மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/008-052
7. குட்டுவன் இரும்பொறை
குட்டுவன் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் இரண்டு பிள்ளைகள் (துணைப் புதல்வர்) இருந்தார்கள் என்றும் அவ்விரண்டு பிள்ளைகளில் மூத்தவன் பெயர் பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் இளைய பிள்ளையின் பெயர் குட்டுவன் இரும்பொறை என்றும் அறிந்தோம். குட்டுவன் இரும்பொறை இளவரசனாக இருந்தபோதே இறந்து போனான். இவன் ஏதோ ஒரு போரில் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இவனுக்கு ஒரு மகன் இருந்தான் என்பதும் அவன் பெயர் இளஞ்சேரல் இரும் பொறை என்பதும் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் பதிகத்தினால் அறிகிறோம்.
குட்டுவன் இரும்பொறை, அந்துவஞ்செள்ளை (மையூர் கிழான் மகள்) என்பவளை மணஞ் செய்திருந்தான் என்றும் இவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் 9ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. பதிற்றுப்பத்துக் கூறுகிறபடி இவர்களின் வழிமுறை இவ்வாறு அமைகிறது.
அந்துவன் பொறையன்
(= பொறையன் பெருந்தேவி)
↓
செல்வக் கடுங்கோ வாழியாதன் =
↓
(வேளாவிக் கோமான் பதுமன் தேவி)
↓
─────────────────────
↓↓
பெருஞ்சேரல் இரும்பொறை குட்டுவன் இரும்பொறை
(தகடூரை எறிந்தவன்) (= அந்துவஞ்செள்ளை)
யானைக்கட் சேய் மாந்தரஞ் இளஞ்சேரல்
சேரல் இரும்பொறை இரும்பொறை
செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் (துணைப் புதல்வர்) இருந்தார்கள் என்று 7ஆம் பத்துத் தெளிவாகக் கூறுகின்றது. இதைச் சரித்திர அறிஞர்கள் கவனிக்கவில்லை. செல்வக் கடுங்கோவுக்கு அந்துவஞ்செள்ளை என்னும் ஒரு சகோதரி இருந்தாள் என்று நீலகண்ட சாஸ்திரி ஊகமாக எழுதியுள்ளார். இதற்குச் சான்று ஒன்றும் இவர் காட்டவில்லை. இவ்வாறு கற்பனையாகக் கற்பிக்கிற இவர் அந்துவஞ்செள்ளையை யாரோ ஒரு குட்டுவன் இரும்பொறை என்னும் சேர அரசன் மணஞ் செய்துகொண்டான் என்று மேலும் கற்பனை செய்கிறார். குட்டுவன் இரும்பொறை, செல்வக் கடுங்கோவின் இளைய மகன் என்பதற்கு மேலே சான்று காட்டியுள்ளோம். இந்த அகச் சான்றையறியாமல், இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்ட நீலகண்ட சாஸ்திரி, அந்துவஞ்செள்ளை மையூர்கிழானின் மகள் என்று (9ஆம் பத்துப் பதிகம்) கூறுகிறபடியால், தான் தவறாக யூகித்துக் கொண்ட தவற்றைச் சரிபடுத்துவதற்காக, மையூர்கிழான் என்பது அந்துவன் பொறையனுடைய இன்னொரு பெயர் என்று இன்னொரு தவற்றைச் செய்துள்ளார். இதுவும் இவருடைய கற்பனையே. பொறையனாகிய சேர அரசன் எப்படி கிழானாக இருக்க முடியும்? நீலகண்ட சாஸ்திரி இவ்வாறெல்லாம் தன் மனம் போனபடி கற்பனைகளைச் செய்துள்ளார்.1
அந்துவன், அந்துவஞ்செள்ளை என்பதில் ‘அந்துவன்’ என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இவர் இப்படியெல்லாம் ஊகஞ் செய்கிறார். இதற்குக் காரணம் செல்வக் கடுங்கோ வழியாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள் என்பதை இவர் அறியாததுதான்.
பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதையறிந்தோம். குட்டுவன் இரும்பொறை அந்துவஞ்செள்ளையை (மையூர் கிழான் மகளை) மணஞ் செய்து இருந்ததையும் இவர்களுக்கு இளஞ்சேரல் இரும்பொறை என்னும் மகன் இருந்ததையும் (9ஆம் பத்துப் பதிகம்) அறிந்தோம். பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர்ப் போரைச் செய்த காலத்தில் அவன் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறை உயிர் வாழ்ந்திருந்தான். இதைத் தகடூர் யாத்திரைச் செய்யுள்களினால் குறிப்பாக அறிகிறோம்.
“சால வெகுளிப் பொறையகேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறி” (புறத்திரட்டு 776, தகடூர் யாத்திரை)
பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவன் இரும்பொறை என்று ஒரு தம்பி இருந்ததையறியாதவர், தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தம்பி முறையுள்ளவன் என்றும் இச் செய்யுளில் ‘நும்பி’ என்றது அதிகமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கிறது என்றும் கூறுவர். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் யாதொரு உறவும் இல்லை. சேரமன்னருக்கும் தகடூர் மன்னருக்கும் அக்காலத்தில் உறவு முறை கிடையாது. புறத்திரட்டுப் பதிப்பாசிரியராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், இச்செய்யுளில் வருகிற நும்பி என்பதைச் சுட்டி காட்டி இதற்கு இவ்வாறு விளக்கம் எழுதுகிறார்.
