மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/021
இணைப்பு
I. சத்தியபுத்திர நாடு
தேவனாம் பிரியன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்த அசோகச் சக்கரவர்த்தி பாரத நாட்டைக் கி.மு.275-234 வரையில் அரசாண்டார். இவருடைய இராச்சியத்தில், தெற்கே இருந்த தமிழகம் அடங்கவில்லை என்பது இவருடைய சாசனங்களிலிருந்து தெரிகின்றது. அசோகச் சக்கரவர்த்தியுடைய இரண்டாவது, பதின் மூன்றாவது சாசனங்கள் (Rock Edicts II and XIII) இச்செய்தியைத் திட்டவட்டமாகக் கூறுகின்றன.
சோழ பாண்டிய சத்தியபுத்திர கேரளபுத்திர தம்பபாணி (இலங்கை) ஆகிய நாடுகள் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட் பட்டவையல்ல என்பது இச்சாசனங்களினால் தெரிகின்றது. பிராகிருத மொழியில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட இந்தச் சாசனங்களில் வாசகம், சோடா பாடா ஸ்தியபுதொ கேத புதோ ஆ தம்ப பம்ணி என்று எழுதப் பட்டிருக்கிறது. அதாவது, சோழ பாண்டிய சத்தியபுத்திர கேரள புத்திர தம்பபாணி நாடுகள் என்பது இதன் பொருள், கேரளபுத்திர நாடு என்பது சேர நாட்டைக் குறிக்கிறது. சத்திய புத்திர நாடு என்பது துளு நாட்டைக் குறிக்கிறது.
சத்திய புத்திர நாடு என்று அசோகச் சக்கரவர்த்தியின் சாசனம் கூறுவது துளுநாடு என்று கருதப்பட்டாலும் வேறு சில ஆராய்ச்சிக்காரர்கள் வேறு கருத்தைத் தெரிவிக்கிறார்கள். அதிகமான் அரசர் ஆண்ட தகடூர், சத்தியபுத்திர நாடு என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சத்திய மங்கலம் தாலுகாவே சத்தியபுத்திரநாடு என்றும், சத்தியவிரத க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற காஞ்சிபுரமே சத்தியபுத்திரநாடு என்றும் வெவ்வேறு கருத்தைத் தெரிவித்துள்ளனர். ‘வாய்மொழிக் கோசர்’ இருந்த துளு நாடே சத்தியபுத்திர நாடு என்பது இந்நூலாசிரியருடைய கருத்து.
இதுபற்றி எழுதப்பட்டுள்ள கருத்துகளை வாசகரின் ஆராய்ச்சிக்காகக் கீழே தருகிறேன்.
1. Asoka, V. A. Smith. 3rd Edition, p. 161.
2. Ancient Karnataka, Vol. I. 'Tuluva, 'B. A. Saletore, p. 43.
3. Cera Kings of Sangam Period, K. G.Sesha Aiyer, 1937, pp. 18-19.
4. 'Satyaputra', Govinda Pai, Krishnaswami Iyenger Commemoration Volume, pp. 33-47.
5. History of the Tamils, P. T. Srinivasa Iyengar. 1929, p. 327.
6. The Early History of India, (4th Edition), Vinicent A.Smith, 1957, pp.171,194.
7. 'The identification of Satiyaputra', B. A. Saletore, Indian culture, Vol.l, pp 667- 674.
8. The Chronology of the Early Tamils, K.N. Sivaraja pillai, 1932, pp. 168-169,
9. 'Who are Satyaputras?', V.R. Ramachandra Dishitar, The Indian Culture. Vol. l, pt. III.
10. Indian Review. June. 1909.
11. Journal of the R oyal Asiatc Society, 1918,p.54.
12. Indian Antiquary, Vol.XVIII, p. 24.
13. Journal of the Royal Asiatic Society, Bombay Branch (New Series), Vol. XX, p. 398.
II. பரசுராமன் கதை
துளு நாட்டிலும் சேர (கேரள) நாட்டிலும் பழைய புராணக் கதையொன்று வழங்கி வருகிறது. ஒரு காலத்தில் சேர நாடும் துளு நாடும் கடலாக இருந்ததென்றும் பரசுராம முனிவன் சஃயாத்திரி (மேற்குத் தொடர்ச்சி மலை) மலைமேல் இருந்து தன் கையிலிருந்த கோடாலியைச் சுழற்றி எறிந்தான் என்றும் அந்தக் கோடாலி சென்ற இடம் நிலமாக மாறிப் போயிற்று என்றும் அவ்வாறு புதிதாக உண்டான நிலம் துளு நாடும் கேரள நாடும் என்றும், அந்நிலங்களில் பரசுராமன் பிராமணரைக் குடியேற்றினான் என்றும் செவிவழிச் செய்தி கூறுகிறது. தமிழ் நாட்டில் பிற்காலத்திலே அகஸ்திய முனிவருக்கு முதன்மை கொடுக்கப்பட்டது போலத் துளு நாட்டிலும் கேரள நாட்டிலும் பரசுராமனுக்கு முதலிடங் கொடுக்கப்பட்டது.
சேர நாடாகிய கேரள நாடும் துளு நாடாகிய கொங்கண நாடும் பரசுராமனால் உண்டாக்கப்பட்டன என்னும் கதையை வடமொழிப் புராணங்களும் கேரளோற்பத்தி என்னும் பிற்காலத்து மலையாள நூலும் துளு நாட்டுச் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. இச்செய்தியைச் சங்கநூல்கள் கூறவில்லை. ஆனால், பரசுராமன் துளுநாட்டுச் செல்லூரில் அரியதோர் யாகம் செய்தான் என்றும் அந்த நினைவுக்குறியாக அவ்வூரில் ஒரு தூண் அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது. ஆனால், செல்லூரில் யாகத்தூண் இருந்த செய்தியை வடமொழிப் புராணங்களும் துளு நாட்டுக் கேரள நாட்டுச் செவிவழிச் செய்திகளும் கூறவில்லை. சங்கச் செய்யுள் மட்டும் கூறுகிறது.
