மருதநில மங்கை/எம்மை நீ அருளினை

விக்கிமூலம் இலிருந்து

1



‘எம்மை நீ அருளினை’

ழகாலும் அறிவாலும் சிறந்தாள் ஒருத்தி. அவளை விரும்பி மணந்து மனையற வாழ்வு மேற்கொண்டான் ஓர் இளைஞன். அவர்கள் இல்லறம் இனிது நடைபெற்று வந்தது. சில காலம் சென்ற பின் ஒருநாள், உயர்ந்தோர் கூடும் அவ்வூர் மன்றத்தில், பரத்தையர் குடியில் வந்தாள் ஓர் இளம் பெண்ணின் ஆடல் அரங்கேற்றம் நிகழ்ந்தது. இளைஞனும் சென்று அதைக் கண்டான். அவள் ஆடல் பாடல்களில் அறிவை இழந்தான். அவள்பால் ஆசை கொண்டான். ஆட்ட முடிவில், அவள் அளித்த அழகிய மாலையைப் பெருவிலை கொடுத்துப் பெற்றுக்கொண்டு, அவளோடு அவள் மனை புகுந்தான். அன்று முதல், அம்மனையிலேயே வாழத் தொடங்கினான். தன் மனையை மறந்தான். மனைவியை மறந்தான். பரத்தையோடு சென்றான். புதுப் புனலாடி மகிழ்ந்தான். அவள் கையோடு . கைபிணைத்துத் துணங்கைக் கூத்தாடிக் களித்துத் திரிந்தான்

கணவன் பிரிவால் கலங்கினாள் அவன் மனைவி, அவன் அன்பைப் பெறமாட்டா வருத்தம் ஒருபால். தனக்கே உரியது என உரிமை பாராட்டிய அவன் அன்பு, பிறிதொரு பெண்ணிற்குக் கிடைப்பதால் உண்டாம் பெருந்துயர் பிறிதொருபால். இவையனைத்திற்கும் மேலாகக் கணவன் ஒழுக்கத்தில் தவறியதால் உண்டாம் இழுக்கம்- அனைத்தும் ஒன்றுகூடி அவளைத் துன்புறுத்தின. மனத் துயர் அவளை மீளா நோய்க்கு ஆளாக்கிற்று. உள்ள நோயால் உடல் தளர்ந்தது. அந்நிலையில், கணவன் பரத்தை யொருத்தியின் பின் திரிவதையும், அவளோடு சென்று புனலாடியும், துணங்கை ஆடியும் களித்துக் காலங்கழிப்பதையும் கண்ட ஊரார், அவள்பால் சென்று, ஒழுக்கத்தில் இழுக்கிய அவனை அலர் கூறிப் பழித்தனர். கணவன் பிரிவால் கலங்கியிருக்கும் அவள் உள்ளம், ஊரார் உரைக்கும் அலரால், மேலும் வருந்திற்று. அந்நிலையில் வாழ்ந்திருந்தாள் அவள்.