“புறத்திரட்டில் வரும் செய்யுளொன்றால் (புறத். 776) சேரமானுக்கு அதிகமான் என்பவன் தம்பி முறையினன் என்பது பெறப்படுகின்றது. ஆகவே தகடூர் யாத்திரைச் சரித்திரம் பாரதம் போன்று தாயத்தாரிடை நிகழ்ந்த போரின் வரலாற்றினை விளங்கக் கூறுவதாம்.”2
பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவன் இரும்பொறை என்னும் உடன் பிறந்த தம்பி ஒருவன் இருந்தான் என்பதையறியாதபடியால், இவர் ‘நும்பி’ என்பதற்கு அதிகமான் என்று பொருள் கொண்டார். இது தவறு. நும்பி என்றது குட்டுவன் இரும்பொறையைக் குறிக்கிறது.
தகடூர் யாத்திரைச் செய்யுள் இன்னொன்றிலும் இந்தத் தமயன் தம்பியர் குறிக்கப்படுகின்றனர். புறத்திரட்டு 785ஆம் செய்யுளில் (தகடூர் யாத்திரைச் செய்யுள்) இவர்கள் இவ்வாறு குறிக்கப்படுகின்றனர். அச்செய்யுட் பகுதி இது:
“நும்மூர்க்கு
நீதுணை யாகலு முளையே நோதக
முன்னவை வரூஉங் காலை நும்முன்
நுமக்குத் துணை யாகலும் உரியன்; அதனால்
தொடங்க வுரிய வினைபெரி தாயினும்
அடங்கல் வேண்டுமதி.”
கொங்கு நாட்டை அரசாண்ட இவர்கள் காலத்தில் (பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை) சேர நாட்டை அரசாண்டவன் சேரன் செங்குட்டுவன். அவனுக்குக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் பெயர் உண்டு. பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை வென்ற பிறகு நீண்ட காலம் அரசாளவில்லை. அவன் ஏதோ ஒரு போரில் இறந்துபோனான் எனத் தோன்றுகிறது. அவன் அரசாண்ட காலம் 17 ஆண்டுகள் அவனுக்கு முன்னமே அவன் தம்பியான குட்டுவன் இரும்பொறை இறந்து போனான். பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு அரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறையும் 16 ஆண்டுதான் அரசாண்டான். இவர்கள் இருவருடைய ஆட்சிக்காலம் 33 ஆண்டுகளேயாகும். சேரன் செங்குட்டுவனோ 55 ஆண்டு அரசாண்டான் என்று 5ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, இவ்விரு கொங்கு நாட்டரசரும் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இறந்து போனார்கள். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா எடுப்பதற்கு முன்னமே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். அதனை இந்நூலில் இன்னொரு இடத்தில் (இரும்பொறையரசர்களின் கால நிர்ணயம்) காண்க.
பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு, அவனுடைய தம்பி குட்டுவன் இரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான். குட்டுவன் இரும்பொறை, பெருஞ்சேரலிரும்பொறைக்கு முன்னமே இறந்து போனதை அறிந்தோம். பெருஞ்சேரலிரும் பொறையின் மகன் சிறுவனாக இருந்தபடியால், அப்போது வயதுவந்தவனாக இருந்த இளஞ்சேரலிரும்பொறை அரசனானான்.
இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார் 9ஆம் பத்துப் பாடினார். ‘பாடிப்பெற்ற பரிசில்’ “ மருளில் லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான் விட்டான் அக்கோ” (9ஆம் பத்துப் பதிகக் குறிப்பு).
இளஞ்சேரல் இரும்பொறை போரில் வெற்றி பெற்றான் என்று பெருங்குன்றூர்கிழார் கூறுகிறார். எந்தப் போரை வென்றான் என்பதைக் கூறவில்லை. இவனுடைய முன்னோர்கள் வென்ற போர்களைச் சிறப்பித்துக் கூறி அவர்களின் வழிவந்த புகழையுடையவன் என்று கூறுகிறார். ‘காஞ்சி சான்ற செருப்பல’ செய்தான் என்று கூறுகிறார். இவன், ‘சென்னியர் பெருமான்’ (சோழன்) உடன் போர் செய்தான் என்றும் அப்போரில் சோழன் தோற்றுப் போனான் என்றும் கூறுகிறார் (9ஆம் பத்து 5) “பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்.” இந்தச் சென்னியர் பெருமான், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய முன்னோர்களைப் போலவே கொங்கு நாடு முழுவதும் அரசாண்டான். பூழியர்கோ கொங்கர்கோ, தொண்டியர் பொருநன், குட்டுவர் ஏறு, பூழியர் மெய்ம்மறை, மாந்தையோர் பொருநன், கட்டூர் வேந்து என்றும், கொங்கு நாட்டில் பாயும் ‘வானி நீரினும் தீந்தண் சாயலன் என்று கூறப்படுகிறான். 9ஆம் பத்தில் இவன் பலமுறை ‘வல்வேற் குட்டுவன்’, ‘வென்வேற் பொறையன்’, ‘பல்வேல் இரும்பொறை’ என்று கூறப் படுகிறான். 9ஆம் பத்தின் பதிகத்தில் இவன் ‘விச்சியின் ஐந்தெயிலை’ எறிந்தான் என்றும் அப்போரில் சோழ, பாண்டியர் தோற்றனர் என்றும் கூறப்படுகிறான். மற்றும் “பொத்தியாண்ட பெருஞ் சோழனையும் வித்தையாண்ட இளம் பழையன் மாறனையும்” வென்றான் என்று கூறப்படுகிறான்.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. P. 506,567,526, 540. A Comprehensive History of India Vol. II Edited by K.A. Nelakanta Sastri 1957.
2. பக்கம் XIV - XIVIபுறத்திரட்டு. ராவ்சாகிப் S. வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1939.