மருதன் இளநாகனார் என்னும் புலவர் இச்செய்தியைத் தமது செய்யுளில் கூறியுள்ளதை முன்னமே கூறினோம். மழுவாழ் நெடியோன் (பரசுராமன்) செல்லூரில் அரிதாக முயன்று ஒரு வேள்வி செய்தான் என்றும் அதன் அறிகுறியாக அந்த இடத்தில் நெடுந்தூண் ஒன்று (யாகத் தூண்) நிறுத்தப்பட்டிருந்ததென்றும் அத்தூணின் அடிப்புறத்தில் வடக்கயிறு சுற்றிக் கட்டப்பட்டிருந்த தென்றும் இப்புலவர் கூறியுள்ளார். அச்செய்யுளின் வாசகம் இது:
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழூஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் (அகநானூறு. 220:3-8)
இந்தச் செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருந்தது என்றும் அவ்வூர்க் கிழக்கில் கோசருடைய நியமம் இருந்தது என்றும் இப்புலவரே இன்னொரு செய்யுளில் கூறுகிறார்.
அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தார்
கருங்கட் கோசர் நியமம் (அகநானூறு 90:9-12)
இந்தச் செல்லூர் மேற்குக் கடற்கரையோரத்தில் துளு நாட்டில் இருந்தது. பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி ஐயர் அவர்கள், இச் செல்லூர், கிழக்குக் கடற்கரை யோரத்தில் சோழ நாட்டில் இருந்ததென்று கூறுகிறார். ஐயர் அவர்கள் தாம் உரை எழுதி அச்சிட்ட நற்றிணைப் பதிப்பிலே பாடினோர் வரலாற்றிலே ‘மதுரை மருதன் இளநாகனார்’ என்னுந் தலைப்பிலே இவ்வாறு எழுதுகிறார்.
“திருவழுந்தூர்த் திதியனுக்குரிய செல்லூரில் பரசுராம முனி வேள்வி செய்தது கூறுவதுடன் தழும்பனது ஊணூரும் சாயாவனமும் (திருச்சாய்க்காடு) இவராற் கூறப்பட்டுள்ளன.”
இவ்வாறு இவர் கூறுவது தவறு திதியன் என்பவனுக்குச் செல்லூர் உரியதென்று சங்க இலக்கியத்தில் எங்குமே கூறப்படவில்லை. ஐயரவர்கள், சோழ நாட்டிலிருந்த திதியனுக்குச் செல்லூர் உரியதென்று கூறுவது புதுமையாக இருக்கிறது. எனவே இவர் செல்லூர் சோழநாட்டிலிருந்ததாகக் கருதுவது தவறானது. இந்தச் செல்லூர், துளு நாட்டிலே மேற்குக் கடற்கரைப் பக்கமாக இருந்ததும் கோசர் என்னும் இனத்தார் வாழ்ந்திருந்ததுமான ஊர்.
கந்தபுராணம் சஃயாத்திரி காண்டத்திலும் வேறு வடமொழிப் புராணங்களிலும் மேற்குக் கடற்கரையுடன் பரசுராமனைத் தொடர்புபடுத்திக் கூறியுள்ளது. துளுநாட்டுச் சேரநாட்டுச் செவிவழிச் செய்திகளும் பரசுராமனை மேற்குக் கடற்கரை நாடுகளுடன் தொடர்புபடுத்திக் கூறுகின்றன. எனவே, மருதன் இளநாகனார் கூறுகிற பரசுராமன் யாகஞ் செய்த செல்லூர் துளு நாட்டுச் செல்லூரே என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கேரள நாட்டில் முப்பத்திரண்டு கிராமங்களையும் துளுநாட்டில் முப்பத்திரண்டு கிராமங்களையும் பரசுராமன் உண்டாக்கி அக்கிராமங்களைப் பிராமணருக்குத் தானஞ் செய்தான் என்னும் கதை, பிற்காலத்தில் நம்பூதிரிப் பிரமாணர் செல்வாக்கும் ஆதிக்கமும் பெற்ற கி.பி. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட கதை என்று தோன்றுகிறது. பரசுராமனைப் பற்றிய இக்கதைகள் பிற்காலத்தில் தோன்றியவை.
சங்க காலத்திலே பரசுராமனைப்பற்றி வழங்கப்பட்ட கதை, அவன் துளுநாட்டுச் செல்லூரில் செய்த யாகத்தின் அறிகுறியாகத் தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது ஒன்றே. அக்காலத்துச் சேரநாடாகிய கேரளநாட்டில் பரசுராமன் கதை வழங்கப்படவில்லை. பரசுராமன் கோடரியைக் கடலில் வீசி எறிந்து கேரளநாட்டையும் துளு நாட்டையும் உண்டாக்கினான் என்னும் கதையும் அந்நாடுகளில் கிராமங்களை உண்டாக்கிப் பிராமணருக்குத் தானஞ் செய்தான் என்னும் கதையும் பிற்காலத்தில் கட்டப்பட்ட கதைகளே.
செல்லூர் செல்லி என்றும் கூறப்பட்டது.
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் (அகம் 316: 12) என்று கூறுவது காண்க.
