மணி பல்லவம் 2/002-022
சீனத்துக் கப்பலிலிருந்து இறங்கி நடந்த போது, ‘உங்கள் கருணை எனக்குத் தேவையில்லை. என் மாளிகைக்குப் போய்ச் சேரும் வழி எனக்குத் தெரியும்’ என்று சீற்றத்தோடு அலட்சியமாக இளங்குமரனிடம் பேசியிருந்தாலும் சுரமஞ்சரியின் மனம் அதன் பின்னரும் அவனுக்காகவே ஏங்கியது. அவனுக்காகவே தவித்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அவள் அவனைப் பிரிந்து சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே அந்தப் பக்கத்தில் துறைமுக வாயிலின் அருகே கூடி நின்று கொண்டிருந்த அவளுடைய தந்தையாரின் கப்பல் ஊழியர்கள் பயபக்தியோடு ஓடிவந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஆர்வ வெள்ளம் பாய்ந்தது.
“எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள், அம்மா! நேற்று நீராட்டு விழாவில் நீங்கள் காணாமற் போனதிலிருந்து நமது மாளிகையே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. நீங்கள் காணாமற்போன செய்தி தெரிந்த உடனே நேற்று மாலை கழார்ப் பெருந்துறையிலிருந்து காவிரியின் சங்கமுகம் வரை தேடிப் பார்ப்பதற்காகப் பல படகுகளை அனுப்பினார் உங்கள் தந்தையார். வெகுநேரம் தேடிவிட்டுப் படகுகள் எல்லாம் திரும்பிவிட்டன. உங்களைத் தேடுவதற்காக நம் ஆட்கள் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். உங்கள் வரவை இப்போதே ஓடிப்போய் மாளிகையில் தெரிவிக்கிறோம். தெரிவித்து விட்டு உங்களை அழைத்துச் செல்வதற்குத் தேரும் கொண்டு வருகிறோம். அதுவரை இதோ இங்குள்ள நமது பண்டசாலையில் அமர்ந்திருங்கள்” என்று கூறிச் சுரமஞ்சரியை அழைத்துப் போய்த் துறைமுக வாயிலின் பக்கத்திலிருந்த அவள் தந்தையாரின் பண்டசாலையில் அமரச் செய்துவிட்டு மாளிகைக்கு விரைந்தார்கள் அந்த ஊழியர்கள்.
அப்போது, ‘என்னை அழைத்துச் செல்வதற்காக எனது மாளிகையிலிருந்து வரப்போகும் தேரிலேயே இளங்குமரனையும் ஏற்றிக் கொண்டு போய் அவர் தங்கியிருக்கும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் விட்டுச் சென்றால் என்ன?’ என்று நினைத்தாள் சுரமஞ்சரி. உடனே எழுந்திருந்து போய் ‘அவர் நிற்கிறாரா?’ என்று துறைமுகவாயிலிலும் பார்த்தாள். அங்கே அவரைக் காணவில்லை. ‘அவர் நடந்து புறப்பட்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டு சுரமஞ்சரி ஏமாற்றத்தோடு திரும்பிப் பண்டசாலைக்குள் மீண்டும் வந்து அமர்ந்தாள். அவள் கண்கள் எங்கும் இளங்குமரனைத் தேடின. பண்டசாலை யில் வந்து அமர்ந்தபின்பும் எதிர்ப்புறம் தெரியும் துறைமுக வீதியையே கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.
‘பெண்ணே! என்னுடைய கருணையை நீ அடைய முடியும். ஆனால் அன்பை அடைய முடியாது’ என்று அவன் திரும்பித் திரும்பி இரண்டு மூன்று முறை தன்னிடம் வற்புறுத்திக் கூறிய அந்தச் சொற்கள் இன்னும் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தன. கப்பலிலிருந்து இறங்கியதும் அவள்தான் அவனிடம் கோபித்துக் கொண்டு விலகி வந்தாளே தவிர, அவள் மனம் அவனிடமிருந்து விலகி வரவில்லை. அவள் மனத்தின் நினைவுகளும் கனவுகளும் அவனைப் பற்றியே இருந்தன. அவள் சிந்தனைகளுக்கு இளங்குமரனே இடமாகவும், எல்லையாகவும் இருந்தான். பண்டசாலையின் முன்புறம் இரண்டு அலங்காரத் தேர்கள் வந்து நின்ற ஒலியில் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி.
ஒரு தேரிலிருந்து நகைவேழம்பரும் அவள் தந்தையாரும் இறங்கினார்கள். மற்றொரு தேரிலிருந்து அவளுடைய தாயார், சகோதரி வானவல்லி, வசந்தமாலை ஆகியோர் இறங்கினார்கள்.
“பாவிப் பெண்ணே! இப்படி எங்களையெல்லாம் கதிகலங்கச் செய்யலாமா?” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கதறியவாறே ஆவலோடு ஓடிவந்து தழுவிக் கொண்டாள், சுரமஞ்சரியின் அன்னை. “என்ன நடந்தது? எப்படித் தப்பிப் பிழைத்தாய்? யார் காப்பாற்றினார்கள்?” என்று எல்லாருமே அவளைத் தூண்டித் தூண்டிக் கேட்டார்கள்.
