மணி பல்லவம் 2/022-022

விக்கிமூலம் இலிருந்து

22. கடைசி நாளில் கற்றது

திருநாங்கூர்ப் பூம்பொழிலின் ஒரு மேடையில் அடிகளும் இளங்குமரனும் வீற்றிருந்தனர். சாயங்கால வேளை உலகம் பகல் என்னும் ஒளியின் ஆட்சியை இழந்து போய்விட்டதற்காகச் சோக நாடகம் நடத்துவதுபோல விளங்கும் மேற்கு வானம். போது ஒடுங்கும் அந்தி மாலைக்குச் சொந்தமான மேலைத்திசை மூலையிலே இந்தச் சோக நாடகத்துக்குத் திரையெழுதினாற் போன்ற காட்சிகள். மேற்கு நோக்கி அமர்ந்திருந்த அடிகளுக்கு முன்புறம் கிழக்கு முகமாகப் பார்த்தவாறு இளங்குமரன் இருந்தான். அவரிடமிருந்து ஏதோ நிறையக் கேட்டு அறிந்து கொள்வதற்கு இருப்பதுபோல அமைந்து அடங்கி இருந்தான் இளங்குமரன். அவரும் அவனுக்குக் கூறுவதாக மனத்துக்குள் சிந்தனைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருப்பது போன்ற முகபாவத்தோடு இருந்தார். மேற்கு வானத்தில் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன.

இதே போன்ற ஒரு மாலைநேரத்தில் முதன் முதலாக நீலநாக மறவர் தன்னை அங்கே அழைத்துக் கொண்டு வந்த நாளை நினைத்தான் இளங்குமரன். இறந்த காலத்தின் நிகழ்ச்சியாக எங்கோ ஒரு கோடியில் நெடுந் தொலைவு நடந்து வந்த பின்னால் காலவிதியின் அந்தப் பழைய திருப்பத்துக்குப் பாவனைகள் மூலமாகவே பின்னோக்கி யாத்திரை போய்விட்டுத் திரும்பினான் அவன்.

அடிகளின் குரல் அவனை அழைத்துப் பேசத் தொடங்கியது.

“இளங்குமரா! இன்று காலை நீ கற்கவேண்டிய கடைசி சுவடியின் கடைசி வாக்கியத்தையும் கற்று முடித்து விட்டாய். அடிக்கடி உன்னைத் தேடிக் கொண்டு இங்கே வருவாரே, அந்தப் பெரியவர் வீரசோழிய வளநாடுடையார்-அவர் எப்போதோ ஒருநாள் கோபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்; அதை நான் இந்த விநாடி வரை மறக்கவில்லை. “இளங்குமரனை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து எப்போது விடுதலை செய்யப் போகிறீர்கள்?” என்று என்னை அவர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நான் விடை சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அதாவது உன்னை இந்த ஞானச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய நேரத்துக்கு வந்தாயிற்று. விடுபட வேண்டிய தகுதி உனக்கும் வந்துவிட்டது.

“இந்த உலகத்தில் எல்லாச் சிறைகளிலிருந்தும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுவதுதான் ஞானம் என்று நான் பல்லாண்டுகளாக நினைத்தும் கற்பித்தும் உணர்ந்தும் வந்ததை ஒரே ஒரு கணத்தில் மாற்றி ஞானச் சிறை-என்று சொல்லிய தைரியத்தை அந்தக் கிழவரிடம் தான் கண்டேன் அப்பா!” என்று அடிகள் சொல்லிச் சிரித்தபோது-

“அதை அடிகள் பொறுத்தருள வேண்டும். அவர் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறியிருப்பார்” என்று இளங்குமரன் குறுக்கிட்டுக் கூறினான்.

“பொறுத்தருளாவிடில் இதுவரை இக்கேள்வி என் மனத்திலேயே தங்கியிருக்குமா? நான் பொறுத்துக் கொள்வதற்குக் கடமையும் உண்டு. என்னிடம் நீலநாகன் உன்னைப் பற்றி எப்போது முதல் முறையாகச் சொன்னானோ அப்போதிருந்து நானே உன்னைக் காண்பதற்குத் தவித்தேன் என்ற இரகசியத்தை இன்று நீ தெரிந்து கொள்வதனால் தவறில்லை. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்ய ஏற்ற விளை நிலமாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். என் போன்றவர்களுக்கு ‘அவதிஞானம்’ என்று ஒருணர்வு உண்டு. ‘முன்பின் தொடர்பின்றி இன்னதை இப்படிச் செய்தால் வெற்றிதான் கிடைக்கும்’ என நாங்கள் அவ்வப்போது மனத்தில் தோன்றும் தோற்றத்தால் உறுதி கொள்ளும் செயல்களும் மங்களமாகவே அமையும். நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைவினாலேயே உணர்ந்து கணிக்கும். அவதி ஞானத்தைப் பற்றி உனக்கும் கற்பித்திருக்கிறேன். மனம் கனிந்தால் அந்த அபூர்வ ஞானம் எளிது.

