உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/010

விக்கிமூலம் இலிருந்து

9. விளைபொருளும் உற்பத்திப் பொருளும்

வெல்லமும் சர்க்கரையும்

சங்க காலத்தில் வெல்லமும் சர்க்கரையும் செய்யப்பட்டன. வெல்லமும் சர்க்கரையும் செய்வதற்குக் கரும்பு வேண்டும். கரும்பும் பயிர் செய்யப்பட்டது. ஆகவே அக்காலத்தில் கரும்பும் வெல்லமும் முக்கியமான விவசாயப் பொருளும் உற்பத்திப் பொருளுமாக இருந்தன. கொங்கு நாட்டில் தகடூர் வட்டாரத்தை யரசாண்ட அதியமான் அரச பரம்பரையில் வெகு காலத்துக்கு முன்பு இருந்த ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் பயிர் செய்தான் என்று கூறப்படுகின்றான்.

‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் முன்னோர்’
(புறம். 99 : 1-4)

என்றும்,

‘அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே’
(புறம். 392 : 20-21)

என்றும் ஔவையார் கூறுவதிலிருந்து இதனை அறிகின்றோம். இதனால் கொங்கு நாட்டு அதியமான் அரசன் ஒருவன் ஏதோ தூரதேசத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முதல் முதலாகப் பயிர் செய்தான் என்று தெரிகின்றது.

தமிழ் நாடெங்கும் கரும்புப் பயிர் செய்யப்பட்ட இடம் கரும்பின் பாத்தி என்று கரும்பின் கழனி என்றும் கூறப்பட்டது. கரும்பைப் பழனவெதிர் என்று ஒரு புலவர் கூறியுள்ளார். (பழனம் - கழனி. வெதிர் - மூங்கில். மூங்கில் மலைகளில் தானாகவே வளர்வது. கரும்பு, கழனியில் பயிர் செய்யப்படுவது. மூங்கிலைப் போலவே கரும்பும் கணு உள்ளது. ஆகையால் கழனிகளில் பயிர் செய்யப்படுகிற மூங்கில் என்று கரும்பு கூறப்பட்டது) கரும்பு தமிழ்நாடு எங்கும் பயிரிடப்பட்டது.

‘அகல்வயல் கிளைவிரி கரும்பின் கணைக்கால்
வான்பூ’
(அகம், 235:11-12)

‘அகல்வயல் நீடுகழைக் கரும்பின் கணைக்கால்
வான்பூ’
(அகம், 217 : 3-4)

‘விரிபூங் கரும்பின் கழனி’ (2ஆம் பத்து 3:13)}}

‘தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பு.’ (குறுந், 85 : 4)

கரும்பைச் சாறு பிழியும் எந்திரங்களும் கருப்பஞ்சாற்றை வெல்லங் காய்ச்சும் ஆலைகளும் ஊர்கள் தோறும் இருந்தன. பாண்டி நாட்டுத் தேனூரில் கரும்பைச் சாறுபிழியும் எந்திரமும் வெல்லங் காய்ச்சும் ஆலையும் இருந்தன.

‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர்’

என்று ஐங்குறுநூறு கூறுகின்றது.

வெல்லத்துக்கு விசயம் என்று பெயர் கூறப்பட்டது. வெல்லக் கட்டியைச் சுருக்கமாகக் கட்டி என்றும் கூறினார்கள். வெல்லம் ‘கரும்பின் தீஞ்சாறு’ என்றும் கூறப்பட்டது.

‘எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
‘கரும்பின் தீஞ்சாறு’ விரும்பினர் பெறுமின்’
(பெரும்பாண்.260-261)

என்றும்,

‘ஆலைக் கலமரும் தீங்கழைக் கரும்பே!(மலைபடு கடாம் : 119)

என்றும்,

‘மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்
கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்’
(மலைபடு கடாம் : 340-341)

என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

திருவிழாக் காலத்தில் வீடுகளை அலங்கரித்த போது வாழை மரத்தையும் கருப்பங் கழிகளையும் கட்டி அலங்காரம் செய்தார்கள்.

‘காய்க்குலைக் கமுகும், வாழையும், வஞ்சியும்
பூங்கொடி வல்லியும், கரும்பும் நடுமின்’
(மணிமேகலை 1 : 46-47)

வெல்லத்தை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தியமையால் வெல்லங் காய்ச்சும் தொழிலும் கரும்பு பயிரிடும் விவசாயமும் தமிழகத்தில் சிறப்பாக நடந்தன.

வெல்லம் சர்க்கரை விற்ற வாணிகருக்குப் பணித வாணிகர் என்பது பெயர். மதுரைக்குப் பதின்மூன்று கல் தூரத்தில் அழகர் மலை என்னும் மலையும் கோயிலும் உள்ளன. அழகர் மலைக்கு அருகே கிடாரிப் பட்டி என்னும் ஊருக்கு அருகில் இந்த மலையின் மேல் இயற்கையாக அமைந்த ஒரு குகை இருக்கின்றது. இந்தக் குகையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த, ஜைன மதத்து முனிவர்கள் இருந்து தவஞ் செய்தார்கள். அந்த முனிவர்கள் தங்குவதற்காக அந்தக் குகையைச் செப்பஞ் செய்து குகைக்குள் கற்படுக்கைகளைச் சில செல்வர்கள் அமைத்தார்கள். கற்படுக்கைகளையமைத்தவரின் பெயர்கள் அக்குகையிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களில் ஒருவர் பெயர் பணித வாணிகன் நெடுமூலன் என்று எழுதப்பட்டிருக்கின்றது.[1] பணித வாணிகன் என்றால் வெல்லக் கட்டி சர்க்கரை விற்கும் வாணிகன் என்பது பெயர். இந்தப் பிராமி எழுத்தின் அமைப்பைக் கொண்டு இது கிருத்துவுக்கு முன்பு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே அந்தப் பணித வாணிகன் நெடுமுலன் 2200 ஆண்டுகளுக்கு முன்னே கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது.

அந்தக் காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்தவர்களுக்குக் கரும்பும் கரும்புக் கட்டியும் தெரியாது. அவர்கள் தேனையுண்டனர் தேனும் போதிய அளவு கிடைத்திருக்காது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியருக்குக் கரும்பும் வெல்லமும் தெரிந்தன. ஐரோப்பாவில் விளைத்த பீட்ரூட் கிழக்கிலிருந்து சர்க்கரையைக் காய்ச்சும் விதத்தை அவர்கள் 18ஆம் நூற்றாண்டில் அறிந்தனர். பாரத நாட்டிலும் தமிழகத்திலும் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கரும்பும் கரும்புக் கட்டியும் தெரிந்திருந்தன. தமிழகத்தில் கரும்புப் பயிர் செய்வது கரும்புக் கட்டிக் காய்ச்சுவதும் சங்க காலம் முதல் நடைபெற்று வருகின்றன.

கள்ளும் மதுவும்

ஆதிகாலம் முதல் உலகமெங்கும் மதுவும் கள்ளும் அருந்தப்பட்டன. தமிழகம் உட்பட பாரத நாடு முழுவதும் அக்காலத்திலிருந்து மதுபானம் அருந்தப்படுகின்றது. தமிழ்நாட்டிலே எல்லாத் தரத்து மக்களும் கள்ளையும் மதுவையும் அருந்தினார்கள் என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகின்றோம். முடியுடை மன்னரும் குறுநில அரசரும் புலவர்களும் போர் வீரர்களும் ஆண்களும் பெண்களும் செல்வரும் வறியவரும் எல்லோரும் மது அருந்தினார்கள். பௌத்த, சமண மதத்தாரும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்களும் கள்ளுண்பதைக் கண்டித்த போதிலும் மக்கள் கள்ளையும் மதுவையும் அருந்தி வந்ததைச் சங்கச் செய்யுட்கள் சான்று கூறுகின்றன. இருக்கு வேதம் கூறுகிற ‘சோமயாக’த்தைத் தமிழ்நாட்டு ஆரிய பிராமணர் தமிழ் நாட்டில் செய்ததாகச் சான்று இல்லை. ஆனால் வேள்வி (யாகம்) செய்து மது மாமிசம் அருந்தியதைச் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. சங்க காலத்தில் தமிழகத்தில் நடக்காத சோம யாகத்தைப் பிராமணர் பிற்காலத்தில் பக்தி இயக்கக் காலத்தில் பெருவாரியாகச் செய்தனர். சோமபானத்தைக் கொண்டு சோமயாகம் செய்து சோமயாஜி என்று பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான சோமயாஜிப் பிராமணரைப் பாண்டியர் செப்பேடுகளும் பல்லவர் செப்பேடுகளும் கூறுகின்றன. சோம யாஜிப் பார்ப்பனன் ஒருவன் சோம பானத்தைக் குடித்துக் குடித்துத் தம்முடைய மனத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டதாக (மனோ அத்தர் ஆகியதாக!) ஒரு பாண்டிய செப்பேட்டுச் சாசனம் கூறுகின்றது. (தளவாய்ப்புரச் செப்பேடு, வரி, 138) ஆனால் நம்முடைய இப்போதைய ஆய்வு சங்க காலத்தோடு மட்டும் நிற்கிறபடியால் அந்த ஆராய்ச்சிக்குப் போக வேண்டியதில்லை.

