மணி பல்லவம் 4/22. இருண்ட பகல்
அப்போது நகைவேழம்பருடைய மனத்துக்குள்ளே முன்பு கணத்துக்குக் கணம் பொய்யாய் அழிந்து கொண் டிருந்த வாழ்வு இனி நிலையாகவே அழிந்துவிடப் போகிறதென்று வாழ்வைப் பற்றிய அவநம்பிக்கைகளும், மரணத்தைப் பற்றிய நம்பிக்கையும் ஒன்றாகவே சூழ்ந்து கொண்டிருந்தன. நெருங்கிவந்து கொண்டிருக்கும் சாவைத் தைரியமாகவும், உற்சாகமாகவும் வரவேற்க வேண்டும் என்று போலியாக அவர் ஏற்படுத்திக் கொள்ள முயன்ற வைராக்கியம் பயன்படவில்லை.
அவர் சிரிக்க முயன்றார். ஆனால் அழுகைதான் வந்தது. துணிவaka இருக்க முயன்றார். ஆனால் இந்த உலகத்தையும் இதன் நாட்களையும் இனி இழந்துவிடப் போகிறோமே என்று தளர்ச்சிதான் பெருகிற்று. சாவின் பயங்கர ஓலம்போல் விகாரமான நரிக் கூப்பாடுகள் அவரைச் சூழ்ந்தன. பெரிய நரி ஒன்று கோரமாக வாய் திறந்து கத்திகளின் நுனிகளை அடுக்கியது போன்ற பல் வரிசை தெரியப் பாய்ந்து வந்து அவரது தொடையில் வாய் வைத்தது. மற்றொரு நரி பலி பீடத்தை ஒட்டினாற் போலத் தாவி அவருடைய தோளில் பற்களைப் பதித்தது. அவர் எந்த வகையான மரணத்துக்கு ஆசைப்பட்டாரோ அதுவே அவருக்குக்கிடைத்துக் கொண்டிருந்தது. அவரே அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓட முயன்றாலும் முடியாதபடி சாவின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்து விட்டன. எழுந்து ஓடிவிடலாம் என்றால் முறிந்துபோன காலுக்கு மேலே எழுந்து நிற்கின்ற ஆற்றலும் இல்லை. கூட்டம் கூட்டமாகச் சிறுத்தைப் புலிகளைப் போல் வந்து மேலே பாய்ந்து சதையைக் கவ்விக் குதறும் கொடிய நரிகளை எதிர்த்துப் போராடுகிற வலிமை அவரது கைகளிலும் உடம்பிலும் அப்போது இல்லை.
தனது உடலில் சதையைக் குருதி சிந்தக் கவ்வி இழுத்துக் குதறும் காட்சியைத் தன்னுடைய கண்ணினாலேயே பார்க்கும் அனுபவம் விசித்திரமாகத்தான் இருந்தது. அதுவே குரூரமாகவும் இருந்தது.
‘என்னை நாலைந்து பேராகச் சூழ்ந்து கொண்டு அணு அணுவாகச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது. கண்ணில் நீர் நெகிழாது. அப்படி என் உடம்பையும், மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நானே பழக்கியிருக்கிறேன்’ என்று தானே சிறிது நேரத்துக்கு முன் அருவாளனிடம் கூறிய சொற்களை இப்போது நினைத்துக்கொண்டு சிரிக்க முயன்றார் அவர். நரிகள் மேலே விழுந்து தாறுமாறாகப் பிடுங்கிய வலியினாலும், வேதனையினாலும் அவருக்குச் சிரிப்பும் வரவில்லை.
‘எப்படி வாழ வேண்டாமோ அப்படி இதுவரை வாழ்ந்து விட்டேன். அப்படி வாழக்கூடாது என்று தெரிந்திருந்தும் அப்படியே வாழ்ந்தேன். அந்த வாழ்வு இப்போது இப்படி முடிகிறது’ என்று உயிர் வேதனையோடு உடம்பில் வலி துடிக்கத் துடிக்க அவர் நினைத்த கடைசிக் கணத்தில், சிவந்துபோய்த் தனியாய் முகத்துக்கே புண்போல் இருந்த அந்த ஒற்றைக் கண்ணின் மேல் குறிவைத்துப் பாய்ந்தது ஒரு நரி. கண்ணின் பார்வை அவியும்போதே உயிரின் கடைசிப் பார்வையையும் முடித்துவிட விரும்புவதுபோல் அவருடைய குரல் வளையைக் கவ்வியது மற்றொரு நரி! அதற்குப் பின் அந்த முகத்தில் கண்ணே இல்லை, கண்ணிருந்தாலும் பார்ப்பதற்கு உயிருணர்ச்சி இல்லை. அவ்வளவு ஏன்? அந்த உடம்பே முழு உருவமாக இல்லை.