III. மோகூரும் மோரியரும்
சங்கச் செய்யுட்கள் சிலவற்றிலே, கோசர் என்னும் கூட்டத்தாருக்கு மோகூர் பணியாதபடியினாலே (அடங்காத படியினாலே) அவர்களைப் பணியச் செய்வதற்குக் கோசர் மோரியருடைய உதவியை நாடினார்கள் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய விரும்பிய மோரியர், வடுகச் சேனையை முதலில் அனுப்பி அச்சேனையைப் பின்தொடர்ந்து தங்கள் தேர்களைச் செலுத்திக்கொண்டு போனார்கள் என்றும் போகும் வழியில் மலைகள் குறுக்கிட்டபடியால், மலைமேல் தேர்கள் போவதற்காக மலையிலே வழிகளை உண்டாக்கிக்கொண்டு போனார்கள் என்றும் சரித்திரச் செய்திகள் கூறப்படுகின்றன (அகம் 69, 251, 281; புறம் 175).
அகம் 69ஆம் செய்யுளில் இச்செய்தி கூறப்படுகிறது. காதலன் ஒருவன் தன் காதலியை விட்டுப் பிரிந்து பொருள் சம்பாதிப்பதற்காக அயல்நாடு சென்றான். சென்றவன், தான் திரும்பி வருவதாகச் சொன்ன காலம் வந்தும் அவன் திரும்பி வராததைக் குறித்து அவன் மனைவி மனக்கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். மோரியருடைய தேர்ச்சக்கரங்கள் தடையில்லாமல் போவதற்காகச் செப்பனிட்டு அமைத்த மலைப் பாதையைக் கடந்து அயலூருக்குச் சென்ற தலைவர் அங்கே நெடுநாள் தங்கமாட்டார் என்று தோழி கூறுகிறாள். இந்த வாசகம் இது:
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறையிறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி (அகம் 69:10-13)
அகநானூறு 151ஆம் செய்யுளும் இச்செய்தியையே கூறுகிறது. தலைவன் ஒருவன் தன் மனைவியைத் தனியேவிட்டு அயல்நாட்டுக்குப் பொருள் சம்பாதிக்கச் சென்றான். அவன் திரும்பி வருவதாகச் சொன்ன காலம் வந்தும் அவன் திரும்பி வராதபடியால் அவன் மனைவி கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி அவளுக்குத் தேறுதல் கூறினாள். நந்த அரசர்கள் சேர்த்து வைத்திருந்த பெருஞ்செல்வம் கிடைப்பதாக இருந்தாலும் அவர் அதிக நாள் வெளியே தங்கமாட்டார். கோசர் தம் பகைவருடைய ஊரை வென்ற காலத்தில் அவர்களுக்குப் பணியாத மோகூரைப் பணியச் செய்வதற்காக அவர்களுக்கு உதவியாக வந்த மோரியர், தங்கள் தேர்கள் போவதற்காக அமைத்த மலைப்பாதையைக் கடந்து வெளிநாட்டுக்குச் சென்ற அவர் (தலைவர்) அதிக காலம் தங்கமாட்டார், விரைவில் வந்து விடுவார்” என்று தோழி கூறினாள். அந்த வாசகம் இது:
நந்தன் வெறுக்கை எய்திலும் மற்றவண்
தங்கலர், வாழி தோழி! வெல்கொடித்
துணைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூதாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவிய அறைவா யும்பா
... ... ... ... ... ... ... ...
நிரம்பா நீளிடைப் போகி
அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே! (அகம் 251: 5-20)
அகம் 281ஆம் செய்யுளும் இதே செய்தியைக் கூறுகிறது. அயல்நாடு சென்ற தலைவன் நெடுநாள் சென்றும் திரும்பிவராததற்கு மனக்கவலை கொண்ட மனைவியை அவளுடைய தோழி தேற்றுகிறாள். “வடுகச் சேனை முன்வர அதனைத் தொடர்ந்து பின்னே வந்த மோரியரின் தேர்ப் படையின் தேர்ச்சக்கரங்கள் தடையில்லாமல் செல்வதற்காக மலை மேல் அமைத்த வழியைக் கடந்து அயல் நாடு சென்ற தலைவர் அதிக நாள் தங்கமாட்டார். விரைவில் வந்து விடுவார், நீ வருந்தாதே” என்று கூறுகிறாள்.