சங்க காலத்துத் தமிழகத்திலே கள்ளும் மதுவும் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவில்லை. உள்நாட்டிலேயே செலவாயின. கள், தேறல், தோப்பி, பிழி, நறவு, மகிழ், மட்டு முதலான பெயர்கள் மது பானங்களுக்குப் பெயராகக் கூறப்பட்டுள்ளன. தென் கட்டேறல் (அகம், 336 : 6) பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம், 348 : 7) பாம்பு வெகுண்டன்ன தேறல் (சிறுபாண் - 237) ‘தண்கமழ் தேறல்’ (புறம், 24), ‘மணங்கமழ் தேறல்’ (மதுரை. 780), ‘பூக்கமழ் தேறல்’ (பொருநர், 157), ‘இன்களி நறவு’ (அகம், 173 : 16), ‘தீந்தண் நறவம், (புறம் 292), ‘மணநாறு தேறல்’ (புறம், 397 : 14), ‘அரவு வெகுண்டன்ன தேறல்’ (புறம், 736 : 14), ‘மகிழ்தரல் மரபின் மட்டு’ (புறம் 390 : 16) என்று சங்கச் செய்யுட்கள் மது பானங்களைப் புகழ்கின்றன.

தென்னை பனை மரங்களிலிருந்து கள் இறக்கப்பட்டது. நெல், தினை முதலான தானியங்களிலிருந்து மது வகைகள் உண்டாக்கப்பட்டன. ‘கொழு மடல் தெங்கின் விளைபூந்தேறல்’ (மணி, 3:89) என்று தென்னங்கள் கூறுப்படுகின்றது. ‘இரும்பனம் தீம்பிழி’ (நற்.38:3) என்றும், பிணர்ப்பெண்ணைப் பிழி (பட்டினப், 89) என்றும், நுளை மகள் அரித்த பழம்படு தேறல் (சிறுபாண், 58) என்றும், இரும்பனம் தீம்பிழியுண்போர் மகிழும் (நற் 38.8) என்றும் பனங்கள் கூறப்படுகின்றது.

நெல், தினை முதலான தானியங்களிலிருந்தும் மதுபானங்கள் உண்டாக்கப்பட்டன. இவற்றிற்குத் தோப்பிக்கள் என்று பெயர் கூறப்பட்டது. இவற்றை வீடுகளில் காய்ச்சினார்கள். ‘இல்லடு கள்ளின் தோப்பி’ (பெரும்பாண். 142) ‘துகளற விளைந்த தோப்பி’ (அகம், 205) சாடிகளில் தோப்பிக்கள் காய்ச்சப்பட்டன. வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த வெந்நீரரியல் விரலலை நறும்பிழி (பெரும்பாண். 281) என்று கூறப்படுகின்றது. ‘தினைக் கள் உண்ட தெளிகோல் மறவர்’ (அகம், 284:8) என்று தினையரிசிக் கள் கூறப்படுகின்றது.

மலைநாடுகளில் இருந்த குறவர் அங்குக் கிடைத்த பொருள்களிலிருந்து மதுவை உண்டாக்கிக் கொண்டார்கள். மலையுச்சியில் மலைப்பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைகளிலும் மலைச்சாரல்களிலும் பலா மரங்களும் பலாப்பழங்களும் கிடைத்தன. மலைகளில் மூங்கில் புதர்கள் வளர்ந்தன. குறவர் பலாச்சுளைகளிலிருந்து ஒரு வகையான மதுபானத்தை உண்டாக்கினார்கள். ‘தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்’ (அகம், 128:3, 182:3) மூங்கிற் குழாய்களில் மலைத் தேனைப் பெய்து வாயை யடைத்து நிலத்தில் புதைத்து வைத்து ஒருவித மதுபானத்தை யுண்டாக்கினார்கள். ‘வேய்பெயல் விளையுள் தேக்கட்டேறல் குறைவின்றிப் பருகி நறவு மகிழ்ந்து.’ (மலைபடு கடாம் 171-172) (வேய்-மூங்கில்) ‘திருந்தமை விளைந்த தேக்கட்டேறல்’ (அமை-மூங்கில்) (மலைபடு, 523), ‘நிலம் புதைப் பழுநிய மட்டின் தேறல்’ (புறம், 120 : 12), 'வாங்கு அமைப் பழுநிய தேறல், (புறம், 129:2) (அமை-மூங்கில்) ‘ஆம்பணை விளைந்த தேக்கட்டேறல்' (அகம், 368 : 14) (பணை-மூங்கில்) ‘அமை விளை தேறல் மாந்திய கானவன்’ (சிலம்பு, 27 : 217) பாரியின் பறம்பு மலையில் இருந்தவர்களும் மூங்கிற் குழையில் தேனைப் பதப்படுத்தி மதுவாக்கி உண்டனர். ‘நிலம் புதைப் பழுநிய மட்டின் தேறல்’ (புறம், 120:12)

மலைவாழ் குறவர் பலாச் சுளையையும் தேனையும் கலந்து மூங்கில் குழையில் பெய்து பதப்படுத்திய மதுவை உண்டு மகிழ்ந்தனர்.

“தேன்தேர் சுவைய, திரளமை மாஅத்துக்
கோடைக் கூழ்த்த கமழ் நறுந் தீங்கனி
பயிர்ப்புற பலவின் எதிர்ச்சுளை யளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடுங்கண் ஆடமைப் பழுநிக் கடுந்திறல்
பாப்புக்கடுப் பன்ன தோப்பிவான் கோட்டுக்
கடவுளோங்கு வரைக் கோக்கிக் குறவர்
முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி”
(அகம். 348:29)

ரோமாபுரியிலிருந்து வாணிகத்துக்காக வந்த யவனர் மதுபானத்தையும் கொண்டு வந்தார்கள். அது திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்பட்ட கொடிமுந்திரிச் சாறு (Wine). அது விலையதிகமாகையால் அரசர்கள் மட்டும் வாங்கியருந்தினார்கள். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனை நக்கீரர் வாழ்த்தின போது, யவனர் தந்த தேறலை உண்டு மகிழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தினார்.

‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி, நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற.’
(புறும்.56)

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்திய போது ‘மணங்கமழ் தேறலை’ உண்டு மகிழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தினார்.

‘இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி பெரும’
(மதுரை, 779-81)

மாங்குடி மருதனார் இன்னொரு செய்யுளிலும் அப்பாண்டியனை அவ்வாறே வாழ்த்தினார்.

‘ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினி தொழுகுமதி பெரும’
(புறம். 24:31-33)

சேரமான் மாவெண்கோவும் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருங்கிள்ளியும் ஒருங்கிருந்த போது அவர்களை அவ்வையார்,

‘பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து’
(புறம்,367 : 6-7)

இருப்பீர்களாக என்று வாழ்த்தினார். ‘வேந்தர்க் கேந்திய தீந்தண் நறவம்’ (புறம், 291–1)

அரிக்கமேடு என்னும் இடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு கி.மு. முதல் நூற்றாண்டில் யவனர் (கிரேக்க - ரோமர்) தங்கியிருந்த வாணிக நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குக் கிடைத்த பல பொருள்களில் கிரேக்க நாட்டுச் சாடிகளும் கிடைத்தன. அந்தச் சாடிகள் உரோம் தேசத்தில் செய்யப்பட்டவை. அக்காலத்தில் யவனர் மதுபானங்களை வைப்பதற்காக உபயோகப்பட்டவை. யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் என்று சங்கச் செய்யுள் கூறியதற்குச் சான்றாக இந்த யவனச் சாடிகள் உள்ளன. பாலாறு கடலில் கலக்கும் இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர் நிலத்தை அகழ்ந்து பார்த்த போது அவ்விடத்தில் கிடைத்த பொருள்களுடன் யவனருடைய மதுச்சாடிகளும் கண்டெடுக்கப்பட்டன. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்ட இந்த மதுச்சாடிகளுக்கு அம்பொரே (Amphorae) என்பது பெயர். வட இந்திய அரசர்களும் யவன மதுவை வாங்கியுண்டனர். அசோக சக்கரவர்த்தியின் தந்தையான பிந்துசார மன்னன் யவன மதுவை வரவழைத்து அருந்தினான் என்று கூறப்படுகின்றது.

அரசர், வீரர், புலவர், மாலுமிகள், உழவர் முதலான எல்லா வகையான மக்களும் அக்காலத்தில் மது அருந்தினார்கள். அந்த மது வகைகள் தமிழ்நாட்டிலே உற்பத்தியாகி உள்நாட்டிலேயே விற்பனை ஆயின. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவில்லை கள்ளையும் மதுவையும் விற்றவர் பெண்டிர்.

மிளகு (கறி)

சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் உணவுக்கு மிகவும் முக்கியமான பொருளாக இருந்தது மிளகு. ஆனால் மிளகு எல்லா நாடுகளிலும் உண்டாகவில்லை. சேர நாட்டிலே மலைச் சாரல்களில் (சைய மலை என்னும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்) மிளகுக் கொடிகள் வளர்ந்தன. சேர நாட்டில் வாழ்ந்த அக்காலத்துத் தமிழர் இக்காலத்து மலையாளிகளைப் போல, மிளகைப் பயிரிட்டு மிளகு உற்பத்தி செய்தார்கள். கிழக்கிந்தியத் தீவுகளாகிய சாவக நாட்டிலேயும் அக்காலத்தில் மிளகு உண்டாயிற்று. ஆனால் அந்த மிளகு சேர நாட்டு மிளகைப் போன்று சிறந்தவையல்ல. சேர நாட்டுக்கு வடக்கேயிருந்த துளு நாட்டிலும் (இப்போதைய தென் கன்னட மாவட்டம்) மிளகு உண்டாயிற்று. சங்க காலத்தில் சேர நாடும் துளு நாடும் தமிழ் பேசும் தமிழ் நாடாகவே இருந்தன. பிற்காலத்தில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழ், மலையாள மொழியாகவும் துளு நாட்டில் பேசப்பட்ட தமிழ், துளு மொழியாகவும் மாறிப் போயின. துளு நாட்டிலும் சேர நாட்டிலும், மிளகு நன்றாக விளைந்தது. மிளகு, உணவைப் பக்குவப்படுத்துவதற்கு இன்றியமையாத பொருளாக இருந்தபடியால் அது உலகம் முழுவதும் தேவைப்பட்டது. (இக்காலத்தில் சமையலுக்கு உபயோகப்படுகின்ற மிளகாய் அக்காலத்தில் கிடையாது. அக்காலத்தில் அமெரிக்கா கண்டம் இருந்தது ஒருவருக்கும் தெரியாது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா கண்டம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அங்குத் தென் அமெரிக்காவிலிருந்து மிளகாய் கொண்டு வரப்பட்டது. இது நிகழ்ந்தது சமீப காலத்தில்தான்.) சேரநாட்டு மிளகு அக்காலத்தில் உலக முழுவதும் பேர் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்திலிருந்த யவனர்கள் சேர நாட்டு மிளகை அதிகமாக வாங்கிக் கொண்டு போனார்கள். அதனால் மிளகுக்கு யவனப்பிரியா என்று பெயர் உண்டாயிற்று. மிளகுக்குக் கறி என்றும் மிரியல் என்றும் பெயர் உண்டு. சோழ நாட்டுக்குச் சாவக நாட்டிலிருந்து மிளகு இறக்குமதியாயிற்று என்பதைப் பட்டினப் பாலையிலிருந்து அறிகின்றோம்.

