உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/028

விக்கிமூலம் இலிருந்து

7. கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள்[1]

பிலவ ஆண்டு வைகாசித் திங்கள் 13-ஆம் நாள் வெள்ளிக் கிழமை (26-5-1961) பகல் இரண்டு மணிக்கு நாங்கள் கொங்கு நாட்டு அரச்சலூரையடைந்தோம். நாங்கள் என்றால் இக் கட்டுரையாளரும், சீவபந்து ஸ்ரீபால், வித்துவான் செ. இராசு, வித்துவான் பச்சை யப்பன், வித்துவான் சென்னியப்பன், அவர்களும் ஆகும். அரச்சலூர் ஈரோட்டிலிருந்து பழைய கோட்டை வழியாக 12 ஆவது கல்லில் இருக்கிறது. வெயில் எரிக்கும் பகல் வேளையில் அவ்வூர் மலையடி வாரத்தை ஒட்டிய காட்டுவழியாக ஒருமைல் தூரம் நடந்தோம். பாதை இல்லாத காட்டுவழியாகையால் முட்செடி கொடிகளால் இடர்ப்பாடுகள் விளைந்தன. எப்படியோ தட்டித்தடுமாறி மலையின் மற்றொரு புறத்திலிருக்கிற ஆண்டிப் பாறை என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆண்டிப் பாறை என்னும் இடம், மலையின் மேலே உள்ள ஒரு பாழி. அதாவது, பொடவு என்று கூறப்படுகிற இயற்கையாக அமைந்த குகை.

இந்தக் குகையிலே மேடுபள்ளமாக இருக்கிற பாறையிலே ஐந்து கற்படுக்கைகளும், மூன்று பிராஃமி எழுத்துச் சாசனங்களும் இருப்பதைக் கண்டோம். கற்படுக்கைகள், இக் குகையிலே முனிவர்கள் வசித்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த முனிவர்கள் பௌத்த முனிவர்களாகவோ, ஜைன முனிவர்களாகவோ இருக்கவேண்டும்.

இந்தக் கற்படுக்கைகளிலே மூன்று சாசனங்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. சாசனங்கள் சுருக்கமாக இரண்டுவரி, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளன. இரண்டு சாசனங்களின் எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகின்றன. ஒரு சாசனம் சிதையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதிலும் மூன்று நான்கு எழுத்துக்கள் சிறிது சிதைந்துள்ளன. சாசன எழுத்துக்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதனால். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பிராஃமி எழுத்துக்கள் தமிழ்நாட்டிலே வழங்கப்பட்டது அசோக சக்கரவர்த்தி காலத்தில் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அசோக சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த பிக்ஷுக்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பிராஃமி எழுத்துக்களைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். பிராஃமி எழுத்துக்கள் தமிழ்நாட்டிலே கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தன. எனவே, இந்தக்குகையில் பிராஃமி எழுத்துக்கள் காணப்படுவதனாலே, ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வெழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். படுக்கைகளில் ஓரிடத்தில் ஓர் ஆள் நின்று கொண்டு கைகளை மார்பில் வைத்து வணங்குவது போலக் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. இன்னோர் இடத்தில் சூலம் போன்ற வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. குகைக்கு வெளியேயுள்ள பெரிய பாறைக் கல்லில் மண்டலம் போன்ற ஓர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க சாசன இலாகாவும், பழம்பொருள் ஆராய்ச்சி இலாகாவும் (எபிகிராபி, ஆர்க்கியாலஜி இலாகாக்கள்) இதுவரையில் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கவும் இல்லை. எழுத்துக்களைப் படி எடுக்கவும் இல்லை.

இந்த இடத்துக்குப் போக நல்லபாதை அமைத்து, இந்தக் குகையையும், இதிலுள்ள எழுத்துக்களையும் பாதுகாப்புப் பழம் பொருள்கள் என்று அரசாங்கத்தார் தெரிவிக்க வேண்டும். இந்தப் பிராஃமி எழுத்துக்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது இன்னும் படிக்கப்படவில்லை. இத்துறையில் வல்லவர்கள் இதனை செய்வார்கள் என்று நம்புகிறோம்.

