மணி பல்லவம் 4/14. படிப்படியாய் வீழ்ச்சி
ஏமாறக்கூடாது ஏமாறக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தும் அந்த நினைப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தாலேயே தான் ஏமாந்து போய்விட்டதை உணர்ந்தார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வர் . இயல்பாகவே கோழையா, நடிப்புக் கோழையா என்று புரிந்துகொள்ள முடியாமல் நீண்ட காலமாகத் தான் கொண்டிருந்த மனக்குழப்பம் இன்று தெளிவாகிவிட்டதாக தோன்றியது அவருக்கு. தானாகவே வருகிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதிலும், சில சந்தர்ப்பங்களைத் தனக்காகவே வரும்படி செய்துகொள்வதிலும் பெருநிதிச் செல்வர் வல்லவர் என்பதைப் பலமுறை உடனிருந்தே அறிந்திருந்த நகைவேழம்பர் இன்று அதைத் தனது சொந்த அனுபவத்திலும் புரிந்துகொண்டார்.
பெருநிதிச் செல்வரை வெற்றி கொள்வதற்கு இதற்கு முன் தனிமையிலே தனக்கு வாய்த்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தான் நழுவ விட்டிருப்பதையும் நினைத்துக் கொண்டார். பொருளையும் செல்வத்தையும் இழப்பதை விடச் சந்தர்ப்பங்களை இழப்பது மிகவும் பரிதாபகரமானது. அந்த வகையில் தன்னுடைய இறுதிச் சந்தர்ப்பத்தையும் இப்போது தான் இழந்துவிட்டதாக உணர்ந்தார். அவர் அந்த உணர்ச்சியைத் தாங்கிக் கொள்வது வேதனை மிக்கதாயிருந்தது.
நிலவறைக்கு மேலே ஏறிச் செல்வதற்கு வழி இல்லாமல் அடைக்கப்பட்ட கதவின் கீழே இருளில் அமர்ந்து சிந்தித்தார் நகைவேழம்பர். ‘சாவதற்கு நான் கவலைப்படவில்லை, என்றாவது ஒருநாள் எல்லாரும் சாகத்தான் வேண்டும். அது இதற்கு முன்னாலும் எனக்கு நேர்ந்திருக்கலாம். ஏனோ நேரவில்லை. எனக்கு
அளிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் வளரவும் பயன்படாமல், அழியவும் பயன்படாமல், வீணாய்ப் போன சந்தர்ப்பங்களை வரிசையாக நினைத்துக் கொண்டால் நான் நிறைய வீணாகியிருப்பதாய்த்தான் எனக்கே தெரிகிறது.
நான் இனிமேலும் வீணாகக் கூடாதென்று முயன்று கொண்டிருக்கும்போது என் முயற்சியே வீணாகிவிட்டது. எனக்கு மீதமிருக்கிற இந்த ஒரு கண்ணால்கூட நான் பார்ப்பதற்கு இனி ஒன்றுமில்லைதான். இனிமேல் என்னுடைய வழி நிச்சயமாக இருண்டு போய்விட்டது. இனி நான் எந்த வழியைப் பார்ப்பதென்று எனக்கே விளங்கவில்லை. இதோ இப்போது இங்கே என் வழி அடைக்கப்பட்டு இருண்டு போயிருப்பதைப்போல் நான் என்னுடைய எதிரியின் வழியை அடைத்துவிடுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறேன். நானும் பெருநிதிச் செல்வரும் நண்பர்களாக இருந்து எங்களுக்கு வேறு எதிரிகளைத் தேடிக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. மற்றவர்களை எதிர்ப்பதற்காகவும் கெடுப்பதற்காகவும் தங்களுக்குள் நண்பர்களாகச் சேர்ந்த இருவர் அதே கெடுதலையும் எதிர்ப்பையும் தங்களுக்குள் சொந்தமாகவே அநுபவிக்க நேரிட்டால் இப்படித்தான் ஆகும் என்கிற விளைவு இன்று எனக்குத் தீர்மானமாக விளங்கிவிட்டது.
