மணி பல்லவம் 4/6. காலாந்தகன் கொலை
எதிரே வந்து நிற்கிற பகைவனிடமிருந்து வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே வேர்த்து விதிர்விதிர்க்கும்படியான ஆ சொற்களை அடைந்தாலும் அந்த வெம்மையில் அப்போதே அழிந்து விடாமல் தாங்கிக் கொண்டு நிற்க வேண்டும். அப்படி நிற்பதுதான் திண்மை என்று எண்ணித் தம்மைத் தாமே திடப்படுத்திக் கொள்ள முயன்றும், பயந்து பயந்து பழகிவிட்ட காரணத்தால் வழுக்கு மரம் ஏறினாற்போல் இடையிடையே தாம் மேற்கொண்டிருந்த உறுதியைப் பற்றிக்கொள்ள முடியாமல் கீழே நழுவினார் பெருநிதிச் செல்வர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
எரிகின்ற நெருப்பு மலையொன்று கனன்று கொண்டே வந்து எதிரே நிற்பதுபோல் நிற்கும் நகை வேழம்பரைக் கண்டு அவருடைய அந்தக் கோபத்தை எப்படி வரவேற்று ஒடுக்குவதெனச் சிந்தித்தார் பெருநிதிச் செல்வர். எந்த வகைக் கோபத்திற்காக அதை எதிரே காணும்போதே வேர்த்து விதிர்விதிர்க்கக் கூடாதோ அந்த வகைக் கோபம்தான் அது! பின்னால் ஏற்ற சமயம் வரும்போதுதான் அந்தக் கோபத்திற்காக வேர்க்க வேண்டும் - என்று பொருள் நூல் சிந்தனை களைத் தனக்கு அரணாக ஏற்படுத்திக் கொண்டு பாதிப் பயமும் பாதித் துணிவும் கலந்த நிலையில் பெருநிதிச் செல்வர் எதிராளியைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். தம்முடைய சிரிப்பு எதிரியின் முகத்தில் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டதும் களத்தில் வெற்றியும் இன்றி வீரமரணமும் எய்தாமல் உயிரோடு தோற்றுப்போய் நிற்பதுபோல் தாமும் அப்போது தயங்கி நிற்பதாக உணர்ந்தார் அவர். அவருடைய சிரிப்பு நகைவேழம்பரின் சினத் தீயை ஆற்றுவதற்குப் பதில் வளர்த்தது.
‘என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை. என் நெஞ்சின் சூடு விநாடிக்கு விநாடி வளர்கிறது. எதையாவது உடனே அழித்தொழிக்க வேண்டும் என்று என் கைகள் ஊறுகின்றன. என் எதிரே வந்து நின்றுகொண்டு நீங்கள் சிரிக்கிறீர்கள்!”
“முதலில் உங்கள் கோபத்தை அழித்தொழியுங்கள்! இப்போது உடனடியாக நீங்கள் அழிக்க வேண்டிய பொருள் அதுதான். தனக்குத் தோல்வி வருகிறபோது கோபப்படுகிறவன் உண்மையான பலசாலியில்லை. நம்முடைய வாயிலின் வழியே தோல்வியும் கோபமும் சேர்ந்து உள்ளே நுழைகிறபோது தோல்வியை மட்டும் அழைத்துக் கொண்டு கோபம் உள்ளே புகுவதற்கு முன்னாலேயே கதவை அடைத்துவிட வேண்டும். இரண்டையுமே சேர்த்து உள்ளே வரவேற்றுக் கொண்டால் அதற்காகப் பின்னால் வேதனைப்பட நேரும். வெற்றியின்போது வெளிப்படையாக மிதமிஞ்சிய மகிழ்ச்சி கொள்வது எப்படிக் கெடுதலோ, அப்படியே தோல்வியின்போது கோபப்படுவதும்கூட கெடுதல்” என்று தம் நிலையை உயர்த்திக் கொண்டதுபோல் பாவித்துக்கொண்டு தமது இயல்போடு ஒட்டாத அறிவுரையைப் போலியாகக் கூறினார் பெருநிதிச் செல்வர். ஆனால் மனத்திலிருந்து சுயமாக எழாத அந்த போலி அறிவுரையாலும் எதிராளி வந்து நிற்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வலையில் சிக்காமல் திமிறிக் கொண்டு வலையையே அறுக்க முயலும் முரட்டு மீனைப்போல் கட்டறுத்துக் கொண்டு மீறும் உணர்ச்சிகளோடு நின்றார் நகைவேழம்பர்.