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிர முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பணியிருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறை யிறந்தவரோ சென்றனர் (அகம் 281:8-12)
புறநானூறு 175ஆம் செய்யுளும் இச்செய்தியைக் கூறுகிறது. கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் தன்னையாதரித்த ஆதனுங்கன் என்பவனை ஒரு போதும் மறக்கமாட்டேன் என்று இச்செய்யுளில் கூறுகிறார். “மோரியர் தம்முடைய தேர் உருளை தடையில்லாமல் செல்வதற்காக மலைப்பாறைகளை வெட்டி அமைத்த பாதையில் சூரியன் இயங்குவது போன்ற உன் அறத்துறையாகிய நல்வழியில் நடக்கும் உன்னை மறக்கமாட்டேன்” என்று கூறுகிறார். இதன் வாசகம் இது:
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன (புறம் 175:6-9)
(குறிப்பு : இப்புறப்பாட்டின் பழைய உரையாசிரியர் மோரியர் என்பதை ஓரியர் என்று தவறாகப் பிரித்துப் பொருள் கூறுகிறார். அவர் கூறுவது தவறான உரைஎன விடுக)
இந்த நான்கு சங்கச் செய்யுள்களிலே மோரியர் தென்னாட்டுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் தேர்கள் தடையில்லாமல் வருவதற்கு இடையிலிருந்த மலைப் பாறைகள் குறைத்துச் செப்பனிடப்பட்டன என்பதும் இச்செய்யுள்களில் கூறப்படுகின்றன. மோரியர் என்பவர் மௌரியராகிய அரச குலத்தார். மோரிய (மௌரிய அரசர் பாரத (இந்திய) நாட்டின் பேரரசராக இருந்து அரசாண்டவர்கள். அவர்கள் ஏறாத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரையில் அரசாண்டனர். (சந்திரகுப்த மௌரியன் கி.மு. 322 இல் மகத இராச்சியத்தை ஏற்படுத்தினான். இவன் வம்சத்தின் கடைசி அரசனான பிருகத்ரதன் கி.மு. 185இல் தன் சேனைத் தலைவனான புஷ்யமித்திரனால் கொல்லப்பட்டு இறந்தான். பிறகு சுங்க இராஜ பரம்பரை நிறுவப்பட்டது)
பேர்போன மோரிய அரசர் சங்கச் செய்யுளில் கூறப்படுகிறது பற்றிச் சரித்திர ஆராய்ச்சிக்காரரும் மற்ற அறிஞரும் ஆராயத் தொடங்கினார்கள். மோரிய அரசர் மோகூர்மேல் படையெடுத்து வந்ததை இச்செய்யுள்கள் கூறுகிறபடியால் இத்தொடர்பு பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். (பாண்டியனுடைய சேனைத் தலைவனாகிய பழையன் என்பவன் மதுரைக்கு அருகில் மோகூர் என்னும் ஊரை யரசாண்டபோது, சேரன் செங்குட்டுவன் மோகூரின் மேல் படை யெடுத்துப் போய் மோகூர்ப் பழையனை வென்ற செய்தி பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்திலும் சிலப்பதிகாரத்திலும் கூறப்படுகின்றது)
மோரியர்-மோகூர் ஆராய்ச்சியைப் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அவைகளைப் பற்றியெல்லாம் இங்கு ஆராய்ந்தால் இடம் விரியும். ஆனால், அவ்வறிஞர்களின் கட்டுரைகளையும் நூல்களையும் இங்குக் குறிப்பிடுகிறேன்.
1. ‘Mauryan Invasion of South India’, Ch.l, The Beginnings of South Indian History, Krishnaswamy Aiyangar, 1918.
2. Bombay Gazetteer, 1896, Vol, Part II,pp.202-4.
3. ‘The Mauryan Invasion of Tamilakam’, Somasundara Desikar, Quarterly Jounral of the Mythic Society, Vol.XVIll, pp. 155-166.
4. ‘The Mauryan Invasion of the Tamil Land’, K.A.Nila kandam, Quarterly Jounral of the Mythic Society, Vol. XVI, p.304.
5. History of the Tamil, P.T. Srinivasa lyangar, 1929, pp.520-526.
6. ‘The Mauryan Invasion of the Tamilakam’, Somasundara Desikar, Indian Historical Quarterly, Vol.IV, pp. 135-145.
7. The Mauryan invasion Polity, V.R.Ramachandra Dikshidar pp.58-61
8. ‘Kosar and Vamba Moriyar’, Quarterly Journal of the Mythic Society.1924.
9. ‘The Moriyar of the Sangam Works’, K.G Sankar, J.R.A.S., 1924, pp.664- 667.
10. ‘Kosar of the Tamil Literature and the Satyaputra of Asoka Edicts’, J.R.A.S., 1923, pp.609-613.
11. Satyaputra of Asoka‘s Edict’', J.R.A.S., 1922,No.2, pp.84-86.
12. Early History of India, Vincent A. Smith,4th Edition, 1957, p. 157.
13. The Cambridge History of India, Vol. l.p.596
14. ‘Maurya Invasion of South India’, A Comprehensive History of India, Vol. II, Edited by K.A. Nilakanta Sastri, 1957, pp. 501-503.
15. ‘தமிழகமும் மோரியர் படையெடுப்பும்’, டாக்டர் கே. கே. பிள்ளை. பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை வெள்ளி விழா மலர், 1961, பக்கம் 359-363.
பண்டித மு. இராகவையங்கார் தாம் 1915ஆம் ஆண்டில் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இதுபற்றிக் கூறியுள்ளார். இச்செய்யுளில் கூறப்படுகிற மோரியரை ஐயங்கார், சமுத்திர குப்தன் என்று கூறுகிறார். இது மிகவும் பிழைபட்ட செய்தியாகையால் இவர் கூற்றை அறிஞர் ஏற்றுக்கொள்ள வில்லை.
பி.தி. ஸ்ரீநிவாச அய்யங்கார், 1929இல் தாம் எழுதிய தமிழர் சரித்திரம் என்னும் நூலில் (History of the Tamils, P.T. Srinivasa Ayengar, 1929, p.520-526) இது பற்றி ஆராய்கிறார். இவர் ஆராய்ச்சியும் உண்மை நாடுவதாக இல்லை.
மேற்கண்ட மூன்று சங்கக் செய்யுட்கள் மோரியர் படையெடுத்து வந்த செய்தியைக் கூறுகின்றன.ஆனால், யார் மேல் படையெடுத்து வந்தனர் என்பதைக் கூறவில்லை. அகம் 251 ஆம் செய்யுள் மட்டும் மோரியர் மோகூர் மேல் படையெடுத்து வந்தனர் என்பதைக் கூறுகின்றது.
மோகூர் என்னும் ஊர் பாண்டி நாட்டில் இருந்தது என்பதையும் அவ்வூரையாண்ட பழையன் என்னும் அரசனைச் சங்க காலத்திலிருந்த சேரன் செங்குட்டுவன் வென்றான் என்றும் பதிற்றுப்பத்து 5ஆம் பத்தினாலும் சிலப்பதிகாரத்திலிருந்தும் அறிகிறோம். ஆனால், மோரியர் இந்த மோகூரின்மேல் படையெடுத்து வந்தனரா? மோரியருக்கும் மோகூருக்கும் என்ன பகை? மோகூர் மன்னன் ஒரு சிற்றரசன்தானே. நெடுந் தொலைவிலிருந்த மோரியருக்கும் தென் கோடியிலிருந்த மோகூருக்கும் என்ன பகை?
