உள்ளடக்கத்துக்குச் செல்

மணி பல்லவம் 2/006-022

விக்கிமூலம் இலிருந்து

6. வேழம்பர் விரைந்தார்

சுரமஞ்சரியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவசரமாக ஓவியன் மணி மார்பனைத் தேடிக் கொண்டு புறப்பட்டாள் தோழி வசந்தமாலை. சில நாட்களாக அவள் அறிந்தமட்டில் ஓவியன் மணிமார்பன் அந்த மாளிகையின் எல்லையில் இருப்பதாகவே தெரியவில்லை. ஓவியன் சொல்லாமற் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போயிருக்க வேண்டும் அல்லது நகைவேழம்பருடைய குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நகைவேழம்பருடைய கட்டுக்காவலில் அவன் இருக்கிறானா? இல்லையா என்பதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிய காரியமில்லை என்பதை வசந்தமாலை உணர்ந்திருந்தாள். அந்த மாளிகையின் எல்லைக்குள் நகைவேழம்பர் இருக்கும்போது அவருடைய பகுதிக்குள் நுழைந்து ஓவியனைத் தேடுவதென்பது இயலாத காரியம். அவர் இல்லாத நேரங்களிலும் காவல் உண்டு. நகைவேழம்பரின் மனத்தைப் போலவே அவருடைய குடியிருப்பு மாளிகையில் பாழடைந்த பகுதிகளும், இருண்ட கூடங்களும் அதிகமாக இருந்தன.

தன் தலைவியிடமிருந்து இளங்குமரனுக்கு மடல் வாங்கிக் கொண்டுபோன நாளுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைத் தானும் தன் தலைவியும் மீண்டும் சந்திக்கவே இல்லை என்பதை நினைத்தபோது வசந்தமாலைக்குப் பலவிதமான சந்தேகங்கள் உண்டாயின. ‘அந்த மடலைக் கொண்டு போனபின் அவன் திரும்பி வராமலே ஓடியிருக்கலாமோ’ என்று எண்ண இடமில்லை. ஏனென்றால், அந்த மடல் நகைவேழம்பர் கையில் சிக்கியிருக்கிறது. மடலோடு அதைக் கொண்டு சென்றவனும் அகப்பட்டிருக்கத்தான் வேண்டும். முடிவாக ஓவியன் மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்றிருக்க முடியாது என்ற உறுதியே வசந்தமாலையின் உள்ளத்தில் வளர்ந்தது. பெருமாளிகைத் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த நகைவேழம்பரின் பகுதியை அவள் அடைந்தபோது, அது இருளில் மூழ்கியிருந்தது. அதன் பெரிய கூடத்தில் “சிறிய தீபம்” ஒன்று காற்றுடன் போராடிக் கொண்டிருந்தது. வாயிற்புறம் ஒரு காவலன் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். நகைவேழம்பர் எங்கோ வெளியே போயிருந்தார் போலிருக்கிறது. வசந்தமாலை ஓசைப்படாமல் அடிமேல் அடி வைத்து அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். கூடத்திலிருந்த தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாகத் தேடினாள். வெளிப்புறம் தாழிட்டிருந்த இருட்டறை ஒன்றைத் திறந்தபோது அவள் எதிர்பார்த்துத் தேடிய மணிமார்பன் அங்கே தளர்ந்து ஒடுங்கிப் பொலிவிழந்து அமர்ந்திருப்பதைக் கண்டாள். தன் பின்னால் புறப்பட்டு வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு முன்னால் நடந்தாள் அவள். ஓவியன் பயந்து நடுங்கினான்.

“வந்த வழியே திரும்பிப் போய்விடுங்கள் அம்மா! அந்தக் கொலைகார மனிதர் இப்போது வந்து பார்த்தால் உயிரையே வாங்கிவிடுவார். இந்த மாளிகையின் பாதாள அறைகளில் கூண்டிலகப்பட்ட கொடும் புலிகள் இருப்பது தவிர, மாளிகைக்குள்ளேயே, கூண்டிலடைப்படாத புலிகளாய் மனிதர்களே இருக்கிறார்கள். இங்கு ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இன்னும் சிறிது காலம் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு உதவுவதாக முயன்று அதையும் அந்தக் கொடுமைக்காரர் கைகளினால் அழியச் செய்து விடாதீர்கள்” என்று பேசத் தொடங்கிய ஓவியனின் வாயைத் தன் வலது கையால் பொத்தி மேலே பேச விடாமற் செய்தாள் வசந்தமாலை.

