மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/019
16. திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து
மதுரைநகரத்துக்கு அருகிலே பேர்போன திருப்பரங்குன்றமலையும் அதன் அடிவாரத்தில் திருப்பரங்குன்றம் என்னும் ஊரும் இருக்கின்றன. திருப்பரங்குன்றில் தொன்றுதொட்டு முருகக்கடவுள் எழுந்தருளியிருக்கிறார். நக்கீரனார் தம்முடைய திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றத்தையும் பாடியுள்ளார். அவர் காலத்தில், கூடலுக்கு (மதுரைக்கு) மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது என்று (மாடமலி மறுகில் கூடல் குடவாயின்) அவர் கூறியுள்ளார்.
கடைச்சங்கப் புலவர்களில் சிலர் திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானைப் பரிபாடலில் பாடியுள்ளனர். பரிபாடல் 8ஆம் பாட்டை நல்லந்துவனாரும், 9ஆம் பாட்டைக் குன்றம்பூதனாரும், 17ஆம் பாட்டை நல்வழுதியாரும், 19 ஆம் பாட்டை நப்பண்ணனாரும், 21 ஆம் பாட்டை நல்லச்சுதனாரும் பரங்குன்றத்து முருகவேளினைப் பாடியுள்ளனர்.
பரங்குன்ற மலையில் பாறைகளிலும் பொடவுகளிலும் சைன சமயதீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் அருகில் வட்டெழுத்து வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடைக்கால நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்டுவை. மலை உச்சியில் கடைச்சங்க காலத்தில் பௌத்த சமணசமயத் துறவிகள்தங்கியிருந்த இரண்டு குகைகளும் அவற்றில் கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் கூறுவோம்.
முதலாவது குகை: இது திருப்பரங்குன்றம் இரயில் நிலையத்துக்கு அருகே சாவடி என்னும் கிராமத்துக்கு அருகில் இருக்கிறது. மலைமேல் இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகைக்குப் போவதுகடினம். குகைக்கு ஏறிச் செல்வதற்குக்கரடு முரடான துளைகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகக் கால் வைத்து ஏறிச் சென்றால் மேலே வடக்குத் தெற்காக அமைந்துள்ள குகையைக் காணலாம். இந்தக் குகை 56 அடி நீளமும் 20 அடி அகலமும் உள்ளது. குகை வாயிலின் மேலேயுள்ள பாறையிலிருந்து மழைநீர் குகைக்குள்ளே விழாமல் பக்கங்களில் வழிந்து போகும்படிகுழைவான தூம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்கு அருகில் குளிர்ந்த நீருள்ள சுனை இருக்கிறது.
குகையின் உள்ளே பாறைகளைச் சமப்படுத்தி வழவழப்பாக்கி அமைத்துள்ள கற்படுக்கைகள் இருக்கின்றன. கற்படுக்கைகளின் தலையணைப் பக்கமாகப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குகைக்குள்ளே இரண்டு திண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு திண்ணை ஐந்து அடி நீளமும் ஒன்றே முக்காலடி உயரமும் உள்ளது. இன்னொரு திண்ணை, ஆறு அடி நீளமும் மூன்று அடி உயரமும் உள்ளது.
இந்தக் குகையின் வடக்கு பக்கத்தில் இன்னொரு சிறு குகையும் அதற்குள் இரண்டு கற்படுக்கைகளும் உள்ளன. இக்குகையில் கல்வெட்டெழுத்து இல்லை.
பெரிய குகையில் கற்படுக்கைமேல் எழுதப்பட்டுள்ள பிராமிஎழுத்தைப் பார்ப்போம் இவை 1908 ஆம் ஆண்டுகண்டு பிடிக்கப்பட்டன. 1908ஆம் ஆண்டின் 333 ஆம் எண்ணுள்ள சாசனத் தொகுப்பாக இவ்வெழுத்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.1 இந்த எழுத்துக்கள் ஒரே வரியாக முப்பத்தொருஎழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வரியின் பதினெட்டு எழுத்துக்கள் பெரியவையாகவும் அடுத்த பதின்மூன்று எழுத்துக்கள் சற்றுச்சிறியவையாகவும் இருக்கின்றன. பெரிய எழுத்தின் இறுதியில் சிறிய எழுத்தின் தொடக்கத்திலும் இடையிலே செங்குத்தான சிறுகோடு காணப்படுகிறது. எனவே இந்தக் கல்வெட்டெழுத்து இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டெழுத்தின் வரிவடிவம் இது.