“இளங்குமரா! உன்னைப் பற்றிக் கேள்விப்படுதற்கு முன், காண்பதற்கு முன், என்னுடைய நினைவுகளிலும் சங்கல்பத்திலும் நெடுங்காலமாக நான் பாவனை செய்து கொண்டு வந்த பரிபூரணமான மாணவன் எவனோ, அவனாகவே நீ விளைந்து வந்தாய். நீலநாகன் உன்னை இங்கே அழைத்து வந்த நாளில் நம்முடைய முதற் சந்திப்பின்போது நான் கூறிய வார்த்தைகளை நீ இன்னும் மறந்திருக்க மாட்டாய். சந்திக்கின்றபோது உண்டாகிற உறவு பிரிகிறபோது நினைவு வருவதைத் தடுக்க முடியுமானால் உலகத்தில் துக்கம் என்ற உணர்வே ஏற்பட்டிருக்காது. என்னைப் போலவே அந்தப் பழைய நினைவுகளை நீயும் இப்போது திரும்ப எண்ணிக் கொண்டிருப்பாயானால் நான் அப்போது கூறிய வார்த்தைகளையும் மறந்திருக்க மாட்டாய். அறியாமையையும் ஆணவத்தையும் தவிர உங்களிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் கொண்டு வரவில்லை என்றாய் நீ உன்னையே எனக்குக் கொடு” என்று வாங்கிக் கொண்டேன் நான். இன்னும் சில வார்த்தைகளும் அப்போது உன்னிடம் கூறினேன்.

‘என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாக ஏற்ற முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்துவிட்டான்’ என்று பூரிப்போடு உன் கைகளைப் பற்றிக் கொண்டு நான் மகிழ்ச்சிக் கூத்தாடியதையும் நீ மறந்திருக்க மாட்டாய். அவ்ற்றை எல்லாம் திருப்பிக் கூறுவதன் நோக்கம் இளங்குமரன் காவியத்தின் நிறைவெல்லையாக நான் எதைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ அதைப் பொய்யாக்கிவிடாதே என்று வற்புறுத்துவதுதான்.

இப்படி இந்தச் சொற்கள் உணர்ச்சி தோய்ந்து அவரிடமிருந்து ஒலித்தபோது முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு நிமிர்ந்து இளங்குமரன் அப்போது தான் கிழக்கே உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனையும் அவருடைய முகத்தையும் சேர்த்துப் பார்த்தான். நாளைக்கு விடிந்தால் சித்திரா பெளர்ணமி என்பதும் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழா என்பதும் அவனுக்கு நினைவு வந்தன. தான் திருநாங்கூரில் குருகுல வாசம் செய்த காலத்தில் எத்துணை இந்திர விழாக்கள் நடந்திருக்கும் என்று கழிந்த ஆண்டுகளை எண்ணியது அவன் மனம். தான் நகரத்தில் இருந்தபோது நடந்த இந்திர விழாக்களையும் நாளைக்குப் புதிய மனிதனாகப் புதிய கண் பார்வையோடு சென்று காண்பதற்கிருக்கும் இந்திர விழாவையும் இணைத்து நினைத்தான் அவன். அடிகளின் பேச்சு மீண்டும் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் அவருடைய சொற்களைக் கேட்கலானான்.

“இளங்குமரா! நீ எங்கிருந்தாலும் திருநாங்கூரின் இந்தப் பூம்பொழிலிலிருந்து இரண்டு கண்கள் உன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பாவனை செய்து கொண்டிரு. அந்தப் பாவனை நீ செல்லுமிடங்களில் எல்லாம் உனக்கு வெற்றியை அளிக்கும். குருகுல வாசத்தை முடித்துக் கொண்டு எண்ணற்ற மாணவர்கள் உன்னைப் போல் இங்கிருந்து பிரிந்து போயிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் குருவைப் பிரிந்து போவதற்காகக் கவலைப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பிரிய நேருவதற்காக சாமான்ய மனிதரைப் போலக் குரு கவலைப்பட்டதில்லை. இன்றைக்கு உன்னுடைய குருவுக்கு நீதான் அப்படிப்பட்ட கவலையைத் தருகிறாய்” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் குரல் நெகிழ்ந்து அதற்கு மேல் சொற்களே வராமல் கண்கலங்கி அவனைப் பார்த்தார்.

அவனிடமிருந்து பதில் இல்லை; பார்வையும் இல்லை. இளங்குமரன் கீழே குனிந்தவாறு இருந்தான். அடிகள் அருகில் வந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அவன் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.

“நீ எதற்காக அழுகிறாய்?”

