உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/009

விக்கிமூலம் இலிருந்து

 

8. இலங்கைத் துறைமுகங்கள்

மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)

மணிபல்லவம் என்றும் ஜம்புகொல பட்டினம் என்றும் பெயர் பெற்ற மிகப் பழைய துறைமுகப்பட்டினம் இலங்கையின் வடகோடியில் இருந்தது. இது இப்போதைய யாழ்ப்பாணத்துக்கு வடக்கே இருந்த ஒரு சிறு தீவு. மணிமேகலைக் காவியம் இதை மணிபல்லவம் என்றும் இலங்கைப் பாலிமொழி நூல்கள் ஐம்புகொலபட்டினம் என்றும் கூறுகின்றன. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. அக்காலத்தில் பேர் போன துறைமுகப்பட்டினமாக விளங்கிய இங்கு வாணிகப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாக இல்லை. கப்பல் போக்குவரத்துக்குரிய துறையாகவும், தமிழ் நாட்டிலிருந்து கிழக்கே நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கிக் குடிநீர் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருந்தது. இத்துறைமுகத்திலிருந்து தெற்கே இலங்கையின் அக்காலத்துத் தலைநகரமான அநுராதபுரத்துக்கு (அநுரைக்கு) நெடுஞ்சாலையிருந்தது.

இலங்கையையரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் (கி.மு. 247- 97) என்பவர் இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட அசோக சக்ரவர்த்தியிடம் தூதுக் குழுவை அனுப்பின போது அத்தூதுக் குழு மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து கப்பலேறிப் புறப்பட்டது. புறப்பட்டு ஏழுநாள் வடக்கே கடற்பிரயாணஞ் செய்து தாமலித்தி துறைமுகத்தை யடைந்து அங்கிருந்து கங்கை யாற்றில் புகுந்து பாடலிபுரத்துக்குச் சென்று அசோக சக்கரவர்த்தியைக் கண்டது (மகா வம்சம் XI: 23-24). பிறகு, மீண்டும் அதே வழியாகக் கப்பலில் பிரயாணஞ் செய்து ஜம்புகொல பட்டினத்தை யடைந்தது (மகாவம்சம் XI : 33)

அசோக சக்கரவர்த்தி புத்த கயாவிலிருந்த போதிமரத்தின் கிளையை வெட்டிச் சங்கமித்திரையின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பின போது சங்கமித்திரையும் அவருடைய பரிவாரமும் போதி (அரச) மரக்கிளையுடன் மரக்கலம் ஏறி ஜம்புகொலப் பட்டினத்துக்கு வந்து இறங்கினார் (மகாவம்சம் XIX : 23), தேவனாம்பிரிய திஸ்ஸன் அமைச்சர்களுடனும் பரிவாரங்களோடும் ஜம்புகொல துறைக்கு அருகில் பன்னசாலை (பர்ண சாலை - ஓலைக் கொட்டகை) அமைத்துக் கொண்டு அங்குத் தங்கியிருந்து போதி மரக்கிளையையும் சங்கமித்திரையையும் வரவேற்றான். அவன் தங்கியிருந்த இடம் சமுத்த பன்னசாலை (சமுத்திர பர்ண சாலை) என்று பெயர் பெற்றது மகாவம்சம் XIX : 26) பிறகு அந்த அரசன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான் (மகாவம்சம் XIX : 27, 28). போதி மரக்கிளையுடன் அனுப்பப்பட்ட எட்டுப் போதிமரக் கன்றுகளில் ஒன்றை அவன் அந்த இடத்தில் நட்டான் (மகாவம்சம் XIX : 60). பிறகு இந்தப் போதிமரத்துக்குக் கீழே புத்தருடைய பாத பீடிகை யமைக்கப்பட்டது. இதற்கு மணி பல்லங்கம் (மணிப் பலகை, மணிப்பீடம்) என்று பெயர். மணிப் பல்லங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கிற்று என்று தோன்றுகின்றது. இந்தப் புத்த பீடிகையை மணிமேகலைக் காவியம், மணிப் பீடிகை என்றும் தரும பீடிகை என்றும் கூறுகின்றது.

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிபல்லவத்துறை இருந்தது. (மணிமேகலை 6 : 211-13). தமிழகத்திலிருந்து (சோழ நாடு பாண்டிய நாடு களிலிருந்து) கிழக்கே வெகு தூரத்திலிருந்த சாவக நாட்டுக்கு (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) வாணிகத்தின் பொருட்டுச் சென்ற தமிழக நாவிகர்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்குப் புத்தபாத பீடிகைக்கு எதிரில் இருந்த கோமுகி என்னும் ஏரியிலிருந்து குடிநீரைக் கப்பல்களில் எடுத்துக்கொண்டு பிறகு பிரயாணந் தொடங்கினார்கள்.

