உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/009-052

விக்கிமூலம் இலிருந்து

8. இளஞ்சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு இராச்சியத்தை அரசாண்டவன் அவனுடைய தம்பியின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்று கூறினோம். இவன் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவன்.

இளஞ்சேரல் இரும்பொறையைக் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்றும் சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையென்றும் கூறுவர். இவன் கொங்கு நாட்டின் அரசன் என்றும் பூழி நாடு, மாந்தை நகரம், கட்டூர், தொண்டி, இவைகளின் தலைவன் என்றுங் கூறப்படுகிறான்.1

கட்டூர் என்பதற்குப் பொதுவாகப் பாசறை என்பது பொருள். ஆனால், இங்குக் கூறப்பட்ட கட்டூர் என்பது புன்னாட்டின் தலை நகரமான கட்டூர், பிற்காலத்துச் சாசனங்களில் இவ்வூர் கிட்டூர் என்றும் கூறப்படுகிறது. புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் இப்போது மைசூருக்குத் தெற்கேயுள்ள ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக்கின்றன. சங்க காலத்தில் இவை வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. காவிரியாற்றின் ஓர் உபநதியாகிய கபிணி அல்லது கப்பிணி என்னும் ஆற்றங்கரை மேல் கட்டூர் இருந்தது. இவ்வூர் பிற்காலத்தில் கிட்டூர் என்றும் கித்திப்புரம், கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது.

கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில் வானியாறும் ஒன்று. “சாந்துவரு வானி நீரினும், தீந்தண் சாயலன்” (9ஆம் பத்து 6: 12- 13) என்று இவன் புகழப்படுகிறான். இவன் ஆட்சிக் காலத்தில் கொங்குநாடு முழுவதும் இவனுடைய ஆட்சியின் கீழ் இருந்தது.

இவனுடைய பெரிய தந்தையான பெருஞ்சேரலிரும்பொறை கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை வென்று கொங்கு ராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டதை முன்னமே அறிந்தோம். இவனுடைய தந்தையாகிய குட்டுவனிரும்பொறை தகடூர்ப் போரிலோ அல்லது அதற்கு அண்மையில் நடந்த வேறு ஒரு போரிலோ இறந்து போனான் என்று அறிந்தோம். ஆகவே இவன் கொங்கு நாட்டின் வடபகுதிகளை வென்று தன்னுடைய கொங்கு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.

விச்சிப் போர்

இளஞ்சேரல் இரும்பொறை விச்சியூரை வென்றான். விச்சியூர் கொங்கு நாட்டிலிருந்தது. விச்சியூரிலிருந்த விச்சிமலைக்கு இப்போது பச்சைமலை என்று பெயர் வழங்குகிறது. இங்கு விச்சியூர் என்று ஓர் ஊர் உண்டு. அதன் அரசன் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான். விச்சியூர், மலை சார்ந்த நாடு (புறம். 200 : 1-8). விச்சிக்கோ, விச்சியர் பெருமகன் என்றுங் கூறப்படுகிறான் (குறுந். 328 :5). விச்சியூர் மலைமேல் விச்சிக்கோவுக்கு ஐந்தெயில் என்னும் பெயருள்ள கோட்டையிருந்தது.1 இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் அந்த விச்சிக்கோவின் மகனான இன்னொரு விச்சிக்கோ விச்சி நாட்டையரசாண்டான். இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய ஆட்சிக்கு அடங்காமலிருந்த விச்சிக்கோவின் மேல் படையெடுத்துச் சென்று போர் செய்தான். விச்சிக்கோவுக்குச் சோழனும் பாண்டியனும் தங்கள் சேனைகளை உதவினார்கள். ஆனாலும், விச்சிக்கோ போரில் தோற்றான். அவனுடைய ஐந்தெயில் கோட்டையும் இளஞ்சேரலிரும் பொறைக்குரியதாயிற்று. “இருபெரு வேந்தரும் விச்சியும்வீழ, வருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து” (9 ஆம் பத்து, பதிகம்).