இந்த ஆண்டிபாறைக்குச் சற்றுத் தூரத்தில் அதே மலையில் இன்னொரு குகையும் அதில் எழுத்துக்களும் இருக்கின்றனவாம். அந்தக் குகை மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதனால் நாங்கள் அங்குப் போகவில்லை. சமயம் வாய்க்கும்போது மற்றொரு சமயம் போகக்கூடும்.

பாண்டிநாட்டு மலைகளிலே பிராஃமி எழுத்து சாசனங்கள் சில முன்னமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொங்கு நாட்டிலே பிராஃமி எழுத்துச் சாசனம் இப்போதுதான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சாசன எழுத்தையும், குகையையும் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தார் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த நாள் (27-5-61) நாங்கள் ஈரோடு நகரத்தில் ஒரு பழைய கோவிலைக் கண்டுபிடித்தோம். இந்தக் கோவில் பல்லவ அரசர் காலத்துக் கட்டட அமைப்புப்படி கட்டப்பட்டிருக்கிறது. மண்மூடிப் புதைந்து கிடந்த இந்தக் கோவில் சில காலத்துக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டதாம். மகிமாலீசுவரர் கோவில் என்பது இதற்குப் பெயர். இந்தக் கோவில் இருப்பது இதற்கு முன் அறிந்திருந்தாலும், இக்கோயில் பல்லவ அரசர் காலச் சிற்ப முறைப்படி அமைந்த பழைய கட்டடம் என்பதை ஒருவரும் இதுவரையில் அறியவில்லை.

நாங்கள் சென்று பார்த்தபோது, பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்த பழைய கோவில் என்பதைத் தெளிவாக அறிந்தோம். மகாபலிபுரத்துத் “தர்மராச இரதம்” என்னும் கோவில் விமானம் போன்றது இந்தக் கோவிலின் விமானம். எட்டுப்படை விமானம். விமானத்தில் அமைந்துள்ள சாலை, பஞ்சரம், கர்ண கூடு முதலிய உறுப்புகளும் பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளன. துவாரபாலகர் திருவுருங்களும் பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளன. பல்லவர் காலத்துக் கோவில்களைப் போலவே இந்தக் கோவில் சுவர்களும் நான்கு அடி அகல முள்ளவை யாக உள்ளன. திருவுண்ணாழிகையில் (கர்ப்பக்கிருகத்தில்) உள்ள சிவலிங்கத் திருவுருவம் மகேந்திர வர்ம பல்லவ அரசன் காலத்துச் சிவலிங்கம் போன்றும் பெரிதாகவும் இருக்கின்றது.

இந்தக் கோவில் கர்ப்பக்கிருகமும் (திருவுண்ணாழிகையும்) விமானமும் பல்லவர் காலத்துக் கட்டடமாகும். இப்போதுள்ள மகா மண்டபம், முகமண்டபம், அம்மன் கோவில் ஆகியவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. சுவாமியுள்ள திருவுண்ணாழி கையின் வெளிப்புறத்தில் இருந்த துவாரபாலகர் உருவங்களைப் பிற்காலத்தில் மகாமண்டபத்து வாயில் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். கொங்கு நாட்டிலே பல்லவ அரசர் ஆட்சி பரவியதாகத் தெரியவில்லை. ஆனால், பல்லவ சிற்பக்கலை அங்கும் பரவியிருந்தது என்பது இந்தக் கட்டடத்தினால் தெரிகிறது.

ஈரோட்டிலுள்ள இந்த மகிமாலீசுவரர் கோவிலையும் பழம்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தார் பாதுகாக்க வேண்டுகிறோம்.



  1. செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு35: 10.1961.