இந்த எழுத்துக்களை அறிஞர்கள் எப்படிப் படித்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு கூறுகிறார்.
1. எரு கோட்டூர) இ ஜம் கு டு ம (பிக) னா போ லா வ ச னா
2. ச (ஏ) ய தா ஆ ய சா ய னா னை டு ச(சா) த னா
எருகோட்டூர என்பது எருகோட்டூர். குடும்பிகன் என்பது இல்வாழ்வோனைச் சுட்டுகிறது.2
திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படிக்கிறார்.
‘எருகோட்டூர் ஈழ குடும்பிகன் போலாலையன் செய்தா ஆய்ச்சுடன் நெடுசாதன்’
எருகோட்டூர் என்பது ஊரின் பெயர். அகநானூற்றில் தாயங்கண்ணனார் செய்யுளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவருடைய ஊர் எருக்கோட்டூர். இழம் என்பது ஈழம். செய்தா என்பது செய்தான் என்னுஞ் சொல். ஈழத்தைச் சேர்ந்தவனுடைய எருக்கோட்டூரில் வசித்தவனுமான போலாலையன் செய்வித்தான். ஆய்ச்யன் நெடுஞ்சாத்தன் செய்தான் என்பது பொருள்.3
திரு. சி. நாராயண ராவ் இவ்வெழுத்துக்களை வழக்கம்போலப் பிராகிருதமாகப் படித்து அதைச் சமற்கிருதமாக மாற்றுகிறார்:
1. ‘எருகோடூர ஈழ குடும்பிகனா போலாலையனா சேய்தா’ ஆய-சயனா நெடுசாதனா (பிராகிருதம்)
2.எருகோடீர் ஸிம்ஹௗ-குடும்பி-கானாம் போலால்-
ஆர்யானாம் சய்த்ய-கய்யானாம்-நிஷ்ட்டா சைத்யானாம்.
(சமற்கிருதம்)
இலங்கையில் வசிப்பவரும் எருக்காட்டூர் வாசிகளுமான போல நகரத்தார் சைத்தியங்களை நிறுவினார்கள் என்பது பொருள்.4
திரு.ஐ. மகாதேவன் இவ்வாறு கூறுகிறார் :
‘எரு காட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் செய்தா ஆய் சயன் நெடு. சாதன்’
இலங்கையிலிருந்து வந்த எருகாட்டூர் பொலாலையன் இதைக் கொடுத்தான். ஆய், சயன், நெடுசாதன் ஆகிய இயவர்கள் (இதைச் செய்தார்கள்).5
திரு. டி.வி. மகாலிங்கம் படித்து இவ்வாறு பொருள் கூறுகிறார்:
‘எருகோட்டூர் ஈழ-குடும்பிகன் போலாலையன் செய்த ஆய்- சயன-நெடு-சாத ன(ம்)’
இதன் கடைச் சொல்லாகிய சாதன என்பது தியானம் என்னும் பொருள் உள்ள சமற்கிருதச் சொல். நெடு என்பது நீண்ட, ஆழ்ந்த என்னும் பொருள் உள்ளது. நெடு சாதன என்பதன் பொருள் ஆழ்ந்த தியானம் என்பது. சயன என்பது படுக்கை. ‘ஆய்வை’ என்பது உறங்கும் இடம் என்று பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. ‘ஆய்’ என்னுஞ் சொல் தாலாட்டுப் பாட்டிலும் வருகிறது. ‘லொல் லொல் லொல் லொல் ஆயி’ என்னும் தாலாட்டுப் பாட்டில் ‘ஆயி’ என்பது தூங்கு என்னும் பொருள் கொண்டது. எனவே, ‘ஆய்-சயன-நெடு சாசன (ம்)’ என்பதன் பொருள், ‘தூங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைக்கப்பட்ட படுக்கை’ என்பது. ‘இலங்கை’ (ஈழம்) யிலிருந்து வந்து எருகோட்டூரில் வசிக்கும் சிக்கும் குடும்பிகனான போலாலையன் உறங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைத்தான் என்பது இதன் கருத்து. அகநானூற்றில் 149, 319, 357 ஆம் செய்யுள்களைப் பாடிய தாயங்கண்ணனார் எருக்கோட்டூரைச் சேர்ந்தவர்.6
இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம். இந்த கல்வெட்டெழுத்துக்கள் பெரிய எழுத்தினாலும் சிறிய எழுத்தினாலும் எழுதப்பட்டு இடையே செங்குத்தான கோட உள்ளதென்று முன்னமே கூறினோம். இந்த வாக்கியத்தை எழுதியவர் சரியாகத் தமிழ் படிக்காதவர் என்பதும் பேச்சுத் தமிழில் இதை எழுதியுள்ளார் என்பதும் இந்த வாக்கிய அமைப்பினால் அறிகிறோம்.