சோழனுடன் போர்

சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை யனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாபதி பழையன் எதிர்த்தான். இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்), ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை எதிரிட்டுப் போர் செய்தார்கள். பழையன் இவர்களை யெல்லாம் எதிர்த்துத் தனிநின்று கடும் போர்செய்தான். ஆனால், பலருடைய எதிர்ப்புக்குத் தாங்காமல் போர்க்களத்தில் இறந்து போனான். தன்னுடைய சேனைத் தலைவனான பழையன் கட்டூர்ப் போரில் மாண்டு போனதையும் தன் சேனை தோற்றுப் போனதையும் அறிந்த சோழன் பெரும்பூண் சென்னி மிக்க சினங்கொண்டான். அவன் தன்னுடைய சேனையுடன் புறப்பட்டுக் கொங்குநாட்டிலிருந்த இளஞ்சேரலிரும் பொறைக்கு உரியதான கழுமலம் என்னும் ஊரின் மேல் சென்று போர் செய்தான். அவ்வூரின் தலைவனான கணயன், சோழனை எதிர்த்துப் போரிட்டான். சோழன் போரில் வெற்றிகொண்டு கழுமலத்தைக் கைப்பற்றினதோடு கணயனையும் சிறைப்பிடித்தான். இந்தப் போர்ச் செய்திகளையெல்லாம் குடவாயிற் கீரத்தனார் கூறுகிறார்.2

சோழன் பெரும்பூண் சென்னியைச் சோழன் செங்கணான் என்று தவறாகக் கருதுகிறார் சேஷ ஐயர்.3 இது தவறு.

இளஞ்சேரல் இரும்பொறையின் கீழ் கழுமலத்தில் சிற்றரசனாக இருந்த கணையனைக் கணைக்காலிரும் பொறை என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவறாகக் கருதுகிறார்.4

கணையன் வேறு கணைக்காலிரும்பொறை வேறு.

சோழன் பெரும்பூண் சென்னியும் சோழன் செங்கணானும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறையும் கணைக்காலிரும்பொறையும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறைக்குப் பின் ஒரு தலைமுறைக்குப் பிறகு இருந்தவன் கணைக்காலிரும்பொறை. கழுமலத்தில் இரண்டு போர்கள் நடந்திருக்கின்றன. முதற்போர், சோழன் பெரும்பூண் சென்னிக்கும் இளஞ்சேரல் இரும்பொறையின் கீழடங்கின கணையனுக்கும் நடந்தது. அதன்பிறகு இரண்டாவது போர் சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் நடந்தது.

சோழன் பெரும்பூண் சென்னி கொங்கு நாட்டின் மேல் படையெடுத்துவந்து போர் செய்து கழுமலத்தைக் கைப்பற்றியதையறிந்த இளஞ்சேரல் இரும்பொறை சினங்கொண்டு, அந்தச் சென்னியைப் பிடித்து வந்து தன் முன்னே நிறுத்தும்படித் தன்னுடைய சேனைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் போய்ப் பெரும்பூண் சென்னியோடு போர் செய்தார்கள். அந்தப்போர் பெரும்பூண் சென்னி கைப்பற்றியிருந்த கழுமலம் என்னும் ஊரில் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் போரிலே சோழனுடைய படை வீரர்கள் தோற்றுத் தங்களுடைய (வேல்களை) ஈட்டிகளைப் போர்க்களத்திலே விட்டுவிட்டு ஓடினார்கள் அவர்கள் போர்க்களத்தில் போட்டு விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கை, செல்வக் கடுங்கோ வாழியாதன் (இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டன்) தன்னை ஏழாம் பத்தில் பாடின கபிலருக்குப் பரிசாகக் கொடுத்த ஊர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது.5

இதிலிருந்து சோழன் தோற்றுப் போன செய்தி தெரிகிறது. சோழன் பெரும்பூண் சென்னியுடன் போர்செய்து வென்றபிறகு இளஞ்சேரல் இரும்பொறை இன்னொரு சோழனுடன் போர்செய்தான்.

