உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/கையான் மலர்ந்த முகை

விக்கிமூலம் இலிருந்து
13


கையான் மலர்ந்த முகை


மைதி நிலவிய ஒரு நாட்டில் மக்கள் மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர். ஒருநாள் பகையரசன் படையொன்று, அந்நாட்டில் திடுமெனப் புகந்து, யாழ்செய்யத் தொடங்கிவிட்டது. அந்நாட்டில் நல்வாழ்வு வாழ்தல் இனி இயலாது எனக் கருதிய அந்நாட்டுக் குடிமக்கள் அந்நாட்டை விட்டகன்று, நல்லாட்சி நிலவும், வேறு ஒரு நாட்டைத் தேடி அடைந்து, ஆங்கு வாழ்வு மேற்கொண்டனர். அவர்கள் ஆண்டு வாழினும், தாய்நாட்டுப் பற்று அவர்களை விட்டகலவில்லை. அவர் உள்ளம் தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த் தம் நாட்டை மறவாது எண்ணியிருந்தது. நாட்கள் சில கழிந்தன. அழிந்த நாட்டிற்குரிய அரசன், தன் படைத் துணையால், பகைவரை வென்று ஓட்டினான். நாட்டில் மீண்டும் அமைதி நிலவிற்று. அஃது அறிந்த அக்குடிகள், மீண்டும் தம் நாடடைந்து மகிழ்ந்து வாழ்ந்தனர்.

இந் நிகழ்ச்சியை நினைவூட்டும் இயற்கை நிகழ்ச்சி ஒன்று ஓர் ஊரில் நிகழ்ந்தது. அவ்வூரை அடுத்திருந்தது ஒரு பொய்கை. அப்பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களில், தும்பிகள் தம்தம் பெடையோடு தேன் உண்டு வாழ்ந்திருந்தன. ஒரு நாள் அப் பொய்கையின் கரை திடுமென உடைத்துக் கொள்ளவே, அவ்வுடைப்பின் வழியே வெள்ள நீர் உட்புகுந்து விட்டது. தாமரை மலர்களெல்லாம் தண்ணீருள் மறைந்து விட்டமையால், அங்கு வாழ்தற்கு வழியற்றுப் போன அத்தும்பிகள், அக்குளத்தை விட்டு நீங்கி, அதை அடுத்திருந்த, காவல் நிறைந்த கரை அமைந்த பிறிதொரு பொய்கையைத் தேடி அடைந்து, ஆங்குள்ள மலர்களில் வாழத் தொடங்கின. இதற்கிடையில், முற்கூறிய பொய்கைக்கு உரியோர், ஓடோடி வந்து, உடைந்த உடைப்பினை அடைத்துப் புகுந்த புதுப்புனலைப் போக்கி விட்டனர். தாமரை மலர்கள் பண்டேபோல், தண்ணீர் மட்டத்திற்கு மேல் தலைதூக்கி நிற்கத் தொடங்கின. அஃதறிந்த அத்தும்பிகள், மீண்டுவந்து, தம் மலர்களுட் புகுந்து மகிழ்ந்து உறங்கின.

