மணி பல்லவம் 4/24. ஏழாற்றுப் பிரிவு
24. ஏழாற்றுப் பிரிவு
சான்றாண்மை வீரம் என்று இளங்குமரன் எதைச் சொல்லிப் பெருமைப்பட்டானோ அதை அவனிடமே மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினார் வீரசோழிய வளநாடுடையார். “தம்பீ! உன்னுடைய சொற்கள் என்னால் மறுக்க முடியாதவையாயிருக்கின்றன. ஆனால் நான் இந்த உலக வாழ்க்கையில் உன்னைவிட மூத்தவன். அதிக அநுபவங்களை உடையவன். நீ உடல் வலிமையைப் பயன்படுத்திப் போரிட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உன் வாழ்வில் வரலாமென்றே எனக்குத் தோன்றுகிறது.”
இதைக் கேட்டு இளங்குமரன் மறுமொழி கூறாமல் சிரித்தான். அவனுடைய இந்தச் சிரிப்பினால் வளநாடுடையாரின் நெஞ்சில் ஆத்திரம் பொங்குவதை அவருடைய முகமும் கண்களும் காட்டின. மறுபடி அவர் அவனிடம் பேசிய சொற்களிலும் ஆத்திரம்தான் தொனித்தது.
“எனக்கென்ன வந்தது? இந்தத் தள்ளாத வயதில் இப்படியெல்லாம் கடலிலும், கப்பலிலும் உன்னை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு நான் அலைவதை நீயே விரும்பவில்லையானால் இந்தக் கணமே என் முயற்சிகளை நான் கைவிட்டு விடலாம். ஆனால் இப்படிச் செய்வதாக வேறொருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டதன் காரணமாக இதை நான் செய்தாக வேண்டியிருக்கிறது. நீயோ என் வார்த்தைகளைச் செவியேற்றுக் கொள்ளாமலே என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.”
கேட்கிறவர் பரிதாபம் கொள்ளத்தக்க சொற்களில் அவர் இப்படிக் கூறியபோது இதைக் கேட்ட இளங்குமரனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. காரணமின்றி அந்த முதியவருடைய மனத்தைப் புண்படுத்தும் சொற்களைத் தான் பேசி விடலாகாது என்று எண்ணிக் கொண்டே பரிவுடன் அவரருகிற் சென்று மறுமொழி கூறினான் அவன்:-
“உங்களோடு பயணம் புறப்பட்டு வந்ததற்காகவோ, அலைவதற்காகவோ நான் வருந்துவதாக நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது ஐயா! வலிமை என்று நீங்கள் கூறினீர்களே, அதைப்பற்றி மட்டும்தான் நான் உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு சிரித்தேன். கொன்று குவிப்பதையும் பிறரை அழித்தொழிப்பதையும்தான் வலிமை என்று நீங்கள் கருதிப் பேசியதாகத் தோன்றியது. நான் அவற்றை வலிமையாகக் கருதாததனால் தான் சிரித்தேன். தன் காலடியில் அடைக்கலம் என்று வந்து விழுந்த புறாவைத் துரத்திக் கொண்டு தொடர்ந்த வேடனைத் தன் உடல் வலிமையாலும் ஆட்சியின் படை வலிமையாலும்தானே ஓட ஓட விரட்ட முடியும் என்று தெரிந்திருந்தும், அந்த வேடன் அப்போது எதைத் தன்னுரிமையாக முன் நிறுத்தி வாதிட்டானோ அந்தக் கருத்தின் வலிமையை மறுக்க முடியாமல் உடம்பிலிருந்து சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் வலிமை மெய்யான வீரம் அல்லவா? போரிடுவதும், எதிர்ப்பதும், அழிப்பதும்தான் மனிதனுடைய வலிமை என்று சொல்லிப் புகழுவீர்களானால் பிறருக்காக உயிரையும் உடம்பை யும் அழித்துக் கொள்வதற்குக் கூடத் துணிகிற சிபி போன்றவர்களை இன்னும் அதிகமான ஆற்றலுள்ள வார்த்தையால் அல்லவா புகழ வேண்டும்? நான் அதை எண்ணித்தான் சிரித்தேன்...”
