மணி பல்லவம் 5/3. ஓவிய மாடம்

விக்கிமூலம் இலிருந்து

3. ஓவிய மாடம்

மணிநாகபுரத்து இரத்தின வாணிகனாகிய குலபதியின் ஓவிய மாடத்துக்குள் நுழைந்த பின்புதான் அதன் பெருமை இளங்குமரனுக்குப் புரிந்தது. அந்த ஓவிய மாடமே ஒரு தனி உலகமாயிருந்தது. அதில் ஒரு பெரிய காலமே சித்திரங்களாக முடங்கிக் கிடந்தது.

“வழிவழியாக இரத்தின வாணிகம் புரிந்து வரும் எங்கள் குடும்பத்தின் துன்பமயமானதொரு வாழ்க்கைத் தலைமுறையை நீங்கள் இங்கே ஓவியங்களில் காண்கிறீர்கள் ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டியசக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது. மறுபடி அதைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான்!” என்றான் குலபதி.

“பழியில்லாமல் வாழ்வதே புகழ்தான்! புகழுக்கென்று தனியாக வேறு ஆசைப்படாதீர்கள். அந்த ஆசையாலேயே பழி வந்தாலும் வரலாம்..” என்று குலபதிக்குப் பதில் கூறியபடி அந்த மாடத்தில் வரிசையாகத் தீட்டப் பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான் இளங்குமரன்.

சில ஓவியங்களுக்கருகே கீழே பலவிதமான அணி கலன்களும், அந்த ஓவியத்தில் இருந்தவர்கள் வாழ்ந்த காலங்களில் பயன்படுத்திய பொருள்களும் குவிக்கப் பட்டிருந்தன. இன்னும் சில ஓவியங்களுக்குக் கீழே உள்ள மாடப் பிறையில் ஏடுகள் மட்டுமே இருந்தன. அந்த ஏடுகளில் நாள்தோறும் இட்டப் பூக்களும் சிதறி வாடியிருந்தன.

அப்படி ஏடுகள் மட்டுமே இருந்தவற்றைச் சுட்டிக் காட்டிக் கூறும்போது, “இந்த ஓவியங்களில் இருப்பவர்கள் எல்லாம் கடல் வாணிகத்தின் போதும், யாத்திரையின் போதும், புறப்பட்டுப்போன இடங்களிலும் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிய நினைவை இப்போது எங்களுக்குத் தருகிறவை. இந்த ஏடுகள் மட்டும்தான்” என்றான் குலபதி, அவனே மீண்டும் அந்த மாடத்திலே அணிகலன்கள் குவிந்து கிடந்த இடத்தில் இருந்த சில பொன் அணிகளை எடுத்துக்காட்டி “இந்தக் குடும்பத்துக்குச் சொந்தமான எல்லா அணிகலன்களிலும் அடையாளமாக இப்படி மூன்று தலை நாகப்படம் செதுக்கியிருக்கும்” என்றான். அவற்றைப் பார்த்துக்கொண்டே வந்த இளங்குமரன் அங்கு மிக அற்புதமாக வரையப்பட்டிருந்த ஓர் ஓவியத்தருகே நெருங்கியதும் கண்களை அதன் மேலிருந்து மீட்கத்தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான். உத்தமமான கவிகள் வருணிக்கும் அழகுகள் எல்லாம் பொருந்திய இளநங்கை ஒருத்தி நாணத்தோடு கால் விரலால் தரையைக் கீறிக்கொண்டு நிற்பதாகவும் அவள் எதிரே வீரலட்சணங்கள் யாவும் அமைந்த வீரன் ஒருவன் தோன்றி அவளைக் காண்பதற்காகவும் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