சங்கச் செய்யுட்களிலே சேர நாட்டு மிளகும் மிளகுக் கொடியும் கூறப்படுகின்றன. குடபுலத்தில் (சேர நாட்டில்) கறிக்கொடி (கறி=மிளகு) பலாமரங்களில் மேலே படர்ந்து வளர்ந்ததை நத்தத்தனார் கூறுகிறார். ‘பைங்கறி நிவந்த பலவின் நீழல்’ (சிறுபாணாற்றுப்படை. அடி. 43) மலைகளில் சந்தன மரங்களின் மேலேயும் மிளகுக் கொடிகள் படர்ந்து வளர்ந்தன. ‘கறி வளர் சாந்தம்’ (அகம், 2:6) மலைகளில் மிளகுக் கொடி வளர்ந்தது. ‘கறி வளர் அடுக்கம்’ (குறும், 288:1) (அடுக்கம் மலை) கருவூர் கதப் பிள்ளைச் சாத்தனாரும் ‘கறிவளர் அடுக்க’த்தைக் கூறுகிறார். (புறம் 168:2) ‘கறிவளர் சிலம்பை’ ஆகூர் மூலங் கிழார் கூறுகின்றார். (அகம் 112:14) (சிலம்பு - மலை) மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், ‘துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை’யைக் கூறுகிறார். (அகம் 272 : 10) (படப்பை - தோட்டம்) நக்கீரர் திருமுரு காற்றுப்படையில் (அடி 309) கறிக்கொடியைக் கூறுகின்றார்.

மிளகாய் இல்லாத அந்தக் காலத்திலே மிளகு உணவுக்கு மிகவும் பயன்பட்டது. உப்பு எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாத பொருளாக மிளகு இருந்தது. காய்கறிகளை உணவாகச் சமைத்த போது அதனுடன் கறியை (மிளகை)யும் கறிவேப்பிலையையும் பயன்படுத்தினார்கள்.

‘பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளைஇ’

என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 307, 308) கூறுகின்றது. நமது நாட்டில் மட்டுமன்று உலகத்திலே மற்ற நாடுகளிலும் மிளகு தேவைப்பட்டது. ஆகவே மிளகு வாணிகம் மிகச் சிறப்பாக நடந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளையடுத்த சேர நாட்டிலும் துளு நாட்டிலுமே மிளகு உண்டானபடியால் இந்த இடங்களிலிருந்தே மிளகு மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்றது. பாண்டிநாடு, சோழ நாடு, கொங்குநாடு, தொண்டை நாடு முதலான தமிழகத்து நாடுகளுக்குத் தமிழகத்துக்கு அப்பால் வடக்கேயுள்ள பாரத தேசத்து நாடுகளுக்கும், பாரசீகம் எகிப்து உரோமாபுரி கிரேக்கம் முதலான தேசங்களுக்கும் சேர நாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் மேற்குக் கரையோரங்களில் விளைந்த மிளகு கிழக்குக் கரையோரத்திலிருந்த காவிரிப்பூம்பட்டினத்துக்கும் வண்டிகளிலும் பொதி மாடு பொதி கழுதைகளிலும் கொண்டு வரப்பட்டது. காலின் வந்த கருங்கறி மூடை என்று இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார் (பட்டினப் பாலை, அடி 186) (கால் - வண்டி, பொதிமாடு முதலியன. கறி மூடை = மிளகு மூட்டை) (வணிகச் சாத்து - வணிகக் கூட்டம்). மிளகுப் பொதிகளைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலை வழியே சென்றதையும் மிளகு மூட்டைகள் பலாக்காய் அளவாக இருந்ததையும் வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரச ஊழியர் சுங்கம் வாங்கினதையும் அந்தப் புலவரே கூறுகிறார்.

‘தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவி கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழி’
(பெருண்பாண். 77-80)

(பலவின் முழு முதல் - பலா மரத்தின் அடிப்புறம். பலா மரத்தின் அடிப்பக்கத்தில் பலாப் பழங்கள் காய்ப்பது இயல்பு. கடுப்ப - போல. மிரியல் - மிளகு, கறி. நோன்புறம் வலிமையுள்ள முதுகு. சாத்து - வணிகக் கூட்டம். உல்கு - சுங்கம், சுங்கச் சாவடி)

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் மிளகு மூட்டைகள் தரைவழியாக வந்தன என்று கூறப்படுவதனால், இந்த மிளகு மூட்டைகள் மற்றப் பொருள்களோடு வெளி நாடுகளுக்குக் கப்பலில் ஏற்றியனுப்பப்பட்டன என்று கருத வேண்டியிருக்கின்றது.

அரபு தேசத்து அராபியர் பழங்காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்து மிளகை வாங்கிக் கொண்டு போய் எகிப்து உரோமாபுரி முதலான மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் விற்றனர். கி.மு. முதல் நூற்றாண்டில், யவனர் (கிரேக்கரும் உரோமரும்), அராபியரிடமிருந்து மிளகு வாணிகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் நேரடியாகத் தாங்களே கப்பல்களைச் சேர நாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்குக் கொண்டு வந்து முக்கியமாக மிளகையும் அதனுடன் மற்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் முக்கியமாக முசிறித் துறைமுகப்பட்டினத்துக்கு வந்தனர். அவர்கள் முசிறியை முசிறிம் (Muziris) என்று கூறினார்கள். கி.மு. முதல் நூற்றாண்டில் தொடங்கின யவனரின் கப்பல் வாணிகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடந்தது. யவனர்கள் கிரேக்க மொழியில் அக்காலத்தில் எழுதி வைத்த ‘செங்கடல் வாணிபம்’ (Periplus of Eritherian Sea) என்னும் நூலிலும் பிளைனி என்பார் எழுதிய நூலிலும் யவன - தமிழக் கடல் வாணிபச் செய்திகள் கூறப்படுகின்றன. யவனர்கள் தமிழகத்துக்கு வந்து சேரநாட்டு மிளகையும் கொங்கு நாட்டு நீலக் கல்லையும் பாண்டிநாட்டு முத்தையும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதை அக்காலத்தில் நேரில் கண்ட தாயங்கண்ணனாரும் பரணரும் கூறுகிறார்கள்.

‘சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி’
(அகம், 149:8-11)

என்று தாயங்கண்ணனார்கூறுகிறார். சேரர்களுடைய முசிறிப் பட்டினத்துக்கு யவன வாணிகர் வந்ததையும் அவர்களுடைய ‘வினைமாண் நன்கலம்’ அழகாக இருந்ததையும் அவர்கள் பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதையும் இவர் கூறுவது காண்க.

சேர நாட்டில் விளைந்த மிளகை வீடுகளில் மூட்டைக் கட்டி வைத்தார்கள். யவனக் கப்பல்கள் வந்த போது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளின் வழியே ஆற்றில் சென்று துறைமுகத்தில் தங்கியிருந்த யவனக் கப்பல்களில் ஏற்றுமதி செய்து அதற்கான பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டு வந்தனர் என்று பரணர் கூறுகிறார்.

‘மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து.
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால், கரைசேர்க்குறுந்து’
(புறம்.343)

(மனைக்குவைய - வீடுகளில் குவித்து வைத்த. கறி மூடை - மிளகு மூட்டை. கலம் - (யவனரின்) மரக்கலம். பொற்பரிசம் – பொற்காசு)

யவனக் கப்பல்கள் சேரநாட்டுக்கு வந்து வாணிகம் செய்தபடியால் சேர மன்னருக்குப் பொருள் வருவாய் அதிகமாயிற்று. இதனைக் கண்ட துளு நாட்டு அரசனான நன்னன் இந்த வாணிகத்தைத் தன்நாட்டில் வைத்துக்கொள்ள எண்ணினான். நன்னனுடைய துளு நாட்டில் அக்காலத்தில் முக்கியமான துறைமுகப்பட்டினமாக இருந்தது மங்கலபுரம் என்னும் மங்களூர். இந்தத் துறைமுகம் நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் இருந்தது. பிளைனி என்னும் யவனர் அந்தத் துறைமுகத்தை நைத்ரியாஸ் (Nitrias) என்று கூறியுள்ளார். இவர் கூறுகிற நைத்ரியாஸ் என்பது நேத்திராவதி. நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தபடியால் இத்துறைமுகப்பட்டினத்தை அவர் நைத்ரியாஸ் என்று கூறினார் என்று தோன்றுகின்றது. சேர நாட்டுக்கு வருகிற கப்பல்கள் துளு நாட்டு மங்களூர்த் துறைமுகத்தைக் கடந்துதான் வரவேண்டும். ஆனால் யவனக் கப்பல்கள் மங்களூர்த் துறைமுகத்துக்கு அதிகமாக வருவதில்லை.