★★★
அருவாள மறவனும் அவனுடைய தோழனும் வன்னி மன்றத்துக்குப் போய்க் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு காளிகோட்டத்துக்குத் திரும்பி வந்தபோது அங்கே நகைவேழம்பர் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருந்த மனித உடம்பை முழுமையாகக் காண முடியவில்லை. பலிபீடத்தின் மேலும் அதைச் சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகச் சூழ்ந்திருந்தது. அருவாளனும், அவன் தோழனும் பைரவியும் இறைச்சி நெடியிற் கூடியிருந்த அந்த நரிக் கூட்டத்தை அரும்பாடு பட்டு விரட்டிவிட்டுப் பார்த்த போதுகூட அவருடைய உடம்பில் நரிகளுக்குப் பறிகொடுத்து இழந்த பகுதிகளைத் தவிர எஞ்சியவை மட்டுமே கிடைத்தன. அப்படி இழந்து போயிருந்த பகுதிகளில் மிக முதன்மையானது அவருடைய உயிராயிருந்தது. சொல்ல முடியாத துயரமும் இரக்கமும் வந்து நெஞ்சை அடைக்க அருவாளன் உடைந்து தளர்ந்த குரலில் தன் நண்பனையும் கபாலிகையையும் பார்த்துச் சொன்னான். “மனிதர்கள் கெட்டவர்களாக இருக்கலாம். பாவிகளாகவும் பாதகர்களாவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் உலகத்தில் சாவது பயங்கரமானதுதான். பொதுவாகச் சாவதே பயங்கரமானது என்றால் பயங்கரமாகவே சாவதென்பது எவ்வளவு வேதனையானது? இவர் தமது கடைசி ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளாமலே செத்துப்போய் விட்டார். வாழும்போது நகைவேழம்பர் என்ற பெயருக்கேற்ப இவர் முகத்தில் நான் சிரிப்பையே பார்த்ததில்லை. ஆனால் சாவதற்கு முன்போ ‘மரணத்தைக்கூடச் சிரித்தபடியே என்னால் சந்திக்க முடியும்’ என்று என்னிடமே சிரித்துக்கொண்டு சொன்னார் இவர். செத்த பின்போ இவருடைய சாவே இப்படி சிரிப்புக் குரியதாகிவிட்டது.”
“இருக்கலாம்! ஆனால் இவரைப்போல் ஒருவர் துணையாக நின்று உதவியிராவிட்டால் இவர் யாருக்குத் துணை நின்று உதவினாரோ அவருடைய செல்வச் செழிப்பு நிறைந்த பெருவாழ்வே இதற்குள் ஊர் சிரித்துப் போயிருக்கும்” என்றாள் பைரவி. இயல்பாகவே விகாரமாயிருந்த அவள் முகம் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது இரத்த வெறி கொண்டு குமுறுவது போல் இன்னும் கொடுமையாகத் தோன்றியது. பெருநிதிச் செல்வரைப் பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் உன்னை அவர் இங்கே கூப்பிட்டனுப்பினார்’ என்னும் உண்மையை அந்தப் பேய் மகளிடம் இப்போது. தானே கூறி விடலாமா என்று எண்ணினான் அருவாளன். ஆனால் தானே அதைக் கூறுவது பொருந்தாது என்று நினைத்து உடனே அடக்கிக் கொண்டான். கண்களில் நீர் கலங்க அந்தப் பேய் மகள் காளிகோட்டத்துப் பலிபீடத்தின் அருகே கன்னத்தில் கை ஊன்றி அமர்ந்து விட்ட சமயத்தில் மெல்ல மெல்ல இருள் வெளி வாங்கிக் கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது.