எரு கா டூர் இழ குடும்பிகன் பொலாலையன் (பெரிய எழுத்து)
செய்தா ஆய்சயன் நெடு சாதன். (சிறிய எழுத்து)
பெரிய எழுத்து தனி வாக்கியம். சிறிய எழுத்து தனி வாக்கியம் என்று தெரிகிறது. எருகாட்டூர் ஈழக்குடும்பிகன் (வாணிகன்) பொலாலையன் இந்தக் குகையை முனிவர்களுக்குத் தானஞ் செய்தான். குகையின் கற்படுக்கைகளைச் செய்து அமைத்தவன் ஆய்ச்சயன் நெடுஞ்சாத்தன் என்பது இவ் வாக்கியங்களின் கருத்து.
விளக்கம்: இதை எழுதியவர் நன்றாகப் படிக்காதவர் என்றும் பேச்சுத் தமிழில் எழுதியுள்ளார் என்றும் கூறினோம். எருகாட்டூர் என்று எழுதியுள்ளார். ட்டு என்று இரட்டிக்க வேண்டும். இரட்டி இரட்டிக்காமல் தவறாக எழுதியுள்ளார். வேறு இடத்திலும் ட்டு என்பது டு என்று எழுதப்பட்டிருக்கிறது. டு என்பதை ட்டு என்று அக்காலத்தில் ஒப்பித்தார்கள். போலும். ஈழ என்பது இழ என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்திலும் தமிழ்நாட்டவர் ஈழ நாட்டுக்குப் போய் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் குடும்பிகர் என்று கூறப்பட்டனர். ஈழத்துப் பூதன்தேவனார் பாண்டி நாட்டிலிருந்து ஈழஞ் சென்றவர். அவர் பாடியவை சங்கச் செய்யுள்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எருகாட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் என்பவன் (குகையையும் கற்படுக்கைகளையும் திண்ணைகளையும் செய்வித்தான்) என்று வாக்கியம் முடிய வேண்டும். செய்வித்தான் என்னும் வினைச் சொல் விடுபட்டுள்ளது.
இரண்டாவது வாக்கியத்தில் செய்தா என்றிருக்கிறது. இது செய்தான் என்று இருக்க வேண்டும். ன் விடுபட்டுள்ளது. ஆய் சயன் நெடு சாதன் என்பது செய்தவனுடைய பெயர். இப் பெயரில் நெடு சாதன் என்பதும் தவறாக எழுதப்பட்டுள்ளது. சாதன் என்பதில் த்த என்னும் சகரம் இரட்டித்து சாத்தன் என்று எழுதப்பட வேண்டும். சாத்தன் என்னும் பெயர் சங்க காலத்தில் பரவலாக வழங்கி வந்தது. நெடுஞ்சாத்தன் என்னும் பெயரும் வழங்கி வந்தது.
இந்தக் குகையிலேயே வேறு இடத்தில் தனியே பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொருள் தெரியவில்லை. எதையோ எழுதத் தொடங்கி முற்றுப்பெறாமல் விடுபட்டு எழுத்துக்கள் என்று தோன்றுகின்றன. அவை:
1. (கய)7
2.(மாரயவ)8
திருப்பரங்குன்றத்தில் இன்னோர் இடத்தில் உள்ள குகையில் எழுதப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். மலையின் உச்சியில் உள்ள இந்தக் குகைக்கு ஏறிச் செல்வது மிகக் கடினமானது. இந்தக் குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி வாசகம் பன்னிரண்டு எழுத்துக்களைக் கொண்டது. இஃது 1951-52ஆம் ஆ ண்டின் 142வது எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதன் வரி வடிவம் இது:
‘அந்துதன் கொடுபிதவன்’ என்பது இதன் வாக்கியம். திரு. டி.வி. மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் இதைச் சரியாகவே படித்துள்ளனர்.