இதில் ஏதோ தவறு இருக்கும் போலத் தோன்றுகின்றது. மோகூர் என்னும் சொல்லில் பிழை இருக்கிறது போலத் தோன்றுகிறது. மோகர் என்று இருக்கவேண்டிய சொல் மோகூர் என்று தவறாக எழுதப்பட்டது என்று தோன்றுகிறது. இது பிற்காலத்தில் ஏடெழுதுவோரால் நிகழ்ந்த பிழை என்று தோன்றுகிறது. ‘மோகர் பணியாமையின்’ என்றிருக்க வேண்டிய வாசகம் ‘மோகூர் பணியாமையின்’ என்று பிற்காலத்தில் தவறாக எழுதப்பட்டும் படிக்கப்பட்டும் வந்தது என்று தோன்றுகிறது.
மோகர் என்பவர் கொங்கண (துளு) நாட்டின் கடற்கரைப் பக்கத்தில் இருந்த போர்ப்பிரியமுள்ள மீன்பிடிக்குந் தொழில் செய்த மக்கள். அவர்களுடைய சந்ததியார் துளு நாட்டுக் கடற்கரைப் பக்கத்தில் இன்றும் மோகர், என்னும் பெயருடன் இருக்கிறார்கள். அந்த மோகர் போர் விருப்பமும் அஞ்சாமையுமுடையவராக இருந்த படியால் கோசருக்கு அடங்கமாலிருந்தனர். அவர்கள் பணிந்து போகாதபடியால் அவர்களைப் பணியச் செய்வதற்காகக் கோசர், மோரியருடைய உதவியை வேண்டினார்கள். ஆகவே, மோகரை அடக்குவதற்காக மோரியர் படையெடுத்து வந்தார்கள்.
துளு நாட்டுக் கடற்கரையோரத்தில் வசித்திருந்த மோகர் மேல் போர் செய்ய வந்த மோரியர், துளு நாட்டுக்கு அப்பால் இருந்து வந்தபடியால், அவர்கள் இடையில் இருந்த உயரமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து துளு நாட்டுக்குள் செல்ல வேண்டியவராயினர். மலையிலே கணவாய்கள் இல்லாதபடியாலும் கடல் மட்டத்துக்குமேல் 3000அடி முதல் 6000 அடி வரையில் உயர்ந்திருக்கிற மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் கடக்கவேண்டியிருந்தபடியாலும் மோரியர் மலைமேல் ஏறிச்செல்வதைத் தவிர வேறுவழியில்லை. அக் காலத்தில் மனிதர் நடந்து செல்லக்கூடிய ஒற்றையடிப் பாதை (காலடிப் பாதை) தவிர வண்டிகள் செல்வதற்கு அகலமாக பாதைகள் மலைமேல் இல்லை. மோரியர் தேர்ப் படையுடன் வந்தபடியால், மலை வழியில் உள்ள ஒற்றையடிப் பாதைகள் அவர்களின் தேர்கள் செல்வதற்குப் பயன்படவில்லை. ஆகவே, வண்டிகளும் தேர்களும் செல்வதற்குரிய அகலமான பாதையை அமைக்க வேண்டியிருந்தது.
மோகர் மேல் படையெடுத்துச் சென்ற மோரியர், தங்கள் தேர்ப் படையைச் செலுத்திக்கொண்டு போவதற்கு, மலைமேல் சென்ற காலடிப்பாதைகளை அகலமாக அமைத்துத் தெருவுண்டாக்கினார்கள். அவருக்கு முன்னே சென்ற காலாட்படையினர், குறுக்கே கிடந்த பாறைகளையும் கற்களையும் உடைத்துச் சமப்படுத்தி அகலமான பாதைகளையுண்டாக்கிக் கொண்டே போனார்கள். காலாட்படையினர் அமைத்த அகலமான பாதையைப் பின்பற்றி மோரியரின் தேர்ப்படை சென்றது. முன்னே வழி அமைத்துச் சென்ற காலாட்படையினர் வடுகர். இதைத்தான் ‘முரண்மிகு வடுகர்முன் உற மோரியர்’ தேர்களின் சக்கரம் பின்னால் உருண்டு சென்றது என்று கூறப்பட்டது.
(இக்காலத்திலுங்கூட துளு நாட்டின் கிழக்கிலுள்ள மைசூர் நாட்டிலிருந்து துளு நாட்டுக்குப் போகவேண்டுமானால், மேற்குத் தொடர்ச்சி மலைமேல் உள்ள (Ghat) ‘காட் சாலை’கள் வழியாகத் தான் போகவேண்டும். இந்த மலைச்சாலைகள் அகலமாகவும் நன்றாகவும் செம்மையாகவும் இருக்கின்றன. இச்சாலைகள் அண்மைக் காலத்தில் இருந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை. ஆனால், கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் இந்த மலைகளின் மேல் காலடிப் பாதையைத் தவிர வேறு நல்ல சாலைகள் இல்லை. மோரியர் தேர்ப்படை செல்வதற்காக அக்காலத்தில் முதல்முதலாக அகலமான சாலை மலைமேல் உண்டாக்கப்பட்டது.