இளஞ்சேரலிரும்பொறை பெருஞ்சோழன் என்பவனையும் இளம்பழையன் மாறன் என்பவனையும் வென்றான்.6 இந்தப் பெருஞ்சோழன் என்பவன் வேறு. மேலே சொன்ன பெரும்பூண் சென்னி வேறு என்று தோன்றுகிறது. இளம்பழையன் மாறன் என்பவன், கட்டூர்ப் போரில் முன்பு இறந்து போன பழையன் என்னும் சேனாதிபதியின் தம்பியாக இருக்கலாம். (இந்தப் பழையன் மாறனுக்கும் பாண்டி நாட்டில் மோகூரில் இருந்த பழையன் மாறனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இவன் வேறு, அவன் வேறு)

இளஞ்சேரல் இரும்பொறை சோழ நாட்டில் சென்று சோழனுடன் போர் செய்து வென்றான் என்றும் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் காவல் தெய்வங்களாக இருந்த சதுக்கப்பூதம் என்னுந் தெய்வங்களைக் கொண்டு வந்து தன்னுடைய வஞ்சிக் கருவூரில் அமைத்து விழாச் செய்தான் என்றும் அறிகிறோம்.7 காவிரிப்பூம் பட்டினத்துச் சதுக்கப் பூதரை எடுத்துக்கொண்டு வந்து இவன் வஞ்சி நகரத்தில் வைத்து விழா கொண்டாடினதைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.8

இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டனாக இருந்தவன் மையூர் கிழான். மையூர் கிழான் இவனுடைய தாய்ப்பாட்டன். மையூர்கிழானின் மகளான அந்துவஞ்செள்ளை இவனுடைய தாயார். இவனுடைய அமைச்சனாக இருந்த மையூர் கிழான் இவனுடைய தாய் மாமனாக இருக்க வேண்டும். அதாவது, இவனுடைய தாயாருடன் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அமைச்சனை இவன் புரோசு மயக்கினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகிறது.

“மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி”

“அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கியென்றது தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி” என்று இதன் பழைய உரை கூறுகிறது.9

(புலவர் பெருங்குன்றூர் கிழார் இவ்வரசனிடம் பரிசு பெறச் சென்றார். இவன் பரிசு கொடுக்காமல் காலந் தாழ்த்தினான். பல நாள் காத்திருந்தும் பரிசு வழங்கவில்லை. அப்போது இப்புலவர் வருந்திப் பாடிய இரண்டு செய்யுட்கள் (புறம். 210, 211) இவருடைய வறுமைத் துன்பத்தைத் தெரிவிக்கின்றன. பரிசு கொடுக்காமல் காலந் தாழ்த்தின இவ்வரசன் இப்புலவருக்குத் தெரியாமல் ஊர், வீடு, நிலம் முதலியவற்றை அமைத்துப் பிறகு இவருக்குக் கொடுத்தான். “அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்து”க் கொடுத்தான் என்று ஒன்பதாம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது.

பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை மீது ஒன்பதாம் பத்துப் பாடினார். அதற்கு அவன் முப்பத்தீராயிரம் பொற்காசு வழங்கினான். “பாடிப்பெற்ற பரிசில் மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்தான் அக்கோ” என்று பதிகத்தின் கீழ்க் குறிப்புக் கூறுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை பதினாறு ஆண்டு வீற்றிருந்தான் என்று 9ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. இளமையிலேயே ஆட்சிக்கு வந்த இவன் குறுகிய காலத்திலேயே இறந்து போனான் என்று தெரிகிறபடியால் இவன் ஏதோ போர்க்களத்தில் இறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். எங்கே எப்படி இறந்தான் என்பது தெரியவில்லை. ஆனால், இவனுடைய மூத்தவழித் தாயாதிப் பெரிய தந்தையாகிய சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இறந்து போனான் என்பது ஐயமில்லாமல் தெரிகிறது. இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். சேரன் செங்குட்டுவன், கண்ணகியாருக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்து கொண்டிருந்த போது, இவனுடைய தூதனாகிய நீலன், கனக விசயரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டிவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன், கனக விசையரைச் சிறைப்பிடித்து வந்ததைப் பாராட்டாமல் சோழனும் பாண்டியனும் இகழ்ந்து பேசினதைத் தெரிவித்தான். அது கேட்ட செங்குட்டுவன் சினங்கொண்டு அவர்கள் மேல் போருக்குச் செல்ல எண்ணினான்.

