மணி பல்லவம் 5/13. முடியாத கோலம்
13. முடியாத கோலம்
விடிகின்ற நேரத்துக்கே உரிய சில்லென்ற குளிர் காற்று உடம்பில் பட்டு இளங்குமரன் கண்விழித்தான். மரத்தடியில் பொற்காசுகள் சிதறினாற்போல் மகிழம் பூக்கள் உதிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. விடியப் போகிறது, விடியப் போகிறது என்று ! இந்த உலகத்துக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி மங்கல வாழ்த்தெடுப்பது போலப் பறவைகள் காலைக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. கதிரவனின் முதற்கதிர்கள் மண்ணில் படுவதற்குள்ளேயே நீராடித் தவ ஒழுக்கங்களை முடித்து விடும் ஆவலோடு காவிரிக்குச் செல்லத் தொடங்கியிருந்த அந்த நகரத்து மறையவர்களின் மந்திர ஒலிகளும், பெளத்தர்களின் அற முழக்கமும் அங்கங்கே பூம்புகாரின் வீதிகளிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருந்தன. இன்னும் இருள் புலரவில்லை. அறிந்தும் அறிய முடியாதபடி தெரிந்தும் தெரியமுடியாதபடி பேதை இருட்டு என்பார்களே அப்படி எங்கும் ஓர் இருட்டு சூழ்ந்திருந்தது. வழக்கம்போல் இந்த வேளையில் இளங்குமரனுக்குக் கண்கள் விழித்துக் கொண்டன. எழுந்திருந்து நீராடப் போவதற்கு ஆசையாயிருந்தது. ஆனால் எழுந்திருப்பதற்கும் முடியவில்லை.
“தாயோடு ஒன்றிக் கொண்டு உறங்கும் சிறு குழந்தை போல் சுரமஞ்சரி அவனுடைய வலது தோளைத் தன் தலைக்கு அணையாகக் கொண்டு குளிருக்கு ஒடுங்கினாற் போல் ஆழ்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்தாள். ஏழு உலகங்களையும் வென்று ஆளும் இணையற்ற வெற்றி போல் கவலையில்லாமல் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்தபோது அவளுடைய உறக்கத்தைக் கலைக்கும் துணிவை இழந்து அப்படியே அசையாமல் இருந்தான் இளங்குமரன். அவளுடைய எழில் நிறைந்த உடல் அவன் தோளில் சரிந்த மல்லிகை மாலையாய் மணந்து கொண்டிருந்தது. சந்திர பிம்பமாய்த் தெரிந்த அவள் முகம் அந்த உறக்கத்திலும் ஏதோ நல்ல கனவு காண்பது போலச் சிரிப்பைக் காண்பித்துக் கொண்டிருந்தது. மனத்திலும், கண்களிலும் அவளுக்காகவே நிறைந்த பரிவோடு தனக்காக எல்லாச் சுகங்களையும் இழந்துவிட்டு எல்லாச் செல்வங்களையும் தோற்றுவிட்டு இப்படி இந்த மரத்தடியில் வந்து வெறுந்தரையில் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்துக் கொண்டே வியந்தான் இளங்குமரன் அந்தப் பொன்னுடலில் வைகறைக் குளிர் படாமல் தன்னுடைய மேலாடையை எடுத்து மெல்லப் போர்த்தினான். ‘விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி எதுவும் பேதையர்களுடைய வாழ்வில் இருக்க முடியாது’ என்று முதல்நாள் அவளைக் கடுமையாக வெறுத்துப் புறக்கணிப்போடு கூறியிருந்த தானே இப்போது இப்படி அவளைக் குழந்தைபோல் பேணிப் போற்றி உறங்கச் செய்வதையும், அவளுடைய உறக்கம் கலையலாகாதே என்று கவலைப்படுவதையும் எண்ணியபோது அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அந்தத் தோல்வியை உணர்ந்தபோது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதே சமயத்தில் சுகமாகவும் இருந்தது. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருந்த அந்த நேரத்தைப் போலவே அவன் மனமும் குளிர்ந்து மணந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காலைப்போது அவன் வாழ்க்கையில் இதுவரை விடிந்ததில்லை.