யவனர் தமிழ்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்தது முக்கியமாக மிளகுக்காகவே. யவனர் தமிழர் கடல் வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடை பெற்றதைச் சங்கச் செய்யுள்களிலிருந்தும் யவனரின் நூல்களிலிருந்தும் அறிகின்றோம். இந்த வாணிகச் செய்தியைத் தமிழகத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட பழங்காசுப் புதையல்களிலிருந்து கிடைத்த உரோம தேசத்துப் பழங்காசுகள் வலியுறுத்துகின்றன.

உலக முழுவதும் அக்காலத்தில் புகழ்பெற்று இருந்த மிளகை வட இந்தியரும் உபயோகித்தனர் என்பது சொல்லாமலே அமையும். வடநாட்டார் மிளகை மரிசி என்று சொன்னார்கள். வடமொழியிலும் (சமஸ்கிருதம்) மிளகுக்கு மரிசி என்பது பெயர். மரிசி என்பது முசிறி என்பதன் திரிவு. முசிறித் துறைமுகத்திலிருந்தே மிளகு வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதனால் அந்தப் பட்டினத்தின் பெயர் மிளகுக்கு ஏற்பட்டது. முசிறி என்னும் சொல் முரசி என்று திரிந்து பிறகு மரிசி என்றாயிற்று.

கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காக் கண்டத்திலிருந்து மிளகாய் கொண்டு வரப்பட்டது. இப்போது மிளகாயும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆனால் மிளகின் பெருமையும் சிறப்பும் இன்றும் குறையவில்லை.

அறுவை (துணி)

தமிழ்நாட்டில் பருத்திப் பஞ்சு விளைந்தது. பருத்தியை நூல் நூற்று ஆடை நெய்தார்கள். ஆகவே பருத்தி பயிரிடும் தொழிலும், பருத்தியிலிருந்து நூல் நூற்கும் தொழிலும், நூற்ற நூலைத் துணியாக நெய்யும் நெசவுத் தொழிலும் அதனை விற்கும் வாணிபத் தொழிலும் நடைபெற்றன. தமிழகத்தில் துணி விற்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. சங்கச் செய்யுள்களிலிருந்து அக்காலத்துப் பருத்தித் தொழிலைப் பற்றி அறிகிறோம்.

கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழி முதற் கலித்த கோழிலைப் பருத்தி, (அகம், 129 ; 6-8), ‘பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும், புன்புலந்தழீஇய அங்குடிச் சிறூர்’ (புறம், 304 : 7-8) என்றும், ‘காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தியாக்கும் தீம்புனல் ஊரன்’ (அகம், 156 : 6-7) என்றும், ‘பருத்தி வேலிச் சீறூர் மன்னன்’ (புறம், 299 : 1) என்றும் பருத்தி பயிரிடப்பட்டது கூறப்படுகின்றது. பருத்திக்காய் முற்றி முதிர்ந்து வெடித்துப் பஞ்சு வெளிப்பட்ட போது அவற்றைக் கொய்து கொண்டு போய் வீட்டில் வைத்தார்கள். ‘கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த, மூடைப் பண்டம் இடை நிறைந்தன்ன’ (புறம், 393 : 12-13)

‘வில் அடித்துப் பஞ்சிலிருந்து கொட்டை நீக்கப்பட்டது. கொட்டை நீக்கப்பட்ட பஞ்சு வெண்மேகம் போலக் காணப்பட்டது. ‘வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும்’ (அகம். 133:6) கொட்டை நீக்கிய பஞ்சியை நூலாக நூற்கிறார்கள். அக்காலத்தில் கையினாலே நூல் நூற்கப்பட்டது. நூலை நூற்றவர்கள் மகளிர், ஆண்மகன் ஆதரவு இல்லாத பெண்டிர் பஞ்சை நூலாக நூற்றார்கள். அவர்கள் இரவிலும் சிறு விளக்கு வெளிச்சத்தில் நூல் நூற்றார்கள். ‘ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற்றிணை, 353:1-2) ‘பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கம்’ (புறம் 326 : 5)

நூலினால் முரட்டுத் துணிகளும் மெல்லிய துணிகளும் நெய்யப்பட்டன. குளத்தில் படரும் பாசி போன்ற (ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசிவேர்) போன்ற நூலினால் முரட்டுத் துணிகள் நெய்யப்பட்டன. நுண்மையான நூல்களினால் மெல்லிய துணிகள் நெய்யப்பட்டன. பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்புத் தோல் போன்ற அழகான துணிகளும், காகிதம் போன்ற மெல்லிய துணிகளும் பல வகையாக நெய்யப்பட்டன. ‘இழை மருங்கறியா நுழை நூற் கலிங்கம்’ (மலைபடு, 156) ‘பாம்புரித் தன்ன பொன்பூங்கலிங்கம்’, (புறம் 397 : 15), ‘போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம்’ (புறம், 393: 17-18) நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து, அரவுரி யன்ன அறுவை' (பொருநர், 82-83) 'காம்பு சொலித்தன அறுவை' (சிறுபாண், 236) இவ்வாறு பலதரமான ஆடைகள் நெய்யப்பட்டன.

அக்காலத்துத் தமிழர் சட்டை அணியவில்லை. அரையில் ஓர் ஆடையும் தோளின் மேல் ஓர் ஆடையும் ஆக இரண்டு துணிகளை மட்டும் அணிந்தார்கள். இக்காலத்தில் உடுப்பது போல அதிகமாக ஆடைகளை அணியவில்லை. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறம் 189 : 5) துணியைச் சட்டையாகத் தைத்து அணியும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. அரச ஊழியர்களில் முக்கியமானவர் மட்டும் மெய்ப்பை (சட்டை அணிந்தார்கள்) பாண்டிய அரசனுடைய அரசாங்கத்து ஊழியர் மெய்ப்பை (சட்டை) அணிந்திருந்தனர். பாண்டியனுடைய பொற்கொல்லன் சட்டையணிந்திருந்தான். அவனைக் கோவலன் மதுரை நகரத் தெருவில் சந்தித்தான். ‘மெய்ப்பைபுக்கு விலங்கு நடைச் செலவிற் கைக் கோற் கொல்லனைக் கண்டனனாகி, (சிலம்பு 16 : 107-108 ) மெய்ப்பை - சட்டை; பாண்டியனுடைய தூதர்களும் கஞ்சுகம் (சட்டை) அணிந்திருந்தார்கள். (சிலம்பு, 26 : 166- 172) சேரன் செங்குட்டுவனுடைய தூதர்களும் அவர்கள் தலைவனாகிய சஞ்சயனும் தலைப்பாகையும் கஞ்சுகமும் (சட்டையும்) அணிந்திருந்தனர். சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற, கஞ்சுக முதல்வர் ஈரைஞ்நூற்றுவர் (சிலம்பு 26 : 137-138) செங்குட்டுவனுடைய ஒற்றரும் அவர்களின் தலைவனான நீலனும் கஞ்சுகம் (சட்டை) அணிந்திருந்தார். நீலன் முதலிய கஞ்சு மாக்கள் (சிலம்பு, 28 : 80) அரசாங்கத்துக்கு முக்கிய ஊழியர் தவிர, சங்க காலத்தில் மற்ற யாவரும் சட்டையணியவில்லை.

தமிழகத்திலிருந்து வெளி நாடுகளுக்கும் துணி ஏற்றுமதியாயிற்று. பாடலிபுரம் காசி போன்ற கங்கைக்கரைப் பிரதேசங்களுக்குத் தமிழ்நாட்டுத் துணிகள் அனுப்பப்பட்டன. கவுடல்யரின் அர்த்த சாத்திரம் மாதுரம் என்னும் துணியைக் கூறுகின்றது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து சென்றபடியால் அதற்கு மாதுரம் என்று பெயர் கூறப்பட்டது. அர்த்த சாத்திரம் சந்திர குப்த மௌரியன் காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறப்படுகின்றபடியினால் அக்காலத்திலேயே தமிழ்நாட்டு ஆடைகள் வட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது தெரிகின்றது. தமிழ் நாட்டிலிருந்து ஆடைகள் சாவக நாட்டுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளாகிய இந்தோனேஷியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் அந்நாடுகளில் பஞ்சும் துணியும் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால், தமிழகத்துத் துணிகள் அங்குக் கொண்டு போகப்பட்டதற்குச் சான்றுகள் இல்லை.

தமிழர் கலிங்க தேசத்துக்குக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சென்று வாணிபம் செய்தனர் என்று ஹத்தி கும்பா குகைச்சாசனம் கூறுகின்றது. கலிங்க நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்த தமிழர் அங்கிருந்து பருத்தியாடைகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தனர். கலிங்க நாட்டிலிருந்து வந்த ஆடைக்குக் கலிங்கம் என்று பெயர் கூறப்பட்டது. தமிழகத்தில் கலிங்க ஆடைகள் அதிகமாக விற்கப்பட்டன. கலிங்கத் துணி களுக்குச் சிறப்புப் பெயராக வழங்கப்பட்டது. கலிங்கம் என்ற பெயர் பிற்காலத்தில் எல்லாத் துணிகளுக்கும் பொதுப் பெயராக வழங்கப்பட்டது. சங்கச் செய்யுட்களில் கலிங்கம் என்னும் பெயர் பொதுவாக எல்லாத் துணிகளுக்கும் வழங்கப்பட்டதைக் காண்கின்றோம்.

