மணி பல்லவம் 2/008-022
பெருமாளிகையின் வெளிப்புறம் முதல் தலைவாயில் வரை உடன் வந்து, ஓவியன் மணிமார்பனை வழியனுப்பி விட்டு உள்ளே திரும்பிச் சென்ற வசந்தமாலை, நகைவேழம்பர் ஓவியனைப் பின்தொடரும் செய்தியைச் சுர மஞ்சரியிடம் போய்க் கூறினாள்.
நடப்பதெல்லாம் நாம் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது அம்மா! நகைவேழம்பர் மாளிகைக்குள் இல்லையென்று நினைத்துக் கொண்டு இவ்வளவு ஏற்பாடும் செய்தோம்; கடைசி விநாடியில் புற்றுக்குள்ளிருந்து பாம்பு புறப்பட்டதுபோல் இந்த மனிதர் எங்கிருந்தோ வந்து பாய்ந்து விட்டாரே! இனிமேல் என்னம்மா செய்வது? ஓவியர் இவர் கையில் சிக்கிக் கொண்டுவிட்டால் நீங்கள் கூறியனுப்பியிருக்கும் செய்தி உரிய இடத்துக்குப் போய்ச் சேராதே?”
இதைக் கேட்டுச் சுரமஞ்சரி அதிர்ச்சியடைந்து உட்கார்ந்து விட்டாள்.
“இப்படி நடக்குமென்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, வசந்தமாலை! இந்த மாளிகையில் நினைத்தபடி எந்தக் காரியத்தைத்தான் செய்யமுடிகிறது? ஒவ்வொரு முயற்சியும் தொடங்கும்போதே அதற்கு எதிர் முயற்சியும் எங்காவது ஒரு மூலையிலிருந்து தொடங்கி விடுகிறதே. நமது முயற்சிகளும், எண்ணங்களும் தோல்வியடைந்து முறியும்போதுதான் நீயும் நானும் நிராதரவானவர்கள் என்பதை நாமே புரிந்து கொள்ள முடிகிறது. இன்று நேற்று ஏற்பட்ட கெடுதல் அன்று இது. இந்த மாளிகையின் வரலாற்றில் என்றோ, எங்கோ, ஏற்பட்டிருக்கிற கெடுதல் இது இந்தக் கெடுதலுக்குத் தந்தையாரும் துணையிருக்கிறார் என்றே தெரிகிறது.”
சற்றும் மகிழ்ச்சியின்றிச் சலிப்போடு பேசினாள் சுரமஞ்சரி. அவள் சிறிது நேரம் கழித்து வசந்தமாலையையும் அழைத்துக் கொண்டு தன் மாடத்திலிருந்து கீழிறங்கித் தேரில் குதிரைகளைப் பூட்டச் சொல்லிப் பணியாட்களுக்கு உத்தரவிட்டாள். தேர், புறப்படுவதற்குரிய நிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இருவரும் தேரில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள்.
சுரமஞ்சரியும், வசந்தமாலையும் இருந்த தேர் மாளிகை வாயிலைக் கடந்து வெளியேறுமுன் பெருநிதிச் செல்வராகிய தந்தையார் சிரித்தபடி விரைந்து வந்து தேருக்குக் குறுக்கே வழி மறித்தாற்போல் நின்றார். சுரமஞ்சரி தேரை நிறுத்திவிட்டுக் கோபத்தோடு தன் தந்தையைக் கடுமையாகப் பார்த்தாள்.
“சுரமஞ்சரி! நான் எப்போதும் உன் வழியில் குறுக்கிட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்றுதானே இப்படிக் கோபப்படுகிறாய்?”
கேட்டுவிட்டு மர்மமாகச் சிரித்தார் அவர். அவளும் விடவில்லை. கோபத்தில் சுடச்சுடப் பதிலளித்தாள்:
“பிறருடைய வழிகளில் குறுக்கிடாமல் வாழ்வதற்குச் சிலரால் முடியாது அப்பா !”
“அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதைத்தானே இப்படிக் குறிப்பாய் மறைத்துச் சொல்ல வருகிறாய்? நல்லது. என் மகள் சாதுரியமாகப் பேசினால் நானும் பெருமை அடைய வேண்டியதுதானே? ஆனால் நீ சொல்வதைச் சிறிது மாற்றிச் சொன்னால்தான் நான் ஒப்புக் கொள்ள முடியும். நான் என்னொருவனுடைய வழியில் இயல்பாக நடந்து போனாலே அது பல பேருடைய வழிகளில் குறுக்கீடாக முடிகிறது. நான் நடந்து போகிற வழியே அத்தகையதென்பதா, அல்லது வேறு விதமான வழியில் நடந்துபோக என்னால் முடியாதென்பதா? எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை, மகளே!”