“சிரிப்பாய் தம்பீ! சிரிப்பாய், நீ ஏன் சிரிக்க மாட்டாய்? இப்படிப் பேசுவதைத் தவிர வேறெதையும் திருநாங்கூரில் போய் நீ கற்றுக்கொண்டு வரவில்லை போலிருக்கிறது? நல்ல பிள்ளையாயிருந்து என் சொற்படி கேட்டு இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னால் உன்னை நான் திருநாங்கூரில் வந்து முதல் முறை அழைத்தபோதே என்னோடு இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்திருந்தால் உன்னுடைய வாழ்க்கையில் இதற்குள் எவ்வளவோ நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கும்”--
“என்னென்ன நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ, அவையெல்லாம் என் வாழ்வில் இப்போதே நிறைந்த அளவில் ஏற்பட்டு விட்டன ஐயா! என் மனம் நிறைய எல்லையற்ற கருணை எப்போதும் பெருகி நிற்கும்படி நான் வாழ வேண்டும். அந்தக் கருணைதான் வீரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் எப்போதும் எங்கும் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பதுதான். அவ்வாறு நினைக்கும் வலிமைதான் இப்போது என்னிடம் மீதமிருக்கிறது. மற்ற வலிமைகளை எல்லாம் ‘இவற்றை இனி இழந்துவிடத் தான் வேண்டும்’ என்று திட்டமிட்டுக் கொண்டு இழந்தாற்போல நானே படிப்படியாய் இழந்துவிட்டேன். இப்படி அவற்றையெல்லாம் இழந்து விட்டு வெறும் கருணை மறவனாக நிற்கும் என்னிடம் வந்து, ‘மறுபடி உடல் வலிமையைக் காட்டிப் போரிட வேண்டிய காலம் உன்வாழ்வில் வரலாம்'-என்று நீங்கள் கூறிய வார்த்தைகளே எனக்குச் சிரிப்பு மூட்டின.”
இவ்வாறு இளங்குமரன் வளநாடுடையாருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்தபோது கப்பல் தலைவனுடைய எச்சரிக்கைக் குரல் குறுக்கிட்டுப் பெரிதாக ஒலித்தது. அலைகளின் நெருக்கமும் குமுறுலும் அதிகமாயிருப்பதனால் எல்லாரும் கீழ்த்தளத்துக்கு வந்து பாதுகாப்பாயிருக்க வேண்டுமென்று கப்பல் தலைவன் உரத்த குரலில் கட்டளையிட்டான். குடை சுற்றி ஆடுவதுபோல் மரக்கலம் இரண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து நிமிரத் தொடங்கியிருந்தது. கப்பல் தலைவன் அவர்களருகே வந்து மேலும் விளக்கமாகக் கூறினான்;-
“ஐயா! இந்த இடத்திலிருந்து இன்னும் சிறிது தொலைவுவரை இது ஒரு பெரிய நீர்ச்சந்தி, நாகநாட்டுப் பெருந்தீவின் ஆட்சிக்கு அடங்கிய ஏழு சிறு தீவுகளை ஊடறுத்துக் கொண்டு கடல் ஒன்று சேருகிற இடம் இது. ஏழாற்றுப் பிரிவு என்றும் ஏமாற்றுக் கடவு என்றும் சொல்லிச் சொல்லிக் கப்பல்காரர்கள் பயந்து கொண்டே பயணம் செய்து கடக்க வேண்டிய பகுதியில் இப்போது நாமும் நுழைந்துவிட்டோம். மிகவும் கவனமாக இந்த ஏழாற்றுத் துறையைக் கடந்துவிட்டால் நாக நாட்டுப் பெருந்தீவகத்தின் நுனியை அடையலாம். பெருந்தீவகத்தின் நுனியில் மேற்குக் கரையைச் சார்ந்த சங்குவேலி என்னும் அழகிய துறைமுகத்தில் இறங்கி மிக அருகிலுள்ள மணிநாகபுரத்தில் சில நாழிகை தங்குவது புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்பவர்கள் எல்லாரும் அனுசரிக்க வேண்டிய வழக்கம் ஆகும்.