தமிழ்நாட்டிலே அக்காலத்திலும் பட்டாடைகள் உடுத்தப்பட்டன. செல்வர் பருத்தியாடையும், பட்டாடையும் அணிந்தார்கள். ‘பட்டு நீக்கித் துகில் உடுத்தும்' என்று பட்டினப்பாலை (அடி 105) கூறுகின்றது. 'கொட்டைக் கரைய பட்டுடை' என்று பொருநர் ஆற்றுப்படை (அடி 155) கூறுகின்றது. 'அரத்தப்பூம்பட்டு அரை மிசை உடீஇ' என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது (சிலம்பு, 4:86) பட்டுத் துணி தமிழகத்தில் உற்பத்தி யாகவில்லை. அந்தக் காலத்திலே பட்டு சீன நாட்டில் மட்டும் உற்பத்தி யாயிற்று. வேறெங்கும் அக்காலத்தில் உற்பத்தியாகவில்லை. சீனர்கள் பட்டுத்துணியைச் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்து விற்றார்கள். வாணிகத்துக்காகச் சாவக நாட்டுக்குச் சென்ற தமிழர் அங்கிருந்த பட்டுத்துணிகளைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். தமிழர்களிடமிருந்து பட்டுத் துணிகளை யவனர் வாங்கிக் கொண்டு போனார்கள். சீன நாட்டுப் பட்டு சாவகத் தீவுக்கு வந்து அங்கிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து யவன நாட்டுக்குக் கொண்டு போகப் பட்டது. பாரசீகம் எகிப்து ரோமாபுரி முதலான நாடுகளுக்குப் (பட்டுத் துணி சீன நாட்டி லிருந்து மத்திய ஆசியா வழியாகவும் தரைவழியாகச் சென்றது) பாண்டி நாட்டுத் தொண்டித் துறைமுகத்திலே கிழக்குக் கடலிலிருந்து (சாவக நாட்டிலிருந்து வந்த பொருள்களில்) பட்டுத் துணியும் கூறப்படுகின்றது.

ஓங்கிரும் பரப்பின்
வங்க வீட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து
(சிலம்பு, 14: 106-110)

இவை கிழக்குக் கடல்களிலிருந்து கொண்டல் (கிழக்குக்) காற்றின் உதவியினால் கப்பல்களில் வந்தவை. இவற்றில் துகில் என்பது பட்டுத் துணி. கிழக்கிலிருந்து வந்த பட்டைத் தமிழ் நாட்டிலிருந்து அரபியரும் யவனரும் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்.

தமிழ்நாட்டிலுண்டான பருத்தித் துணிகளுக்குச் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலான சாயம் ஊட்டினார்கள். ஆனால், வெண்மையான துணிகளையே தமிழர் பெரிதும் விரும்பினார்கள். வெள்ளையாடை சிறப்பாகவும் உயர்வாகவும் மதிக்கப்பட்டது. பிறந்த நாளாகிய வெள்ளணி நாளிலே வெள்ளாடை யுடுத்துவது சிறப்பாக இருந்தது.

சங்க காலத்திலே பருத்தி பயிர் செய்வதும் நூல் நூற்பதும் துணி செய்வதும் ஆடை விற்பதுமாகிய தொழில் சிறப்பாக நடந்தது. துணிகளை விற்ற வணிகருக்கு அறுவை வாணிகர் என்று பெயர் கூறப்பட்டது. மதுரையில் இருந்த இளவேட்டனார் என்னும் புலவர் அறுவை வாணிகம் செய்தார். ஆகையால் அவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்று பெயர் பெற்றார். அவர் இயற்றிய பன்னிரண்டு செய்யுட்கள் சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. (அகம், 56, 124,230, 254, 272, 302 குறும், 185. நற்றிணை 33, 157, 221, 334, புறம். 329)

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி உணவுக்குச் சுவை அளிப்பது உப்பு. ஆகையால் இது வெண்கல் அமிழ்தம் எனப்பட்டது. ஆதிகாலத்திலிருந்து உப்பு மனிதருக்கு உணவாகப் பயன்படுகின்றது. உணவுக்கு மட்டுமல்லாமல், ஊறு காய், கருவாடு (உப்புக் கண்டம்) முதலானவைக்கும் உப்பு வேண்டப்படுகின்றது. ஆகவே உப்பை எல்லா நாடுகளிலும் உண்டாக்கினார்கள். தமிழகத்திலும் உப்பு செய் பொருளாகவும் வாணிகப் பொருளாகவும் உணவுப் பொருளாகவும் இருந்து வருகின்றது.

நெய்தல் நிலமாகிய கடற்கரை தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்தபடியால் ஆங்காங்கே உப்பளங்கள் இருந்தன. ஆகையால் தமிழகத்துக்கு எக்காலத்திலும் உப்புப் பஞ்சம் ஏற்பட்ட தேயில்லை. உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவித்தார்கள். பாத்திகளில் பாய்ச்சப்பட்ட கடல் நீர் வெயிலில் ஆவியாகிப் போய் உப்பு பூக்கும். இதுவே கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு (நற் : 345 : 8) ஏர் உழாமல் உவர் நிலத்திலே உப்பு விளைவித்தபடியால் அவர்கள் ‘உவர்விளை உப்பின் உழாஅ உழவர்’ (நற். 331: 1) என்று கூறப்பட்டார்கள்.

உப்பளங்களில் உப்பு விளைந்த பிறகு உப்பைக் குவியல் குவியலாகக் குவிந்து வைத்தார்கள். பிறகு, உப்பை வாங்குவதற்கு வருகிற உப்பு வாணிகரை எதிர்பார்த்திருந்தார்கள்.

'உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஓகை உமணர் வருபதம் நோக்கி
கானல் இட்ட காவற் குப்பை'
(நற்.331 : 1-3)

(உவர் - உவர்நிலம், உப்பளம். உமணர் - உப்பு வாணிகர். கானல் கடற்கரை. குப்பை - குவியல்)

உமணர் (உப்பு வாணிகர்) மாட்டு வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் பெரிதும் பண்டமாற்று வாணிகம் நடந்தது. ஆகையால் காசு கொடுத்து வாங்காமல் பண்டங்களை மாற்றினார்கள். நெல்லுக்கு மாற்றிய உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் மனைவி மக்களொடு வந்து உப்பை வாங்கி கொண்டு குடும்பத்தோடு ஊர் ஊராக வண்டியை ஓட்டிக் கொண்டு போய் உப்பை விற்றார்கள்.

'தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும்'
(அகம், 183:1-5)

(தம்நாடு - உமணருடைய நாடு. பிறநாடு - (இங்கு) நெய்தல் நிலம். கொள்ளை சாற்றி - விலை கூறி. ஒழுகை - வண்டி. அவண் - அங்கே. ஒக்கல் - சுற்றம்.)

உமணர் உப்பு வண்டிகளை ஒட்டிக் கொண்டு கூட்டங்கூட்டமாகச் சென்றார்கள்.

'உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேண்புலம் படரும்
ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்
கணநிரை வாழ்க்கை’
(அகம், 390 : 1-4)

கடற்கரைக்கு அப்பாலுள்ள உள்நாடுகளுக்கும் மலைநாடுகளுக்கும் எருதுகள் உப்பு வண்டியை இழுத்துக் கொண்டு போயின.

'கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடைய நோன்தாள் பகடு
(புறம். 60:7-9)

(கழி - உப்பங்கழி. கல்நாடு - மலைநாடு. சாகாடு - வண்டி. ஆழ்ச்சி போக்கும் - பள்ளத்திலிருந்து மேட்டின்மேல் செல்லும். பகடு - எருது).

உமணர் ஒரே ஊரில் தங்காமல் ஊர்கள் தோறும் சென்றனர். அவர்கள் குடும்பத்தோடு நிலையா வாழ்க்கையை நடத்தினார்கள்.

'உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக்
கணங்கொள் உமணர்'
(நற்.138 : 1-3)

பாரமான வண்டியை இழுத்துக்கொண்டு எருதுகள் மேட்டில் ஏறியும் பள்ளத்தில் இறங்கியும் செல்லும் போது வண்டியின் அச்சு முறிந்து விடுவதும் உண்டு. அதன் பொருட்டு ஆயத்தமாகச் சேம அச்சுக் கொண்டு போனார்கள். (புறம். 102 :1-2) உமணர் பாதிரிப் பூவையும் அலரிப் பூவையும் தொடுத்துக் கட்டின பூமாலையைத் தலையில் அணிந்து காலில் செருப்புத் தொடுத்து கையில் தடி ஏந்திச் சென்றார்கள்.

'அத்தப் பாதிரித் தூய்த்தலைப் புதுவீ
எரியிதழ் அலரியொடு இடைபட விரைஇ
வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணித்
தோல்புதைச் சீற்றடிக் கோலுடை யுமணர்.'
(அகம், 191 : 1-4)

உமணர் ஆங்காங்கே வழியில் தங்கி உணவு சமைத்து உண்டு ஓய்வு கொண்டு மீண்டும் பிரயாணஞ் செய்தார்கள் (அகம், 159 : 1-4). சில இடங்களில் சமைக்கவும் உண்ணவும் நீர் கிடைக்காது. அவ்விடங்களை அகழ்ந்து குழி உண்டாக்கிச் சுரக்கும் நீரை உண்டனர் (அகம், 295 : 9 : 14) தீக்குச்சி இல்லாத காலமாகையால் அவர்கள் தீக்கடை கோலினால் தீயுண்டாக்கிச் சோறு சமைத்தார்கள் (அகம், 169 : 5-8).

