மணி பல்லவம் 5/15. ஆறாத நெருப்பு

விக்கிமூலம் இலிருந்து

15. ஆறாத நெருப்பு

காவிரியின் நீர்ப்பெருக்கைப்போல வற்றாமல் ஒடிக் கொண்டிருந்த கால வெள்ளத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் மறுபடியும் ஒரு நிகழ்ச்சி.

நாற்பது ஆடிப் பெருக்குகளும், நாற்பது இந்திர விழாக்களும் கனவுகளாய் விரைந்து ஓடி மறைந்த பின் நாற்பத்தொன்றாவது ஆண்டின் சித்திரை மாதமும் பிறந்துவிட்டது!

அதோ! அந்த வள்ளுவ முதுமகன் வச்சிரக்கோட்டத்து முரசை யானை மேலேற்றி முரசறைந்து கொண்டே ‘பசியும் பிணியும் நீங்கி வளம் சுரக்க வேண்டும்’ என்ற மங்கல வாக்கியத்துடன் தொடங்கி இந்த ஆண்டிலும் இந்திர விழா வரப்போவதை நகரத்துக்கு அறிவிக்கிறான்; தேச தேசாந்திரங்களில் இருந்தெல்லாம் இந்திர விழாவுக்காக மக்கள் வந்து பூம்புகாரில் கூடுகிறார்கள். நகரம் திருவிழாக் கோலம் கொண்டு பொலிகிறது. அந்த ஆண்டு இந்திர விழாவின் கோலாகலத்தில் சமயவாதிகளின் பங்கு வழக்கம்போல் நிறைந்திருந்தது.

அந்தத் திருவிழாவின் இடையே ஒருநாள் சமயவாதிகள் மிகுந்து கூடியிருக்கும் நாளங்காடி வானவீதியில் இப்படி ஒரு விநோதமான சம்பவம் நடைபெறுகிறது.

அன்று காலையில் போது விடிந்ததிலிருந்து அந்த ஞான வீதியில் கூடியிருந்த சமயவாதிகள் யாவரும் ஒரு பெண்ணின் வாதத்துக்கு எதிர் நிற்க முடியாமல் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைக் கண்டு அதிசயப்படாதவர் இல்லை. வரிசையாய்ப் பலபேர்களுடைய நாவற்கிளைகளை வீழ்த்திவிட்டு வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவள் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறிக் கொண்டனர்.

அந்தப் பெண்ணைப் பற்றியச் செய்திகள் நகர் முழுவதுமே பரபரப்பாகப் பரவியிருந்தன. அவள் சமயவாதிகளை வென்று வெற்றிமேல் வெற்றி பெறும் இந்த அதிசயத்தைக் காண நாளங்காடியில் இடம் போதாமல் பெருங் கூட்டம் கூடிவிட்டது. அந்த அதிசயப் பெண்மணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் கடல் கடந்த நாடுகளிலிருந்து இந்திர விழா பார்க்க வந்தவர்கள் எல்லாம் கூட நகரின் வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை மறந்து விட்டு நாளங்காடியில் வந்து கூடியிருந்தனர். அவ்வளவு சிறப்பாக இந்திரவிழாவுக்குப் பெருமையூட்டிக் கொண்டிருந்தது அவளுடைய அறிவுப்போர். காலையிலிருந்து பொழுது சாய்கிற நேரம் நெருங்குகிற வரை அவளை எதிர்த்து வெல்வதற்கு யாரும் இல்லை. எதிர்த்து வந்து கொடியை ஊன்றியவர்கள் எல்லாம் அவளுக்குத் தோற்றுக் கொண்டேயிருந்தார்கள்.

சாயங்கால வேளை, தோற்றவர்கள் கைகளிலிருந்து வரிசையாய்ச் சரிந்து வீழ்ந்து கிடந்த நாவற் கிளைகளுக்கு நடுவே மதம் பிடித்த பெண் யானை போன்ற அறிவுச் செருக்குடனும் “என்னை எதிர்த்து வந்து வாதிடுவதற்கு இன்னும் யாரேனும் உண்டோ?” என்ற வினாவுடனும் நிமிர்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். அவளுடைய வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி துறவு ஒழுக்கங்களாலும் புலனடக்கத்தாலும் பொலிவு பெற்ற முகத் தோற்றம் அவளுக்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய தழல் நிற மேனியைத் துறவு நெறிக்குறிய சீவர ஆடை அணி செய்துகொண்டிருக்கிறது.

கையில் கொடியேந்தி நின்றுகொண்டு மலர்ந்த முகமும் தூய சிரிப்புமாக வாதுக்கு வருகிறவர்களை எதிர்பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதிரியே கிடைக்க வில்லை. அந்த ஞான வீதியில் அவளே தன்னிகரற்று நின்று கொண்டிருக்கிறாள்.

மனைவியோடும் குழந்தை குட்டிகளோடும் இந்திர விழா பார்க்கக் கடல் கடந்து வந்திருந்த நாகநாட்டு முதியவர் ஒருவர் அவளை நோக்கி குனிந்து தலை நிமிராமல் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து விரைந்து நடந்து வருகிறார்.

அருகே வந்து அவள் முகத்தை ஏறிட்டு நிமிர்ந்து பாராமலே, “நான் உன்னோடு வாதிட வந்திருக்கிறேன்” என்றார் அவர்.

இதைக் கேட்டு அவள் அலட்சியமாகச் சிரிக்கிறாள்.

