மணி பல்லவம் 1/009-039
நாளங்காடி பூத சதுக்கத்தில் இளங்குமரனுக்கும் அவனைத் தாக்க வந்தவர்களுக்கும் போர் நடந்தபோது பெருகிவந்த கூட்டத்தினால் நெருக் குண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த முல்லை, கூட்டம் கலைந்ததும் அருகில் வந்து பார்த்தாள். இளங்குமரனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பதறித் துடித்துக் கொண்டிருந்தது அவள்மனம். ஓவியன் ஓடிப்போய் இளங்குமரனுக்கு உதவும் நோக்கத்துடன் யாரோ ஆட்களை அழைத்து வந்ததும் பல்லக்குகள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உட்புகுந்ததும் அவளுக்குத் தெரியாது. அதனால் அதன் பின் என்ன நிகழ்ந்ததென்பதை அவள் தெரிந்து கொள்ள முடியாமல் கூட்டத்தினர் அவளைப் பின்புறம் தள்ளி விலக்கியிருந்தனர்.
கூட்டம் ஒருவாறு கலையத் தொடங்கியபோதுதான் முன்னுக்குப் போய் அவர்களுக்குள் தாக்குதல் நடந்த பகுதியில் இளங்குமரனைக் காணலாமென்ற தவிப்பு அவளுக்கு உண்டாயிற்று. ஆனால் உரிய இடத்துக்கு வேகமாகச் சென்று பார்த்தபோது தன் தவிப்புக்கும் ஆவலுக்கும் பயன் இல்லை என்று அவள் தெரிந்து கொண்டாள்.
அங்கு இளங்குமரனைக் காணவில்லை. அவனைப் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியனையும் காணவில்லை. ‘அதற்குள் எங்கு போயிருப்பார்கள் இவர்கள்?’ என்ற திகைப்புடன் அவள் நின்றபோது அந்த இடத்திலிருந்து பல்லக்குகள் இரண்டு புறப்படுவதைக் கண்டாள். பல்லக்குகளைச் சுற்றி வெண்சாமரங்கள், பட்டுக்குடைகள், ஆலவட்டங்கள், மயிற்கண் பீலி பதித்த தோரணம் இவற்றைத் தாங்கிய ஏவலாட்கள் பணிவாக நின்று கொண்டிருந்தனர். முதற் பல்லக்கைப் பின்தொடர்கிறாற்போல் சென்ற இரண்டாவது பல்லக்கைக் கண்டதும் முல்லைக்கு வியப்பு ஏற்பட்டது. அப் பல்லக்கைச் சுமந்து கொண்டிருந்தவர்கள் தாம் சற்றுமுன் இளங்குமரனோடு சண்டைக்கு வந்த யவனர்கள் என்பதை மிக எளிதாக அடையாளம் கண்டு கொண்டாள் அவள். அதைப் பார்த்ததும் முதலில் அவள் மனம் வீணான பயங்கரங்களை நினைத்தது. ‘இளங்குமரனை அடித்துத் தாக்கி இந்தப் பல்லக்கில் தூக்கிப் போட்டுக் கொண்டு இவர்கள் போகிறார்களோ என்று நினைத்து மனம் கொதித்தாள் அவள். ஆனால் அப்படி இல்லை என்பது பக்கத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அவளுக்குத் தெரிந்தது. அடுத்த சில விநாடிகளில் பல்லக்கைச் சூழ்ந்திருந்தவர்கள் சிறிது விலகியதால் இளங்குமரனே அதற்குள் உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்துவிட்டாள். ஆனால் இளங்குமரனுடைய பார்வை அவள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை. அவ்வளவில் பல்லக்குகள் விரைந்து செல்லத் தொடங்கியதால் முல்லையின் பார்வையிலிருந்து இளங்குமரன் மறைந்தான். அவளுடைய இதழ்களிலிருந்து முறுவல் மறைந்தது. முகத்திலிருந்து மலர்ச்சி மறைந்தது. நெஞ்சிலிருந்து உற்சாகம் மறைந்தது. எதற்காகவோ இளங்குமரன் மேல் பெரிதாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அதே சமயத்தில் அப்படிக் கோபித்துக் கொள்வது எதற்காக என்றும் அவளாலேயே மனத்தில் காரண காரியத்தை இணைத்துப் பார்க்க முடியவில்லை.