அங்கிருந்த மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரிந்து அந்த ஒற்றை ஓவியத்தில் மட்டுமே தன் கவனம் செல்லும்படி அதில் என்னதான் இருந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அதில் ஏதோ இருந்தது. மண்ணுக்குள் முறிந்து போய்க் கிடந்த கோரைக் கிழங்கு சரத் காலத்து மழை ஈரத்தின் மென்மையில் நனைந்து நனைந்து மெல்ல மண்ணுக்கு வெளியே தன் பசுந்தலையை நீட்டி இந்த உலகத்தைப் பார்த்துக் குருத்து விடும் முதல் பச்சையைப் போல் அவன் மனத்தில் முறிந்து நின்ற ஆர்வமொன்று அந்த ஓவியத்தைக் கண்டதும் பெருகிற்று. ஆனால் அந்த ஆர்வத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை போலவும் பிரமிப்பாக இருந்தது. அவதி ஞானம் என்று அவன் கேள்விப்பட்டு உணர்ந்திருந்த உணர்வின் வரையறையில்லாத தொடர்பாய் இப்போதும் இதில் ஏதோ ஒன்று புரிந்தது. புரியாமலும் மயங்கிற்று. இப்படி நெடுநேரம் தன் பார்வையை மீட்க முடியாமல் அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்த இளங்குமரன் இறுதியாகப் பார்வை மீண்டும் அது இருந்த இடத்தின் கீழே பார்த்தபோது அங்கே அணிகலன்களோ வேறு வகைப் புனைபொருள்களோ சிறிதும் காணப்படவில்லை. அதனருகேயிருந்த மாடப் பிறையில் இரண்டு மூன்று ஏட்டுச் சுவடிகள் மட்டும் முடிந்து வைக்கப்பட்டிருந்தன. இளங்குமரன் அந்த ஏட்டு முடிப்பை எடுத்து அவிழ்த்து ஏதோ ஓர் ஆவல் தூண்ட நடுவாக அப்போது தன் பார்வைக்கு தெரிந்த இடத்திலிருந்து அதை படிக்கலானான்.

“நவரசங்கள் உன்னுடைய கண்களிலிருந்துதான் பிறந்தன. உன் கண்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் என்னுடைய நினைவிலிருந்து நவரசங்களும் மறைந்து விட்டன. அலங்காரங்கள் எல்லாம் உன்னுடைய பேச்சிலிருந்துதான் பிறந்தன. உன் பேச்சைக் கேட்க முடியாத தொலைவுக்கு நான் வந்துவிட்ட பின் அலங்காரங்களை மறந்து போய்விட்டேன். தாளங்களுக்கும் அவற்றையுடைய வாத்தியங்களுக்கும் உன்னுடைய நடையிலிருந்துதான் இனிமைகள் பிறந்தன. உன் கால்களில் ஐம்பொன் மெட்டி ஒலிக்கும்போது என் நாவிலே கவிதையும் பிறந்து ஒலித்தது. உன்னுடைய நடையைக் காணமுடியாத தொலைவுக்கு நான் வந்து விட்ட பின் அவையும் எனக்கு நினைவில்லை. உன்னை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகருவதுபோல மந்தமாகி ஏதோ நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

இந்த வாக்கியங்களைப் படித்ததும் இளங்குமரனுக்குக் காரணம் புரியாத வேதனை ஒன்று பிறந்தது. இந்த வாக்கியங்கள் தோன்றக் காரணமாயிருந்த காதலர்களாக அந்த ஓவியத்தில் இருப்பவர்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்தக் காதலர்களை அப்படியே அப்போதே உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக்கொண்டு வணங்க வேண்டும் போலப் புனிதமான உணர்ச்சி யடைந்தான் அவன். ஏடுகளை முடிந்து வைத்துவிட்டுக் கடைசியாக மறுபடியும் அந்த ஓவியத்தைப் பார்த்தபோது அதில் தலை குனிந்து நாணி நின்ற நங்கையின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே தன்னை நோக்கிப் பெருகி வருவதுபோல் அவனுக்குத் தெரிந்தது. இளங்குமரனுக்கு அருகில் வளநாடுடையாரும் நின்று அந்த ஓவியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவில், “ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழ் பெற்ற பல தலைமுறைகளுக்குப் பின்பு துன்ப மயமானதொரு தலைமுறை இந்தப் பெண்ணின் காதலிலிருந்து தொடங்குகிறது. இவளுடைய அழகு இந்தக் குடும்பத்தின் பெரிய இரத்தினமாக இருந்து சுடர் பரப்பியதென்று என் தந்தை எனக்கு அடிக்கடி கூறியிருக்கிறார். இந்த ஓவியத்திலிருக்கிற பெண் என் தந்தைக்கு உடன் பிறந்தவளாக வேண்டும். எனக்கும் அத்தை முறை” என்று குலபதி நாத் தழுதழுக்கச் சொன்னான். அவன் கண்களில் அப்போது நீர் பனித்திருந்தது. இளங்குமரனும் கண்கலங்கினான்.

“இந்த ஓவியத்தினால் உன் மனம் கலங்குகிறாற்போல் தோன்றுகிறதோ?” என இளங்குமரனைக் கேட்டார் வளநாடுடையார்.

