மணி பல்லவம் 1/022-039
மணிமார்பன் என்னும் அந்த ஓவியனைத் திரும்பிப் போக விடாமல் தன் தந்தையார் மாளிகையிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதன் மெய்யான நோக்கம் என்னவாக இருக்கும் என்று சுரமஞ்சரி சிந்தித்தாள். தன்னுடைய சித்திரச்சாலைக்குப் படங்கள் வரைந்து நிரப்புவதற்காகவே அவனை மாளிகையின் ஓவியக் கலைஞனாகப் பதவி தந்து நியமித்திருப்பதாகத் தந்தையார் கூறியதை அவள் அப்படியே நம்பி ஒப்புக் கொள்வதற்கு இயலவில்லை. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட அந்தரங்க நோக்கம் ஒன்று தந்தையாருக்கு இருக்குமென்று அவள் சந்தேகப்பட்டாள். ஓவியனுக்குப் பதவியளித்திருக்கும் செய்தியைத் தந்தையார் தாம் மகிழ்ச்சியோடு கூறினாரே தவிர அதைக் கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த ஓவியன் முகத்தில் மலர்ச்சியோ மகிழ்ச்சியோ தோன்றவில்லை என்பதையும் அவள் கவனித்திருந்தாள். அது வேறு அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது.
“அம்மா, இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு நகைவேழம்பர் என்று யார் பேர் வைத்தார்கள்? இவர் சிரிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லையே” என்று சுரமஞ்சரியின் காதருகில் மெல்லக் கேட்டாள் வசந்தமாலை. சுரமஞ்சரி உடனே தோழிக்கு மட்டும் கேட்கும்படி, “அது இவருடைய சொந்தப் பெயர் இல்லையடி வசந்தமாலை! கூத்தரங்குகளிலும், நாடக மேடைகளிலும், கூத்து, நாடகம் முதலியன தொடங்குமுன் கோமாளி வேடத்தோடு விதூடகன் ஒருவன் வருவது உண்டல்லவா? எதையாவது சொல்லி அவையிலிருப்பவர்களுக்கு நகைப்பு உண்டாக்கும் கலைஞர்களுக்கு[1] நகைவேழம்பர் என்று தமிழில் பெயர் உண்டு. எங்கள் தந்தையாரோடு வந்து சேர்ந்து கொள்வதற்கு முன்னால் இந்த மனிதர் நம் காவிரிப் பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு நாடக அரங்கில் நகைவேழம்பராக நடித்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாராம். அதனால் அந்தத் தொழில் பெயர் இன்னும் இவரை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கிறது” என்று மறுமொழி கூறினாள்.
“இந்த மனிதருடைய குரூர முகத்தைப் பார்த்தால் வந்த சிரிப்புக்கூட போய்விடுமேயம்மா! இவரை எப்படி நாடக அரங்கில் நகை வேழம்பராக வைத்துக் கொண்டு பொறுமையாக நாடகம் நடத்தினார்கள்? பார்த்தவர்களும் தான் எப்படிப் பொறுமையோடு பார்த்தார்கள்? சிரிப்பு மூட்டுகிற முகமா இது? எரிந்த கொள்ளிக் கட்டையைப் போல் விகாரமாக இருக்கிறதே?” என்று மேலும் கேட்ட வசந்தமாலைக்கு, “இவர் நகைவேழம்பராக நடிப்பதைப் பொறுமையாகப் பார்க்க முடியாததனால்தானோ என்னவோ இவருடைய முகத்தைக் கண்டு சிரிப்பு மூள்வதற்குப் பதில் சீற்றம் மூண்டு யாரோ ஒற்றைக்கண்ணைப் பொட்டையாக்கி அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது” என்று வயிற்றெரிச்சல் தீர மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.
“நாடக மேடையில் ஆடிய கூத்துக்களைவிட இவர் வாழ்க்கையில் ஆடும் கூத்துக்கள்தாம் அதிகம் போலிருக்கிறதம்மா ...”
“தந்தையாரிடம் வந்து சேர்ந்தபின் இவருடைய கூத்துக்கள் மிகவும் அதிகமடி வசந்தமாலை...”
உணவுக் கூடத்தில் எல்லாருக்கும் நடுவே சுரமஞ்சரியும் வசந்தமாலையும் இப்படித் தங்களுக்குள் இரகசியம் பேசுவது போல் பேசிக் கொண்ட பேச்சினால் எல்லாருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்பவே பேச்சை அவ்வளவில் நிறுத்திக் கொண்டனர்.
“என்னவோ நீயும் உன் தோழியுமாக உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே சுரமஞ்சரி! எங்களோடு திடீரென்று உனக்கு என்ன கோபம் வந்து விட்டதம்மா?” என்று தந்தையார் மறுபடியும் அவளுக்கு உற்சாகமூட்டிப் பேசவைக்கும் முயற்சியைத் தொடங்கினார். அவர் இவ்வளவு தூண்டிக் கேட்ட பின்னும் பேசாமலிருந்தால் நன்றாயிராதென்று பட்டும்படாமலும் ஏதோ பேசினாள் சுரமஞ்சரி.