அவ்வமயம் அருகிலிருந்த மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனின் சினத்தைத் தணிக்கச் சில செய்திகளைக் கூறினான். “உனக்கு முன்பு அரசாண்ட உன்னுடைய முன்னோர் பெருவீரர்களாக இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மாய்ந்து மாண்டு போனார்கள். அது மட்டுமா? உன்னுடைய தாயாதித் தம்பியும் அத் தம்பி மகனுங்கூட முன்னமே இறந்து போனார்கள். ஆகவே, சினத்தைவிட்டு மறக்கள வேள்வி செய்யாமல், அறக்கள வேள்வி செய்க” என்று கூறினான். இவ்வாறு கூறியவன் இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போன செய்தியையும் கூறினான்.

“சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்

யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்!”

(சிலம்பு, நடுகல் 147 -150)

இதில், “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன்” என்றது இளஞ்சேரல் இரும்பொறையை. இளஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய தாயாதிப் பெரிய தந்தையான சேரன் செங்குட்டுவன் இருக்கும்போதே, அவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமேயே இறந்து போனான் என்பது நன்கு தெரிகின்றது. இந்த உண்மையை யறியாமல் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இளஞ்சேரல் இரும்பொறை வாழ்ந்திருந்தான் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுவது தவறாகும். செங்குட்டுவன் உத்தேசமாக கி.பி. 180 லும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசம் கி.பி. 190 இலும் இருந்தனர் என்று இவர் எழுதியுள்ளார்.10 செங்குட்டுவன் காலத்திலேயே இறந்து போன குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகும் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்த காலத்தில் இவன் இல்லை. இலங்கையரசனான முதலாம் கஜபாகுவின் சம காலத்தவனான செங்குட்டுவன், கஜபாகுவுக்கு வயதில் மூத்தவனாக இருந்தான். இவன் தன்னுடைய 50ஆவது ஆட்சியாண்டில் ஏறக்குறைய கி.பி. 175 இல் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கருதலாம். அந்த ஆண்டுக்கு முன்பே இளஞ்சேரல் இறந்து போனான் என்று சிலம்பு கூறுகிறது. எத்தனை ஆண்டுக்கு முன்பு என்பது தெரியவில்லை. ஏறத்தாழக் கி. பி. 170இல் இறந்து போனான் என்று கொள்ளலாம். இவன் பதினாறு ஆண்டு ஆட்சி செய்தான் என்பதனால், உத்தேசம் (17016=154) கி. பி. 154 முதல் 170 வரையில் இவன் ஆட்சி செய்தான் என்று கருதலாம்.

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையின் சம காலத்திலிருந்த அரசர்கள், சேர நாட்டில் சேரன் செங்குட்டுவனும் பாண்டி நாட்டில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனும் (வெற்றிவேற் செழியன்) இருந்தார்கள். சோழ நாட்டில் சோழன் பெரும்பூண் சென்னி (பெருஞ்சோழன்) இருந்தான்.

ஒரு விளக்கம்

பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் தலைவனும் கொங்கு நாட்டின் அரசனுமாகிய இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறையின் மகன். இவனை ( தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் என்று கருதுவது தவறு. இந்தத் தவறான கருத்தைச் சரித்திரகாரர் பலருங் கொண்டிருந்தார்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இவன் என்று கே. என். சிவராசப் பிள்ளையவர்களும்11 கே. ஜி. சேஷையரும்11 கருதினார்கள். மு. இராகவையங்கார் அவர்கள் தம்முடைய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இவ்வாறே தவறாக எழுதியுள்ளார். மேற்படி நூலில் சேர வமிசத்தோர் என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும்பொறையின் இராணியின் பெயர் அந்துவஞ்செள்ளை என்றும் இவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் இவர் எழுதியுள்ளார். இவர் கூறியதையே வி. ஆர். இராமச்சந்திரதீட்சிதரும் கூறியுள்ளார். (தீட்சிதர் அவர்கள் மு. இராகவையங்காரின் துணைகொண்டு சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.) அவர், தம்முடைய சிலப்பதிகார ஆங்கில மொழிப்பெயர்ப்பின், முகவுரையில் 13ஆம் பக்கத்தில் ‘சேரர் தாய்வழிப் பட்டியல்’ என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் (குட்டுவன் இரும்பொறை) வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்று எழுதுகிறார். அதாவது. பெருஞ்சேரலிரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதுகிறார். அவர் இவ்வாறு பட்டியல் எழுதிக் காட்டுகிறார்.13


