மணி பல்லவம் 4/9. செவ்வேள் திருக்கோயில்
மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டு வரும் நேரத்துக்கு முல்லையும் கதக்கண்ணனும் வீதியில் அந்தப் பெருமாளிகையைக் கடந்து சென்ற போது அதன் மாடத்தில் தென்பட்ட சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் பற்றித் தங்களுக்குள் சிறிது தொலைவுவரை பேசிக்கொண்டே போனார்கள்! அவர்கள் அப்போது பட்டினப்பாக்கத்து அரசர் பெருந்தெருவுக்கு அப்பால் உள்ள செவ்வேள் கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது.
“இந்தப் பெண்தான் அண்ணா அன்றொரு நாள் நாளங்காடியில் அவர் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த போது குடலை நிறைய மலர்களைக் குவித்துக் கொண்டு வந்து அதில் மறைத்து வைத்திருந்த நச்சுப் பாம்பினால் அவரையே கொன்றுவிட முயன்றாள். இவள் பொல்லாத சூனியக்காரியாய் இருப்பாள் போல் தோன்றுகிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் தடுத்து விட்டார்களாம். இல்லாவிட்டால் ஆலமுற்றத்துத் தாத்தாவும் மற்றவர்களும் அங்கேயே இவள் கழுத்தைத் திருகிக் கொன்றிருப்பார்கள்...” என்று ஆத்திரத்தோடு பேசிக்கொண்டே வந்தபோது முல்லையின் முகம் போன போக்கைப் பார்த்துக் கதக்கண்ணன் மெல்ல நகைத்தான்.
“ஏதேது, அந்தப் பெண்ணின்மேல் உனக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால் அவளைக் கொல்ல நீ ஒருத்தியே போதும் போலத் தோன்றுகிறதே!”
“தோன்றுவது என்ன ? அப்படி ஒரு சமயம் நேர்ந்தால் அதைச் செய்வதற்கும் என் கைகளுக்கு வலு உண்டு அண்ணா! நிச்சயமாக அந்தப் பெண்ணை விட நான்தான் பலசாலியாயிருப்பேன். ஒருவேளை தோற்றத்திலும் அழகிலும் வேண்டுமானால் அவள் என்னைக் காட்டிலும் சிறந்தவளாக இருக்கலாம்.”
“அதுசரி! ஆனால் தோற்றத்தில் அழகாயிருப்பவர்களுக்கு அப்படி அழகாயிருப்பதும் ஒரு பெரிய பலம் ஆயிற்றே முல்லை?” என்று சொல்லிக் குறும்பாகச் சிரித்தான் அவள் தமையன்.
“அழகாகவும், மனமாகவும் இருக்கிற பூக்களில் எல்லாம் முள்ளும் அதிகமாக இருக்கும் அண்ணா! தாழம்பூவில் மடல் முழுவதும் முள்ளாயிருப்பதைப் போலத் தோற்றம் நிறைய அழகையும், மனம் நிறையக் கெட்ட எண்ணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதையே பலம் என்று எப்படிச் சொல்ல முடியும்?”
“முடியுமோ, முடியாதோ? அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்ணிடம் மற்றவர்கள் அழகாக நினைக்கக்கூடிய அம்சங்கள் இரண்டு மூன்று இருக்கின்றன. முதலில் அவளுடைய செல்வமே அவளுக்கு ஓர் அழகு. அப்புறம் அவளிடம் இயற்கையாக அமைந் திருக்கிற அழகு அவளுக்கு இன்னொரு செல்வம். அந்த அழகில் அமைந்திருக்கிற வசீகரத்தன்மை மற்றொரு செல்வம். ஆனால் இவற்றையெல்லாம் நீ ஒப்புக் கொள்ள மாட்டாய். தன்னைத் தவிர இன்னொரு பெண்ணும் அழகாயிருக்கிறாள் என்று ஒப்புக்கொள்கிற பெண்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு. இந்த விஷயத்தில் பெண்களும் கலைஞர்களைப் போன்றவர்களே. பிறருடைய திறமையில் பொறாமை காணாத உண்மைக் கலைஞனைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாததுபோல் பிறருடைய அழகில் பொறாமை கொள்ளாத பெண்ணையும் உலகில் காண முடியாது போலிருக்கிறது, முல்லை!”