தாங்கள் பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்கு நினைவு வரவே அருவாளனும், அவன் தோழனும் மெல்ல அங்கிருந்து நழுவினர், காளிகோட்டத்தில் நகைவேழம்பருடைய கோர மரணத்தைக் கண்டு விட்டுப் பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அருவாளனுடைய மனம் மிகவும் தளர்ந்து போயிருந்தது. தான் இன்றுவரை வாழ்ந்ததும் இனிமேல் வாழப் போவதுமாகிய வாழ்க்கையின் மேலேயே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. நகைவேழம்பருடைய சாவை அவர் ஒருவருடைய சொந்த அழிவாக மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. அந்த ஒருவருடைய சாவில் தன்னைப் போன்ற பலருடைய நம்பிக்கைகளும் சேர்ந்து செத்து அழிந்திருப்பதாக அவன் எண்ணினான். சாவதற்கு முன்னால் அந்த ஒற்றைக் கண் மனிதர் அவனிடம் பேசிய பேச்சுக்களால் அவனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வர் மேலேயே வெறுப்பும் அவநம்பிக்கையும் பெருகுமாறு செய்துவிட்டுப் போயிருந்தார். சாவதற்கு முன் அவர் பேசியிருந்த பேச்சுக்கள் இன்னும்கூட அவன் செவிகளில் ஒலிப்பன போலிருந்தன. அவன் நினைக்கலானான்.
அந்தச் செல்வருக்கு நான் சோற்றுக்கடன் பட்டிருக்கிறேன், நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று இப்போது என்னுடைய உடலில் இருக்கிற சோற்றுச் செருக்கு அவர் அளித்தது. ஆனாலும் இந்த விநாடியே அவருடைய வழிகளிலிருந்து நான் விலகிவிட வேண்டும் போல் எனக்கு அவர் மேல் வெறுப்பாக இருக்கிறது. ‘அடிமையாக இருந்து அடைகிற சுகம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது நோய்தான் என்று சாவதற்கு முன் அவர் கூறினாரே! எனக்கும் ஒருநாள் இந்த கதி நேரலாம் என்றுகூடச் சொன்னாரே ? என்று பலவிதமாகச் சிந்தித்துக்கொண்டே சென்றபோது அருவாளனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வரைப் பற்றிய மதிப்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து அழிந்து விட்டது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையை அடைகிறவரை அருவாள மறவன் தன் தோழனிடம் அப்போது தன் மனத்தில் கிளர்ந்த எண்ணங்களை உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டே போனான். அப்படிப் பேசாமல் தனக்குள்ளேயே தன் சிந்தனை களை அடக்கிக் கொண்டு போவதற்கு அப்போது அவனால் முடியவில்லை.
அருவாளனும் அவன் தோழனும் பெருமாளிகைக் குள் நுழைந்தபோது பூம்புகாரின் கிழக்கு வானத்தில் பகல் பிறந்துகொண்டிருந்தது. விடிய விடியத் தங்களை எதிர்பார்த்து விழித்திருந்த சோர்வைப் பெருநிதிச் செல்வரின் முகத்திலும் சிவந்து போயிருந்த விழிகளிலும் அவர்கள் கண்டார்கள். அப்போதிருந்த மனநிலையில் அருவாளனுக்கு அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்க வில்லை.
போன காரியம் என்ன ஆயிற்று? என்பதைக் கண் பார்வையில் குறிப்பாலேயே அவர்களிடம் வினவினார் பெருநிதிச் செல்வர். வார்த்தைகளை செலவழிக்காமலே பிறந்த குறிப்புக் கேள்வியாயிருந்தது.
“உங்கள் கவலை தீர்ந்துவிட்டது” என்று அவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவன் போலத் தரையைப் பார்த்துக்கொண்டே மறுமொழி கூறினான் அருவாளன். அப்போது அவனுடைய சோர்வையும் தளர்ச்சியையும் உற்சாகமின்மையையும் அவரே கண்டு புரிந்துகொண்டு விட்டார்.
“நீயும் உன் தோழனும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படியே காரியத்தை முடித்துக் கொண்டுதான் வெற்றியோடு திரும்ப வந்திருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் இருவர் முகங்களிலும் நான் உற்சாகத் தையோ பெருமையையோ காண முடியவில்லையே? அது ஏன் ?”