சில ஆராய்ச்சிக்காரர்கள், மோரியர் மலையைக் குடைந்து வழியுண்டாக்கிச் சென்றார்கள் என்றும், வேறு சிலர் மலையை வெட்டி வழியுண்டாக்கிக்கொண்டு போனார்கள் என்றும் எழுதியுள்ளனர். இது தவறு எனத் தெரிகிறது. முன்னமே காலடிப் பாதையாக இருந்த அறை (மலை) வழியின் இடையே இருந்த பாறைகள் கற்கள் முதலியவை அப்புறப்படுத்தியும் செம்மைப்படுத்தியும் தேர்ப்படை போவதற்கு ஏற்றபடி அகலமான வழியையுண்டாக்கிக்கொண்டு மோரியப் படை துளு நாட்டுக் கடற்கரைப் பக்கத்திலிருந்த மோகர் மேல் போருக்குச் சென்றது என்பதே நாம் இங்கே கூறுகிற செய்தியாகும். இதுவே பொருத்தமானதாகும். எனவே, செய்யுளில் இப்போதுள்ள மோகூர் என்னும் பாடம் பிழையானதென்றும் அது மோகர் என்றிருக்க வேண்டும் என்றும் கொள்ளத்தகும். ஆகவே,
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவிய அறைவாய்
என்றும் மோகூர் என்பதை மோகர் என அமைத்துக் கொள்வது சரியெனத் தோன்றுகிறது.
துளு நாட்டு மோகர்மேல் வெளிநாட்டார் செல்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், பாண்டி நாட்டு மோகூர் மேல் செல்வதற்கு மலைகளின் மேல் வழியுண்டாக் காமலே செல்ல வழிகள் இருந்தன. எனவே, மோரியர் படை யெடுத்துச் சென்றது மோகூர் மேலன்று என்பதும் தெளிவாகின்றது. இதைத்தான் மேலே காட்டிய சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன.
மோகர் மேல் படையெடுத்துச் சென்ற மோரியர் என்பவர் யார், அவர்கள் மகத இராச்சியத்தை யரசாண்ட மோரியர் (மௌரியர்) அல்லர் என்பது வெளிப்படை மோரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே மறைந்து போயிற்று என்று முன்னமே கூறினோம். இச்சங்கச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டு. ஆகவே, இச்சங்கச் செய்யுட்கள் பாடப்பட்ட காலத்தில் (ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்பு) இந்த வம்பமோரியரின் துளு நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். அப்படியானால், இந்த வம்பமோரியர் கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தவராதல்வேண்டும். இவர் யார்?
மௌரிய இராச்சியம் மேற்குக் கடற்கரை வரையில் பரவியிருந்தது. மௌரிய அரசரின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களின் கீழ் ஆங்காங்கே இராச்சியப் பகுதிகளை யரசாண்டிருந்த சிற்றரசர் அவ்வப் பகுதிகளின் அரசராகச் சுதந்தரம் பெற்று அரசாண்டார்கள். அவர்களில் ஒரு சாரார், இந்தியாவின் மேற்குப் பக்கத்தில் நிலைத்து நெடுங்காலம் மோரியர் என்னும் பெயருடன் இருந்தனர். அவர்களே ‘வம்ப மோரியர்’ ஆக இருக்கக்கூடும். அந்த வம்பமோரியர் கி.பி. முதல் நூற்றாண்டில் துளுநாட்டு மோகர் மேல் படையெடுத்து வந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. இந்த மோரியர் படையெடுப்பின் முழு வரலாறு தெரியவில்லை.
இந்த வம்பமோரியரின் சந்ததியார் பிற்காலத்திலுங்கூட (கி.பி.6ஆம் நூற்றாண்டில்) சாளுக்கிய அரசர் காலத்தில் இந்தியாவின் மேற்குப் பக்கத்தில் இருந்து அரசாண்டு வந்தனர் என்பது தெரிகின்றது.
மௌரிய ஆட்சிக் காலத்தில், அவர்களின் இராச்சியத்தின் தெற்குப் பகுதியை யரசாண்ட இராசப் பிரதிநிதி சுவர்ணகிரி என்னும் நகரத்தில் இருந்து அரசாண்டார் என்று தெரிகின்றது. சுவர்ணகிரி என்பது, இப்போதுள்ள ஆந்திர தேசத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மாங்கி என்னும் ஊர். இங்கிருந்த மோரிய இராசப் பிரதிநிதி களின் சந்ததியார் பிற்காலத்தில் மோரியர் என்னும் பெயருடன் இருந்தார்கள் போலும். இவர்களைத்தான் இச்சங்கச் செய்யுட்கள் வம்பமோரியர் என்று கூறுகின்றன போலும்.
IV. ஆய் எயினன்
சேரர் சார்பாக அவர்களின் சேனைத் தலைவனான ஆய்எயினன் நன்னனுடன் போர் செய்தான் என்று இந்நூலில் கூறினோம். அவனைப் பற்றிய செய்தியை இங்குக் கூறுவோம்.
இவன் வெளியம் என்னும் ஊரை யாண்ட சிற்றரசன். ஆகவே, இவன் ‘வெளியே வேண்மான் ஆய்எயினன்' (அகம் 208:5) என்று கூறப்படுகிறான். வெளியன் என்பது சேர நாட்டில் இருந்த ஊர் என்பதை 'வானவரம்பன் வெளியம்' (அகம் 359:5) என்பதனால் அறிகிறோம் (வானவரம்பன் - சேர அரசன்). வெளியன் வேண்மான் ஆய் எயினன் சேர அரசர்களின் சேனைத் தலைவன் என்று தெரிகிறான். ஆய்எயினனுக்கு நல்லினி என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள். அவளை உதியஞ் சேரல் மணஞ் செய்திருந்தான். இவர்களுக்குப்பிறந்த மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இதனை,
மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மான் நல்லினி ஈன்றமகன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.
எனவே, ஆய்எயினன் மகளாகிய நல்லினி, சேரன் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலுக்கும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கும் பாட்டி என்று தெரிகிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆய் எயினன்.