“எதற்காகப் பேச்சை வளர்க்கிறீர்கள் அப்பா? இப்போது நாங்கள் வெளியே புறப்பட்டுப் போகலாமா, கூடாதா? அதை முதலில் சொல்லுங்கள்.”
“போகலாம் சுரமஞ்சரி! ஆனால் எங்கே புறப்பட்டுப் போகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
சுரமஞ்சரி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினாள். தந்தையார் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துச் சிரித்தார்.
“அதனால் என்ன? எங்கே போகிறாயென்று என்னிடம் சொல்ல வேண்டாம். நீ எங்கே போக வேண்டுமானாலும் போய்விட்டுவா. ஆனால் இந்த இரவு வேளையில் தனியாகப் போக வேண்டாம். இதோ இவனை உங்களோடு துணைக்கு அனுப்புகிறேன்” என்று வாயிற் பக்கம் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஓர் ஊழியனைக் கூப்பிட்டுத் தேரைச் செலுத்துகிறவனாக அமரச் சொன்னார் அவர்.
உடனே சுரமஞ்சரி தேரோட்டியின் இடத்தை அவனுக்காக விட்டு உள்ளே அமர வேண்டியதாயிற்று. தந்தையின் தந்திரமான ஏற்பாடு அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தன்னுடன் துணைக்கு ஆளனுப்புவதுபோல் தன்னைக் கண்காணிக்கவே அவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அவள் விளங்கிக் கொண்டாள்.
தன் மனத்தில் அவள் நினைத்துக் கொண்டு புறப்பட்ட காரியம் பின் தொடர்ந்து செல்லும் நகைவேழம் பரால் ஓவியனுக்குத் துன்பம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க வேண்டுமென்பதாயினும் இப்போது அதை மாற்றிக் கொண்டாள்.
“நெய்தலங்கானல் கடற்கரைக்குப் போய்ச் சிறிதும் நேரம் காற்றாட இருந்து வரலாம்” என்று வசந்தமாலையிடம் சொல்லுவதுபோல் தேரோட்டுவதற்கு அமர்ந்திருந்தவனுக்கும், தந்தையாருக்கும் நன்றாகக் கேட்கும் படி இரைந்து சொன்னாள் சுரமஞ்சரி.
‘நெய்தலங்கானல்’ — கடற்கரையை நினைத்தவுடன் சிறு வயதில் தானும் வானவல்லியும், தாயுடன் அங்கே சென்று விளையாடிய நாட்களெல்லாம் சுரமஞ்சரிக்குத் தோன்றின. மருதநிலம் முடிந்து நெய்தல் நிலம் ஆரம்பமாகும் அழகிய கடற்கரை அது. அங்கே ஒரு பக்கம் தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்களும், இன்னொரு பக்கம் புதராக அடர்ந்த தாழை மரங்களும் சேர்ந்து காட்சியளிக்கும். நடுநடுவே உப்பங்கழிகள் சிற்றாறுகளைப் போல் மணல் வெளியைப் பிளந்து பாய்ந்து கொண்டிருக்கும். மனத்தில் யாரைப் பற்றியோ, எதைப் பற்றியோ, கவலைப்பட்டுக் கொண்டிக்கும் நிலையில் இன்று அந்தக் கடற்கரையின் அழகுகளையெல்லாம் தன்னால் அனுபவிக்க முடியாதே என்று சுரமஞ்சரி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். தேர் சென்று கொண்டிருந்தது.