பல்லக்குகள் வெகுதூரம் முன்னுக்குப் போய்விட்டன. பல்லக்குச் சுமப்பவர்கள் சுமை உறுத்துவது தெரியாமலிருப்பதற்காகப் பாடிக் கொண்டு சென்ற ஒருவகைப் பாடல் ஒலி மெல்ல மெல்லக் குரல் நைந்து அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது.
அப்பொழுதே நாளங்காடியின் இந்திரவிழா ஆரவாரங்களும், அழகும் திடீரென்று இருந்தாற் போலிருந்து குறைபட்டுப் போனது போலிருந்தது முல்லைக்கு. ‘இளங்குமரனின் ஓவியத்தை வரைந்து கொள்வதற்காக எட்டிக்குமரன் வீட்டுப் பேரழகி சுரமஞ்சரி இளங் குமரனையும் ஓவியனையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றிப் பல்லக்கில் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறாளாம்’ என்று பக்கத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் தன்னிடம் கூறிய செய்தியைச் செவிகள் வழியே வாங்கி நெஞ்சில் ஏற்றுக் கொண்டு தாங்குவதற்கு வேதனையாயிருந்தது அவளுக்கு.
வீட்டிலிருந்து புறப்படும்போது ‘இந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்குக் கூப்பிடுகிறாயே முல்லை! இவன் ஊர் சுற்றும் முரடனாயிற்றே! இல்லாத வம்புகளையெல்லாம் இழுத்துக்கொண்டு வருவானே!’ என்பதைத் தந்தையார் எவ்வளவு குறிப்பாகச் சொன்னார். நான் அப்போதே தந்தையார் சொல்லிய குறிப்பைப் புரிந்து கொள்ளாமல் போனேனே. இந்த நாளங்காடி நாற்சந்தியில் திருவிழாக் கூட்டத்தில் நான் ஒருத்தி கூட வந்திருப்பது நினைவில்லாமல் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டாவது போகவேண்டுமே என்றும் எண்ணாமல், யாரோ ஒருத்தி கூப்பிட்டாளென்று பல்லக்கில் ஏறிக்கொண்டு போயிருக்கிறாரே! எவ்வளவு இறுகிப் போயிருக்க வேண்டும் இவர் மனம்?” என்று நினைந்து வருந்தினாள் முல்லை. இளங்குமரன் என்னும் எழில் வெள்ளம் தனக்கே சொந்தம்போல் தன்னோடு பாய்ந்து வந்த ஒரே காரணத்தால் நாளங்காடிக்கு வருகிறபோது கர்வப்பட்டுக் கொண்டிருந்தாள் முல்லை. இப்போது அந்தக் கர்வத்தை அவள் படுவதற்கில்லை. படவும் முடியாது. அவளுக்குக் கிடைத்த அந்தக் கர்வத்தில் பெருமையடையும் உரிமைக்குப் போட்டியிடப் பெருநிதிச் செல்வர் வீட்டுப் பெண்ணொருத்தியும் வந்து விட்டாள் போலும்! இளங்குமரனின் முகமும், கண்களும், தோற்றமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தவை. அவன் எவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாலும், எவரோடு பேசிக் கொண்டிருந்தாலும், எவரோடு நடந்து கொண்டிருந்தாலும் அப்படி நிற்கப் பெற்றவர்களுக்கும், பேசப் பெற்றவர்க்கும், நடக்கப் பெற்றவர்களுக்கும் தான் உடனிருக்கிறோம் என்பதையே ஒரு பெருமையாக நினைந்து மகிழும் கர்வத்தை அளிக்கும் பேரெழில் தோற்றம் இளங்குமரனுக்கு இருந்தது. அதனாலேயே காவிரிப்பூம்பட்டினத்தில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அதனாலேயே நண்பர்களைக் காட்டிலும் நிறைய விரோதிகளும் இருந்தார்கள். ஒரு மனிதனுடைய இணையற்ற அழகு மற்றவர்கள் மனங்களில் பெருமையை விளைவிக்க வேண்டும். அல்லது பொறாமையை விளைவிக்க வேண்டும். இளங்குமரனுடைய அழகு இந்த இரண்டையுமே விளைவித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிரத்தானே தெரிந்து கெள்ள முடியாத பல காரணங்களாலும் தன்னை அழித்துவிடத் துடிக்கும் எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் இரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றால் அவன் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. தன்னுடைய வாழ்க்கை சில சமயங்களில் தனக்கே பெரும் புதிராக இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.