‘என்னை அடைவதற்காக இவள் செய்த தவம் பெரியது! என்னைப் பெறுவதற்காக இவள் இழந்த சுகங்களும் செய்த தியாகமும் இணையற்றவை’ என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டவனாகச் செந்தாமரைப் பூவைப்போல் தன் மார்பின்மேல் படர்ந்து பற்றிக் கொண்டிருந்த அவள் கையை மெல்ல எடுத்து இளங்குமரன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அந்தக் கையின் மென்மையும், தண்மையும், நளினமுமான நீண்ட {hws|விரல்|விரல்களும்}} விரல்களும் பவழமல்லிகை மணப்பது போன்ற மயக்கமும் ஒருகணம் அவனுடைய நினைவிலிருந்து விலகின. அவனுள் ஓடும் இரத்தம் தன் குலப் பகைவரையும் அவர் கொடுமைகளையும் நினைவூட்டிற்று.
உயர்ந்த பாவனைகளால் அந்தத் தீய நினைவை அடக்கிக்கொண்டு பரிவுடனே மறுபடி அவளது கையை எடுத்து அவன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டபோது அவளே விழித்துக் கொண்டுவிட்டாள். அவனுக்கு வெட்கமாகிவிட்டது. வெட்கத்தோடு அவள் கையை மெல்ல விடுவித்தான் அவன். அவளோ அவன் விடுவித்த கையை அவனிடமிருந்து மீட்டுக்கொள்ளவே முயலாதவளாய் அந்த நிலையில் தான் விழிப்பதைவிட உறங்குவதே நல்லதென்று திருட்டுத் தீர்மானமும் செய்து கொண்டவளாகப் பொய் உறக்கம் உறங்கினாள். அதைப் புரிந்துகொண்டு அவன் புன்னகை பூத்தான்.
அவளுக்கு அந்த விளையாட்டைத் தொடரும் ஆசையிருந்தும் தொடர முடியாத சூழ்நிலையில் அடக்க முடியாத சிரிப்போடு எழுந்து உட்கார்ந்தாள். “இந்தக் கை எந்தப் பிறவியிலோ சக்தி வாய்ந்த தேவதைகளின் கோவில்களுக்குப் பூச்சுமந்து பூச்சுமந்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும். அதன் பயன் சற்றுமுன் இதற்குக் கிடைத்துவிட்டது. இது பாக்கியம் செய்த கை” என்று சிவப்பு நிறம் படரும் கிழக்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே அவனுக்குச் சொன்னாள் சுரமஞ்சரி.
அவன் தொட்டு ஆண்ட நினைவின் சுகம் அவளுடைய கையிலும் மனத்திலும் நிறைந்திருப்பதை அவளுடைய வார்த்தைகள் பரிபூரணமாய்த் தொனித்துக் கொண்டு பேசின. முறுவல் கிளரும் முகத்தினனாய்த் தன் கைகள் நிறையக் கீழே உதிர்ந்திருந்த மகிழம் பூக்களை அள்ளிக் கொண்டு அவள் பக்கம் திரும்பிப் பாக்கியம் செய்த அந்தக் கையை மலர்த்தி அதில் நிறைத்தான் இளங்குமரன்.இப்போதும் அவனுடைய கண்களின் பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரித்தது.
“புறப்படு! நீராடப் போகலாம். பொழுது நன்றாக விடிவதற்கு முன்பு காவிரியில் போய் நீராடிவிட்டு வர வேண்டும்” என்று எழுந்து நடந்தான் அவன்.
அவள் மெளனமாய் அவனைப் பின்தொடர்ந்தாள். எல்லாரும் எழுவதற்கு முன்பு நகரமே அந்தரங்கமாக எழுந்து நீராடி விட்டு இன்னும் ஈரம் புலராமல் இருப்பது போல் வீதிகளில் எங்கும் மென்குளிர் பரவியிருந்த அந்த வேளையில் நடந்துபோவதே சுகமாக இருந்தது.
புறவீதிக்கு அருகே இலவந்திகைச் சோலையின் மதிலை ஒட்டியிருக்கும் காவிரிப் படித்துறையில் போய் நீராடலாம் என்ற கருத்துடன் சுரமஞ்சரியை அழைத்துச் சென்றான் இளங்குமரன். புறவீதியில் நுழைந்ததும் பக்கத்திலிருந்த மலர் வனங்களின் மணமும் சேர்ந்து அவர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்த வழிநடைக்கு இங்கிதமான சூழலைப் படைத்தது.
“இப்படி ஒரு காலைப் போது என் வாழ்வில் இதுவரை விடிந்ததில்லை” என்று அவன் கண் விழித்ததும் தானாகவே எதை நினைத்தானோ அதை அந்த வீதியில் புகுந்தபோது சுரமஞ்சரியும் அவனிடம் கூறினாள்.