சுரமஞ்சரி எந்த இடத்துக்கோ புறப்பட நினைத்து வேறு எந்த இடத்துக்கோ போக நேர்ந்துவிட்ட அந்த இரவில் மருவூர்ப்பாக்கத்தின் குறுகிய தெருக்களில் நகைவேழம்பர் ஓவியனை ஒடஒட விரட்டிக் கொண்டிருந்தார். ஓவியனுக்கு எப்படியாவது அந்த மனிதப் பேயிடமிருந்து தப்பிவிட வேண்டுமென்று தவிப்பு ஏற்பட்டிருந்ததால் அவன் பூதசதுக்கத்திலே தொடங்கிய ஓட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை. அதேபோல் ஓவியனைப் பிடித்துவிட வேண்டுமென்ற பிடிவாதம் நகைவேழம்பருக்கும் இருந்ததனால் அவர் பின்பற்றித் துரத்துவதையும் நிறுத்தவில்லை. ஏமாற்றி ஏமாற்றி இன்பம் கண்ட மனமுடைய அவர் எந்த நிலையிலும் தாமே ஏமாந்து போக விரும்பியதில்லை; நேர்ந்ததும் இல்லை. அந்த ஓவியனைத் தப்பவிடுவதற்கு அவர் சித்தமாக இல்லை. அப்படியே தப்பிவிடுவதாயிருந்தாலும் அந்த அரும்பெரும் மணிமாலையோடு அவன் தப்புவதை அவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓவியனுடைய போதாத காலமோ என்னவோ நடுவழியில் நகைவேழம்பரோடு அவனைத் துரத்துவதற்கு இன்னும் நாலைந்துபேர் சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அப்படிச் சேர்ந்து கொண்டவர்கள் வேறு யாருமில்லை. மாலையில் இளங்குமரனின் ஓவியத்தோடு அவனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வருவதற்காகப் பெரு மாளிகையிலிருந்து புறப்பட்டுப் போன முரட்டு யவன ஊழியர்களேதான். தற்செயலாக இளங்குமரனைத் தேடி மருவூர்ப் பாக்கத்துப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் இப்போது நகைவேழம்பரோடு சேர்ந்துகொண்டு தன்னைத் துரத்தவே ஓவியன் மிகவும் அச்சம்கொண்டு தலைதெறிக்கிற வேகத்தில் ஆலமுற்றத்தை நோக்கி ஒடலானான். எப்படியாவது படைக்கலச் சாலைக்குள் போய் நுழைந்துவிட வேண்டுமென்பது அவன் வேகத்தின் இலட்சியமாக இருந்தது. படைக்கலச் சாலைக்குள் போய் நுழைந்து கொண்டால் அங்கே இளங்குமரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குப் பாதுகாப்புத்தான் என்று எண்ணினான்.
‘இளங்குமரன் இருந்தால் அவரிடமே அடைக்கலம் புகுந்துவிடுவேன். அவர் இல்லாவிட்டால் அவரைத் தேடிவந்ததாகச் சொல்லி அங்கிருப்பவர்களிடம் அடைக்கலம் புக வேண்டியதுதான்’ என்று நினைத்து அவசரமும், அவசியமும் உண்டாக்கியிருந்த சக்தி மீறிய விரைவுடன் முன்னேறிக் கொண்டிருந்தான் மணிமார்பன்.
பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் அவனைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
“திருட்டுப் பயலே! இன்று நீ அகப்பட்டால் உன்னை உயிரோடு விடுகிற உத்தேசம் இல்லை. உன்னால் முடிந்த வரை ஓடு, எதிரே இனிமேல் கடல்தான் இருக்கிறது” என்று பின்னாலிருந்து நகைவேழம்பர் சீறுவது ஓவியன் செவிகளில் ஒலித்து அவனை நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தது. இவ்வளவு தொலைவு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த பின்பு இந்தக் கொடுமைக்காரரிடம் அகப்பட்டுக் கொள்வதைப்போல் பேதமை வேறு இருக்க முடியுமா? என்று எண்ணி எண்ணி அந்த எண்ணத்தினால் இன்னும் சிறிது நம்பிக்கையை உண்டாக்கிக் கொண்டான் மணிமார்பன். படைக்கலச் சாலையின் வாயில் தென்பட்டதும் அடைத்து மூடியிருந்த அதன் பிரம்மாண்டமான மரக்கதவுகளைப் பார்த்துத் தன் உயிர் தப்புவதற்கு உதவுமென்று தான் நம்பிக்கை கொண்டு வந்த ஆசையின் வழியே அடைப்பட்டுப் போய் விட்டது போல் பரிதவித்துப் பதைபதைத்து நின்றுவிட்டான் அவன்! அந்தப் பக்கம் ஆலமுற்றத்துக்குக் கோவிலுக்கு அப்பால் அலைபாய்ந்து ஆர்ப்பரிக்கும் கடல் இந்தப் பக்கம் கொல்லப் பாய்ந்து வரும் கொடும் புலிகளைப் போல் எதிரிகள்— எதிரே அடைத்த கதவுகள்— மணி மார்பன் நம்பிக்கையிழந்துவிட்டான். அவன் கண்களுக்கு முன்னால் உலகம் முழுவதுமே இருண்டு சுழன்று கொண்டிருந்தன.
