மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/ஆரியப்படை கடந்த...பாண்டியன் நெடுஞ்செழியன்
2. ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்[1]
கடைச் சங்ககாலத்தில் ஆட்சிசெய்த பாண்டியரில் சிலர் நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களின் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்களை, இன்னின்ன நெடுஞ் செழியர் என்று பிரித்தறிவதற்கு அவர்பெயர்களுடன் சில அடைமொழியிட்டு வழங்கினார்கள். நம்பி நெடுஞ்செழியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பெயர்களைக் காண்க. இங்கு ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்வோம்.
மதுரையிலிருந்து பாண்டி நாட்டை யரசாண்ட இந்த நெடுஞ்செழியன் கல்விகற்ற அறிஞன்; செய்யுள் இயற்ற வல்ல கவிஞன். கவிஞனாக விளங்கிய இவன் இயற்றிய செய்யுட்கள் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. நற்காலமாக இவன் இயற்றிய ஒரே ஒரு செய்யுள் புறநானூற்றில் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுள் இது:
உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே:
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ்
சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்,
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னாது அவருள்
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்,
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்
கீழ்ப்பா லொருவன் கற்பின்,
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.
(திணை - பொதுவியல்; துறை - பொருள்மொழிக் காஞ்சி. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.)
விழுமிய பொருள் பொதிந்த இந்தச் செய்யுள் புற நானூற்றில் தொகுக்கப்படும் சிறப்புப்பெற்றுள்ளது. இச்செய்யுளை இயற்றிய இந்தப் பாண்டியன் யாரிடங் கல்வி பயின்றான் என்பது தெரியவில்லை.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்றபோது பாண்டி நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இந்த நெடுஞ்செழியனே. மதுரையில் வாணிகஞ் செய்து பொருளீட்ட எண்ணிய கோவலன், வாணிக முதலீட்டுக்காகக் கண்ணகியின் பொற்சிலம்பை விற்கச் சென்று வஞ்சகன் ஒருவனால் 'கள்வன்' என்று குற்றஞ்சாட்டப்பட்ட போது, அக்குற்றத்தைத் தீர விசாரிக்காமல் அவனைக் கொல்வித்தவனும் இந்த நெடுஞ்செழியனே. கோவலன் மேல் சுமத்தப்பட்ட பொய்ப்பழியை நீக்குவதற்காகக் கண்ணகி வழக்குத் தொடுத்து வாதாடியபோது, தான் கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்தது அரசநீதி என்று எடுத்துக்காட்டியவனும் இந்த நெடுஞ்செழியனே. பிறகு கண்ணகி, குற்றஞ்செய்யாதவன்மேல் பொய்க்குற்றஞ் சாட்டிக் கொலை செய்வது அநீதி என்று சான்று காட்டி நிறுவிய போது, தான் செய்தது தவறுதான் என்று கண்டு, தன் தவற்றை யுணர்ந்து அஞ்சி நடுங்கி அரசுகட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்தபடியே உயிர் விட்டவனும் இந்த நெடுஞ்செழியனே. இவனுடைய ஆட்சிக்காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரையின்மேல் படையெடுத்து வந்து போர் செய்த ஆரியப்படையை வென்று ஓட்டித் துரத்தியவனும் இந்த நெடுஞ் செழியனே. இவற்றையெல்லாம் சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தின் இறுதிச் செய்யுளினால் அறிகிறோம்.
வட வாரியர் படை கடந்து
தென்றமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரைசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்
என்பது அதன் வாசகம்.
கல்வி கற்றுப் புலவனாக விளங்கிய இந்தப் பாண்டியன் போர்க்களத்தில் பகைவரை வென்று புகழ் பெற்று விளங்கினான். அந்த வெற்றியின் காரணமாக இவன் "ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்" என்று சிறப்புப்பெயர் பெற்றான். அரசுச் செல்வமும், கல்விச் செல்வமும் கைவரப் பெற்ற இந்தப் பாண்டியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுக் கோவலனைக் கொன்ற தவற்றின் காரணமாகக் கண்ணகி இவன்மீது தொடுத்த வழக்கில் தோற்றுத் தான் செய்தது தவறு என்று கண்டபோது மனம் பதறித் தான் நடத்தியது கொடுங்கோல் என்பதை அறிந்து நெஞ்சம் பதறிச் சிம்மாசனத்திலேயே உயிரை விட்டான். இவன் அரசு கட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்து உயிர்விட்டபடியால் "அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்" என்றும் பெயர் பெற்றான். இஃது இவன் இறந்த பிறகு பெற்ற பெயர்.
நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றான் என்று கூறப்படுகிறான். ஆரியப்படை இவன்மேல் படையெடுத்து வந்ததா? இவன் ஆரியப் படையின்மேல் போருக்குச் சென்றானா? ஆரியப் படை என்றால் என்ன? இவை பற்றி ஆராய வேண்டியது சரித்திரம் அறிவதற்கு முதன்மையானது.
சங்க காலத்துத் தமிழர் பாரதநாட்டை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். அவை தமிழகம் (தமிழ் நாடு), வடுக நாடு ஆரிய நாடு என்பவை. தமிழ் நாட்டுக்கு வடக்கே இருந்தது வடுக நாடு. அதுதமிழ்நாட்டின் வட எல்லையிலிருந்துவடக்கே விந்தியமலை வரையில் பரவியிருந்தது. வடுகநாடு மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையில் நீண்டிருந்தது. வடுக நாட்டின் மேற்குப் பகுதியைக் கன்னடரும் கிழக்குப் பகுதியைக் கலிங்கரும் (ஆந்திரரும்) ஆட்சி செய்தனர். கன்னட நாடும் ஆந்திர நாடும் சேர்ந்ததே வடுக நாடு. கன்னடரும், ஆந்திரரும் வடவர் அல்லது வடுகர் என்று பெயர் பெற்றனர்.
வடுக நாட்டுக்கு அப்பால் (விந்திய மலைக்கு வடக்கே) இருந்தது ஆரியநாடு. அது வடஇந்தியா முழுவதும் அடங்கியிருந்தது. ஆரிய நாட்டிலே இருந்தவர் ஆரியர். ஆரிய நாட்டிலிருந்த படை ஆரியப்படை.
கடைச்சங்க காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் வடமேற்கு இந்தியாவில் சில கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தாரில் யௌத்தேயர், அர்ச்சுனீயர் என்னும் பிரிவினர் முக்கியமானவர். இவர்களுடைய தொழில் போர் செய்வது. யுத்தம் (போர்) செய்வதை வாழ்க்கையாகக் கொண்டவர் யௌத்தேயர். அர்ச்சுனீயர் என்பவர் அர்ச்சுனன் வழியில் வந்த போர் வீரர். இவர்களுக்கு அரசன் இல்லை. இவர்கள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். யாரேனும் அரசன் இவர்களைத் துணைக்கு அழைத்தால் அவனைச் சார்ந்து அவனுடைய பகைவனுடன் போர் செய்வது இவர்களுடைய தொழில். சில சமயங்களில் இவர்கள் கூட்டமாக வேறு நாட்டுடன் போர் செய்வதும் உண்டு. யௌத்தேய கணம் (கணம் - கூட்டம்) தமிழ்நாட்டின் மேல் அடிக்கடி போருக்கு வந்தது. யௌத்தேய கணத்தைச் சங்ககாலத் தமிழர் ஆரியப்படை என்று பெயரிட்டழைத்தனர். வடுக நாட்டுக்கு அப்பால் ஆரிய நாட்டிலிருந்து வந்தவர் ஆகையால் அவர்கள் ஆரியப்படை என்று பெயர் பெற்றனர். ஆரியப் படை (யௌத்தேய கணம்)யின் வரலாற்றை நான் எழுதிய கட்டுரையில் காண்க. (ஆரியப்படையும் யௌத்தேய கணமும். பக்கம் 128-134, கல்வெட்டுக் கருத்தரங்கு. 1966)
அகநானூறு 386 ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஆரியப் பொருநன், ஆரியப் படையைச் சேர்ந்தவன் என்று தோன்றுகிறான். சோழநாட்டு வல்லத்துக் கோட்டை மேல் ஆரியப்படை வந்து முற்றுகையிட்டபோது அக்கோட்டையிலிருந்த சோழன் அவ்வாரியப் படையை வென்று துரத்தினான். ஆரியப்படை உடைந்து ஓடிற்று. இதனை அகநானூறு 336 ஆம் செய்யுளினால் அறிகிறோம். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் ஓர் ஆரியப்படை போர் செய்ய மதுரைக்கு வந்ததையும் அப்படையை அவன் வென்று துரத்தியதையும் சிலப்பதிகார மதுரைக்காண்டம் கட்டுரைச் செய்யுளினாலும், புறநானூறு 183 ஆம் செய்யுளின் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம்.
இவ்வளவு சிறந்த வீரனும் அறிஞனும் புலவனுமாக இருந்த இந்தப் பாண்டியன், மகளிர் மாட்டு வேட்கையுடையனாய்ச் சிற்றின்பப் பிரியனாக இருந்தான் என்பதை இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்தவரான இளங்கோவடிகள் (சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார்) கூறுகிறார். சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் இதனை இவர் கூறுகிறார்:
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலன் உள்ளம் கவர்ந்த வென்றுதன்
ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதற் றேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைக்கா ணகவயின்.