“உங்களுக்கு ஒரு கெடுதலும் வராது. பேசாமல் என் பின்னால் வாருங்கள்” என்று அவன் காதருகில் கூறிவிட்டு, அவனுடைய மறுமொழியை எதிர்பாராமலே அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள் அவள். மென்மையான அவள் பிடியிலும் ஓவியனின் கை நடுங்கியது. நகைவேழம்பரது மாளிகையின் பின்புறமுள்ள தோட்டத்துக்குள் வந்து சேர்ந்ததும் ஓவியனைப் பிடித்துக் கொண்டிருந்த கைப்பிடியை விட்டாள் வசந்தமாலை.

“பார்த்தால் பயந்த மனிதரைப்போல் நடந்து கொள்கிற “நீங்கள் செய்கிற காரியங்களெல்லாம் பயமில்லாத காரியங்களாகச் செய்து விடுகிறீர்களே. ஐயா? எங்கள் தலைவி கொடுத்தனுப்பிய தாழைமடலை அதற்குரியவரிடம் சேர்க்காமல் நகைவேழம்பரிடம் கொடுத்திருக்கிறீர்களே; அது எப்படி நேர்ந்தது? உங்களை நம்பிக்கையான மனிதர் என்று எண்ணி மடலைக் கொடுத்தனுப்பிய எங்களுக்கு நல்ல பாடம் கற்பித்துவிட்டீர்களே?” என்று வசந்த மாலை கடுமையான குரலில் கேட்ட போது—

“அம்மணீ! அது என் பிழையில்லை, உங்கள் மடலை அதற்குரியவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மாளிகைக்குத் திரும்பி உங்கள் தலைவியைச் சந்தித்து மடலைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தோடு வந்தவனை அந்தக் கொடுமைக்கார மனிதர் வழிமறித்துப் பயமுறுத்தி மடலையும் பறித்துக் கொண்டு இந்த இருட்டறையில் கொண்டு வந்து தள்ளி விட்டாரே! நான் என்ன செய்வது?” என்று தன் இயலாமைக்குக் காரணத்தை ஓவியன் விளக்கினான்.

அவன் குற்றமற்றவன் என்பது வசந்தமாலைக்குப் புரிந்தது. ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி ஓவியன் சிறைபட்டுக் கிடந்து ஒளியிழந்து போயிருப்பதைப் பார்த்து அவள் மனம் இளகினாள்.

“கவலைப்படாதீர்கள். மறுபடியும் நீங்கள் அந்த இருட்டறைக்குப் போகும்படி நேராது. அந்தக் கொடுமைக்காரருடைய முகத்திலும் விழிக்க வேண்டிய அவசியமிராது. இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவி ஒரு காரியமாக உங்களை இந்த மாளிகையிலிருந்து வெளியே அனுப்பப் போகிறாள்; வாருங்கள். தலைவியைச் சந்திக்கப் போகலாம்” என்று ஓவியனை அழைத்துக் கொண்டு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் சென்றாள் வசந்தமாலை.

நகைவேழம்பரோடு தந்தையாரும் எங்கோ வெளியே போயிருந்ததனால் அவர்கள் திரும்புவதற்குள் ஓவியனிடம் செய்தியைச் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டுமென எண்ணினாள் சுரமஞ்சரி. ஓவியனைப் பற்றி எல்லா செய்திகளையும் கூறி அவன் குற்றமற்றவன் என்பதையும் வசந்தமாலை தன் தலைவிக்கு விவரித்தாள்:

“நாம் சந்தேகப்பட்டதுபோல் உங்களது மடல் நகை வேழம்பர் கையில் கிடைத்ததற்கு இவர் காரணமில்லை அம்மா! அந்த ஒற்றைக்கண் வேங்கை பயமுறுத்தி இவரிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டதுமல்லாமல் இவரைத் தன் மாளிகையின் இருட்டறையில் இத்தனை நாட்களாகச் சிறைவைத்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறது. இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச் சொல்லுவது?”

