மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள்
பிறகட்டுரைகள்
1. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள்[1]
தமிழ்நாட்டில் வழங்கும் சில மரபு வழிச் செய்திகள் பாண்டிய மன்னர்களுடைய செயல்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில புராணத் தலைவர்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் உண்மையான வரலாற்றுச் செய்திகள் என்று கொள்ள முடியவில்லை.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலப்பகுதியைத் தங்கள் நாட்டுப் பரப்பில் கொண்டிருந்ததோடு நீர்ப்பரப்பாகிய கடலையும் ஓர் எல்லை வரையில் தங்களுக்கு உரியதாகப் பாண்டிய மன்னர்கள் கொண்டிருந்தனர். அந்த எல்லைப் பகுதி எதுவரையில் என்று பாண்டிய அரசன் ஒருவன் தன்னுடைய வேலை வீசிக் காட்டினான்[2]. வடிம்பு என்பது வேலின் நுனியாகும். எனவே, இவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.
இவன் தன்மீது வேலை வீசியதால் சினங்கொண்ட கடல் பொங்கியெழுந்தது; பாண்டிய நாட்டின் நிலப்பகுதியை விழுங்கியது. இதனால், பாண்டியன் தன் நாட்டுப் பரப்பில் குமரியாறு பாய்ந்த நிலம், குமரிக்கோடு முதலான பல மலைகளைக் கொண்டிருந்த நிலம் ஆகியவற்றை இழந்தான். இந்த நில இழப்பை ஈடுசெய்வதற்காக அவன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்று கங்கைச் சமவெளியையும் இமயமலைப் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டான். இந்த அரசன் தென்னன் என்று குறிப்பிடப்படுகிறான்.
நெடியோன் என்னும்[3] பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவனாகவும், 'நிலந்தருதிருவின்' நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டவனாகக் காட்டப்படுவதால் இந்த அரசனை வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று கருதுகின்றனர்[4]. பிற்காலத் தமிழ்நூல் ஒன்று இவனை 'ஆழி வடிவு அலம்ப நின்றான்' என்று குறிப்பிடுகிறது[5]. இந்நூல் இவனை யதுகுல அரசன் என்றும், ஏழிசை நூல் சங்கத் தலைவன் என்றும், தேவர்களுக்காகத் தூது சென்றவன் என்றும், பாரதப் போரில் கலந்துகொண்டவன் என்றும் குறிப்பிடுகிறது.
இந்திரன் ஆரம்பூண்ட பாண்டியன்[6]
தேவர் கோனாகிய இந்திரன் எல்லா அரசர்களையும் விருந்திற்கு அழைத்தான். விருந்திற்குச் சென்ற அரசரெல்லாரும் இந்திரன்முன் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தினர். பாண்டியன் மாத்திரம் தலை தாழ்த்தி வணக்கம் செய்யாது, தன் பெருமிதம் தோன்ற நிமிர்ந்து சென்றான். இதைக்கண்ட இந்திரன் தன் முத்தாரத்தை அந்தப் பாண்டியனுக்கு அளித்துப் பெருமைப்படுத்தினான்.
மழை பிணித்தாண்ட மன்னவன்
பாண்டியன் ஒருவன் இந்திரனுடைய தலையிலிருந்த முடி வளையை உடைத்து எறிந்தான். அதனாற் சினங்கொண்ட இந்திரன் தனது ஆணைக்குட்பட்டு நடந்துவந்த மேகங்களை அழைத்துப் பாண்டிய நாட்டில் பெய்யக்கூடாதென்று கூறித் தடுத்துவிட்டான். இதனால் பாண்டிய நாட்டில் மழையில்லாமல் போயிற்று. பாண்டியன் ஒருவன் அந்த மேகங்களைத் தடுத்து மழைபெய்யச் செய்தான்.
பொற்கைப் பாண்டியன்
இவனுடைய ஆட்சிக் காலத்தில் மதுரை நகரில் வாழ்ந்த கீரந்தை என்பான் தன்னுடைய மனைவியைத் தனியே வீட்டில் விட்டு வெளியூருக்குப் போனான். பாண்டியனுடைய ஆட்சி, தனித்திருக்கும் தன் மனைவிக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவனுடைய நம்பிக்கை. கீரந்தை வெளியூருக்கும் போயிருப்பதை அறிந்த பாண்டியன் இரவில் நகர்வலம் வரும்போது கீரந்தையின் மனைவிக்கு யாதொரு தீங்கும் நேராதபடி அவள் அறியாமலே காத்துவந்தான். நெடுநாள் சென்றபிறகு, நள்ளிரவில் கீரந்தை வீட்டிற்குள் யாரோ இருவர் பேசுங் குரல் கேட்டது. நள்ளிரவில் நகர்வலம் வந்த பாண்டியன், யாரேனும் கீரந்தையின் மனைவிக்குத் தீங்குசெய்ய வந்தனரோ என்று கருதி அந்த வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளிருந்து கணவனாகிய கீரந்தையின் குரல் 'யார் அது?' என்று கேட்டது. கீரந்தை ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டான். அவனுடைய பேச்சுக்குரல்தான் உள்ளிருந்து கேட்டது. கதவைத் தட்டினபடியால் அவன் அவள்மீது ஐயப்படுவானே. அவனுடைய ஐயத்தைப் போக்கவேண்டுமே' என்று கருதிய பாண்டியன் அந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிக்கொண்டே அரண்மனைக்குப் போய்விட்டான்.