(வரி, 131 - 140)
இச்செய்தியையே இளங்கோவடிகள் கட்டுரை காதையில் மதுராபதி தெய்வத்தின் வாயிலாக மீண்டும் கூறுகிறார். பாண்டியன் கல்வி கற்றுப் புலமை வாய்ந்தவனாக இருந்தும், மனத்தை அடக்காமல் சிற்றின்பத்தில் நாட்டஞ் செலுத்தினான் என்றும், ஆனாலும் இவ்வொழுக்கம் அரச குடியில் பிறந்த இவனுக்கு இழுக்காகாது என்றும் மதுராபதி கூறியதாக இளங்கோவடிகள் கூறுகிறார்:
நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடும் ஆயினும்
ஒழுக்கொடு புணர்ந்த இவ்விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந் தாராது.
(கட்டுரைகாதை, 35-41.)
இந்த நெடுஞ்செழியனிடத்தில் இன்னொரு குறைபாடும். இருந்தது. அஃது அரசர்மாட்டிருக்கக் கூடாத குறைபாடு. நீதி விசாரணைகளை இவன் பொறுப்பேற்று நடத்தாமல் தன் கீழ்ப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டான். அதனால், அவர்கள் தம்முடைய விருப்பம்போல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள். அவர்கள் செய்த பிழைப்பட்ட தவறான தீர்ப்பு இவ்வரசனுக்குக் கெட்ட பெயரையுண்டாக்கிற்று. இச்செய்தியையும் இளங்கோவடிகளே கூறுகிறார். இதனை விளக்கிக் கூறுவோம்.
பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் சேர நாட்டில் இருந்தவன் 'பல்யானைச் செல்கெழுகுட்டுவன்'. இந்தக் குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தில் பாடியவர் பாலைக் கௌதமனார். அவருக்குக் குட்டுவன் பெருஞ் செல்வங் கொடுத்ததை யறிந்த சோழ நாட்டுப் பார்ப்பான் பராசரன் என்பவன், அவனிடஞ் சென்று வேதபாராயணஞ் செய்து பொன்னையும் மணியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் (திருத்தண்கால்) என்னும் ஊரில் வந்து அரச மரத்தடியில் இளைப்பாறினான். அப்போது அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவர் அவனிடஞ் சென்றனர். பராசரன் அவ்விளைஞர்களை அழைத்துத் தன்னுடன் வேதம் ஓதும்படி கூறினான். அவ்விளைஞர்களில் தக்கிணன் என்னும் சிறுவன் பிழையில்லாமல் வேதம் ஓதியபடியால், பராசரன் தக்கிணனுக்கு முத்துப் பூணூலையும் பொன் கடகத்தையும் பரிசாகக் கொடுத்தான். பிறகு அவன் தன் சோழ நாட்டுக்குப் போய் விட்டான்.
முத்துப் பூணூலையும் பொற் கடகத்தையும் பரிசாகப் பெற்ற தக்கிணன் என்னும் சிறுவன் அவற்றை அணிந்து கொண்டான். அதனைக் கண்டு பொறாமை கொண்ட அவ்வூர்ப் பார்ப்பனர், தக்கிணனுடைய தந்தையான வார்த்திகன் என்னும் பிராமணன் இந்த நகைகளை எங்கிருந்தோ திருடிக்கொண்டு வந்தான் என்று ஊர் அதிகாரிகளிடம் கூறினார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அந்த ஊழியர்கள், தீர விசாரியாமல் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். வார்த்திகன் அந்த நகைகளைக் களவாடியிருக்க வேண்டும், அல்லது அவனுக்குப் புதையல் கிடைத்திருக்க வேண்டும். களவு செய்தது குற்றம். புதையல் கிடைத்திருந்தால், அதை அரசாங்கத்தில் சேர்க்காமல் போனது குற்றம் என்று அவர்கள் தீர்ப்புக் கூறினார்கள்.
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் வருந்தி அழுதாள். அப்போது அவ்வூர் ஐயை (கொற்றவை) கோவிலின் கதவு திறவாமல் மூடிக்கொண்டது. இச்செய்தி அரசன் செவிக்கு எட்டியது. பாண்டியன், தண்காலில் இருந்த அரச ஊழியர்களை யழைத்து விசாரித்தான் அப்போது முத்துப் பூணூலின் வரலாறு தெரிந்தது. அரசன் வார்த்திகனை விடுதலை செய்து தன் ஊழியர் அநீதி செய்ததற்குத் தண்டமாக அவனுக்கு வயலூரில் நிலத்தைத் தானஞ் செய்தான். பிறகு கொற்றவைக் கோயில் கதவு திறந்து கொண்டது. இச்செய்திகளைக் கட்டுரைகாதை (வரி, 61-131)யில் காண்க. இதனால், இவன் நீதி விசாரணையில் கண்டிப்பாக இராமல் தன் கீழ்ப்பட்ட ஊழியரிடத்தில் அதிகாரத்தை விட்டிருந்தான் என்பது தெரிகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பொது மக்களுக்கு இவன்மீது நம்பிக்கை போய் விட்டது. ஒரு சோதிட வார்த்தையும் உலவ ஆரம்பித்தது. அது,ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசு கேடுறும்
(கட்டுரை. 133 - 136)
என்பது.
