மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/008
7. தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்கள்
பாரத தேசத்தின் மேற்குக் கரையில் இருந்த பழைய காலத்துத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். அவை குடக்கடலின் (அரபிக் கடலின்) கரையில் இருந்தன. அக்காலத்தில் வடக்கே இருந்த பேர் போன துறைமுகம் மின்னகரம் என்பது. மின்னகரம் சிந்து நதி கடலில் சேரும் புகர் முகத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே புரோச் (Broach) என்னும் பாரிகச்சத் துறைமுகமும், சோபாரா 'சூரத்துத்' துறைமுகமும் இருந்தன. இந்தத் துறைமுகங்களில் அராபிய, யவன வாணிகர்கள் மேற்கிலிருந்து வந்து வாணிகம் செய்தார்கள். இந்தத் துறைமுகங்கள் அக்காலத்தில் அப்பகுதிகளை யரசாண்ட சதகர்ணி (சாதவாகன) அரசர்களுக்குரியவை. இந்தத் துறைமுகங்களைக் கைப்பற்றச் சாகர் என்னும் அரசர்கள் சதகர்ணி அரசர்களோடு அடிக்கடி போர் செய்து கொண்டிருந்தார்கள். இத்துறைமுகங்கள் சில காலம் சதகர்ணிகளுக்கும் சில காலம் சாகர்களுக்கும் உரியதாக இருந்தன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இவ்விதமாக இந்தத் துறைமுகப் பட்டினங்கள் ருவர் ஆட்சியிலும் மாறிக் கொண்டிருந்தன.
அக்காலத் தமிழகம், மேற்குக் கரையில் துளு நாட்டையும் (தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழகத்தின் மேற்குக் கரையில் வடகோடியிலிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினம் மங்களூர். மங்களூர் இப்போதும் சிறிய துறைமுகமாக இருக்கின்றது. ஆனால் சங்க காலத்தில் அது பெரிய பேர் போன துறைமுகமாக இருந்தது. துளு நாட்டை அக்காலத்தில் நன்னன் என்னும் பெயருள்ள வேள் அரசர்கள் அரசாண்டார்கள். மங்களூருக்குத் தெற்கே இருந்த துறைமுகப் பட்டினம் நறவு. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்திருந்தது.
நறவுக்குத் தெற்கே தொண்டி, பரக்கே, நீல்கண்ட முதலான துறைமுகங்கள் இருந்தன. இவை சேர நாட்டைச் சேர்ந்த துறைமுகங்கள். இத்துறைமுகங்களைப் பற்றிக் கூறுவோம்.
மங்களூர்
சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது துளுநாடு. துளுநாட்டை நன்னன் என்னும் பெயருள்ள அரசர் பரம்பரை ஆண்டு வந்தது. துளு நாட்டின் முக்கியத் துறைமுகமாக இருந்தது மங்களூர். நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தது. இப்போதும் மங்களூர் சிறு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. மங்களூரில் இருந்த மங்கலாதேவி கோயில் பேர் போனது. சிலப்பதிகாரம் மங்கலா தேவி கோயிலைக் கூறுகின்றது.
மங்களூர் துறைமுகத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். தாலமி என்னும் யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை மகனூர் என்று கூறியுள்ளார். மங்களூரைத்தான் இவர் இப்படிக் கூறியுள்ளார். பிளைனி என்னும் யவனர் இதை நைத்ரியஸ் (Nitrias) என்று கூறியுள்ளார். நைத்ரியஸ் என்பது நேத்திராவதியாறு. நேத்திராவதி ஆற்று முகத்துவாரத்தில் இருக்கிறபடியால் இதை நைத்ரியஸ் என்று கூறினார் போலும். மேலும், இவர் இந்த இடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்றும் கூறுகின்றார். மங்களூருக்கு மேற்கே கடலில் ஒரு சிறு தீவில் குறும்பர்கள் இருந்தனர். அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்திருந்தார்கள். அவர்கள் வாணிகத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். அதனால் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு யவனக் கப்பல்கள் வருவது தடைப்பட்டது. அப்போது, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் இளைய மகனான செங்குட்டுவன் தலைமையில் கடற்படையையனுப்பிக் கடற்கொள்ளைக் குறும்பரையடக்கினான். இச் செய்திகளைப் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளால் அறிகின்றோம்.