[1]மணிநாகபுரம் நாகநாட்டுத் தலைநகர். அது இரத்தினங்களும் முத்துக்களும், மணிகளும் நிறைந்து செல்வ வளம் கொழிக்கும் நகரம். நாகர்கள் வழிபாடு செய்யும் இரத்தின மயமான நாகதெய்வக் கோட்டம் ஒன்றும் அந்த நகரத்தின் நடுவே உண்டு. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய மணிபீடமாக அதைச் சொல்லுவார்கள். மணிநாகபுரத்தின் மேற்குக் கரை மிகவும் அழகானது. கரைநெடுகிலும் வேலியிட்டாற் போல் சங்குகளும், பவழக் கொடிகளும் ஒதுக்கப்பட்டுக் கிடப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருப்பதை நீங்களே காண்பீர்கள். சங்குவேலி என்று அந்தத் துறைக்குப் பெயர் வாய்த்த காரணமே இதுதான். இங்குள்ள ஆரவாரமான கடல் நிலையும் அலைகளின் மிகுதியும்தான் அந்தக் கரையில் வேலியிட்டாற் போலச் சங்குகள் ஒதுங்கக் காரணம் என்று சொல்லுகிறார்கள். சங்குவேலியிலிருந்து பிற்பகலில் புறப்பட்டால் அதே கரையை ஒட்டினாற்போல நாலைந்து நாழிகைப் பயணத்துக்குள் மணிபல்லவத் தீவை அடைந்து விடலாம். பெருந்தீவகத்திலிருந்து சற்றே பிரிந்து கடலில் மிதக்கும் அழகிய பசுந்தளிர்போல் மணிபல்லவத்தீவு தெரியும். நாளைக்குப் பொழுது புலர்ந்ததும் புத்த பூர்ணிமையாயிருப்பதால் இன்று மாலை நாம் போய்ச் சேரும்போது அந்தத் தீவு கோலாகலமாயிருக்கும்” என்று அந்த இடத்தின் அழகுகளைத் தான் சொல்லி வருணித்துக் கொண்டிருந்த திறமையால், மரக்கலம் அப்போது கடந்து சென்று கொண்டிருந்த ஏழாற்றுப் பிரிவின் பயங்கரத்தில் அவர்கள் கவனம் செல்லாமல் காத்தான் கப்பல் தலைவன்.
“புத்த பூர்ணிமைக்காகப் பூம்புகாரிலிருந்து முன்பே புறப்பட்டிருக்கும் கப்பல்களைக்கூடச் சங்குவேலியில் நாம் சந்திக்கலாம் அல்லவா?” என்று இளங்குமரன் கப்பல் தலைவனைக் கேட்டான்.
“மணிநாகபுரம் நாகநாட்டுத் தீவகத்தின் பெரிய பட்டினம். மரபுக்காக, அந்தத் தீவில் கப்பலை நிறுத்தி இறங்காதவர்கள்கூட அந்த நகரத்தின் அழகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றாவது சில நாழிகை அங்கு இறங்கித் தங்குவார்கள். அதனால் நீங்கள் பல நாட்டு மரக்கலங்களையும் மக்களையும் சங்குவேலியிலும் மணிநாகபுரத்து வீதிகளிலும் சந்திக்க முடியும். மணிபீடகத்தை வணங்குவதற்காகச் சிலரும், ஏமாற்றுப் பிரிவைத் துன்பமின்றிக் கடந்ததற்காக நாகர் கோட்டத்தில் வழிபாடியற்றி வணங்குவதற்குச் சிலரும், நாகர்களின் இரத்தின மயமான பட்டினத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சிலருமாக அங்கே எல்லாவிதமான நோக்கங்களையுடைய எல்லாரும் இறங்கி விட்டுத்தான் அப்புறம் புத்த பூர்ணிமைக்காகப் போவார்கள்” என்று கப்பல் தலைவன் தனக்கு மறுமொழி கூறியதைக் கேட்டபின் விசாகையையும் அவளோடு காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கும் இந்திர விகாரத்து துறவிகளையும் மணிநாகபுரத்தில் தான் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது.