வழக்கு விசாரணைகளைச் சரிவரச் செய்யாமல் போனது இவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. பாண்டிமாதேவியின் பொற்சிலம்பைத் திருடின கள்ளன் தன்னிடம் இருக்கிறான் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறியபோது, பாண்டியன் அதனை நன்றாக விசாரணை செய்யவில்லை. அல்லது, தக்க பொறுப்புள்ள அதிகாரியிடத்தில் ஒப்படைத்து விசாரிக்கச் செய்யவும் இல்லை. அவன் தன் கடமையைச் செய்யாமல் தவறினான். இஃது அவனுடைய இயற்கை. பொற்கொல்லனுடைய வார்த்தையை அவன் முழுவதும் நம்பினான். விசாரணை செய்யாமலே, ஊர் காப்பாளரை அழைப்பித்து,
"தாழ்பூங் கோதைதன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு"
என்று கட்டளை யிட்டான். இந்தச் சோர்பு இவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இவன்மீது கண்ணகி வழக்குத் தொடுத்து வழக்காடிய போது, இவ்வரசன் தான் செய்தது பிழை என்பதை அறிந்தான். அறிந்து அரசு கட்டிலிலேயே உயிர்விட்டான்.
ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில், துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனின் இந்த வரலாறுகளை யெல்லாம் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசர்கள், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவன் தம்பியான பல்யானைச் செல் கெழுகுட்டுவனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர். கொங்கு நாட்டில் சேரரின் இளைய வழியைச் சேர்ந்த மாந்தரஞ்சேரல் (செல்வக் கடுங்கோவாழியாதன்) அரசாண்டிருந்தான். சோழ நாட்டில் இருந்தவன் வடிவேற்கிள்ளி. தொண்டை நாட்டைக் காஞ்சியிலிருந்து அரசாண்டவன் வடிவேற்கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி, இவர்கள் எல்லோரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்கள்.இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனைப்பற்றித் திரு. ச. வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஓரிடத்தில் சரியாகவும் வேறொரிடத்தில் தவறாகவும் எழுதியிருக்கிறதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. 1940 ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாசம் வெளியிட்ட சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்) என்னும் நூலின் பதிப்பாசிரியராக இருந்தவர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள், அந்த நூலில், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னுந் தலைப்பில், இவன் பாடிய புறம் 183 ஆம் செய்யுளைப் பிள்ளை யவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய 'தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் 145 ஆம் பக்கத்தில் இந்தப் பாண்டியனைச் சந்தேகிக்கிறார். (இந்த ஆங்கில நூல் 1956 ஆம் ஆண்டில் இவர் காலஞ் சென்ற பிறகு அச்சிடப்பட்டது). இந்த அரசன் உண்மையில் உயிர்வாழ்ந்திருந்தானா என்று இவர் ஐயப்படுகிறார். சங்க இலக்கியத்தை அச்சிட்டபோது இவருக்கு இல்லாத ஐயம் பிற்காலத்தில் இவருக்கு எப்படி ஏற்பட்டது! இந்தப் பாண்டியன் கற்பனைப் புருஷன் என்றால், இவன் பாடிய செய்யுள் எப்படிப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கும்?
ஆனால், வையாபுரிப் பிள்ளையின் நண்பரும் தமிழ் நூல்களும் தமிழ் நாட்டுச் சரித்திரங்களும் பிற்காலத்தவை என்று கூறுகிறவருமான திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்தப் பாண்டியனைப்பற்றி ஐயப்படவில்லை. இந்தப் பாண்டியன் உண்மையில் வாழ்ந்திருந்தவன் என்றும் புறநானூற்று 183ஆம் செய்யுளைப் பாடியவன் என்றும் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்திலிருந்தவன் என்றும் கோவலனைத் தவறாகக் கொன்று அந்தத் தவற்றைப் பிறகு அறிந்து சிம்மாசனத்திலிருந்தபடியே உயிர் விட்டவன் என்றும் சாஸ்திரியார் எழுதுகிறார். (P. 524, 544. A Comprehensive History of India. Vol. 2. 1957).
ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான வெற்றி வேற்செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன், மதுரைக்கு வந்து அரசாண்டான். அவனுக்குப் பிறகு பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
- ↑ செந்தமிழ்ச்செல்வி : 46, 1971 - 72