“சுரமஞ்சரி தேவிக்கு இன்று ஏதோ சில காரணங்களால் மனம் குழப்பமடைந்துள்ளது போல் தோன்றுகிறது, ஐயா?” என்று அதுவரை பேசாமலிருந்த நகைவேழம்பர் முதல் முறையாக வாய் திறந்தார். அந்த நேரத்தில் அங்கே அவரைப் போன்று தன்னால் விரும்பத்தகாத ஒருவர் தன் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதே சுரமஞ்சரிக்குப் பிடிக்கவில்லை. அழுக்கும் சேறும் படிந்த தரையில் கால் அழுந்தி நிற்க அருவருப்படைந்து கூசுகிறாற்போலச் சிலருடைய பேச்சில் செவிகளும், மனமும் அழுந்தித் தோய்வதற்கு விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் பேசும்போது கேட்கிறவர்களுக்கு அருவருப்பும், கூச்சமுமே ஏற்படுகின்றன. நகைவேழம்பரின் பேச்சும் சுரமஞ்சரிக்கு இத்தகைய அருவருப்பைத்தான் உண்டாக்கிற்று. அத்தகைய மனிதர் ஒருவரின் நாவிலிருந்து தன் பெயர் ஒலிக்கும் போது அந்த நாவின் அழுக்குத் தனது அழகிய பெயரிலும் தோய்வது போன்று மிகவும் கூச்சத்தோடு கூடியதொரு வெறுப்பைச் சுரமஞ்சரி அடைந்தாள்.
“நகைவேழம்பரே! புதிதாக நம் மாளிகைக்கு வந்துள்ள இந்த ஓவியனை உங்கள் பொறுப்பில் ஒப்படைக்க எண்ணியுள்ளேன், வெளியில் அநாவசியமாக அலைந்து திரியாமல் இவள் மாளிகையிலேயே தங்கிப் பணிகளைச் செய்யுமாறு கண்காணித்துக் கொள்ள வேண்டியது உங்கள் வேலை. இதற்குமேல் விவரமாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்குக் குறிப்பறியத் தெரியும்” என்று உணவு முடிகிற நேரத்தில் தந்தையார் நகைவேழம்பருக்கு இருபொருள் தொனிக்கும் குறிப்புடன் உத்திரவிட்டதையும் சுரமஞ்சரி கவனித்துக் கொண்டாள். ‘இந்த மாளிகையை விட்டு ஆள் வெளியேறிவிடாமல் ஓவியனைச் சிறை செய்து பாதுகாத்துக் கொள்’ என்று சொல்ல வேண்டியதற்குப் பதில் அதையே கௌரவமான வார்த்தைகளில் கௌரவமான தொனியோடு தந்தையார் நகைவேழம்பருக்குச் சொல்லியிருக்கிறார் என்பதை அவள் உய்த்துணர்ந்து புரிந்துகொள்ள முடிந்தது. தந்தையாருக்கு என்னதான் வயதும், தகுதியும் செல்வமும் இருந்த போதிலும் அந்த ஓவியக் கலைஞனை அவர் ஏக வசனத்தில் குறிப்பிட்டுப் பேசியது சுரமஞ்சரிக்கு என்னவோ போலிருந்தது. நுண்கலைகளை மதிக்கும் நளினமான மனமுள்ளவள் அவள். அவளுடைய கோமளமான சுபாவத்துக்குக் கலைகள் பிறக்குமிடத்தைச் சுலபமாக நினைப்பவர்களைப் பொறுத்துப் பழக்கமில்லை. அதுவும் ஓவியம் இளமையிலிருந்து அவள் மனத்தில் பித்து ஏறிப் பதிந்த கலை. அந்தக் கலைக்கு உரியவர்களைப் பற்றி எளிதாக நினைப்பவர்களையோ பேசுபவர்களையோ, அவளால் ஏற்க முடிவதில்லை.
உண்டு முடித்தபின் உணவுக் கூடத்திலிருந்து எல்லாரும் வெளியேறியபோது, “வசந்தமாலை! விரைவாக நடந்து வா. சிறிது முன்னால் சென்று உணவுக் கூடத்தின் வாயிலுக்கு அருகே நின்று கவனிக்கலாம். உள்ளிருந்து ஒவ்வொருவராக வெளியேறிப் படிகளில் இறங்கும்போது நீயும், நானுமாக அவர்கள் பாதங்களை நாம் கவனிப்பதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடி கவனிக்க வேண்டும்” என்று காதருகில் மெல்லச் சொல்லி அவளை வேகமாக நடக்கச் செய்து அவளுடன் வாயிற் பக்கம் வந்து நின்று கொண்டாள் சுரமஞ்சரி. முதலில் தந்தையாரும், தாயும், வானவல்லியும் பிற பெண்களும் படியிறங்கி வந்தார்கள்.