செல்வக் கடுங்கோ வாழியாதன்

பெருஞ்சேரல் இரும்பொறை
(குட்டுவன் இரும்பொறை)
வேண்மாள் அந்துவஞ் செள்ளை (இராணி)

இளஞ்சேரல் இரும்பொறை14

இந்நூலாசிரியரும் இவ்வாறே தவறாகக் கருதியிருக்கிறார்.15 இது தவறு என்பதை இப்போதறிந்து கொண்டேன்.

டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் இளஞ்சேரலிரும்பொறையைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. “பெருஞ்சேரல் இரும்பொறையுடன் மாறுகொண்ட இப்பெயர் இவனை அவன் மகனெனக் குறிக்கும் நோக்குடன் ஏற்பட்ட தொடர் என்பது தோன்றும். அதனுடன் உண்மையில் பதிகமே (9ஆம் பத்துப் பதிகம்) அவன் குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர்கிழான் மகள் அந்துவஞ் செள்ளைக்கும் புதல்வன் என்று கூறுகிறது” என்று எழுதுகிறார்.16 இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனா, குட்டுவன் இரும்பொறையின் மகனா என்று அவர் திட்டமாகக் கூறாமல் விட்டு விட்டார்.

செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர் இருந்தனர் என்பதை இவர் அறியாதபடியால் இந்தத் தவறு நேர்ந்தது. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் என்று அவனைப் பாடிய ஏழாம்பத்துக் கூறுகிறது.

“வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்”(7ஆம் பத்து 10:222)

இந்தத் துணைப் புதல்வரின் (இரண்டு மகன்களில்) மூத்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை (8ஆம் பத்துப் பதிகம்), இளைய மகன் குட்டுவன் இரும்பொறை (9ஆம் பத்துப் பதிகம்). குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ்சேரல் இரும்பொறை. இதனைக் கீழ்க்கண்ட பட்டியலில் விளக்கமாகக் காண்க:


செல்வக்கடுங்கோ வாழியாதன் (7ஆம் பத்துத் தலைவன்)
 │ 
───────────────────

(மூத்த மகன்)(இளைய மகன்)
பெருஞ்சேரல் இரும்பொறை குட்டுவன் இரும்பொறை
(8ஆம் பத்துத் தலைவன்)அந்துவஞ்செள்ளை

இளஞ்சேரல் இரும்பொறை
(9ஆம் பத்துத் தலைவன்)

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இளஞ்சேரலிரும்பொறையைப்பற்றி விசித்திரமாக ஓர் ஊகத்தைக் கற்பிக்கிறார். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு அந்துவஞ்செள்ளை என்று ஒரு தங்கை இருந்தாளென்றும் அவளைக் குட்டுவன் இரும்பொறை மணம் செய்து கொண்டானென்றும் அவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் கற்பனையாகக் கூறுகிறார்.

அந்துவன் பொறையன், அந்துவஞ்செள்ளை என்னும் பெயர்களில் உள்ள அந்துவன் என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இவர் இவ்வாறு ஊகிக்கிறார். அந்துவஞ் செள்ளை மையூர்கிழானுடைய மகள். அந்துவன் பொறையன் வேறு, மையூர்கிழான் வேறு. இருவரையும் ஒருவர் என்று சாஸ்திரி இணைப்பது தவறு, இவருடைய ஊகமும் கற்பனையும் ஆராய்ச்சிக்குப் பொருந்தாமல் வெறுங்கற்பனையாக உள்ளன. இதுபற்றி முன்னமே கூறினோம்.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. நாரரி நறவிற் கொங்கர் கோவே. (9ஆம் பத்து 8: 19) “கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே, மட்டப் புகர்விற் குட்டுவர் ஏறே, எழாத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை, இலங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந, வெண்பூ வேளையொடு சுரை தலை மயக்கிய விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே” (9ஆம் பத்து 10:25-30) “வளைகடல் முழவில் தொண்டியோர் பொருந” (9ஆம் பத்து 8:21).

