உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/011

விக்கிமூலம் இலிருந்து

8. விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு

மதுரை வட்டத்துச் சோழவந்தானுக்கு அருகில் விக்கிரமமங்கலம் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் நாக மலைத்தொடரைச் சார்ந்த ‘உண்டான் கல்’ என்னுமிடத்தில் சிறு குன்று இருக்கிறது. இந்தக் குன்றிலே தெற்கு நோக்கிய குகை ஒன்று இருக்கிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகையின் வாயிற்புறம், உட்புறம் குறுகிச் சரிவாகவும் இருக்கிறது. குகையின் உட்புறத்தில் பாறைச் சுவரின் ஓரமாக இரு பக்கத்திலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் நான்கு படுக்கைகளும்; இன்னொரு பக்கத்தில் எட்டுப் படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தப் படுக்கைகளுக்குத் தலையணை அமைப்பு இல்லை. இந்தப் படுக்கைகளில் மூன்று படுக்கைகளின் தலைப்பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

1926 ஆம் ஆண்டில் இங்குள்ள படுக்கைகளும், பிராமி எழுத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. சென்னை எபிகிராபி இலாகாவில் 1926- 27 ஆம் ஆண்டு அறிக்கையில் இவைபற்றிய அறிக்கை வெளியிடப் பட்டது.1 இந்தக் கல்வெட்டெழுத்துக்கள் 1926ஆம் ஆண்டின் தொகுப்பில் 621, 622, 623 எண் உள்ளவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டு அறிக்கையில் 74ஆம் பக்கத்தில் இவ்வெழுத்துக்களைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று கருதப்படுகின்றன. அந்தை பிகானி மகன் வேண், பொதிலை குவிரான் என்னும் பெயருள்ள பௌத்த பிக்குகளின் பெயரை இவ்வெழுத்துக்கள் கூறுகின்றன.

இந்த அறிக்கை கூறுகிறபடி, இப்பெயர்கள் இங்குத் தங்கியிருந்த பௌத்த பிக்குகளின் பெயரைக் கூறவில்லை. இப் பெயர்கள் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயரைக் கூறுகின்றன.

இவ்வெழுத்துக்களைப் படித்தவர் இவைபற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் கூறுவது.

1. “அந்தை பிகான் மாகன் வேண் தான”.

பிகான் மகனான வேண் இந்த அந்தையைத் தானஞ் செய்தான். (அந்தை - படுக்கை), அந்தை, பிகான் இரண்டையும் ஒன்று சேர்த்து அந்தை பிகான் என்று படித்து, இஃது ஓர் ஆவின் பெயர் என்று கொண்டால், அந்தை பிகான் இந்தக் குகையில் இருந்த துறவியின் பெயர் என்று கூறலாம்.

2, 3. “பொதிலை குவீரன் வேண் குவீர் கொட்டு பிதான்'.

பொதிலை குவீரன் என்பது இக் குகையில் இருந்தவருடைய பெயர். வேன் குவீரன் கொத்துவித்தான். அதாவது வேண் குவீரன் கற்படுக்கையைக் கொத்தி அமைத்தான்.

திரு. நாராயண ராவ் கீழ்வருமாறு படிக்கிறார்.2

1. அந்தை பிகானா மாகனாவே னா தான

2. பொதிலை குவீரனா குவிரனா கொ ட்டுபிதா (பிராகிருதம்)

1. 'அந்யத்தேயம் பிக்ஷுக்ஷணாம் மஹதாம் வைஸ்யானாம் தானானி.

2.புத்ரஹ் குபேரானாம் வைஸ்யானாம் குபேரானாம் கொட்டபித(வா) (சமற்கிருதம்).

இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்துப் பொருள் கூறுகிறார். பிக்குகளுக்கு இன்னொரு தானம். பெரிய குடும்பத்தார், வாணிகர்கள், குபேரர்களுடைய மக்கள், வாணிகக் குடும்ப குபேரர்கள் இவற்றை அமைத்தார்கள்.3

திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துள்ளார்.4

1. அந்தைய் பிகன் வேநா அதன்.

அந்தை பிகனுடைய மகன் வேண் அதன் என்பது இதன் பொருள். ஆப்தன் என்னும் பிராகிருத மொழிச் சொல் ஆதன் என்றாகிப் பிறகு அதன் என்றாயிற்று.