“என்னம்மா? இங்கே எதற்கு நின்று கொண்டிருக்கிறாய்? போகலாம் வா” என்று தந்தையார் அவளைக் கூப்பிட்டார்.
“வருகிறேன் அப்பா நீங்கள் முன்னால் செல்லுங்கள்” என்று அவரை முன்னால் அனுப்பிவிட்டு மேலும் படியிறங்கி வருகிற பாதங்களைக் கவனிக்கத் தொடங்கினாள் சுரமஞ்சரி. ஒவ்வொருவராக எல்லாரும் போய் விட்டார்கள். மணிமார்பனும், நகைவேழம்பரும்தான் வரவில்லை. உள்ளே சமையல்காரர்களோடு ஏதோ பேசிக் கொண்டு நின்றார் நகைவேழம்பர்.
சிறிது நேரத்தில் மணிமார்பனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு நகைவேழம்பர் படியிறங்கி வந்த போதும் சுரமஞ்சரி தோழியோடு அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கே நின்று கொண்டிருப்பாளென்று அந்த ஒற்றைக்கண் மனிதர் எதிர்பார்க்கவில்லை. அப்போது அங்கே அவள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோது சிறிது அதிர்ச்சிகூட அவருக்கு உண்டாயிற்று. சாமர்த்தியமாக அந்த அதிர்ச்சி வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றார். தற்செயலாக நடந்து உடன் வருபவர்களைப் போல் சுரமஞ்சரியும் தோழியும் நகைவேழம்பரோடுகூட நடந்தார்கள். அவர்களும் உடன் வருவதைக் கண்ட நகைவேழம்பரின் நடை இன்னும் துரிதமாயிற்று. ஓவியனும் அதற்கு ஏற்பத் துரிதமாக நடந்தான். விரைவாய்த் தங்களைக் கடந்து அடுத்த கூடத்துக்குள் நுழைந்து முன்னால் போய் விடுவதற்காக அவர் முந்துகிறார் என்பது சுரமஞ்சரிக்கும், தோழிக்கும் புரிந்தது. உடனே அவர்களும் விட்டுக் கொடுக்காமல் தங்கள் நடையையும் வேகமாக்கினார்கள்.
ஆயினும் அவர்களைக் கடந்து பாய்ந்து முந்திச் செல்வதுபோல் ஓவியனை இழுத்துக் கொண்டு அடுத்த கூடத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டார் நகை வேழம்பர். மேலே அவரைத் தொடர்ந்து நடப்பது சாத்தியமில்லை என்றுணர்ந்து சுரமஞ்சரி வார்த்தைகளால் அவரைத் தடுத்து நிறுத்தினாள்!
“ஐயா! ஒரு விநாடி நின்று போகலாமல்லவா? உங்களிடம் சிறிது பேச வேண்டும்.”
முன்புறம் விரைந்து கொண்டிருந்த நகைவேழம்பர் திரும்பி நின்றார். “என்ன பேசவேண்டும் சுரமஞ்சரி தேவீ! சொல்லுங்கள். கேட்கிறேன். எனக்கு அவசரமாகப் போக வேண்டும். நேரமாகிறது.”
போகலாம்! ஆனால் இவ்வளவு தலைபோகிற அவசரம் வேண்டியதில்லை ஐயா! நீங்கள் நெடுங்காலத்துக்கு முன் கூத்தரங்குகளில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் முகத்துக்கு அரிதாரமும், கண்ணுக்கு மையும் கால்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பும் இட்டுக் கொண்டு அழகாக இருந்ததாக சொல்வார்கள். கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், இத்தனை காலத்துக்குப் பின் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசிக் கொள்ளும் ஆசை உங்களுக்குத் திடீரென்று எப்படி ஐயா உண்டாயிற்று? அதுவும் இவ்வளவு நன்றாகச் சிவப்புநிறம் பற்றும் செம்பஞ்சுக்குழம்பும் உங்களுக்கு எங்கேதான் கிடைத்ததோ?” என்று அவருடைய பாதத்தைச் சுட்டிக்காட்டிச் சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.
அதைக் கேட்டு நகைவேழம்பர் மெய்விதிர் விதிர்த்து நடுங்கினாற்போல நின்றார். அவருடைய ஒற்றைக்கண் மிரண்டு பார்த்தது.
- ↑ நகைவேழம்பர் - சிரிப்பு மூட்டும் பரியாசகர். அதாவது நகைச்சுவை நடிகர்கள். ஆதாரம்; சிலப்பதிகாரம் 5-ம் காதை 53-வது அடி. வேழம்பர் - ‘பலவகையால் நகுவித்துத் தாம்பயன் கொண்டு ஒழிவார்’ என்று 817-வது குறளுரையில் பரிமேலழகர் கூறியுள்ளார்.