கப்பல் தலைவனுடைய எச்சரிக்கையின் காரணமாக ஏழாற்றுப் பிரிவைக் கடக்கும்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து நடுத்தளத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த மணிமார்பனும் பதுமையும் மணிநாகபுரத்தின் அழகுகளைப் பற்றிக் கப்பல் தலைவன் கூறியவற்றைக் கேட்டபின் ஒருவர் முகத்தை மற்றொரு வர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டனர். பதுமை தன் கணவன் காதருகில் வந்து குறும்புத்தனமான பேச்சு ஒன்றைத் தொடங்கினாள்: “அன்பரே! இந்த மணிநாகபுரத்தில் பெண்கள் எல்லோரும் பேரழகிகளாக இருப்பார்களாம். மகாபாரதத்தில் அருச்சுனன் இந்தத் தீவுக்கு வந்தபோது சித்தித்ராங்கதை என்ற நாகநாட்டுப் பேரழகியின் எழிலில் மயங்கி அவளை மணந்து கொண்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். இங்கே இரத்தினங்களுக்கு அடுத்தபடி மதிப்புள்ளவர்கள் அழகிய பெண்கள்தானாம். எனக்கு உங்கள்மேல் கோபம் வராமலிருக்க வேண்டுமானால் தயைகூர்ந்து இந்த மணிநாகபுரத்தில் இறங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கரை ஏறுகிறவரை நீங்கள் உங்களுடைய ஓவியக் கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். இல்லா விட்டால் நீங்களும்கூட அருச்சுனனாகி விடுவீர்கள்...”
“கவலைப்படாதே பதுமை! உன்னைவிடப் பேரழகி இந்த உலகத்திலேயே கிடையாது. என்று நான் என் மனத்தில் முடிபோட்டுக் கொண்டாகிவிட்டது. அப்படி எல்லாம் ஒன்றும் இனிமேல் நேர்ந்தவிடாது. ஆனால் நான் ஓர் ஓவியன் என்ற முறையில் உலகத்து அழகுகளைப் பார்க்கும் உரிமையை நீ என்னிடமிருந்து பறிக்கலாகாது” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் மணிமார்பன்.
“பார்த்தாலே மனம் பறிகொடுக்காமல் இருக்க முடியாதாம். நாக நங்கையர்கள் அப்படிப்பட்ட அழகுடையவர்களாம்.”
“பூம்புகாரின் அரச மரபினர். பலமுறை இந்தத் தீவுக்கு வந்து திரும்பும் போதெல்லாம் நீ கூறுகிற நிலைக்கு ஆளாகி மனம் பறிக்கொடுத்திருப்பதாகக் கதை கதையாகச் சொல்லுவார்கள் பதுமை! ஆனால் நான் வெறும் ஓவியன்தான். எந்த அரச மரபையும் சேர்ந்தவன் இல்லை..."”
“இருப்பினும் ஆசைகள் எல்லோருக்கும் உண்டே ஐயா? “
இதோ இவரைத் தவிர -” என்று சொல்லியபடியே மணிமார்பன் யாரும் பார்த்துவிடாமல் தன் மனைவிக்கு இளங்குமரனைச் சுட்டிக் காட்டினான். பதுமை சிரித்துக் கொண்டே மேலும் கூறினாள்...
“மணிநாகபுரத்திலிருந்து வெளியேறுகிறவரை இந்த ஏழாற்றுப் பிரிவில் கப்பல் பயந்துகொண்டே போவதைப் போல் உங்கள் மனத்தையும் கண்களையும் நீங்கள் இங்கே கவிழ்ந்துவிடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்."-
“என் மனமாகிய கப்பலைச் செலுத்தும் தலைவியாக நீதான் இருக்கிறாயே?” என்று சொல்லிச் சிரித்தான் ஓவியன்.
- ↑ ஆதாரம்: யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாண வைபவ விமரிசனம், மகாவமிசம்.