நறவு
துளு நாட்டிலே மங்களூர்த் துறைமுகத்துக்குத் தெற்கே நறவு என்னும் துறைமுகப் பட்டினம் இருந்தது. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்தது. துளுநாட்டு நன்னன் ஆட்சியில் இது இருந்தது. நறவு என்னும் சொல்லுக்கு கள், மது என்னும் பொருளும் உண்டு. ஆகையால் நறவு என்னும் பெயர் உள்ள இந்தப் பட்டினத்தைத் தமிழ்ப் புலவர் 'துவ்வா நறவு' (உண்ணப் படாத நறவு) என்று கூறினார். சேர மன்னர் துளு நாட்டு நன்னனைவென்று துளுநாட்டு ஆட்சியைக் கைக்கொண்ட போது, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (சேரன் செங்குட்டுவனுடைய மாற்றாந் தாயின் மகன்) இந்த நறவுத் துறைமுகப் பட்டினத்தில் இருந்தான் என்று பதிற்றுப் பத்து (6 ஆம் பத்து 10 ஆம் செய்யுள்) கூறுகின்றது. யவன நாட்டுக் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். அவர்கள் நறவை நவ்ரா என்று கூறினார்கள்.
தொண்டி
இது மேற்குக் கடற்கரையில் சேர நாட்டில் இருந்த தொண்டி. (பாண்டி நாட்டில், கிழக்குக் கடற்கரையிலும் ஒரு தொண்டி இருந்தது) ஐங்குறுநூற்றில் நெய்தற் பத்தைப் பாடிய அம்மூவனார் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய தொண்டி இந்தச் சேர நாட்டுத் தொண்டியாகும். இந்தத் தொண்டிப் பட்டினம் கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களின் ஆட்சியிலிருந்ததாகத் தெரிகின்றது. பொறையர் சேர அரசர்களின் இளைய வழியினர். கொங்கு நாட்டையரசாண்ட அவர்களுக்கு, உள் நாடாகிய கொங்கு நாட்டில் துறைமுகப்பட்டினம் இல்லாதபடியால், சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய தொண்டியை வைத்திருந்தனர் என்று தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாகிய (மாற்றாந்தாயின் மகன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வடக்கே தண்டாரணியத்திலிருந்து கொண்டு வந்த வருடைப் பசுக்களைத் தொண்டிக்குக் கொண்டு வந்து தானங் கொடுத்தான்.
'தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்து'(6ஆம் பத்து, பதிகம்)
சங்க காலத்திலிருந்த பொய்கையார் என்னும் புலவர் இந்தத் தொண்டியில் வாழ்ந்தவர் (புறம், 48). தொண்டித் துறைமுகத்தில் அக்காலத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தனர். தாலமி (Ptolemy) என்னும் யவனர் இந்தத் தொண்டியைத் தைண்டிஸ் (Tyndis) என்று கூறியுள்ளார். இங்கு நடந்த வாணிகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.
மாந்தை
சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய மாந்தை ‘துறை கெழு மாந்தை', 'கடல்கெழு மாந்தை' என்று கூறப்படுகின்றது. மாந்தை மரந்தை என்றும் கூறப்பட்டது. மாந்தைப் பட்டினத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொன் வயிரம் மணி முதலான பெருஞ்செல்வத்தை ஆம்பல் கணக்கில் (ஆம்பல் என்பது கணிதத்தில் பெருந் தொகையைக் குறிப்பது) புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார். இந்தப் பெருஞ்சேரலாதன் கடற்கொள்ளைக்கார குறும்பரை அடக்கினவன்.
வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குறைஇ அன்றவண்
நிலத்தினத் துறந்த நிதியம் (அகம், 127:3-10)
இந்தத் துறைமுகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.