இதே போலப் பணி புலராத காலை வேளை ஒன்றில் இந்தக் காவிய நாயகனை அடைவதற்காகத் தான் விரதமிருந்து இருகாமத்திணையேரியில் நீராடிக் காமன் கோட்டத்தை வலம் வந்த நிகழ்ச்சியை இன்று நினைவு கூர்ந்தாள் அவள். அந்த நினைவு இன்று தன் வாழ்வில் கைகூடிவிட்டதை உணர்ந்த பெருமையோடு புதிய கிளர்ச்சி பெற்றவளாகப் புறவீதியில் புகுந்தபோது அவள் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு அவன் அருகில் இன்னும் நெருக்கமாக நடக்கலானாள். அவளுடைய கையை அவனும் அப்போது விலக்கிவிட்டுத் தனியே நடக்க முடியவில்லை.மறக்குடி மக்கள் மிகுந்து வசிக்கும் புறவீதியில் அந்த வைகறை வேளையில் மனைப் பெண்கள் வாயில்கள் தோறும் தண்ணிர் தெளித்துக் கோலமிடும் காட்சிகள் விதியில் இருசிறகிலும் நிறைந்து தோன்றின.
காவிரியில் நீராடுவதற்காகச் சுரமஞ்சரியோடு கை கோத்து நடந்து சென்று கொண்டிருந்த இளங்குமரன் அந்த வீதியின் நடுப்பகுதியில் ஏதோ ஒரு வீட்டருகே வந்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் சோர்ந்தாற் போலக் கால்கள் தயங்கிட நடுவழியில் நின்றான்.
“ஏன் நின்றுவிட்டீர்கள்? நடக்கத் தளர்ச்சியாக இருக்கிறதா?” என்று சுரமஞ்சரி கனிந்த குரலில் அவனைக் கேட்டாள்.
“தளர்ச்சிதான்! இந்த இடத்தில் தளர்ந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை” என்று அவனிடமிருந்து அவளுக்குப் பதில் வந்தது.
“இவர்களுடைய அந்த உரையாடலில் கவரப்பட்டவளாக வீதியில் அந்த வீட்டு வாயிலில் உற்சாகமாகப் பாடியபடி கோலமிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருத்தி நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அப்படியே திகைத்து நின்றாள். அவளுடைய தனிமையின் உல்லாச வெளியீடாகிய பாட்டு இதழ்களில் அப்படியே அடங்கிப் போய் நின்றது.
“முல்லை! நீ நலமாயிருக்கிறாயா?” என்று அன்புடனே அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். கோலமிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் யார் என்று இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. தான் இட்டுக் கொண்டிருந்த கோலத்தை அரைகுரையாக நிறுத்திவிட்டு ஆவலோடு இளங்குமரனுக்கு அருகே வந்த அந்தப் பெண் அவன் தன்னை நலம் விசாரித்ததற்கு மறுமொழி கூறாமல், அதிக அக்கறையோடு அவனை வேறொரு கேள்வி கேட்டாள்:
“உங்கள் பக்கத்தில் நிற்பது யார்?”
“என்னுடைய வாழ்க்கைத் துணைவி சுரமஞ்சரி.”இளங்குமரனுடைய நாவிலிருந்து மிகத் தெளிவாக ஒலித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு முல்லையின் கையில் இருந்த கோலப் பேழை கீழே நழுவி விழுந்து உடைந்தது. இளங்குமரன் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“இதென்ன காரியம் செய்தாய் முல்லை? கோலப் பேழையைக் கீழே போட்டு உடைத்துவிட்டாயே?”
“ஆம், உடைத்துத்தான் விட்டேன்.”
“அரைகுறையாக நிறுத்தியிருக்கிற இந்தக் கோலத்தை இனி எப்படி முடிப்பாய்...”
“....”
“உனக்கு எப்போதுமே இந்தப் பரபரப்பும் பதற்றமும் கூடாது முல்லை.”
“....”
