பாபதி வனத்திலிருந்து அவ்வளவு விரைவில் அவர்கள் தப்பிவிட முடியாது. நீ அதிகமாகக் களைத்துக் காணப்படுகிறாய். நேரே நம் இல்லத்திற்குச் சென்று படுத்து நன்றாக உறங்கு. இந்திர விழாவுக்காக நகரத்திற்குச் சென்றிருந்த என் தந்தையும் தங்கை முல்லையும் அநேகமாக இதற்குள் திரும்பி வந்திருப்பார்கள். அவர்கள் திரும்பி வந்து உறங்கிப் போயிருந்தால் எழுப்புவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் தயங்கி நிற்காதே...” இவ்வாறு கூறிக் கொண்டே அன்போடு அருகில் நெருங்கி முதுகில் தட்டிக் கொடுத்த நண்பனுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று இளங்குமரனுக்கு அப்போது தோன்றவில்லை. தன்னுடைய எதிரிகளை அவனுடைய எதிரிகளாகப் பாவித்துக் கொண்டு கதக்கண்ணன் வஞ்சினம் கூறியபோது, ‘நண்பன் என்றால் இப்படியன்றோ அமையவேண்டும்’ என்று எண்ணி உள்ளூரப் பெருமை கொண்டான் இளங்குமரன்.

கதக்கண்ணனும், அவனுடன் வந்த இன்னோர் ஊர்க்காவலனும் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டபோது இளங்குமரன் ஓய்வு கொள்வதற்காக வந்த வழியே திரும்பினான். பக்கத்துப் புதரிலிருந்து ஈனக் குரலில் யாரோ மெல்ல வலியோடு முனகுவது போல ஒலி வரவே விரைவாகச் சென்று சம்பாபதி கோயில் தீபத்தை எடுத்து வந்து அந்த இடத்துக்குப் போய்ப் புதரை விலக்கிப் பார்த்தான் இளங்குமரன். யாரோ கையும் காலும் கட்டுண்டு புதரில் விழுந்திருந்தது தெரிந்தது. விளக்கை இன்னும் தணித்துப் பிடித்து மயங்கிய நிலையில் கட்டுண்டு விழுந்திருந்தவரை முகம் நிமிர்த்திப் பார்த்த போது இளங்குமரனின் வாயிலிருந்து ‘ஆ’வென்ற அலறல் கிளம்பியது. தன் ஊனுடம்பு முழுவதும் எவருக்கு இடை விடாமல் பணி செய்யக் கடன் பட்டிருக்கிறதென இளங் குமரன் நினைத்து வந்தானோ, அந்த அருட் செல்வ முனிவரைத் தாக்கிக் கையையும் காலையும் கட்டிப் போட்டிருந்தார்கள் பாவிகள். இளங்குமரனுக்கு இரத்தம் கொதித்தது, “கதக்கண்ணா ! அந்தப் பாவிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதாகத்தான் நீ வஞ்சினம் கூறினாய். எனக்கோ அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து என் மதிப்பிற்குரியவரை இப்படிச் செய்ததற்காகச் செம்மையாய் அவர்களை அறைந்துவிட்டு அதன்பின் அவர்களுடைய வஞ்சகக் கொடுவாளுக்கு இரையாகி இறந்தாலும் கவலையில்லை என்று தோன்றுகிறது” என்று ஆவேசத்தோடு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் இளங்குமரன்.

  1. சிறு வழிகளிலும் பெரு வழிகளிலும் போவோரை அலைத்துத் துன்புறுத்தும் கள்வருக்கு அக்காலப் பெயர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/003-039&oldid=1149285" இலிருந்து மீள்விக்கப்பட்டது