“கலங்குகிறது. ஆனால் ஏன் கலங்குகிறதென்றுதான் எனக்கே தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு மேலே நடந்தான் இளங்குமரன். இதன்பின் அந்த ஓவிய மாடத்தில் எஞ்சியிருந்த எல்லாப் பகுதிகளையும் பார்த்துவிட்டு வளநாடுடையாரை நோக்கி, “இன்று மாலையிலேயே மணிபல்லவத்திற்குக் கப்பல் புறப்பட்டுவிடும் என்று நாம் இறங்கி வந்தபோது கப்பல் தலைவன் கூறியிருந்தானே? இன்னும் சிறிது நேரத்தில் நாம் திரும்பிவிட வேண்டும் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன்.

“போகலாம் இளங்குமரா! போவதற்குமுன் குலபதியின் மாளிகையில் இன்னும் நாம் பார்க்க வேண்டிய இடம் ஒன்று எஞ்சியிருக்கிறது! இதுவரை ஓவியங்களில் வாழ்கின்ற இந்தக் குடும்பத்தின் பழம் தலைமுறையினரையெல்லாம் பார்த்தாய்! இனிமேல் நீ பார்க்க வேண்டியவர் இந்தக் குடும்பத்தின் கண்கண்ட தெய்வத்தைப் போன்றவர். இந்தக் குடும்பத்தின் இரண்டு தலைமுறை மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டியவர்கள். அவரைப் பார்த்து விட்டுப் பின்பு நாம் புறப்படலாம்” என்றார் வளநாடுடையார்.

“அவர் எங்கிருக்கிறார்?” என்று குலபதியை நோக்கிக் கேட்டான் இளங்குமரன்.

உடனே, “இதோ அவர் இங்கேயேதான் இருக்கிறார்” என்று குலபதி அந்த மாடத்தின் ஒரு பகுதியில் போய்த் திறந்த கதவுக்கு அப்பால் மான்தோல் விரிப்பில் அமைதியாக வீற்றிருந்தவரைப் பார்த்தபோது இளங்குமரனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென்று உலகமே விந்தை மயமாக மாறி மிக வேகமாகச் சுழல்வது போலிருந்தது அவனுக்கு.

“நான் இப்போது என் கண்களுக்கு முன்னால் யாரைக் காண்கிறேன் வளநாடுடையாரே?” என்று அவன் மருண்டுபோய் வினவினான். இந்தக் கேள்விக்கு வள நாடுடையார் மறுமொழி ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார்.

ஆனால் இவ்வளவு வியப்புக்கும் காரணமாக உள்ளே அமர்ந்திருந்தவரே இதற்கு மறுமொழியும் கூறிவிட்டார்.

“இனிமேல் என்றுமே யாரைச் சந்திக்க முடியாதென்று சென்ற விநாடி வரை நினைத்து நம்பிக்கை இழந்து விட்டாயோ அவரைத்தான் நீ இப்போது சந்திக்கிறாய் குழந்தாய்!” என்று அருட்செல்வ முனிவரின் குரல் எதிரேயிருந்து ஒலித்தபோது, தாய்ப்பசுவின் குரலைக் கேட்டுப் பாயும் இளங்கன்று போல் அந்த அறைக்குள் தாவிப் பாய்ந்தான் இளங்குமரன். அந்த ஒரே கணத்தில் அவன் சிறு குழந்தையாகி விட்டான். “கவலைப்படாதே! இதுவரை நான் காரியத்திற்காக மட்டும்தான் செத்துப் போயிருந்தேன். உண்மையில் நான் செத்ததாக நீ கேட்டு நம்பிய பொய் நானே படைத்துப் பரப்பியதாகும்..” என்று சொல்லி அருள்நகை பூத்த வண்ணம் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த அவனை எதிர்கொண்டு மார்புறத் தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர்.

“இது என்னுடைய வாழ்க்கையில் மிக மிகப் பெரிய பார்க்கியம் நிறைந்த நாள். மீண்டும் தங்களை இப்படி இந்தத் தோற்றத்தோடு இதே பிறவியில் சந்திக்கும் நாள் ஒன்று என் வாழ்வில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நல்ல நாளுக்கு நான் நிறைந்த நன்றி செலுத்த வேண்டும்...” என்று கூறிவிட்டு மேலே பேசுவதற்குச் சொற்கள் பிறவாத பரவசத்தோடு அருட் செல்வ முனிவரை நோக்கிப் பயபக்தியால் நெகிழ்ந்து நின்றான் இளங்குமரன். அவருடைய கண்களிலிருந்து அவன் கண்கள் எதையோ தேடின.

