மணி பல்லவம் 1/028-039
ஓவியனின் அந்த வார்த்தைகளை மறுபடி நினைத்தாலும் மனம் கொதித் தது இளங்குமரனுக்கு. ‘எவ்வளவு துணிவு இருந்தால் அவன் என்னிடம் அப்படிக் கூறியிருப்பான்.’
‘யாரைப் பார்த்து யார் சொல்லுகிற வார்த்தைகள் இவை? மணிமார்பனுடைய வயதென்ன? நிலை என்ன? என்னுடைய அநுதாபத்தைப் பெற்றவன் எனக்கே அறிவுரைகூற முன்வருவதா? சுரமஞ்சரி என்னும் பெண் காவிரிப் பூம்பட்டினத்திலேயே பேரழகியாக இருக்கலாம். வேறெவருக்கும் இல்லாத பெருஞ் செல்வத்துக்கு உரிமை பூண்டவரின் மகளாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அழகுக்கு மயங்கி நிறையிழக்கும் ஆண் பிள்ளையாக நான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே! அழகையும் அதனால் ஏற்படும் கவர்ச்சி மயக்கத்தையும் அனுபவித்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அந்தச் சுகத்தைப் பெண்ணின் சிரிப்பிலும், கண்களிலும்தான் தேட வேண்டும் என்பதில்லையே! பூக்களின் மலர்ச்சியிலும், கடலின் அலைகளிலும், மேகந் தவழும் மழைக்காலத்து வானத்திலும் முழுமதி மறைந்தும், மறையாமலும், உலா வருவதிலேயே அழகைத் தேடி அனுபவித்துக் கொள்ளத் தெரியும் எனக்கு. உலகத்தைப் படைத்தவன் வஞ்சகமில்லாமல் எல்லாப் பொருள்களிலும்தான் அழகை வைத்திருக்கிறான். மனிதர்கள்தாம் அந்த அழகு மிகச் சில பொருள்களில் மட்டும் இருப்பதாக நினைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படித் தவிப்பவன் என்று இந்த ஓவியன் நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. அப்பாவி ஓவியனே! பெண்ணின் சிரிப்பில் மட்டும்தான் உலகத்து அழகுகளெல்லாம் ஒளிந்து கொண்டிருப்பதாக நீ வேண்டுமானால் நினைத்துக் கொண்டிரு. ஆனால் இளங்குமரனை யும் சேர்த்து அவ்விதமாக நினைக்காதே- நான் இவ்வளவு சிறிய மயக்கங்களுக்காக என் மனத்தை இழந்து விடச் சித்தமாயில்லை! வாழ்க்கையில் பெரிய இலட்சியங்கள் எனக்கு இருக்கின்றன. இப்போது நான் தவித்துக் கொண்டிருப்பது சுரமஞ்சரியின் அழகு முகத்துக்காகவும் சிரிப்புக்காகவும் அல்ல; என் தாயின் அன்பு முகத்தையும் சிரிப்பையும் காண்பதற்காகத்தான் நான் அல்லும், பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் சிரிப்புக்கு மயங்குவதற்கு முன்பே ‘நான் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். இவ்வளவு வலிமையான உடலையும், மனத்தையும் வைத்துக் கொண்டு, ‘நான் யார்? எனக்கு அன்னையும் தந்தையுமாக இருந்து என்னை உலகுக்கு அளித்தவர்கள் யார்’ என்பவற்றைக்கூட நான் இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறேனே. என்னிடம் வந்து பெண்ணின் சிரிப்புக்குத் தோற்பதைப் பற்றிப் பேசுகிறாயே, அப்பனே?’
இளங்குமரன் இவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தபோதுதான், ஓவியனை அறைந்து அவமானம் செய்து அனுப்பியதில் தவறு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. ‘விவரம் தெரிந்த பிள்ளையாயிருந்தால் இப்படி அசட்டுத்தனமாகப் பேசி என் ஆத்திரத்தை வளர்த்து அறைவாங்கிக் கொண்டு போயிருக்க வேண்டாம்’ என்று ஓவியனிடம் சிறிது இரக்கமும் கொண்டான் அவன்.