இக் காட்சியைக் கண்டு நின்றாள் ஒரு பெண். கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டமையால் கலங்கி யிருப்பவள் அவள். அன்று அவள் கண்ட இக்காட்சி, அவள் உள்ளத்தில் பற்பல எண்ணங்களைத் தோற்றுவித்தது. வாழும் இடம், வாழ்தற்கு இயலாது போனமையால், வண்டுகள் அவ்விடத்தை விட்டன. ஆனால் என் வீடு இன்பக் களஞ்சியமாய் இருக்கவும், என் கணவன் அதை மறந்தான். சென்ற இடம், வாழ்ந்த இடத்தினும் சிறந்து விளங்கினமையால், வண்டுகள் ஆங்கு அடைந்தன. ஆனால் கணவன் சென்று வாழும் பரத்தையர் சேரி, நம் நகரினும் நனிமிக இழிவுடைத்து, நல்லோர் நணுக அஞ்சும் பொல்லாங்கு நிறைந்தது. அதை அறிந்தும் கணவன் அங்கு சென்று வாழ்கிறான். வண்டுகள் வாழும் இடத்தை விட்டு வந்தும், அவ்விடத்தை மறக்கவில்லை. கணவன் என்னைக் கனவிலும் கருதுவதில்லை. வண்டுகளை வருக என அழைப்பார் எவரும் அப் பொய்கையில் இல்லை. எனினும், அவை அவ்விடத்தை மீண்டும் அடைந்தன. கணவன் வருகைக்காக, இரவு பகலாகக் காத்துக் கிடக்கிறேன் நான். ஆயினும் அவன் வந்திலன். வாழும் இடத்தில் இவ்வண்டுகள் வைத்திருக்கும் பாசமும், மணந்த மனைவியாகிய என்னிடத்தில், என் கணவனுக்கு இல்லையே!” என்ற எண்ணங்கள் அலை அலையாய் எழுந்து அலைக்க, வருந்தி, வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் வந்து சேர்ந்த சிறிது பொழுதிற்கெல்லாம், பரத்தை வீடு சென்றிருந்த கணவனும் வந்து சேர்ந்தான். வந்தவனை வரவேற்க விரும்பி, அவனை அணுகினாள். ஆங்கு அவள் கண்ட கோலம், அவள் உள்ளத்தை வாட்டியது. அவன் தலை மாலையில் பிணைந்துள்ள மலர்கள், தம் நிறங் கெட்டு உருவிழந்து நலுங்கிப் போயிருந்தன. அவன் மார்பில், மகளிரைப் புணர்ந்தமையால் பெற்ற புதுமணம் வீசிற்று. அவன் மேனியில், அவனைப் புணர்ந்த மகளிரின் கைவளை அழுந்தியதால் உண்டான தழும்புகள் ஆங்காங்கே காட்சி அளித்தன. பரத்தையரை அண்மையில் புணர்ந்து வருகிறான் என்பதை அவை காட்டி விட்டன. அதனால் அவன் உள்ளத்தில், பரத்தையார்பால் கொண்ட பாசம், இன்னமும் வற்றாமலே உளது என்பதை உணர்ந்தாள். அதனால் அவள் அன்பு மாறிற்று. ஆறாச்சினம் மிகுந்தது. வந்தவன் தன்மீது அன்பு கொண்டு வந்திலன் எனக் கருதினாள். வரவேற்கச் சென்றவள், வழியை அடைத்துக் கொண்டு நின்றவாறே, “அன்ப! நாம் பிரிந்தால் பாழ்படும் பேரழகு, நாம் வந்ததும், மீண்டு விடும் இவளுக்கென ஒரு தனி இயல்பு இல்லை. நம் இயல்பிற்கேற்ப இயல்பவள் இவள்! எனும் நெஞ்சத் துணிவாலன்றோ, பரத்தையிற் புணர்ச்சியால் பாழன கண்ணியோடு என் கண்ணெதிர் வந்து நிற்கின்றாய்? ஞாயிறு தோன்ற மலர்ந்து, அது மறையக் கூம்பும் தாமரை மலர் போன்றவள் இவள். நான் பிரியப் பிரியும் இவள் நலம், நான் வந்து கூடக் கூடிவிடும்! எனும் கருத்துடைமையாலன்றோ, அம்மகளிரின் கூந்தல் மலரின் மணம் நாறும் மார்போடு என் முன் வந்து நிற்கத் துணிந்தாய்? ‘மழை பெய்தால் வளம் பெற்று, அது பொய்த்தால் வாடும் பயிர் போன்றவள் இவள். நான் பிரிந்தால் வாடும் இவள், நான் வந்து புணர்ந்தால் பொலிவுறுவள்!’ என்ற எண்ணத் துணிவாலன்றோ, அம் மகளிர் வளையல் அழுந்திப் பண்ணிய வடுவோடு இவண் வந்து நிற்கிறாய்?” எனச் சினந்து கூறிக் கண்டித்தாள்.

சில நாழிகை அமைதியாய் இருந்தாள். பின்னர் மீண்டும் தொடங்கினாள்: “அன்ப ! உன் கருத்தும் செய்கையும் வியத்தற்குரிய, நீ விரும்பும் பரத்தையரும், உன்னை விரும்பும் பரத்தையரும் உன் பிரிவால் வருந்தி வாடுமாறு ஈங்கு வாரற்க அவர் மகிழ ஆண்டே செல்க, இயல்பாக மலராது, கையால் மலர்த்தி மலர்வித்த மலர் மணம் தராது. சிறிதே மணம் தரினும் அது நறுமணம் ஆகாது. அதுபோல், உள்ளுணர்வின்றி, ஊரார் உரைக்கு அஞ்சி, ஈண்டு வந்து புணரும் உன் புணர்வில் பேரின்பம் காணேன். அக்கூட்டத்தை நான் விரும்பேன். அக்கூட்டம் கொடிய பனிக்காலம் போல், எனக்குக் கொடிய துயர் தரும். ஆகவே அது வேண்டேன்!” என்று கூறி வழிமறித்து நின்றாள்.