பதில் பேசாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்ற முல்லையின் கண்களில் நீர் பெருகி வருவதை இளங்குமரன் கண்டான். இப்படி நடக்கும் என்றுதான் அவன் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்த படியே நடந்தது. ஏதோ கோபம் நிறைந்த பேச்சைப் பேசுவதற்குத் துடிப்பது போல் முல்லையின் செவ்விதழ்கள் துடித்தன. எதிரே நிற்கிற அவளுடைய முகம் உணர்ச்சிகளின் மயானமாகி அங்கே எந்த ஆசைகளோ எரிந்து அழிவதையும் அவன் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கணம் பின்னால் திரும்பிப் பக்கத்தில் நின்ற சுரமஞ்சரியின் மேல் அவன் தன் பார்வையைப் படரவிட்டான். அவள் பயந்தாற்போல் அவன் முதுகுக்குப்பின் ஒண்டி நின்று கொள்ள முயன்று கொண்டிருந்தாள். மறுபடி அவள் முன் பக்கமாக முல்லையைத் திரும்பிப் பார்த்தபோது,
“ஒரு விநாடி நில்லுங்கள். இதோ வருகிறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு நடைப்பிணம் போலத் தளர்ந்து வீட்டின் உள்ளே சென்றாள் முல்லை.அவள் வீட்டுக்குள்ளே சென்றிருந்த நேரத்தில் சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவன் காதருகே ஒரு கேள்வி கேட்டாள்.
“இது என்ன வேதனை? இந்தப் பெண் ஏன் இப்படிக் கண் கலங்குகிறாள்?”
“இதன் காரணம் உனக்குத் தெரியத்தான் வேண்டுமோ?
“அப்படி ஒன்றுமில்லை. கேட்கத் தோன்றியது’ கேட்டேன்.”
“நீ எதைப் பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறாயோ அதைப் பெற முடியாமல் அழுகிறாள்-அவள்”
அவன் சுரமஞ்சரிக்கு இப்படிப் பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே முல்லை உள்ளிருந்து திரும்பி வந்துவிட்டாள். ஒன்றும் பேசாமல் புயல் புறப்பட்டு வருவது போல் நடந்து வந்து, தனக்கு முன்னால் அவள் கைநீட்டித் தன்னிடம் அளித்த பொருள்களை வாங்கிக் கொண்டு அவைகளை என்னவென்று பார்த்தான் இளங்குமரன்.
திருநாங்கூரில் குருகுலவாசம் செய்த காலத்தில் அவளுடைய பிறந்த நாள் மங்கலத்துக்குப் பரிசாக அவன் அளித்த பாடல் உள்ள ஏட்டையும் அப்போது அவன் கொடுத்திருந்த நாகலிங்கப் பூவையும் இப்போது அவனிடமே திருப்பி அளித்திருந்தாள் அவள். அந்தப் பூவின் இதழ்கள் வாடிச் சருகாகியிருந்தன.
“முல்லை! நீ என்னுடைய நன்றிக்கு உரியவள். சிறு வயதிலிருந்தே உன் கைகளால் நான் பல நாள் உணவு பெற்றிருக்கிறேன். என்னுடைய உடம்பில் நான் புண்பட்டு வந்த போதெல்லாம் நீ என் காயங்களை மருந்திட்டு ஆற்றியிருக்கிறாய். அப்படியெல்லாம் நன்றிக் கடன் பட்டிருந்தும் என்னுடைய இந்த உடம்பை நான் உனக்குக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. என் உடம்பையும் மனத்தையும் நான் இந்தப் பெண்- சுரமஞ்சரிக்குத் தோற்றுப் போய் இவளுக்காகத் தியாகம் செய்துவிட்டேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேலும் கூட அன்பு செலுத்தத் துணிந்துவிட வேண்டுமென்றுதான் இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் என்னைத் தியாகம் செய்தேன். அதேபோல நீயும் இப்போது ஒரு தியாகம் செய்ய வேண்டும். நான் என்னால் அதிகமாக வெறுக்கப் பெற்ற இவளுக்கே என்னை விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்ததுபோல நீ உன்னால் அதிகமாக விரும்பப்பட்ட என்னை உன் விருப்பங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும், கனவுகளிலிருந்தும் விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்து விட வேண்டும். இது உன்னால் முடியும். என்னுடைய நன்றியின் நினைவாக இந்தப் பாடலும், இந்தப் பழம் பூவும் உன்னிடம் இருப்பதைக்கூட நீ விரும்பவில்லை?”