காலைப்போது தளர்ந்து பகல் வளர்ந்து கொண்டிருந்தது. தனக்குப் புதியதும் அடர்த்தி நிறைந்ததுமான காட்டுப் பகுதிக்கு வழி தப்பி வந்துவிட்ட மான் குட்டியைப் போல் நாளங்காடிக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள் முல்லை. துணைக்குத் தன்னோடு வந்தவன் இன்னொருத்தியோடு துணையாகப் போய்விட்டான் என்பதை நினைக்கும்போது அவளுக்கு ஏக்கமும் ஆற்றாமையும் இணைந்து உண்டாயின. புற வீதியையும் அதனோடு சார்ந்த புறநகரப் பகுதிகளையும் தவிரப் பட்டினப்பாக்கம், நாளங்காடி போன்ற கலகலப்பு மிக்க அந்நகர்ப் பகுதிகளுக்கு அவள் துணையின்றித் தனியாக வருவதற்கு நேர்ந்ததில்லை. தந்தையோ தமையனோ துணையாக வரும்போதுதான் பூம்புகாரின் ஆரவாரமயமான அகநகர்ப்பகுதிகளுக்குள் அவள் வந்து போயிருக்கிறாள். சாதாரண நாட்களிலேயே கூட்டத்துக்குக் குறைவிருக்காது. தனியாக வந்தால் வழி மயங்குவதற்கும், வழிதவறுவதற்கும், வேறு தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுமோ என்று அஞ்ச வேண்டிய அக நகரிலும் நாளங்காடியிலும் கோலாகலமாக இந்திரவிழாக் காலத்தில் கேட்கவா வேண்டும்? முல்லை சோர்ந்த விழிகளால் நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தாள்.
கண்ணுக்கெட்டிய தூரம் கடைகளும் மக்கள் நெருங்கிய கூட்டமும், பாட்டும், கூத்தும், யானைகள், குதிரைகள், தேர்கள், சிவிகைகள் போன்ற ஊர்திகளும் அவற்றின் தோற்றம் முடிகிற இடத்தில் ஆரம்பமாகும் நெடுமரச் சோலைகளும், பரந்து விரிந்து தோன்றின. செவிகளிற் கலக்கும் விதவிதமான ஒலிகள், செவிகளைக் கலக்கும் வேறுவேறு பேச்சுக் குரல்கள், கண்ணிற் கலக்கும் பலவிதக் காட்சிகள், கண்ணைக் கலக்கும் அளவிலடங்காத காட்சிக் குவியல்கள். எதையும் தனியாகப் பிரித்துக் காணமுடியாத காட்சி வெள்ளம்! எதையும் தனியாகப் பிரிந்து உணர முடியாத பரபரப்பான நிலை!