சிறிது தயங்கியபின் அருவாளன் அவருடைய இந்தக் கேள்விக்கு விடை கூறினான்:
“ஐயா! சில காரியங்களைச் செய்தபின் அப்படிச் செய்ததற்காக எந்தவிதத்திலும் பெருமிதப்பட முடிவதில்லை. மேலும் அந்த மனிதருடைய சாவு இயல்பாகவே நேர்ந்துவிட்டது. நாங்கள் ஏதும் செய்வதற்கு முயலு முன்பே அவர் தாமாகவே அழிந்து போய்விட்டார்.” என்று தொடங்கிக் காளிகோட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் சொன்னான். அப்படிச் சொல்லிய போது நகைவேழம்பருடைய கடைசி ஆசையையும் அதற்காகத் தாங்களே வன்னி மன்றத்துக்குப் போய்ப் பைரவியை அவரிடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்ததையும் மட்டும் அவரிடம் கூறாமலே மறைத்து விட்டான் அருவாளன்!
“சிறிது நேரம் இரு, அருவாளா ! இதோ வருகிறேன்” என்று கூறி அவர்களை அங்கேயே நிறுத்திவிட்டு உட் பக்கமாகச் சென்றார் பெருநிதிச் செல்வர். அவர் எதற்காக அப்போது உள்ளே செல்கிறார் என்பது அருவாளனுக்கும் ஏறத்தாழ அதுமானமாகத் தெரிந்தது.
அவன் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். இந்த முறை அவரிடம் தான் எதற்காகவும் நன்றிக் கடன் படக்கூடாதென்று தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் தலைநிமிர்ந்தபோது கைநிறையப் மொற்காசுகளோடும் வாய் நிறைய வாணிகச் சிரிப்புடனும் பெருநிதிச்செல்வர் உள்ளேயிருந்து வெளியே வந்து அவனெதிரே நின்று கொண்டிருந்தார்.
“இந்தா, இவற்றைப் பெற்றுக்கொள்..”
அவருடைய கைகள் பொற்காசுகளோடு அவனுக்கு முன் நீண்டன. அவன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வில்லை. அவர் சிறிதும் எதிர்பாராத வேறு ஒரு காரியத்தை அருவாளன் அப்போது செய்தான்.
“ஐயா! பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் என்னுடைய இடுப்புக் கச்சையில் அணிவித்த இந்தக் கொடுவாளை இன்று உங்களிடமே திருப்பி அளித்து விடுகிறேன். இத்தகைய காரியங்களைச் செய்யும் துணிவு நேற்றிலிருந்து என்னைக் கைவிட்டுவிட்டது. தயை கூர்ந்து என்னை விட்டுவிடுங்கள். மறுபடியும் உங்களிடம் நன்றிக் கடன் படச் சொல்லாதீர்கள்” என்று கூறியவாறே தன் வாளை உறையிலிருந்து கழற்றி அவர் காலடியில் இட்டான் அருவாளன். தொடர்ந்து அவனுடன் அருகில் நின்ற தோழனின் வாளும் அதே போலக் கழற்றப்பட்டு அவருடைய காலடியில் வந்து விழுந்தது.
இப்படிச் செய்துவிட்டு அருவாளனும் அவன் நண்பனும் கைகட்டிப் பணிவாக அவரெதிரே நின்ற போது அவர் பெருஞ்சீற்றம் கொண்டார். காசுகளைக் கீழே எறிந்துவிட்டுத் தம் ஊன்றுகோலைப் பற்றியது அவர் கை. அவருடைய கால் செருப்பின்கீழ்_அவன் எறிந்த வாள் ஓங்கி மிதிபட்டது. அந்த ஊன்றுகோலை ஒசையெழும்படி தரையில் அழுத்தி ஊன்றிக்கொண்டே அருவாளனிடம் சினமாகப் பேசினார் அவர்.
“என்னைப் பற்றி நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் விரும்பியபடி நடந்து கொள்ளத் தவறுகிறபோது நீ என் எதிரியாகிறாய் என்பதை மறவாதே...?”
“நாங்கள் யாருக்கும் எதிரியாக விரும்பவில்லை ஐயா? அடிமையாக இருந்துவிடவும் ஆசைப்படவில்லை. எங்களுக்கு விடை கொடுங்கள் என்று இப்படிச் சொல்லிவிட்டு அருவாளனும், அவன் தோழனும் அவருடைய விடையை எதிர்பாராமலே விரைந்து அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். இந்தச் செயல் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்பாராத இந்த அதிர்ச்சியால் விடிந்து பிறந்துகொண்டிருந்த பகற்போதே திடீரென்று இருண்டு போய்விட்டாற் போலிருந்தது பெருநிதிச் செல் வருக்கு. அவருடைய நெஞ்சில் கவலைகள் இன்று மீண்டும் பிறந்தன.