மணி பல்லவம் 5/6. பிறந்த கதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


6. பிறந்த கதை
மணி பல்லவம் 5.pdf
புத்த பீடிகை வணக்கமும், கோமுகிப் பொய்கைக் கரையில் தத்துவஞானிகளைச் சந்தித்துப் பேசுதலும், வைசாகப் பூர்ணிமையின் கோலாகலங்களில் கலந்து கொள்ளுதலுமாக அருட்செல்வ முனிவர் பிச்சை கொடுத்திருந்த அந்த ஒருநாளும் மெல்லக் கழிந்து போய்விட்டது, அன்று பகலில் மணிபல்லவத்து வீதிகளில் விசாகையும் புத்ததத்தரும் உடன்வர வளநாடுடையாரும் ஓவியனும் அவன் மனைவி பதுமையும் சூழ்ந்து துணையாகக் கொண்டு சுற்றியபோது இளங்குமரன் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தத்துவ ஞானிகளையெல்லாம் சந்தித்தான். சிறிதும் பெரிதுமாக அலை எறியப் பெற்றும், அசையாமல் கலங்காமல் ‘நான் நிற்பதுதான் எனக்கு நிலையான உறுதி என்று நிற்கும் இந்தத் தீவைப்போல் அறிவின் பலமே பலமாக எதையும் தாங்கி நின்று சிரிக்கும் அந்தத் தத்துவ ஞானிகளைப் பார்த்தபோது இளங் குமரனுக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது. மனிதனுடைய மனத்தில் ஏற்படும் நோய்களுக்கு மருந்து வேறெங்கோ இருப்பதாகத் தேடித் தவித்துக்கொண்டிருப்பது பேதைமை. தனக்குள்ளே ஏற்படும் திடமான சிந்தனைகளே தன் மனத்துக்குச் சுகம் என்பதைப் போலத் தங்கள் உள்ளத்தில் புதுமைகளைத் தேடி உலகத்துக்குத் தரும் அந்த ஞானி களை எண்ணி எண்ணி வணங்கினான் இளங்குமரன். கடற்பரப்பின் மேலே தீவின் கீழ்க்கோடியில் நிலா எழுந்த போது, அந்த வேளை வருவதற்காகவே அது வரை அவன ருகில் காத்துக் கொண்டிருந்தவர் போல், “மணிநாக புரத்திற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தம்பீ!” என்று நினைவூட்டினார் வளநாடுடையார். இளங்குமரன் புறப்படச் சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்.

“இதுதான் வாழ்க்கை! நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும்போது நம்முடைய நினைவில் அந்த வினாடிவரை தோன்றாத ஏதேனும் ஒரு புதிய திசையைக் காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை யாராவது நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே வந்து சேருகிறார்கள்” என்று எண்ணியபடியே விசாகையிடமும் புத்ததத்தரிடமும் விடைபெற்றுக் கொண்டான் இளங்குமரன். அவர்களும் மகிழ்ச்சியோடு அவனுக்கு விடை கொடுத்தார்கள்.

“நானும் எங்கள் பெளத்த சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட விரைவில் இங்கிருந்து பூம்புகாருக்குத் திரும்பி விடுவோம், திரும்பும்போது நாங்கள் மணிநாக புரத்தில் இறங்கமாட்டோம். ஆயினும் நான் பூம்புகாரில் உங்களைச் சந்திப்பேன்” என்றாள் விசாகை.

புத்ததத்தர் இளங்குமரனை வாழ்த்தினார். ஓவியன் மணிமார்பன் அங்கிருந்தே பாண்டி நாட்டுக்குப் புறப்படுவதாகச் சொன்னான்.