இன்னும் அவனுடைய வலது கையில் தாழம்பூ மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கையால்தான் சுரமஞ்சரியின் மடலை அவன் தீண்டினான். படித்தபின் கசக்கி எறியவும் முயன்றான். நீலநாகர் படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த முற்றத்தில் கடற்காற்றின் சுகத்தை நுகர்ந்து கொண்டே இளங்குமரன் கட்டிலின் மேல் சாய்ந்து உறங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் புரண்டு படுக்கும் போதெல்லாம் கையிலிருந்து இந்தத் தாழம்பூ மணம் பரவி அவன் உறக்கத்தைத் தடை செய்தது. வெறுப்போடு எழுந்து சென்று கைகளை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்துக் கொண்டான் அவன். அவளைப் பற்றிய நினைவு நெஞ்சில் மட்டுமல்லாமல் கைகளிலும் மணக்கக்கூடாதென்று வெறுப்போடு அவற்றைத் தன்னிலிருந்து பிரித்தான் அவன்.
ஆனால், மறுநாள் காலையில் முதல் நாளிரவு மனத்திலிருந்தும், கையிலிருந்தும் சேர்த்துக் கழுவிய இதே நினைவுகளை மீண்டும் இளங்குமரனை நினைக்கச் செய்து விட்டார் நீலநாக மறவர். வானம் கண் விழிக்கும் வைகறைப் போதில் இளங்குமரனின் பவழச் செஞ்சுடர் மேனியில் இளங்பொன் வெய்யில் பட்டு அவன் கண்கள் மலர்ந்த போது அந்த விழிப்பையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்பவர்போல் அவனுடைய கட்டிலருகில் நீலநாக மறவர் நின்று கொண்டிருந்தார். கண்களைத் திறந்ததும் அவர் முகத்தில்தான் விழித்தான் இளங்குமரன். உடனே வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளியெழுந்து அடக்கமாக நின்றான். தான் விழித்துக் கொள்வதற்கு முன்பே அவர் தனக்காகத் தன் கட்டிலருகே வந்து நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. நீராடி ஆலமுற்றத்துச் சிவன் கோயிலின் வழிபாட்டையும் முடித்துக் கொண்டு மாணவர்கட்கு படைக்கலப் பயிற்சி அளிப்பதற்கேற்ற கோலத்தில் இருந்தார் நீலநாக மறவர், சிரிப்பும் இன்றிச் சீற்றமும் இன்றி வெறுப்பும் இன்றி வேட்கையுமின்றி இளங்குமரனின் முகத்தையே இமையாமல் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். அவருடைய கைகள் வேலைப்பாடு அமைந்ததும் புதிய தாகப் படைக்கலச் சாலையிலே வடிக்கப்பட்டதுமாகிய சிறிய வேல் ஒன்றைப் பற்றி அலட்சியமாகச் சுழற்றிக் கொண்டிருந்தன.
அவர் தன்னிடம் ஏதோ கேட்கப் போகிறாரென்று எதிர்பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். அவருக்கு முன் நிற்கும்போது இருக்க வேண்டிய பணிவும், குழைவும் அவன் நின்ற தோற்றத்திலேயே தெரிந்தன.
“தம்பீ! இந்த வேலின் நுனி இளம் பெண்ணொருத்தியின் அழகிய கண்போன்று இருக்கிறதல்லவா?” என்று தொடர்பில்லாமல் பேச்சைத் தொடங்கினார் அவர். இளங்குமரன் சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் தயங்கி நின்றான். அவர் அவனை விடவில்லை. மீண்டும் தூண்டிக் கேட்கலானார்.
“உன்னைத்தான் கேட்கிறேன் தம்பி! வார்த்து வடித்து கூர்மையாகத் தோன்றும் இந்த வேலின் நுனி இளநங்கை ஒருத்தியின் நீள் விழியை நினைவூட்டுகிறது இல்லையா?”
“கவிகள் அப்படிச் சொல்லித் தங்களையும் உலகத்தையும் சேர்த்து ஒன்றாக ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வேல் விழி, மீன் விழி, மான் விழி என்று உவமை சொல்லி வேலையும், மீனையும், மானையும் பார்க்க நேர்ந்தபோதும்கூட, பெண்களின் கண்களைத் தவிரத் தங்களுக்கு வேறெதுவும் நினைவு வரவில்லை என்கிற சொந்தப் பலவீனத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பாடியும் நிரூபித்திருக்கிறார்கள்.”