இருளில் கன்னத்தில் கையூன்றியபடியே அமர்ந்து இப்படியெல்லாம் நினைத்தபோது நகைவேழம்பருடைய மனத்தில் உணர்ச்சிகள் மாறி மாறிப் பொங்கின. சில விநாடிகள் எதற்காகவோ தான் ஆத்திரப்பட வேண்டும் போலவும், இன்னும் சில விநாடிகள் எந்த ஏமாற்றத்திற்காகவோ தான் வருத்தப்பட வேண்டும் போலவும் தோன்றியது அவருக்கு. கைத் தினவு தீர அந்த நிலவறையின் எல்லைக்குள் குவிந்து கிடக்கும் பொற்காசுகளை எல்லாம் வாரி இறைத்துவிட வேண்டும்போல, அவருடைய கைகளின் விரல்கள் துடித்தன. இப்படிச் சிறைப்பட்டதைப் போல நிலவறையில் அடைக்கப்பட்டு அவமானமடைவதற்குப் பதில் கடலில் தீப்பிடித்த அந்தக் கற்பூரப் படகிலேயே நான் மாண்டு போயிருக்கலாம்’ என்று நினைத்தார். பொழுது விடிகிற நேரத்தில் பெருநிதிச் செல்வருடைய வாழ்க்கையை ஒரேயடியாக இருளச் செய்துவிடலாமென்று திட்டமிட்ட மனத்தோடு தான் வந்ததையும் அவரைப் பயமுறுத்தியதையும் இறுதியில் நிகழ்ச்சிகள் எப்படியெப்படியோ மாறித் தன்னுடைய வாழ்க்கையே இருண்டுபோய் விட்டதையும் நினைத்தபோது இப்படித்தான் இது நடந்துவிட்டது என்று நடந்ததை முடிவாக நம்ப முடியாதது போலிருந்தது. அவ்வளவு வேகமாகவும் அது நடந்திருந்தது. தன்னுடைய அதுமானத்தால் தொட முடிந்த எல்லைக்கு அப்பாலும் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சித் திறன் அதிகமாய்ப் பெருகி வளர்ந்திருப்பதை இன்று நிதரிசனமாகப் புரிந்து கொண்டார் அவர்.
‘சற்றுமுன் முத்துக்களைத் தேர்ந்தெடுக்கும் போதே என் போதாத காலத்தையும் நான் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டேன்! ‘இவர்களுக்கு முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்’ என்று அவர் என் முதுகில் தட்டிக் கொடுத்தபோது நான் என்னுடைய ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு அந்தக் கணமே அவருடைய பணியாளனாக மாறிவிட்டது எவ்வளவு பெரிய அறியாமை?’ - என்று தன்னுடைய தவற்றை எண்ணியபோது அந்த நிலவறையில் கருங்கற் சுவர்களும், தளமும் இற்று விழுகிற பெருங்குரலில் பயங்கரமாகக் கதறி அழ வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. அந்த இருளடைந்த நிலவறையில் அடைபட்டுக் கிடக்கிறவரை பொற்காசுகளும், முத்தும் மணியும் எப்படித் தம் பயனையும், மதிப்பையும் பெறுவதற்கு முடியாதனவாகிப் பெறுமானமின்றி முடங்கிவிட்டனவோ அப்படியே தன்னுடைய ஆற்றலும் முடங்கிவிட்டதாகத் தெரிந்தது அவருக்கு. பயன்படுத்துகிற வரையிலும் ஆற்றல் மதிப்பு ஒன்றுமில்லாமல் போகிற காசுகளைப் போலவே தானும் ஒன்றும் செய்ய முடியாமல் அடைபட்டுப் கிடக்க நேர்ந்த போதாத காலத்தை எண்ணி எண்ணி நொந்தார் அவர். படிகளில் இறங்கிக் கீழே சென்றார். கால் வைத்த இடங்களில் எல்லாம் பொன்னும், மணியும் மிதிபட்டன. தான் நடக்கும் ஓசையே தன்னால் கேட்பதற்குப் பொறுமையற்ற ஒலியாக எதிரொலிப்பது போல் ஒரு பிரமை அவருக்கு உண்டாயிற்று. சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்கு அருகில் காலாந்தகனைக் கொன்ற இரவை இப்போது அவர் மீண்டும் நினைத்துக் கொண்டார். வாழ்நாளிலேயே எதற்கும் நடுங்கியறியாதவருக்கு இந்தச் சமயத்தில் அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைக்க நேர்ந்ததால் உடம்பு புல்லரித்தது.
“அடடா! ஓர் ஆதரவும் எட்டமுடியாத அநாதையாக அல்லவா இங்கே அடைபட்டு விட்டேன். நான் இப்படி அடைபட்டிருப்பது பைரவிக்குத் தெரிந்தால் அவளிடமிருந்து எனக்கு ஏதாவது உதவி கிடைக்கலாம். வன்னி மன்றத்திலிருக்கும் கபாலிகர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு நள்ளிரவில் இந்த மாளிகையின்மேல் படையெடுத்து வந்தாவது என்னைக் காப்பாற்றிவிடுவாள். ஆனால் அவளுக்கு இதை யார் போய்த் தெரிவிப்பார்கள்! இனிமேல் இந்த நிலவறைக்கு வெளியே உள்ள உலகத்துக்கு நான் செத்துப் போய் விட்டதுபோலத்தான். ‘நான் இன்னும் வாழ்கிறேன் சாகவில்லை’ - என்பதை உலகத்துக்கு நிரூபிப்பதற்கு இனி என் கையில் என்ன இருக்கிறது?”