முசிறித் துறைமுகம்
முசிறித் துறைமுகப்பட்டினம் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களில் பேர்போனது. அக்காலத்தில் அது கிழக்குக் கடற்கரையில் உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் போல மேற்குக் கரையில் உலகப் புகழ் பெற்றிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உண்டான பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. சேர நாட்டுத் தலைநகரமாக அக்காலத்தில் இருந்த வஞ்சி (கரூர்) நகரம், பேரியாறு கடலில் விழுந்த இடத்துக்கு அருகில் பெரியாற்றின் கரைமேல் இருந்தது. வஞ்சி நகரத்திலே சேரஅரசர் வாழ்ந்திருந்தார்கள். (இந்தச் சேரர் வஞ்சி, கொங்குநாட்டு வஞ்சி (கரூர்) அன்று. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி என்றும் கரூர் என்றும் பெயர் பெற்றிருந்த இரண்டு ஊர்கள் சங்க காலத்தில் இருந்தன). சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்து மேற்கே கடற் கரையில் பேரியாறு கடலில் சேர்ந்த புகர் முகத்தில் முசிறித் துறைமுகப் பட்டினம் இருந்தது.
முசிறித் துறைமுகத்தில் முக்கியமாக மிளகு ஏற்றுமதியாயிற்று. யவனக் கப்பல்கள் மிளகை வாங்குவதற்காகவே முசிறிக்கு வந்தன. யவனர் முசிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். வால்மீகி இரமாயணம் முசிறியை முரசி பதனம் என்று கூறுகின்றது. முசிறி வட மொழியில் முரசி ஆயிற்று. முசிறிக் கடலில் முத்துச் சிப்பிகளும் உண்டாயின. சிப்பியிலிருந்து முத்துக் கிடைத்தது. முசிறியில் உண்டான முத்துக்களைக் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பேரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் பெயருண்டு. சூர்ணியாற்றின் முகத்துவாரத்தில் உண்டானபடியால் இந்த முத்து, கௌர்ணெயம் என்று பெயர் பெற்றது. சௌர்ணெயம் என்னும் பெயர் திரிந்து கௌர்ணெயம் என்றாயிற்று. முசிறிக் கடலில் உண்டான முத்துக்கள் முசிறிப் பட்டினத்தின் ஒரு பகுதியான பந்தர் என்னும் இடத்தில் விற்கப் பட்டன. முசிறிப் பட்டினத்தைச் சேர்ந்த பந்தரில் முத்துக்களும் கொடுமணம் என்னும் இடத்தில் பொன் நகைகளும் விற்கப் பட்டன என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.
இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
கமழுந தாழைக் கானலம் பெருந்துறை(6 ஆம் பத்து5)
'கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்'
என்று 8ஆம் பத்து (4: 5-6) கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். பந்தர் என்றால் ஆவணம், கடைவீதி என்பது பொருள். அக்காலத்திலேயே அரபியர் இங்கு வந்து வாணிகஞ் செய்தார்கள்.
கி.மு. முதல் நூற்றாண்டில் தென்மேற்குப் பருவக்காற்றை ஹிப்பலஸ் என்னும் யவன மாலுமி அரபு வாணிகரிடமிருந்து அறிந்து கொண்டு, அக்காற்றின் உதவியினால் நடுக்கடலினூடே கப்பலை முசிறிக்கு ஓட்டிக் கொண்டு வந்தான். தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியை யவனர் அறிவதற்கு முன்பு கப்பல்களைக் கரையோரமாகச் செலுத்திக் கொண்டுவந்தனர். அதனால் நெடுங்காலம் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தது. பருவக் காற்றின் உதவி கண்டுபிடித்த பிறகு யவனக் கப்பல்கள் நேரே முசிறித் துறைமுகத்துக்கு விரைவாகவும் கால தாமதம் இல்லாமலும் வரத் தொடங்கின. இந்தப் பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்று பெயரை (அதைக் கண்டுபிடித்த ஹிப்பலஸ் என்பவனின் பெயரை) யவனர் சூட்டினார்கள்.
யவனக் கப்பல்கள் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலான பொருள்களைக் கொண்டு வந்து முசிறியில் இறக்குமதி செய்து இங்கிருந்து பல பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டு போயின. ஏற்றுமதியான பொருள்களில் முக்கியமானதும் அதிகமாக வும் இருந்தது மிளகுதான். யவனர் மிளகை ஏராளமாக ஏற்றுமதி செய்து கொண்டு போனார்கள். உரோம் நாட்டில் மிளகு பெரிதும் விரும்பி வாங்கப் பட்டது. யவனர் மிளகை ஆவலோடு விரும்பி வாங்கினபடியால் அதற்கு 'யவனப் பிரியா' என்ற பெயர் உண்டாயிற்று. பெரிய யவனக் கப்பல் வாணிகர் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனார்கள். தாயங் கண்ணனார், யவனர் பொன்னைக் கொடுத்து மிளகை ஏற்றிக் கொண்ட போனதைக் கூறுகிறார்.
'சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி' (அகம், 149: 8-11)
சுள்ளியம் (பேரியாறு - பெரியாறு. நன்கலம் - நல்ல மரக்கலம். கறி மிளகு)
முசிறித் துறைமுகம் ஆழமில்லாமல் இருந்தபடியால் யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் தூரத்திலேயே நின்றன. ஆகவே தோணிகளில் மிளகை ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் ஏற்றிவிட்டு அதன் விலையாகப் பொன்னை வாங்கிக் கொண்டு வந்தார்கள். பரணர் இதை இவ்வாறு கூறுகின்றார்.
'மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச் சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
முழங்குகடல் முழவின் முசிறி' (புறம்.343:3-10)
(மனைக்குவை இய - வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட, கறி மூடை - மிளகு மூட்டை. கலம்தந்த - யவன மரங்கலங்கள் கொண்டு வந்த. பொற்பரிசம் - விலையாகிய பொன்)
கிரேக்கரும் ரோமரும் மட்டும் மிளகை வாங்கவில்லை. அக்காலத்தில் உலகத்திலே எல்லா மக்களும் மிளகை வாங்கினார்கள். அக்காலத்தில் மிளகாய் கிடையாதபடியால் எல்லாரும் மிளகை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள். பாரத நாட்டு மக்களும் மிளகைப் பயன்படுத்தினார்கள். முசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு கொண்டு போகப்பட்டபடியால் மிளகுக்கு 'மரிசி' என்று பெயர் உண்டாயிற்று. முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் தான் மரிசி என்று மருவிற்று. உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இடையில் வெள்ளப் பெருக்கினால் அழிந்துவிட்டது. கிபி. 1341 இல் பெய்த பெருமழையின் காரணமாகப் பேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முசிறிப் பட்டினம் வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயிற்று. அதனால் அதனையடுத்தப் புதிய காயல்களும் துருத்திகளும் (மணல்தீவு) ஏற்பட்டன. முசிறித் துறைமுகம் முழுகிப் போனபடியால் அதற்கு அருகில் பிற்காலத்தில் கொச்சித் துறைமுகம் ஏற்பட்டது. குறிப்பு: முசிறிப் பட்டினத்துக்கு முயிரிக்கோடு என்றும் மகோதை என்றும் மகோதைப்பட்டினம் என்றும் சங்ககாலத்துக்குப் பிறகு பெயர் கூறப்பட்டது.
வைக்கரை
இது முசிறிக்குத் தெற்கேயிருந்த துறைமுகப்பட்டினம். கோட்டயத்துக்கு அருகிலே இருந்தது. இந்தத் துறைமுகத்தைத் தாலமி என்பவர் பக்கரே (Bakarei) என்று கூறுகிறார். இந்தத் துறைமுகத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.
மேல்கிந்த
தாலமி என்பவர் இதை மேல்கிந்த (Molkynda) என்றும், பெரிப்ளூஸ் என்னும் நூல் நெல்கிந்த என்றும், பிளைனி என்பவர் நியாசிந்த என்றும் கூறுகின்றனர். தமிழில் இதை என்ன பெயரிட்டுக் கூறினார்கள் என்பது தெரியவில்லை. இது வைக்கரைக்குத் தெற்கே இருந்தது. இதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.
விழிஞம்
இலங்கொன் (Elankon) என்னும் துறைமுகப்பட்டினத்தைத் தாலமி என்னும் யவனர் கூறியுள்ளார். இது ஆயோய் (ஆய்) நாட்டில் இருந்ததென்று கூறுகின்றார். ஆய் நாடு பாண்டிய நாட்டில் இருந்தது. பொதிகை மலையைச் சூழ்ந்திருந்தது ஆய்நாடு. ஆய் மன்னர் பாண்டியருக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். ஆய் நாட்டில் இருந்த துறைமுகத்தைத் தாலமி இலங்கொன் என்று குறிப்பிடுவது விழிஞம் என்னும் துறைமுகப்பட்டினமாகும். விழிஞம் மிகப் பழமையான சரித்திரப் புகழ் பெற்ற துறைமுகப்பட்டினம்.
✽✽✽