“ஐயா! இங்கிருந்தே பாண்டிநாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய கொற்கைக்குப் பல கப்பல்கள் புறப்படுகின்றன. மணிபல்லவத் தீவையும், வைசாக பூர்ணிமை விழாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் இந்திர விழாவுக்கு வந்திருந்த நானும் என் மனைவியும் பூம்புகாரிலிருந்து உங்களோடு இங்கே புறப்பட்டு வந்தோம். விரும்பியபடி இந்தச் சிறிய ஞானத் தீவையும் இதில் நிகழும் அறிவுத் திருவிழாவையும் கண்டுகளித்தாயிற்று. இன்றோடு நாங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய இரண்டு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்து விட்டது. என்னுடைய வயது முதிர்ந்த பெற்றோர்கள் நானும் என் மனைவியும் வருகிற நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்தக் கொண்டிருப்பார்கள். கொற்கைத் துறைமுகப்பட்டினத்தில் இறங்கிப் போகிற போக்கில் அங்கு உள்ள சலாபத்தில் நடைபெறும் புகழ்பெற்ற முத்துக்குளிப்பு விழாவையும் பார்த்துவிட்டு நாங்கள் மதுரை திரும்பிவிடலாம் என்று எண்ணுகிறோம்...” என்றான் மணிமார்பன். அவன் குரலில் ஊர் திரும்பும் ஆவல் மிகுந்து தொனித்தது.

ஆனால், இளங்குமரனும் வளநாடுடையாரும் ஓவியனுக்கு விடை கொடுக்க மறுத்துவிட்டார்கள். இளங்குமரன் ஓவியனை அன்போடு தழுவிக் கொண்டு அவனிடம் கூறினான்:

“நீ எங்களோடு மணிநாகபுரத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்கிறது மணிமார்பா! எனக்கு மிகவும் வேண்டியவனாகிய குலபதி என்னும் மணிநாகபுரத்து இரத்தின வாணிகனுடைய மாளிகையில் அற்புதமான ஓவிய மாடம் ஒன்றிருக்கிறது. அதை நீ காண வேண்டும். வேறு பல காரணங்களாலும் நீ இன்னும் சில நாட்களுக்கு என்னோடு உடனிருக்க வேண்டும்.”

இளங்குமரனுடைய இந்த அன்பான வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களோடு மணிநாகபுரத்திற்குக் கப்பலேறினார்கள், அன்று மணிபல்லவத்தைச் சூழ்ந்துள்ள கடலில் நீர்ப்பரப்பே தெரிவதற்கு இடைவெளியின்றி எங்கு நோக்கினும் அலங்கரிக்கப் பெற்ற கப்பல்களும் மரக்கலங்களும் போய்க் கொண்டிருந்தன. நிலா ஒளியின் கீழ் அந்த அழகிய சூழ்நிலையில் அவர்கள் மணிநாக புரத்திற்குப் புறப்பட்டிருந்தார்கள். பரபரப்பான சூழ்நிலையில் முதல்நாள் இரவு அருட்செல்வ முனிவரிடம் இந்த ஒரே ஒரு நாளைப் பிச்சை கேட்டுப் பெற்றுக் கொண்டு அவசரமாக இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்ததும் இந்த ஒருநாள் கழிந்துபோன வேகம் தெரியாமல் இப்படிக் கழிந்துபோனதும், இப்போது மீண்டும் மணிநாகபுரத்திற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருப்பதுமாக ஒவ்வொன்றாகவும் விரைவாகவும் நடக்கும் தன்னுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எண்ணியபோது இளங்குமரனுக்கு மிகவும் விந்தையாக இருந்தது.

‘தாயின் கருவிலிருந்து புறப்பட்டு வந்து இந்த மண்ணில் குதித்த முதல் விநாடி தொடங்கி உயிர் வாழ்க்கையே ஒரு பெரிய யாத்திரைதான். போலிருக்கிறது! எங்கும் நடக்காமல் தங்கிவிடும்போது மனத்தினாலும், எங்கும் தங்காமல் நடக்கும்போது கால்களாலும் மாறிமாறி எதை நோக்கியோ யாத்திரை செய்துகொண்டே இருக்கிறோம். கால்களால் முடியாதபோது எண்ணங்களாலும், எண்ணங்களால் முடியாதபோது கால்களாலும் எங்காவது சென்று கொண்டே இருக்கிறோம் என்று எண்ணியபடியே நிலாவையும் வானத்தையும் ஏக்கத்துடனே பார்த்தான் இளங்குமரன்.

அப்போது அவனைப் போலவே நிலாவையும் கப்பல்கள் செல்லும் கடலையும் தீபாலங்காரங்களோடு நாற்புறமும் மின்னும் தீவுகளையும் பார்த்துக்கொண்டே அருகில் நின்ற மணிமார்பன் அதே ஏக்கத்தோடு தன் அனுபவம் ஒன்றை இளங்குமரனிடம் கூறினான்.