2. பொதிலை குவிர(ன்)

பொதிலை என்பது ஓர் இடத்தின் பெயர். பொதிகைமலை பொதியில், பொதிகை, பொதியம் என்பது போலப் பொதிலை என்பதும் பொதிகை மலையாக இருக்கலாம். குவிரான் என்பது ஒருவர் பெயர். இப்பெயர் சித்தர்மலை எழுத்திலும் காணப்படுகிறது.

3. செங்கு விரன்.

செம்-செம்மையான, நேர்மையான. குவிரன் - குபேரன். திரு.ஐராவதம் மகாதேவன் கூறுவது இது.5

1. அத் தைய் பிகன் மகன் செய்அ தான
   அந்தை பிகன் மகன் செய்த தானம்.

2. பெதலை குவிரன்
   பெதலையைச் சேர்ந்த குவிரன்.

3. செய் குவீரன்
   செங்கு வீரன் இஃது ஒரு ஆளின் பெயர்.

நாம் இவற்றைப் படிப்போம்.

1. அந்தை பிகன் மகன் வேண் அதன்.

அந்தை என்பது ஆந்தை என்னும் பெயர். இப்பெயர் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் நெடுக அந்தை என்றே எழுதப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் இந்தப் பெயர் ஆந்தை என்று இருப்பதைக் காண்கிறோம். பிகன் என்பது பேகன் என்றிருக்க வேண்டும். சங்க காலத்தில் பேகன் என்னும் பெயர் வழங்கி வந்தது. பிகன் என்பது பேகன் என்பதன் கொச்சை வழக்கு. ஆந்தை பீகனுடைய மகன். வேண் ஆதன். வேண் என்பது ‘வெந்' என்று எழுதப்பட்டுள்ளது. பிராமி எழுத்து நவின் தலையில் குறுக்கு கோடு அமைத்தால் ண் ஆகிறது. குறுக்குக் கோடு இடாமல் எழுதப் பட்டுள்ளது. அதன் என்பது ஆதன் என்பதன் கொச்சை வழக்குச் சொல். ஆதன் என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கியுள்ளது.

2.பொதலை குவிர(ன்)

பொதலை என்னும் ஊரில் இருக்கும் குவிரன் என்பது பொருள்.

3.செங்குவிரன்

இஃது ஓர் ஆளின் பெயர். செங்கண்ணனார் என்பது போலச் செங்குவிரன் என்பதாகும்.

இவர்கள் மூவரும் இங்குள்ள கற்படுக்கையை அமைத்தார்கள் என்பது கருத்து. விக்கிரமங்கலத்து உண்டான கல் குகையில் இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இருக்கிறது. அதைத் திரு. ஐ.மகாதேவன் காட்டியுள்ளார். அவர் காட்டும் அந்த எழுத்தின் வரிவடிவம் இது.

இதை இவர் இவ்வாறு படிக்கிறார்.

‘எம் ஊர் ச அதன் - அ தான’

எங்கள் ஊர் சாதனுடைய தானம் என்பது இதன் கருத்து என்று கூறுகிறார்.6

இவர் படித்துள்ளது சரி என்று தெரியவில்லை. இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கலாம்.

ஏம ஊர் சஅதன் அதன்'

ஏம ஊர் என்பது ஓர் ஊரின் பெயர். ச அதன் என்பதைச் சாத்தன் என்று படிக்கலாம். அதன் என்பது ஆதன் என்னும் பெயர். ச அதன் அதன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. இது சாத்தன் ஆதன் என்று எழுதப்படவேண்டும். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் பல கொச்சைச் சொற்களும் தவறான எழுத்துக்களும் காணப்படுவது போல இங்கும் இத் தவறுகள் காணப்படுகின்றன.

ஏம ஊரில் வசித்த சாத்தன் ஆதன் என்பவர் இந்தக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தார் என்பது இதன் பொருள்.

அடிக்குறிப்புகள்

1. Annual Report on South Indian Epigraphy 1926-27 Pt. II Para 8.

2. New Indian Antiquary Vol. I.

3. P.385 The Brahmi Inscriptions of South India, New Indian Antiquary Vol. I.

4. P.233-235. Early South Indian Palaeography.

5. P.61 Seminar on Inscriptions 1966.

6. P.62 Seminar on Inscriptions 1966.