அப் பெண்ணின் துயர் கண்டாள், அயல் வீட்டில் வாழும் அவள் தோழி. அவளுக்கு ஆறுதல் உரைக்க விரும்பினாள். அவள் வீட்டிற்குச் சென்று, அவளை அணுகித், “தோழி! உன் கணவன் நீ கருதுமாறு தீயனல்லன். அவன் தீயனல்லன் என்பதை, அவன் வாழும் அவனுக்குரிய இவ்வூரின் வளமே அறிக்கும். அவன் தீயனாயின், அவனைப் பெற்ற இவ்வூர், இவ்வாறு நலத்தால் சிறந்து விளங்காது. இவ்வூரின் வளத்தை, அதிலும், இவ்வூரின் நீர் வளத்தை என்னெனப் புகழ்வேன்! இவ்வூர் வயல்கள், வரப்பளவும் உயர்ந்த நீரால் நிறைந்து, கருநீல மலர்கள் மணந்து மணம் கமழும். மலர் விற்று வாழும் மக்கள், அக் கருநீல மலர்களைப் பறித்துக் கொணர்ந்து, மன்றுகளில் விலை கூறி விற்பர். அவர்கள், அம்மலரைப் பறித்து வருங்கால், வயலையடுத்திருக்கும் குளத்தில் பூத்துக் கிடக்கும் தாமரை மலரின் தேன் உண்டு, அம்மலரில் அயர்ந்து உறங்கும் தும்பி விழித்துக் கொண்டு, அக்கருநீல மலர்களைக் காணும். கண்டதுமே, தான் வாழும் தாமரை மலரையும், அத்தாமரை தழைக்கும் பொய்கையையும் மறக்கும். மறந்து, அம்மகளிர் கொணரும் கருநீல மலரோடு ஊருள் புகும். மலர் மகளிர், ஊர் எல்லையை அடைந்ததும், ஆங்குக் காவல் மேற்கொண்டிருக்கும் யானையின் மதநீர் நாற்றத்தில் மனதை இழக்கும். அது ஆங்கு வருவதற்கு முன்னர், அம்மத நீரில் படிந்து, உண்டு, மகிழ்ந்திருக்கும் வண்டுகள், வரவேற்று அன்புடன் அளிக்கும் அம்மத நீர் விருந்துண்டு மகிழும். பகற் காலமெல்லாம் அங்கேயே கிடக்கும் அத்தும்பி, மாலை வந்ததும், முல்லை மலரின் மணம் மனத்தை மயக்க, அம் மணம் வந்த வழியே சென்று, ஊருள் புகும். ஆங்கு அம்முல்லை மலர், தாம் விரும்பும் கணவரை, அவர் மகிழுமாறு ஆரத் தழுவிக் கிடக்கும் மகளிரின் கூந்தலில் கிடப்பது கண்டு, அக் கூந்தலைச் சுற்றி மொய்த்து, அம்முல்லை மலர்த் தேனைக் குடித்து மகிழும். அப் பேரின்ப நுகர்வால், பண்டு தான் வாழ்ந்த பொய்கையை மறக்கும். அத்துணை நீர் வளம் செறிந்தது. அவன் ஊர். இத்தகைய வளம்மிக்க இவ்வூருக்குரிய அவன் கொடியனாதல் இயலாது. அறியாது பிழை புரிந்தானாயினும், ஒழுக்கத்தின் உயர்வுணர்ந்து மீண்டு இவண் வந்து சேர்வன், வருந்தற்க!” என ஆறுதல் உரைத்து அகன்றாள்.

கணவனின் ஒழுக்க உயர்வையும், அவன் ஒழுக்க உயர்வால் ஊர் பெற்றிருக்கும் வளத்தின் சிறப்பையும், தோழி உரைக்க, அப்பெண்ணின் உள்ளம் அவ்வூரின் வளத்தையோ, அவ்வளத்திற்குக் காரணமாய அவன் ஒழுக்க உயர்வையோ எண்ணிப் பார்த்திலது. அவள் கூறிய தும்பியின் செயலுக்கும் தன் கணவன் செயலுக்கும் உள்ள ஒருமைப்பாட்டினையே எண்ணிப் பார்த்தது.

“தும்பி, தேனளித்துப் புரக்கும் தாமரை மலரையும், அம்மலர் விளையும் பொய்கையையும் மறந்தது. அவன் காதற் பேரின்பம் தரும் என்னையும், யான் வாழும் இம் மனையையும் மறந்துளான். அது வயலில் மலரும் நீல மலரைப் பறித்து விற்பார் துணைகொண்டு, அம்மலரைச் சூழ்ந்து திரிகிறது. அவன், பரத்தையர் சேரியில், இன்பம் நுகரலாம் இளமைப் பருவம் உடையாரைப் பாணர் துணையால் பெற்று, அவர் இன்பம் நுகர்ந்து மகிழ்கிறான். அது, பகற்காலத்தில், யானையின் மதநீராம் விருந்துண்டு கிடக்கிறது. அவன், பகற் காலத்தில் சேரிப் பரத்தையர் மனையிற் கிடந்து, அவர் நலன் உண்டு மகிழ்கிறான். மாலை வந்துற்றதும், அது முல்லை மலரை மொய்த்து மகிழ்கிறது. அவன், இரவில் இற்பரத்தையின் மனையில் இன்பம் நுகர்ந்து கிடக்கிறான். இருவர் ஒழுக்கத்திற்கும் உள்ள ஒற்றுமைதான் என்னே!” என எண்ணி ஏங்கிற்று அவள் உள்ளம்.