“இந்த உலகில் எத்தனையோ காட்சிகள் நம்முடைய பார்வைக்கும், நினைப்புக்கும், அழகாகவும் நயமாகவும் தோன்றிப் படைப்புக்கு மட்டும் உயர்ந்தவையாகவும் அரியவையாகவும் போய் மேலே நின்றுகொள்கின்றன. இப்போது இந்த வானமும் கடலும், தீவுப் பகுதிகளும் ஓவியத்திற்கு உரிய அழகுக் காட்சிகளாக எனக்குத் தோன்றுகின்றன. இவற்றை நான் நினைப்பிற் கொண்டு வந்து படைக்க முயலும்போது எப்படியோ?”

“எப்படியானாலும் அதுதான் இயற்கையின் வெற்றி மணிமார்பா! உன்னுடைய நிறங்களை நீ இயற்கையிலிருந்து கற்றாய். உன்னுடைய நிறங்களால் நீ வரையப் போவது எதுவோ அதையும் இயற்கையிலிருந்து காண்கிறாய். எல்லாவிதத்திலும் உனக்கு ஆசிரியனாக இருக்கும் ஒரு பொருள் உன்னைவிட உயர்ந்து நிற்பது இயல்பு தானே?” என்றான் இளங்குமரன். இவ்வாறே மணி மார்பனும் இளங்குமரனும் பல செய்திகளைப் பற்றி உரையாடிக் கொண்டே சென்றார்கள். மணிமார்பனின் மனைவி தொலைவில் தெரியும் நிலாவொளி அழகோடு கூடிய தீவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் ஏதோ திட்டமிடும் ஆழ்ந்த சிந்தனைகளோடு தளத்தில் அமர்ந்திருந்தார். அன்றைய நிலா உச்சி வானத்தை அடைவதற்கு ஓரிரு நாழிகைகளுக்கு முன்பே அவர்கள் மணிநாகபுரத்தை அடைந்து விட்டார்கள். அவர்களை எதிர்கொண்டு அழைத்துப் போவதற்காகக் குலபதி சங்குவேலித் துறையில் வந்து காத்திருந்தான். துறையிலிருந்து அவர்கள் எல்லாரும் குலபதியின் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த மாளிகை ஒவ்வொரு கணமும் அவர்கள் வரவையே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுபோல் பரபரப்பாயிருந்தது. மணிநாகபுரத்து மாளிகைக்குத் தன்னோடு உடன் வந்திருந்த எல்லாரையும் மாளிகையின் கீழ்ப்பகுதியில் முதற் கூடத்திலேயே தங்கியிருக்கச் செய்து விட்டு, இளங்குமரன் தான் மட்டும் ஓவிய மாடத்திற்குச் செல்லும் படிகளில் ஏறினான். எதை உணர்வதற்காகச் சென்று கொண்டிருந்தானோ, அதற்காக மனம் விரைந்தாலும், அந்தப் படிகளில் ஏறும்போது அவனுடைய கால்கள் தயங்கித் துவண்டன. கடைசிப் படியில் போய் அவன் தலை நிமிர்ந்தபோது அங்கு முன்பே வந்து நின்று கொண்டிருந்த அருட்செல்வ முனிவர் கைகளை நீட்டி அவனைத் தழுவிக்கொண்டார்.

“என்னிடம் சொல்லியபடியே திரும்பி வந்து விட்டாய்! இனி நான் சொல்லியபடி நீ செய்ய வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவனை அந்த ஓவிய மாடத்தின் ஒரு கோடியிலிருந்த தம்முடைய அறைக்கு அழைத்துக் கொண்டு போனார் முனிவர். அந்த அறையின் நடு மேடையில் ஓர் அகல்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகே ஏட்டுச் சுவடியும் வைக்கப்பட்டிருந்தது. இளங்குமரனை அறைக்கு உள்ளே அழைத்துக் கொண்டு போன முனிவர் விளக்கின் அருகே மேடையில் அவனை அமரச் செய்தபின் அங்கே கிடந்த சுவடியை எடுத்து அவன் கைகளில் கொடுத்துத் தொடங்கலாம் என்றார். அவர் அளித்த அந்த ஏடுகளை கையில் வைத்துக்கொண்டே சலனம் அடைந்த மனத்தோடு எதற்காகவோ சிறிது தயங்கினான் இளங்குமரன்.