2. பாரி இறந்த பிறகு பாரிமகளிரைக் கபிலர் விச்சிக்கோவிடம் அழைத்து வந்து அவர்களை மணஞ் செய்துகொள்ளும்படி வேண்டினார். அதற்கு அவன் இணங்கவில்லை (புறம் - 200)

3. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுத்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழிஇய அளப்பருங்கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன் பட்டெனக், கண்டது நோனானாகித் திண்தேர்க், கணையன் அகப்படக் கழுமலந்தந்த, பிணையலங் கண்ணிப் பெரும்பூண்சென்னி”(அகம் 44: 7-14).

4. P. 68 Ceras of Sangam Period K.G.Sesha aiyar).

5. பெரிய புராண ஆராய்ச்சி பக்கம் 86- 94. Date of Ko - Chenganan, Journal of Madras University Vol. XXXI No. 2. P. 177-82).

6. நன்மரம் துவன்றிய நாடு பல தரீஇப், பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான், இட்டவெள்வேல் முத்தைத் தம்மென… உவலை கூராக் கவலையில் நெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன் பெற்ற ஊரினும் பலவே.” (9ஆம் பத்து 5) இந்தச் செய்யுளின் பழைய உரை இதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறது. “இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து தம்மினெனத் தம்படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் ..... கபிலன் பெற்ற ஊரினும் பல.”

7. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று” (9ஆம் பத்து பதிகம்)

8. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையாண்ட இளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று, வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி” “அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்க மர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிரீஇ, ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு” (9ஆம் பத்து -பதிகம்).

9. “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன். (சிலம்பு, நடுகற் காதை (147–148) சதுக்கப்பூதர் என்பதற்குச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், ‘அமரா பதியிற் பூதங்கள்’ என்று உரை எழுதியுள்ளார். கொங்குநாட்டுக் கருவூருக்கு (வஞ்சிநகர்) பிற்காலத்தில் அமராபதி என்றும் பெயர் வழங்கிற்று. இதைத்தான் அவர் அவ்வாறு எழுதினார்.

10. (மையூர்கீழானைப் பற்றியும் அவன் மகள் அந்துவஞ் செள்ளையைப் பற்றியும் திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பல யூகங்களைக் கூறித் தவறு செய்கிறார். அந்துவனுக்கு(அந்துவன் பொறையனுக்கு) மையூர்கிழான் என்று பெயர் உண்டு என்றும் அந்துவன்பொறையனே அமைச்சனான மையூர்கிழான் என்னும் பெயருடன் இருந்தான் என்றும் இல்லாததைப் புனைந்துரைக்கிறார். P. 506,507, 526. A Comprehensive History of India. Vol. II Edited by K.A. Nilakanta Sastri. 1957.

11. (P. 522,539. A Comprehensive History of India Vol. II 1957. P. 119. A History of South India 1955) சாஸ்திரியைப் போலவே கே.ஜி. சேஷையரும் எழுதியுள்ளார். (P. 52. Cera Kings of the Sangam Period. K.G. Sesha Aiyar 1937.

12. (P. 136. The Chronology of the Early Tamils K.N. Sivaraja Pillai 1932).

13. (P. 44. Cera Kings of the Sangam Period K.G. Sesha Aiyar 1937.

14. (P. 12,13 Introduction, The Silappadikaram English Translation by V.R. Ramchandra Dikshidar 1939).

15. பக்கம் 24. சேரன் செங்குட்டுவன், சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு, மயிலை சீனி. சேங்கடசாமி, Annuals of Oriental Research, University of Madras. (Vol XXI Part I 1966).

16. பக்கம் 121, 122 சேரன் வஞ்சி. திவான்பகதூர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார். (1946).