யாரோ ஒரு படகோட்டியின் உதவியால் கப்பல் கரப்புத் தீவை அடைந்ததாகவும், காலையில் அங்கிருந்து ஏதோ ஒரு கப்பலில் இடம் பெற்றுத் துறைமுகத்தை அடைந்ததாகவும், உண்மையைச் சற்றே மாற்றிக் கூறினாள் சுரமஞ்சரி. தந்தையாரையும் நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு, இளங்குமரன் தன்னைக் காப்பாற்றியதைச் சொல்வதற்கு அவள் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் அவள் கூறியதில் யாரும் அவநம்பிக்கை கொள்ளவும் இல்லை.
“எப்படியானாலும் மறுபிறப்புப் பிறந்தது போல நீ உயிர் பிழைத்து வந்தாயே, அதுவே போதும். காவிரித் தாய் உன்னைக் காப்பாற்றியிருக்கிறாள்! அந்தப் படகோட்டியும், கப்பல் தலைவனும் யாரென்று சொன்னால் உனக்கு உதவியதற்காக அவர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்கச் சித்தமாயிருக்கிறேன், மகளே!” என்றார் தந்தையார்.
“சமயம் வாய்க்கும்போது அவர்களை உங்களுக்குக் காண்பிக்கிறேன், அப்பா!” என்று பதில் கூறினாள் சுரமஞ்சரி.
“சந்தர்ப்பம் எப்படி நேர்கிறது பார்த்தாயா? பெரிய, பெரிய கப்பல்களுக்கு உரிமையாளனான என்னுடைய மகள் எவனுடைய கப்பலிலோ இடத்துக்குப் பிச்சையெடுக்க வேண்டியதாய் நேர்ந்திருக்கிறதே” என்று தம் மனைவியிடம் கூறினார் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வர். அவருக்கு எப்போதுமே தம்முடைய பெருமைதான் நினைப்பு.
சிறிது நேரத்தில் பண்டசாலையிலிருந்து எல்லாரும் மாளிகைக்குப் புறப்பட்டார்கள். தந்தையாரோடு தேரில் ஏறிக் கொண்டிருந்த நகைவேழம்பர் தேர் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு தேரிலிருந்து கீழே இறங்கி விட்டதைச் சுரமஞ்சரி மற்றொரு தேரிலிருந்து பார்த்தாள்.
“ஏன் இறங்கி விட்டீர்கள்? நீங்கள் எங்களோடு மாளிகைக்கு வரவில்லையா?” என்று தந்தையார் கேட்டதற்கு “நான் துறைமுகத்துக்குள் சென்று வரவேண்டும். அங்கே போய் இன்று காலையில் துறைசேர்ந்த கப்பல்கள் எவை எவை என்று அறிந்து, அவற்றில் உங்கள் தவப் புதல்வியாருக்கு உதவி செய்த கப்பல் எது என்றும் தெரிந்துகொண்டு அப்புறம் மாளிகைக்கு வருகிறேன். வரும்போது சுரமஞ்சரி தேவிக்கு உதவி செய்த கப்பலின் தலைவனையும் கண்டுபிடித்து என்னோடு அழைத்து வருகிறேன். இன்றே அவனுக்கு நம் நன்றியைத் தெரிவித்துப் பரிசும் அளித்துவிடலாம்” என்று நகைவேழம்பர் கூறிச் செல்வதைக் கேட்டுத் திகைத்தாள் சுரமஞ்சரி.
‘ஐயா, நகைவேழம்பரே! அதற்கு இப்போது அவசரம் ஒன்றுமில்லை என்று சொல்லி அவரைத் தடுக்கவும் அந்தச் சமயத்தில் அவளுக்குத் துணிவில்லை. அதற்குள் தேர்களும் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டன. நகைவேழம்பர் துறைமுகத்துக்குள் நுழைவதையும் விரைந்து செல்லும் தேரிலிருந்தே அவள் பார்த்தாள். கலக்கம் கொண்டாள். சீனத்துக் கப்பல் தலைவனை நகைவேழம்பர் சந்தித்து மாளிகைக்கு அழைத்து வந்து விட்டால், தன்னோடு ஒர் இளைஞரும் கப்பலில் வந்ததை அவர் கூறுவார். அதையே அவர் வேறுவிதமாகப் புரிந்து, கொண்டிருக்கும் பட்சத்தில் ‘உங்கள் பெண்ணும் உங்கள் பெண்ணின் காதலர்போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து இன்று காலை என் கப்பலில் இடம் பெற்று வந்தார்கள்’ என்று தந்தையிடம் வந்து கூறினாலும் கூறுவாரே! அப்படிக் கூறிவிட்டால் நாம் என்ன செய்வது? என்று எண்ணி அச்சம் கொண்டாள் சுரமஞ்சரி.