“குழந்தாய்! வீரனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளுக்கு அப்பால்கூட முழுமையான பரவசம் வருவதில்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் அவன் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி விநாடி வரை சாதிக்க வேண்டிய காரியங்கள் மீதமிருக்கின்றன. தன்னுடைய வழியிலும் தன்னைச் சூழ்ந்துள்ள பிறருடைய வழிகளிலும் எதிர்த்துக் கிடக்கிற தடைகளைக்களைத்தெரிந்து நிமிர்கிற வரையில் க்ஷத்திரியனுடைய கைகள் ஓய்ந்திருக்கக் கூடாது. துன்பச் சுமைகளை எல்லாம் மெய்யாகவே களைந்து தீர்க்கிறவரை க்ஷத்திரியனுக்குச் சுயமான பெருமிதம் இல்லை. கற்பிக்கப்பட்ட ஒருமை நெறியிலிருந்து நிறைந்த எல்லையில் நிற்பது பெண்ணுக்குக் கற்பாவது போல பெருமையையே தன் ஒழுக்கமாகக் கொண்டு நிற்பவன்தான் வீரன். குன்றவிடாத நிறைந்த பெருமைதான் வீரனுக்குக் கற்பு. ஒவ்வொரு மனிதனுடைய வழியிலும் உறவினர்களையும் நண்பர்களையும், வேண்டியவர்களையும் கூடத் துணிந்து எதிர்க்க வேண்டிய குருத்திரப்க்ஷே போர் ஒன்று எப்போதாவது குறுக்கிடுகிறது. அப்போது சிறிய உறவுகளினால் தயங்கவோ, மயங்கவோ கூடாது!

சில ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரின் சக்கர வாளத்துக் காட்டில் என்னுடைய தவச்சாலைக்குத் தீ வைக்கப்பட்டபோது அதில் நான் எரியுண்டு மாண்டு போகாமல் உயிரோடு தப்பி வந்துவிட்டேன் என்பது வீர சோழிய வளநாடுடையாருக்கு மட்டும்தான் தெரியும். அப்படித் தெரிந்திருந்தும் நான் இறந்து போய் விட்டதாகப் பொய் கூறி உன்னை அவர் ஏன் ஏமாற்றினார் என்று நீ இன்று மனம் கலங்கக் கூடாது. காலம் வருகிறவரை இந்த உண்மையைப் பரம இரகசியமாகக் காப்பாற்ற வேண்டும் என்று நான் இவரிடம் வாக்குப் பெற்றுக் கொண்டிருந்தேன். எனக்குக் கொடுத்த வாக்கை இவர் இறுதி வரை காப்பாற்றிவிட்டார். ஆனால் நானும் இவரும் காரியத்திற்காகத் தீர்மானம் செய்து வைத்திருந்த காலத்தில் இது நடைபெறாமல் தவறிவிட்டது. நான் இங்கே புறப்பட்டு வந்து தங்கிய மறு ஆண்டில் வைகாசி விசாகத்தின் போதே உன்னை அழைத்துக் கொண்டு வீரசோழிய வளநாடுடையார் இங்கே வருவார் என்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. இவர் வந்து திருநாங்கூரில் உன்னை அழைத்தபோது நீயே வர மறுத்து விட்டாயாம். திருநாங்கூரடிகளும் உன்னை அனுப்புவதற்கு விரும்பவில்லையாம். சென்றமுறை இங்கு இவர் தனியே வந்தபோது திருநாங்கூர் அடிகளின் மேல் மிகவும் கோபத்தோடு வந்தார். நான்தான் இவரைச் சமாதானப் படுத்தினேன்.

குழந்தாய்! எவ்வளவுதான் வளர்ந்து பெரியவனாகி விட்டாலும் இன்னும் நீ எனக்குக் குழந்தைதான்! நாளங்காடியில் மாபெரும் ஞான வீரர்களையெல்லாம் வென்று நீ ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்க மிட்ட புகழ்ச் செய்திகள் யாவற்றையும் வீரசோழிய வளநாடுடையார் அவ்வப்போது தக்கவர்கள் மூலமாக எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றை யெல்லாம் கேள்வியுற்றபோது நாம் வளர்த்த பிள்ளை இப்படிப் புகழ் வளர்க்கும் பிள்ளையாகத்தானே வளர்ந்திருக்கிறதென்று எண்ணி எண்ணிப் பூரித்தேன் நான். ஆனால் நீ அடைய வேண்டிய மிகப் பெரிய வெற்றி இனிமேல்தான் இருக்கிறது. புகழுக்காக அடைகிற வெற்றிகள் என்றும் உனக்கு உரியவை. குடிப்பெருமையை நினை ஆட்டுவதற்காக அடைகிற வெற்றிகளும் சில உண்டு...” என்று அருட்செல்வர் சொல்லிக்கொண்டே வந்த போது, சொற்களிலும் கண்களிலும், அழுகை பொங்க உணர்வு நெகிழும் குரலில் இளங்குமரன் அவரை ஒரு கேள்வி கேட்டான்.