“பன்மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன்மலர் இமிர்புஊதும் துணைபுணர் இருந்தும்பி,
உண்துறை உடைந்தபூப் புனல்சாய்ப்பப் புலந்துஊடிப்
பண்புடை நன்னாட்டுப் பகைதலை வந்தென,

அதுகைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடைநீழல் 5
மதிபடர்ந்து இறைகொள்ளும் குடிபோலப், பிறிதும்.ஒரு பொய்கை தேர்ந்துஅலமரும் பொழுதினான், மொய்தப,
இறைபகைதனிப்ப, அக்குடி பதிப்பெயர்ந்தாங்கு
நிறைபுனல் நீங்கவந்து, அத்தும்பி, அம்மலர்ப்

பறைதவிர்பு அசைவிடுஉம் பாய்புனல் நல்ஊர! 10
நீங்குங்கால் நிறம்சாய்ந்து புனருங்கால் புகழ்பூத்து
நாம்கொண்ட குறிப்பிவள்நலம் என்னும் தகையோதான்,
எரிஇதழ் சோர்ந்துஉக, ஏதிலார்ப் புணர்ந்தமை
கரிகூறும் கண்ணியை ஈங்குளம் இல்வருவதை;

சுடர்நோக்கி மலர்ந்து, ஆங்கேபடின் கூம்பும் மலர்போல்என் 15
தொடர்நீப்பின், தொகும் இவள்நலம் என்னும் தகையோ தான்,
அலர்நாணிக் கரந்தநோய் கைம்மிகப், பிறர்கூந்தல்

மலர்நாறும் மார்பினை ஈங்கு எம்இல் வருவதை?
பெயின்நந்தி, வறப்பின்சாம் புலத்திற்குப் பெயல்போல் யான்

செலின்நந்திச், செறின்சாம்பும் இவள்என்னும் தகையோ, தான், 20
முடியுற்ற கோதைபோல் யாம் வாட, ஏதிலார்
தொடிஉற்ற வடுக்காட்டி ஈங்கு எம்இல் வருவதை?

ஆங்க,
ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ,
வெய்யாரும், வீழ்வாரும் வேறாகக், கையின் 25
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகையின்றே;
தண்பனிவைகல் எமக்கு.”

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனுக்கு வாயில்விட மறுக்கும் தலைவி ஊடிக் கூறியது இது.

1. பழனம்–வயல், 2. இமிர்பு–ஆரவாரம் செய்து; இருந்தும்பி–கரியதேன்வண்டு 3. உண்துறை–நீர் உண்ணும் துறை, 4. தலைவந்தென–ஆங்கே வந்ததாக, 5. ஒரீஇ–போய்; காக்கிற்பான்–காப்பவன், 6. இரைகொள்ளும்–தங்கும்; 7. அலமரும்–வருந்தும்; மொய்தப–பகைவன் பலம் கெடுமாறு; 8. இறை–அரசன், 10. பறைதவிர்பு–பறத்தலைக் கைவிட்டு அசை விடுஉம்–இளைப்பாறும்; 11. சாய்ந்து–கெட்டு, பூத்து–நிறைந்து: தகை–தகுதிப்பாடு;13. எரிஇதழ்–எரிநிறம் கொண்ட இதழ்; சோர்ந்து உக–வாடிஉலர; 14. கரி–சான்று வருவதை–வருகின்ற தன்மை; 15. சுடர்–ஞாயிறு, படின்–மறையின்; கூம்பும்–வாடும், 16. தொகும்–மறையும், 17. கைம்மிக – அளவிறந்து பெருக, 19. நந்திசெழித்து, சாம்–வாடும் 20. செறின்–செல்லாமல் வருத்தினால், சாம்பும்–கெடும்; 24. ஐய–வியப்புடைய புக்கிமோ–சென்று சேர்க; 25. வெய்யார்– விரும்பப்படுவார்; வீழ்வார்–விரும்புவார்; 26. முயக்கின்–கூட்டத்தால், தகை இன்று–அழகு இல்லை.