“ஐயா! பெருநிதிச் செல்வரே! மன்னிக்க வேண்டும், நீங்கள் உண்மையை மாற்றிச் சொல்கிறீர்கள். இது என்னுடைய தோல்வி அல்ல. உங்களுடைய தோல்விதான். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.”
“அது எப்படி?”
“அந்த மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு சென்று நடுக்கடலில் தீ வைத்து மூழ்கச் செய்துவிடுமாறு கூறி நீங்கள் என்னை அனுப்பியபோது உள்ளுற என்ன நினைத்துக் கொண்டு அனுப்பினர்கள் என்கிற இரகசியத்தை இப்போதாவது என்னிடம் சொல்வீர்களா ?”
“அதில் உங்களுக்கும் எனக்கும் தெரியாத புது ரகசியம் வேறு என்ன இருக்கிறது?”
“இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். ஆனால் இருக்கிறது, இருப்பதாக நான் புரிந்துகொண்டேன்.”
“நீங்கள் புரிந்துகொண்டதைச் சொல்லுங்களேன்.”
“நான் துரத்திக் கொண்டுபோன படகுக்குள் கற்பூரம் குவிந்திருந்தது எனக்குத்தான் மறந்துவிட்டது. நீங்களாவது அதை நினைவுபடுத்தி என்னை வேறு படகில் ஏற்றி அனுப்பியிருக்கலாம். வேண்டுமென்றே இப்படி அனுப்பினர்கள் போலும். படகோட்டியும் அதை என்னிடம் கூறவில்லை. நான் படகிலிருந்து தீப்பந்தங்களை வீசும்போது கப்பலில் இருந்து எதிரிகள் பதிலுக்கு நெருப்பிட்டால் என் படகு பற்றி எரிந்து நான் மாண்டுபோய்விட வேண்டும் என்பதுதானே உங்கள் இரகசியத் திட்டம்? ஆனால் நான் நீங்கள் திட்டமிட்டு நினைத்தபடி மாண்டு போகவில்லை. தீக்காயம் பட்டுச் சிதைந்த படகின் மரச் சட்டத்தைப் புணையாகப் பற்றிக்கொண்டு மிதந்தும் நீந்தியும் அரும்பாடுபட்டுக் கரை சேர்ந்துவிட்டேன். இது என் உயிருக்கு வெற்றி. உங்கள் முயற்சிக்குத் தோல்வி. அண்மையில் சில ஆண்டுகளாக நீங்கள் என்னை ஒழித்துவிட முயலும் சந்தர்ப்பங்கள் அதிகமாகிக் கொண்டே வருவதை நானும் உணர்கிறேன்.”
“ஒருபோதும் அப்படி இல்லை! நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள், நகைவேழம்பரே...”
“புதிதாகத் தப்புக் கணக்குப் போடவில்லை. தொடக்கத்திலிருந்தே நாம் தப்பாகத்தான் கணக்குப் போட்டுக் கொண்டு வருகிறோம் ஐயா! தொடக்கத்திலிருந்தே தப்பாகத் தொடங்குகிற கணக்கில் முடிவுவரை தப்புக்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.”
“இந்தப் பேச்சுக்கு அர்த்தம்?”
“பழைய அர்த்தம்தான். புதிதாக ஒன்றும் இல்லை. நாம் ஒருவரையொருவர் நம்பவில்லை. நம்புவதாக நடிக்கிறோம். இருவரும் தனித்து வாழ முடியாது. சேர்ந்து வாழ முயல்கிறோம். அதுவும் முடியாது போலிருக்கிறது....”
“ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்?”
“அதற்கான அறிகுறிகள் உங்களிடமிருந்து எனக்குத் தென்படுகின்றன. நான் ஒவ்வொரு கணமும் உங்களைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். என் சந்தேகம் சிறிது சிறிதாக வளர்கிறது.”
