மருதநில மங்கை/தேற்றேம் யாம்

விக்கிமூலம் இலிருந்து

23


தேற்றேம் யாம்

தானும், தன் கணவனும் பிரிவறியாப் பேரின்ப வாழ்வினராதல் வேண்டும் என விரும்பும் இன்ப வேட்கை உடையாள் ஒருத்தி, அக் கணவன் பழியிலனாதலும் வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் கொண்டிருந்தாள். தவறு செய்த ஒருவர், தாம் செய்த தவறினை மறைக்கப் பொய்ச் சூள் உரைப்பராயின், அவரைத் தெய்வம் ஒறுக்கும் என எண்ணி அஞ்சுவள். ஆனால், அவள்பால் பேரன்பு கொண்ட அவள் கணவனோ, குற்றம் புரியவும், குற்றத்தை அறியின் மனைவி செற்றம் கொள்வள் என அஞ்சுவதால், அதை அவள் அறியாவாறு மறைக்கப் பொய்ச்சூள் உரைக்கவும் அஞ்சாது வாழ்ந்தான். மனைவி இளமையும், அழகும், அன்பும் உடையளாகவும், ஒருகால், ஊரில் உள்ள பரத்தை யொருத்திபால், அவன் காதல் கொண்டான். ஒரு நாள், மனைவி அறியாவாறு சென்று, தன் மனம் விரும்பிய அப்பரத்தையின் மனை புகுந்து மகிழ்ந்தான். அப்பரத்தைபால் கொண்ட வேட்கை மிகுதியால், மனைவியின் அன்பைப், பிழை காணப்பொறா அவள் உள்ள உறுதியை மறந்திருந்த அவன், அவ்வேட்கை தீர்ந்தவுடனே, அவ் அன்பும் உறுதியும், அவன் உள்ளத்தைத் துயர் செய்யவே, அஞ்சித் தன் மனை புகுந்தான்.

அஞ்சி அஞ்சி மனை புகும் அவனை மனைவி கண்டாள். தொலைவில் வரும்போது, அவன் தோளில் மலரிதழ்கள் சில உதிர்ந்து கிடப்பதைக் கண்டாள். அவை, அவன் புணர்ந்த பரத்தையின் மணம் நாறும் மயிர் முடியில் சூட்டிய மாலையினின்றும், அவளும் அவனும் புணருங்கால், காம்பற்று உதிர்ந்தவையே என்பதை உணர்ந்து உள்ளம் வருந்தினாள். அந்நிலையில், அவன் அவளை அணுகினான். அண்மையில் வந்து நிற்பானை அவள் உற்று நோக்கினாள். அவன் மேனியில் புதிய வடுக்கள் பல விளங்குவதைக் கண்டு வருந்தினாள். அருகில் வந்து தன்னைத் தொட்ட அவன் கைகளை விரைந்து அகற்றினாள். “பூங்கொடி போன்ற மெல்லிய இயல்பு வாய்ந்த பரத்தையின், மயிர் முடியில் சூட்டிய மலர்களின் இதழ்கள், உன் தோளில் உதிர்ந்து கிடக்க, அக்காட்சியோடு சங்கு வந்து என்னைத் தொடும் நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? என்னைத் தொடாதே! அகன்று போ. கணவனைப் பிரிந்து கலங்கி நிற்கும் எளியராகிய மகளிர், தம் மனைவியர் வருந்தக் கண்டும் மனம் கலங்காது பிரியவல்ல பெரியோராகிய ஆடவர்க்கு அடிமையாவரோ? ஆகார்! இதை அறிந்து அகல்க!” என்று வெறுத்துக் கூறினாள்.

மனைவியின் கொடிய கோபத்தைக் கண்ட அவன், அதைத் தன் சொல்லாற்றலால் தணிக்கத் துணிந்து, அவள் கேட்குமாறு, “ஆத்திரத்தில் அறிவு மழுங்கிப் போகும் என்று கூறுவர். இவ்வாறு அறிவு இழந்து கடுமையாக இருப்பவரைக் காரணம் காட்டித் தெளிவிப்பது இங்கு யாரால் ஆகும்?” என்று கூறினான்.