இளங்குமரன் இவ்வாறு கூறியதும் சலனமற்றிருந்த நீலநாக மறவரின் முகத்தில் சிரிப்பின் சாயல் தென்படலாயிற்று. அந்தச் சிரிப்பை ஒளித்து மறைக்க அவர் முயன்றும் அதன் சாயல் முகத்தில் வெளிப்பட்டுவிட்டது. மேலும் அவர் அவனைக் கேட்கலானார்.
“உவமை கூறுவதைக் கவிகளின் பலவீனமென்று நீ சொல்கிறாய், தம்பீ! ஆனால் கவிகள் அதையே தங்களுடைய பலம் என்கிறார்கள். கவிதையின் அணிகளில் ஒன்றாகவும் உவமையைக் கணக்கிடுகிறார்களே, உவமை இல்லாவிட்டால் வருணனை அமையுமா?”
“வேறொரு விதமாகக் கணக்கிட்டால் அதிகமான பலமே பலவீனமாக முடியும். அளவுக்கு மீறின பலமே ஒரு பலவீனம்தான்! வேலின் நுனியில் வீரம் பிறக்கிறது. பெண்ணின் விழிக்கடையில் வீரமும் ஆண்மையும் அழிகின்றன. வீரத்தையும் ஆண்மையையும் அழிக்கின்ற இடத்தை வீரமும், ஆண்மையும் பிறக்கின்ற இடத்துக்கு உவமை சொல்வது எப்படி ஐயா பொருந்தும்?”
“ஆண்மை என்ற வார்த்தைக்கு நீ என்ன பொருள் புரிந்து கொண்டிருக்கிறாய். தம்பீ!”
“ஆளும் தன்மை என்று பொருள் புரிந்து கொண்டிருக்கிறேன்.”
“எதை ஆளும் தன்மையோ? உடம்பையா, மனத்தையா, புலன்களையா, அல்லது வேலையும், வாளையும், வில்லையும் எடுத்து ஆளும் தன்மையா? உன்னிடமிருந்து நான் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தம்பீ!” என்றார் நீலநாக மறவர்.
“எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத்தான் நான் சொல்லுகிறேன்.”
“அதாவது வீரம் அல்லது ஆண்மை என்பது வில்லையும் வேலையும் எடுத்து ஆள்வது மட்டுமன்று. எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி ஆளுவது என்பதுதானே உன் கருத்து?”
“ஆமாம் ஐயா!”
“அப்படியானால் இதைக் கேள், இளங்குமரா! இப்போது இந்தப் படைக்கலச்சாலையில் எனக்கு மிகவும் வேண்டியவனும் கண்ணைக் கவரும் அழகனுமான இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உடல் வலிமையும் வேண்டிய அளவு இருக்கிறது. வில்லையும், வேலையும், ஆள்வதற்கு மட்டும்தான் அவனுக்குத் தெரிகிறது. மனத்தையும், புலன்களையும் ஆள அவனுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. கூரிய வேலையும், வாளையும் பிடித்து வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆண்மையைப் பெண்ணின் கண்களுக்குத் தோற்றுப் போகும்படி செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் கேள், அழகிய இளம்பெண்கள் அவனைத் தேடிக் கொண்டு அகாலமான இரவு நேரங்களில் இங்கே இரதத்தில் வருகிறார்கள். அந்தப் பெண்களை விசாரித்தால் அவன் தங்களைத் தேடிக் கொண்டு தங்கள் மாளிகைக்கு அடிக்கடி வழக்கமாய் வருவது உண்டென்றும் சொல்கிறார்கள். அந்த இளைஞன் வீரமும் ஆண்மையும் உள்ளவன் என்று நான் நினைப்பதா? இல்லாதவன் என்று நினைப்பதா?”
“இதில் சந்தேகமென்ன? வீரமும்? ஆண்மையும் இருந்தால் அவன் ஏன் இப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப் போய் அலைகிறான்?”
இதைக் கேட்டு நீலநாக மறவர் பெரிதாகச் சிரித்தார். அவர் ஏன் அப்படிச் சிரிக்கிறார் என்று இளங்குமரன் திகைத்து நின்றபோது தம் கைகளிலிருந்த வேலைக் கீழே எறிந்துவிட்டு வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலை அவன் முகத்துக்கு நேரே நீட்டியபடி கூறலானார் நீலநாக மறவர்:
தம்பீ! அப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப்போய் அலைபவன் வேறெங்கும் இல்லை. இதோ என் எதிரே இளங்குமரன் என்ற பெயரோடு நின்று கொண்டிருக்கிறான் அவன்...”