பாண்டி நாட்டுக் கப்பல் வாணிகர் சாவகத் தீவுகளுக்கு வாணிகத்தின் பொருட்டுக் கடலில் சென்ற போது இடைவழியில் மணிபல்லவத் துறையில் தங்கிச் சென்றார்கள் (மணி 14 : 79-84). கோவலன் மகள் மணிமேகலை பௌத்த மதத்தைச் சேர்ந்த பிறகு மணி பல்லவஞ் சென்று அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள் (மணி 25: 120 - 127). இலங்கையின் வட பகுதியாகிய இப்போதை யாழ்ப் பாண தேசம் அக்காலத்தில் நாக நாடு என்று பெயர் பெற்றிருந்தது. அந்த நாக நாட்டை அக்காலத்தில் அரசாண்ட வளைவாணன் என்னும் நாகுல மன்ன மகள் பீலிவளை என்பவள் மணிபல்லவத் துறையிலிருந்து புறப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்து கடற்கரைச் சோலையிலே தங்கியிருந்தபோது அப்பட்டினத்தில் இருந்த வடிவேற்கிள்ளி என்னும் சோழன் அவளுடன் உறவு கொண்டான். சில காலங்கழித்து அவள் தன்னுடைய ஊருக்குத் திரும்பிப் போனாள். அங்கு அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தையை மணிபல்லவத் துறையில் வந்து தங்கின கம்பலச் செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து அக்குழந்தையைச் சோழனிடம் சேர்க்கும்படி அனுப்பினாள். கம்பலச் செட்டி குழந்தையுடன் கப்பலில் புறப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தபோது இடைக்கடலில் கப்பல் கவிழ்ந்து குழந்தை இறந்து போயிற்று (மணி 25 : 178 - 192). சோழ நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற மணிமேகலை சாவக நாட்டு அரசன் புண்ணியராசனைக் கண்டு அவனோடு புறப்பட்டு மணிபல்லவத்துக்கு வந்து அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கினாள் (மணி 25 : 120 127). இலங்கையிலிருந்து சோழநாட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் வந்த பௌத்த பிக்குகள் ஜம்புகொல பட்டினத்திலிருந்து கப்பலேறி வந்தார்கள். இவ்வாறு எல்லாம் பழைய நூல்களில் மணி பல்லவ - ஜம்புகொல பட்டினம் கூறப்படுகின்றது.

மாதிட்டை

இது இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார் குடாக் கடலில் பாண்டி நாட்டுக்கு எதிர்க்கரையிலிருந்த பேர் போன பழைய துறைமுகப்பட்டினம். மாதிட்டை என்பது மகாதிட்டை என்றுங் கூறப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை யரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டியன் மகளை மணஞ்செய்து கொண்டான். அவனுடைய எழுநூறு தோழர்களும் பாண்டி நாட்டில் பெண் கொண்டு திருமணஞ் செய்து கொண்டார்கள். மணமகளிர் பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் சென்ற போது அவர்களும் அவர்களுடன் சென்ற பரிவாரங்களும் பதினெட்டு வகையான தொழில்களைச் செய்தவர்களின் குடும்பங்களும் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கிச் சென்றார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகாவம்சம் VII : 58) கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கை யரசாண்ட சோழ நாட்டுத் தமிழனாகிய ஏலேலன் (ஏலாரன்) மீது துட்டகமுனு என்னும் அரசன் இலங்கையில் போர் செய்த போது ஏலேலனுக்கு உதவியாகச் சோழ நாட்டிலிருந்து படை திரட்டிக் கொண்டுபோன பல்லுகன் என்னும் அரசன் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கினான். (மகாவம்சம் XXV : 80) வட்டகாமணி அரசன் (கி.மு. 44-29) இலங்கையை யரசாண்ட போது ஏழு தமிழ்நாட்டு வீரர்கள் படையெடுத்துச் சென்று இலங்கையில் போர் செய்தார்கள். அவர்கள் (கி.மு. 29) மாதிட்டைத் துறையில் இறங்கினார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகா. XXXIII : 39). அந்தத் தமிழர்கள் வட்டகாமணி அரசனை வென்று சிங்கள நாட்டைப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு.29-17) வரையில் அரசாண்டார்கள்.

மாதிட்டை பிற்காலத்தில் மாதோட்டம் என்று பெயர் கூறப்பட்டது. தேவாரத்தில் மாதோட்டம் என்று கூறப்படுகின்றது. மாதோட்டத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் உள்ள திருக்கேதீச்சுரத்தைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மாதிட்டையாகிய மாதோட்டம் மிகப் பழங்காலத்திலிருந்து முக்கியமான துறைமுகப்பட்டினமாக இருந்தது.