“சுவாமி! நான் உங்களுடைய பேரறிவுக்கு முன்னால் அற்பமானவன். சுகதுக்கங்களினால் சிறிதும் சலிப்படையாமல் உபசாந்திநிலை பெற்றவராகிய நீங்களே எனக்கு விடை கொடுக்கக் கண் கலங்குகிறீர்கள். உங்களைப் போன்ற ஞான தேசிகரைப் பிரிந்து புறப்படும் நான் அழாமல் தாங்கிக் கொள்ள இயலுமா? இதுவரை நான் கற்றதெல்லாம் இதற்கு முன்பு கல்லாதிருந்த காலத்து அறியாமையின் அளவைத் தெரிந்து கொள்ளும் அளவு தான். அற்பனாகிய எளியேனுடைய பிரிவு உங்களைக் கண்கலங்கச் செய்யுமானால் அடியேன் நிறையப் பாவம் செய்தவனாக இருக்க வேண்டும்.”

இளைத்த உடல் நடுங்கிட எழுந்து நின்ற இளங்குமரன் அழுது கொண்டே அடிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவற்றைப் பற்றிக் கொண்டான். அவனுக்குத் தெரியாமல் தம்முடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனுடைய கண்ணீரைத் துடைப்பதற்காக அவனை எழுப்பி நிறுத்தித் தோளோடு தோள் தழுவிக் கொண்டார் அந்தப் பெரியவர். கலங்கியறியாத அவர் மனமும் அன்று கலங்கியிருந்தது.

ஞானக் கடலும் ஞான ஆறும் கலப்பது போன்ற இந்தத் தூய்மையான ஞான சங்கமத்தைப் பார்க்கக் கூசியவனைப்போல் என்றும் களங்கமுடைய சந்திரன் தன்னை மேகத்தில் மறைத்துக் கொண்டான். தன்னுடைய ஆணவம் மெய்யாகவே அழிந்துவிட்டதா, இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகவே அடிகள் இந்தக் கடைசி நாளில் இப்படி விநயமாகப் பழகுகிறாரோ என்று இளங்குமரன் அஞ்சினான். அந்த அச்சத்தினால்தான் அவன் உடலே நடுங்கியது. அவனுடைய வீணான அச்சத்தை அடிகள் தம் பேச்சினாலேயே போக்கினார்.

“பாசங்களை விட்டுவிட வேண்டும் என்று இவ்வளவு காலமாக உனக்குக் கற்பித்து வந்த எனக்கு உன்னிடமிருந்து கிடைத்தது என்ன தெரியுமா?”

“என்ன சுவாமி?”

“என்றும் விடமுடியாத பெரிய பாசம்”

அவனுக்குத் தெரியாமல் மறுபடியும் கண்களில் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டார் அவர். அன்றிரவு விடிய விடிய இளங்குமரனுக்கு அவர் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் விடிந்து சில நாழிகைக்குப் பின் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து நீலநாகமறவர் இளங்குமரனை அழைத்துப் போவதற்கு வந்துவிட்டார். தம்முடைய மனத்தை ஆட்கொண்ட புதிய மாணவனைப் பழைய மாணவனாகிய நீலநாகனிடம் திரும்ப ஒப்படைக்கும்போதும் நாங்கூர் அடிகள் உணர்ச்சி வசப்பட்டார். இளங்குமரன் ஞான மலையாகிய தன் குருவை வணங்கிவிட்டுச் சமயவாதம் புரிவதற்கு அவர் ஆசியுடன் தனக்கு அளித்த ஞானக் கொடியை வலது கையில் தாங்கியபடி பூம்பொழிலுக்கு வெளியே பாதங்களைப் பெயர்த்து வைத்து நடந்தபோது யாத்திரை போயிருந்த விசாகை எதிரே திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

“என்னுடன் வாதிடுங்களேன். முதல் வெற்றியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடி நின்றாள் விசாகை. நீலநாகமறவர் திகைத்தார். இளங்குமரன் சிறிது தயங்கியபின், “அம்மையாரே! தொடக்க நாளில் என்னுடைய பயபக்தியையே பிட்சையாக ஏற்றுக் கொண்ட வகையில் நீங்களும் எனக்கு ஒரு குரு! உங்களோடு வாதிட மனம் ஒப்பவில்லை. உங்களை வணங்குகிறேன், வாழ்த்துங்கள்” என்று வணங்கினான்.

விசாகை அவனை வாழ்த்திவிட்டுச் சொன்னாள்:

“இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்.”

இளங்குமரன் நீலநாகமறவரோடு தேர் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனைப் பூம்புகாருக்கு அழைத்துச் செல்லத் தேர் காத்திருந்தது. தன்னுடைய ஞான குருவின் கண்களை மானசீகமாகப் பாவனை செய்து கொண்டே நடந்தான். எதிரே அவனுடைய வழி நீண்டு விரிந்து கிடந்தது.

(இரண்டாம் பருவம் முற்றும்)
"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/022-022&oldid=1149853" இலிருந்து மீள்விக்கப்பட்டது