அக்காலத்தில் துளு (கொங்கண) நாட்டை யரசாண்ட நன்னன் என்பவன், வடகொங்கு நாட்டைச் சேர்ந்த புன்னாடு என்னும் ஊரைக் கைப்பற்ற முயற்சி செய்தான். அது, சேர அரசர் தென் கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம். ஆகவே, கொங்கணத்து நன்னன் புன்னாட்டைக் கைப்பற்றிக் கொள்வது சேரர்களுக்கு ஆபத்தாக இருந்தது. அன்றியும் அக்காலத்தில் புன்னாடு நீலக்கல்லுக்குப் பேர் பெற்றிருந்தது. புன்னாட்டில் நீலக்கல் சுரங்கங்கள் இருந்தன. அங்குக் கிடைத்த நீலக்கற்களை யவனர், ரோமர் முதலிய மேல்நாட்டவர் வாங்கிக்கொண்டு போனார்கள். ஆகவே புன்னாடு, துளுநாட்டு நன்னன் ஆட்சியின் கீழ்ப் போவதைச் சேர அரசன் விரும்பவில்லை. ஆகவே, சேர அரசன் புன்னாட்டின் சார்பாக நன்னனுடன் போர் தொடுத்தான்.
சேர அரசனின் சேனைத் தலைவனான ஆய்எயினன் புன்னாட்டின் சார்பாக நன்னனுடன் போர் தொடுத்தான்.
சேர அரசனின் சேனைத் தலைவனான ஆய்எயினன் புன்னாட்டின் சார்பாகத் துளு நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். துளு நாட்டுப் பாழி என்னும் இடத்தில் நன்னனுடைய சேனைத்தலைவனான மிஞிலி என்பவன் அவனை எதிர்த்துப் போர் செய்தான். இச்செய்திகளைப் பரணர் என்னும் புலவர் கூறுகிறார். இதனை,
பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகில் பாழி யாங்கண்
அஞ்ச லென்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது(அகம் 396: 2-6)
என்றும்,
ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்கு பெருந்தானை
அடுபேர் மிஞிலி செருவேல் கடைஇ
முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென(அகம்181; 3-7)
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டென (அகம்148: 7-8)
என்றும் பரணர் கூறுகிறார்.
ஆஅய் எயினன் இறந்தபிறகு அவனுடைய உடம்பை அவனுடைய மனைவியரிடம் கொடுக்காமல் இருந்தான் நன்னன். அதனால் அவர்கள் பூசல் உண்டாக்கினார்கள். அப்போது அகுதை என்னும் சிற்றரசன் பூசலை நீக்கி அவன் உடம்பை அவர்களுக்குக் கொடுத்தான்.
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியோடு
நண்பகல் உற்ற செருவிற் புண் கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி
நிழல்செய் துழறல் காணேன் யானெனப்
படுகளங் காண்டல் செல்லான் சினஞ் சிறந்து
உருவினை நன்னன் அருளான் சுரப்பப்
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந்தார் அருகிய பூசல்
வசைவிடக் கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை களைதந் தாங்கு (அகம் 208: 5-18)
என்றும் இச்செய்திகளைப் பரணர் தமது செய்யுள்களில் கூறுகிறார். பரணர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அவன் மகன் நார்முடிச் சேரல், மற்றொரு மகன் சேரன் செங்குட்டுவன் ஆகியோர் காலத்தில் இருந்தவர். சேரன் செங்குட்டுவன்மீது 5ஆம் பத்துப் பாடியவர். அப்போது அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார். அவர் காலத்துக்குப் பின் செங்குட்டுவன் செய்த போர்களும் நிகழ்ச்சிகளும் அவனைப்பாடிய ஐந்தாம் பத்தில் இடம்பெறவில்லை.
V. கடம்பும் கடம்பரும்
கடல் துருத்தி என்னுந் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வைத்திருந்த குறும்பரைச் சேரர் வென்று அடக்கியதை இந்நூலில் கூறினோம். அந்தக் கடம்ப மரத்தையும் பிற்காலத்தில் இருந்தவரான கடம்ப குல அரசரையும் இணைத்து இக் காலத்தில் சிலர் சரித்திரம் எழுதுகிறார்கள். அத்தவறான கருத்தை இங்கே விளக்குவோம்.
கடல் துருத்தியில் இருந்தவர் துளுநாட்டைச் சேர்ந்தவர். அவர்கள் துளுநாட்டு நன்னனுக்கு அடங்கியிருந்தவர்கள். அவர்கள் அத்தீவில் தங்கள் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்து வந்தார்கள். ஆனால், அவர்களுக்குக் கடம்பர் என்று பெயர் இருந்ததில்லை. இக்காலத்து ஆராய்ச்சிக்காரர்களில் சிலர் கடம்பமரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த இத்தீவினரைக் கடம்பர் என்று தவறாகக் கருதிக்கொண்டனர். இவ்வாறு தவறாகக் கருதிக்கொண்டு, பிற்காலத்தில் பனவாசி (வனவாசி) நாட்டை யரசாண்ட கடம்ப அரசர்களின் முன்னோர்கள் இத்தீவில் இருந்தவர் என்று எழுதிவிட்டார்கள். கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த காரணத்தினாலே அவர்களைப் கடம்பர் என்று கூறுவது தவறு. சங்க நூல்களில் அவர்கள் கடம்பர் என்று கூறப்படவில்லை. இதனை இவர்கள் சிறிதும் அறியவில்லை.