தான் செய்த தவறினுக்குச் சமாதானம் கூற வருகிறான் என்பதை அறிந்து கொண்ட அவள், அவனைப் பார்த்து, “ஏடா! நீ எங்கோ போக விரும்புகின்றாய். அதை விடுத்து, இங்கே நின்று, உண்மையற்ற பொய்யுரைகளை என்பால் உரையாதே. அதை, நீ கூறும் பொய்யை, உண்மையெனக் கொண்டு ஏமாறுவாரிடத்தே சென்று கூறு!” என்று கூறிச் சினந்தாள்.

அவள் கடிந்து கூறுவன கேட்ட அவன், “அழகிய அணிகளை ஆராய்ந்தணிந்து நிற்பவளே! உன்னை அடைந்து, உன் அருளைப் பெற்றாலல்லாது உயிர் வாழ மாட்டாப் பேரன்பு கொண்ட என்பால் தவறு என்ன கண்டாய்? அதை நான் அறியக் கூறு!” எனப் பணிந்து வேண்டினான்.

தவறும் செய்துவிட்டு, ஏதும் தவறு செய்யாதவன் போல் பேசும் அவன் செயல் அவளுக்கு ஆறாச்சினத்தை அளித்தது. அளிக்கவே, அவள் நேர் நின்று, “ஏடா! நீர் நிலைகளில், நண்டுகள் ஊர்ந்தமையால் உண்டான கால் வடுக்களைப் போல், உன் காதற் பரத்தையர் தம் பல்லாலும் நகத்தாலும், உன் மேனியில் பண்ணிய இவ் வடுக்களும், அவரோடு புணர்ந்த புணர்ச்சி: மிகுதியால், தன் நிறம் இழந்து, இதழ் உதிர்ந்து பாழான இக் கண்ணியும், உன்னோடு ஊடிய பரத்தையர், சினம் மிகுந்து, தம் மாலைகளை அறுத்து அடித்த அடிபட்டுச் சிவந்த உன் மார்பும், நீ செய்த தவறுகளைக் காட்டப் போதாவோ?” எனக் கூறிக் கடிந்தாள்.

தான் செய்த தவறினைத் தன் மெய் வேறுபாட்டினைக் காட்டி அவள் உறுதி செய்யவே, இனி, அதை மறுத்தற்குக் காரணம் காட்ட முற்படல் மடமையாம் எனக் கருதிய இளைஞன், “ஏடி! நீ கூறிய வேறுபாடு என்கண் இருத்தல் உண்மை. ஆனால் அவ் வேற்றுமைக்கு நீ காட்டும் காரணம் பொருந்தாது. இவ் வேற்றுமைகளைக் கொண்டு, என்னைக் குற்றம் உடையவனாகக் கொள்ளாதே. என்பால் குற்றம் இல்லை. நான் பிழையேதும் புரிந்திலேன் என்பதை ஆணையிட்டு மெய்ப்பிக்கவும் நான் அஞ்சேன்!” எனக் கூறித், தனக்குத் துணையாகப் பொய்ச்சூளை நாடினான்.

“கணவன் பரத்தையர் உறவு கொண்டது உண்மை. அவன் அப் பரத்தையர் மனையினின்றும் தேர் ஏறி வரும் விரைவில், அவள் மாலையைத்தான் அணிந்து வந்துளான். அதனால் தனக்கு வரும் இழிவையும் கருத்தில் கொண்டிலன். இவன் நிலை இவ்வாறாகவும், இவன் தவறினைக் கண்டு நான் கடியின், இவன் சூள் உரைக்கத் துணிகிறான். ஆனால் இவன் உரைக்கப் புகுவது பொய்ச் சூள் என்பதை நான் அறிவேன். பொய்ச்சூள் உரைப்பாரைத் தெய்வம் ஒறுக்கும். நான் சினக்க, இவன் பொய்ச்சூள் உரைக்கின், இவன் தெய்வத்தால் கேடுறுவன். இவன் கெட்டால் நான் மட்டும் வாழ்வனோ? வாழேன்.