“சந்தேகம் என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பதைப் போல. நீங்கள் எந்த உணர்வோடு நிற்கிறீர்களோ அதுதான் எதிரேயிருந்து உங்களுக்குத் தெரிகிற உணர்வாகவும் இருக்கும். நீங்கள் என்னைச் சந்தேகப்படுவதாகத் தோன்றினால் அதே உணர்வுதான் எதிரேயிருக்கிற என்னிடமிருந்தும் உங்களுக்குத் தெரியும்! சீனத்துக் கப்பலில் இருந்து பண்டம் இறங்கிக் கொண்டிருந்த படகில் உங்களை அனுப்பியபோது நீங்கள் எந்தக் கப்பலை அழிக்க வேண்டும் என்று அனுப்பப்பட்டீர்களோ அந்தக் கப்பலை அழித்து விட்டுச் சுகமாகத் திரும்பி வருவீர்கள் என்ற நல்ல எண்ணத்தோடுதான் உங்களை அனுப்பினேன் நான். நீங்கள் எந்தப் படகில் புறப்பட்டீர்களோ அதன் ஒரு பகுதியில் கற்பூரம் குவிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்று நீங்களல்லவா புறப்படுமுன் கவனித்திருக்க வேண்டும்? வேறு எந்தக் கெட்ட நினைப்பும் உங்களைப் பொறுத்தவரை எனக்குக் கிடையாது. நீங்கள் இப்போது திரும்பி வந்திருக்கிற கோலத்தையும் கோபத்தையும் பார்த்தால் உங்கள் படகு தீப்பற்றி கவிழ்ந்த பின் துன்புற்று நீந்தி வந்திருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் உயிர் பிழைத்து வந்திருப்பதால் மகிழ்ச்சியும், உங்களுக்கு நிறையத் துன்பங்கள் ஏற்பட்டிருப்பதனால் வருத்தமும் அடைகிறேன் நான். காரணமின்றி நீங்கள் என்மேல் கோபமும் சந்தேகமும் கொள்வதைப் பற்றி அநுதாபமும் அடைகிறேன், நகைவேழம்பரே!”
நீங்கள் இப்போது அடைகிற மகிழ்ச்சி, வருத்தம், அநுதாபம் எல்லாம் மெய்யானவைதாமா என்று நினைக்கிறேன். காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக அவ்வப்போது ஏற்படுகிற சந்தர்ப்ப உணர்வுகளில் இவையும் சேருமானால் நான் இவற்றை நம்பிப் பயனில்லை.”
“நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப்படாமல் இருப்பதுதான் என்று இரு காமத்திணை ஏரியருகே காமன்கோட்டத்தை ஒட்டியிருந்த நாணற் படுக்கையில் பல நாட்களுக்கு முன்பு நீங்களே என்னிடம் கூறியது உங்களுக்கு மறந்து போய்விடவில்லையே?”
“இவ்வாறு பெருநிதிச் செல்வர் கேட்டபோது இந்தக் கேள்வியால் நகைவேழம்பரின் மனத்தில் எந்த உணர்வு கிளர்ந்ததோ தெரியவில்லை! குபீரென்று நெருப்புப் பற்றினாற் போல் மீண்டும் முதலில் அங்கு வந்து நுழைந்த போதிருந்த சீற்றத்தை அடைந்தார். அவர். ஆத்திரத்தில் நெடுநேரமாகச் சொல்வதற்குத் தயக்கப்பட்டுக் கொண்டிருந்த செய்தி ஒன்றை உடனே சொல்லிவிடும் துணிவு வந்து விட்டாற்போல் அப்போது பேசலானார் நகைவேழம்பர்.