அடுத்த நாள் அந்த வீதியில் உள்ளோர் எல்லோரும் முன்னிரவு தங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ தட்டிவிட்டுச் சென்றார்கள் என்று மன்னனிடம் முறையிட்டனர். தன் மனைவியின்மீது ஐயங்கொண்ட கீரந்தை எல்லாம் வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டதை அறிந்த தன் மனைவியின்மேல் ஐயம் நீங்கினான். பிறகு பாண்டியன் தானே அந்தக் குற்றம் செய்ததை அரசவையில் ஒப்புக்கொண்டு, கதவுகளைத் தட்டின குற்றத்திற்காகத் தன்னுடைய கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான் என்று கதை கூறப்படுகிறது[7].
மலயத்துவச பாண்டியன்
மலயத்துவசன் என்னும் பெயர் மலையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்டவன் என்ற பொருளுடையதாகும். சங்க இலக்கியத்துள் இவனைப் பற்றிய குறிப்பு இல்லை. மலையத்துவச பாண்டியன் காஞ்சனை என்ற பெயருள்ள பாண்டிமா தேவியோடு வாழ்ந்தான். இவ்விருவருக்கும் மகப்பேறில்லாமையால் தவம் செய்து ஒரு பெண்மகவைப் பெற்றனர். அக்குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிடப்பெற்றது. அப்பெண் பாண்டிய நாட்டை அரசாண்டாள் என்று புராணக் கதை கூறுகிறது.
மலையத்துவச பாண்டியனைப் பற்றி வடமொழி பாகவத புராணம் மற்றொரு வரலாற்றைக் கூறுகிறது. இப்புராணக் கதைகள் நம்பத்தகுந்தன அல்ல.தடாதகைப் பிராட்டியார்
மலையத்துவச பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசாண்டதாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன[8] அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி அம்மையே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் செலியூகஸ் நிகேடாரின் தூதுவராக இருந்த மெகஸ்தனீஸ் தம்முடைய காலத்தில் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி அரசாண்டாள் என்று கூறியுள்ளார். ஹெர்க்குலிஸ் என்ற கிரேக்க வீரனுக்குப் பண்டேயா என்ற பெண் இருந்தாள் என்றும், அவளுக்குத் தென்னாட்டில் கடற்கரை வரையில் உள்ள நாட்டை அரசாளக் கொடுத்தான் என்றும் மெகஸ்தனீஸ் கூறியுள்ளார். மலையத்துவச பாண்டியனை இவர் ஹெர்க்குலிஸ் என்று கூறினார் எனத் தோன்றுகிறது. அவளுடைய மகளுக்குப் பண்டேயா என்று பெயரிட்டான் என்பதும், பாண்டிய நாட்டைத் தடாதகையார் அரசாண்டார் என்பதும் ஒரே வரலாற்றைக் குறிக்கின்றன எனலாம்.
பாண்டிய அரசைப்பற்றி மெகஸ்தனீஸ் இன்னொரு செய்தியையும் கூறியுள்ளார். பாண்டிய அரசிக்கு 365 ஊர்கள் இருந்தன. ஒவ்வோர் ஊராரும் அரண்மனைக்கு நாள்தோறும் கடமை செலுத்தினார்கள். இந்த அரசிறை காசாக இல்லாமல் பொருளாகச் செலுத்தப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி என்ற இடைக்குல மடந்தை அரண்மனைக்குச் சேரவேண்டிய இறைவரியை நெய்யாகச் செலுத்தினாள் என்று கூறப்பட்டுள்ளது.
- ↑ தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
- ↑ சிலப். 11 : 17 - 22
- ↑ புறம். 9 : 10; மதுரைக். 763
- ↑ 'சங்க இலக்கியம்' பக். 1482
- ↑ நளவெண்பா, 137
- ↑ 'தேவர்கோன் பூணராம் தென்னர்கோன் மார்பினவே' (சிலப். 17 உள்வரி வாழ்த்து 1:2)
- ↑ சிலப். 23:42-52; பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 23:42-52
- ↑ பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் தடாதகைப் பிராட்டியார் திரு அவதார, திருமணப் படலங்கள்.