அவனுக்கு நினைவு தப்புவதற்கு முன் மிக அருகில் வேகமாக வரும் தேரின் மணிகள் ஒலித்தன. எதிர்ப்பக்கமிருந்து படைக்கலச் சாலையின் வாயிலை நோக்கி ஒரு தேர் விரைந்து வருவதைப் பார்த்தான் மணிமார்பன். தள்ளாடி விழுவதற்கிருந்தவன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றான். திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நீலநாகமறவரின் அந்தத் தேர் நின்றதும் அவர் கீழே இறங்கினார். மணிமார்பன் ஒடிப்போய் அவர் அருகே நின்று கைகூப்பி “ஐயா! நான் இளங்குமரனுக்கு மிகவும் வேண்டிய நண்பன். உங்களுக்கு அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு என்னை இந்தக் கொடுமைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். இவர்கள் இளங்குமரனைச் சிறை பிடித்துக் கொண்டு போவதற்காக அவனுடைய ஓவியத்தோடு அவனைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள். என்னையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று விடலாமெனத் துரத்துகிறார்கள். நல்லவேளையாகத் தெய்வமே வந்ததுபோல் நீங்கள் தேரில் வந்தீர்கள்” என்று மூச்சு இரைக்கப் பதறி நடுங்கிப் போவதை அநுதாபத் தோடு பார்த்தார் நீலநாகமறவர். அவர் அவனைக் கைப்பற்றிக் கொண்டு கூறலானார்.
“நான் உனது தெய்வம் இல்லை, தம்பீ! தெய்வம் அதோ அங்கே ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிறது. உனக்கும் எனக்கும், மிக அருகில்தான் இருக்கிறது.”
“ஆனால் நீங்கள் அதைவிட மிகவும் அருகில் இருக்கிறீர்களே ஐயா!” என்றான் ஓவியன்.
“பயப்படாதே! உன்னையும், என்னையும் போலத் தேடித் தவிப்பவர்களுக்குத் தெய்வம் எங்கிருந்தாலும் மிக அருகில்தான் இருக்கிறது. இதோ நிற்கிறார்களே இவர்களைப் போல் கருணையும், அன்பும் இல்லாத கொடியவர்களுக்காகத்தான் அது வெகு தொலைவில் இருக்கிறது” என்று சொல்லி ஓவியனைப் பின்னால் நிறுத்திவிட்டு வளைத்துக் கொண்டாற்போல் முன்புறம் நின்றிருந்த அந்த எதிரிகளை நெருங்கினார் நீலநாகமறவர்.
“உங்களுக்கு என்ன வேண்டும்?”
பெருமலை நகர்ந்து வந்ததுபோல் முன் வந்து நின்று கொண்டு இப்படிக் கேட்ட அந்தத் தோற்றத்தை நகை வேழம்பரும் அவருடனிருந்த முரட்டு மனிதர்களும் அண்ணாந்து பார்த்தார்கள். நகைவேழம்பர்தான் துணிந்து பதில் பேசினார்.
“உங்களுக்குப் பின் ஒளிந்துகொண்டு அடைக்கலம் கேட்கிறானே, அந்தப் பிள்ளையாண்டான் திருடன். பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகையிலிருந்து மணிமாலையைத் திருடிக் கொண்டு ஓடிவந்துவிட்டான். அவனை எங்களிடம் விட்டுவிட வேண்டும்.”
“நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை. இந்தப் பிள்ளையின் பயத்தையும் நடுக்கத்தையும் பார்த்தால் இவனைத் திருடும் தொழிலுக்குத் துணிந்தவன் என்று திருடர்களே ஒப்பமாட்டார்களே! நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பிள்ளைதான் தைரியத்தை உங்களிடம் திருட்டுக் கொடுத்துவிட்டு நிற்கிறான் இப்போதும்!” என்று கூறிக் கொண்டே நகைவேழம்பருக்கு அருகிலிருந்தவன் கையில் வைத்திருந்த இளங்குமரனின் ஒவியத்தை வலித்து அவனிடமிருந்து பறித்தார் நீலநாகமறவர். அவன் படத்தை விடாமல் இறுக்கிப் பற்றினான்.
“ஓகோ! அவ்வளவு பலமிருக்கிறதா உன் உடம்பிலே” என்று படத்தை ஓங்கி இழுத்தார் நீலநாகர். படம் அவர் கைக்கு வந்தது. படத்தை விட்டு விட்ட அதிர்ச்சியில் அதை வைத்துக் கொண்டிருந்தவன் தடுமாறிக் கீழே விழுந்தான். நகைவேழம்பர் ஒற்றைக் கண்ணில் சினம் பொங்க, இடுப்பிலிருந்து குறுவாளை உருவிக் கையை ஓங்கிக் கொண்டு நீலநாகமறவர் மேல் பாய வந்தார்.
ஓங்கிய கையை நீலநாகர் தமது இடது கையால் அலட்சியமாகப் பிடித்து நிறுத்தினார் பின்பு மெல்லச் சிரித்துக் கொண்டே ஏகவசனத்தில் விளித்துக் கேட்டார்; “அப்பனே, கண்களில்தான் ஒன்றை இழந்து விட்டாய்: உயிரையும் இப்போது என்னிடம் இழக்க விரும்புகிறாயா நீ”