போகிற வழியில் தங்கி ஊருக்குள் சென்று உப்பு விற்றார்கள். உமண ஆடவர் ஊர்க்குள் சென்று உப்பு விற்பதில்லை. உமணப் பெண்கள் உப்பை ஊர்க்குள் கொண்டு போய் விற்றார்கள். அவர்கள் காசுக்கு உப்பு விற்கவில்லை. உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

'நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளீரோ வெனச் சேரிதொறும் நுவலும்'
(அகம், 390 : 8-9)

(சேரி - தெரு. நுவலும் - சொல்லும்)

'கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எவ்வளை தெளிர்ப்ப வீசி,
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலைமாறு கூறலின்'
(அகம், 140:5-8)

ஆறுகளும் கால்வாய்களும் உள்ள ஊர்களில் படகுகளில் உப்பை ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றி அந்த நெல்லைப் படகில் ஏற்றிக் கொண்டு போனார்கள் என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகின்றார்.

'கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துத்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி
பணை நிலைப் புரவியின் அணைமுதற்பிணிக்கும்
கழிசூழ் படப்பை’
(பட்டினப்பாலை, 27-32)

மாட்டுவண்டிகள் போகமுடியாத பாறைகளும் மலைகளும் மேடுகளும் உள்ள ஊர்களுக்கு உப்பு மூட்டைகளைக் கழுதை மேல் ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து நல்ல நிமித்தம் பார்த்து வீரர்களையும் அழைத்துக் கொண்டு மலைநாடுகளுக்குப் போனார்கள். கொள்ளைக்காரர் இடைவழியில் வந்து கொள்ளையிடுவதும் உண்டு. ஆகையினால் அவர்கள் தங்களுடன் வீரர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்.

'அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப்
படையமைத் தெழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு தைத்த கற்பிறழ் இயவு'⁠
(அகம். 207:1-6)

(புள் ஒர்த்து - நன்னிமித்தம் பார்த்து. படை அமைத்து வீரர்களை அமைத்து. கல் பிறழ் இயவு - பாறைக் கற்கள் உள்ள வழி)

'பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர்’
(அகம், 89:12-13)

உப்பு மூட்டைகள் மட்டுமல்லாமல் மிளகு முதலான வேறு பண்டங்களைச் சுமந்துகொண்டு போகக் கழுதைகளையும் அக்காலத்தில் பயன்படுத்தினார்கள்.

'இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறநிறைப் பண்டத்துப் பொறையசாக் களைந்து'
(அகம், 343 :11-13)

உப்பு உற்பத்தியும் உப்பு வாணிகமும் செம்மையாக நடந்தன. தமிழகத்துக்கு உப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாக வில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே ஏற்றுமதி செய்யவும் இல்லை. தமிழகத்திலே உண்டாக்கப்பட்டுத் தமிழகத்திலேயே செலவு செய்யப்பட்டது.

வளை (சங்கு)

சங்குக்குத் தமிழ்ப் பெயர் வளை என்பது. தமிழகத்தின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் வளை அதிகமாகக் கிடைத்தது. சங்குகளில் இடம்புரிச் சங்கு என்றும் வலம்புரிச் சங்கு என்றும் இருவகையுண்டு. வலம்புரிச் சங்கு கிடைப்பது அருமை. ஆகையால் வலம்புரிச் சங்குக்கு விலையதிகம். சங்குகளை வளைகளாக அறுத்து வளையல் செய்தார்கள். அக்காலத்துத் தமிழ் மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்தார்கள். கண்ணாடி வளையல் அணிவது அக்காலத்து வழக்கம் அன்று. சங்கு வளையணிவது மங்கலமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் வாழ்ந்த அரச குமாரிகள் முதல் குடில்களில் வாழ்ந்த ஏழைமகள் வரையில் எல்லோரும் அக்காலத்தில் சங்கு வளைகளை அணிந்தார்கள். ஆகவே வளைகளை (சங்குகளை) வளையல்களாக அறுத்து வளையல் உண்டாக்கும் தொழில் அக்காலத்தில் சிறப்பாக நடந்தது. கடல்களிலிருந்து சங்குகள் எடுக்கப்பட்டன.

கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்த போது, சங்கு முழங்கி ஊருக்குத் தெரிவித்தார்கள்.

‘இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை'
(அகம். 350:11-13)

(வலம்புரி – வலம்புரிச் சங்கு. பரதவர் – கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள். கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில். பணிலம் ஆர்ப்ப - சங்க முழங்க)

கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச் சங்குகள், இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால் அறுத்து அரத்தினால் அராவி அழகான வளையல்களைச் செய்தார்கள்.

'வல்லோன்
வாளரம் பொருத கோணேர் எல்வளை’
(நற்றிணை, 77 : 8-9)

வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக்கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் தொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் இத்தொழில் கூறப்படுகின்றது. அரம்போழ் அவ்வளை (ஐங்குறு நூறு, நெய்தல் 106, 'கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை' (ஐங்குறு, வளைபத்து 48) 'கோடீர் எல்வளை’ (ஐங்குறு, வளைபத்து) 'கோடீர் இலங்குவளை' (குறும். 31 : 5) (கோடு - சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர்.

'வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து
வளைகளைத் தொழிந்த கொழுந்து'
(அகம், 24: 1-2)

வேளாப் பார்ப்பான் என்பதன் பொருள் வேள்வி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது விசுவப் பிராமணர். சங்குகளை வளையாக அறுக்கும் தொழிலும் சங்கு வகைகளை விற்கும் தொழிலும் அக்காலத்தில் சிறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில் சங்கறுக்கும் தொழில் நடந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழில் நடந்தது. 'அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்' (சிலம்பு 5-47) சோழ நாட்டு வஞ்சிமா நகரத்தில்.

'இலங்கரம், பொரூஉம் வெள்வளை போழ்நரோடு
இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்'
(மணிமே. 28 : 44-45)

இருந்தன.

சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிகமாகக் கருதினார்கள். அன்றியும் அது மங்கலமாகவும் கருதப்பட்டது. கைம் பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்தார்கள். 'அணி வளை முன்கை ஆயிழை மடந்தை' (அகம், 361 : 4) 'சின்னிரை வால் வளைக் குறுமகள்' (குறும். 189-6) 'வளைக்கை விறலி' (புறம், 135 : 4) 'வல்லோன் வாளரம் பொருதகோணேர் எல்வளை அகன்தொடி செறிந்த முன்கை' (நற். 77 : 8-10) என்றெல்லாம் சங்க நூல்களில் அக்காலத்து மகளிர் வளையணிந்திருந்தது கூறப்படுகின்றன. சொக்கப் பெருமான் வளையல் விற்றதாகத் திருவிளையாடற் புராணத்தில் (வளையல் விற்ற படலம்) கூறப்படுகின்றது. இடம் புரிச் சங்கினால் செய்த வளையல்களைச் சாதாரண நிலையில் உள்ள பெண்கள் அணிந்தார்கள். வலம்புரிச் சங்குகள் விலையதிகமானபடியால் செல்வச் சீமாட்டிகளும் இராணிகளும் அணிந்தார்கள். செல்வ மகளிர் பொற்றோடு (பொன் வளையல்) அணிந்து அதனுடன் வலம்புரிச் சங்கு வளையலையும் அணிந்தார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கைகளில் தங்க வளையல்களை அணிந்திருந்ததோடு வலம்புரிச்சங்கு வளையலையும் அணிந்திருந்தாள்.

'பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து'
(நெடுநெல்வாடை, 141-142)

என்று நெடுநெல்வாடை கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே பேர் போன செல்வச் சீமானாக இருந்த மாநாய்கன் மகளான கண்ணகியும் வலம்புரிச் சங்கு அணிந்திருந்தாள். மதுரையில் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கண்ணகி தன் கைகளில் அணிந்திருந்த சங்கு வளையைக் கொற்றவைக் கோயிலின் முன்பு தகர்த்து உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. 'கொற்றவை வாயிலில் பொற்றொடீ தகர்த்து' (கட்டுரைக் காதை, 181) பொற்றொடி - பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உரை)

மணமகன், தான் மணக்க இருக்கும் மணமக்களுக்குச் சங்குவளை கொடுப்பது அக்காலத்து வழக்கம். சங்குவளை அணியும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பாரதநாடு முழுவதிலும் அக்காலத்தில் இருந்தது. இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னே சிந்துவெளியில் இருந்த ஹரப்பா நகரத்துத் திராவிட நாகரிக மகளிரும் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்பது அங்கு அகழ்ந்தெடுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் சங்கு வளைகளும் இருந்ததனால் அறிகிறோம்.[2] கொற்கை காவிரிப் பூம்பட்டினம் உறையூர் முதலான ஊர்களில் நிலத்தை அகழ்ந்தெடுத்த போது அங்கிருந்து கிடைத்த பழம் பொருள்களுடன் உடைந்து போன சங்கு வளையல் துண்டுகளும் கிடைத்தன. இதனால், சங்கச் செய்யுட்களில் கூறப்படுகிற அக்காலத்து மகளிர் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்னும் செய்தி வலியுறுகின்றது.

சங்கு முழங்குவது மங்கலமாகக் கருதப்பட்டது. கோயில்களிலும் அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளிலே காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசனைத் துயிலெழுப்பினார்கள். அரண்மனைகளில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை,

'தூக்கணங் குரீஇத் தூங்கு கூடேய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன் றினும்'
(புறம்.225:11-14)

என்றும்,

'மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால் வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்ப
(சிலம்பு, 14:12 - 14)

என்றும் கூறுவதனால் அறிகின்றோம். (கோயில் - அரண்மனை)

பற்பல நூற்றாண்டுகளாக மகளிர் சங்கு வளைகளை அணிந்து வந்த வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல், முஸ்லீம் தொடர்பு ஏற்பட்ட பிறகு கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே பழைய சங்க வளை அணியும் வழக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று.

சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும் தொழிலும் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழிலும் வளையல் விற்கும் வாணிகமும் மகளிர் வளையல் அணிந்த வழக்கமும் இருந்தன. காதுகளில் சங்குக் குழையணிவது விரல்களில் சங்கு மோதிரம் அணிவதும் கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது.