மோகூரிலிருந்த பழையன் சந்ததியார் வேப்பமரத்தையும் குறுக்கை என்னும் ஊரில் இருந்த திதியன் பரம்பரையினர் புன்னை மரத்தையும் நன்னன் பரம்பரையார் பாழி என்னும் ஊரில் வாகை மரத்தையும் காவல் மரமாக வளர்த்து வந்தார்கள் என்பதைச் சங்க நூல்களில் காண்கிறோம். ஆனால், இவர்கள் வேம்பர், புன்னையர், வாகையர் என்று பெயர் கூறப்படவில்லை. அது போலவே கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தவர் கடம்பர் என்று பெயர் பெறவில்லை. இதனையறியாமல், இக்காலத்து ஆராய்ச்சிக்காரர்களில் சிலர், இத்தீவிலிருந்தவரைக் கடம்பர் என்று தவறாகக் கருதிக்கொண்டு. பிற்காலத்திலிருந்த கடம்ப அரசரின் முன்னோர்கள் இவர்கள் என்று பிழையான கருத்தைத் தவறாக எழுதிவைத்துள்ளனர்.
பனவாசி அரசராகிய கடம்பர் கடம்ப மரத்தின் பெயரைக் கொண்டவர் என்றும் அந்தக் கடம்பமரம் கடற்றுருத்தியில் இருந்த கடம்ப மரம் என்றும், ஆகவே இக்கடம்ப மரத்தை வெட்டிய நெடுஞ்சேரலாதன் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரபலமாக இருந்த கடம்ப அரசர் காலத்தில் இருந்தவன் என்றும் தம் மனம் போனபடிஎல்லாம் சான்று இல்லாமல் எழுதிவிட்டார், தமிழர் சரித்திரம் என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பி.டி. சீநிவாச ஐயங்கார் (History of the Tamils, P.T. Srinivasa Iyengar, 1927, p.501) காவல் மரமாக இருந்த கடம்ப மரத்துக்கும் பிற்காலத்தில் இருந்த கடம்ப அரசருக்கும் என்ன உறவு? அந்த உறவுக்கு என்ன சான்று? யவனக் கப்பல்களைத் தங்கள் நாட்டுத் துறை முகத்துக்கு வராதபடி தடுத்ததற்காகக் கடல் தீவில் இருந்தவர்களை வென்று அவர்கள் வளர்த்திருந்த கடம்பமரத்தை வெட்டி அடக்கினான் நெடுஞ் சேரலாதன். அது நிகழ்ந்தது கி.பி. 2ஆம் நூற்றாண்டில், யவன வாணிபம் தமிழ்நாட்டுடன் நடந்து வந்த காலத்தில். ஏறத்தாழ கி. பி. 250ல் தமிழ்நாட்டுடன் நடைபெற்ற யவன வாணிபம் நின்று விட்ட பிறகு, கி. பி. 5ஆம் நூற்றாண்டில் நெடுஞ்சேரலாதன் இருந்தான் என்று சரித்திரம் எழுதுகிறார் சீனிவாச ஐயங்கார்!
கே.ஜி. சேஷையரும் இந்தத் தவற்றைச் செய்கிறார். நெடுஞ்சேரலாதன் வென்ற இத்தீவின் மக்கள் பிற்காலத்தில் இருந்த கடம்ப குல அரசரின் முன்னோராக இருக்கலாம் என்று இவர் கூறுகிறார் (Cera Kings of the Sangam Period, K. G. Sesha Aiyar, 1937, p. 11,12). ஆனால், சீனிவாச ஐயங்கார் எழுதியது போல இவர், நெடுஞ்சேரலாதன் கி.பி 5ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று எழுதவில்லை. அவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டினன் என்பதே இவர் கருத்து.
சேரன் செங்குட்டுவன் என்னும் நூலை எழுதிய மு. இராகவையங்காரும், கடல் துருத்தியில் இருந்தவருக்கும் பிற்காலத்தில் இருந்த கடம்ப அரசருக்கும் தொடர்பு கற்பிக்கிறார். 'சேரலாதன் பகைவர் (கடல் துருத்தியில் கடம்ப மரத்தைக் காவல்மரமாக வளர்த்திருந்தவர்) கடம்பைத் தம் குலமரமாகக் கொண்டு மைசூர் தேசத்தின் மேல் பாலை ஆண்ட கதம்ப வேந்தராகக் கருதப்படுகின்றனர்” என்று அவர் எழுதுகிறார்.
கடல் துருத்தியில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தவர் வேறு. அவர்கள் கடம்பர் அல்லர். அவர்களுக்குக் கடம்பர் என்ற பெயர் இருந்ததில்லை. பிற்காலத்தில் பனவாசி நாட்டையரசாண்ட கடம்ப அரசர் வேறு. இவர்களையும் அவர்களையும் தொடர்புபடுத்துவது தவறு.
கடம்ப அரசர் குலத்தை உண்டாக்கிய மூல புருஷன் மயூரசர்மன் என்னும் பிராமணன். இவன் ஏறாத்தாழ கி.பி.360 இல் முடிசூடினான். இவனுடைய பிற்காலச் சந்ததியார் கடம்பர் என்று பெயர் பெற்றிருந்தனர். கடம்ப அரசர் குலத்தின் ஆதிபுருஷன் மயூரசர்மன் என்பதை அடியோடு மறந்துவிட்டு, கடல் துருத்தித் தீவில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர் கடம்ப அரசரின் முன்னோர் என்று இவர்கள் கூறுவது எவ்வாறு பொருந்தும்?
பதிற்றுப்பத்து 2ஆம் பத்திலும் 5ஆம் பத்திலும் சிலப்பதிகாரத்திலும் சேரர் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி கூறப்படுகிறது. இந்நூல்களில் ஓரிடத்திலேனும் இவர் கடம்பர் என்று கூறப்படவில்லை. கடம்ப மரந்தான் கூறப்படுகிறது. இதை யாராயாமல் காவல் மரமாகிய கடம்ப மரத்தையும் பனவாசிக் கடம்ப குலத்து அரசரையும் பொருத்துவது தவறான செய்தியாகும்.
✽✽✽