ஆகவே, என் வாழாமைக்கு என் சினமே காரணம் ஆம் போலும் !” என்று இவ்வாறு சென்றது அவள் சிந்தனை. அதனால், அவனைச் சினப்பதை மறந்தாள். மறந்தவள், அவனை நோக்கி, “ஏடா! நீ கூறும் பொய்ச் சூளால் கேடு வருமாயின், அக்கேடு யாரை வருத்தும்?” எனக் கேட்டு ஊடலைக் கைவிட்டாள்.

“ஒரூஉக் கொடியஇயல் நல்லார் குரல்நாற்றத்து உற்ற
முடிஉதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்,
தொடிய, எமக்கு நீயாரை? பெரியார்க்கு
அடியரோ, ஆற்றாதவர்?

கடியர்தமக்கு, யார்சொல்லத் தக்கார்மற்று? 5
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை உரையாது கூறுநின்
மாயம் மருள்வார் அகத்து.

ஆயிழாய்! நின்கண் பெறினல்லால், இன்னுயிர் வாழ்கல்லா
என்கண் என்னோ தவறு?

இஃதுஒத்தன் புள்ளிக்களவன் புனல்சேர்பு ஒதுக்கம்போல்,
வள்உகிர் போழ்ந்தனவும், வாள்எயிறு உற்றனவும்,
ஒள்இதழ் சோர்ந்த நின்கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின்மார்பும்
தவறாதல் சாலாவோ? கூறு.

அதுதக்கது, வேற்றுமை என்கண்ணோ ஒராதி; தீதின்மை 15
தேற்றங் கண்டியாய்; தெளிக்கு.

இனித் தேற்றேம் யாம்;
தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்ததவறு அஞ்சிப், போர் மயங்கி

நீஉறும் பொய்ச்சூள் அணங்காகின், மற்றுஇனி 20
யார்மேல் விளியுமோ? கூறு."

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தன் பிழையை மறைக்கப் பொய்ச் சூள் உரைக்கத் துணிந்தமை கண்டு, தலைவி, பொய்ச் சூளால் வரும் கேடஞ்சி, ஊடலைக் கைவிட்டது.

1. ஒரூஉ –நீங்க; குரல்–மயிர்; 2. மொய்ம்பின–தோளின்கண் உள்ள; 3. தொடிய தொட; பெரியார்–பிரியும் ஆற்றல் வாய்ந்தவர்; 5. கடியர்–கொடிய கோபம் உடையவர்; 6. வாயல்லா–உண்மை அல்லாத; வெண்மை –பொய்; 7. மருள்வார்–உண்மை எனப் பிறழக் கருதுவார்; 8. நின்கண்–உன்அருள்; 9. என்கண்–என்னிடத்தில்; 10. புள்ளிக்களவன்–புள்ளிகள் நிறைந்த நண்டு; சேர்பு ஒதுக்கம்–சேர்ந்து செய்த வரிகள்; 11, வள்உகிர்–கூரிய நகம்; வாள் எயிறு–வெள்ளிய பற்கள்; 12. நல்லார்–பரத்தையர்; 13. சிரறுபு–கோபித்து; சீற–அடிக்க; 14. சாலாவோ–போதாவோ; 15. ஓராதி–ஆராய்ந்து பார்க்காதே, 16. தேற்றங்கண்டீயாய்–தெளிவாயாக; தெளிக்கு–தெளிவிப்பேன். 18. தெரிகோதை–ஆராய்ந்து தொடுத்த மாலை; 19. தவறஞ்சி– நீ செய்தவறிற்கு அஞ்சி; போர் மயங்கி நான் தொடுத்த போரால் நீ அறிவு மயங்கி; 21. விளியும் அழியும்.