“எதற்காகவும் தயங்காதே! இந்த ஏடுகளில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புக்களை இருநூறு வெண்பாக்களாகவும், உரைச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துப் பொருள் விளங்கிக்கொண்டு நீ தெளிவு பெறுவதற்கு நாளைக் காலை வரை ஆகலாம். அதோ நிலவும் உச்சி வானத்துக்குப் போய்விட்டது. இனியும் தாமதம் செய்யாமல் இந்த ஏடுகளைப் படிக்கத் தொடங்கிவிடு” என்று கூறிவிட்டு அந்த அறைக் கதவுகளை இழுத்து அடைத்து வெளியே தாழிட்டுக்கொண்டு போய் விட்டார் அவர். ‘மனம் வெதும்பி வாட நேர்கிற துன்ப அநுபவங்களையும் தாங்கிக்கொண்டுதான் வளர வேண்டும்’ என்று தன் மனத்தை மீண்டும் உறுதி செய்து கொண்டவனாக அந்தச் சுவடியில் முதல் ஏட்டிலிருந்த முதல் பாட்டைப் படிக்கலானான் இளங்குமரன். அந்த முதல் ஏடானது மிகவும் அண்மையில் எழுத்தாணியால் கீறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

‘என் மனத்தில் சினம் கனல வேண்டும் என்ற உட்கருத்தோடு என்னை நோக்கிச் சொல்வது போலவே முனிவர் இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் போலும்’ என்று எண்ணியவாறே மறுபடியும் அதைப் படித்தான் இளங்குமரன்.

தாயைச் சிதைத்த தனிக்கொடுமை யொன்றன்றி
நீயும் நினதரிய செல்வமுமே போயொழியத்
தீமை பலசெய்த சீரழிவை நீறாக்கத்
தீயென் றெழுக சினம்

அடுத்த ஏட்டைப் புரட்டினான் இளங்குமரன். கோவை செய்யப்பட்டிருந்த பட்டுக் கயிற்றிலிருந்து ஒவ்வோர் ஏடாகக் கழன்றபோது அவன் மனத்தின் நீண்ட நாள் சந்தேகங்களும் ஒவ்வொன்றாகக் கழன்றன. கல்வியினாலும் தத்துவ ஞானத்தினாலும் அவன் தனக்குள் சேர்த்திருந்த மெல்லிய உணர்வுகள் நெருப்பு காயக் காயவற்றிக் குறையும் நீர் போலக் குன்றின. அந்த ஏட்டுச் சுவடிப் பாடல்களிலிருந்து காலவெள்ளத்தின் அடி ஆழத்தில் மூழ்கிப்போயிருந்த பல சம்பவங்கள் அவனுக்குத் தெரிந்தன. தான் பிறந்த கதையும் தன் தாய் தந்தை இருவரும் இறந்த கதையும் ஒருங்கு தெரிந்தது. தான் பூம்புகாரில் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையில் நினைவு தெரியாச் சிறு பருவத்தினனாக வளர்ந்து கொண்டிருந்தபோது தன்னைக் காண்பதற்காகவும் தனக்கு ஐம்படைத் தாலியும் பொன் அரைஞாணும் அணிவித்துப் பிறந்தநாள் மங்கலமும் வெள்ளணி விழாவும் கொண்டாடி மணிநாகபுரத்திற்குத் தன்னை அழைத்துப் போவதற்காகவும், நாக நாட்டிலிருந்து பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்த தன் அருமைத் தாய்மாமனாகிய காலாந்தக தேவரைக் கொலைகாரப் பாவிகள் ஏமாற்றி அழைத்துப் போய் வன்னி மன்றத்து இருளில் கொலை செய்ததையும் அறிந்தபோது துக்கமும் கொதிப்பும் ஒருங்கு அடைவதை இளங்குமரனால் தவிர்க்க முடியவில்லை. அந்த ஏடுகளில் அப்போது படித்து அறிந்து கொண்டவற்றிலிருந்து அவன் தெரிந்து கொண்டவற்றை ஒன்றாகக் கூட்டி வரிசையாக எண்ணியபோது அவை நிகழ்ந்த காலத்தில் எப்படி நிகழ்ந்திருக்குமோ அப்படியே அவன் கண்முன் காட்சிகளாகத் தோன்றலாயின.