அந்நினைவு மிகுதியால் வருந்தித் துயர் உற்றாள். உறக்கம் அற்று இரவைக் கழித்தாள். விடியற்காலம், இருள் நீங்கி ஒளிபரவாக் காலம். வாயிற்கண் யாரோவந்து நிற்கும் அரவம் கேட்டுச் சென்று நோக்கினாள். ஆங்கு அவன் நின்று கொண்டிருந்தான். அவன் ஒழுக்கக் கேட்டால் வருந்தியிருப்பாள் உள்ளத்தை, ஆங்கு நிற்கும் அவன் தோற்றம் பெரிதும் வருத்திற்று. பரத்தையர் விற்ற மாலையை வாங்கி அவரை வதுவை மணம் கொண்டதால் எழும் மணம் அவன் மேனியினின்றும் இன்னமும் நீங்க வில்லை. புணர்ச்சி மயக்கத்தால், தன் மாலையைப் பரத்தை அணிந்து கொள்ள, அவள் மாலையைத் தான் அணிந்து கொண்ட அத் தோற்றத்தோடே வந்திருந்தான். பரத்தையரின் தோளைத் தழுவிய காலத்தில், அவர் அணிகள் அழுத்திப் பண்ணிய வடுக்கள் அவன் ஆகத்தில் அழுந்தத் தோன்றின. அவனைப் பிரிந்து, அவன் அன்பை இழந்து, அவன் ஒழுக்கக் குறைபாடு கண்டு, ஊரார் உரைக்கும் அலர் கேட்டு வருந்தி நிற்கும் தன் முன், அவ்வொழுக்கக் கேட்டினை உண்மையென நிலைநாட்டி உணர்த்தும் உருவோடு வந்து நிற்கும் அவனை, நேரிற் காண நேரவே பெரிதும் வருந்தினாள். வந்தவனுக்கு வழி விடவும் மறுத்தது அவள் உள்ளம். தெருவை நோக்கினாள். அவன் ஏறிவந்த தேர், குதிரைகள் பூட்டவிழ்த்துவிடப் பெறாமல், பூட்டியவாறே நின்றிருந்தது. அத்தேர் அருகே, தேரை விரைந்தோட்டிச் செல்லும் கருத்தோடு நிற்கும் தேர்ப் பாகனையும் கண்டாள். வந்தவன், பரத்தையர் ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தன்னோடு வாழும் அறம் பிறழா அன்பு வாழ்க்கையை விரும்பி வந்தான்ல்லன். வேறு எங்கோ, வேறு எவளோ ஒரு பரத்தையின் மனை நோக்கிச் செல்பவன், இடைவழியில் சிறிதே இவண் வந்து நின்றுளான் என உணர்ந்தாள். அவன் பிழையை மறந்து ஏற்றுக் கொள்ள எண்ணிய அவள் மனம், உடனே மாறிவிட்டது. “அன்ப! என்னை மறவாது, எளியாள் மனைவந்து நிற்கும் உன் அன்பிற்கு என் நன்றி! உன் அன்பு மறவாமை அறிந்து மகிழ்கிறது என் உள்ளம்! அன்பு மறவாது இன்று இவண் வந்த உன் செயல் ஒன்றே போதும். அது ஒன்றினாலயே என் உள்ளம் திறைவெய்தி விட்டது. மேலும், இவண் நின்று காலத்தை வீணாக்கிக் கழிக்காதே. விரைந்து சென்று, நின்னை விரும்பி எதிர் நோக்கி நிற்கும் பரத்தையரின் ஆசையை நிறைவேற்றி மகிழ்வாயாக. தேரைப் பூட்டு அவிழ்த்து விடாது, போகத் துடித்து நிற்கின்றான் உன் பாகனும். ஆகவே அன்ப! போய் வருக!” என்று கூறி அவனை உள்ளே அழைத்துச் செல்லாது ஊடி நின்றாள்.

விங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயல்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந்து, ஊர்புகுந்த வரிவண்டு,
ஓங்குயர் எழில்யானைக் கனைகடாம் கமழ்நாற்றம்
ஆங்கவை விருந்தாற்றப் பகல்அல்கிக், கங்குலான்

வீங்குஇறை வடுக்கொள விழுநர்ப் புணர்ந்தவர் 5
தேங்கமழ் கதுப்பினுள் அரும்புஅவிழ் நறுமுல்லைப்
பாய்ந்துஊதிப் படர்தீர்ந்து, பண்டு, தாம் மரீஇய
பூம்பொய்கை மறந்து உள்ளாப் புனல்அணி நல்ஊர!