“நன்றி என்ற வார்த்தைக்கு இனிமேல் அர்த்தமில்லை. என்னை ஏமாற்றிவிட்டு என்னுடைய அழகைப் புகழ்கிற நன்றி எனக்கு வேண்டாம். இந்த ஏட்டிலிருக்கும் பாடலில் அப்படிப்பட்ட நன்றிதான் இருக்கிறது. நன்றியை எதிர் பார்க்கிற இடத்திலிருந்தும்கூட ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கிற உலகம் இது. மெய்யான நன்றி இந்த உலகத்திலேயே இல்லை. ஏட்டிலும் எழுத்திலும் புகழ்கிற இந்தப் போலி நன்றிக்காகவா இத்தனை காலம் நான் ஏங்கிக் கிடந்தேன்? எதை எதையெல்லாம் ஆசைப்பட்டுத் தவித்தேனோ அதையெல்லாம் கூடத் தியாகம் செய்யச் சொல்லுகிறீர்களே? இந்த நன்றியைத் தியாகம் செய்வதுதானா எனக்குப் பெரிய காரியம் ?”
“உன்னைப் போன்றவர்களின் தியாகம்தான் இந்த உலகத்துக்கு அழகிய சரித்திரங்களைக் கொடுக்கிறது முல்லை! கணவன் மனைவி என்ற உறவுகளை அடைவதும் இழப்பதும் நம்முடைய உடம்பின் வாழ்க்கைக்கு அப்பால் பொய்யாய் மறைந்து போகிற சாதாரண அநுபவங்கள். குணங்கள் தான் என்றும் நிலைத்து வாழப் போகின்றவை. குணங்களால் வரும் புகழ்தான் காவியங்களில் வாழும். காலமெல்லாம் வாழும் அந்த நிறை வாழ்வுக்குத்தான் நான் ஆசைப்படுகிறேன்.”
“என்னைப் போன்ற பேதைப் பெண்ணுக்கு என்றும் எதனாலும் தணியாத குறைவாழ்வை அளித்துவிட்டு நீங்கள் மட்டும் நிறைவாழ்வு வாழ ஆசைப்படுகிறீர்களே?” என்று அவனை நோக்கிக் கூறிக்கொண்டே வந்தபோது முல்லையின் குரலில் அழுகை ஊடுருவிப் பேச்சைத் தடைப்படுத்திற்று. கண்களில் இடையறாத நீர்ப்பெருக்கு உடைந்து பெருக, அவள் தனக்குமுன் தவித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து இளங்குமரன் திகைத்தான்.
அழுகையால் உடைந்து தளரும் குரலில் அவளே மேலும் அவனை நோக்கிக் கூறினாள்:
“நீங்கள் என்னுடைய வாழ்வில் இறுதிவரை எனக்குத் துணையாக வர முடியாமல் இந்தப் பெரு மாளிகைப் பெண் உங்களை நடுவழியிலேயே என்னிடமிருந்து பிரித்துக் கொள்வாள் என்பது அன்றே எனக்குத் தெரியும். முதன் முதலாக இந்திர விழாவின் போது பூத சதுக்கத்தில் படையலிடுவதற்காக என்னுடன் எனக்குத் துணையாக வந்து முழு வழிக்கு துணை வராமல் பாதி வழியிலேயே என்னை மறந்துவிட்டு இவளோடு இவள் பல்லக்கில் ஏறிப் போனவர்தானே நீங்கள்?”
“உன்னுடைய துக்கத்தில் சிறு குழந்தைபோல் நீ எதை எதையோ இணைத்துப் பேசி என்மேல் குற்றம் சுமத்துகிறாய். உன் வேதனைகளை நான் உணர்கிறேன். ஆனால் உன்னை எப்படி ஆறுதல் கொள்ளச் செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
“எனக்கு யாருடைய ஆறுதலும் வேண்டாம். நான் அழுது அழுது சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று கூறிவிட்டுக் கிளர்ச்சியற்ற தளர் நடையாய் நடந்து அவள் தன் வீட்டுக்குள் போவதற்குத் திரும்பியபோது"இந்தக் கோலத்தை முடிக்காமல் இப்படி அரை குறையாக விட்டுப் போகிறாயே முல்லை?” என்று இளங்குமரன் அவளைக் கேட்டான்.
“இந்தக் கோலத்துக்குத் தொடக்கம்தான் உண்டு. இறுதி தெரியவில்லை. முடிவும் இல்லை. நான் இதை முடிக்கப் போவதுமில்லை” என்று போகிற போக்கில் அழுகைக்கிடையே அவள் கூறிவிட்டுப் போன மறுமொழி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் போய்த் தைத்துப் புண்படுத்தியது.
அவளுடைய அந்த மறுமொழியில் அவனுடைய வாய்ச் சொற்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. மனம் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. அந்தச் சொற்களின் பொருள் எல்லை எவ்வளவுக்கு நீள்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான் அவன். சுரமஞ்சரியும் அவனுக்குப் பின்னால் மருண்டு போய் நின்றாள்.