வசந்தமாலையிடமிருந்து இதைக் கேட்டபின் சுரமஞ்சரியின் உள்ளத்தில் ஓவியன்மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு மாறி அநுதாபமே நிறையப் பெருகிற்று. ஆறுதலாக அவனை நோக்கிக் கூறலானாள் சுரமஞ்சரி:

“உங்களைப் போன்றவர்கள் கலைத்திறமையோடு மன உறுதியையும், துணிவையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும். கொடுமைகளுக்கு அஞ்சி அடங்கி விடக் கூடாது. கொடுமைகளை எதிர்த்துக் கொடுமைகளிலிருந்து மீளவும் மீட்கவும்தான் அறிவு, கலை எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன.”

"இருக்கலாம், அம்மா! ஆனால் கொலை செய்யும் கைகளுக்கு முன்னால் கலை செய்யும் கைகள் வலுவிழந்து நடுங்குகின்றனவே? நான் என்ன செய்வது? வெள்ளை யுள்ளம் படைத்தவனாகவே வளர்ந்துவிட்டேன். மாற முடியவில்லை. அன்று இந்திரவிழாவின் போது. நாளங்காடிப் பூதசதுக்கத்தில் உங்களைச் சந்திக்க நேர்ந்தபோதே என்னுடைய போதாத காலத்தையும் சேர்த்துச் சந்தித்து விட்டேனோ என்னவோ?”

“இப்படி இன்னொருமுறை சொல்லாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று உங்களிடம் அவரது ஓவியத்தை வரையும் பணியை ஒப்படைத்தேனே தவிர இப்படியெல்லாம் நீங்கள் உங்களுடைய துணிவின்மையால் அடையும் துன்பங்களுக்கு என்னைக் காரணமாகச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வரைந்தளித்த ஓவியம் அழியாச் சித்திரமாக எனது ஓவியச்சாலையில் எக்காலத்தும் இருக்கும் என்று கனவு கண்டேன். இன்று பிற்பகல் நான் கனவு கண்டு கொண்டிருந்ததற்கு நேர்மாறான விதத்தில் பயன்படுவதற்காக அந்த ஓவியம் பறிபோய் விட்டது. அந்த ஒவியத்திலுள்ள மனிதரைத் துன்புறுத்திச் சிறை பிடித்துக் கொண்டு வருவதற்காக அதையே அடையாளமாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எப்பாடுபட்டாயினும் அதைத் தவிர்த்து அந்த மனிதருக்குக் கெடுதல் நேராமல் தடுப்பதற்கு உங்கள் உதவியை நாடவேண்டியவளாக இருக்கிறேன் ஓவியரே!”

சுரமஞ்சரி கூறிய இந்தச் செய்தியைக் கேட்டு மணிமார்பன் திடுக்கிட்டான். ஆனாலும் சிறைபட்டு அடங்குகிற அளவுக்கு இளங்குமரன் வலிமையற்ற வனில்லை என்ற உறுதியான நம்பிக்கை அவனைப் பதற்றமடைவதிலிருந்து தவிர்த்தது.

“ஓவியத்தை இங்கிருந்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்களே என்பதற்காக வேண்டுமானால் நீங்கள் கவலைப்படலாம் அம்மா! ஆனால் அதை வைத்து அவரைத் தேடிப் பிடித்து துன்புறுத்துவார்களோ என்று நினைத்துக் கவலைப்படுவதற்கு அவசியமில்லை! சிறைப்பட்டு அடங்குகிற வலிமைக் குறைவுள்ள மனிதரில்லை அவர். தேடிப் போகிறவர்கள் அவரிடம் சிறைப்படாமல் மீண்டு வந்தால் போதும்! வலிமையான சூழ்நிலையில் வலிமை வாய்ந்த மனிதர்களுக்கிடையே வலிமையோடு தான் இருக்கிறார் அவர்” என்று ஓவியன் சமாதானம் கூறிய பின்னும் சுரமஞ்சரி நிம்மதியடையவில்லை.

“ஐயா, ஓவியரே! என்னை உங்கள் சகோதரியாக எண்ணி மறுக்காமல் எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். அவர் எங்கிருந்தாலும் உடனே சந்தித்து இதைக் கூறி முன்னெச்சரிக்கை செய்தபின் நீங்கள் உங்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். கொடுமைக்காரர்கள் நிறைந்த இந்த மாளிகைக்கு மறுபடியும் திரும்பி வரவேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. வெளியேறிப் போகிற போக்கில் எனக்காக நீங்கள் இந்த உதவியைச் செய்துதானாக வேண்டும்.”