தீயை மிதித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு, எங்கோ சுற்றி வளைத்துப் பேசித் தன் பேரில் கொண்டு வந்து முடித்ததைக் கண்டு திடுக்கிட்டான் அவன். நேற்றிரவு இதேபோல் ஒரு கேள்வியைக் கேட்டதற்காகத்தானே அவன் ஓவியனை அறைந்து அனுப்பியிருந்தான்? இன்றும் விடிந்ததும் விடியாத்துமாக இப்படி ஒரு பழியா?
“என்ன தம்பீ! திருடனுக்கு தேள் கொட்டினாற்போல் இப்படி விழிக்கிறாய்? உன்னுடைய ஆண்மையை அழித்துத் தன்னுடைய பெண்மைக்கு வெற்றிப் பெருமிதம் சேர்த்துக் கொண்ட அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் வேல் விழிகளை நேற்றிரவு நானே பார்த்தேன்.”
“நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை ஐயா! எதையோ தப்பாகப் புரிந்து கொண்டு என்மேல் பழி சுமத்துகிறீர்களே...?” என்று தொடங்கிய இளங்குமரனை மேலே பேசவிடாமல் தடுத்து அவர் பேசத் தொடங்கினார்-
“இன்னும் புரியும்படியாக விளக்கிச் சொல்ல வேண்டுமானால், இதோ கேள் தம்பீ”- என்று தொடங்கி முதல் நாள் பின்னிரவில் தேரேறி அவனைத் தேடிக்கொண்டு வந்த பெண்களைப் பற்றிக் கூறினார் நீலநாக மறவர். அவர் கூறியதிலிருந்து, வந்தவர்கள் சுரமஞ்சரியும் அவள் தோழி வசந்தமாலையுமாகத்தான் இருக்க வேண்டுமென்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. மடலோடு அறை வாங்கிக் கொண்டு திரும்பிப் போன ஓவியன் சுரமஞ்சரியையே நேரில் போகச் சொல்லி இங்கே அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தான் அவன். சுரமஞ்சரியின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு இப்போது ஆத்திரமாக மாறியது. “எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நீங்கள் நினைக்கிறாற்போல் ஒரு நெருக்கமும் இல்லை. அவள் எதற்காக என்னைத் தேடி வந்தாள் என்பதே எனக்குத் தெரியாது” என்று எவ்வளவோ சொல்லி, அவருடைய தவறான கருத்தை மாற்ற முயன்றான் இளங்குமரன். நீலநாக மறவர் அவ்வளவு எளிதாக அதை நம்பவில்லை.
“எனக்கு விளக்கம் தேவையில்லை தம்பீ! உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், இனிமேலாவது உன்னைத் திருத்திக்கொள். என்னைப் போல் ஆயுதங்களை எடுத்தாள்வதுடன் புலன்களையும் ஆளத் தெரிந்து கொண்ட வீரனாக நீ உருவாக வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட் செல்வ முனிவரின் நோக்கமும் அதுதான். அதிலிருந்து நீ வழி விலகக்கூடாது” என்று கோபமாகச் சொல்லிவிட்டு மாணவர்களுக்குப் படைக்கலப் பயிற்சி கற்பிப்பதற்காகச் சென்று விட்டார் நீலநாக மறவர்.
ஏதோ நினைப்புடனே அவர் கீழே எறிந்து விட்டுப்போன வேலைக் குனிந்து கையிலெடுத்தான் இளங்குமரன். அந்த வேல் சுரமஞ்சரியின் மயக்கும் விழியாக மாறி அவனை நோக்கி ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.
'முடியாது! முடியவே முடியாது. இந்த மயக்கும் விழிகளுக்கும், இதற்குரியவளின் சிரிப்புக்கும் ஒரு போதும் நான் தோற்கமாட்டேன்’ என்று தனக்குத்தானே பித்தன் போல் கூறிக்கொண்டே அந்த வேலை வெறுப்புடன் தூரத்தில் வீசி எறிந்தான் இளங்குமரன்.