முல்லையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கொதிப்புத் தெரிந்தது. சீற்றத்தோடு, வீதியில் நடப்பதை நிறுத்திவிட்டுத் தன் தமையனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“சீற்றமடையாதே, முல்லை; உன் மனத்தில் இருக்கிற எல்லாக் கோபத்தையும் உள்ளே சிறிதும் தங்கி விடாமல் அப்படியே முகத்தில் வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் வேண்டுமென்றே இப்படிப் பேசினேன்.”
கதக்கண்ணன் தங்கையை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தான். உடனே பதிலுக்குப் பதில் கேட்டுவிடத் துடிப்பவள் போல் சீறிக்கொண்டே அவனைக் கேட்டாள் முல்லை.
“பெண்களை மட்டும் குறை சொல்ல வந்துவிட்டீர்களே? இன்னொருவனுடைய வீரத்தில் பொறாமைப்படாத வீரன், இன்னொருவனுடைய அறிவிலே பொறாமைப்படாத அறிவாளி உலகத்தில் எங்காவது இருக்கிறானா! நீங்கள் எல்லாம் உங்களை யொத்த வீரர்களை வெற்றி கொள்ளத் தவிக்கிறீர்கள். அவரைப் போன்றவர்கள் தம்மை ஒத்த அறிவாளிகளை வெற்றி கொள்ளத் தவிக்கிறார்கள்.”
“எவரைப் போன்றவர்களைச் சொல்கிறாய் முல்லை!”
“அவர்தான்! அன்றைக்குச் கப்பலில் ஏறும்போது போய்விட்டு வருகிறேன் முல்லை - என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குக்கூடத் தோன்றாமல் முகத் தைத் தூக்கிக்கொண்டு போனாரே, அந்த மனிதரைத் தான் சொல்கிறேன் அண்ணா” - என்று பேசிக் கொண்டே குனிந்து தரையைப் பார்த்தாள் முல்லை. அந்த நேரத்தில் தன் முகத்தைத் தமையன் பார்த்து விடலாகாது என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் பார்த்துவிட்டான்.
“புரிகிறது முல்லை! இப்போதுகூட நீயும் நானும் அவருடைய கோவிலுக்குத்தானே வணங்குவதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். முருகக் கடவுளாகிய செவ்வேளுக்குத்தானே இளங்குமரன் என்று மற்றொரு பெயர் கூறுகிறார்கள்? அவருடைய ஞாபகம் வந்ததனால்தானோ என்னவோ இன்று மாலை நீ ஒரு நாளுமில்லாத திருநாளாய்ப் பட்டினப்பாக்கத்துக்கு வந்து இளங்குமரக் கடவுளாகிய செவ்வேள் திருக்கோவிலை வணங்க வேண்டும் என்றாய்! உன்னுடைய திருட்டுத்தனமான மனக்குறிப்பு இப்போதல்லவா எனக்குப் புரிகிறது?- என்று கதக்கண்ணன் அவளை வம்புக்கிழுக்கத் தொடங்கியபோது, இந்த வம்பு தன்னிடம் படிப்படியாய் விளைவிக்கும் நாணங்களை மறைக்க விரும்புகிறவள் போல் அரசர் பெருந்தெருவின் அகன்ற சாலையில் விரைந்து நடந்தாள் முல்லை. கதக்கண்ணனும் தொடர்ந்து அவள் வேகத்திற்கு இணையாக நடந்தான். மாபெரும் அரண்மனையும் அதைச் சுற்றிலும் கண் பார்வைக்கு எட்டும் தொலைவு வரை அரண்மனையைப் போலவே தெரிந்த வேறு பல பெருமாளிகைகளுமாகத் தோன்றின. பூம்புகார் நகரத்தின் இதயம் போன்ற ஆரவாரமான பகுதிக்குள் புகுந்து வந்திருந் தார்கள் அவர்கள். இன்னும் சிறிது தொலைவு சென்று அடுத்த வீதியில் திரும்பினால் ஆறுமுகச் செவ்வேளாகிய முருகப் பெருமானின் அணிதிகழ் கோவில் தென்படும். கோவிலின் மேலே ஒளிவீசிப் பறக்கும் சேவற்கொடி அப்போது அவர்கள் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அரண்மனையின் முரச மண்டபத்தில் மாலை நேரத்து மங்கல வாத்தியங்கள், முழங்கிப் பரவிக் கொண்டிருந்தன.