இப்படித் தனக்குள் என்னென்னவோ எண்ணியபடியே சிறைபட்ட புலியைப் போலச் சுற்றிச் சுற்றி அந்த நிலவறையில் நடந்தார் அவர். எது நடக்கவில்லையோ அது நடந்திருந்தால் என்னவென்று எண்ணிப் பார்க்கும் பொய்க்களிப்பிலும் அவருடைய மனம் ஈடுபட்டது, பெருநிதிச் செல்வரின் மனைவியும் வானவல்லி முதலிய பெருமாளிகைப் பெண்களும் அப்போது முத்துக்களுக்காக நிலவறைக்குள் வந்திராவிட்டால், ‘தானே பெருநிதிச் செல்வரை இப்போது தன்னை அவர் அடைத்துப் போட்டிருப்பது போல அடைத்துப் போட்டு விட்டோஅழித்துப் போட்டுவிட்டோ வெளியேறியிருக்கலாம் என்று எது நடக்கவில்லையோ அதை நினைத்தார் நகைவேழம்பர். அப்படி அவரைத் தான் அடைத்து விட்டுத் தப்பியிருந்தால் இந்த நிலவறையின் இருண்ட மூலையில் அவர் என்னென்ன எண்ணித் தவிப்பார் என்று எதிரிக்குத் துன்பங்களைப் புனைவித்துக் கற்பனை செய்யும் பொய்ச் சுகத்தில் சிறிது நேரம் வரை தன்னில் மறந்திருந்தார் அவர் குருட்டுக் கற்பனையாகக் கண்ணை மூடிக்கொண்டு இப்படி எண்ணியவாறே நிலவறையில் இருளில் நடந்தபோது எதிரே ஆள் உயரத்திற்கு நின்ற ஐம்பொன் சிலையில் தன் நெற்றிப் பொட்டு இடித்து ‘விண் விண்’ என்று தெரிக்கும் வலியோடு அலறினார் அவர். அந்தக் குரூரமான அலறல் ஒலி சுழன்று சுழன்று செய்த பாவங்கள் செய்தவனையே திரும்ப அணுகுவது போல் நிலவறைக்குள்ளேயே எதிரொலித்தன. நெற்றியில் இரத்தம் கசிந்தது. புருவ மேடுகள் வலி பொறுக்க முடியாமல் துடித்தன. இரண்டு கைகளாலும் நெற்றியை அப்படியே அழுத்திக் கொண்டு கீழே உட்கார்ந்தார் அவர்.
தான் அப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தோம் என்று அவருக்கே தெரியாது. நடுவில் ஒரே ஒருமுறை நிலவறையின் மேற்பக்கத்தில் கதவு திறக்கப்பட்டு திறக்கப்பட்ட வேகத்திலேயே மூடப்படுவது போல் ஓசை கேட்டது. அப்போது அவருக்கிருந்த வலியின் வேதனைகளில் அந்த ஓசையையும் பொருட்படுத்தத் தோன்றவே இல்லை. அப்படியே கதவு திறக்கப்பட்ட ஓசையைப் பொருட்படுத்தத் தோன்றியிருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்துவதற்குள் கதவு மூடப்படுகிற விரைந்த ஓசையும் கேட்டிருக்கும். அவர் பொருட்படுத்தியதற்குப் பயன் ஒன்றும் கிடைத்திராது.
சிலையில் மோதி இடித்த இடத்தில் நெற்றிமேடு அப்பமாக வீங்கியிருந்தது. தளர்ந்த நடையில் ஒவ்வொரு படியாக மேலே ஏறி மீண்டும் கதவருகே அவர் சென்ற போது சிறிது நேரத்திற்கு முன் கதவு விரைவாகத் திறந்து மூடுவதுபோல் ஓசை கேட்டதன் காரணம் அந்த இடத்தில் அவருக்கு விளங்கிற்று.
அங்கே கதவுக்குக் கீழே இருந்த முதற்படியின் மேல் ஒரு மண் மிடா நிறையச் சோறும் பக்கத்திலேயே இன்னொரு மண் கலயத்தில் குடிப்பதற்குத் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அவை அங்கு அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையையும் பார்த்தபோது நகைவேழம்பருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
“எனக்குச் சோறு ஒரு கேடா?” என்று கத்திக் கொண்டே படிமேல் ஏறி நின்று அந்த மண் கலயத்தையும் மிடாவையும் காலால் ஓங்கி உதைத்தார் அவர். அவை படிகளில் உருண்டு உடைந்து சிந்திச் சிதறின. அந்த சமயத்தில் மேலே பெருநிதிச் செல்வர் யாரிடமோ பேசிவிட்டு இரைந்து சிரிக்கிற ஒலியைக் கேட்டு அவருடைய கொதிப்பு இன்னும் அதிகமாகியது. அந்தச் சிரிப்பு தன் செவிகளில் கேட்க முடியாத தொலைவுக்கு ஓடிப்போய்விட வேண்டுமென்று அவர் நிலவறைப் படிகளில் கீழே இறங்குவதற்குத் தாவியபோது உடைந்த மிடாவிலிருந்து அங்கே சிதறியிருந்த சோறு அவர் காலில் பட்டு நன்றாகச் சறுக்கிவிட்டது.