‘கொடுபிதவன்’ என்பதற்கு விளக்கம் கூறுவோம். ப் என்னும் பகர ஒற்றெழுத்தும், த் என்னும் தகர ஒற்றெழுத்தும் இதில் விடுபட்டுள்ளன. ஒற்றெழுத்துக்களைச் சேர்த்துப் படித்தால் ‘கொடுப்பித்தவன்’ என்றாகும். சங்க காலத்துப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் பல ஒற்றெழுத்துக்கள் விடுபட்டுள்ளதைக் காண்கிறோம். இது கற்றச்சரின் தவறாக இருக்கலாம். அல்லது எழுதியவரின் தவறாகவும் இருக்கலாம். பிராமிக் கல்வெட்டு வாசகங்களை எழுதியவர் பெரும்பாலோர் நன்றாகக் கல்வி கற்றவர் அல்லர் என்பது அவர்கள் எழுதியுள்ள வாக்கியங்களிலிருந்து அறிகிறோம்.
இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்த அந்துவன் என்பவரைப்பற்றிக் கூற வேண்டும். கடைச்சங்க காலத்தில் அந்துவன் என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர். அவர்களுடைய பெயரைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். அந்துவன் கீரன், அந்துவன் சாத்தன், வேண்மாள் அந்துவஞ்செள்ளை, நல்லந்துவன் என்னும் பெயர்களைப் பார்க்கிறோம். அந்துவன் கீரன் என்னும் அரசனைக் கல்லாடனார் புறம் 359இல் பாடியுள்ளார். அந்துவன் சாத்தனை ஒல்லையூர் பூதப்பாண்டியன் தன்னுடைய வஞ்சினக் காஞ்சியில்9 குறிப்பிடுகிறார். செல்வக்கடுக்கோ வாழியாதனுடைய தந்தையின் பெயர் அந்துவன் பொறையன்.
நல்லந்துவனார் கடைச்சங்க காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்) இருந்த பெரும் புலவர். இவர் பாடின செய்யுள்கள் சங்க இலக்கியங்களில்10 தொகுக்கப்பட்டுள்ளன. கலித்தொகையைத் தொகுத்தவரும் நல்லந்துவனாரே. 33 செய்யுள்களையுடைய நெய்தற்கலிச் செய்யுள்களை இயற்றினவரும் இவரே. இவர் பாடின பரிபாடல் 8ஆம் செய்யுளின் ‘பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்’ என்று கூறியுள்ளார்.11 நல்லந்துவனாரின் சம காலத்துப் புலவரான மருதன் இளநாகனார் தம்முடைய செய்யுளில் நல்லந்துவனார் பரங்குன்றத்து முருகனைப் பாடினதைக் குறிப்பிடுகிறார்.12
திருப்பரங்குன்றத்துப் பிராமி கல்வெட்டில் கூறப்படுகிற அந்துவன் இந்த நல்லந்துவனாராக இருக்கக்கூடும். அல்லது அவருடைய முன்னோரான ஓர் அந்துவனாக இருக்கக்கூடும். சங்ககாலத்தில் மக்களிடையே மதக் காழ்ப்பும் மதப் பூசல்களும் இல்லை. சங்க காலத்தில் சமயப் பகைமை மிகமிகச் சொற்பம். சங்க காலத்துக்குப் பிறகுதான் மதப்பூசல்கள் தமிழகத்தில் தாண்டவம் ஆடின. சங்க காலத்தில் எல்லாச் சமயத்தாரும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். நல்லந்துவனாரே பரங்குன்றத்துக் குகையைத் தானஞ் செய்தவராக இருக்கலாம்.
அடிக் குறிப்புகள்
1. Fig. 47, No. 15, P.113, Plate XLI No.15, Arikamedu, An Indo-Roman Trading Station on the Ease Coast of India by R.E.M. Wheeler, with Contributions by A. Ghosh and Krishna Devar pp. 17-124. Ancient. No. 2. July 1946.
2. P. 112, No.9, Plate XLI, No.9, Ancient India. No. 2, July 1946.
3. P. 113. No. 9. Ancient India. No. 2.
4. Proceedings and Transactions of the 1st All India Oriental Conference.
5. P. 288, Proceedings and Transactions of the Third All India Oriental Conference, Madras 1924.
6. The Brahmi Inscriptions of Southern India, N.1.A. Vol. I.
7. P. 66 No. Seminar on Inscriptions 1966.
8. P. 254-256. Early South Indian Palaeography.
9. No. 140 of 1951-52.
10. No. 141 of 1951-52.
11. புறநா. 71.
12. அகநா. 43. நற். 88, பரிபா. 6, 8, 11.
13. பரிபா. 8 : 127-130.
14. ‘சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேள்
சினமிகு முருகன் தண் பரங்குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ (அகநா. 59)