முத்து

தமிழ்நாட்டுக் கடலிலே முத்து உண்டாயிற்று. கடலிலே உண்டாகிற முத்துச் சிப்பி என்னும் ஒருவகைக் கிளிஞ்சிலில் முத்து உண்டாயிற்று. முக்கியமாக ஆறுகள் கடலில் கலக்கிற புகர் முகங்களிலேயே முத்துச் சிப்பிகள் அதிகமாக உண்டாயின. பாண்டிநாட்டு முத்து பேர் போனது. 'தென் கடல் பவ்வத்து முத்து' என்று புகழப்படுகின்றது.

முத்து நவரத்தினங்களில் ஒன்றாக மதிக்கப்பட்டது. ஆகவே அது விலை மதிப்புள்ளது. அரசர்கள் ‘ஏகவடம்' என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். ஏகவடம் அரசர்களுக்குரிய அடையாள அணிகளில் ஒன்று. செல்வர் வீட்டுப் பெண்களும் அரச குமாரிகளும் இராணிகளும் முத்து மாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர். தமிழ்நாட்டுக்கு வந்த யவன வாணிகர் இங்கிருந்து வாங்கிக் கொண்டு போன பொருள்களில் முத்தும் ஒரு பொருளாக இருந்தது.

தமிழகத்துக்கு முத்துக்களில் பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றிருந்தது. கொற்கைக் குடாக் கடலில் விளைந்த முத்து சங்கச் செய்யுள்களில் புகழப்படுகின்றது. 'முத்தப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை' (நற். 23-6). 'கொற்கையன் பெருந்துறை முத்து' (அகம், 27:9) சங்க காலத்தில் பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போயிற்று. அக்கடல் உள்நாட்டில் ஐந்து மைல் ஊடுருவிக் குடாக் கடலாக அமைந்திருந்தது. அக்காலத்தில் தாமிர பரணியாறு கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. அந்தப் புகர் முகத்திலே முத்துச் சிப்பிகளும், இடம்புரி, வலம்புரிச் சங்குகளும் உண்டாயின. ஆறுகள் கடலில் கலக்கிற புகார் முகங்களிலே முத்துக்களும் சங்குகளும் அதிகமாக உண்டாயின. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் கடலில் விழுந்த புகர் முகத்திலே உண்டான முத்தைத்தான் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் தாம்ரபர்ணிகம் என்று கூறுகின்றது. கொற்கைக் கடல் ஓரத்தில் தாமிரபரணி ஆறு கடலில் கலந்த இடத்தில் கொற்கைப் பட்டினம் இருந்தது. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும் சங்குகளும் அதிகமாகக் கிடைத்தபடியாலும் துறைமுகப் பட்டினமாக இருந்தபடியாலும் கொற்கைப் பட்டினத்தில் பாண்டியனுடைய இளவரசர்கள் தங்கி வாழ்ந்தார்கள்.

முத்துச் சிப்பிகளையும் சங்குகளையும் மூழ்கி எடுக்கும் போது அச்செய்திச் சங்கு முழங்கித் தெரிவிக்கப்பட்டது.

'சீருடைய விழுச்சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
இலங்கு வளை யிருஞ்சேரிக்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப் பொருந'
(மதுரைக். 134 -138)

என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் கூறப்படுகின்றான்.

கொற்கைக் கடலில் மீன் பிடிக்கும் போது மீனுடன் முத்துச்சிப்பியும் கிடைத்தனவாம். மீன் பிடிப்போர் அச்சிப்பிகளைக் கொண்டு போய்க் கள்ளுக் கடையில் கொடுத்து அதற்கு மாறாகக் கள்ளை வாங்கியுண்டனர்.

‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை'
(அகம், 296:8-10)

பழயர் மகளிர் கொற்கைக் கடலில் கடல் தெய்வத்தை வணங்கிய போது முத்தையும் வலம்புரிச் சங்கையும் கடலில் இட்டு வணங்கினராம்.

'பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழையணிப் பொலிந்த கோடேந்தல்குல்
பழையர் மகளிர் பனித்துறை பரவ’
(அகம். 201: 4-7)

ஒருவன் குதிரை மேல் அமர்ந்து கடற்கரையோரமாகச் சென்ற போது குதிரையின் குளம்புகளில் முத்துக்கள் தட்டுப் பட்டனவாம்.

'இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை’
(அகம்.130:9-11)

உப்பு வாணிகப் பெண்கள் கொற்கைக் கடற்கரைக்கு வந்து உப்பு வாங்கின பொது அவர்கள் வளர்த்த குரங்குகளும் அவர்களின் சிறுவர்களும் கிளிஞ்சில்களின் உள்ளே முத்துக்களையிட்டுக் கிலி கிலியாடினார்களாம்!

'நோன்பகட் டுமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளம்பூம் புதல்வரொடு கிலி கிலி யாடும்
தத்துநீர் வரைப்பிற் கொற்கை'
(சிறுபாண், 55-62)

இதிலிருந்து கொற்கைக் குடாக் கடலில் முத்துக்கள் மலிந்திருந்தன என்பது தெரிகின்றது.

மகளிர் கால்களில் அணிகிற சிலம்பு என்னும் அணியின் உள்ளே சிறுசிறு கற்களைப் பரல் கற்களாக இடுவது வழக்கம். கொற்கைக் கடலில் முத்துக்கள் அதிகமாகக் கிடைத்தபடியால் பாண்டிய அரசருடைய அரச குமாரிகள் அணிந்த சிலம்புகளிலே முத்துக்களைப் பரலாக இட்டிருந்தனர். ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமா தேவியின் சிலம்பினுள்ளே முத்துக்கள் பரலாக இடப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. (வழக்குரை காதை 69)

'தாம்ரபர்ணிகம்' என்றும் முத்தை அர்த்தசாஸ்திரம் கூறுவது போலவே பாண்டிய கவாடகம் என்னும் முத்தையும் கூறுகின்றது. இந்தப் பெயரே இது பாண்டி நாட்டில் உண்டானது என்பதைத் தெரிவிக்கின்றது.

சேர நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய முசிறிப் பட்டினத்திலும் முத்துக்கள் கிடைத்தன. பேர் போன பெரியாறு முசிறிக்கு அருகில் கடலில் கலக்கிற இடத்தில் முத்துக்கள் உண்டாயின. அந்த முத்துக்கள் முசிறியின் ஓர் இடமாகிய பந்தர் என்னும் இடத்தில் விற்கப்பட்டன என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது. பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் (பதிற்று 8ஆம் பத்து 4 ஆம் செய்யுள்) 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுளில் பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் தெண்கடல் முத்தம் என்று கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். இதன் பொருள் அங்காடி என்பது.

கவ்டல்லியரின் அர்த்தசாத்திரம் சேர நாட்டு முத்தையுங் கூறுகின்றது. அந்த முத்தை அர்த்தசாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பெரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் ஒரு பெயர் உண்டு. பெரியாறாகிய சூர்ணியாறு கடலில் கலக்கும் புகர் முகத்தில் உண்டானபடியால் அந்த முத்து சௌர்ணேயம் என்று கூறப்பட்டது. சூர்ணியாற்றில் உண்டாவது சௌர்ணேயம். (தாமிரபர்ணியாற்றில் உண்டான முத்து தாம்ரபர்ண்ணியம் என்று கூறப்பட்டது போல) சௌர்ணேயம் என்றும் பெயர் மருவி கௌர்ணேயம் என்றாயிற்று.[3]

காவிரி ஆறு கடலில் கலக்கிற இடமாகிய காவிரிப்பூம்பட்டினத்திலும் அந்தக் காலத்தில் முத்தும் சங்கும் உண்டாயிருக்கவேண்டும். ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் முத்துச் சிப்பியும் சங்கும் உண்டாவது மரபு. ஆனால், காவிரி ஆற்று முகத்துவாரத்தில் முத்தும் சங்கும் உண்டாயிற்றா என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை.

யானைக் கோடு (தந்தம்)

மலைகளிலும் மலையைச் சேர்ந்த காடுகளிலும் யானைகள் இருந்தன. கொங்கு நாட்டைச் சேர்ந்த யானை மலைக்காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தன. கொங்கு நாட்டு யானை மலைகளும் அதனைச் சேர்ந்த காடுகளும் அக்காலத்தில் உம்பற்காடு (உம்பல் யானை) என்று பெயர் பெற்றிருந்தன. யானைகளைப் பிடித்துப் பழக்கி அவைகளைப் போர்க்களங்களில் போர்செய்வதற்குப் பயன்படுத்தினார்கள். அக்காலத்து அரசர்கள் வைத்திருந்த நான்கு வகையான சேனைகளில் யானைப் படையும் ஒன்று. குட்டுவன் என்னும் சேர அரசன் மிகப் பெரிய யானைப் படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்று பெயர் பெற்றான். (யானைச் செல் - யானைக் கூட்டம்) கொங்கு நாட்டை அக்காலத்தில் அரசாண்ட பொறையர் என்னும் சேர அரசர் யானைகளை அதிகமாக வைத்திருந்தார்கள். அவர்களுடைய யானைகள் பசு மந்தைகளைப் போலக் காணப்பட்டனவாம்.

அக்காலத்தில் குறிஞ்சி (மலை)களில் வாழ்ந்த குறவர்கள் யானைகளை வேட்டையாடிக் கொன்று அவற்றின் கோடுகளைச் (தந்தங்களை) சேர்த்து வைத்தார்கள். அவர்களுக்குச் சோற்றுப் பஞ்சம் வந்த காலத்தில் தந்தங்களை விற்று உணவு வாங்கி உண்டனர். யானைகளை வேட்டையாடிக் கொன்றார்கள்.