“எப்போது எந்தக் குடியில் பிறந்தோம் என்றே தெரியாமல் வாழ்கிறவனுடைய வாழ்க்கைக்கு நீங்கள் கூறுகிற வகையைச் சேர்ந்த வெற்றிகள் அவசியம் தானா?"-

“இன்று நீ என் முன்னால் இப்படி அழக்கூடாது இளங்குமரா! உன் வாழ்க்கையில் இது சிறந்த நாள். இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். கடைசியாக நீயும் நானும் ஒருவரையொருவர் வளநாடுடையார் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட பழைய இந்திரவிழா நாளில் இரவை நீ மறந்திருக்க மாட்டாய் என்றெண்ணுகிறேன். அன்று நீ என்னிடம் தாங்க முடியாத தவிப்போடு எந்தக் கேள்வியைக் கேட்டாயோ அதே கேள்வியைத்தான் இப்போது வேறு சொற்களில் வேறு விதமாக அடக்க முடியாத அழுகையோடு கேட்கிறாய்! அறிவும், தத்துவஞானங்களுங்கூட மனிதனுடைய மனத்தில் ஆணிவேர் விட்டுப் பதிந்துவிட்ட பழைய துக்கத்தைப் போக்க முடியுமா என்ற சந்தேகம் உன் நிலையைப் பார்த்ததும் எனக்கு உண்டாகிறது!”

“அப்படியில்லை ஐயா! துக்கங்களுக்காக வாய்விட்டுக் குமுறாமல் மனத்திலேயே அழுதுவிடுவது என் வழக்கம். ஆனால் இறந்து போனதாக நம்பிவிட்ட உங்களை மீண்டும் உயிரோடு பார்த்தபோது நான் குழந்தையாகி விட்டேன். உங்கள் பாவனையில் நான் என்றும் குழந்தையாக இருப்பதாகத்தானே நீங்களும் சற்றுமுன் கூறினர்கள்? உயிரோடு உங்களைக் கண்டதும் எனக்கு அழுகை வருகிறது. எல்லையற்ற ஆனந்தத்தின் விளைவு அழுகை என்றுதானே ஞானிகள் சொல்கிறார்கள்:”

“ஞானிகள் அப்படிச் சொல்லியிருக்கலாம்! ஆனால் இனிமேல் உன்னுடைய வாழ்க்கையில் அழுகைக்கு இடமில்லை குழந்தாய்! இந்தக் கணம் முதல் உன்னுடைய மனமாகிய தேர்த் தட்டில் நான் ஏறி நின்றுகொண்டு உன்னைச் செலுத்தி வழிநடத்திக் கொண்டுபோக வேண்டிய காலம் வந்துவிட்டது. நீ மறுபடியும் கோபமும் குமுறலும், மானமும், கொதிப்பும் நிறைந்தவனாக மாறிக் கையில் வில்லை நாணேற்றிக் கொண்டு க்ஷத்திரியனாக நின்று என் வழியில் நடக்க வேண்டும்...”

“இப்படி ஒரு வேண்டுகோளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை, சுவாமி! கப்பலில் வரும்போது மறைத்து மறைத்து இதே வேண்டுகோளைத்தான் வள நாடுடையாரும் என்னிடம் கூறினார். ‘மனத்தின் வலிமை தான் மெய்யான வீரம்’ என்று வாதாடிவிட்டு நான் மறுத்துவிட்டேன். அதே வேண்டுகோளைத்தான் நீங்களும் இப்போது என்னிடம் கூறிகிறீர்கள்..”

“காரண காரியங்களோடுதான் இந்த வேண்டுகோளை விடுகிறேன் குழந்தாய்! உன் தாய் தந்தை உற்றார், உறவினர், குடும்பம் எல்லாரும் அழிந்தொழிந்து சீர்கெட்ட கதையை உனக்கு நான் விளக்கும் காலம் வந்திருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு நீ என்முன் வெறும் கண்ணிர் சிந்துவதை மட்டும் நான் விரும்பமாட்டேன். கேட்டவுடன் க்ஷத்திரியனாக எழுந்து நிற்க முடியுமானால் நான் தயங்காமல் அவற்றை உனக்கு விளக்கலாம்” என்று ஆவேசத்தோடு கூறினார் முனிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_5/3._ஓவிய_மாடம்&oldid=1231726" இலிருந்து மீள்விக்கப்பட்டது