“நினைவூட்டக் கூடாத நிகழ்ச்சியை இப்போது உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! இனி நான் பொறுமையிழந்துவிட்டேன். எனக்கு அந்தப் பயங்கரமான இரவு நினைவு வருகிறது. நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியானாலும் நினைக்கும்போது இன்றே நடந்ததுபோல் குடல் பதறவில்லையா உங்களுக்கு? - சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்குப் பின்னால் உள்ள கொடி வழியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் பேரிருட் பக்கமாகிய கிருஷ்ணபட்சத்து அமாவாசை இரவில் அரும்பு மீசையும் புன்னகை வடியும் முகமுமாக வந்து நின்ற காலாந்தகனை எப்படித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தோம் என்பதை நினைக்கும்போது உங்களுக்கு உடல் சிலிர்க்கவில்லையா? வன்னி மன்றத்துக்கு அப்பால் கொடி வழியின் அருகே கொன்றைப் புதருக்குள் யாரையோ பிடித்து அறையக் காத்திருப்பது போல் பாய்ந்து கொண்டு நிற்கும் அந்தப் பூதச்சிலையின் கீழே பைரவிப் பேய் மகள் ஒரு கையையும் நான் ஒரு கையையும் பற்றித் திமிறிவிடாமல் காலாந்தகனை அடக்கிக் கொண்டபோது ஆந்தையும் கோட்டானும் அலறிய அலறலில் அந்த உயிரின் அலறலும் கலந்து கேட்டு ஒடுங்கும்படி நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்தக் கணத்தில் நினைத்துப் பாருங்கள்! கொன்றைப்புதரின் பள்ளத்தில் நின்ற போதும் பூதச்சிலையின் முழங்கால் வரை உயரமாயிருந்த அந்தக் கம்பீரமான ஆண்மகனை அழிப்பதற்காக அவன் கழுத்துப் பிடரி உங்கள் கைக்கு எட்ட வேண்டும் என்று நீங்கள் பூதச் சிலையிருந்த மேடையில் அதன் பீடம் வரை ஏறி நின்றுகொண்டு உங்களுடைய கைகள் நடுங்கவும் அவனுடைய உடம்பில் உயிர் துடி துடிக்கவும் செய்தீர்களே; அதே காரியத்தை உங்களுக்கு நானே செய்துவிடும்படி நேர்ந்த சமயங்களில் எல்லாம் ‘இப்போது வேண்டாம். பின்னால் இன்னும் நல்ல சமயம் வரும்’ என்று எண்ணி எண்ணித் தள்ளிக் கொண்டே வந்திருக்கிறேன் நான் ! கதிரவன் உதயமாகிற இந்த வைகறை வேளையில் இதைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்? சக்கரவாளக் கோட்டத்துக் கொன்றைப் புதருக்கும், அந்தப் பூதச் சிலைக்கும் வாயிருந்தால் காலாந்தகன் துடிதுடித்து இறந்த வேதனையை இன்னும் உலகத்துக்குச் சொல்லுமே? பைரவியும் நானும் உயிருள்ளவர்களாயிருந்து அந்தக் கொலைக்கு ஒத்துழைத்துவிட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஊமைகளாய் நிற்கிறோம். நீங்களோ எனக்கு நம்பிக்கையையும், நிதானத்தையும் பற்றி இன்றைக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.” காலாந்தகன் கொலையைப் பற்றி நகைவேழம்பர் வாயிலாகக் கேட்க நேர்ந்தபோது பெருநிதிச் செல்வர் தீக்குழியில் நிற்பதுபோல் வெந்து வேர்த்து நடுங்கினார். சற்றுமுன் யாருடைய முன்னிலையில் வேர்க்கலாகாது என்று அவர் எண்ணினாரோ, அது இயலவில்லை. குரலிலும் அந்த நடுக்கம் தோன்றி அவர் மெல்லப் பேசினார்.
“அன்றைக்கு, அந்த இரவில் காலாந்தகனைக் கொன்றிருக்கவில்லையானால் இன்றைக்கு நீங்களும், நானும், பைரவியும் எமபுரியில் இருப்போம்.”
“நான் சொல்ல வந்தது அதற்கல்ல, பெருநிதிச் செல்வரே! காலாந்தகனுக்கு நீங்கள் நடத்திய உபசாரத்தையே உங்களுக்கும் நான் செய்ய அதிக நாழிகை ஆகாது. நானும், பைரவியுமே அதைச் செய்வதற்குப் போதும்” என்று நகைவேழம்பர் சுடச்சுடச் சொல்லிய போது அவர் தன்னைச் செய்வதாகச் சொல்லியதையே உடன் செய்துவிட்டதுபோல் இருந்தது பெருநிதிச் செல்வருக்கு. ‘காலாந்தகன்... காலாந்தகன்’ என்று நெருப்பை நாவினால் தீண்டுவதுபோல் அந்தப் பெயன்ர் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டே அப்படி முணுமுணுக்கும் ஒவ்வொரு முறையும் தன் நெஞ்சில்தானே கத்தியால் குத்திக் கொள்வதுபோல் வலிகண்டு துடித்தார் பெருநிதிச் செல்வர்.