அனைமென்தோள் யாம்வாட, அமர்துணைப் புணர்ந்து,
மணமனையாய் எனவந்த மல்லலின் மாண்புஅன்றோ, 10
பொதுக்கொண்ட கவ்வையின் பூவணிப் பொலிந்தநின்
வதுவைஅம் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை,

கனலும் நோய்த்தலையும், நீ கணங்குழை அவரொடு
புனல்உளாய் எனவந்த பூசலின் பெரிதன்றோ,


தார்கொண்டாள் தலைக்கோதை தடுமாறிப் பூண்டநின் 15
ஈர்அணி சிதையாது எம்இல்வந்து நின்றதை,

தணந்ததன்தலையும், நீ தளர்இயல் அவரொடு
துணங்கையாய் எனவந்த கவ்வையின் கடப்பன்றோ,
ஒளிபூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்தநின்
களிதட்ப வந்த இக்கவின்கான இயைந்ததை. 20

என வாங்கு,
அளிபெற்றேம்; எம்மைநீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின்பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம்; கடுந்திண்தேர்

பூட்டு விடாஅ நிறுத்து. 25

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத், தலைவி, அவன் பரத்தையை வதுவைமணம் கொண்டதும், அவளோடு புனலாடியதும், துணங்கை ஆடியதும் கூறி ஊடியது இது.

1. வீங்குநீர்–மிக்கநீர்; பகர்பவர்–விற்பவர்; வயற் கொண்ட ஓரங்கர்–வயலில் பறித்துக் கொண்ட பொழுது; 2. சூழ்தந்து– சூழ்ந்து வந்து; 3. கனைகடாம்–மிக்க மதநீர்; 4. ஆங்கவை–அம்மதநீரில் முன்னரே படிந்து உண்டு வாழும் வண்டுகள்; அல்கி–தங்கி; கங்குலான்–இரவு வந்துற்றதும்;5. வீங்குஇறை–மகிழ்ச்சிமிகுதியால் பருத்த முன்கை, வடுக்கொள-வடுவுண்டாமாறு; விழுநர்– விரும்பும் கணவர்; 6. தேம் கமழ்–தேன் மணக்கும்; கதுப்பு–கூந்தல்; 7. ஊதி–தேன் உண்டு; மரீஇய–வாழ்ந்த; 8. உள்ளா–நினையாத; 9. அமர்துணை–விரும்பும் பரத்தை; 10. மணமனையாய்–மணம் கமழும் மனையின் கண் உள்ளாய்; என–என்று ஊரார் அலர் உரைக்க, மல்லல்–மாண்பு (இகழ்ச்சிக்குறிப்பு) 11. பொதுக்கொண்ட –சிறப்பில்லாத; பூவணிப்பொலிந்த–பரத்தையின் மலர் மாலையைப் பெற்று மகிழ்ந்த; 12. வதுவை–திருமணம்; 13. கனலும்–வருத்தும்; நோய்த்தலையும்–நோய்க்கு மேலும்; 14. பூசல்–அலர்; 15, தார்–ஆடவர் அணியும் மாலை, தலைக்கோதை–மகளிர் அணியும் தலைமாலை; 16. ஈர்அணி–இருவகை அழகு; 17. தணந்த தன் தலையும்–விட்டுப் பிரிந்ததற்கு மேலும்; 18. கவ்வை– அலர்; கடப்பு–மிக்கது; ஓர்அணி–ஒப்பற்ற அணிகளால் ஆயவடு; 20. களிதட்ட–மகிழ்ச்சி, பிறபொருளில் செல்லும் கருத்தைத் தடுக்க; 21. அளி–அருள்; 22 வேட்டோர் திறத்து – விரும்பும் பரத்தையர்பால். பாகனும், தேரை நீட்டித்தாய் என்று பூட்டுவிடாது கடாஅய், விளியாது விரும்பிய வேட்டோர் திறத்து நிறுத்து என மாற்றுக

உள்ளுரை: வீங்குநீர், பரத்தையர் சேரி, நீலம், சேரி வாழ் இளம் பரத்தை; பகர்வர், பரத்தையரைக் கொணர்ந்து தரும் பாணர்; மலரைச் சூழ்ந்த வண்டு, பரத்தையரைச் சூழ்ந்து திரியும் தலைவன், பகற் காலத்தே மதநீர் உண்டு தங்குதல், பகற் காலத்தே சேரிப் பரத்தையரைப் புணர்ந்து கிடத்தல்; கங்குவில், முல்லைத் தேன் குடித்தல், இரவில் இற்பரத்தையோடு இன்பம் துய்த்தல்; வண்டு பொய்கையை மறத்தல், தலைவன் தன் மனைவியை மறத்தல் என உள்ளுறை கொள்க.