“முதியவரே! இந்த வயதில் மனைவி மக்களோடு இந்திர விழாப் பார்க்க வந்த இடத்தில் இங்கே என்னைப் போல ஒரு பெண்ணுக்குத் தோற்க ஆசையாக இருக்கிறதா உமக்கு!”

“நீ என்னை வென்று பின்னர் பேச வேண்டிய வார்த்தைகள் இவை!”

“இத்தனை பேர்களை வென்ற எனக்கு உங்களை வெல்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.”

“முடிந்தால் வென்றுகொள். ஒரு காலத்தில் உன்னைப் போல் நானும் இந்த வீதியில் வெற்றி நடை நடந்திருக்கிறேன்.”

“இன்று தளர்நடை நடக்கிறீர்கள்.”

இந்த வார்த்தைகளால் தாக்கப்பட்டுக் கோபத்தோடு அவளருகில் நெருங்கி வந்து நன்றாக அவளை நிமிர்ந்து பார்த்தார் அவர்.

அவள் அந்த மனிதரின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்படியே அயர்ந்துபோய் நின்றாள். அவளுடைய கையிலிருந்த கொடி நழுவியது. மனத்திலிருந்து பகைமை நழுவியது, மனமும் உடம்பும் புல்லரித்து நடுங்கின.

“முல்லை! நீயா?” என்று அந்த மனிதர் தாங்கொணாத வியப்போடு தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவள் மறுமொழி கூறவில்லை. விழிகளில் கண்ணீர் பெருக நின்றாள். எந்த மனிதரை எண்ணி எண்ணிப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவள் தன்னைத் தோற்றுப் போயிருந்தாளோ அந்த மனிதரே இப்போது இப்படி முதியவராய் வந்து எதிரே நிற்கிறார். அந்த மனிதரின் அருகே நின்ற மக்களையும் சிறுவர் சிறுமிகளையும் அவர்களின் தாயையும் ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் முல்லை.

“ஐயா! உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை எதற்கோ தோற்றுப் போயிருக்கிறேன் நான். மீண்டும் என்னைப் புண்படுத்தாமல் இங்கிருந்து போய் விடுங்கள்” என்று வாதத்தைத் தொடங்காமலே தான் அவனிடம் தோல்வியடைந்து விட்டதாகச் சொன்னாள் அவள்.

சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்துக்கு இது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய ஞான வீரர்களின் கொடிகளையெல்லாம் துணிந்து வாதிட்டுச் சாய்த்த வீராங்கனை இன்று இந்தத் தளர்ந்த மனிதருக்கு முன் ஏன் இப்படித் தன் கொடியைத் தானே சாய்த்துக்கொண்டு தோற்றுப் போய் நின்றாள் என்று கூட்டத்தில் கூடியிருந்தோர் புரியாமல் மருண்டனர்.

“இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்னும் ஒருமுறை என்னை அறிவில் தோல்வியடையச் செய்து பார்க்க உங்களுக்கு ஆசையாயிருக்கிறதா?” உங்களிடம் முன்பு நான் அன்பில் தோற்றதை மறக்கவே எனக்கு இத்தனை ஆண்டுகள் போதவில்லை. நான் படித்த நூல்களும் என்னுடைய துறவும், விசாகை எனக்குச் சொல்லிப் பயிற்றிய தத்துங்களும்கூட இன்னும் என் உள்ளத்தின் பழைய நெருப்பை அவிக்க முடியவில்லை. அதே நெருப்பை இன்று அவள் தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு மறுமொழியின்றித் தலையைக் குனிந்து கொண்டு வந்தது போலவே திரும்பினான் இளங்குமரன்.

தன் மனைவி மக்களை உடனழைத்துக் கொண்டு அவன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறியபோது, “சுரமஞ்சரி நாம் திரும்பவும் இன்றே மணிநாகபுரத்துக்குக் கப்பலேறி விடுவோம். இவ்வளவு காலத்துக்குப் பின்பு இந்த நகரத்துக்கு நாம் புறப்பட்டு வந்த வேளை நல்ல வேளையில்லை போலிருக்கிறது” என்று மனைவியிடம் கூறினான்.

“ஏன்?” என்று அவன் மனைவி சுரமஞ்சரி திகைத்துப் போய் அவனைக் கேட்டாள்.

“உனக்கு இவளைத் தெரிகிறதா சுரமஞ்சரி?” என்று பதிலுக்குத் தன் மனைவியைக் கேட்டான் அவன்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நகரின் புறவீதியில் ஒரு காலை வேளையில் நீயும் நானும் காவிரிக்கு நீராடப் போய்க்கொண்டிருந்தபோது தன்னுடைய கோலத்தை முடிக்கத் தெரியவில்லை என்று அழுது கொண்டு ஓடினாளே; அவளுடைய புதுக்கோலம் இது.”

“பாவம்! இத்தனை காலத்துக்குப் பின்னும் அவளுடைய மன நெருப்பு ஆறவில்லை போலிருக்கிறது” என்ற சுரமஞ்சரியும் அவனோடு சேர்ந்துகொண்டு அந்தப் பெண்ணுக்காக அநுதாபப்பட்டாள்.

ஆனால் மற்றொரு புறம் அவனுக்கு முன் தன் நாவற் கிளையைத் தானே சாய்த்த அந்தப் பேதைப் பெண்ணோ நாளங்காடியின் ஒரு மூலையில் யாருமில்லாததொரு மரத்தடியில் போய் கண்ணீர் பெருக வீற்றிருந்தாள்.

அவளுடைய துயரத்துக்கு முடிவு ஏது! பாவம்! காலம் அதை ஆறச் செய்யட்டும்!