தனக்கு எதிர்ப்பக்கத்தே அருகிலிருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த யானைகளுக்குக் கரும்பு ஒடித்துக் கொடுக்கும் பாகர்களைப் பார்த்தாள் முல்லை, துதிக்கையை நீட்டிப் பாகர்களிடமிருந்து கரும்புக் கழிகளை வாங்கி வாய்க்குக் கொண்டுபோய் அரைத்துச் சாறு பருகும் அந்தப் பெரிய பெரிய யானைகளை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்தாள் அவள். அவளுக்கு அந்தக் காட்சியைத் தன் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. இளங்குமரனை துணைக்கு அழைத்துக் கொண்டு நாளங்காடிக்கு வருகிறபோது கரும்பின் இனிய சாற்றைப் பருகுவதுபோல நெஞ்சில் மெல்லிய நினைவுகளைச் சுவைத்துக் கொண்டு வந்தாள் அவள். இப்போதோ சுவைத்து முடித்த பின் எஞ்சும் சக்கையைப் போல் சாரமற்ற நினைவுகள் அவள் மனத்தில் எழுகின்றன. யானைவாய்க் கரும்பு போல் தனது இனிய நினைவுகளுக்குக் காரணமானதை எட்டிகுமரன் வீட்டு நங்கை கொள்ளை கொண்டு செல்வதை அவள் உணர்ந்தாள்.
பார்வைக்கு இலக்கு ஏதுமின்றிப் பராக்குப் பார்ப்பது போல நாளங்காடியின் ஒருபுறத்தில் நின்று நோக்கிக் கொண்டிருந்த முல்லைக்கு முன்னால் குதிரைகள் வந்து நின்றன. அவளண்ணன் கதக்கண்ணனும் அவனோடு வந்த மற்றவர்களும் தத்தம் குதிரைகள் மேலிருந்து கீழே இறங்கினார்கள்.
“முல்லை! இதென்ன? இப்படிப் பராக்குப் பார்த்துக் கொண்டு இங்கே நிற்கிறாய்! உன்னோடு துணைக்கு வந்த இளங்குமரன் எங்கே போனான்? படையல் வழிபாடு எல்லாம் முடிந்ததோ இல்லையோ?” என்று ஆவலுடனும் அவசரமாகவும் விசாரித்துக் கொண்டே முல்லைக்கு அருகே வந்து நின்றான் கதக்கண்ணன். அவனுடன் குதிரைகளில் வந்த மற்றவர்களும் அடக்க ஒடுக்கமாகப் பக்கத்தில் நின்றார்கள்.
அந்த நேரத்தில் தன் அண்ணனை அங்கே கண்ட பின்பும் முல்லையின் முகத்தில் மலர்ச்சி பிறக்கவில்லை. இதழ்களில் நகை பிறக்கவில்லை. நாவிலிருந்து ‘வாருங்கள் அண்ணா’ என்பது போலத் தமையனை வரவேற்கும் மகிழ்ச்சி தழுவிய வார்த்தைகளும் பிறக்கவில்லை.
மறுபடியும் அவள் தமையன் அவளைக் கேட்கலானான். “இளங்குமரன் எங்கே முல்லை? உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு ஊர் சுற்றப் போய் விட்டானா?”
“நான் அவரை எனக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டு வந்ததே தப்பு அண்ணா! புறப்படும் போது அவரைக் கூட்டிக் கொண்டு போக வேண்டாமென்று அப்பா சொன்னார். நான் அதையும் மீறி அவரைக் கூட்டிக் கொண்டு வந்ததற்கு எனக்கு நன்றாகப் பாடம் கற்பித்துவிட்டார், அவர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார் அண்ணா !”
“என்ன நடந்தது முல்லை? நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல். நாங்கள் மிக அவசரமான முக்கிய காரியத்துக்காக இளங்குமரனைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம். உடனே அவனைப் பார்க்க வேண்டும். இந்தச் சமயத்தில் பார்த்து நீயும் அவன் மேல் உன்னுடைய கோபதாபங்களைக் காட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?”
இப்படித் தன்னை நோக்கிக் கூறிய தமையன் கதக்கண்ணனின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள் முல்லை. வீரக்களை. சுடர் பரப்பும் அந்த முகத்திலும், கண்களிலும், பார்வையிலும், பேச்சிலும் ‘அவசரம் அவசரம்’ என்று தவித்துப் பிறக்கும் ஒருணர்வு முந்திக் கொண்டு நின்றது.