பல்வேறு பூக்களின் நறுமணமும், தீப வரிசைகளின் ஒளியும், தேரும், குதிரையும், யானையும், சிவிகையும் நிறைந்த இராசவீதியில் கலகலப்பும் இந்திரனுடைய தேவருலகத்துத் தலைநகரமாகிய அமராபதியின் வீதிகளில் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை முல்லையின் மனத்தில் ஏற்படுத்தின. செவ்வேள் கோவில் மாடத்தின்மேல் தெரிந்த சேவற் கொடி இளங்குமரன் அன்று நாளங்காடியில் ஏந்தி நின்ற ஞானக்கொடியாக மாறி அதைப் பற்றிக்கொண்டு அவனே நிற்பதுபோல அவள் கண்களுக்கு மட்டும் தெரிவது போலிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த நாளி லிருந்து இளங்குமரனுடன் தான் பழக நேர்ந்த காலத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத் தன் மனக்கண்களில் அவளுக்குத் தெரிந்தன. அவள் அப்போது உணர்ச்சி மயமாக நெகிழ்ந்த மனத்துடனிருந்தாள். அறுமுகச் செவ்வேளாகிய குமரக் கடவுளின் அணிதிகழ் கோவிலுக்குள் நுழைந்தபோது அதற்கு முன்பே தன் மனத்தில் நுழைந்து கோவில் கொண்டுவிட்ட மற்றொரு குமரனையும் வணங்கிக் கொண்டிருந்தாள் முல்லை. அப்போது அவளுடைய மனநிலைக்குப் பொருத்தமான உற்சாகப் பேச்சு ஒன்றை அவளுடைய தமையனும் தொடங்கினான்:-
“முல்லை! அந்த இளங்குமரன்மேல் ஆசைப்படுகிற பெண்கள் மட்டும்தானே உன்னுடைய பொறாமைக்கும் பகைமைக்கும் உரியவர்கள்? இந்த இளங்குமரனைத் தேடி வருகிறவர்களையும் அப்படி நினைத்துவிடாதே. இவன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாரும் ஆசைப்படுவதற்கு உரியவன். இவனையாவது எல்லோரும் நினைக்கவும் ஆசைப்படவும் நீ உரிமை தருவாயோ இல்லையோ?” என்று கோவிலுக்குள் இருந்த குமரக் கடவுளைக் காட்டி நகைச்சுவையாகக் கதக்கண்ணன் கூறிய சொற்கள் முல்லையின் மனத்தில் மணமிக்க மலர்களை அள்ளிச் சொரிந்தாற்போல் பதிந்தன.
அப்போது செவ்வேள் கோவிலில் மணி ஒலித்தது. கண்முன் தெரிந்த கோவிலில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெய்வமான இளங்குமரனையும் - தன் மனத்தில் கோவில் கொண்டு தனக்குத் தெய்வமாகிவிட்ட இளங்குமரனையும் சேர்த்தே வணங்கினாள் முல்லை.
“உன்னுடைய இளங்குமரன் கப்பலில் ஏறி மணி பல்லவத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறான் முல்லை! இந்த இளங்குமரனோ எங்கும் நகரவே முடியாமல் இந்தப் பட்டினப்பாக்கத்துக் கோவிலில் பெரிய பெரிய செல்வர்களின் வணக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு இங்கேயே நிற்கிறான்.” என்று கதக்கண்ணன் விளையாட்டாகக் கூறியபோது அந்த இளங்குமரனும் இந்தச் செவ்வேளைப் போலவே தான் மட்டும் வணங்க முடிந்த கோவில் ஒன்றில் நகராமல் தெய்வமாக நின்றுவிட்டால் எவ்வளவு நலமாக இருக்குமென்று விநோதமானதொரு கற்பனை நினைப்பில் மூழ்கினாள் முல்லை.
“அடடா! இந்தக் குமரனையும் உனக்கே தனியுரிமையாக்கிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறது முல்லை. நாம் வந்து நேரமாகிவிட்டது. திரும்பலாம் அல்லவா?” என்று தமையன் நினைவூட்டியபோதுதான் செவ்வேள் கோவிலிலிருந்து திரும்பி வீட்டுக்குப் புறப்படும் நினைவு வந்தது.