“நீங்கள் என்னவோ அந்த மனிதருக்காக உயிரையே விடுகிறீர்கள். உங்களைப் பொறுத்த வரையில் அந்த மனிதர் நெகிழ்ச்சியே இல்லாத கல்லாயிருக்கிறாரே அம்மா. அன்றைக்கு அந்த மடலை ஏற்றுக் கொள்ளாமல் என்னைத் திருப்பியனுப்பி அவமானப்படுத்தியது போதாதென்று இன்றைக்கு இன்னொரு முறையும் அவரிடம் போய் அவமானப்படச் சொல்கிறீர்களே?” என்று அதுவரை சொல்வதற்குத் தயங்கிக் கூசியதை அவளிடம் மனம் விட்டுச் சொன்னான் ஓவியன்.

இதைக் கேட்டுச் சுரமஞ்சரி ஓவியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு கணம் சுட்டெரித்து விடுவது போலிருந்தது அந்தப் பார்வை. மறுகணம் நிதானமாய் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறலானாள்:

“அவர் என்னை மதிக்காமல் இருக்கிறார் என்பதற்காக நானும் அவரை மதிக்காமலிருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. ஓவியரே! அவர் என்னிடமிருந்து விலக விலக நான் அவருடைய அண்மையை நாடித் தவிக்கிறேன். இன்னதென்று உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாததொரு நுண்ணிய உணர்வு இது!.. இதைப் பற்றி மேலும் என்னிடம் தூண்டிக் கேட்காமல் நான் உங்களிடம் கோரும் உதவியைச் செய்ய முடியுமா, இல்லையா என்பதற்கு மட்டும் மறுமொழி கூறுங்கள்.”

அந்த அன்புப் பிடிவாதத்தைக் கேட்டு ஓவியன் திகைத்துப் போனான். என்ன பதில் கூறுவதென்று தோன்றாமல் தயங்கினான் அவன், அவளுடைய பார்வை அவனைக் கெஞ்சியது.

“நீங்கள் கூறியபடி அவரைச் சந்தித்து இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்கிறேன் அம்மா! ஆனால் நான் மறுபடியும் இந்த மாள்கைக்குத் திரும்பி வருவேனென்று நீங்கள் எதிர்பார்க்கலாகாது. இந்த ஒற்றைக்கண் மனிதர் என்னை இங்கிருந்தால் எளிதில் வாழவிடமாட்டார். இன்று நள்ளிரவுக்குள் உங்களுடைய செய்தியை உரியவரிடம் கூறிக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு நான் புறப்பட்டு விடுவேன்.”

“எங்கே புறப்படப் போகிறீர்கள்?”

“எங்காவது நல்லவர்கள் இருக்கிற இடத்தைத் தேடிப் புறப்பட வேண்டியதுதான்!”

“அப்படியானால் நாங்களெல்லாம் கெட்டவர்களா ஓவியரே?”

“நீங்கள் நல்லவர்களாயிருந்தால் மட்டும் போதுமா? உங்களுக்கும் இப்போதிருந்தே இந்த மாளிகையில் பல துன்பங்கள் வரத் தொடங்கிவிட்டனவே! உங்கள் மனத்துக்குப் பிடித்தவரை உங்கள் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை! உங்கள் தந்தையாரையும் அவருடன் சூழ்ந்திருப்பவர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

“அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஓவியரே! நான் இந்த மாளிகையில் வாழப் பிறந்தவள். இங்கு விளைகின்ற எல்லா இன்ப துன்பங்களையும் அநுபவித்துத்தான் ஆகவேண்டும்! நீங்கள் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள். போகுமுன் எனக்கு இந்த உதவியைச் செய்துவிட்டுச் செல்லுங்கள்.”

ஓவியன் வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

“இதோ இதைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்”

ஓவியன் திரும்பினான். தன் கழுத்தில் அணிந்திருந்த மணி மாலையைக் கழற்றி அவனிடம் நீட்டினாள் சுரமஞ்சரி. ஓவியன் அதைப் பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்றான்.

“இவ்வளவு பெரிய பரிசுக்குத் தகுதியானவனா நான்”

“தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இதுந்தால் போதும். வாங்குகிறவர்களுக்கு மறுக்காமல் விரிங் கொள்வதுதான் பெரிய தகுதி. இப்போது நீங்கள் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/006-022&oldid=1149819" இலிருந்து மீள்விக்கப்பட்டது