புலியொடு போர்செய்து புண்பட்டு இளைத்துப்போன யானையைக் கானவர் அம்புஎய்து கொன்று அதன் கோடுகளைக் கைக் கொண்டார்கள்.

'புலியொடு பொறாத புண்கூர் யானை
நற்கோடு நயந்த அன்பில் கானவர்
விற்சுழிப்பட்ட நாமப் பூசல்'
(நற்றிணை, 65:5-7)

கொல்லிமலையில் இருந்த குறவர் உணவு கிடைக்காமல் பசித்திருந்தபோது தங்களிடமிருந்த யானைக் கோடுகளை விற்று உணவு அருந்தினார்கள்.

'காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்துண்ணும்
வவ்வில் ஒரி கொல்லிக் குடவரை'
(குறுந், 100 : 3-5)

வேங்கடமலையில் வாழ்ந்தவர் ஒன்று சேர்ந்து யானையை வேட்டையாடிக் கொன்று அதன் கோடுகளைக் கொண்டு போய் மதுக்கடையில் கொடுத்து மது அருந்தினார்கள். மதுவை நெல்லுக்கு மாற்றுவது வழக்கம். இவர்கள் நெல்லுக்குப் பதிலாக யானைக் கோட்டைக் கொடுத்தனர்.

'வரிமாண் நோன் ஞான் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்
... ... .. ... ... .. ... ... .. ... ... .. ... ... ..
விழவுடை விழுச்சீர் வேங்கடம்’
(அகம், 61 : 7 -13)

மலைவாழ் குறவர்கள் அந்தந்த நாட்டு அரசருக்குப் பண்டங்களைக் காணிக்கை செலுத்தும்போது யானைத் தந்தங்களையும் கையுறை யாகக் கொடுத்தார்கள். சேரன் செங்குட்டுவன், பெரியாறு, மலையிலிருந்து விழுகிற இடத்தில் மலையடிவாரத்தில் வழக்கமாகச் சென்று தங்கி வேனிற் காலத்தைக் கழிப்பது வழக்கம். அவன் மலையடி வாரத்துக்கு வரும்போது மலையில் வாழுங் குறவர்கள் அவனுக்குக் காணிக்கைச் செலுத்தினார்கள். மலைகளில் கிடைக்கும் பொருள்களாகிய சந்தனக் கட்டை, அகிற்கட்டை, தேன், பலாப்பழங்கள், மிளகு முதலிய பொருள்களையும் யானைத் தந்தங்களையும் அவர்கள் கொண்டுபோய்க் கொடுத்தார்கள் என்று சிலப்பதிகாரம் (25:37) கூறுகின்றது.

யானைத் தந்தங்களினால் பலவகையான பொருள்கள் செய்யப்பட்டன. அயிரைமலைக் கொற்றவைக்குத் தந்தத்தினால் செய்த கட்டில் (ஆசனம்) இருந்தது (பதிற்றுப் பத்து 8 ஆம் பத்து 9).

யானைக் கோட்டை ஈர்வாளினால் அறுத்தும் கடைந்தும் பொருள்களைச் செய்தார்கள். அந்தத் தொழில் மதுரையில் நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வேதினத் துப்பவும் கோடு கடை தொழிலவும் (சிலம்பு 14 : 176) என்று கூறுகின்றது. அரும்பதவுரையாசிரியர் இதற்கு வேதினத் துப்பவும் ஈர்வாளால் வலியப் பெற்றனவும் என்றது ஈருங்கருவியாற் பண்ணப்பட்டன. கோடு தந்தம் என்று உரை எழுதுகிறார். சீப்பு, சிமிழ் முதலான பொருள்கள் தந்தத்தினால் செய்யப்பட்டன.

யானைக் கோடுகளை வெளியூர் வாணிகர் வாங்கிக் கொண்டு போனார்கள். யவனர்களும் மற்ற பொருள்களோடு யானைக் கோடுகளையும் வாங்கிக்கொண்டு போனார்கள். சங்க காலத்தில் யானைக்கோடு வாணிகப் பொருள்களில் ஒன்றாக இருந்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யுண்டு. யானை இறந்தால் அதன் தந்தங்களும் எலும்புகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டபடியால் இறந்தும் ஆயிரம் பொன் என்று கூறப்பட்டது.

யானைத் தந்தங்களும் அக்காலத்தில் முக்கியமான வாணிகப் பொருளாக இருந்தன.

நீலக்கல்

கொங்கு நாட்டிலே சங்க காலத்தில் விலையுயர்ந்த மணிக் கற்கள் கிடைத்தன. சங்கச் செய்யுட்களில் அந்த மணிகள் கூறப்படுகின்றன. கொங்கு நாட்டில் கதிர்மணி கிடைத்ததைக் கபிலர் கூறுகின்றார்.

'இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடு'
(7 ஆம் பத்து, 6 : 19-20)

அரிசில் கிழாரும் அங்குக் கிடைத்த திருமணியைக் கூறுகின்றார். உழவர் ஏர் உழுத பொழுது அந்த மணிகள் வெளிப் பட்டனவாம்.

‘கருவி வானந் தண்டளி சொரிந்தெனாப்
பல்விதை யுழவர் சில்லே ராளர்
பனித்துறைப் பகன்றறைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடு'
(8ஆம் பத்து, 6 : 10-15)

கொங்கு நாடு, சங்க காலத்தில், வடக்கே மைசூர் வரையில் இருந்தது. கன்னட நாட்டில் பாய்கிற காவிரியாறு வரையில் கொங்கு நாடு அக் காலத்தில் பரவியிருக்கிறது. அந்த வடகொங்கு நாட்டிலே புன்னாடு என்னும் ஒரு பகுதியில் அக்காலத்தில் கோமேதகச் சுரங்கம் இருந்தது. புன்னாட்டின் தலைநகரம் கட்டூர். அது கப்பணி ஆற்றின் கரை மேல் இருந்தது. கப்பணி ஆறு, காவிரியில் கலக்கிற உபநதிகளில் ஒன்று. கப்பணி ஆற்றின் கரைமேல் இருந்த கட்டூர் பிற்காலத்தில் கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது பிற்காலத்தில் கிட்டிபுரம் என்றும் பிறகு தீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது. கட்டூர் அல்லது கிட்டூரைத் தலைநகரமாகக் கொண்ட புன்னாட்டை அக்காலத்தில் குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.

நவமணிகளில் கோமேதகம் என்பது ஒருவகை. கோமேதங்களில் பல வகையுண்டு. நீலம், பச்சை, மஞ்சள், பழுப்பு நிறம் முதலான வகைகள் கோமேதகத்தில் உண்டு. இவைகளில் நீல நிறமான கோமேதகத்தை உரோமர் ஆக்வாமரினான் (Aqua Marine) என்று கூறினார்கள். அந்த நீலக்கல் கடல் நீர் போன்ற நிறம் உள்ளது. அது அக்காலத்தில் புன்னாட்டைத் தவிர வேறெங்கும் கிடைக்கவில்லை.

ஆகவே யவனக் கப்பல் வாணிகர் தமிழகத்துக்கு வந்து அவற்றை வாங்கிக் கொண்டு போனார்கள்.

புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் ஒன்று அக்காலத்தில் இருந்தது. அந்த நீலக்கற்கள் அக்காலத்தில் உலகத்திலே வேறெங்கும் கிடைக்காத அழகான கற்கள். புன்னாட்டு நீலக்கற்களை யவன வாணிகர் வாங்கிக் கொண்டு போய் ரோமாபுரியில் விற்றார்கள். ரோமாபுரிச் சீமாட்டிகள் இந்த நீலக்கற்களைப் பெரிதும் விரும்பினார்கள். ரோம் தேசத்தார் இந்த நீலக்கற்களை ஆக்வா மரினா (Aqua Marina) என்று கூறினார்கள். கடல் நீரின் நிறம் போல இருந்தபடியால் இப்பெயர் கூறப்பட்டது. யவனர் இந்த நீலக்கல்சுரங்கத்தைப் பற்றியும் நீலக்கற்களைப் பற்றியும் எழுதியுள்ளனர். புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் இருந்ததைப் பிளினி என்னும் யவனர் எழுதியுள்ளார். யவனர், புன்னாட்டை பவ்ன்னாட என்று கூறினார்கள். புன்னாடு உள்நாடு என்றும் அங்கு நீலக்கற்கள் கிடைத்தன என்றும் எழுதியுள்ளனர்.

புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் இருந்தபடியால் இந்நாட்டைக் கைப்பற்றிக் கொள்ள அந்நாட்டுக்கு அருகில் இருந்த துளுநாட்டு நன்னன் விரும்பினான். அவ்வாறே அவன் சிற்றரசனாகிய புன்னாட்டு அரசன் மேல் போருக்குச் சென்றான். அதனை அறிந்த சேரநாட்டுக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் தன்னுடைய சேனைத் தலைவனாகிய ஆய் எயினன் தலைமையில் சேனையை அனுப்பிப் புன்னாட்டை நன்னன் கைப்பாற்றாதபடி தடுத்தான். இதைப் பரணர் கூறுகின்றார்:

‘பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகிற் பாழி யாங்கண்
அஞ்சலென்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பிற் மிஞிலியொடு தாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன்'
(அகம், 396:2-6)

கொங்குநாட்டிலே படியூரிலும் (சேலம் மாவட்டம்) வாணியம்பாடியிலும் (கோயம்புத்தூர் மாவட்டம்) கதிர்மணிகள் கிடைத்தன. இவைகளை யவனர் வந்து வாங்கிக் கொண்டுபோனார்கள்.

  1. 1. (M.E.R. No 75 of 1910)
  2. 2. p.86 (Ancient India No 3 Jan 1947)
  3. 3. (சேரநாட்டு முத்து மயிலை சீனி. வேங்கடசாமி, பக்கம் 493 498 தெ. பொ. மீ. மணிவிழா மலர்)